Friday 15 May 2009

ஓய்வு

ஆரல்வாய்மொழி! எத்தனை அழகான தமிழ் பெயர்! என்னை மிகவும் கவர்ந்த கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர்தான் இது.

சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பசுமை. பசுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு பக்கம் காற்றாலைகள். மறு பக்கம் பச்சை பசேலென்ற வயல் வெளிகள். சில்லென்ற குளிர் காற்று. ஆஹா, என்ன ஆனந்தம்! நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை என்ற ஊரில் உள்ள எனது நண்பன் வீட்டுக்கு செல்லும்போது தான் நான் ஆரல்வாய்மொழியை பார்த்தேன். அப்பொழுதே தீர்மானித்து விட்டேன், நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த ஊரில் தான் வந்து தங்குவேன் என்று.

ஓய்வு என்றவுடன் எனது நினைவலைகள் பின்னோக்கி செல்கின்றன. நாம் கடைசியாக எப்பொழுது உண்மையிலேயே ஓய்வு எடுத்துக்கொண்டோம்? நினைவு தெரிந்து பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதல் நமது பெற்றோர்கள் "படி படி" என்று வாட்டுகிறார்கள். ஒரு 15 வருடங்களுக்கு இது போல ஓய்வே இல்லாமல் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிறோம். பட்டப்படிப்பு முடிந்தவுடன், 'சரி, இனிமேல் நமக்கு வேலை கிடைத்த பிறகு ஓய்வு கிடைக்கும் இந்த படிப்பிலிருந்து' என்று நினைக்கிறோம். ஆனால் கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது வேலை என்பது குதிரைக்கொம்பு போன்றது என்று. வேலை தேடி அலைந்து திரிந்து கடைசியில் ஒரு வழியாக ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து விடுகிறோம்.

அப்பொழுதாவது 'அக்கடா' என்று ஓய்வெடுக்க முடிகிறதா? மேலதிகாரி என்ற யாரோ ஒருவனுக்காக அடிமை வாழ்வு வாழ்கிறோம். சரி, கொஞ்சம் பணம் சேர்த்த பிறகு ஓய்வு எடுக்கலாம் என்றால் உடனே வீட்டில் திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள்.

திருமணத்துக்கு பிறகு அல்லவா தெரிகிறது, வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய போராட்டம் என்று. ஒரு குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் மூச்சு விடலாம் என்றால் அப்பொழுது தான் போராட்டம் இன்னும் அதிகமாக தோன்றுகிறது. குழந்தை வளர வளர நமது தொள்களின் மேல் ஒவ்வொரு கடமையாக ஏறிக்கொண்டே போகிறது. சிலர் பிழைப்புக்காக வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சென்று அதே அடிமை வாழ்வை வாழ்கிறார்கள்.

ஒரு வழியாக இருக்க வீடு என்று ஒன்றை கட்டிவிட்டால் சிறிது ஓய்வு கிடைக்கும், அது வரை பொறுத்து கொள்ளலாம் என்று மனம் கூறுகிறது. வீடு கட்டியது தான் தாமதம் திடீரென்று நமது குழந்தை குமரனாகவோ குமரியாகவோ மாறிவிட்டதை ஏற்றுக்கொள்ள அதே மனம் மறுக்கிறது. மகனின்/மகளின் கல்விக்கு தேவை பணம். அதை நிறைவேற்ற இன்னும் சில காலம் வேலை செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

கல்வி முடிந்தபின் அவர்களுடைய திருமணம். சரி, திருமணத்தை செய்து கொடுத்ததோடு நமது கடமை முடிந்து விட்டது. இனியாவது ஓய்வு பெறலாம் என்று சற்றே கண்ணாடி முன்பு நம்மை பார்த்தால் தலையில் வெள்ளை முடி அல்லது வழுக்கை. கூடவே ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற இயற்கையின் பரிசுகள். 60 வயது முடிவதற்கு முன்பாகவே கையில் காசு வரும் என்ற நோக்கோடு மிக சீக்கிரமாகவே "விருப்ப ஓய்வு" பெற்றுக்கொண்ட இள முதியோர்கள் திடீரென்று வட்டி விகிதம் இறங்க பெட்ரோல் விலை ஏற "ஏண்டா ஓய்வு எடுத்துக்கொண்டோம்" என்ற வெறுப்பில் நாட்களை ஓட்டுபவர்கள் ஒரு பக்கம்.

உடல் நலம் ஒத்துழைக்காவிட்டாலும் பணத்தேவை எனும் நிதர்சனம் வாட்டி வதைக்க, வயது வரம்பை காட்டி கட்டாயமாக பணியிலிருந்து ஓய்வு கொடுத்து அனுப்ப பட்டவர்கள் மற்றொரு புறம்.

சரி, இப்போதாவது ஓய்வு பெறலாம் என்றால் பேரன், பேத்தி என்று பந்தங்களுடன் நம்மை நாமே கட்டி போட்டுக்கொண்டு வாழ்க்கை சக்கரத்தில் அல்லோலப்பட்டு மீளத்தெரியாமல் தவிக்கிறோம்.

என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக உண்மையிலேயே ஓய்வு கிடைக்கும். சலசலவென்று ஓடும் ஆற்றில் காலை வைத்து நீரில் துள்ளி விளையாடும் மீன்கள் நம்மை தொடுவதை பார்த்து ஆனந்த படவேண்டும். மலை மீதிருந்து பார்க்கும் போது தூரத்தெரியும் சூரிய அஸ்தமனத்தை பார்த்து மகிழ வேண்டும். மனிதர்களே இல்லாத நடுக்காட்டில் பாறை மீது அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். பயம் இல்லை, மகிழ்ச்சி இல்லை, துக்கம் இல்லை, கோபம் இல்லை, எதுவுமே இல்லாத அந்த அமைதி வேண்டும். உண்மையான ஓய்வு வேண்டும். கிடைக்குமா இறைவா?

தோவாளை நண்பனின் மைத்துனன் என்னிடம் கூறினான் "ஆரல்வாய்மொழியா? இந்த கிராமத்தில் என்ன கண்டீர்கள். செளதியில் எனக்கு ஒரு வேலை வாங்கி தருவீர்களா?"