Wednesday, 24 December 2008

துள்ளி திரிந்ததொரு காலம்

பள்ளியில் படித்த காலம் எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். கவலை இல்லாமல் துள்ளி திரிந்த அந்த காலம் உண்மையிலேயே பொற்காலம் தான்.


எனது பள்ளி காலங்களும் அப்படி தான் இருந்தன. பள்ளியில் படிக்கும் போது புத்தகத்தை படித்தோமோ இல்லையோ ஆசிரியர்களுக்கு புனை பெயர் வைப்பதில் எல்லோரும் புலிகளாக இருந்தோம். எந்த ஒரு ஆசிரியரையும் அவரது உண்மையான பெயரை வைத்து கூப்பிடுவது என்பதே கிடையாது.


அதுவும் எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். இராணுவத்தில் எதிரிகளை சுட்டாரா அல்லது தோசையை சுட்டாரா என்று இன்று வரை புரியாத ஒரு புதிர் தான். ஆனால் குறும்பு செய்யும் மாணவர்களை தோசை திருப்பி போல சாத்து சாத்தென்று சாத்திவிடுவார்.பல ஆசிரியர்களுக்கே இவரை கண்டால் பிடிக்காது. அதனால் அவரது பெயர் 'ஹிட்லர்' என்று வைத்தோம்.


அதே போல வெற்றிலை போடும் ஆசிரியருக்கு பேசும் பொழுது வாயிலிருந்து வெற்றிலை எச்சில் சாரல் போல தெறிக்கும்! அதனால் அவருக்கு 'குற்றாலம்' என்று பெயர். கொடுவாள் மீசையுடன் வரும் ஆசிரியருக்கு 'பாம்பாட்டி' என்றும் முகத்தை கடுகடுவென்று வைத்திருந்த குள்ளமான ஆசிரியருக்கு (பாவம், அவர் என்ன செய்வார்) 'சித்திரக்குள்ளன்' என்றும் சகட்டு மேனிக்கு புனை பெயர்களை சூட்டியிருந்தோம். பள்ளியிலேயே எங்கள் வகுப்பு மாணவர்களை கண்டால் ஆசிரியர்களுக்கே சற்று கலக்கம் தான்.


எங்களது தமிழ் ஆசிரியர் ஒரு அருமையான ஆசுகவி. அதாவது சற்றும் யோசிக்காமல் சரளமாக மரபுக்கவிதைகளை எதுகைமோனையோடு உடனடியாக சொல்ல கூடியவர். ஒவ்வொறு ஞாயிறன்றும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு முதுநிலை தமிழ் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுப்பார். "என்னுடைய சிறு தமிழ் தொண்டு இது" என்று கூறுவார். உண்மையிலேயே இது போன்றவர்களை பார்ப்பது அரிது.


இவர் தமிழ் பாடம் எடுக்கும்போது எல்லோரும் மிக மிக ஆர்வத்துடன் இருப்போம். பாடத்தின் மேல் இருக்கும் அக்கரையை விட கடைசி 15 நிமிடங்களுக்கு நேயர் விருப்பம் போல இவர் மாணவர்களை விட்டு ஏதாவது தலைப்பு கூற சொல்லி, அந்த தலைப்பில் உடனடியாக ஒரு கவிதையை கூறிவிடுவார். அந்த கவிதை இலக்கண பிழையின்றி அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த கடைசி 15 நிமிடங்களுக்கு வகுப்பே உற்சாகம் களை கட்டி விடும். எங்களுக்கெல்லாம் தமிழ் மேல் ஒரு பற்று வருவதற்கு இவர் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.


கணக்கு பாடம் எடுப்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு புதிய இளம் ஆசிரியை எங்களது பள்ளியில் சேர்ந்திருந்தார். அவரது கெட்ட நேரம் எங்களது வகுப்புக்கே அவர் கணக்காசிரியராக வர வேண்டியதாக போய்விட்டது! குரங்குகளுக்கு பாடம் நடத்த போவது அவருக்கு தெரியாது!


முதல் நாள் அவர் ஒரு formulaவை சொல்லி கொடுத்துவிட்டு அதை எழுத கரும்பலகை பக்கம் திரும்பினார். அவ்வளவுதான். கடைசி பெஞ்சிலிருந்து சரமாரியாக காகித ராக்கெட்டுகள் அவரை நோக்கி பறக்க ஆரம்பித்தன. உடனே அவர் திரும்பி பார்த்வுடன் எல்லோரும் பரம சாதுவாக அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். மீண்டும் அவர் திரும்பி எழுத ஆரம்பித்தவுடன் அனைவரும் பலவிதமான மிருகங்களின் குரல்களை எழுப்பி கேலி செய்ய ஆரம்பித்தனர். பாவம், அவர் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. வகுப்பு எடுப்பதை நிறுத்திவிட்டு நேராக ஹிட்லரிடம் சென்று புகார் கூறிவிட்டார்.


அவ்வளவுதான். உடனே ஹிட்லர் எங்களது வகுப்புக்குள் நுழைந்து "எந்த மாணவன் கலாட்டா செய்தான்?" என்று கர்ஜித்தார். யாரும் வாயையே திறக்கவில்லை. யாரை கேட்டாலும் "தெரியாது சார்" என்றே கூறினார்கள். ஹிட்லர் அல்லவா? உடனே எல்லா மாணவர்களையும் மைதானத்துக்கு வரச்சொல்லி அனைவருக்கும் கைகளில் பிரம்பால் பின்னி எடுத்துவிட்டார். நாங்கள்தான் மாவீரர்கள் ஆயிற்றே. 'நாயகன்' படத்தில் டெல்லி கணேஷ் கூறுவது போல ' ம்ஹூம், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை'. அடித்து அடித்து ஹிட்லருக்கு கை வலித்தது தான் மிச்சம்!


இதே போல ஆங்கில‌ வகுப்பெடுத்த வாத்தியாரையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை. கேரளாவை சேர்ந்த அவர் மலையாள வாடையுடன் ஆங்கிலம் பேசும் பொழுது தமாஷாக இருக்கும். Bledy, I will simbbbly kick you out. How many times should I repeat this exambbble? என்று அவர் ஆத்திரத்துடன் கூற, அடக்க முடியாமல் வகுப்பே இன்னும் அதிகமாக சிரிக்க, அதை கண்டு அவர் மேலும் கோபமாக, ஒரே கூத்து தான்!


நாங்கள் படித்தது வட நாட்டு பள்ளி என்பதால் (CBSE syllabus) அனைவரும் கண்டிப்பாக ஹிந்தி மொழியை ஒரு பாடமாக படிக்க வேண்டும். ஹிந்தி ஆசிரியர் முதல் நாள் வகுப்பில் நுழைந்தார். "சப் லோக் பைடோ" (எல்லோரும் அமருங்கள்) என்று அவர் கூற நாங்கள் அனைவரும் "சார், எங்கள் யாருக்குமே ஹிந்தி தெரியாது. நீங்கள் தமிழிலேயே (!) சொல்லி குடுங்க" என்று கூற அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே! (எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்!). சுவாரசியமாக அவர் ஹிந்தி செய்யுளை படித்து கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ "ஹா" என்று எவனாவது சத்தம் போட்டு கொட்டாவி விடுவான்! வகுப்பே கலகலத்து விடும்! கடைசியில் அவரும் இந்த பசங்களை திருத்தவே முடியாது என்று ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்!


இந்த ஆராத்து பசங்களை திருத்தவே முடியாது என்று எல்லா ஆசிரியர்களும் கைவிட்டு விட்டார்கள். ஆனால் பாருங்கள், தேர்வு நேரத்தின் போது எல்லோரும் நல்ல பிள்ளைகளாக மாறி ஆச்சரியப்படும் விதமாக அனைவருமே நல்ல மதிப்பெண்களை பெறுவோம். நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் பள்ளியினாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.


நாங்கள் கலாட்டா செய்யாத ஒரே வகுப்பு தமிழாசிரியரின் வகுப்பு தான். ஏற்கனவே கூறியது போல, அவரது தமிழ் புலமை எங்களை எல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் என்ன செய்வது? தமிழ் அறிஞர்களின் ஒரு சாபக்கேடு போல, வறுமை அவரையும் வாட்டியது.


ஒரு முறை எங்கள் வகுப்பில், "டேய் பசங்களா, வீட்டு வாடகையை ஏற்றி விட்டான். ஒரு 300 ரூபாய்க்குள் எங்காவது வாடகை வீடு கிடைத்தால் சொல்லுங்கப்பா" என்று கூறினார் (இது நடந்தது 1976ல்). அப்போது தான் எங்களுக்கே அவரது நிலைமை புரிய ஆரம்பித்தது.


சில நாட்கள் தமிழ் ஆசிரியர் பள்ளிக்கு வரவேயில்லை. பிறகு ஒரு நாள் சோகமே உருவாக தாடியுடன் பாடம் எடுக்க வந்தார். எங்களுக்கெல்லாம் பாடத்தில் கவனமே செலுத்த முடியவில்லை. கடைசி 15 நிமிடங்கள் வந்த போது, குரலை கனைத்து கொண்டே தனது 6 மாத குழந்தைக்கு காய்ச்சல் வந்து திடீரென்று இறந்துவிட்டதாக கூறினார்.


வகுப்பில் பயங்கர நிசப்தம். எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வழக்கமாக நாங்கள் "சார், இந்த தலைப்பில் கவிதை பாடுங்கள், அந்த தலைப்பில் சொல்லுங்கள்" என்று அவரை நச்சரிப்போம். ஆனால் அன்று இருந்த சூழலில் அப்படி ஒரு அமைதியை எங்கள் வகுப்பு பார்த்ததே இல்லை.


உடனே அவர் தனது கணீர் குரலில் பேச ஆரம்பித்தார்:

"இளவேனிற்காலத்து இளமழலை கனவுகளே!எந்தன் இளமழலை தன்னை இருவிழிக்குள் சேர்ப்பீரோ!"......

த‌ன்னை அறியாம‌ல் அருவி போல‌ க‌விதை ம‌ழை பொழிய ஆரம்பித்தது. துக்கம் தொண்டையை அடைக்க எங்களது க‌ண்க‌ளில் க‌ண்ணீர்.

ஒரு க‌ட்ட‌த்தில்

"நாளைக்கு வ‌ழிய‌றியா ந‌ம் த‌க‌ப்ப‌ன் - த‌மிழ் ப‌டித்த‌ ஏழைக்க‌விஞ‌ன் எனும் இர‌க்க‌த்தால் போனாயோ"

என்று பிரமை பிடித்தவர் போல அவர் கூற வ‌குப்பே உண‌ர்ச்சி பெருக்கில் அவ‌ரிட‌ம் ஓடிப்போய் "வேண்டாம் சார், இத்தோடு நிறுத்தி கொள்ளுங்க‌ள்" என்று அழ‌ ஆர‌ம்பித்து விட்டோம். ம‌ணி அடித்த‌து. த‌மிழ் வ‌குப்பு முடிந்த‌து.


இந்த‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு பிற‌கு ஏனோ தெரிய‌வில்லை, எங்க‌ள‌து வ‌குப்பில் ஆசிரிய‌ர்க‌ளை க‌லாட்டா செய்யும் ப‌ழ‌க்க‌ம் அற‌வே நின்று விட்ட‌து. காலம் யாருக்காகவும் நிற்பது இல்லையே. எல்லோரும் பெரிய‌ வ‌குப்புக‌ளுக்கு சென்று பிற‌கு க‌ல்லூரி, வேலை, க‌ல்யாண‌ம் என்று கால‌த்தின் ஓட்ட‌த்தில் க‌ல‌ந்து விட்ட‌ன‌ர். பல வருடங்கள் ஓடிவிட்டன.


எங்களது தமிழாசிரியர் இப்போது அந்த பள்ளியில் இல்லை. ஒரு பெரிய‌ அர‌சிய‌ல் க‌ட்சியில் சேர்ந்து அத‌ன் த‌லைமைக்கு தின‌மும் அறிக்கை த‌யார் செய்யும் வேலையில் (ghost writing) ஈடுப‌ட்டிருந்தார் என்று சிலர் கூறினர்.


எது எப்படியோ, எங்கள் பள்ளியை கடந்து செல்லும் பொழுதெல்லாம் மறக்க முடியாத இந்த நினைவுகள் என்னையும் அறியாமல் வருவதுண்டு.

Wednesday, 17 December 2008

சலாம் பம்பாய் - 4

பம்பாய் வீ.டீ. இரயில் நிலையத்தில் நான் ஒரு அதிசயமான காட்சியை கண்டேன் என்று கூறினேன் அல்லவா? ஆனால் அதற்கு முன்னால் முதலில் எனது முந்தைய பதிவை படியுங்கள். அப்போது தான் இந்த பகுதி புரியும்.பம்பாய் வீ.டீ. இரயில் நிலையம் எப்போதுமே கூட்டமாக இருக்கும். காலை நேரமானால் மக்கள் இரயில் நிலையத்திலிருந்து பெருந்திரளாக வெளியே வருவார்கள். அதே போல், மாலையில் இரயில் நிலையத்துக்குள் செல்லும் கூட்டம் வெளியே வரும் கூட்டத்தை விட அதிகமாக இருக்கும். இது வழக்கமாக நடக்கும் ஒன்று.
நான் வீ.டீ. இரயில் நிலையத்தை அடைந்த போது மாலை சுமார் 6.15 இருக்கும். சரியான அடை மழை பெய்துகொண்டிருந்தது. பெருந்திரளாக மக்கள் இரயில் நிலையத்தின் 'உள்ளே' செல்வதற்கு பதில் 'வெளியே' வந்து கொண்டிருந்தார்கள். 'என்னடா இது, அதிசயமாக இருக்கிறதே' என்று நினைத்துக்கொண்டே இரயில் நிலையத்துக்குள் சென்று பார்த்தால் ஒரு தடத்தில் கூட இரயில் இல்லை. அடுத்த இரயில் புறப்படும் நேரத்தை காட்டும் 'இன்டிக்கேட்டர்கள்' எல்லாவற்றிலுமே "00:00 " என்று இருந்தது.


என்ன விஷயம் என்று பார்த்தால் தண்டவாளங்கள் அனைத்திலும் 4 அடிக்கு மழை தண்ணீர் தேங்கியிருந்தது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து இரயில்களும் ரத்து என்று கூறினார்கள். அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு எப்படி செல்வது என்ற கவலையில் மக்கள் அனைவரும் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.மழையோ விடாமல் கொட்டிக்கொண்டே இருந்தது.அப்போதெல்லாம் அலைபேசி வசதி கிடையாது. ஒரு கடைக்குள் சென்று வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று பார்த்தால் வீட்டு தொலைபேசியும் வேலை செய்யவில்லை. சாலை முழுவதும் மக்கள் வெள்ளம். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. மழையினால் இருட்ட வேறு ஆரம்பித்திருந்தது.சரி இப்போதைக்கு இரயில் எதுவும் கிடையாது என்பது தெரிந்து விட்டது. ஏதாவது பேருந்து கிடைக்குமா என்று வீ.டீயிலிருந்து அருகில் Fort என்ற இடம் வரை நடந்து வந்தேன். ஒரு முக்கால் மணி நேரமான பின் காட்கோப்பர் என்ற இடத்துக்கு செல்லும் ஒரு பேருந்து வந்தது.பல முறை நான் சென்னை பல்லவன் பேருந்தில் சென்றிருக்கிறேன், பம்பாய் இரயில் கூட்டத்தில் மிதி பட்டிருக்கிறேன். ஆனால் இந்த பேருந்தில் இருந்த கூட்டத்தை போல எங்குமே நான் பார்த்திருக்கவில்லை. குடை சாய்வது போல பேருந்து வந்து கொண்டிருந்தது. எனக்கோ தவிப்பு. இந்த பேருந்தை விட்டு விட்டால் நாம் இங்கேயே இரவை கழிக்க வேண்டியதுதான்.
வண்டி நின்றது. ஆனால் உள்ளே நுழைவதற்கோ ஒரு துளி இடம் கூட இல்லை. வேறு வழியில்லாமல் பேருந்தின் பின் சக்கரத்தில் ஒரு காலை வைத்து ஏறி மற்றொரு காலை ஜன்னல் வழியே உள்ளே விட்டு உட்கார்ந்திருந்த பயணியின் தொடை மேல் வைத்து உடம்பை உள்ளே புகுத்திக்கொண்டேன்! அப்பாடா, ஒரு வழியாக பேருந்தின் உள்ளே நுழைந்து விட்டேன். அந்த பயணியோ கத்து கத்தென்று கத்தினான். நான் "sorry" (!!) என்று கூறி விட்டு அவனது இரண்டு கால்களுக்கும் நடுவில் நின்று கொண்டேன்! என்ன செய்வது, ஆபத்துக்கு பாவமில்லை!!எப்படியாவது இங்கிருந்து நகர்ந்தால் சரி. இத்தனைக்கும் நான் போக வேண்டிய இடம் காட்கோப்பரே அல்ல. ஆனால் வீ.டி.யை விட்டு எங்காவது சென்றால் அங்கிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ ஏதாவது கிடைக்கலாம் அல்லவா?
6.30 மணிக்கு பேருந்து கிளம்பியது. வழியெல்லாம் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். முக்கி முக்கி பேருந்து வடாலா என்ற இடம் வரை வந்து சேர இரவு 8.30 ஆகியிருந்தது. இதற்கு மேல் பேருந்து செல்லாது என்று ஓட்டுனன் கூறினான். வெளியே வெள்ளம் போல மழை நீர். பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கி விட்டனர்.சில்லென்று மழை நீர் முழங்கால் வரை ஏறியது. இப்போது என்ன செய்வது? சரி, மற்றவர்களை போல நடக்க வேண்டியது தான் என்று வடாலாவிலிருந்து சாலையில் ஓடும் வெள்ளத்திலேயே நடக்க ஆரம்பித்தேன்.
வழி முழுவதும் தண்ணீர். லேசாக குளிர ஆரம்பித்தது. 'வீட்டிற்கு எப்படி போய் சேர்வது? எப்போது போய் சேர்வது? எப்படியாவது தகவல் கொடுத்தாக வேண்டுமே. தொலைபேசி கூட வேலை செய்யவில்லையே' என்றெல்லாம் எண்ணிக்கொண்டே சாலையில் மற்ற பயணிகளுடன் நடக்க ஆரம்பித்தேன். மணி 10.15 இருக்கும். கிங் சிர்க்கிள் என்ற இடத்தை அடைந்தேன். இது தமிழர்கள் வாழும் பகுதி. என்னுடைய துரதிர்ஷ்டம் எல்லா ஹோட்டல்களுமே இழுத்து மூடியிருந்தனர்.பசி, குளிர், அசதி என்று உடம்பே ஒரு வழியாகி விட்டது. 'இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ கடவுளே, ஏதாவது பேருந்து கிடைக்காதா' என்று ஆதங்கத்துடன் ஸயன் என்ற இடம் வரை வந்து விட்டேன். என்னை போலவே நூற்றுக்கணக்கான மக்கள் சாலையின் வெள்ளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
திடீரென்று பார்த்தால் சாலையின் இருபுறமும் புதிதாய் முளைத்த tent கொட்டகைகள். அதன் உள்ளே பெரிய அடுப்புகளில் சுடச்சுட pav bhaji என்ற போண்டா போன்ற தின்பண்டத்தை வீட்டு பெண்மணிகள் தயாரித்து கொண்டிருந்தனர். மழைக்கோட்டுடன் சாலையின் இரு புறத்திலும் இளைஞர்கள் உள்ளெ இருந்து அவற்றை வாங்கி எங்களை போன்றவர்களிடம் இலவசமாக கொடுத்து கொண்டிருந்தனர். என்னிடம் ஒரு இளைஞன் வந்து "அங்கிள், இதை எடுத்து கொள்ளுங்கள்" என்று ஒரு காகிதத்தில் 4 பாவ் பாஜிகளை கொடுத்தான். எனக்கு வாங்குவதற்கு சிறிது தயக்கமாக இருந்தது. நான் யோசிப்பதற்குள் என் கையில் அதை திணித்து விட்டு ஒரே ஓட்டமாக உள்ளே சென்று மேலும் 4 பாவ் பாஜிகளை கொண்டு வந்த மற்றவர்களிடம் கொடுத்தான்.பசி, நடந்து வந்த அசதி என்று அனைவரும் மயக்க நிலையில் இருந்ததால் கொடுத்த தின்பண்டத்தை உடனே சாப்பிட்டு விட்டோம். அப்போது தான் நான் அந்த கொட்டகைகுள்ளே பார்த்தேன். உள்ளே ஒரு 10 பெண்மணிகள் அடுப்புகளில் தின்பண்டங்களை செய்து கொண்டிருந்தனர். அந்த சுற்று வட்டாரத்து இளைஞர்கள் ஒரு 15 பேர் சுறுசுறுப்பாக உள்ளிருந்து தின்பண்டங்களை காகிதங்களில் எடுத்து பாதசாரிகளிடம் கொடுத்து கொண்டிருந்தனர்.அந்த இளைஞர்களில் ஹிந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், சீக்கியர்கள் என்று எல்லா ஜாதி மதத்தினரும் இருந்தனர். ஒவ்வொருவரும் தத்தம் பணிகளில் ஓடியாடி பொது சேவை செய்து கொண்டிருந்தனர். யாரிடமிருந்தும் ஒரு சல்லி காசு கூட வாங்கவில்லை. நான் ஒருவனிடம் எவ்வளவோ வற்புறுத்தியும் கடைசி வரை என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்து விட்டான். "இல்லை அங்கிள், நீங்கள் எவ்வளவோ தூரத்தில் இருந்து நடந்து வருகிறீர்கள். உங்களுக்காக இது கூட நாங்கள் செய்யவில்லை என்றால் எப்படி" என்றான். நான் கண் கலங்கி விட்டேன். இத்தனைக்கும் அரசாங்கத்திடமிருந்தோ, இரயில்வேயிடமிருந்தோ அல்லது மாநகராட்சியிடமிருந்தோ ஒருவிதமான உதவி கூட இல்லை. ஆனால் துடிப்புள்ள இந்த இளைஞர்களும் சமைத்து கொடுத்த தாய்மார்களும் என்னமாய் ஒரு மகத்தான சேவை செய்து கொண்டிருந்தனர்! இது போன்று நான் எங்கும் பார்த்ததேயில்லை.அங்கிருந்து ஸயன் பேருந்து நிலையம் வந்தடைந்தேன். நெடு நேர‌ம் காத்திருந்த‌ பிற‌கு நல்ல வேளையாக நேருல் செல்லும் பேருந்து ஒன்று வ‌ந்த‌து. அதில் ஏறி அமர்ந்து நள்ளிரவு வீடு வந்து சேர்ந்தேன். பொழுது விடிய‌ துவ‌ங்கி இருந்த‌து.நண்பர்களே, ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு விதமான அனுபவங்களை நான் பார்த்தேன். மனித நேயம் இன்னும் சாகவில்லை. ஆனால் வெளிப்படையாக தெரியவில்லை. ஏதாவது ஒரு மிகப்பெரிய ஆபத்து வந்தால் மட்டும் அது வெளிப்படுகிறதோ? இந்த இரண்டு விதமான அனுபவங்களில் உண்மையான பம்பாய் எது? எனக்கு புரியவில்லை நண்பர்களே! உங்களுக்கு?

Tuesday, 16 December 2008

சலாம் பம்பாய்‍ - 3

1996ம் ஆண்டு, ஜூலை மாதம் என்று நினைக்கிறேன். பம்பாயில் கன மழை பொழிந்து கொண்டிருந்தது. வழக்கம் போல் VT செல்லும் இரயிலை பிடிப்பதற்காக வீட்டிலிருந்து நேருல் இரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன். மழைக்காலம் என்பதால் எல்லா இரயில்களும் தாமதமாக ஓடிக்கொண்டிருந்தன. இரயில் நிலையத்துக்குள் நுழைந்து முதல் வகுப்பு பெட்டி வழக்கமாக நிற்கும் இடம் நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு யோசனையில் கீழே பார்த்துக்கொண்டே வந்தவன் திடீரென்று அப்படியே உறைந்து போனேன். வலமிருந்து இடம் நோக்கி சிகப்பு நிறத்தில் நீர் போன்ற ஒரு திரவம் வேகமாக தடத்திலிருந்து (platform) தண்டவாளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த நான் அதிர்ச்சியின் உச்ச கட்டத்துக்கே சென்று விட்டேன்!தடத்தின் ஓரத்தில் ஒரு பிணத்தை கிடத்தி வைத்திருந்தனர். அதன் மண்டையிலிருந்து இரத்தம் பீறிட்டு தடத்தின் குறுக்கே பாய்ந்து தண்டவாளத்தில் போய் விழுந்து கொண்டிருந்தது!
இரயில் நிலையத்தில் எல்லோரும் ஒன்றுமே நடக்காதது போல அவரவர் தத்தம் வேலைகளுக்கு அவசரம் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தனர். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காக்கி சட்டை போட்ட ஒருவர் அடுத்த இரயிலின் வருகைக்காக நின்றுகொண்டு கைகளில் செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று, "ஐயா, இந்த மாதிரி பிணத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக போட்டிருக்கிறார்களே, இதை யாரும் அகற்ற மாட்டார்களா?" என்று கேட்டேன். அவர் கூறிய பதில் ரொம்ப விசித்திரமாக இருந்தது.
அதாவது வாஷி இரயில் நிலையத்தைலிருந்து புதிய பம்பாயில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் இரயில்வேயின் கீழ் வராதாம். CIDCO என்ற நிறுவனத்தின் கீழ் வருமாம். (இரயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் கூட தனியார் ஒப்பந்தக்காரர்கள் தான்). புதிய பம்பாயில் எந்த இரயில் நிலையத்திலும் விபத்தில் சிக்கிய பிணங்களை வைப்பதற்கு தனி அறை ஒன்றும் இல்லையாம். அதனால் வேறு வழி இல்லாமல் தடத்தின் ஓரத்திலேயெ வைத்து விட்டு காவல் துறைக்கு தகவல் அனுப்பி விட்டார்களாம்.
எனக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. கடவுளே! யார் பெற்ற பிள்ளையோ! இப்படி அனாதையாக கேட்பாரற்று கிடக்கிறானே! கண்ணதாசன் பாடிய "நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி! தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் நாலு பேருக்கு நன்றி" என்ற வரிகள் மனதில் வந்தன. இவனுடைய அந்த நாலு பேர் எங்கே சென்றார்கள்? அவனும் சிறிது நேரத்திற்கு முன் என்னை போல ஒரு இரயில் பயணி தானே! இப்போது "அவன்" "அது" வாகி விட்டானே! மனித நேயம் இறந்து விட்டதா? அவனுக்கும் மனைவி, குழந்தை, அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி என்று இருப்பார்களே! கணவன் வேலைக்கு சென்றிருக்கிறான் என்று மனைவி நினைத்துக்கொண்டிருப்பாளே! இப்படியெல்லாம் யோசித்து கொண்டிருக்கையிலேயே நான் செல்ல வேண்டிய வண்டி தடத்துக்குள் நுழைந்து விட்டது. அதில் ஏறி ஒரு வழியாக என்னுடைய அலுவலகத்தை வந்தடைந்தேன்.
ஆனால் வேலையில் மனதே லயிக்கவில்லை. சே! என்ன வாழ்க்கை வாழ்கிறோம் நாம்! என்ன ஊர் இது! பணத்துக்காக தினமும் காலையிலிருந்து மாலை வரை எவனுக்கோ அடிமை வேலை செய்து விட்டு மனதை கல்லாக்கி கொண்டுள்ளார்களே? "மற்றவன் இருந்தால் என்ன, செத்தால் என்ன, நான் பணம் பண்ண வேண்டும், அவ்வளவுதான்" என்று இருக்கிறார்களே! இப்படி எல்லாம் எனது மனதில் எண்ண அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கின. மதிய உணவை சரியாக சாப்பிட முடியவில்லை. எனது நண்பர்களிடம் இதை பற்றி கூறினேன். அவர்களோ, "இதை பார்! தினமும் எவனாவது இரயிலில் அடிபட்டு செத்துக்கொண்டே இருக்கிறான். அதற்காக நாம் வருத்தப்படுக்கொண்டே இருந்தால் வாழ்க்கையை வாழ முடியாது" என்றார்கள்.
என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. "இப்படி கூடவா ஈவு இரக்கமற்று இருப்பார்கள்! எனது இரயில் வந்தவுடன் நான் கூட சுயநலவாதியாக ஏறி விட்டேனே. ஆனால் நான் நினைத்திருந்தால் கூட என்ன செய்திருக்க முடியும்? இது ஒட்டுமொத்த சமுதாய சீர்குலைவா அல்லது தனி மனித ஒழுக்க சீர்கேடா? இப்படியாகப்பட்ட ஊரில் நாமும் இயந்திரத்தனமான வாழ்க்கையை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளை நமக்கே இந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டால் இது போல தான் ஆகுமோ" என்றெல்லாம் மனதுக்குள் ஓராயிரம் எண்ண ஓட்டங்கள்.

கிட்டத்தட்ட பம்பாய் நகரத்தின் மேல் ஒருவித வெறுப்புணர்ச்சியே ஏற்பட்டு விட்டது என்றே கூறலாம்.அது ஊரில் வாழ்பவர்களின் குற்றமா அல்லது விபத்தில் அடிபட்டு கிடந்த ஒரு சக பயணியின் உடலை பார்த்த பிறகு கூட ஒன்றும் செய்ய முடியாத என்னுடைய கையாலாகாத்தனமா என்று தெரியவில்லை.
வேலையில் மனது ஒட்டவில்லை என்பதால் மாலை 6 மணிக்கு அலுவலகம் முடிந்த உடனேயே வீட்டுக்கு கிளம்பி விட்டேன். அலுவலகத்தை விட்டு வெளியே சென்று பார்த்தால் நன்றாக மழை கொட்டிக்கொண்டிருந்தது. பலார்டு எஸ்ட்டேட்டிலிருந்து வீ.டீ. இரயில் நிலையம் வரை சோர்வுடன் நடந்து வந்தேன். வீ.டீ. இரயில் நிலையத்துக்குள் நுழைந்தவனுக்கு ஒரு அதிசயமான காட்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு நான் பார்த்தது....................(தொடரும்)

Friday, 12 December 2008

எண் ஜோதிட நகைச்சுவை

இரவு நேரங்களில் பொழுது போகாத போது தொலைக்காட்சியில் வரும் சில நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது எனது வழக்கம். நேற்று இரவு அது போல ஒவ்வொறு channelஆக மாற்றி கொண்டே வந்த போது ஒரு channelல் எண் ஜோதிடம் பற்றி ஒரு "பொறியாளர்" பேசிக்கொண்டிருந்தார்.

இவர் உண்மையிலேயே பொறியாளரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் பெயருக்கு முன்னால் 'இஞ்ஜினியர்' என்று தன்னை தானே குறிப்பிட்டுக்கொண்டார். 'டாக்டர்', 'முனைவர்', 'பேராசிரியர்' என்று பட்டம் வைத்து கொள்வது போல இப்போதெல்லாம் 'இஞ்ஜினியர்' என்று கூறி கொள்வதும் ஒரு கெளரவம் ஆகி விட்டது என்று நினைக்கிறேன். அல்லது நாட்டில் இஞ்ஜினியர்கள் நிறைய இருப்பதால் வேலை வாய்ப்புக்கள் குறைந்து இப்போது ஆலமரத்து கிளி ஜோசியக்காரர்களுக்கு போட்டியாக இவர்களும் வந்து விட்டார்களா என்றும் தெரியாது!

சரி, என்னதான் கூறுகிறார் பார்ப்போம் என்று நிகழ்ச்சியை ஆவலுடன் கவனித்தேன். ஒரு நடுத்தர வயதான பெண், "என் பெயர் சாந்தி. எனக்கு பல நாட்களாக வயிற்றில் எரிச்சல் போல இருக்கிறது" என்றார். (இதை தான் வயிற்றெரிச்சல் என்று கூறுவார்களோ?). நமது இஞ்ஜினியர் அடுத்து கூறியது தான் நகைச்சுவையின் உச்சகட்டம். "உங்கள் பெயர் என்ன, மறுபடியும் கூறுங்கள்" என்று கேட்டார். அந்த பெண் "சாந்தி" என்றார். உடனே இவர் பலகையில் SANTHI என்று எழுதிவிட்டு "உங்களுடைய பெயரில் "தீ" இருக்கிறது. அதனால் தான் அடிக்கடி உங்களுடைய வயிற்றில் எரிச்சல் ஏற்படுகிறது" என்றார். அடப்பாவி, இஞ்ஜினியர் எப்பொழுது டாக்டர் ஆக மாறினான்? அவர் அடுத்து கூறியது: " உங்களுடைய பெயரை SANTHI என்று இனிமேல் எழுதாதீர்கள். எண் கணிதப்படி SANTHEY என்று மாற்றி கொள்ளுங்கள்" என்று கூறினார்! நல்ல வேளை, கையில் சிறிது விபூதியை கொடுக்கவில்லை.

பரவாயில்லையே, வடிவேல், விவேக் போன்றவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகளை விட இது இன்னும் காமெடியாக இருக்கிறதே! அடுத்து மற்றொரு பெண் வந்தார். (இவரது நிகழ்சியில் ஆண்கள் வரவே மாட்டார்களா என்ன?). அவர்களது உரையாடல் இப்படி இருந்தது.

"உங்களுடைய பெயர் என்ன?"

"மஹாலக்ஷ்மி"

"என்ன நட்சத்திரம்?"

"மூலம்"

"உங்களுக்கு என்ன பிரச்னை?"

"கடன் தொல்லை தாங்க முடியலை சார்"

இஞ்ஜினியர் இப்போது ஏதோ யோசனையில் ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தார். "சரி, இப்பொழுது இந்த பலகையில் நீங்கள் எப்பொழுதும் போடுவதை போல உங்களுடைய கையெழுத்தை போடுங்கள்" என்றார். அந்த பெண்ணும் Mahalakshmi என்று சாய்வாக கீழிருந்து மேலாக கையெழுத்து போட்டார். அவ்வளவுதான். நமது பொறியாளருக்கு ஐசாக் நியூட்டன் மாதிரி வேகம் வந்து விட்டது.

ஒரு protractorஐ எடுத்து கொண்டார். (நாம் பள்ளியில் படிக்கும் போது Geometryல் உபயோகப்படுத்தும் காம்ப்பஸ் ப்ரொட்ராக்டர் தான்). அந்த பெண் Mahalakshmi என்று தனது கையெழுத்தை கிறுக்கியிருந்தார் அல்லவா? அதில் நடு சொல்லான "L"ல் ப்ரொட்ராக்டரை வைத்து "இங்கே பாருங்கள், இந்த "எல்" என்ற சொல் 30 டிகிரி கோணத்தில் கீழ் நோக்கி உள்ளது. "எல்" என்றால் லகரம். லகரம் என்றால் லட்சம். அது கீழ்நோக்கி உள்ளதால் உங்களது கையில் பணமே இல்லாமல் கஷ்டப்படுகிறீர்கள்" என்றார். அடேயப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!


"உங்களது பெயரில் கூட்டு எண் சரி இல்லை. அதனால் உங்களது பெயரை உடனே Mahalatchoumi என்று மாற்றிக்கொள்ளுங்கள். அது மட்டுமல்ல. இனிமேல் கையெழுத்து போட்டுவிட்டு கீழே கோடு போடாதீர்கள்" என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார்.


செம காமெடி போங்கள்! ஒரு பெயரை மாற்றி விடுவதால் கடன் தொல்லை தீர்ந்து விடுமாம். இந்தியாவின் கடன் பாக்கியை இது போலவே தீர்த்து விடுங்களேன். அமெரிக்காவில் கூட இப்பொழுது பண பிரச்னையாம். அமெரிக்காவின் பெயரை கூட மாற்றிவிட்டால் பண தொல்லை தீர்ந்து விடுமே!தமிழ்நாட்டில் சில பிரபல அரசியல்வாதிகள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். ஜெயலலிதா என்ற பெயரில்ல் கடைசியில் ஒரு 'a' வை அதிகமாக வைத்து Jayalalithaa என்று மாற்றி கொண்டுள்ளார். அது போலவே எஸ்.வி.சேகர் தனது பெயரை S.Ve.Shekar என்று வைத்து கொண்டுள்ளார். டீ.ராஜேந்தர் தனது பெயரை விஜய டீ. ராஜேந்தர் என்று மாற்றி அமைத்தபின் அவருக்கு விஜயம் வந்ததா என்று தெரியவில்லை. அதே போல, திருநாவுக்கரசு, தனது பெயரை திருநாவுக்கரசர் என்று மாற்றி வைத்து கொண்டுள்ளார். சரி, இது அவரவர் சொந்த விருப்பம் என்று வைத்து கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.


சாதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு நிமிடம் நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கே சில லட்சங்கள் அல்லது கண்டிப்பாக சில ஆயிரங்களாவது செலவாகும். இது போன்ற எண் ஜோதிடர்கள் ஒரு முழு அரை மணி நேர slotஐ தங்களுக்காக வாங்கி கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இதற்கு அவர்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது?


எண் ஜோதிடம் உண்மையா போலியா என்று ஒரு பக்கம் இருக்கட்டும். நமது தொலைக்காட்சிகளுக்கு இவர்களினால் நல்ல பணம் கிடைக்கிறது என்பதை தவிர வேறு யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. "எதை தின்றால் பித்தம் தெளியும்" என்கிற நிலையில் இருக்கிற நமது மக்களும் இது போன்றவர்களிடம் ஏமாறுகிறார்கள் என்பது தான் பரிதாபம்.

Wednesday, 3 December 2008

தலை வணங்குவோம்

கடினமான கால கட்டங்களில் நமக்கு உதவி செய்ய முன்பின் தெரியாத சாதாரண மக்கள் முன்வருவார்கள். அதிலும் தங்களுடைய உயிரை கூட பணயம் வைத்து பிறருக்காக உழைக்கும் இவர்கள் உண்மையிலேயே நமது வணக்கத்துக்கு உரியவர்கள் தான்.

நவம்பர் 26. இந்தியாவின் உயிர்நாடியையே உலுக்கிய மறக்க முடியாத நாள். இரவு சுமார் 10 மணியளவில் மும்பையின் வீ.டீ. இரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் புகுந்து அங்கு இருந்த பயணிகளின் மேல் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். பலர் சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் பலர் குண்டு அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். சரியாக இதே நேரத்தில் ஒரு இரயில் பிளாட்பாரத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. நடந்து கொண்டிருந்த விபரீதத்தை மேலே உள்ள கண்ணாடி கூண்டிலிருந்து அறிவிப்பாளர் ஜெண்டே என்பவர் பார்த்தார். ஒரே நிமிடத்தில் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பயணிகளை கண்டதும் உடனடியாக செயலில் இறங்கினார்.

சரமாரியாக இந்தியிலும் மராத்தியிலும் "பயணிகளே! இரயில் நிலையம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பின் பக்கம் உள்ள ஒன்றாம் எண் கேட்டிலிருந்து வெளியேறுங்கள். யாரும் இஞ்ஜின் பக்கம் வராதீர்கள்" என்று அறிவித்து கொண்டே இருந்தார். இதை சற்றும் எதிர்பாராத பயங்கரவாதிகள் மேலே உள்ள கண்ணாடி கூண்டை நோக்கி சுட ஆரம்பித்தனர். ஆனால் ஜெண்டே அசரவில்லை. பயணிகளின் உயிரை காப்பாற்ற கீழே தரையில் குனிந்து கொண்டே தனது அறிவிப்புகளை விடாமல் கூறிக்கொண்டே இருந்தார். பயணிகள் அலறி அடித்து கொண்டு பின் பக்கம் உள்ள கேட் வழியாக வெளியே ஓடினர். ஜெண்டேயின் சமயோசித செய்கையால் நூற்றுக்கணக்கான உயிர்கள் தப்பின.

37 வயதே ஆன ஜெண்டே 10வது வரை தான் படித்துள்ளார். இரயில்வே கார்டாக இருந்த தனது தந்தை இறந்த பிறகு இவரும் இரயில்வேயில் சேர்ந்தார். இவரது செய்கையினால் உயிர் பிழைத்த ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் திங்கட்கிழமை இவரது கண்ணாடி கூண்டுக்குள் நுழைந்து தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டாராம். தனது பெயரை கூட கூறாத அவர், வெளியே செல்லும் போது கூறிய வார்த்தை ' "ஜெய் ஹிந்த்".