Friday 20 December 2013

மெரீனா மாலைகள்

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரு தனித்துவமான அழகும் வசீகரமும் இருக்கும் இடம் ஒன்று உண்டென்றால் அது கண்டிப்பாக மெட்ராஸ் மெரீனா கடற்கரை என்பதில் சந்தேகமில்லை. நான் பிறந்து வளர்ந்த மெட்ராஸில் மெரீனா ஒரு மறக்க முடியாத அங்கமாக திகழ்கிறது. ஒவ்வொரு முறையும் மெரீனா கடற்கரையை கடக்கும்போது நினைவலைகள் பசுமையாக என் மனதை ஆட்கொள்கின்றன.

எழுபதுகளில் தொலைக்காட்சி என்றால் என்னவென்று தெரியாத வயது. வீட்டில் திரைப்படங்களுக்கு மிக அரிதாகவே கூட்டி செல்வார்கள். எனது தந்தை எங்களை அடிக்கடி கூட்டி செல்லும் இடம் இந்த மெரீனா கடற்கரைதான்.

வானொலி நிலையத்தின் முன் இருக்கும் கலங்கரை விளக்கம் (லைட் ஹெளஸ்) அப்போது கட்டப்படவில்லை. அப்போதெல்லாம் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் கூரையில் தான் லைட் ஹெளஸ் இருந்தது. மண் எண்ணெய் ஊற்றி தான் அதன் விளக்கை ஏற்றுவார்கள். வாகனங்களும் மெரீனாவில் குறைவாக இருந்ததால் அதன் வெளிச்சம் பிரகாசமாகவே இருந்தது. அந்த பிரகாசமான வெளிச்சமே அந்த லைட் ஹெளஸுக்கு வினையாகி விட்டது. முதலாம் உலக போரின் போது எம்டன் என்ற ஜெர்மானிய கப்பல் மெட்ராஸில் குண்டு வெடித்தார்கள் அல்லவா, அப்போது இந்த லைட் ஹெளஸை தான் தாக்கினார்கள். சீராக அணைந்து எரியும் அந்த வெளிச்சத்தை பார்க்கவே பரவசமாக இருக்கும். 

மெரீனாவுக்கு சென்று வருவதே எங்களுக்கு ஒரு குதூகலமான அனுபவமாக இருந்தது. இப்போது உள்ளது போல குப்பை மேடாக இல்லாமல் உண்மையிலேயே சுத்தமாக இருந்தது. பட்டாணி, சுண்டல், முறுக்கு போன்றவற்றை விற்கும் பையன்கள்,  குறி சொல்லும் குறத்தி, ஐஸ்க்ரீம் விற்பவன் என்று அப்போதும் இருந்தார்கள். இப்போது கடிகாரம் இருக்கும் இடத்தில், ஐ.ஜி. அலுவலகத்தின் எதிரில் அழகிய தாமரை சிற்பம் ஒன்று இருந்தது. மணலில் உட்கார்ந்து எனது அப்பா, அம்மா இருவரும் எதையாவது அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள். நானும் எனது உடன் பிறந்தவர்களுடன் கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டு அலைகளில் கால்களை நனைத்து கொண்டிருப்போம். ஒவ்வொரு அலையும் வந்து கால்களை தொடும்போதும் மனம் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று வரும். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

எங்கள் வீட்டில் சிவப்பு நிறத்தில் பழைய ஹெரால்டு கார் இருந்தது. பல வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்த அந்த காரை விற்று விட்டு புதிதாக ஒரு ஃபியட் காரை எனது தந்தை வாங்கினார். புதிய கார் வாங்கி ஒரு வாரம் இருந்திருக்கும். 


ஒரு நாள் மாலை குடும்பத்தினர் அனைவரும் மெரீனாவுக்கு சென்றோம். போகும் வழியில் லஸ் கார்னரில் உள்ள பாலத்தின் மேல் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று அருகில் சென்று பார்த்தால் எங்களுக்கு ஒரு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. எங்கள் வீட்டில் பல வருடங்கள் இருந்து யாரிடமோ ஒரு வாரத்துக்கு முன்பு விற்ற அந்த ஹெரால்டு கார் திகுதிகுவென்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 

என்னவென்று விசாரித்ததில், காரை வாங்கிய நபர் ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றாமல் ஒரு வாரமாக ஓட்டியதால் இஞ்ஜின் சூடாகி தீ பற்றி கொண்டது தெரிய வந்தது. பல வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்த கார் (இப்போது விற்று விட்டாலும்) எங்கள் கண் முன் எரிந்து கொண்டிருப்பதை கண்டவுடன் எங்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அங்கிருந்து புறப்பட்டு மெரீனாவுக்கு சென்றோம். அன்று வெகு நேரம் எரிந்து போன அந்த காரை பற்றியே அனைவரும் பேசி கொண்டிருந்தோம். 

எங்களது பெற்றோர் இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்த போது நாங்கள் மணலில் ஒரு சிறிய மலையை கட்டி கொன்டிருந்தோம். அப்போது தான் விதி விளையாடியது. பேசி கொண்டிருந்த எனது தந்தை, பேச்சு வாக்கில் தனது கையில் இருந்த தங்க‌ மோதிரத்தை கழற்றி மறுபடியும் விரலில் போட்டு மாற்றி மாற்றி எடுப்பது போடுவதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் நன்றாக இருட்டி விட்டிருந்தது. நாங்கள் அனைவரும் வீட்டுக்கு கிளம்ப எழுந்திருக்கும் போது தான் திடீரென்று எனது தந்தை தனது விரலில் இருந்த மோதிரத்தை காணவில்லை என்று கூறினார். அந்த இடத்தை கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல் தேடியும் கிடைக்கவில்லை. மணலில் எங்கோ புதைந்து போயிருந்தது. கடைசியில், எங்களை அந்த இடத்தில் காவலுக்கு வைத்து விட்டு, வீட்டுக்கு சென்று ஒரு பெரிய சல்லடையையும் முறத்தையும் டார்ச் லைட் ஒன்றையும் எனது பெற்றோர் எடுத்து வந்தனர். அந்த இடத்தில் இருந்த மணலை சல்லடை போட்டு (!) தேடி கடைசியில் ஒரு வழியாக மோதிரத்தை கண்டு பிடித்தபின் தான் உயிர் வந்தது. ஒரே நாளில் இப்படி இரண்டு வித்யாசமான அனுபவங்கள்!


1975ம் ஆண்டில் சென்னையில் அடை மழை பெய்தது. அந்த ஆண்டு அடித்த புயலில் சென்னை கடற்கரையின் மணல் முழுவதும் தண்ணீரில் மூழ்கி போய் கடல் அலைகள் விவேகானந்தர் இல்லம் வரை அடித்தது. நானும் எனது அண்ணனும் அதை பார்க்க கிளம்பி சென்றோம். அங்கே பார்த்தால் எங்களை போலவே நூற்றுக்கணக்கான மக்கள்  மழையில் நனைந்தபடியே மெரீனா கடற்கரை சாலையில் அடிக்கும் அலைகளை கண்டு ரசித்து கொண்டிருந்தார்கள். காணக்கிடைக்காத காட்சி அல்லவா? அதற்கு பிறகு சுனாமி அடித்த போது தான் அதே போல அலைகள் சாலை வரை வந்தன. 

1977ல் புதிய லைட் ஹெளஸை கட்டிய பிறகு பழைய லைட் ஹெளஸில் இருந்து விளக்கு ஏற்றுவதை நிறுத்தி விட்டார்கள். அதே போல அந்த அழகிய தாமரை சிற்பத்தையும் எடுத்து விட்டு அந்த இடத்தில் கடிகாரத்தை வைத்து விட்டனர். நிரந்தரமாக அழிந்துவிட்ட நமது  பல பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. ஐ.ஜி. அலுவலகத்தையும் இப்போது வேறு எங்கோ மாற்றி விட்டார்கள். நல்ல வேளை அந்த அழகிய வெள்ளை கட்டிடத்தை இடித்து அடுக்கு மாடி வீடுகளை கட்டவில்லை.

எண்பதுகளில் காந்தி சிலையை சுற்றி பூங்காவை அமைத்தனர். காலை வேளையில் முக்கியஸ்தர்கள் நடை பயில நடை பாதையை சீரமைத்தனர். 1987ம் வருடம் மெட்ராஸில் மிக கடுமையான வறட்சி. தண்ணீர் பஞ்சத்தில் மக்கள் தவித்தபோது மெரீனா கடற்கரையில் புதிதாக கிணற்றை தோண்டினார்கள். அதிலிருந்து வற்றாத குடிநீர் கிடைத்தது. தாகம் தீர்த்த அந்த கிணற்றை அழகு செய்கிறேன் பேர்வழி என்று இப்போது மூடி விட்டார்கள். 


இப்போது மெரீனாவை பார்த்தால் குப்பை மலையாக காட்சி அளிக்கிறது. பானி பூரி, பேல் பூரி என்று நாற்றம் எடுத்த எண்ணெயில் வறுத்த தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு மக்கள் அதே இடத்தில் கை கழுவி காகித குப்பைகளையும் அங்கேயே போட்டு விட்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது. மணலில் வண்ணமயமான கிளிஞ்சல்கள் முன்பு கிடைக்கும். இப்போது சர்வ சாதாரணமாக ஆணுறைகள் தட்டுப்படுகின்றன. கால்களை  மணலில் வைப்பதற்கே கூசுகின்றது. போகிற போக்கை பார்த்தால் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றே தோன்றுகிறது. நான் வளர்ந்த மெட்ராஸ் கண்டிப்பாக இதுவல்ல. நான் நேசித்த மெரீனா நிச்சயமாக இதுவல்ல. 

தொலைத்து விட்ட நல்ல‌ நினைவுகளுக்காக மனம் ஏங்குகிறது. எனது மெரீனா திரும்ப கிடைக்குமா?

Thursday 5 December 2013

கண்ணன் அந்தாதி

அரிந்தோடும்        செல்வத்தை                ஓயாது              தினம்தேடித்
திரிந்திங்கே          தவிக்குமென்               மனமே!              - நடப்பது
அரியின்                  ஆட்டம்தான்              அறிவாயே        உனதுயிரும்
பிரியியுமுன்      அவன்பாதம்                   பற்று.

பற்றறுத்து           அரிப்பாதம்                   பற்றிடும்             நல்லடியார்க்கு
குற்றம்                  குறையேது                   மனமே!               - என்றும்
சற்றேயும்            தளராது                          நாராயணன்         நாமத்தை
ஒற்றிப்                  பணிந்து நீ                      செல்.

செல்வமும்          ஞானமும்                     கல்வியும்            ஓங்கிடவே
வல்வினையை  அழிப்பாயே                   மனமே!              - நாவின்
சொல்லாலே         பாடிடுவாய்                 கண்ணபிரான்    திருநாமம்
நல்வழியை          காட்டிடுவான்              அவன்.

அவன்நாமம்        நினைத்திட்டால்        நற்கதியும்          கிட்டிடுமே
சிவனும்                 அன்றுரைத்தானே    மனமே!              -  மனிதர்
தவம்செய்ய          வேண்டாமே             முக்தியையும்    தந்திடுவான்
எவனும்                  நினைத்திட்டால்     அவனடி.

அடிபணியும்         அடியார்க்கு                 தடையதனை        தகர்த்திடுவான்
முடிப்பீலி               மயிலிறகோன்         மனமே!                    -  பாதம்
பிடித்தோர்க்கு      பதமலரின்                அருளுண்டாம்       அடியோர்க்கு
மடிப்பிச்சை          தந்திடுவான்             முரளி.

முரளியவன்         பாதத்தை                     பற்றுடனே           பற்றிட்டால்
வரமாயிரம்           வழங்கிடுவான்          மனமே!                -அருளை
கரமதனால்           பொழிந்திடுவான்      கருத்துள்ளே     காத்திட்டு
சிரம்தாழ்ந்தால்   சென்றிடுமே                வினை.

வினையாவும்      வீழ்ந்திடுமே               வாமனனின்        நாமத்தை
நினைத்தாலே      நற்கதியாம்                 மனமே!                 - மாந்தர்
தனைத்தானே     அறிந்திட்டால்           சத்தியமாய்         கேட்டிடுமே
மனையாவும்       மங்கலத்தின்              ஒலி.

ஒலியாவும்           கேட்பதுவே               அவன்கருணை    மழையாலொப்
பிலியப்பன்           அருளால்தான்         மனமே!                   - ஞாலக்
கலிவினைகள்     களைந்திடுமே        திருமாலின்             திருக்கரச்சங்
கொலியதனை     கேட்டாலே               சுகமே.

சுகமிங்கு          நிலைத்திடவே    நாராயணன்     நாமத்தை
அகமகிழக்       கேட்டிடுவாய்       மனமே!             - கண்ணன்
புகழினையே   பைந்தமிழில்       பாடவந்தேன்  அந்தாதி
இகம்காக்க      இயம்பிடுவாய்     அரி.