Wednesday 20 August 2008

சலாம் பம்பாய்‍ - 2

தங்குவதற்கு இடமில்லை என்று கல்லாவில் இருந்தவர் கூறியவுடன் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது (முதலில் இதற்கு முந்தைய பதிவை இங்கே பாரக்கவும், அப்போது தான் இந்த பதிவு புரியும்). அவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடினேன். கடைசியில் அவர் மனம் இறங்கி, "கொஞ்ச நேரம் இங்கே காத்திருங்கள். யாராவது காலி செய்தால் உங்களுக்கு அந்த இடத்தை தருகிறேன். ஆனால் சரியாக 24 மணி நேரத்தில் நீங்கள் அறையை காலி செய்து விடவேண்டும். நீட்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று கறாராக கூறினார்.சரி, இப்போதைக்கு பெட்டியை வைக்க ஒரு இடம் கிடைத்ததே. பிறகு பார்த்துக்கொள்வோம் என்று யாராவது காலி செய்வதற்காக காத்துக்கொண்டிருந்தேன். 'கடவுளே, இப்படி முன்பின் தெரியாத ஊரில் கொண்டு வந்து என்னை தவிக்க விட்டு விட்டாயே' என்று மனதுக்குள் அழுது கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு ஒருவர் காலி செய்தார். அப்பாடா!உடனடியாக அந்த இடத்துக்கு நான் துண்டு விரித்து விட்டேன். கல்லாவில் இருந்தவர் என்னிடம் 21ரூபாய் வாடகை பணத்தை முதலிலேயே வாங்கி கொண்டார். (இத்தனை வருடங்களுக்கு பிறகு கூட அந்த ரசீது என்னிடம் உள்ளது, மறக்க முடிமா சில நிகழ்ச்சிகளை?)

ஒரு அறையில் ஆறு கட்டில்கள் இருந்தன. அதில் அழுக்கு விரிப்புடன் ஒரு இரும்பு கட்டிலை காண்பித்து "இது தான் உங்களுடைய இடம். கண்டிப்பாக நாளை காலை நீங்கள் காலி செய்து விட வேண்டும்" என்று மறுபடியும் ஒரு முறை ஞாபகப்படுத்தி விட்டு சென்றார்.பெட்டியை கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு குளிக்க சென்றேன். மனது முழுவதும் கவலை கடலில் மூழ்கி இருந்தது. 'என்ன செய்வது கடவுளே! இது போன்ற சிக்கலை இது வரை நாம் சந்தித்தது இல்லையே' என்று எண்ணிக்கொண்டேன். திடீரென்று மனதில் ஒரு மின்னல்.'ஏதாவது உதவி தேவைப்பட்டால் இந்த எண்ணுக்கு போன் செய்' என்று எனது தந்தை ஒரு காகிதத்தை கொடுத்திருந்தார் அல்லவா, அது ஞாபகம் வந்தது. அவசரம் அவசரமாக குளித்து விட்டு நான் பெட்டியில் வைத்திருந்த ரயிலில் போட்ட அந்த சட்டையை எடுத்து பாக்கெட்டினுள் விரலை துழாவினேன். அப்பாடா, நல்ல வேளை காகிதம் கிடைத்து விட்டது.உடனே கல்லாவுக்கு ஓடி போய் "சார், எனக்கு அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும்" என்று கூறினேன். அவரோ, கறாராக "போனெல்லாம் பண்ண முடியாது" என்று கூறிவிட்டார். போனுக்கு உண்டான காசு கொடுத்து விடுவதாகவும், மிகவும் அவசரம் என்றும் அவரிடம் கெஞ்சி பார்த்தேன். அவரோ, மிகவும் கோபமாக என்னை விரட்டினார். சரி, இன்னும் கொஞ்சம் இங்கு இருந்தால் அறையை உடனடியாக காலி செய்ய சொல்லி விடுவார் என்று நினைத்து கீழே இறங்கி வந்தேன். அக்கம் பக்கத்தில் எங்குமே பொது தொலைபேசி பூத் இல்லை. (அந்த கால கட்டங்களில் கை பேசியோ STD PCO கடைகளோ வந்திருக்கவில்லை).


போன் செய்ய வேண்டும் என்றால் தபால் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அனால் இப்போது அதற்கு நேரம் இல்லையே. எதிரே பார்த்தால் சங்கர மடம் இருந்தது. அங்கு சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டேன். இப்போது என்ன செய்வது? அப்பாவின் கீழ் வேலை செய்தவர் எங்கே இருப்பார்? அவர் வேலை செய்த வங்கியின் கிளை 'கிங் சர்க்கிள்' என்ற இடத்தில் உள்ளது என்று எனது தந்தை பேச்சு வாக்கில் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே, பக்கத்தில் உள்ள ஒரு தமிழரிடம் 'கிங் சர்க்கிள் எங்கே உள்ளது' என்று கேட்டேன். அவர், 'இப்படி சென்றால் ஒரு 15 நிமிடங்களில் வந்து விடும்' என்று கூறினார். உடனடியாக அவர் சொன்ன அந்த வழியில் தேடிக்கொண்டே அந்த வங்கியின் கிளைக்கு நடந்தே சென்று விட்டேன். அப்போது மணி 9 தான் ஆகியிருந்தது. 10 மணிக்கு தான் கிளையை திறப்பார்களாம்.பரவாயில்லை. எப்படியாவது அவரை இன்று நேரில் சந்தித்து விடவேண்டும். சோர்வாக அப்படியே அந்த வங்கியின் படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டேன். கடவுளே, அவர் விடுமுறையில் இல்லாமல் இருக்க வேண்டுமே. அப்படியே வந்தாலும் எனக்கு உதவ வேண்டுமே! என்னை காப்பாற்று இறைவா!

சரியாக 9.50 மணிக்கு ஒவ்வொறு நபராக உள்ளே வர ஆரம்பித்தனர். இதில் ஸ்ரீனிவாசன் யாராக இருக்கும்? ஆபிசர் போல இருந்த ஒருவரிடம் "நான் ஸ்ரீனிவாசன் அவர்களை சந்திக்க வந்திருக்கிறேன்" என்று கூறினேன். அவர் என்னை உள்ளே வரவழைத்து உட்கார சொன்னார். சிறிது நேரத்தில் ஸ்ரீனிவாசனே வந்து சேர்ந்தார். அப்பாடி!

அவரிடம் என்னை இன்னாரின் மகன் என்று அறிமுகப்படுத்தி கொண்டேன். முதலில் சிறிது யோசித்தவர், பிறகு உற்சாகமாகி, "அடடா, நீ அவரின் மகனா" என்றார். எனது தந்தை தான் ஓய்வு பெற்றுவிட்டாரே. நல்ல வேளை, இவருக்கு அவருடைய பெயர் ஞாபகம் வந்து விட்டது. நான் ஸ்ரீனிவாசனிடம் "சார், எனக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. நாளைக்கு வேலையில் சேர வேண்டும். தற்போதைக்கு Concernsல் தான் தங்கி இருக்கிறேன். ஆனால் நாளை காலை அந்த அறையை காலி செய்து விட வேண்டும். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்கு பம்பாயில் உங்களை விட்டால் வேறு யாரையுமே தெரியாது. நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்று நான் கூறி முடிப்பதற்குள் எனக்கே துக்கம் தொண்டையை அடைக்க ஆரம்பித்து விட்டது.

அவர் எனது நிலைமையை புரிந்து கொண்டு என்னை ஆசுவாசப்படுத்தினார். "கட்டிங் சாப்பிடுகிறீர்களா" என்றார். எனக்கு "கட்டிங்" என்றால் என்ன என்று புரியவில்லை. எனது பதிலுக்கு காத்திருக்காமல் உள்ளே சென்று "தோ கட்டிங் தே தோ" என்று யாரிடமோ கூறினார். சிறிது நேரத்தில் ஒரு சிறுவன் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் பாதி அளவுக்கு தேனீரை ஊற்றி கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தான். ஓஹோ, இது தான் பம்பாய் பாஷையில் "கட்டிங்கோ"? பெங்களூரில் இதையே "பை டூ" என்பார்கள்.


அந்த தேனீரை மடக்கென்று ஒரே வாயில் குடித்து விட்டேன். நான் இருந்த நிலைமைக்கு காலை சிற்றுண்டி சாப்பிட கூட மறந்து விட்டிருந்தேன். அவர் என்னிடம் "பம்பாயில் வேலை கிடைப்பது பெரிய விஷயமே இல்லை. ஆனால் தங்க இடம் கிடைப்பது தான் கஷ்டம்" என்று ஆரம்பித்தார். அடுத்து என்ன கூற போகிறாரோ தெரியவில்லையே!

மளமளவென்று இரண்டு மூன்று போன் செய்தார். யார் யாரிடமோ மராத்தியில் பேசினார். பிறகு என்னை பார்த்து, "இங்கே மாதுங்காவிலேயே ஒரு அறை இருந்தது. உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அந்த அறை இன்னும் காலியாக இருக்கும். எதற்கும் வா நேரிலேயே போய் பார்த்து விடலாம்" என்றார். தனது மேலதிகாரியிடம் சென்று அனுமதி கேட்டுவிட்டு என்னுடன் மீண்டும் மாதுங்காவுக்கே நடந்து வந்தார். எனக்கு கண்களில் நீர் முட்டி விட்டது. கடவுளே! இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டேனே!

எனது எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்ட ஸ்ரீனிவாசன் எனது தோளின் மேல் தனது கையை போட்டு, "எதற்கும் கவலை படாதே!" என்றார். 'எங்கிருந்தோ வந்தான், இடை ஜாதி நான் என்றான், இன்றிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்' என்ற பாடல் ஞாபகம் வந்தது.
இந்தியன் ஜிம்கானா என்ற மைதானத்தின் எதிரில் ஒரு பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. அந்த ஏரியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 50 அல்லது 60 வருடங்களுக்கு மேல் கண்டிப்பாக இருக்கும். ஒரு வீட்டின் உள்ளே நுழைந்து இரண்டாம் மாடிக்கு ஏறி சென்றோம். ஒவ்வொறு படிக்கட்டும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொறு அடி நாங்கள் எடுத்து வைக்கும் போதும் 'கீ கீ' என்று சத்தம் போட்டது. இரண்டாம் மாடியில் ஒரு மராத்தி பெரியவர் கதவை திறந்தார். ஸ்ரீனிவாசன் அவரிடம் மராத்தியில் பேசி என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த பெரியவர் எங்களை உள்ளே அழைத்து ஆறு அடிக்கு ஆறு அடி உள்ள ஒரு அறையை காண்பித்தார். அந்த புறாக்கூட்டுக்குள்ளேயே ஒரு ஓரத்தில் ஒரு குழாயும், பாதி சுவரும் இருந்தது. அந்த இடத்தில் தான் குளிக்க வேண்டுமாம். வாடகை மாதத்துக்கு நானூறு ரூபாய். ஒரு மாத வாடகையை முதலிலேயே தந்து விட வேண்டும் என்றெல்லாம் கூறினார். எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. தங்குவதற்கு ஒரு இடம் இருந்தால் போதுமடா சாமி என்று இருந்தது. உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டு உடனேயே அவரிடம் ஒரு மாத வாடகையை கொடுத்து விட்டேன். Concernsக்கு சென்று எனது சூட்கேஸை எடுத்து கொண்டு வருவதாக கூறினேன்.

வெளியே நானும் ஸ்ரீனிவாசனும் வந்தோம். அவரின் காலில் விழாத குறையாக இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு பல முறை நன்றி கூறினேன்.

ஸ்ரீனிவாசன் மெதுவாக என்னிடம், "பல வருடங்களுக்கு முன் உனது தந்தை தான் எனக்கு இந்த வேலையே போட்டு கொடுத்தார். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவருடைய மகனை நான் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை" என்றார் மெதுவாக. நான் வியப்பில் அப்படியே நின்று விட்டேன். இதை பற்றி எனது தந்தை ஒன்றுமே கூறவில்லையே. 'தனக்கு கீழே வேலை செய்தவன்' என்று தானே கூறினார்.

நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன். எனக்கு துக்கம் தொண்டையை அடைக்க அழுது விட்டேன். அவர் ஆதரவாக என்னை அணைத்து கொண்டார். பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா! எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

எப்பொழுதோ யாருக்கோ எனது தந்தை பிரதிபலனை எதிர்பாராது செய்த ஒரு உதவி இத்தனை வருடங்களுக்கு பிறகு எனக்கு எப்படி உதவி இருக்கிறது பாருங்கள். உண்மையிலேயே நமக்கு மேல் கடவுள் இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறான் இல்லையா? பிறருக்கு நாம் செய்யும் உதவி நமக்கு உதவாவிட்டாலும் யார் மூலமாவது நமது குழந்தைகளுக்காவது உதவும் என்றே இந்த நிகழ்ச்சி நிரூபிக்கிறது இல்லையா?

இது நடந்து முடிந்து சரியாக 20 வருடங்கள் ஆகி விட்டன. பல இடங்களுக்கு சென்று கடைசியில் இப்போது செளதி அரேபியாவில் இருக்கிறேன். இதை எழுதும் இதே தேதி சென்ற வருடம் (19 ஆகஸ்டு, 2007) அதிகாலை சென்னையில் இருந்து ஒரு போன் வந்தது. திடீரென்று எனது தந்தை காலமாகி விட்டார் என்ற செய்தியே அது.

பிள்ளைக்கு தந்தை ஒருவன், நம் எல்லோருக்கு தந்தை இறைவன். நீ ஒருவனை நம்பி வந்தாயோ, இல்லை இறைவனை நம்பி வந்தாயோ!


Tuesday 19 August 2008

சலாம் பம்பாய் - 1

தேதி கூட நன்றாக நினைவிருக்கிறது. ஆகஸ்டு 1, 1988. முதன் முதலில் பம்பாயில் வேலைக்கு சேர்வதற்காக சென்னையிலிருந்து தாதர் எக்ஸ்பிரஸில் கிளம்பிய தினம்.கல்லூரி முடிந்த பின் கிடைத்த முதல் வேலை, அதுவும் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் கிடைத்த வேலை அது. ஆகஸ்டு மூன்றாம் தேதி வேலையில் சேர வேண்டும்.

வேலைக்கான உத்தரவு கையில் கிடைத்துவிட்டதே தவிர பம்பாயில் எங்கே தங்க போகிறேன் என்று ஒன்றுமே தெரியாது. "அங்கே போனால் உனக்கே தெரியும்" என்று எனது தந்தை என்னை சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வழி அனுப்பி வைத்து விட்டார்.

"ஏதாவது பிரச்னை இருந்தால் இந்த எண்ணுக்கு போன் செய்து உதவி கேள்" என்று ஒரு காகிதத்தில் எழுதி என்னிடம் கொடுத்து விட்டு தண்ணீர் தெளித்து விட்டார் எனது தந்தை. அவரும் என்ன செய்வார் பாவம், பணியிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். வயது வேறு ஆகிவிட்டது. பையனை எப்படியாவது வேலையில் சேர்த்து விட்டால் ஒரு பாரம் நீங்கும் என்று நினைத்திருந்தார்.

எப்பொழுதோ அவரின் கீழ் வேலை செய்த குமாஸ்தா (ஸ்ரீனிவாசன் என்று பெயர்) இப்பொழுது பம்பாயில் இருப்பதாக கேள்விப்பட்டு அவருடைய தொலைபேசி எண்ணை எழுதி கொடுத்து விட்டார். நானும் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அந்த எண்ணை சட்டை பையில் வைத்துக்கொண்டு கண்களில் கனவுகளையும் கைகளில் சூட்கேசையும் சுமந்து கொண்டு எனது திக்விஜயத்தை தொடங்கினேன். எனது அம்மா தான் பாவம். பையன் தனியாக என்ன செய்வானோ என்று புலம்பியபடியே கண்ணீருடன் என்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வழியனுப்பினார்.

இரயில் சென்னையை விட்டு கிளம்பும்போது எனக்கே அழுகை வந்து விட்டது. 'முதன்முதலாக வீட்டை விட்டு பிழைப்புக்காக வெளியே செல்கிறோம். அதுவும் யாரையும் தெரியாது. என்ன செய்ய போகிறோமோ கடவுளே' என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்.

நாம் குழந்தைகளாகவே நிரந்தரமாக இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? நம்முடைய தேவைகளை எல்லாம் பார்த்துக்கொள்ள நமது தாய் தந்தை இருக்கும் போது கவலையே இல்லாமல் அவிழ்த்து விட்ட கன்று போல நாம் சுற்றி திரிந்து கொண்டே இருந்திருக்கலாமே? இப்படி திடீரென்று பள்ளி, கல்லூரி, பட்டப்படிப்பு என்று காலம் படு வேகமாக சுழன்று சென்று நம்மையும் ஒரு பெரியவனாக ஆக்கி விட்டதே. இனிமேல் நாமும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதா?

இரயில் அரக்கோணம் தாண்டும் வரை கடந்த கால நினைவுகளிலேயே நான் மூழ்கி விட்டேன். பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தது, நண்பர்களுடன் கவலையே இல்லாமல் சுற்றியது, பட்டப்படிப்பை முடித்தவுடன் திடீரென்று வேலை தேடும் படலத்தில் இறங்கியது, என்று கடந்து வந்த பாதை கண்களுக்கு முன் ஒவ்வொன்றாக தோன்றி மறைந்தது.

இரயிலிலேயே சக பிரயாணிகளுடன் பழக்கம் ஏற்பட்டதால் பம்பாயில் மாதுங்கா என்ற இடத்தில் நிறைய தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்றும், அங்கு South Indian Concerns என்ற இடத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்கும் என்றும், தாதருக்கு பக்கத்தில் தான் அந்த இடம் என்பதையும் அறிந்து கொண்டேன். அப்பாடா, கடைசியில் எங்கு தங்குவது என்ற பிரச்னை முடிந்ததே!

பம்பாய் தாதரில் நான் வந்து இறங்கிய போது நல்ல மழை. ஆட்டோவுக்காக அங்கும் இங்கும் தேடினால் ஒரு ஆட்டோ கூட தென்படவில்லை. பிறகு தான் பம்பாய் மாநகரில் ஆட்டோவே கிடையாது, டாக்ஸி தான் ஓடும் என்று தெரிந்து கொண்டேன். புறநகரில் மட்டும் தான் ஆட்டோக்கள் ஓடுமாம். அது ஏன் என்று இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த உடனே மனதில் ஒரு பக்கம் உற்சாகம், ஒரு பக்கம் பயம் என்று இருந்தது. எத்தனையோ தமிழ் சினிமாக்களில் கிராமத்திலிருந்து சென்னைக்கு முதன் முதலில் மஞ்சள் பையை தூக்கி கொண்டு வரும் பட்டிக்காட்டு ஆசாமிகள் LIC கட்டிடத்தை அண்ணாந்து பார்ப்பது போல காண்பித்து இருப்பார்கள். அப்போது அந்த காட்சிகளை எல்லாம் ரசித்து சிரித்த எனக்கு, கிட்டத்தட்ட அதே நிலைமையில் நானும் இருப்பது போன்று ஒரு நினைவு வந்தது!

ஒரு அம்பாஸிடர் டாக்ஸியில் சர்தார்ஜி ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். டாக்ஸியில் சாமானை ஏற்றிவிட்டு மாதுங்காவுக்கு செல்லுமாறு கூறினேன். அவர் ஐந்தே நிமிடங்களில் Concerns வாசலில் கொண்டு வந்து இறக்கி விட்டார். மீட்டரை பார்த்தால் ஒரு ரூபாய் என்று காண்பித்தது. 'அட, பரவாயில்லையே, ஒரு ரூபாய்க்கு இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கிறானே' என்று மனதுக்குள் சந்தோஷத்துடன் பம்பாயில் எனது முதல் செலவான ஒரு ரூபாயை அந்த சர்தார்ஜியிடம் கொடுத்தேன். சர்தார்ஜி என்னை ஏற இறங்க பார்த்து விட்டு ஒரு வித ஏளன சிரிப்புடன் பதினொறு ரூபாய் கேட்டான். 'அட கடங்காரா! மீட்டர் ஒரு ரூபாய் தானே காட்டுகிறது. நான் எதற்கு உனக்கு 11 ரூபாய் கொடுக்க வேண்டும்? என்னை என்ன இளிச்சவாயன் என்று நினைத்தாயா' என்று எனக்கு தெரிந்த அரைகுரை ஹிந்தியில் சர்தார்ஜியை திட்டினேன். 'ஒற்றன்' என்ற படத்தில் வடிவேலு தனது ஊருக்கு STD போன் செய்து விட்டு கடைக்காரரிடம் ஒரு ரூபாயை கொடுப்பாரே, அதே மாதிரி தான்!

சர்தார்ஜி முகத்திலிருந்து புன்னகை மறைந்து இப்போது கோபமாக என்னை திட்ட ஆரம்பித்தான். அதற்குள் கூட்டம் கூடி விட்டது. அங்கு தமிழ் பேசுபவர் ஒருவர் உடனே "சார், இந்த ஊரில் டாக்ஸியில் குறைந்த பட்சமே 11 ரூபாய் தான். நம்ம ஊர் மாதிரி மீட்டரை எல்லாம் திருத்த மாட்டார்கள். டிரைவரிடம் ஒரு அட்டை இருக்கும். அதில் மீட்டர் காண்பிக்கும் கட்டணத்துக்கு எதிரில் நாம் அவருக்கு கொடுக்க வேண்டிய பணம் குறிப்பிடப்பட்டிருக்கும்" என்று விளக்கினார். "அடப்பாவிகளா! இப்படி எல்லாம் வேறு இருக்கிறதா! 'ஒன்று என்றால் பத்து என்று மிகைப்படுத்தி கூறுகிறான்' என்று என்னுடைய அம்மா என்னை பற்றி கூறுவார். இவன் ஒன்று என்றால் பதினொன்று என்று அல்லவா கூறுகிறான்!" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே வேண்டா வெறுப்பாக சர்தார்ஜியிடம் 11 ரூபாயை கொடுத்தேன். அவன் ஏதோ புரியாத பாஷையில் என்னை திட்டிக்கொண்டே வண்டியை கிளப்பினான்.

நான் சூட்கேஸுடன் மாடிப்படியில் ஏறி அங்கு கல்லாவில் உட்கார்ந்திருப்பவரிடம் சென்று "நான் சென்னையில் இருந்து வருகிறேன். எனக்கு இங்கு வேலை கிடைத்திருக்கிறது. தங்குவதற்கு இடம் வேண்டும்" என்றேன். அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "இடமெல்லாம் இல்லை" என்றாரே பார்க்கலாம். எனக்கு பயங்கர அதிர்ச்சி. அடக்கடவுளே! இடம் இல்லையாமே! இப்போது என்ன செய்வது? எங்கே தங்குவது? இவ்வளவு பெரிய ஊரில் யாரையுமே தெரியாதே! நாளைக்கு வேலையில் வேறு சேர வேண்டுமே! என்ன செய்வது?
(தொடரும்)

Wednesday 13 August 2008

நவீன திருடர்கள்

பிறருடைய பொருளை திருடினாலும், பிறருடைய எழுத்துக்களை திருடினாலும் திருட்டு திருட்டு தானே?
என்னுடைய ஆங்கில பதிவிலிருந்து சிலர் வார்த்தைக்கு வார்த்தை நகல் எடுத்து மின் அஞ்சலில் பிறருக்கு அனுப்புகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மின் அஞ்சலை எனக்கே யாரோ அனுப்பினார்கள். அந்த மின் அஞ்சலில் ஒரு இடத்தில் கூட இது இன்னாரின் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படவில்லை. ஏதோ தாமே சிந்தித்து எழுதினது போல செயல்படுகிறார்கள். என்ன கொடுமை பாருங்கள்!


இதை விட கேவலம், ஒரு வலைப்பதிவாளர் அப்படியே என்னுடைய ஆங்கில வலைப்பதிவை நகல் எடுத்து தன்னுடைய வலைப்பதிவில் போட்டுவிட்டார். நல்லவேளை, என்னுடைய பதிவில் Copyscape என்ற மென்பொருள் உள்ளதால் சுலபமாக யார் என்னுடைய உழைப்பை திருடினார்கள் என்று கண்டுபிடித்து விட்டேன். அதன் பிறகு அந்த வலைப்பதிவாளருக்கு எழுதி எச்சரித்த பிறகு போனால் போகிறது என்று ஒரே ஒரு வரி கடைசியில் 'இது இந்த வலையிலிருந்து எடுக்கப்பட்டது' என்று எழுதினார்.

இது போன்ற திருட்டுக்களை கட்டுப்படுத்த வழியே இல்லையா? பிறரின் உழைப்பை திருடுபவர்களுக்கு மனசாட்சியே கிடையாதா? வலைப்பதிவை அப்படியே நகல் எடுத்து தன்னுடைய வலைப்பதிவில் போடுபவர்களை கண்டுபிடிக்க மேற்கூறிய மென்பொருள் உள்ளது. ஆனால், அதை நகல் எடுத்து மின் அஞ்சலில் அனுப்புபவர்களை எப்படி track செய்வது? யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன்.

சில நிறுவனங்களில் எலியை right-click செய்தால் சில commandகள் வேலை செய்யாது. அது போல இந்த copy commandஐ bloggerல் disable செய்ய ஏதாவது வழி இருக்கிறதா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

Friday 8 August 2008

மறக்க முடியுமா?

மிகவும் காலம் தாழ்ந்து செளந்தரராஜனுக்கும் சுசீலாவுக்கும் கெளரவம் கிடைத்திருக்கிறது. சுசீலாவின் "என் உயிர் தோழி கேளொரு சேதி", "கண்ணுக்கு குலமேது", "சொன்னது நீ தானா", "நெஞ்சம் மறப்பதில்லை" போன்ற பாடல்களை யார்தான் மறக்க முடியும்?

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" என்ற பாடலில் முதலில் மூச்சு வாங்குவார் இல்லையா? அது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்டூடியோவை இரு முறை சுற்றி ஓடி வந்தாராம் டீ.எம்.எஸ். தொழிலில் எவ்வளவு ஈடுபாடு பாருங்கள்! "சட்டி சுட்டதடா" என்ற பாடலை அவரை விட்டால் வேறு யாரால் பாட முடியும்? "ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு" என்ற பாடல் படமாக்கப்பட்ட போது அதன் இயக்குனர் அழுது விட்டாராம். "கேட்டதும் கொடுப்பவனே" என்ற பாடலில் கடைசியில் "கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று உருகுவாரே, அந்த குரலில் லயிக்காதவர்களே இருக்க முடியாது.

"யார் அந்த நிலவு, ஏன் இந்த கனவு", "பொன்னை விரும்பும் பூமியிலே" போன்ற பாடல்கள் ஏன் இப்போதெல்லாம் வருவதில்லை? "மன்மத ராசா", "ஓ போடு" என்று ஆரம்பித்து "மொழ மொழனு யம்மா யம்மா" போன்ற குப்பைகளை தானே கேட்க முடிகிறது!

செளந்தரராஜன் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் "எனது பாடல்களால் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் பேரும் புகழும் பெற்றார்கள். ஆனால் எனக்கு அதில் ஒரு லாபமும் இல்லை. என்னை உபயோகித்து கொண்டார்கள்" என்று மிகவும் மன வருத்தத்துடன் கூறினார். ஒரு மாமேதை உயிருடன் இருக்கும் போதே அவரை மனம் குளிர கெளரவித்து விட வேண்டும். அவர் காலமாகிவிட்ட பிறகு ஊருக்கு ஊர் சிலை வைத்தாலும் பிரயோஜனம் இல்லை.

Tuesday 5 August 2008

கோவிந்தா, கோவிந்தா

வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகளுக்கு நம்மால் "விஞ்ஞானபூர்வமான" பதில்களை கூறுவது மிக கடினமாக இருக்கும். அப்படி ஒரு நிகழ்ச்சி எனக்கும் நேர்ந்தது. இதை நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்களுடைய விருப்பம். "பகுத்தறிவுவாதிகள்" தயவுசெய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம், இது உங்களுக்கான பதிவு அல்ல.

1983ம் வருடம். பெங்களூரில் நான் பொறியியல் படித்து கொண்டிருந்த நேரம். என்னுடைய அக்காவும் பெங்களூரில் அவருடைய குடும்பத்தினருடன் இருந்தார். ஒரு வாரக்கடைசியில் திடீரென்று 'திருப்பதி செல்வதாக உள்ளோம்' என்று அவர்கள் வீட்டில் கூறினார்கள். 'நானும் வருகிறேன்' என்று கூறியவுடன் அனைவரும் பெங்களூரிலிருந்து ஒரு பஸ்ஸில் கிளம்பி திருப்பதி சென்றடைந்தோம். நான், எனது அக்கா, அவருடைய கணவர், 3 வயது குழந்தை, அக்காவின் மாமனார், மாமியார் எல்லோரும் சென்றோம்.

நாங்கள் திருமலைக்கு சென்ற போது இரவு 11 மணி இருக்கும். எல்லோருக்கும் பயண அசதி. மறு நாள் அதிகாலையில் அங்க பிரதக்ஷணம் செய்வதாக இருந்தது. அப்போதெல்லாம் கை ரேகை எடுக்கும் பழக்கம் இல்லை. யார் வேண்டுமானாலும் குளித்து விட்டு உடலில் ஈரத்துணியுடன் அங்க பிரதக்ஷணம் செய்ய அனுமதிக்க பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு கிடைத்த விடுதி அறை கோவிலிலிருந்து வெகு தூரத்தில் இருந்தது. இரவு 11 மணிக்கு போய் சேர்ந்த நாங்கள் அசதியில் தூங்கி விட்டோம். திடீரென்று ஒரு உந்துதலில் எழுந்து பார்த்தால் மணி இரண்டு. மூன்று மணிக்கு சுப்ரபாதம் ஆரம்பிக்கும் போது அங்க பிரதக்ஷணத்தையும் ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் அவசரம் அவசரமாக அறையில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் அனைவரும் கோவிலை நோக்கி ஓட ஆரம்பித்தோம். திருமலையில் இலவச பஸ் சேவை இரவில் ஓடாது என்பதால் வேறு வழியில்லாமல் எல்லோரும் கோவிலை நோக்கி ஓட ஆரம்பித்தோம்.

குழந்தையால் ஓட முடியாது என்பதால் அவளை எனது தோளில் உட்கார வைத்து நானும் ஓடினேன். ஒரு வழியாக கோவிலை சென்று அடைந்த எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி.

கோவில் வாசலில் நின்றிருந்த காவலாளி "இன்று வெள்ளிக்கிழமை. அதனால் அங்க பிரதக்ஷணம் கிடையாது" என்றார். எங்களுக்கோ தலையில் இடி விழுந்தது போல இருந்தது. கோவிலுக்கு வெளியே இருந்த மண்டபத்தில் (இப்போது அதை இடித்து விட்டார்கள்) அனைவரும் உட்கார்ந்து கொண்டோம்.

திருப்பதிக்கு வந்து அங்க பிரதக்ஷணம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. எங்களுக்கு வருத்தம் என்னவென்றால் 'இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து கடைசியில் இந்த பிரார்த்தனையை நிறைவேற்ற முடியவில்லையே' என்பது தான். "கோவிந்தா! உன்னை தேடி நாங்கள் வந்தோம். இப்படி செய்து விட்டாயே" என்று மனம் உருகி வேண்டினோம். அனைவருக்கும் அழுகையே வந்து விட்டது.

திடீரென்று எங்களை தாண்டி ஒரு பெரியவர் சென்றார். நெற்றியில் பட்டை நாமமும், பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம் என்று மிக கம்பீரமாக இருந்தார். நேரே காவல்காரரிடம் சென்று "இவர்கள் ஏன் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டார். காவல்காரர் "இன்று அங்கபிரதக்ஷணம் கிடையாது என்பது இவர்களுக்கு தெரியாது. ஆனால் அதை செய்வதற்கு வந்திருக்கிறார்கள்" என்று கூறினார். எங்களை ஒரு பார்வை பார்த்த பெரியவர் காவலாளியிடம் "சரி, சரி, இவர்களை மட்டும் அனுமதி" என்றார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். திருப்பதி தேவஸ்தானத்தில் ஏதோ பெரிய அதிகாரி போல, என்று நினைத்துக்கொண்டோம்.

அவசரம் அவசரமாக கோவில் உள்ளே நுழைந்து நாங்கள் அங்கபிரதக்ஷணத்தை ஆரம்பிக்கவும் "கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா.." என்று கோவில் அந்தணர்கள் சுப்ரபாதத்தை பாடவும் சரியாக இருந்தது. "கோவிந்தா! கோவிந்தா!! என்னே உனது கருணை" என்று அவனை எண்ணிக்கொண்டே அனைவரும் ஆனந்தமாக அங்க பிரதக்ஷணத்தை செய்து முடித்தோம்.

அங்கபிரதக்ஷணம் செய்தவர்களுக்கு ஒரு இலவச தரிசனம் உண்டு. நாங்கள் மட்டும் தான் அன்று அங்கபிரதக்ஷணம் செய்தவர்கள் என்பதால் எங்களுக்காக ஒரு தரிசனம் அனுமதிக்க பட்டது. கண்கள் நிறைய ஆனந்தமாக பரம்பொருளை தரிசித்து விட்டு கோவில் வெளியே வந்தோம்.

எங்களுக்கு சிறப்பு அனுமதி கொடுத்த அந்த அதிகாரியை சந்தித்து நன்றி கூற வேண்டும் என்று முதலில் எங்களை தடுத்த அந்த காவலாளியிடம் "எங்களை உள்ளே அனுமதித்த அந்த பெரியவர் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டோம். காவலாளியோ, மிகவும் குழம்பி "எந்த பெரியவர்? யாரையுமே நான் உள்ளே அனுமதிக்கவில்லையே!" என்று கூறினார். நாங்களோ விடாமல் "இல்லையப்பா. எங்களை நீ அனுமதிக்கவில்லை. பெரிய‌ நாமம் போட்ட ஒரு பெரியவர் வந்து எங்களை அனுமதிக்க சொன்னாரே, நீதானே எங்களை உள்ளே விட்டாய்" என்று கூறினோம். அந்த காவலாளியோ, விடாப்பிடியாக "இரவு முழுவதும் நான் இங்கே தான் நின்று கொண்டிருக்கிறேன். இன்று அங்கபிரதக்ஷணமே கிடையாது. நான் யாரையுமே உள்ளே அனுமதிக்கவில்லையே" என்று கூறினான்!

எங்கள் கண்களில் கண்ணீர்!கோவிந்தா! நீ நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றா? கருணைக்கடலே! எங்களுக்காக இறங்கி வந்தாயோ நீ? கோவிந்தா! கோவிந்தா!! காத்தருள்வாய் இறைவா!

Friday 1 August 2008

சூர‌த் நினைவுக‌ள்-1

சூரத் நகரில் நான் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாதவை. சாதாரணமாகவே குஜராத்திகள் கடும் உழைப்பாளிகள். குஜராத்தி பிச்சைக்காரனை நீங்கள் எங்கும் பார்க்கவே முடியாது. அவ்வளவு தன்மானம் கொண்டவர்கள். விருந்தோம்பலில் அவர்களுக்கு நிகர் இல்லை என்றே கூறலாம். அதே போல, மிகவும் நாணயமானவர்கள்.

எனக்கு திருமணமாகி சில நாட்களே ஆகி இருக்கும். திருமணத்தின் போது உபயோகித்த வேட்டியில் மஞ்சள், குங்குமம் கறைகள் இருந்தன. அதை சலவை செய்வதற்காக கடையில் கொடுத்தேன். வேட்டியை திரும்ப வாங்க சென்றபோது எனக்கு ஒரே அதிர்ச்சி. வேட்டி தார் தாராக கிழிந்திருந்தது.

எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. திருமண வேட்டி இப்படி ஆகிவிட்டதே என்று மனது மிகவும் சங்கடப்பட்டது. நான் சலவைக்காரரிடம் "உங்களை நம்பி நான் எனது திருமண வேட்டியை கொடுத்தேன். இப்படி செய்துவிட்டீர்களே!" என்று கூறினேன்.

சலவை கடைக்காரருக்கும் சங்கடமாகி இருக்கும் போல‌. அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். நான் நொந்து கொண்டே கடையை விட்டு வெளியே செல்லும்போது என்ன தோன்றியதோ தெரியவில்லை, அவர் என்னை கூப்பிட்டார். "உங்கள் திருமண வேட்டி கிழிந்து விட்டதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். இந்த வேட்டியின் விலை என்னவோ சொல்லுங்கள், அதை நான் கொடுத்து விடுகிறேன். இல்லை என்றால், சென்னையில் எந்த கடையில் வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள். அந்த கடையிலிருந்தே நான் இதே மாதிரி இன்னொரு வேட்டியை உங்களுக்காக வாங்கி தருகிறேன்" என்றார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத நான், இவன் எங்கே நமக்கு பணத்தை தரப்போகிறான் என்று " சுமார் 500 ரூபாய் இருக்கும்" என்று கூறினேன். கடைக்காரர் சிறிதும் தயங்காமல் கல்லாவிலிருந்து 500 ரூபாயை எடுத்து கொடுத்து விட்டார். அது மட்டுமில்லாமல் வேட்டி கிழிந்ததற்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

எனக்கு என்னவோ போலாகிவிட்டது. வீட்டுக்கு வந்து மனைவியிடம் நடந்ததை கூறினேன். வேட்டி 450 ரூபாய் தான் என்று அவர் கூறியதும் உடனே கடைக்காரரிடம் சென்று 50 ரூபாயை திருப்பி கொடுத்து விட்டேன்.

தான் ஒரு தவறு செய்து விட்டோம் என்று தெரிந்த பிறகும் அதை மறைக்காமல் பொறுப்பு ஏற்றுக்கொண்டு நான் தோராயமாக கூறிய விலையை சிறிதும் தயங்காமல் கொடுத்த அந்த சலவை கடைக்காரரின் நாணயத்தை நினைத்து மிகவும் பெருமைப்பட்டேன். இந்த காலத்தில் இப்படியும் மனிதர்களா? நமது ஊர் சலவை கடைகளில் ரசீதின் பின்புறம் 'துணிக்கு ஏதாவது ஆனால் துணியின் விலையில் 10 சதவிகிதம் அல்லது 20 ரூபாய், இரண்டில் எது குறைவோ அது கொடுக்கப்படும்' என்று வக்கீல் பேசுவது போல எழுதி இருப்பார்கள்.

எனது வேட்டியை சேதப்படுத்திய கடை என்ற வருத்தம் முழுவதுமாக அந்த கடைக்காரரின் நாணயத்தால் மறைந்து விட்டது. அதற்கு பிறகு அந்த கடையின் நிரந்தர வாடிக்கையாளராகி விட்டேன்.

இது ஒரு வியாபார யுத்தியாக கூட இருக்கலாம், எனக்கு தெரியவில்லை. ஆனால், பொதுவாக நாம் கொடுக்கும் பணத்துக்கு நம்மை ஏமாற்றாமல் சேவை செய்யும் எவரையும் நாம் லேசில் மாற்றுவதில்லை இல்லையா? தரமான பொருட்களை கொடுக்கும் மளிகை கடை, கலப்படம் செய்யாத பெட்ரோலை கொடுக்கும் பெட்ரோல் நிலையம், இன்முகத்தோடு நம்மை வரவேற்கும் வியாபாரி, இப்படி சொல்லி கொண்டே போகலாம். இவர்களின் சேவைக்கு சிறிது அதிகமான விலை கொடுத்தால் கூட அவர்களின் தரத்துக்கும் நாணயத்துக்கும் எப்போதும் நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?