Wednesday 18 February 2009

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

சென்னையில் வீட்டை ஒழித்து கொண்டிருந்த போது ஒரு நாள் பழைய கண்டா முண்டா சாமான்களை எல்லாம் வெளியே எறிந்து கொண்டிருந்தேன். 1970ம் ஆண்டு டைரி, கரையான் கடித்து துப்பிய கறுப்பு வெள்ளை புகைப்படம், ஓடாத அலாரம் கடிகாரங்கள், அறுந்து போன காஸெட்கள், பழைய 'மங்கை' பத்திரிகை, 'என்றைக்காவது உபயோகப்படும்' என்று காப்பாற்றி வைத்திருந்த பேனாக்கள்,(இவற்றில் ஒன்று கூட எழுதவில்லை என்பது வேறு விஷயம்), இலுப்பை கரண்டி, அந்த காலத்து ரேஸர் (!) என்று ஒவ்வொறு குப்பையாக பரண் மீதிருந்து வெளியே வந்தன. கடைசியில் ஒரு பிலிப்ஸ் வானொலி பெட்டியை வெளியே எடுத்தேன். பழைய நினைவலைகளில் மூழ்கி விட்டேன்.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டி வந்திருக்கவில்லை. வானொலி தான் வீட்டில் இருந்த ஒரே மின்னணு கருவி. காலையில் 5 மணிக்கெல்லாம் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால், 'வந்தே மாதரம்' என்ற பாடலை தினமும் வானொலி மூலம் கேட்டுதான் மனப்பாடம் ஆகியது. சினிமா பாடல்களை வானொலி மூலம் விரும்பி கேட்போம். எனது தந்தைக்கோ நாங்கள் வானொலி முன்பு உட்கார்ந்து சினிமா பாடல்களை கேட்டால் அறவே பிடிக்காது. "போங்கடா, போய் படிக்கிற வேலையை பாருங்க" என்று விரட்டி விடுவார்.

ஞாயிற்று கிழமை மட்டும் இதற்கு விதிவிலக்கு இருந்தது. வானொலியில் வரும் 'பாப்பா மலர்' போன்ற நிகழ்ச்சிகளை விரும்பி கேட்போம்.  இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. தமிழ் நிகழ்ச்சிகளை கே.எஸ். ராஜா மிக அழகாக வழங்குவார். அவரின் குரலை கேட்பதற்காகவே பல நாட்கள் காத்து கிடப்போம். இதற்கு போட்டியாகவே 'விவித் பாரதி' என்ற தனி வர்த்தக ஒலிபரப்பை அகில இந்திய வானொலி ஆரம்பித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!  வர்த்தக ஒலிபரப்பு என்பதால் விளம்பரங்கள் நிறைய வரும். அவற்றை கேட்பதே ஒரு தனி சுகம். "இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் போன்றைய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது கோபால் பல்பொடி!", "ஆரோக்கிய வாழ்வினையை காப்பது லைப்பாய்...", "Pond's Dreamflower talc", "பொன்னான புதிய ரெக்ஸோனா", ஹார்லிக்ஸின் "சுசித்ரா, ஷங்கர், ராஜூ, சுஜாதா" போன்ற விளம்பரங்களில் வரும் பாடல்கள் திரைப்பட பாடல்களுக்கு ஈடாக பிரபலமாக இருந்தன.

வானொலிப்பெட்டியை 'ஆன்' செய்தால் உடனே சத்தம் வெளி வராது. இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பச்சை நிறத்தில் மேலிருந்து கீழாக இரு கோடுகள் தெரியும். மெல்ல வலது புறத்தில் உள்ள tuner மூலம் திருப்பி கொண்டே வந்தால் ஏதோ ஒரு இடத்தில் இந்த இரண்டு பச்சை நிற கோடுகளும் ஒன்று சேரும். அது தான் சரியான அலைவரிசை. அந்த அலைவரிசையில் தான் ஒலி கேட்கும். இல்லையென்றால் கேட்காது.

எனது தந்தை இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கில செய்திகளை விடவே மாட்டார். 15 நிமிடங்களில் உலக நடப்புகள் அனைத்தும் அதில் இருக்கும். தினமும் வரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனது தந்தையிடம் ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டேன். "ஏன்ப்பா செய்திகளின் முதல் வரி மட்டும் எப்பொழுதும் 'The Prime Minister Mrs. Indira Gandhi...' என்றே ஆரம்பிக்கிறது?" அவர் அதற்கு பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டார். அந்த சிரிப்புக்கு அர்த்தம் பல வருடங்களுக்கு பிறகுதான் புரிந்தது!

வருடாவருடம் பிப்ரவரி மாதத்தின் கடை நாளன்று 'பட்ஜெட்' செய்திகள் வெளிவரும். இரவு 9 மணிக்கு தான் எந்தெந்த விலை ஏறியிருக்கிறது என்று அறிவிப்பார்கள். வழக்கம் போல பெட்ரோல் விலை ஏறி விட்டது என்று அறிவிப்பு வந்தால் உடனே எனது தந்தை வண்டியை அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு எடுத்து சென்று ரொப்பிக்கொண்டு வந்து விடுவார் (மறு நாளிலிருந்து விலை ஏற்றம் அல்லவா, அதற்காக!).

அந்த காலகட்டத்தில் வீட்டில் வானொலி பெட்டி வைத்திருந்தால் அதற்கு license வாங்கவேண்டும். கப்பம் கட்டுவது போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை இதற்காக தனியாக வரி கட்டியே தீர வேண்டும். நினைத்தாலே வியப்பாக இருக்கிறது இல்லையா? தேர்தல் நேரத்தில் வானொலி செய்திகளுக்கு மிகவும் கிராக்கி ஏற்பட்டு விடும். எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன என்று முதலில் தெரிந்து கொள்வதற்கு  தொண்டர்களுக்குள் போட்டியே இருந்தது.

1971ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மறக்கவே முடியாது. இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டிருந்த நேரம். சென்னை நகரம் முழுவதும் இரவு ஏழு மணி முதல் அரசாங்கத்தின் 'blackout ' உத்தரவு இருந்தது. வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விடவேண்டும். தெருவிளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விடுவார்கள். திடீரென்று வானில் தாழ்வாக பறக்கும் விமானத்தின் ஓசை கேட்கும். 'திக்திக்' என்று இருக்கும். அப்போது என்ன நடக்கிறது என்றே தெரியாது. அனைவரும் வானொலிப்பெட்டியின் முன்பு உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்து கேட்டு கொண்டிருப்போம். பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவாகி விட்டது என்றும் இந்தியாவிடம் பாகிஸ்தான் போரில் தோற்றுவிட்டது என்றும் வானொலியில் அறிவிப்பு வந்தவுடன்  அனைவரும் குதூகலத்துடன் ஆடிப்பாடி கொண்டாடினார்கள். நாங்கள் சிறுவர்களாக இருந்ததால் எதற்காக இந்த கொண்டாட்டம், என்ன, ஏது என்றே தெரியாது. ஆனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இலவசமாக சாப்பிட இனிப்புகள் சாக்லேட்டுகள் கிடைத்தன என்பதால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான்!

1975ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்திருந்த நேரம். எந்த அலைவரிசையை திருப்பினாலும் அரசாங்கத்தை புகழ் பாடி '20 அம்ச திட்டத்தை' பற்றி நிகழ்ச்சிகள், பாடல்கள் என்று ஓயாமல் நிகழ்ச்சிகள் இருக்கும். வானொலி மீது ஒருவித வெறுப்பே எங்க‌ளுக்கு வந்து விட்டது. பின்னே என்ன? சுவாரசியமாக பாட்டு கேட்டு கொண்டே இருக்கும் போது அதை நிறுத்திவிட்டு "உழைப்பே உயர்வுக்கு உறுதுணை" என்று அறிவிப்பாளரின் குரல் ஒலித்தால் கடுப்பாக இருக்குமா இருக்காதா?

பல பழைய நினைவுகளை இந்த பிலிப்ஸ் வானொலி பெட்டி மீண்டும் நினைவுபடுத்தியது. தொலைக்காட்சி வந்த பிறகு வானொலி கேட்கும் பழக்கம் கிட்டத்தட்ட நின்றேவிட்டது என்று கூறலாம். இப்போது கூட எப்.எம் அலைவரிசைகளில் வரும் பாடல்களுக்காகவே வானொலி பெட்டியை இன்னமும் கடைசி அடக்கம் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இப்போது தொலைக்காட்சி பெட்டி, கணிணி, Ipod என்று பலவிதமான புதிய சாதனங்கள் வந்து விட்டன. சாதனங்கள் பெருக பெருக மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து பேசி அரோக்கியமாக‌ நேரத்தை செலவிடுவதை மெல்ல மெல்ல மறந்து போய்விட்டனர் என்றே தோன்றுகிறது. பொங்கல், தீபாவளி நாட்களில் அனைவரும் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து கொண்டு சினிமா காட்சிகளை பார்ப்பதையே விரும்புகின்றனர். மற்ற நாட்களில் சீரியல்கள். வெறும் வானொலி பெட்டி மட்டும் இருந்தபோது இருந்த நிம்மதி இப்போது எங்கே காணாமல் போய்விட்டது? எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு?

Tuesday 10 February 2009

மாற்றத்தை மாற்ற முடியாது!

எனது புதிய வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. பழைய கள் தான். மொந்தை மட்டும் தான் புதிது. பருகிவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்களேன்.

திடீரென்று ஏன் இந்த மாற்றம்? மாற்றம் தான் வாழ்க்கைக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது அல்லவா? தினமும் அதே வேலை, அதே முகங்கள், அதே கணினி, அதே அதே என்று செய்ததையே செய்து கொண்டிருந்தால் விரக்தி வந்து விடாதா? (அதற்காக அதே மனைவியா என்று கேட்காதீர்கள்!). இந்த பதிவை எழுத மற்றும் ஒரு காரணம் உண்டு.

என்னுடைய நெருங்கிய நண்பர் டேவிட். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கடந்த 27 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அவருக்கு 60 வயது நிரம்புவதால் ஏப்ரல் மாதத்திலிருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்போவதாக (பணி நீக்கத்துக்கு இப்படி ஒரு கெளரவமான வார்த்தை) மேலதிகாரி கூறினார். அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. "நான் என்ன தவறு செய்தேன்? வயதை கூறி இப்படி என்னை நீக்குகிறார்களே. இன்னும் 5 வருடங்கள் வேலை செய்ய என் உடம்பிலும் மனதிலும் சக்தி உள்ளதே" என்று புலம்பி தீர்த்து விட்டார். இத்தனைக்கும் அவரது மகனும் மகளும் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆனால் இவர் தான் பாவம்.

இந்த் 27 வருட வாழ்க்கையில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக செளதியில் வாழ்ந்து வந்தார். என்ன செய்வது, குடும்ப நிலவரம் அந்த மாதிரி. இங்கு வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களை போல இவரும் குடும்பத்துக்காக தியாகம் செய்து தனி மனிதனாக வேலை செய்தார். இதனால் இவரது குடும்பம் செழிப்பானது என்னவோ உண்மைதான். ஆனால் இவரை பொறுத்த வரை வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி வீணாகி விட்டது அல்லவா?

இப்பொழுது ஓய்வு பெறும் வேளையில் அந்த மாற்றத்தை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

ஊரில் இருக்கும் உறவினர்கள் "இவ‌னுக்கு என்ன‌? துபாயில் வேலை செய்கிறான். கொள்ளையாய் ப‌ண‌ம் இருக்கும்" என்று மிக‌ சுல‌ப‌மாக‌ கூறிவிடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தெரியும் இங்கு செள‌திக்கார‌ன் எவ்வ‌ள‌வு மோச‌மான‌வ‌ன் என்றும் இங்கு கோடை கால‌த்தில் 52 டிகிரி வெயில் என்றும் குளிர் கால‌த்தில் 0 டிகிரி ப‌னி என்றும்.

வாழ்க்கையில் நம் அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது. முதலில் ஏற்கனவே இருக்கும் கடன்களை அடைக்க. பிறகு வீடு கட்ட. பிறகு வீட்டு க‌ட‌னை அடைக்க. அதற்கு பிறகு குழந்தைகளின் படிப்பு. அது முடிந்த பின் கல்லூரி நுழைவு மற்றும் தேர்வுக்கான செலவுகளை சமாளிக்க. அதன் பின் கல்யாணம். சரி ஒரு வழியாக இது முடிந்தது என்று நினைத்தால் வரிசையாக வளைகாப்பு, சீமந்தம், பிரசவ செலவு என்று ஓயாத அலைகளை போல ஒன்றன் பின் ஒன்றாக பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது.

இதன் நடுவில் வீட்டில் பெரியவர்களோ அல்லது வேறு யாராவது நோய்வாய் பட்டாலோ கேட்கவே வேண்டாம். இவை எல்லாவற்றையும் கடந்து 'அப்பாடா' என்று மூச்சு விடும் வேளையில் நமக்கே முதுமையும் நோயும் வந்து விடுகிறது. இறைவா! இந்த சுழற்சியிலிருந்து விடுதலை எப்போது?

முதுமையும் மூப்பும் "நான் ஒருவன் இருக்கிறேன்" என்று இறைவன் நமக்கு மீண்டும் மீண்டும் நினைவு கூர்வதற்கு தானோ? டேவிட்டை போலவே எனக்கும் ஒரு நாள் முதுமை வரும். என்னையும் கட்டாய ஓய்வு பெற கூறுவார்கள் (அது வரை நான் இங்கே இருந்தால்). சரி,  இங்கு இல்லை என்றால் வேறு எங்காவது. இதில் இருந்து மீண்டு வருவது எப்போது?

யோசித்து பார்க்கும் போது,  மாற்றம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்பது நிதர்சனமாக தெரிகிறது. எனது பாட்டன் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் எனக்கே வேலை கிடைத்திருக்காது அல்லவா? இதைத்தானே கவியரசர் "வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது" என்று கூறினார்? சரி, மாற்றம் என்பது மாற்ற முடியாதது தான். அதை மனது ஏற்று கொள்ள என்ன செய்ய வேண்டும்?

முதலில், நடப்பது எல்லாம் நம்மால் தான் என்கிற நினைப்பை நாம் விட்டொழிய வேண்டும். நம்மை விட பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. எப்பொழுது "நான்" என்கிற அகந்தை நம்மை விட்டு விலகிறதோ, அப்பொழுதே மனது லேசாகிவிடுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்க வேண்டிய நேரத்தில் சம்பவங்கள் நடந்தே தீரும். ஒன்று நடக்க கூடாது என்று இருந்தால், தலை கீழாக நின்றாலும் கண்டிப்பாக அது நடக்காது.

அதிகாலையில் கிழக்கே உதிக்கு சூரியனை பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது? கூட்டம் கூட்டமாக பறவைகள் பறப்பதை பாருங்கள். ஆஹா, எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது? குழந்தைகளின் பேச்சை கேளுங்கள். இதை விட பேரின்பம் உண்டோ?

பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ கிடைத்த இறையை சேமிக்க வேண்டும் என்றோ எண்ணமே வருவதில்லை. சொல்ல போனால், அவைகளுக்கு அடுத்த வேளை உணவு கூட தேடினால் தான் கிடைக்கும். ஆனால் அதற்காக அவை கவலைப்படுவதில்லை. மனிதன் மட்டும் தான் கவலையில் மூழ்கி தன்னை தானே முதுமைக்கு தள்ளிக்கொள்கிறான். இதில் சண்டை சச்சரவு வேறு.

பக்கத்து தெருவுக்கு போவதற்கு  வண்டியை எடுக்காமல் காலார நடந்து செல்லுங்கள். உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி வருவதை உணர்வீர்கள். உண்மையான நண்பர்களிடம் மனம் விட்டு சிரித்து பேசுங்கள். மனது பத்து வருடம் இளமையாகி விடும். இதை எல்லாம் விட்டுவிட்டு பாழாய்ப்போன பணத்துக்காக எவனிடமோ சேவகம் செய்து அடிமை வாழ்வு வாழ்ந்து அந்த வாழ்க்கையே அர்த்தமற்றதாகி போவதற்கா நம்மை இறைவன் படைத்தான்? மாற்றத்தை எதிர்கொண்டு வாழ்க்கையை இன்பகரமாக அனுபவிப்போம்.

Wednesday 4 February 2009

தேர்வு காய்ச்சல்

இது தேர்வு நேரம். குழந்தைகள் படிக்கிறார்களோ இல்லையோ பெற்றோர்கள் மாங்கு மாங்கென்று குழந்தைகளை விட அதிகமாக படித்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.





பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருச்சியில் எனது உறவினர் ஒருவரின் மகன் (பெயர் ரகு என்று வைத்து கொள்வோமே) இதே போல தனது PUC தேர்வை எழுதினான். அப்போதெல்லாம் 12ம் வகுப்பை பி.யூ.ஸி. என்று கூறுவார்கள். நன்றாக படிக்கும் பையன் தான். ஏதோ அவனது போதாத காலம் அந்த ஒரு தேர்வில் மட்டும் மதிப்பெண்களை குறைவாக எடுத்து விட்டான். மருத்துவராக அவனை பார்க்க நினைத்த அவனது தந்தைக்கு இது மிக பெரிய இடி விழுந்தது போல ஆகிவிட்டது.



அவனது தந்தை தனது இளம் வயதில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். தன்னால் தான் மருத்துவராக முடியவில்லை என்ற குறை மிகவும் இருந்தது. தனது மகனாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரிய மருத்துவராக வரவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.




அதனால் இளம் வயதிலிருந்தே ரகுவை மிகவும் கண்டிப்பாகவே வளர்த்தார். மிகவும் கோபக்காரராக இருந்தார். அடிக்கடி ரகுவை பிரம்பால் அடித்து பிய்த்து விடுவார்.அப்போதெல்லாம் தனியார் மருத்துவ கல்லூரிகளே கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றில் சேர்ப்பதற்கான பணம் அவரிடம் இல்லை. மகனை எப்போது பார்த்தாலும் "படி, படி" என்று விரட்டி கொண்டே இருப்பார். அவனும் பாவம் என்னதான் செய்வான். எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாகவே இருப்பான்.



தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெற்றதும் அவன் நிலை குலைந்து போய்விட்டான். அவனது தந்தைக்கோ கடும் கோபம். அவனை பிடித்து அடி அடி என்று பின்னி விட்டார். "நான் நன்றாக தான் படித்தேன், ஆனால் தேர்வு எழுதும்போது மறந்து விட்டது" என்று அவன் எவ்வளவு கூறியும் அவனை அவர் விடாமல் அடித்து துவைத்து விட்டார்.




ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் அழுது கொண்டே ரகு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான். போகும்போது தனது பி.யூ.ஸி. மதிப்பெண் சான்றிதழையும் கொஞ்சம் பணமும் மட்டும் எடுத்து கொண்டு "என்னை தேடாதீர்கள்" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதி வைத்து விட்டு சென்று விட்டான். வீட்டில் அனைவருக்கும் புதிய மன உளைச்சல். நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரது வீடுகளிலும் இவனை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை.



அவனது அம்மாவின் நிலைமை தான் மிகவும் பாவமாகி விட்டது. அழுது புலம்பி தீர்த்து விட்டாள். வீட்டுக்கு மூத்த மகன் இந்த மாதிரி செய்துவிட்டானே என்று அனைவருக்கும் அவன் மீது வெறுப்பே வந்து விட்டது. ஆனால் அந்த வெறுப்பு மெல்ல அவனது தந்தை மீது பாய துவங்கியது. அரசல் புரசலாக உறவினர்கள் அவனது தந்தை மீது பழி போட துவங்கினர். அவர் உடைந்து போய் விட்டார்.




இந்த உலகத்தில் நாம் யாரிடமாவது உதவி கேட்டால் இலவச ஆலோசனை கொடுப்பவர்களும் ஆலோசனை கேட்டால் உதவிக்கு வராதவர்களும் தானே அதிகம். கேரள மந்திரவாதி முதல் எல்லாவிதமான ஆரூடவாதிகளையும் போய் சந்தித்து விட்டார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக நிற்காத நதியை போல ஓடிவிட்டன. ஆரம்பத்தில் மிகவும் இறுக்கமாகவும் சோகமான‌ சூழலில் இருந்த குடும்பத்தினர் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழந்து கடைசியில் தேடுவதையே கைவிட்டு விட்டார்கள்.




ஒரு 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. திடீரென்று ஒரு நாள் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியது ரகுவே தான். தான் அடுத்த வாரம் திருச்சிக்கு வருவதாக ரகு எழுதியிருந்தான். அவனது அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. என்ன இருந்தாலும் பெற்ற தாய் அல்லவா? மரணம் அடைந்து விட்டான் என்றே முடிவு கட்டிய பிள்ளை பல வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்புகிறான் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? அவனது தந்தைக்கு மகன் வீட்டை விட்டு சென்றுவிட்டான் என்கிற கோபம் இருந்தாலும் உள்ளுக்குள் அவன் திரும்பி வருவது அவருக்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை.




"வருகிறேன்" என்று மட்டும்தான் கடிதத்தில் எழுதியிருந்தானே தவிர தான் எங்கே இருக்கிறோம், எங்கு வேலை செய்கிறோம் என்று ஒரு விபரமும் அந்த கடிதத்தில் இல்லை.




அவனை வரவேற்பதற்காக நாங்கள் எல்லோரும் ஒரு நாள் முன்பாகவே போய் அவனது வீட்டில் காத்து கொண்டிருந்தோம். கடைசியில் திடீரென்று வாட்டசாட்டமாக பெரிய மீசையுடன் இராணுவ உடையில் ரகு வீட்டுக்குள் நுழைந்தான். அவன் வீட்டை விட்டு சென்ற போது ஒரு 17 வயது வாலிபனாக தானே இருந்தான். 7 வருடங்களில் மிகவும் மாறியிருந்தான். உள்ளே நுழைந்ததும் அவனை முதலில் பார்த்தது அவனது அம்மாதான். அவளுக்கு இவனை முதலில் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் ரகுவோ, அவளை பார்த்தவுடன் "அம்மா" என்று அழைத்தான். அவ்வளவுதான். ஓடி வந்து அவனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவனது தந்தையும் அவனது முகத்தை வருடிக்கொடுத்து "ஏண்டா இப்படி செய்து விட்டாய்?" என்று கூறி அழ ஆரம்பித்து விட்டார்.


சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்து பிறகு அவனே என்ன நடந்தது என்று கூறினான். அப்பா அடித்து விட்டார் என்று வீட்டை விட்டு வெளியே சாலையில் சென்றுகொண்டிருந்த போது "இராணுவத்தில் சேருங்கள்" என்று ஒரு பள்ளியின் வாசலில் பெரிய விளம்பரத்தை பார்த்திருக்கிறான். அங்கு ஆள் சேர்க்கை நடந்து கொண்டிருந்ததாம். சரி, என்னதான் நடக்கிறது என்று உள்ளே சென்று பார்த்தால் இவனது உயரம், எடை மற்றும் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் சரி பார்த்திருக்கிறார்கள். இன்று மாலை அருணாசலப்பிரதேசத்துக்கு ஒரு குழு செல்கிறது. நீயும் அவர்களுடன் சேர்ந்துவிடு என்று உடனடியாக அவனை இராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள். (அப்போதெல்லாம் இப்படி உடனடியாக சேர்க்கும் வழக்கம் இருந்தது). இவனும் ஒரு வேகத்தில் இராணுவத்தில் சேர்ந்துவிட்டான் (Long Service Commission). அங்கு சேர்ந்த பிறகு இவன் இராணுவத்தின் செலவிலேயே பூனாவில் உள்ள மிக பெரிய இராணுவ மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறான். ஆனால் ஒரு வைராக்கியத்தில் வீட்டுக்கு கடிதமே எழுதவில்லை. படிப்பை முடித்தபின் இராணுவத்திலேயே மருத்துவராக பணியாற்றியிருக்கிறான். படிப்பில் சேர்க்கும் முன்பே அவர்கள் இவனிடம் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி கொண்டார்களாம்.


எது எப்படியோ, தனது தந்தையின் கடைசி காலத்துக்குள் அவரது விருப்பதை போலவே ஒரு மருத்துவராகி விட்டான். கதைகளில் வருவது போல அவனுடைய வாழ்க்கையும் தந்தை அடித்த அடியால் பாதை மாறி விட்டது.



இதை எதற்கு இப்போது கூறுகிறேன் என்றால், தேர்வு நேரத்தில் தாய் தந்தையர் குழந்தைகளிடம் மிகவும் கடினமாக நடந்து கொள்வதால் எவ்வளவு பின் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்வதில்லை. என்னவோ உலகத்தில் பொறியாளர் அல்லது மருத்துவர், இந்த இரண்டு தொழில்களை தவிர வேறு தொழிலே இல்லை என்பது போல் பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். வாழ்க்கையில் சாதிக்க மதிப்பெண்கள் மட்டும் இருந்தால் போதாது. இறைவனின் அருள் இருந்தால் அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டியது நடந்தே தீரும்.


இன்று வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்களை பாருங்கள். கண்டிப்பாக அவர்களது மதிப்பெண்களை பார்த்தால் 100க்கு 100 வாங்கி இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் street-smartஆக இருந்தால் தான் பிழைக்க முடியும். இதற்கும் மதிப்பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை.
குழந்தைகள் ஏதோ ஒரு பட்டதாரி ஆக மாற வேண்டும், உண்மைதான். அதற்கு உண்டான அத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து தருவது பெற்றோரின் கடமை. ஆனால் அதற்காக அத்தனை பாடங்களிலும் 95க்கு மேல் எடுக்க வேண்டும் என்று அவர்களை வாட்டி எடுப்பது எந்த விதத்தில் ஞாயம்?



பெற்றோர்களே, உங்களது குழந்தைகளின் நலனில் உண்மையாகவே அக்கரை இருந்தால் அவர்களை நல்ல ஒழுக்கத்துடன் நல்ல பண்புகளுடன் வளருங்கள். உங்களுடைய விருப்பத்தை விட அவர்களின் விருப்பம் என்ன என்று கேட்டு அதன்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவுங்கள். மீதியை இறைவன் பார்த்து கொள்வான்.