Wednesday, 23 October 2013

தேடல்

மெட்ராஸில் லாயிட்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தான் நான் படித்தேன். கோபாலபுரத்தில எங்கள் வீடு இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு சென்னையின் வேறு ஒரு பகுதியில் சொந்த வீட்டுக்கு குடி புகுந்தோம். அதனால் தினமும் இரண்டு பஸ் மாறி பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கான பஸ் பாஸ் சற்றே விசித்திரமாக இருக்கும். பாஸின் இரு முனைகளிலும் மேலிருந்து கீழ் வரை 1 முதல் 31 வரை தேதி இருக்கும். தினமும் நடத்துனரிடம் இந்த பாஸை காண்பித்தால் ஒவ்வொறு முறை பயணம் செய்யும் போதும் பாஸில் அந்த குறிப்பிட்ட தேதியின் மேல் ஒரு ஓட்டை போட்டு விடுவார். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அந்த பாஸில் செல்ல முடியாது.

நான் ஆழ்வார்பேட்டை வரை ஒரு பஸ்ஸில் சென்று அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து லாயிட்ஸ் சாலை வரை சென்று அங்கிருந்து கோபாலபுரம் வரை நடந்து செல்வேன். நடுவில் வரும் ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் சில நாட்கள் 30 நிமிடங்கள் வரை  காத்திருந்த அனுபவம் கூட உண்டு. அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த அனைவருமே பல்வேறு அலுவலகங்களில் வேலை செய்பவர்களாக இருந்தார்கள். நானும் எனது நண்பனும் மட்டும் அந்த பஸ் ஸ்டாப்பில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களாக இருந்தோம். தினமும் அதே நேரத்தில் இறங்கி அதே நேரத்தில் அடுத்த பஸ்ஸை பிடிப்பதால் பல முகங்கள் பரிச்சயமானவையாகவே இருந்தன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், யாருமே மற்றொருவரிடம் பேசிக்கொள்ள கூட மாட்டார்கள். ஏன், ஒரு புன்முறுவல் கூட இருக்காது. அவரவருக்கு ஆயிரம் கவலைகள். எனது அடுத்த பஸ் வந்த உடன் நானும் நண்பனும் ஏறி சென்று விடுவோம். இது தினமும் நடக்கும் விஷயம்.

இப்படி இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் அந்த பஸ் ஸ்டாப்புக்கு ஒரு பிச்சைக்காரன் வந்தான். கண்கள் இரண்டிலும் பார்வை இல்லை. கூட ஒரு நாய் மட்டும் அவனுக்கு துணையாக இருந்தது. கையில் தடியும், தோளில் ஒரு ஜோல்னா பையும் இருந்தன. பஸ் ஸ்டாப்பில் தரையில் அப்படியே உட்கார்ந்து பையிலிருந்து எதோ ஒரு விசித்திரமான கருவியை எடுத்தான். ஒரு கிழிந்த துண்டை விரித்து அதன் மேல் அந்த கருவியை வைத்தான். அது ஏதோ ஒரு வாத்தியம் போல கம்பிகளுடனும் பல பொத்தான்களுடனும் வித்யாசமாக இருந்தது. செய்தி தாள்களை படித்து கொண்டிருந்த சிலரும் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் இவனையே பார்த்து கொண்டிருந்தனர்.

அவனது பக்கத்திலேயே அந்த நாயும் ஏதோ சொல்லுக்கு கட்டுப்பட்டது போல உட்கார்ந்து விட்டது. பிச்சைக்காரன் இப்போது அந்த கருவியில் உள்ள கம்பிகளை ஒரு கையால் திருகிக்கொண்டே மற்ற கையால் பொத்தான்களை அமுத்த ஆரம்பித்தான். 'டொய்ங் டொய்ங்' என்று சத்தம் வந்தது. "இது என்ன கருவி" என்று பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். "புல்புல் தாரா" என்று சொன்னார். ஓஹோ, இப்படி கூட ஒரு வாத்தியம் இருக்கிறதா என்ன?

தொண்டையை கனைத்துக்கொண்டே பிச்சைக்காரன் கணீரென்று பாட ஆரம்பித்தான்.

'நீயல்லால் தெய்வம் இல்லை, எனது நெஞ்சே நீ வாழும் எல்லை - முருகா....'

அது வரை அப்படி ஒரு கணீர் குரலை நான் கேட்டதே இல்லை. ஒரு கட்டத்தில் இவன் பிச்சைக்காரனா பின்னணி பாடகனா என்றே தெரியாத அளவுக்கு அவ்வளவு பிரமாதமாக பாடி முடித்தான். அவ்வளவுதான். அந்த துண்டில் சில்லரை மழை பொழிந்தது. அதற்குள் எனது பஸ் வந்து விட்டதால் நான் ஏறி சென்று விட்டேன். 

மறு நாள் ஆழ்வார்பேட்டையில் நான் பஸ்ஸில் வந்து இறங்கியபோது அதே பிச்சைக்காரன் அங்கு ஏற்கனவே உட்கார்ந்திருந்தான். இப்போது வேறு ஒரு பாட்டு. அந்த பஸ் ஸ்டாப்பில் ஒவ்வொருவரும் அவனுடைய குரலின் இனிமையில் திளைத்திருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. பஸ்ஸுக்காக காத்திருக்கும் அந்த பத்து நிமிடங்களுக்குள் அங்கு நிலவிய இருக்கமான சூழல் தளர்ந்து அனைவருமே அவனது பாடல்களை ரசிக்க ஆரம்பித்தனர். தினமும் ஒர ரம்மியமான பாடல். தூய தமிழில் பிசிறே இல்லாத குரல். ஆஹா, இதை கேட்பதற்கு உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இவ்வளவு அற்புதமான குரலை இவனுக்கு கொடுத்த கடவுள் கண் பார்வையை ஏன் எடுத்து கொண்டாரோ! 

நாட்கள் செல்ல செல்ல இவனது பாடல்கள் மிகவும் பிரபலமாகிவட்டன. அந்த 10-15 நிமிடங்களில் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் முன் போல விரைப்பாக இல்லாமல் சற்றே சிரித்த முகத்துடன் காணப்பட்டனர். சிலர் அவனிடம் சென்று 'இந்த பாட்டை பாடு', 'அந்த பாட்டை பாடு' என்று நேயர் விருப்பம் போல‌ சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவனும் பிரமாதமாக‌ அந்த பாடல்களை வாசித்து கொண்டே பாடியதால் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டது போல இருந்தார்கள். தினமும் ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் இவனை சுற்றி ஒரு கூட்டமே கூட ஆரம்பித்து விட்டது.

அவன் அந்த பஸ் ஸ்டாப்பில் எவ்வளவு நேரம் இருப்பான் என்று தெரியவில்லை. எனது பஸ் வந்ததும் நான் கிளம்பி விடுவேன். இது போலவே மற்றவர்களும் என்பது எனது யூகம். நாட்கள் பல நகர்ந்தன.

ஒரு நாள் வழக்கம் போல அவன் அடுத்த பாடலை "உள்ளம் உருகுதையா..." என்று பாட ஆரம்பித்தான். அனைவரும் உண்மையிலேயே அந்த பாடலில் சொக்கி விட்டோம்.  பாடலின் ஆரம்பத்தில் கணீரென்று இருந்த குரல் அடுத்தடுத்த வரிகளில் சற்றே பிசிறினாற்போல இருந்தது. திடீரென்று அவனது குரல் கம்மியது.  ஒரு கட்டத்தில் "பாவி என்று இகழாமல் முருகா ஓடி வருவாயப்பா" என்று பாடும்போது அதற்கு மேல் அவனால் பாட முடியவில்லை. என்ன விஷயம் என்று தெரியவில்லை. ஒரு கணம் திடீரென்று மெளனம் காத்தான். பஸ் ஸ்டாப்பில் அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர். ஏன் திடீரென்று பாடுவதை நிறுத்தி விட்டான் என்றே தெரியவில்லை. அதற்குள் எனது பஸ் வந்து விட்டபடியால் நான் அதில் ஏறி விட்டேன்.

அடுத்த நாள் அந்த பஸ் ஸ்டாப்பில் அவனை காணோம். 'என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே! உடம்பு ஏதாவது சரியில்லையா? ஏன் திடீரென்று அன்று பாடுவதை நிறுத்தினான்? ஏன் இன்று வரவில்லை?' என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாப்பில் இருந்த மற்றவர்கள் அனைவரும் அவன் வழக்கமாக உட்காரும் இடத்தையே பார்த்து கொண்டிருந்தனர். அவன் அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. எங்கு சென்றான், ஏன் சென்றான் என்றும் தெரியவில்லை.

பஸ் ஸ்டாப்பில் மீண்டும் பழைய நாட்களை போல அனைவரும் மெளனம் காக்க ஆரம்பித்து விட்டனர். 

ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை. ஒரு தேடல். பள்ளி தேர்வு என்ன ஆகுமோ என்று மாணவனுக்கு தேடல். அலுவலகத்தில் பிரமோஷன் கிடைக்குமா என்று வேலை செய்பவனின் தேடல். படிப்பை முடித்த பையனுக்கு வேலை கிடைக்குமா, பெண்ணுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்குமா என்று தந்தையின் தேடல். யார் செருப்பாவது அறுந்து நம்மிடம் வருவார்களா என்று அந்த பஸ் ஸ்டாப்பிலேயே உட்கார்ந்திருக்கும் செருப்பு தைப்பவனின் தேடல். இப்படி ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஆயிரம் கவலைகள் ஆயிரம் தேடல்கள். சும்மாவா கண்ணதாசன் பாடினார் "ஒருவன் மனதில் ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா" என்று!

'ஒரு வேளை இவன் வேறு ஏதாவது பஸ் ஸ்டாப்புக்கு சென்று விட்டானோ? போலீஸ்காரர்கள் பிடித்து கொண்டு போய் விட்டார்களோ? அல்லது விழும் சில்லரையை பார்த்து கேடிகள் திருடிக்கொண்டு சென்று விட்டார்களோ? என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே' என்று எனது நண்பனிடம் கூறினேன். அவன் ஒரு நீண்ட‌ மெளனம் காத்து விட்டு என்னை நேருக்கு நேர் பார்த்து சொன்னான் "விடுடா, பிச்சைக்காரன் தானே",


Sunday, 6 October 2013

காப்பாய் தாயே !

ஆடியநர்த்       தனகளிருனை       ய‌கத்தினுள்       வைத்திட்டு
நாடிப்ப             ணிந்திங்கு               பாட்டிசைக்க      நான்வந்தேன்
கோடிட்டு        காட்டிடுவாய்         கணநாதா            என்நாவில்
பாடிடுவேன்  தீந்தமிழில்              தாயுமையின்        பாசுரமே! 

நாதனுடன்             நெஞ்செனதில்        நீயருளும்            நற்பொழுதில்
வேதத்தின்             தலைவனிட            மெம்மின்னல்    உரைத்திடுவாய்
பாதத்தை                பிடித்திட்டேன்       அம்பிகையே      காத்தருள்வாய்
பேதையெனக்      குனையன்றி           வேறேது               கதிதாயே!

கயல்விழியால்      கருணைமழை    பொழிந்திடுவாய்   அம்பிகையே
மயிலேறி                 வந்திடுமென்         மால்மருகன்          மலர்த்தாயே
ஜெயமாதுன‌           தருளாலே              வேண்டுவரம்         கிடைத்திடுமே
பயமேது                   பதமலரை                பணிந்தோர்க்கு      பூரணியே !    

நோய்நொடியின்       நாவெனைதீண்     டிடுகிறதே                 என்செய்வேன்
தாயுனையே               நாடிட்டேன்            தாங்கியெனை         யணைத்திடுவாய்
சேயெனைநீ               தள்ளிட்டால்          கதியெங்கே               சொல்தாயே?
நாயேனின்                 பிழைதன்னை        பொருத்தள்வாய்     பார்வதியே !

பரமனென                 தப்பனினி                 டமிருக்கும்                ஈஸ்வரிநீ
வரமதனை               பொழிவாயே           பாகீஸ்வரி                யுமையாளே
சிரம்தாழ்ந்து            பணிந்திட்டோம்    பரமேஸ்வரி           ஜெகன்மாதா
அரன்மனைவி       அம்பிகையே            அருள்தருவாய்      எனதம்மா

திக்கெட்டும்          உனதருளில்                 திகட்டாது              திளைத்திட்டோம் 
சக்திச்சர                வணன் தாயே               எனைக்காக்க       வந்தருள்வாய்
பக்தியுடன்           பேர்சொன்னோம்        உன்கோவில்        வாசலிலே
முக்தியையே      தந்தெமைநீ                   காத்திடுவாய்       மகமாயீ 

வேல்தந்த              ழகனுக்கோர்                ஜெயந்தந்த          ஜெகன்மாதா
கோலாட்ட            மீனாக்ஷி                        நானுமுன்             பாலகனே
நூல்தந்து                தமிழதனை                  யெனக்குள்ளே    அளிப்பாயே 
தோல்போர்த்த    பரமனின்பத்                 தினிதாயே            எமைகாப்பாய் !     

Wednesday, 2 October 2013

மீண்டும் இரயில் பயணங்களில்....

பல வருடங்களுக்கு முன்பு நடந்த  சம்பவம். கல்லூரியை முடித்த பின் பம்பாயில் முதன்  முதலில் வேலை கிடைத்தது. ஒரு நான்கு நாட்கள் வரிசையாக விமுறை கிடைத்தால் ஊருக்கு சென்று விடுவேன். 

பம்பாயில் இருந்து மெட்ராஸுக்கு இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மெய்லில் வந்தால் இரண்டு இரவுகள் பயணம் செய்ய  வேண்டும்.   களைப்பான பயணம், ஆனால் சரியான நேரத்துக்கு மெட்ராஸுக்கு வந்து சேர்ந்து விடும் என்பதால் பலர் இந்த இரயிலில் செல்வதையே  விரும்பினர். 
 
இது போன்ற நீண்ட பயணங்களில் சில எதிர்பாராதவிதமாக நண்பர்களாகி விடுவது உண்டு. இன்னும் சிலருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் அனுபவங்களும் நடந்து விடுகின்றன. எனக்கும் அது போன்ற ஒரு அனுபவம் தான் ஏற்பட்டது.நீண்ட பயணம் என்பதால் சிலர் சக பயணிகளுடன் அரட்டை அடித்து கொண்டும், சிலர் சீட்டு விளையாடி கொண்டும் நேரத்தை போக்கி கொண்டிருந்தனர். 

குல்பர்கா அருகே வண்டி வந்தபோது ஒரே குப்பையும் சத்தையுமாக இருந்தது. அப்போது ஒரு சிறுவன்-பத்து வயது கூட நிறைவடைந்திருக்காது-வண்டியில் ஏறினான். உடலில் சட்டை இல்லை. கிழிந்த அரை டிராயர் மட்டும் இருந்தது. நாங்கள் பயணம் செய்த கம்பார்ட்மெண்ட்டின் ஒரு மூலையில் இருந்து இரு கைகளால் குப்பைகளை அள்ளி ஒரு பெரிய செய்தி தாளில் போட்டுக்கொண்டே, ஒவ்வொறு இருக்கையின் அடியிலும் நகர்ந்து கொண்டே வந்தான். இருக்கையின் அடியில் இருந்த குப்பைகளை அள்ளிய பிறகு சிலர் சில்லரை காசுகளை போட்டார்கள். சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரி முகத்தை திருப்பி கொண்டார்கள். ஆனால் சிறுவனோ எதற்கும் கவலைப்படாமல் கையில் கிடைத்த காசுகளை தனது அரை டிராயருக்குள் இருந்த சுருக்கு பையில் போட்டுக்கொண்டே அடுத்த இருக்கைக்கு சென்றான்.  அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. இத்தனை வறுமையிலும் அவன் பிச்சை எடுக்காமல் உழைத்து அதற்கான கூலியை கேட்கிறானே, அவனது தன்மானத்தை என்னவென்று சொல்வது?

கடவுளின் செயல்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. பால் மணம் மாறாத சிறுவர்களை படைத்து விட்டு அவர்களை வறுமையிலும் பசியிலும் ஏன் உழல விடுகிறான்? கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் பெருச்சாளிகள் எல்லாம் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது போன்றவர்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். என்னிடம் இருந்த பணத்தில் சிறிது அவனுக்கு கொடுத்தேன். ஆனால் அது அந்த வேளை உணவோடு சரியாகிவிடுமே. அவனது வாழ்க்கையே இப்படி இரயிலில் குப்பை கூட்டுவதோடு முடிந்து விடுமோ? இப்படி எல்லாம் எனது மனதில் எண்ண ஓட்டங்கள் நெடுநேரம் அலை பாய்ந்து கொண்டே இருந்தன. சில மணி நேரங்களுக்கு பிறகு இரயில் ஆதோனி என்ற ஊரில் நின்றது. சிறுவன் இறங்கி சென்று விட்டான்.

அலுவலகம் விடும் நேரம் என்று நினைக்கிறேன். திபுதிபுவென்று சிலர் எங்களது கம்பார்ட்மெண்ட்டில் ஏறினார்கள். அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கி விடுகிறேன் என்று ஒருவர் எனக்கு அருகில் உட்கார்ந்து கொண்டார். இது போன்று முன்பதிவு செய்யப்பட்ட கம்பார்ட்மெண்ட்களில் இப்படி நடப்பது சகஜம். டிக்கெட் பரிசோதகர் இவர்களை கண்டுகொள்வதே இல்லை. ஏனென்றால் இவர்கள் தினமும் இதே வண்டியில் வீட்டுக்கு திரும்பி செல்வார்கள். அதே போல காலையில் வேறு ஒரு வண்டியில் இப்படி ஏறி உட்கார்ந்து கொண்டு வருவார்கள். 

சரி, பரவாயில்லை ஒரு மணி நேரத்தில் இறங்கி விடுவார் என்று நானும் எனது இருக்கைக்கு அருகில் அவருக்கு உட்கார இடம் கொடுத்தேன். அது தான் நான் செய்த தவறாகி விட்டது. 

வண்டி நகர ஆரம்பித்த உடனேயே அவர் தனது பையிலிருந்து ஒரு பொட்டலத்தை திறந்தார். அதை பிரித்து அதில் இருந்த வறுத்த வேர்க்கடலைகளை ஒவ்வொன்றாக கொறிக்க ஆரம்பித்தார். அது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. வாயில் கடலைகளை போட்டுக்கொண்டே தோலிகளை இருக்கைக்கு அடியில் போட ஆரம்பித்தார். என் கூட வந்த சக பயணிகள் அனைவரும் அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லோர் மனதிலும் சற்று முன்பு இருக்கையை தன் கைகளால் சுத்தம் செய்த சிறுவனின் முகம் வந்து போயிருப்பதை நான் கண்டேன். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லோரும் முகம் சுளித்தார்களே தவிர‌ யாருமே அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு கையளவு நிறைய வேர்க்கடலை தோலியை இருக்கைக்கு அடியில் போட்டார். எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கோபத்தை அடக்கி கொண்டே அவரிடம், "சார், தயவு செய்து இங்கே அசுத்தம் செய்யாதீர்கள். தோலியை உங்களிடம் உள்ள பொட்டலத்திலேயே கொட்டிவிட்டு சாப்பிட்டு முடித்த பின் ஜன்னல் வெளியே எறிந்து விடுங்கள்" என்றேன். அதற்கு அவர் என்னை ஒரு ஈன பிறவி மாதிரி பார்த்து தெலுங்கில் ஏளனமாக "அவன்னி நீக்கு எந்துகுரா வெதவா" என்றார். அதாவது, " உன் வேலையை பார்த்து கொண்டு போ" என்று பொருள் படும் விதத்தில் கேவலமாக பேசினார். 

எனக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி விட்டது. அவரை உடனடியாக எனது இருக்கையை விட்டு எழுந்திருக்க சொன்னேன். அவரோ எழுந்திருக்காமல் தெலுங்கில் என்னை திட்டி கொண்டே இருந்தார். மற்ற பயணிகள் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டே இருந்தனர். இந்த ஆளை இப்படியே விட கூடாது என்று எனது உள் மனது கூறியது. டிக்கெட் பரிசோதகரை காணோம். ஒரு வேகத்தில் இருக்கைக்கு அடியில் இருந்த தோலிகளை எனது கைகளால் அள்ளினேன். அப்படியே அந்த நபரின் தலையில் கொட்டி ஆங்கிலத்தில் "வெளியே போடா நாயே" என்று திட்டினேன். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த கணத்தில் நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது நினைத்தாலும் தெரியவில்லை. ஏதோ மனதுக்கு தோன்றி விட்டது, அதனால் செய்து விட்டேன். இள இரத்தம் என்பார்களே, அது இது தானோ என்னவோ.

ஒரு நிமிடத்தில் அந்த ஆள் நிலை குலைந்து போய் விட்டான். என்னை அடிக்க வருவதற்கு கையை ஓங்கினான். அதற்குள் மற்ற இருக்கைகளில் இருந்த, காலையில் இருந்து என்னுடன் அரட்டை அடித்து நண்பர்களாகிவிட்ட சக பிரயாணிகள் இவனது காலரை பிடித்து கத்த ஆரம்பித்தனர். 

அவ்வளவுதான். தனக்கு எதிராக கூட்டம் சேர்வதை உணர்ந்து கொண்டவன் மரியாதையாக எழுந்து அவமானம் தாங்க முடியாமல் மற்றொருறு பெட்டிக்கு vestibule வழியாக சென்று விட்டான். 

இவன் சென்ற பிறகு சக பிரயாணிகள் அனைவரும் நான் ஏதோ பெரிய விஷயத்தை சாதித்து விட்ட மாதிரி சிலாகித்து ரொம்ப நேரம் பேசிக்கொன்டிருந்தார்கள். நான் அவர்களிடம் எனக்கு உதவியாக இருந்தமைக்கு நன்றி கூறினேன்.

நமது நாட்டில் படிக்காத பாமரர்களை விட இது போன்ற படித்து அகங்காரத்தோடு மூடர்களாக இருப்பவர்களால் தான் முன்னேறாமல் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கு அப்படி செய்கிறோம் என்ற ஒரு சுரணையோ வெட்கமோ இல்லாமல் இருக்கிறார்களே, அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. இப்படி இருப்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு என்ன முன் உதாரணம் வைக்க போகிறார்கள்? அப்பன் திருடனாக இருந்தால் அதை பார்த்து பையனுக்கும் திருட தோன்றும் அல்லவா?

இதை எல்லாம் முன் கூட்டியே அறிந்து தான் பாரதி அன்றே பாடி சென்று விட்டான் என்று நினைக்கிறேன்.

பாதகம் செய்பவரை கண்டால் நீ
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா! அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!