Friday 28 August 2015

சலாம் பம்பாய்-9

பம்பாயில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது தினமும் நேருல் என்ற இடத்திலிருந்து வீ.டி. வரை மின்சார இரயிலில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. தினமும் இரயிலிலேயே 3 மணி நேரம் சென்று வர ஆகி விடும். நேருல் என்பது புதிய பம்பாயில் இருப்பதால் இரயில் நின்றவுடன் உடனே கிடைத்துவிடும் (இப்போது எப்படி என்று தெரியவில்லை). ஏறி உட்கார்ந்து கொண்டால் ஒன்றரை மணி நேரம் பயணத்துக்கு பிறகு வீ.டீ. இரயில் நிலையம் வந்து சேரும். 

தினமும் நான் செல்லும் இரயிலில் அதே நேரத்தில் சக பயணிகள் சிலர் வழக்கமாக செல்வார்கள். அதனால் பலர் நண்பர்கள் ஆனார்கள். ஒன்றரை மணி நேரம் பயணத்தை பலர் பல விதமாக கழிப்பார்கள். சிலர் ஏறி உட்கார்ந்த உடனே தூங்க ஆரம்பித்து விடுவார்கள். சிலர் அரட்டை கச்சேரியில் ஈடுபடுவார்கள். சிலர் சீட்டு கச்சேரியில் இறங்கி விடுவார்கள். ஆனால் என்னால் மறக்க முடியாதது சிலர் பஜனை செய்து கொண்டே வந்தது தான்.


இதற்கென்றே ஒரு கோஷ்டி உண்டு. பஜனை என்றால் சாதாரண பஜனை இல்லை. வாத்தியங்களோடு பாடுவார்கள். கையில் தபலா, டோலக், ஜால்ரா என்று 'பக்கா'வாக இருக்கும். ஜால்ரா என்றால் சிறியது இல்லை. ஐயப்பன் கோவில்களில் சண்டா மேளத்துடன் பெரியதாக இருக்குமே, அந்த ஜால்ரா. அதை 'ஜல் ஜல்' என்று வாசித்து கொண்டே வருவார்கள். ஆரம்பத்தில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நான் அந்த பெட்டியில் பயணம் செய்தேன். அதில் இரண்டு பேர் தமிழர்கள். இருவரின் பெயரும் பாலசுப்ரமணியன். இருவருமே பஜனையில் ஈடுபடுபவர்கள். அதனால் ஒருவரின் பெயர் பஜனை பாலு என்றும், இன்னொருவரின் பெயர் 'அகண்ட பஜனை பாலு' என்றும் வைத்திருந்தார்கள். 



சில நாட்களுக்கு பிறகு போரடிக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் இல்லாமல் பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பது போல அந்த பஜனை கோஷ்டியினர் கத்தி பாடியதால் எனக்கு பிடிக்காமல் போய் விட்டது. அதனால் அந்த பெட்டியை விட்டு விட்டு வேறொரு பெட்டியில் பயணம் செய்ய தொடங்கினேன். 



கூட பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம். சிலர் சொந்த கதை சோக கதையை சொல்லி கொண்டு வருவார்கள். சிலர் அல்டாப்பு பேர் வழிகள். தொண்ணூறுகளில் மொபைல் தொலைபேசி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட நேரம். விலை மிக மிக அதிகமாக இருக்கும். நோக்கியா போன் தான் அப்போதெல்லாம். கிட்டத்தட்ட ஒரு ஜியாமெட்ரி பாக்ஸ் அளவில் இருக்கும். அந்த காலத்தில் சாதாரண landline வைத்திருப்பதே அபூர்வம். தெருவுக்கு ஒருவர் வீட்டில் தான் ஃபோனே இருக்கும். இதில் மொபைல் என்றால் சாதாரண மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாது.


அதை கையில் வைத்து கொண்டு சிலர் "நான் ஜி.டி.பி. நகரில் இருக்கிறேன். நீ என்ன அந்தேரியில் இருக்கிறாயா?" என்று அந்த பெட்டியில் எல்லோருக்கும் தன்னிடம் மொபைல் இருக்கிறது என்று காட்டி கொள்வதற்காக பீற்றிக்கொள்வார்கள். ஒரு இரண்டு மூன்று வருடங்களில் நிலைமை தலைகீழாகி பிச்சைக்காரர்கள் கையில் கூட மொபைல் இருக்கும் அளவிற்கு நிலைமை மாறி விட்டது வேறு விஷயம். எத்தனை வினோதமான மனிதர்கள்?

தினமும் மாலை திரும்பி வரும்போது குர்லா இரயில் நிலையத்தில் ஒரு பிச்சைக்கார கும்பல் ஏறும். சொல்லி வைத்தாற்போல நான் வழக்கமாக ஏறும் பெட்டியிலேயே அவர்களும் ஏறுவார்கள். பிச்சைக்காரர்கள் என்று பெயர்தானே தவிர, ஒவ்வொறுவர் கையிலும் ஒரு "வாத்தியம்" இருக்கும். அதிலும், கொட்டாங்குச்சியால் வயலின் மாதிரி செய்யப்பட்ட ஒரு வாத்தியம் வித்யாசமாக இருக்கும். இரயிலில் ஏறிய கும்பல் கிடைத்த இடத்தில் (தரையில் தான்) உட்கார்ந்து கச்சேரி ஆரம்பித்து விடுவார்கள். 

சும்மா சொல்லக்கூடாது, அவர்களின் இசை உண்மையிலேயே இனிமையாக இருக்கும். ஆரம்பத்தில் அவர்களின் அழுக்கு தோற்றத்தை பார்த்து முகம் சுளிப்பவர்கள் கூட பிறகு சுதாரித்துக்கொண்டு கச்சேரியை கேட்க ஆரம்பித்து விடுவார்கள். வேலையிலிருந்து களைத்து திரும்புவோருக்கு இந்த 'இன்னிசை' விருந்து உற்சாகமளிப்பதாகவே இருந்தது. 


பலர் இந்த கூட்டத்தின் இசை மழைக்கு அடிமை ஆகிவிட்டிருந்தனர். அவர்கள் பாட ஆரம்பித்ததுமே அந்த பெட்டியே குதூகலமாகி விடும். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சிலர் பாடலை ரசித்து கொண்டே ஒரு கையை வெளியே விட்டு இரயில் பெட்டியில் தாளம் போடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களின் இசை அனைவரையும் கட்டி போட்டிருந்தது.


பழைய பாடல்களையே அவர்கள் வாசிப்பார்கள். அதுவும் 70களில் வெளி வந்த திரைப்பட பாடல்களிலேயே வல்லுனர்கள் ஆகிவிட்டனர். தினமும் இவர்களுடைய பாடல்களை ரசிப்பதற்கென்றே நான் ஏறும் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருக்குமோ என்று கூட தோன்றும். இசை ஞானத்துக்கு வறுமை தடை இல்லையே! உள்ளத்தை தொடும் சில பாடல்களில் நான் மெய் மறந்திருக்கிறேன். உண்மையிலேயே, இறைவன் இவர்களுக்கு வறுமையை ஏன் கொடுத்தான் என்று தெரியவில்லை. சரியான வாய்ப்பு இருந்திருந்தால் இவர்களும் சுசீலா, எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா போன்று மிக பெரிய பாடகர்களாக வந்திருப்பார்கள். 

வாஷி இரயில் நிலையம் வரை தினமும் இந்த கச்சேரி தொடரும். பிறகு கூட்டக் சிறிது சிறிதாக குறைய தொடங்கும்போது ஒரு சிறிய பெண் ஒரு டப்பாவை தூக்கிக்கொண்டு ஒவ்வொறுவரிடமும் சென்று காசு கேட்பாள். பலர் காசு போடுவார்கள். சிலர், அந்த பெண் வரும்போது காசு போடுவதை தவிர்க்க முகத்தை திருப்பி வைத்துக்கொள்வார்கள். அந்த சிறுமியின் முகத்தில் சலனமே இருக்காது. 7 வயதிலேயே, புத்தகப்பையை சுமக்க வேண்டிய கைகள் வயிற்றை கழுவ பிச்சை டப்பாவை சுமக்க ஆரம்பித்து விட்டதனால் வந்த முதிர்ச்சியோ? 'கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்று ஒளவையார் சும்மாவா பாடியிருக்கிறார்?

இப்படி நாட்கள் ஓடிக்கொண்டிருந்த போது யாருமே எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நடந்தது. திடீரென்று ஒரு நாள் "பறக்கும் படை" காவல்காரர்கள் அந்த பெட்டியினுள் நுழைந்தனர். தடியால் இவர்களை அடித்து இழுத்து சென்றனர். அதற்கு பிறகு இவர்களை பார்க்கவே முடியவில்லை.

பல நாட்கள் இவர்கள் திரும்பி வருவார்களா என்று ஏக்கத்துடன் எனது கண்கள் தேடும். அவர்கள் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்ற எண்ணம் என் மனதில் ஓடும். என்றைக்காவது திரும்பி வரமாட்டார்களா என்ற ஏக்கத்தில் பல நாட்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். கடைசி வரை அவர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.  


முன்பின் தெரியாத அவர்களுக்காக‌ மனம் அழுதது. கடவுளே, இவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். அற்புதமாக பாடிய அந்த ஏழு வயது சிறுமிக்கு ஒரு நல்ல எதிர்காலம் வர வேண்டும். 



வாழ்க்கையில் நாம் தினமும் பல பேரை சந்திக்கிறோம். பலருடன் பழகுகிறோம். சிலர் நம்மிடம் இன்னும் பழக மாட்டார்களா என்று மனம் ஏங்க வைக்கும். இன்னும் சிலர் ஏன் பழகுகிறார்கள் என்று நினைக்க தோன்றும். ஒரு வார்த்தை கூட பேசாமல் பழகாமல் இது போன்ற சிலர் எங்கிருந்தோ வந்து ஒரு இனிமையான தாக்கத்தை மனதில் ஏற்படுத்தி உடனேயே சென்று விடுகிறார்கள். தினமும் பல பாதைகளில் பல இரயில்கள் செல்கின்றன. ஏதாவது ஒரு பயணத்தில் என்றாவது ஒரு நாள் இவர்களை நான் சந்திப்பேனா? தெரியவில்லை நண்பர்களே!