Saturday 28 June 2008

திருவிழா

திருவிழா என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். பல வருடங்கள் சென்னை மயிலையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவுக்கு செல்லும் பழக்கம் எனக்கு இருந்தது. அதில் முக்கியமானதாக கருதப்படும் தேர் திருவிழாவும் அதற்கு மறுநாள் அறுபத்து மூவர் திருவிழாவும் மிகவும் விசேஷம்.
சிறுவனாக இருந்தபோது இந்த திருவிழாக்கள் வந்தால் தானாகவே உற்சாகம் பிறந்து விடும். இதில் என்ன வேடிக்கை என்றால் சுவாமி தரிசனம் ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த திருவிழா கூட்டத்தை பார்ப்பதே ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தது. தேரை ஒரு மிக நீண்ட வடத்தில் கட்டி இழுப்பார்கள். தேரிலிருந்து ஒருவர் பச்சை கொடியை அசைத்து "ப்பீஈஈ!" என்று விசில் அடித்த உடனேயே நூற்றுக்கணக்கான பேர் வடத்தை பிடித்து இழுக்க ஆரம்பிப்பார்கள்.
அந்த வடத்தை ஒரு கையால் பிடிக்க முடியாது. அவ்வளவு பெரிதாக இருக்கும்.வடத்தை எத்தனை பேர் நிஜமாகவே இழுக்கிறார்கள் என்று எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் இருந்தது. "வ்வ்வ்வ்வ்" என்று முகத்தை அஷ்டகோணத்தில் வைத்துக்கொண்டு வடத்தை இழுப்பவர்கள் உண்மையிலேயே இழுக்கிறார்களா அல்லது சும்மா தொட்டுக்கொண்டு பாவ்லா காட்டுகிறார்களா என்று தெரியாது! இதை எனது அம்மாவிடம் கேட்டால் "சும்மா இருடா" என்று அதட்டி அடக்கி விடுவார்கள்.
ஆனால், வடத்தை இழுக்கும்போது தேர் அசைந்து அசைந்து ஆடி வரும் மயில் போல பார்க்க மிக அழகாக இருக்கும். தேரின் இரு புறமும் பல நிறங்களை கொண்ட நீண்ட வட்ட வடிவமான துணியை மாட்டி வைத்திருப்பார்கள். இதற்கு பெயர் 'அசைந்தாழி' என்று பிறகு தெரிந்து கொண்டேன். தேரின் ஓட்டத்துடன் இதுவும் சேர்ந்து அசையும் போது பார்க்கவே பரவசமாக இருக்கும்.
தேர் தெற்கு மாட வீதியில் வரும்போது மாடி வீடுகளில் உள்ளவர்கள் மேலிருந்து பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை தேர் இழுப்பவர்கள் மீது கொட்டுவார்கள். காதலிக்க நேரமில்லை படத்தில் "விஸ்வநாதன் வேலை வேண்டும்" என்ற பாடல் நினைவுக்கு வரும். கொதிக்கும் வெயிலுக்கு மிக அருமையாக இருக்கும் அந்த குளியல்!
மறுநாள் அறுபத்து மூவர் விழா. ஒவ்வொறு நாயன்மாரையும் பல்லக்கில் வைத்து அலங்கரித்து தூக்கி கொண்டு வருவார்கள். அப்போது சில அறிய காட்சிகளை காணலாம்.
கன்னத்தில் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் வரை கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு வருபவர். உடல் முழுவதும் வேலை குத்திக்கொண்டு காவடி எடுத்துக்கொண்டு வருபவர். இவர்களை பார்த்தால் ஒருவித பயம் கொண்ட பரவசம் ஏற்படும். இவர்களுக்கெல்லாம் வலிக்காதோ?
பிச்சைக்காரர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும். மாங்காய் தலையன், பெரிய நாமத்தை நெற்றியிலும் உடலிலும் இட்டுக்கொண்டு மஞ்சள் வேட்டியுடனும் கையில் சொம்புடனும் சாலையில் "கோவிந்தோ, கோவிந்தோ" என்று கூறிக்கொண்டே உருண்டு அங்க பிரதட்சிணம் செய்பவன், தோளில் அழுக்கு பைக்குள் கைக்குழந்தையும் கையில் முரசு / குச்சியுடன் "டகர டகர டகர" என்று அடித்துக்கொண்டே வருபவள், உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்பவன் (அது குங்குமம் தான், ரத்தம் இல்லை என்று சொன்னார்கள்) ‍ ஆனால் கால்களில் சலங்கையுடன் அவன் தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும்போது கொஞ்சம் பயமாக தான் இருக்கும்). இப்படி பலவிதமான பிச்சைக்காரர்கள் தென்படுவார்கள்.
காணாமல் போன குழந்தைகளை பற்றி அதற்கான பந்தலில் ஒரு போலீஸ்காரர் வாய் ஓயாமல் கத்திக்கொண்டே இருப்பார். மைக்கில் "அம்மா, உடனே வா" என்று ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கும். அந்த சத்தத்தில் குழந்தையின் தாய்க்கு கேட்குமோ கேட்காதோ! "திருடர்கள் ஜாக்கிரதை, உங்கள் பர்ஸ்ஸை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று இன்னொரு பக்கத்திலிருந்து மைக்கில் வேறொருவர் கத்திக்கொண்டிருப்பார். இன்னொரு பக்கம் கண்மலரில் இருந்து கமர்கட் வரை விற்பனை செய்யும் வியாபாரிகளின் கூச்சல். எங்கு பார்த்தாலும் கூட்டமோ கூட்டம். பஞ்சு மிட்டாய் விற்பவன், கடிகாரம் போன்ற வடிவத்தில் கைகளில் மிட்டாயை கட்டிக்கொண்டு விற்பவன், காத்தாடி வியாபாரி என்று பல தரப்பட்டவர்களை பார்க்கலாம்.
இது போல வேறு எந்த நாட்டிலும் உள்ளதா என்று தெரியவில்லை. உண்மையிலேயே நம்மூர் திருவிழாக்களை போல குதூகலமும் உற்சாகமும் வேறு எங்கும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

Sunday 22 June 2008

கலையும் கனவுகள்

நேற்று செளதியி அரேபியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான Arab News ல் வெளியான ஒரு செய்தி. இந்தியாவிலிருந்து வேலை தேடி வந்த 70 பேர் செளதிக்காரனால் ஏமாற்றப்பட்டு சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுகிறார்களாம். இந்த சுட்டியை பார்க்கவும். இவர்கள் அனைவரும் தலா ரூ. 1 லட்சம் பம்பாயில் உள்ள ஏஜெண்ட்டிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஏஜெண்ட் இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரியால் (சுமார் பதினோராயிரம் ரூபாய்) சம்பளம் என்று கூறி அனைவரும் ஒப்பந்தத்தில் வேறு கையெழுத்திட்டுள்ளார்கள். வந்த அனைவருமே சமையற்காரர்களாகவும் cashierகளாகவும் வேலை என்று ஏஜெண்ட் கூறியிருக்கிறான்.
செளதி வந்த பிறகு அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. "உங்கள் சம்பளம் வெறும் 500 ரியால் தான் (அதாவது பேசிய சம்பளத்தில் பாதி தான்). மீதி உங்களுடைய விசா செலவுகளுக்கு சரியாக போய் விட்டது" என்று செளதிக்காரன் கூறியிருக்கிறான். அது மட்டுமல்ல, அனைவரையும் க்ளீனர்களாக வேலை செய்ய கூறியிருக்கிறான்.
இவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் 7 பேரை உடனேயே மீண்டும் இந்தியாவுக்கே திரும்ப அனுப்பி இருக்கிறான். பயந்து போன மீதி பேர், கடனை உடனை வாங்கி 1 லட்ச ரூபாய் ஏஜெண்ட்டிடம் கட்டிய பணத்தை ஊருக்கு திரும்பினால் சம்பாதிக்க வழியில்லை என்று எண்ணி குறைந்த சம்பளத்துக்கே ஒப்புக்கொண்டு விட்டனர்.
இதில் 13 பேர் மட்டும் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நண்பர்களே, செளதியில் இது ஒன்றும் புதிதானது அல்ல. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே இருப்பார்கள். இதை தமிழகத்தில் இருந்து படிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். செளதியில் வேலை என்பது ஏதோ சொர்கபுரியில் வேலை என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். 52 டிகிரி வெயிலில் படாத பாடு பட்டு மனைவி, குழந்தைகளை விட்டு 3 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஊருக்கு செல்லும் தியாகிகள் தான் இங்கு நிறைய உண்டு. 'இவனுக்கு என்ன, துபாயில் சம்பாதிக்கிறான்' என்று கிண்டலாக ஊரில் சிலர் கூறிக்கொண்டு திரிவார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், அப்படி நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள் 10 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். பெரும்பாலான இந்தியர்கள் கூலிகளாகவும், சுமை தூக்குபவர்களாகவும், சாலை போடுபவர்களாகவும், மிகவும் கஷ்ட ஜீவனமே நடத்துகிறார்கள். இன்னும் சிலர் ஒட்டகம் மேய்ப்பவர்களாக உள்ளனர். இவர்கள் பாடு திண்டாட்டம் தான். பேசுவதற்கு கூட ஆளே இல்லாமல் நடு பாலைவனத்தில் ஒட்டகங்களுடல் நாட்கணக்கில் இருக்க வேண்டும். 7 நாட்களுக்கு ஒரு முறை செளதிக்காரன் ஒரு பையில் ரொட்டியும் தண்ணீரையும் கொடுத்து விட்டு சென்று விடுவான். இந்த 7 நாட்களுக்குள் அந்த மனிதன் இறந்து விட்டால் கூட யாருக்கும் தெரியாது.
இங்கு வந்த பிறகு "இந்திய தூதரகம் நமக்கு உதவவில்லை" என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை. அவர்களும் என்னதான் செய்வார்கள்? இது ஒவ்வொறு நாளும் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம் அல்லவா?
தமிழகத்திலிருந்து செளதிக்கு வேலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரை. ஏஜெண்ட்டிடம் கொடுக்க நீங்கள் 1 லட்ச ரூபாய் கடன் வாங்கப்போகிறீர்களா? தயவு செய்து அதை ஏஜெண்ட்டிடம் கொடுக்காதீர்கள். அந்த பணத்தில் ஊரில் ஒரு பெட்டி கடை வைத்தால் கூட உங்களால் கெளரவமாக வாழ்க்கையை ஓட்ட முடியும். இதை பற்றிய ஆங்கில சுட்டி இங்கே உள்ளது. இதை படிக்கும் அன்பர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் செளதியில் உள்ள நிலைமையை பற்றி தயவு செய்து புரிய வையுங்கள்.

Tuesday 17 June 2008

மறதி திலகங்கள்

எல்லா தந்தைக்குலங்களும் கேட்க வேண்டிய சோகக்கதை இது!
பொதுவாகவே தங்கமணிகள் அனைவரும் தத்தம் ரங்கமணிகள் மேல் ஒரு புகார் கூறுவார்கள். அது என்னவென்றால், 'உலகில் உள்ள ரங்கமணிகள் அனைவரும் மறதி திலகங்கள்' என்பது தான்! இந்த பட்டியலில் நானும் ஒருவன் என்பதை பரிதாபத்துடன் கூறிக்கொள்கிறேன்.


விஷயம் ஒன்றும் இல்லை ஐயா. எனது நண்பன் தன் குழந்தைக்கு பிறந்த நாள் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். விழாவில் கேக் எல்லாம் வெட்டி சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்காக ஒரு பல்சுவை நிகழ்ச்சி இருந்தது. இதில் ஒவ்வொரு குழந்தையாக மேடை மேல் ஏறி தனக்கு தெரிந்த பாடலை பாடியோ அல்லது வாத்தியத்தை இசைத்தோ அரங்கேற்றி கொண்டிருந்தார்கள்.

இது போன்ற விழாக்களில் சில புதிய நண்பர்களின் சகவாசம் கிடைக்கும் அல்லவா? புதிதாக சந்திக்கும் நண்பர்களை நாமே வலிய சென்று அறிமுகப்படுத்தி கொள்ளலாம் என்று எனது நண்பன் (தாமு என்று வைத்துக்கொள்வோமே) கூறினேன். அவனும், "சரி வா. எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலரை உனக்கு முதலில் நான் அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறினான்.

அதோடு மட்டும் நிறுத்திக்கொண்டிருக்கலாம். "இந்த தங்கமணிகளுக்கு எப்போது பார்த்தாலும் டீ.வீ. சீரியல்களை பற்றி பேசத்தான் நேரம் இருக்கும். புதிய நண்பர்கள் கிடைத்தால் கூட 'அவன் மனைவி பச்சை நிற மைசூர் சில்க் புடவை கட்டிக்கொண்டு வந்தா' என்று ஒரு மாதத்துக்கு பிறகு கூட ஞாபகம் வைத்துக்கொண்டிருப்பார்கள்" என்று கமெண்ட் ஒன்றை அடித்து விட்டான்.

அவன் எவ்வளவு பெரிய வம்பில் மாட்டிக்கொள்ள போகிறான் என்று அப்போது தெரியவில்லை.

தாமு ஒருவரிடம் சென்று, "வெங்கடேசன், என் நண்பனை சந்தித்தீர்களா?" என்று என்னை அறுமுகப்படுத்துவது போல பேச்சு கொடித்தான். தாமுவின் தங்கமணியும் வெங்கடேசனின் தங்கமணியும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நானும் வெங்கடேசனிடம் கை குலுக்கினேன். அவர் உடனே தாமுவிடம் "சார், நான் வெங்கடேசன் இல்லை. என் பெயர் கோவிந்தன்" என்று கூறினார்.

தாமுவின் முகம் என்னவோ போலாகிவிட்டது. ஒரு நிமிடம் அங்கு மயான அமைதி நிலவியது. நானாவது சும்மா இருந்திருக்க வேண்டும். என் நண்பனை நான் விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா? நிலைமையை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே!

உடனே நான் "கோவிந்தன் சார், உங்க பையன் ரொம்ப நல்லா புல்லாங்குழல் வாசிச்சான்" என்றேன்.
இப்போது என் தங்கமணி என்னை பார்த்து முறைத்தாள்.

'என்னடா, நான் ஏதாவது தப்பாக கூறிவிட்டேனா' என்று நான் நினைப்பதற்குள் கோவிந்தன் குரலை கனைத்துக்கொண்டே "சார், இப்போ வாசிச்சது என் பையன் இல்லை. எனக்கு பையனே கிடையாது. என் பொண்ணு இன்னும் வாசிக்கவே ஆரம்பிக்கல" என்றாரே பார்க்கலாம்!

பிறகு என்ன, எல்லா தங்கமணிகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்! கவுத்துட்டாங்கய்யா, கவுத்துட்டாங்கய்யா!

Sunday 15 June 2008

ஐடியாக்களின் பிறப்பிடம்

சமீபத்தில் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தேன். அந்த விழாவை ஒரு பொது கூடத்தில் (recreation hall)நடத்தியிருந்தனர். சிறிது நேரம் சென்ற பின் மடி பாரத்தை இறக்க (அதாங்க "உச்சா போக") கழிவறைக்கு சென்றேன். அந்த கழிவறையின் கதவு பின்புறத்தில் 'அரசன் மாதிரி உட்கார், குரங்கு மாதிரி உட்காராதே' என்று (Sit like a king, not like a monkey!) ஆங்கிலத்தில் யாரோ எழுதி ஒட்டி இருந்தனர். ஆஹா, ஆரம்பிச்சுட்டாங்கய்யா!

வீட்டுக்கு வந்த பின் வெகு நேரம் இதையே நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். என் தங்கமணிக்கு ஒரு சந்தேகம் 'என்ன ஆயிற்று இந்த மனிதனுக்கு' என்று. அவள் பாவம் என்ன தான் செய்வாள்? வழக்கம் போல எங்கள் வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. ஆனால் இந்த குமுதம், ஆனந்த விகடன் இத்யாதி பத்திரிகைகளை வேறு எந்த இடத்திலும் தேட வேண்டாம். நேராக கழிவறைக்கு வந்தால் ஒரு சிறிய நூலகத்தையே காணலாம்!

இதனால் பல முறை எனக்கும் தங்கமணிக்கும் சண்டை வந்திருக்கிறது. "உங்களுக்கு பத்திரிகை படிக்க வேறு இடமே கிடைக்கவில்லையா?" என்று வழக்கம் போல அவள் கத்த நானும் "வீட்டில் நிம்மதியா படிக்க இதை விட்டால் வேறு ஏது இடம்?" என்று கூறுவேன்.

அது என்னமோ தெரியவில்லை, கழிவறையில் தான் மிக பெரிய ஐடியாக்கள் தோன்றும் என்று நினைக்கிறேன். ஊரில் நான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுக்கு என்ன நிற பெயிண்ட் அடிப்பது என்பதிலிருந்து தலை முடி கறுக்க எந்த‌ தைலத்தை உபயோகப்படுத்தலாம் என்பது வரை சகல யோசனைகளுக்கும் சிறந்த இடம் இந்த கழிவரறைதான்! 'இப்படி யோசித்து யோசித்தே இருக்கும் நான்கு முடிகளும் உங்களுக்கு உதிர்ந்து விடும்' என்று தங்கமணி கதவின் அந்த பக்கத்திலிருந்து கத்துவதை காதில் வாங்காது, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் போல புதிய புதிய யோசனைகள் அருவி போல கொட்டும் இடம் சாட்சாத் நமது கழிவறை தான் நண்பர்களே!

சில பேர் வீட்டில் கழிவறையில் வெறும் ஒரு zero watt பல்பை பொருத்தியிருப்பார்கள். கேட்டால் மின்சார சிக்கனமாம். அடக்கடவுளே! இவர்கள் எல்லாம் எப்படிதான் இருக்கிறார்களோ! 'யார் வேண்டுமானாலும் எப்படியோ போகட்டும், நமது வீட்டு கழிப்பறையில் ஒரு fan ஐ சுவற்றில் கட்டாயம் மாட்ட போகிறேன்' என்று நான் கூறினால், தங்கமணி தலையில் அடித்துக்கொள்கிறாள்.

பின்னே என்ன நண்பர்களே, அக்கடா என்று கழிவறையில் உட்காரும்போது வியர்த்து விறுவிறுத்து புழுங்கினால் ஐடியாக்கள் எப்படி வெளிவரும்?

மனிதன் நிம்மதியாக ஒரு செய்தித்தாளையோ புத்தகத்தையோ படிக்க வேண்டாம்?
'இந்த மாதிரி அக்கிரமம் வேறு எந்த வீட்டிலும் கிடையாது' என்று தங்கமணி கூறுவாள். ஆனால், சமீபத்தில் எனது நண்பர் வீட்டில் தற்செயலாக கழிவறைக்கு சென்றால் அங்கு நான் பார்த்தது -‍ வேறு என்ன, குமுதம் பத்திரிகை தான்! ஆக, எல்லோர் வீட்டிலும் நடப்பது இது தானா?

அதனால் ரங்கமணிகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் உரிமையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள். ஞாபகம் இருக்கட்டும், ஆர்க்கமெடிஸ் என்ற விஞ்ஞானி ஒரு பெரிய தத்துவத்தையே பாத்ரூமில் தான் கண்டுபிடித்தார். இந்த தங்கமணிகளுக்கு எப்படி தெரிய போகிறது கழிவறையின் கற்பூர வாசனை!

Sunday 8 June 2008

'இனிப்பான‌' அனுப‌வ‌ம்

சூரத் நகரில் நான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நடந்த மறக்க முடியாத சம்பவம் இது. பட்டப்படிப்பை முடித்துவிட்டு அப்போது தான் பணியில் சேர்ந்திருந்த நேரம். புதிதாக ஒரு இரசாயன தொழிற்சாலையை கட்டிக்கொண்டிருந்தார்கள். நான் ஒரு மின் பொறியாளன் என்றாலும் இருந்தவர்ரகளிலேயே மிகவும் ஜூனியரும் வயது குறைந்தவனும் நான் தான் என்பதால் எல்லா சில்லரை வேலைகளும் என் தலை மேல் தான் விழும். இது காலாகாலமாக நடந்து வரும் ஒரு பழக்கம் தான். வடிவேலு "டேய் அப்ரசண்ட்டுகளா!" என்று ஒரு திரைப்படத்தில் அழைப்பாரே, அதே போலதான் என்று வைத்து கொள்ளுங்களேன்!

புதிய‌ தொழிற்சாலைக்கு க‌ட்டுமான‌ப்ப‌ணி ந‌ட‌ந்து கொண்டிருந்த‌தால் எங்கு பார்த்தாலும் ப‌ல‌ ஒப்ப‌ந்த‌ தொழிலால‌ர்க‌ள் வேலை செய்து கொண்டிருந்த‌ன‌ர். ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டும் குழியுமாக‌ தோண்டி வைத்திருந்த‌ன‌ர் (அஸ்திவார‌ம் போடுவ‌த‌ற்காக‌). அது ம‌ழைக்கால‌மாத‌லால், இந்த‌ குழிக‌ளில் எல்லாம் த‌ண்ணீர் நிர‌ம்பி சிறிய‌ குள‌ங்க‌ள் போல‌ இருக்கும். அந்த‌ நீரை வெளியே இரைப்ப‌த‌ற்கு அங்க‌ங்கு சிறிய‌ பம்ப்புக‌ளை வைத்திருந்த‌ன‌ர்.

ஒரு நாள் இப்ப‌டிதான் ஒரு சிறிய‌ குள‌த்தில் நீரை இறைப்ப‌த‌ற்காக‌ ஒரு ப‌ம்ப்பை 'ஆன்' செய்து விட்டு ஒப்ப‌ந்த‌க்கார‌ர் வீட்டுக்கு சென்று விட்டார். இர‌வு முழுவ‌தும் அந்த‌ மோட்டார் ஓடிக்கொண்டே இருந்திருக்கிற‌து. விடிய‌ற்காலைக்குள் அத்த‌னை த‌ண்ணீரும் காலியாகி விட்டிருந்த‌து. ஆனால் மோட்டார் ஓடிக்கொண்டே இருந்த‌தை க‌வ‌னித்த‌ காவ‌ல்கார‌ர் அதை அணைப்ப‌த‌ற்காக‌ ஈர‌க்கையுட‌ன் அந்த‌ ப‌ம்ப்பின் சுவிட்ச்சை தொட்டிருக்கிறார். அவ்வ‌ள‌வுதான். உட‌லில் மின்சார‌ம் பாய்ந்து அந்த‌ இட‌த்திலேயே ப‌ரிதாப‌மாக‌ அவ‌ர் உயிர் இழ‌ந்தார். இர‌வு நேர‌ம் என்ப‌தால் அருகில் யாருமே இல்லை.

விடிய‌ற்காலை ஒப்ப‌ந்த‌க்கார‌ர் சாவ‌காச‌மாக‌ வ‌ந்த‌ போது பிண‌மாக‌ கிட‌ந்த‌ காவ‌லாளியை பார்த்து அல‌றி விட்டார். உட‌னே, அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ மின்சார‌த்தை அணைத்து விட்டு ஆம்புல‌ன்ஸை கூப்பிட்டு காவலாளியின் உடலை ஆஸ்ப‌த்திரிக்கு எடுத்து சென்றிருக்கிறார். ஆனால் எங்க‌ள் நிறுவ‌ன‌த்தில் யாருக்குமே இதை ப‌ற்றி த‌க‌வ‌லே கூற‌வில்லை. அவ‌ர் செய்த‌ மிக‌ப்பெரிய‌ ம‌ட‌த்த‌ன‌ம் இது தான்.

இதற்குள் ஆஸ்பத்திரியிலிருந்த மருத்துவர்கள் உடனே காவல் துறைக்கும் மின்சார ஆய்வாளருக்கும் ( electrical inspector ) தகவல் கொடுத்துவிட்டார்கள். வந்தது வினை!

தொழிற்சாலைகளில் எலெக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் என்றாலே ஒருவித பீதி இருக்கும். இந்த பதவி மிக மிக சக்திவாய்ந்ததாகும். ஒரு நிறுவனத்தில் மின்சார இயந்திரங்கள் எல்லாம் சரியாக உள்ளனவா என்பதை ஆராய்ந்து அதற்கான சான்றிதழை கொடுப்பதுதான் இந்த எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டரின் வேலை. இவர் நினைத்தால் ஒரு நிறுவனத்தின் மின்சாரத்தை கூட நிறுத்த முடியும்.

நடந்த விஷயம் எதுவுமே எங்களுக்கு தெரியாமல் நாங்கள் வழக்கம் போல காலையில் வேலைக்கு வந்தோம். எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எங்கள் department வாசலில் காவல் துறையினரும் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டரும் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்!

எங்களுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. நாங்கள் வாயை திறப்பதற்கு முன்பே எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் 'காச் மூச்'சென்று கத்த ஆரம்பித்து விட்டார். அப்போது தான் தொழிற்சாலையில் ஒரு மரணம் நிகழ்ந்த விஷயமே எங்களுக்கு தெரியும்!

"மின்சாரம் தாக்கி ஒரு மனிதன் இறந்திருக்கிறான். இந்த விஷயத்தை என்னிடமிருந்து மறைக்க பார்த்திருக்கிறீர்கள். உங்களை ஒரு வழி பண்ணாமல் நான் விடப்போவதில்லை. நாளை என்னுடைய அலுவலகத்தில் விசாரணை நடத்த போகிறேன்" என்று எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் காட்டு கத்தல் கத்திவிட்டு சென்று விட்டார். எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு கூப்பிடுகிறார் என்றால் கதை கந்தல்தான் என்று அர்த்தம்.

எங்கள் எல்லோருக்கும் mood out ஆகி விட்டிருந்தது. நிறுவனத்துக்குள்ளே இப்படி மரணம் நிகழ்ந்ததே இல்லை. அந்த ஒப்பந்தக்காரர் எங்களுக்கு ஒரு போன் கூட போட்டு பேசாமல் மறைத்திருந்தது எவ்வளவு பெரிய பிரச்னை ஆகி விட்டது! சரி, இப்போது என்ன செய்வது? எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்ட்டரை வேறு நாளை சந்திக்க வேண்டுமே!

அப்போது எங்கள் department டின் தலைவர் அனைவரையும் அவசரமாக கூப்பிட்டு ஒரு meeting போட்டார். அறையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த என்னை அழைத்தார். எனக்கு வெலவெலத்து விட்டது. "நீ தான் நாளைக்கு விசாரணைக்கு செல்ல வேண்டும். நாங்கள் யாரும் வர மாட்டோம்" என்றார். எனக்கு நாக்கு குழற ஆரம்பித்தது. "சார், எனக்கு ஒன்றுமே தெரியாதே" என்று தட்டு தடுமாறி வார்த்தைகள் வந்தன. "அதனால் தான் உன்னை அனுப்புகிறேன். நான் சொன்னால் சொன்னது தான்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அங்கு மயான அமைதி நிலவியது. எனக்கு அழுகையே வந்து விட்டது. நான் வாய் திறப்பதற்குள் அவர் "நீ எதற்கும் கவலைப்படாதே. எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்ட்டர் ரொம்ப திட்டுவார். ரொம்ப கோபப்படுவார். அவர் என்ன சொன்னாலும் நீ, 'என்னை மன்னித்துவிடுங்கள்'("I am sorry Sir" ) என்று மட்டும் கூறிக்கொண்டே இரு. வேறு எதையும் பேசாதே. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்.

மறு நாள் ஒரு காரில் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் அலுவலகத்துக்கு சென்றேன். அவர் குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு முன்பே அங்கு போய் ஆஜரானேன். அந்த அலுவலகத்தில் என்னை பார்த்ததும் அனைவரின் முகத்திலும் ஒரு எக்காளம் இருந்தது போல இருந்தது.

விசாரணை அறைக்குள் சென்றேன். ஆஜானபாகுவாக என்னை சுட்டெரிப்பது போல எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் பார்த்தார். "யார் நீ? வேறு யாரும் உங்கள் நிறுவனத்திலிருந்து வரவில்லையா?" என்று கர்ஜித்தார். எனக்கு வெலவெலத்து விட்டது. "இல்லை சார். வேறு யாரும் வரவில்லை. நான் மின் பொறியாளனாக பணி புரிகிறேன்" என்று கூறினேன். விசாரணைக்கு ஒரு 22 வயது பையனை எங்கள் நிறுவனம் அனுப்பியது அவரின் கோபத்தை இன்னும் அதிகரித்து விட்டது! இருப்பதிலேயே மிகவும் ஜூனியரான ஒருவனை அனுப்பியிருக்கிறார்களே என்ற அவமானமோ!

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் என்னை நைய புடைத்து விட்டார் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர். அவர் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் நான் " I am sorry Sir" என்றே கூறினேன். இப்படி எத்தனை முறை Sorry கேட்டிருப்பேன் என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு எனது Department தலைவரின் மேலே கோபம் கோபமாக வந்தது. 'வேண்டுமென்றே என்னை மாட்டி விட்டு விட்டானே, இவன் நல்லா இருப்பானா' என்று மனதுக்குள் சபித்துக்கொண்டேன்.

ஒரு மணி நேரத்துக்கு பிறகு 'இவனிடம் பேசி இனி பிரயோஜனம் இல்லை, எதற்கெடுத்தாலும் Sorry என்கிறான்' என்று நினைத்திருப்பார் போல. 'விசாரணை முடிந்தது, நீ போகலாம்' என்று கத்தினார்.

ஆளை விட்டால் போதும் என்று நான் அந்த அறைக்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்தால் ஒரு ஆச்சரியம்.

எங்கள் நிறுவனத்திலிருந்து ஒரு பெரிய van நிறைய இனிப்பு பண்டங்கள் வந்திறங்கி கொண்டிருந்தன. அப்போது தீபாவளி சமயம் என்பதால் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கிக்கொள்வது சூரத்தில் சாதாரணமான விஷயமாக இருந்தது. அந்த அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் (கடை நிலை ஊழியரிலிருந்து மேல் மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்கும் மிக விலை உயர்ந்த இனிப்பு பண்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டது). பணமாக கொடுத்தால் தானே லஞ்சம், இனிப்புகளை வழங்கினால் குற்றமாகாதே!! சொன்னால் ந‌ம்ப‌ மாட்டீர்க‌ள், அது வ‌ரை அங்கு நில‌விய‌ ஒரு மிக‌ இறுக்க‌மான‌ சூழ்நிலை த‌ள‌ர்ந்து அனைவ‌ரும் மிக‌ ச‌க‌ஜ‌மாக‌ ஜோக்க‌டித்து பேச‌ துவ‌ங்கி விட்டார்க‌ள்!

ம‌று நாள் காலை நான் தொழிற்சாலைக்கு சென்ற‌ போது என்னை அழைத்த‌ department த‌லைவ‌ர், "என்ன‌, எப்ப‌டி இருந்த‌து விசார‌ணை?" என்று சிரித்துக்கொண்டே என் ப‌திலை கூட‌ கேட்காம‌ல் என் முதுகில் லேசாக‌ த‌ட்டிவிட்டு சென்றார். ஒரு வார‌த்துக்கு பிற‌கு எல‌க்ட்ரிக‌ல் இன்ஸ்பெக்ட‌ரின் அறிக்கை வ‌ந்த‌து. நாங்க‌ள் நிர‌ப‌ராதி, ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ஒரு விப‌த்து தான். ஆனால் அதை அனைவ‌ரிட‌மும் ம‌றைத்த‌ ஒப்ப‌ந்த‌க்கார‌ர் இனி அப்ப‌டி செய்ய‌க்கூடாது என்று எச்ச‌ரிக்கை செய்ய‌ப்ப‌டுகிறார் என்று இருந்த‌து. எங்க‌ள் அனைவ‌ருக்கும் நிம்ம‌தி. அப்பாடா, பிழைத்தோம்!

ஒரு இக்க‌ட்டான‌ சூழ்நிலையை எப்ப‌டி சாத‌க‌மாக்கி கொள்ள‌ முடியும் என்ற‌ Management technique ஐ அன்றுதான் நான் க‌ற்றுக்கொண்டேன்.

Sunday 1 June 2008

டாக்ட‌ர், காப்பாத்துங்க‌

இந்த வானமும் பூமியும் இருக்கும் வரை டாக்டர் ஜோக்குகளுக்கும் ராஜா ஜோக்குகளுக்கும் பஞ்சமே இருக்காது என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்த ஒரு பெண் டாக்டரை பற்றிய சம்பவம் இது. அவ‌ர் பெய‌ர்....சரி, பாமா என்றே வைத்துக்கொள்வோமே.

எம்.பி.பி.எஸ் ப‌ட்ட‌ம் பெற்ற‌ பின் ஒரு சிறிய‌ க்ளினிக்கை அந்த‌ ந‌க‌ர‌த்தின் ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ள் வ‌சிக்கும் ப‌குதியில் திற‌ந்தார் பாமா. பெய‌ருக்கு தான் அது க்ளினிக்கே த‌விர‌, த‌ன் வீட்டின் வாச‌ல் அறையைதான் அவ‌ர் க்ளினிக்காக‌ மாற்றி இருந்தார்.

பொதுவாக‌ எல்லா ம‌ருத்துவ‌ர்க‌ளிட‌மும் நீல‌ நிற‌த்தில் ஒரு புத்த‌க‌ம் இருக்கும். அதில், ஒவ்வொறு இர‌சாய‌ன‌த்துக்கும் (chemical combination) ஏற்றாற்போல கடையில் கிடைக்கும் மாத்திரைக‌ளின் பெய‌ர்க‌ள் இருக்கும். உதார‌ண‌த்துக்கு, ஜூர‌த்துக்கு கொடுக்கும் paracetamol என்ற‌ இர‌சாய‌ன‌ பெய‌ருக்கு equivalentஆக கடையில் கிடைக்கும் Crocin என்ற‌ மாத்திரையின் பெய‌ர் அந்த‌ புத்த‌க‌த்தில் இருக்கும். ச‌ரி, ந‌ம் க‌தைக்கு வ‌ருவோம்.

க்ளினிக்கை திற‌ந்த‌ முத‌ல் 4 நாட்க‌ளுக்கு ஒரு நோயாளி கூட‌ வ‌ர‌வில்லை. ஐந்தாம் நாள் ஒருவ‌ன் இருமிக்கொண்டே வ‌ந்தான். உட‌னே டாக்ட‌ர் வீட்டில் ப‌ர‌ப‌ர‌ப்பு. அந்த‌ வீட்டில் இருக்கும் வ‌ய‌தான‌ தாத்தா உள்ளே இருந்து ஒரு easy chairஐ பரபரவென்று இழுத்து வாச‌ல் அறையில் உட்கார்ந்து கொண்டார்.

நோயாளிக்கு இர‌ண்டு நாட்க‌ளாக‌ ஒரே இரும‌லாம். தொண்டை வ‌ற்றி விட்ட‌தாம். அவ‌ரின் மார்பில் ஸ்டெத் க‌ருவியை வைத்து கேட்டு விட்டு பாமா "கொஞ்சம் இருங்க" என்று கூறிவிட்டு உட‌னே அடுத்த‌ அறைக்கு சென்றார். அங்கே நீல‌ புத்த‌க‌ம் இருந்த‌து. அதில் அந்த‌ இர‌சாய‌ன‌த்துக்கு ஏற்ற‌ மாதிரி க‌டையில் கிடைக்கும் மாத்திரையின் பெய‌ரை ம‌ன‌ப்பாட‌ம் செய்து கொண்டு மெல்ல‌ முத‌ல் அறைக்கு வ‌ந்தார்.

அத‌ற்குள் க்ளினிக்கில் ஒரு சிறிய‌ க‌ல‌வ‌ர‌மே ந‌ட‌ந்து முடிந்து விட்டிருந்த‌து அவ‌ருக்கு தெரியாது. டாக்ட‌ர் உள்ளே சென்ற‌துமே, தாத்தா நோயாளியிட‌ம் எல்லா த‌க‌வ‌ல்க‌ளையும் கேட்க‌ ஆர‌ம்பித்து விட்டார். "அந்த‌ கால‌த்துல‌ நாங்க‌ எல்லாம் வெறும் மிள‌கு, ஓம‌ம், திப்பிலி எல்லாம் அரைத்து ப‌த்திய‌ம் வெச்சுப்போம். ஹூம், இந்த‌ கால‌த்துல‌ த‌டுக்கி விழுந்த‌துக்கெல்லாம் டாக்ட‌ரு கிட்ட‌ வ‌ந்டுட‌றீங்க. இப்படி தான் என் மச்சினனோட பக்கத்து வீட்டுக்காரன் ஏதோ ஒரு மாத்திரய விழுங்கி கடைசில பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கூட ஒண்ணும் பண்ண முடியல‌" என்று ஏதோ உள‌றி வைக்க‌ நோயாளிக்கு என்ன‌வோ போல‌ ஆகி விட்ட‌து.

இதை ப‌ற்றி ஒன்றுமே அறியாத‌ டாக்ட‌ர், முத‌ல் அறைக்குள் மீண்டும் வ‌ந்து "நீங்க‌ ஒண்ணும் க‌வ‌லைப்ப‌டாதீங்க‌ (!) இந்த‌ மாத்திர‌ய‌ 3 நாளைக்கு சாப்பிடுங்க‌" என்று சொல்லி ஏதோ எழுத‌ ஆர‌ம்பித்தார்.

தாத்தா சும்மா இருக்காம‌ல், "ஏண்டி பாமா, இரும‌லுக்கு எரித்ரோமைசின் தானே கொடுக்க‌ணும்" என்று த‌ன‌க்கு தெரிந்த‌தை கூற‌ நோயாளி த‌ப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்ட‌ம் எடுத்தாரே பார்க்க‌ணும்.

இப்ப‌டி த‌ன் practiceஐஆர‌ம்பித்த‌ இந்த‌ டாக்ட‌ர் பிற்கால‌த்தில் மிக‌ பிர‌ப‌ல‌மான‌ டாக்ட‌ராகிவிட்டார் (சும்மாவா, எத்த‌னை நோயாளிகள் கிட்ட‌ தொழில் க‌ற்றுக்கொண்டிருப்பார்!)

நேரில் க‌ண்ட இந்த‌ அனுப‌வ‌த்துக்கு பிற‌கு புதிதாக‌ ம‌ருத்துவ‌ம் பார்க்கும் டாக்ட‌ரிட‌ம் போக‌வே ப‌ய‌மாக‌ இருக்கிற‌து!