Tuesday, 30 September 2008

எங்கே இருக்கிறீர்கள் தபால்காரரே?

சில வருடங்களுக்கு முன்பு நினைத்து கூட பார்த்திராத அபூர்வமான காட்சியை சமீபத்தில் சென்னைக்கு சென்றிருந்தபோது கண்டேன். அனைவரின் கைகளிலும் ஒரு கை பேசி இருந்தது. நான் "அனைவரின்" என்று கூறுவது பெரிய பணக்காரர்களை பற்றி அல்ல. தெருவில் குப்பை கூட்டும் பையன், காலையில் பால் கொண்டு வந்து தரும் பெண், வீட்டில் வேலை செய்ய வரும் வேலைக்காரி, என்று சாதாரணமானவர்களை பற்றி தான். யாருமே இப்போதெல்லாம் கடிதம் எழுதுவதில்லை என்றே தோன்றுகிறது. எல்லோர் கைகளிலும் இந்த கைபேசி வந்து விட்டதால் உட்கார்ந்து யோசித்து மெனக்கெட கடிதம் எழுதும் பழக்கம் அறவே நின்று விட்டதோ என்று எண்ணுகிறேன்.நான் கல்லூரியில் விடுதியில் இருந்த நாட்களை பற்றி யோசித்து பார்த்தேன். வீட்டிலிருந்து கடிதம் எப்போது வரும் என்று ஏங்கிக்கொண்டிருப்போம். நாங்கள் எழுதும் கடிதங்களும் விலாவாரியாக இருக்கும்.
கடிதம் எழுதுவதே ஒரு கலை தான். எனது தந்தை நீண்ட கடிதங்களை எழுத மாட்டார். மொத்தமாகவே மூன்று பத்திகள் தான் இருக்கும் அவர் எழுதும் கடிதங்களில். சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு கடிதத்தை முடித்துவிடுவார். ஆனால் இலக்கண பிழைகள் இல்லாமல் தரமானதாக இருக்கும். கடிதத்தின் வலது பக்கத்தின் மேல் கண்டிப்பாக தேதியும் இடமும் இருக்கும். ஆங்கிலத்தில் சில சமயம் அவர் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை அகராதி கொண்டு புரிந்து கொண்டிருக்கிறேன் (Ultimo என்றால் சென்ற மாதம், Proximo என்றால் அடுத்த மாதம், இப்படி இருக்கும் அவருடைய சில ஆங்கில கடிதங்களின் வார்த்தைகள்). இது போன்ற வார்த்தைகள் இன்னும் உபயோகத்தில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.
தபால்காரரின் வரவை நாங்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருப்போம். அவர் கொண்டு வந்து கொடுக்கும் கடிதங்களை படிக்கும் போது வெகு தூரத்தில் இருக்கும் நமது உற்றார் உறவினர்களை நேரே பார்ப்பது போல ஒரு அனுபவம் ஏற்படும். எப்பொழுதாவது தந்தி கொண்டு வந்து கொடுத்தால் தந்தியை பிரிப்பதற்குள்ளாகவே அனைவருக்கும் வயிற்றை கலக்கி விடும். ஏனென்றால், தந்தி என்றாலே கெட்ட செய்தியாக தான் இருக்கும் என்று ஒரு பரவலான எண்ணம் இருந்த காலம் அது. சில சமயம் 'மணி ஆர்டர்' கொண்டு வந்து தருவார். அப்போது வந்த பணத்தில் அவருக்கு தேனீர் அருந்துவதர்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் சந்தோஷமாக செல்வார்.தீபாவளி, பொங்கல் சமயங்களில் தவறாமல் 'இனாம்' வாங்க வந்துவிடுவார் எங்கள் தபால்காரர். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வந்த அதே தபால்காரர் தான் இப்போதும் வருகிறார். அவருடைய முடி நரைத்து இப்போது சில வருடங்களில் ஓய்வு பெற உள்ளார். முன்பெல்லாம் அவருக்கு 'காக்கி' நிறத்தில் சட்டை, பேண்ட் மற்றும் தொப்பி இருக்கும். சில வருடங்களாக பழுப்பு நிறத்திற்கு அதை மாற்றி விட்டனர்.
வெயிலோ, மழையோ எதுவாக இருந்தாலும் தவறாமல் தனது மிதி வண்டியில் தபால்களை கொண்டு வந்து கொடுத்து விடுவார். சில சமயம் முகவரி சரியாக இல்லாமல் போனால் கூட பெயரை வைத்து கொண்டு சரியான வீட்டுக்கு தபால்களை கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
கை பேசியின் வருகையால் இப்போது யாரும் கடிதங்களும் எழுதுவதில்லை, கடிதங்களை படிப்பதும் இல்லை. இயந்திரத்தனமான வாழ்க்கையில் இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது? நிறுவனங்களில் இருந்து வரும் கடிதங்கள் கூட கணணியில் அடிக்கப்பட்டு 'கொரியர்' பையன்கள் மூலமாக அனுப்பப்படுகின்றன.
மின் அஞ்சல் யுகத்தில் கையால் எழுதும் கடிதங்கள் காணாமல் போய்விட்டன. அதோடு நம் தபால்காரரும் காணாமல் போய்விட்டாரோ? எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை தான் தபால்காரரின் பயணம் கூறுகின்றதோ?

Friday, 26 September 2008

அற்புதமான எலியட்ஸ் கடற்கரை

யானையையும் கடலையும் எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கலாம் என்று கூறுவார்கள். சென்னை எலியட்ஸ் கடற்கரையை அதில் சேர்த்து கொள்ளலாம். அதன் நினைவுகள் என் நெஞ்சில் இருந்து நீங்காதவை.


1970களில் சென்னை பெசண்ட் நகர் என்பது ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடமாக இருந்தது. ஊர் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருந்தாலும் இந்த இடத்தில் மட்டும் தண்ணீர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த நாட்களில் பெசண்ட் நகருக்கு அவ்வளவு பஸ் போக்குவரத்து கூட கிடையாது. இப்போது இருக்கும் பஸ் நிலையம் ஒரு காலத்தில் சுடுகாடாக இருந்தது என்றால் நம்ப முடியுமா?
எலியட்ஸ் கடற்கரையில் அப்போதெல்லாம் கூட்டமே இருக்காது. ஸ்மிட்ஸ் மெமோரியல் என்ற ஒரு கட்டிடம் தான் ஒரு வெள்ளைக்காரரின் நினைவாக இன்றும் இருக்கிறது. நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது அந்த கட்டிடத்தை சுற்றி வந்து விளையாடுவோம். சூரிய கிரகணம் வரும்போதெல்லாம் நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் அந்த கடற்கரையில் குளித்திருக்கிறோம். கடல் குளியலே ஒரு தனி அனுபவம் தான்.
அதற்குப்பின் மஹாலக்ஷ்மி கோவில் மற்றும் மாதா கோவில் கட்டப்பட்டன. இதற்கு பிறகுதான் பெசண்ட் நகர் மிகவும் பிரபலமாக ஆரம்பித்தது.எலியட்ஸ் கடற்கரையில் மெரினா கடற்கரை போல கசகசவென்று கூட்டம் இருக்காது. எப்போதாவது வரும் சுண்டல் முறுக்கு விற்கும் பையன் என்று மிக அமைதியாக இருக்கும் (இப்போது அப்படி கூற முடியாது).
கடலின் விளிம்பில் நின்று கொண்டு அலைகளை ரசிப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை என்றே கூறலாம். ஒவ்வொறு அலை வந்து கால்களை உரசிவிட்டு செல்லும்போது தரையில் ஒரு சிறு குழிகள் விழும். கால்களை நாம் நகர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் குழிகள் பெரிதாகி கொண்டே போகும். அலைகளின் வேகத்துக்கு நம்மால் நிற்பது கடினமாக போய் விடும். அப்படி உரசும் அலைகளுக்கு நடுவே கிளிஞ்சல்கள், சிறிய கற்கள், நத்தைகள், சிறு பூச்சிகள், என்று ஏராளமான பொருட்கள் வந்து விழும்.
கடற்கரையை நோக்கி நிற்கும்போது நமது அகங்காரம் தவிடுபொடி ஆகிவிடுவதை உணர முடியும். அத்தனை பெரிய கடலின் முன்னால் நாம் நிற்கும்போது நமது அந்தஸ்து, படிப்பு, பகட்டு எல்லாம் தூசி போன்று கடல் காற்றுடன் பறந்து போய் நம்மை சாதாரண மனிதனாய் மாற்றி விடும். இந்த ஆற்றல் சமுத்திரத்தை விட வேறு யாருக்கு உண்டு? அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்த சில்லென்ற காற்றை சுவாசிக்கும்போதும், கடற்கரை அலைகள் நம் கால்களை தொடும்போது மனதில் குடியேறும் அமைதியும் சுகமும் அலாதியான ஒன்று.

கடல் அலைகளும் நமது மனதை போல் தானோ? சாந்தம், சீற்றம், எழுச்சி, அமைதி என்று எல்லவிதமான பரிமாணங்களையும் நாம் அதில் காணலாம் அல்லவா?

இந்த கடலில் எத்தனை எத்தனை ஜீவராசிகள் உள்ளன என்று எண்ணும்போது மிக பிரமிப்பாக இருக்கும். தூரத்தில் போகும் மீனவர்களின் படகுகள் அலைகளுடன் சேர்ந்து ஆடி ஆடி அசைவதை பார்ப்பதிலே ஒரு அலாதி இன்பம் கிடைக்கும். மனது பாரமாக இருக்கும்போது இந்த கடற்கரைக்கு வந்து சிறிது நேரம் அந்த உப்பு காற்றை சுவாசித்தால் லேசாகி ஒரு தெளிவு பிறக்கும்.

தொலைக்காட்சி பெட்டியிலே மெகா சீரியல்களிலும் திரைப்படங்களிலும் ஐக்கியமாகிவிட்டவர்களுக்கு இந்த கடலின் அருமை தெரியாமல் போனது ஒரு துர்பாக்கியமே. இந்த கடற்கரையின் மணலிலே கோபுரம் போல வீடு கட்டி அதில் மகிழ்ந்த நாட்களை எப்படி மறக்க முடியும்?

திடீரென்று எனது தந்தை காலமான பின் அவரது அஸ்தியை இதே எலியட்ஸ் கடற்கரையில் கரைத்தோம். இத்தனை இன்பங்களை கொடுத்த இந்த கடல் அன்னை கடைசியில் இதை கூட எடுத்து கொண்டாளே! பிறந்ததும் தண்ணீரிலே, பிரிவதும் தண்ணீரிலே என்பது இது தானோ? வாழ்க்கை என்பதே இது தானோ?

காலங்கள் பல மாறினாலும் பருவங்கள் பல ஓடினாலும் இந்த கடற்கரையை என்றும் என்னால் மறக்க முடியாது.

Monday, 22 September 2008

மதம் பிடித்த மதம்

மத கலவரங்களை பற்றி செய்தி தாள்களில் படித்திருப்பீர்கள். எப்போதாவது அதில் மாட்டிக்கொண்ட அனுபவம் இருக்கிறதா? எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.


1992 வருடம். டிசம்பர் மாதம். சூரத் நகரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். 'ஷிப்ட்' முறை இருந்ததால் பகல், இரவு என்று மாறி மாறி எனது வேலை நேரம் இருக்கும். எனது நிறுவன வண்டி நெடுஞ்சாலை வரை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வரும். நிறுவனத்தில் வேலை செய்பவர்களை குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றிக்கொண்டு அதே போல அதே இடத்தில் திரும்பி கொண்டு வந்து விட்டு விடும்.ஆனால் எனது வீட்டிலிருந்து அந்த இடத்துக்கு செல்ல ஒரு ஒற்றையடி பாதை வழியாக தான் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். வழியில் தெருவிளக்கு கூட கிடையாது. அதனால் இரவு 'ஷிப்ட்' ஆக இருந்தால் நிலா வெளிச்சத்தில் தோராயமாக நடந்து செல்ல வேண்டியது தான் ஒரே வழி.


அன்றும் அப்படி தான். இரவு 'ஷிப்ட்' என்பதால் பகலில் தொலைக்காட்சியை பார்க்க கூட நேரமில்லை. வழக்கம் போல ஒற்றையடி பாதையில் நடந்து சென்றேன். ஆனால் என்றுமே இல்லாத அளவு அன்று மயான அமைதி இருந்தது. நெடுஞ்சாலையில் வழக்கம் போல செல்லும் வாகனங்களின் சத்தம் கூட கேட்கவில்லை. ஒரு வளைவில் திரும்பிய உடன் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கண் எதிரே ஒரு மாருதி கார் திகுதிகு என்று எரிந்து கொண்டிருந்தது. ஆனால் பக்கத்தில் யாருமே இல்லை. அதிசயமாக இருக்கிறதே, இந்நேரம் தீயை அணைக்க / வேடிக்கை பார்க்க ஒரு கும்பலே கூடி இருக்குமே. இன்றைக்கு என்ன ஆயிற்று? சாலையில் யாருமே இல்லையே?


ஒரு பத்தடி தான் நடந்திருப்பேன். டமால், டமால் என்று வெடி சத்தம். ஆனால் மறுபடியும் சாலையில் யாரையுமே காணவில்லை. தட்டு தடுமாறி நெடுஞ்சாலை வரை வந்து எனது நிறுவன வாகனம் வழக்கமாக நிற்கும் இடத்துக்கு வந்து விட்டேன். சாலையில் நான் ஒருவன் மட்டும் தான் இருந்தேன். மறுபடியும் ஒரு வெடி சத்தம். திரும்பி பார்த்தால் நான்கைந்து வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன.எனக்கு உதறல் எடுத்து விட்டது. ஏதோ ஒன்று நடக்கிறது, ஆனால் நமக்கு தான் என்ன என்று தெரியவில்லை என்று எனது ஆறாம் அறிவு கூறியது. உடனே, வந்த வழியே திபுதிபு என்று ஒற்றையடி பாதையில் வீட்டுக்கு இருட்டில் ஓட ஆரம்பித்தேன். வீட்டுக்கு போய் சேர்ந்த போது தான் நிம்மதியாக இருந்தது. நான் ஒரு 9 மாடி கட்டிடத்தில் இருந்தேன். நேராக மொட்டை மாடிக்கு சென்றேன். அங்கிருந்து சுற்றி பார்த்தால் பேரதிர்ச்சி. எங்கு பார்த்தாலும் திடீர் திடீரென்று தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஏன் இப்படி நடக்கிறது, என்ன ஆயிற்று என்று ஒன்றுமே தெரியவில்லை.வீட்டுக்குள் ஓடி வந்து தொலைக்காட்சியை பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது அயோத்தியில் மசூதியை இடித்து விட்டதால் கலவரம் வெடித்துள்ளது என்று. சரி, எப்படியும் இன்று இரவு வேலைக்கு செல்ல முடியாது, நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து நிறுவனத்துக்கு போன் செய்தேன். ஆனால் போன் ஒன்றுமே வேலை செய்யவில்லை. அந்த காலத்தில் கை பேசி கூட கிடையாது.

மறுநாள் காலை பால் கூட வரவில்லை. ஊரில் இருந்து விடுமுறைக்காக எனது மைத்துனர் வந்திருந்தார். சரி, என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எனது ஸ்கூட்டரை எடுத்து கொண்டு மைத்துனரையும் பின்னால் துணைக்கு உட்கார்த்தி கொண்டு வெளியே சென்றேன். சிறிது தூரம் தான் சென்றிருப்பேன். எங்கிருந்தோ இராணுவ உடையில் ஒருவன் வந்து துப்பாகியை எனது மார்புக்கு நேரே வைத்து எனது வண்டியை நிறுத்தினான். நானும் எனது மைத்துனரும் வெலவெலத்து போய் விட்டோம். "ஏன் வெளியே வந்தாய்? ஊரடங்கு உத்தரவு இருப்பது தெரியாதா" என்று ஹிந்தியில் கத்தினான்.

உண்மையிலேயே எனக்கு அப்போது தான் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தெரியும். எனது நிறுவன அடையாள அட்டையை காண்பித்து அவனிடம் 'பால் வாங்குவதற்காக வந்தேன். ஊரடங்கு உத்தரவு இருப்பது தெரியாது' என்று மன்னிப்பு கேட்டேன். அதற்கு பிறகு தான் துப்பாக்கியை மார்பிலிருந்து அவன் எடுத்தான். உடனே வீட்டுக்கு செல்லுமாறு கூறினான்.

வீட்டுக்கு வ‌ந்து என‌து ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ரிட‌ம் ந‌ட‌ந்த‌தை கூறினேன். அவ‌ர் ஒரு பெங்காலிக்கார‌ர். 'வ‌ட‌ நாட்டில் இது போன்ற‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள் எல்லாம் ச‌ர்வ‌ சாதார‌ண‌ம், க‌ல‌வ‌ர‌க்கார‌ர்க‌ள் ஏதோ செய்து விட்டு போய் விடுவார்க‌ள், அவ‌தி ப‌டுவ‌து ஏனோ சாதார‌ண‌ ம‌க்க‌ள் தான்' என்று கூறினார். த‌மிழ் நாட்டிலிருந்து வ‌ந்த‌ என‌க்கு இது ஒரு புது அனுப‌வ‌மாக‌ இருந்த‌து.

அத‌ற்கு பிற‌கு வெளியே செல்ல‌வே ப‌ய‌மாக‌ இருந்த‌து. நம்புவதற்கு கடினமாக இருக்கும், ஆனால் ஒரு நாள், இர‌ண்டு நாட்க‌ள் இல்லை, ஒரு மாத‌ம், இர‌ண்டு மாத‌ங்க‌ள் இல்லை, கிட்ட‌த்த‌ட்ட‌ 10 மாத‌ங்க‌ள் சூர‌த் ந‌க‌ரிலே எப்பொழுது பார்த்தாலும் ப‌த‌ட்ட‌மாக‌ தான் இருந்த‌து.

எங்கு பார்த்தாலும் இரும்பு தொப்பி அணிந்த இராணுவத்தினர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பார்கள். ஒரு நாள் ஸ்கூட்டரில் நான் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் என்னை வழி மறித்தது. அவர்கள் கையில் உருட்டு கட்டைகள் இருந்தன. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் "வந்தே மாதரம்" என்று ஹிந்தியில் எழுதிய ஒரு ஸ்டிக்கரை எனது ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் (எனது அனுமதி இன்றி) ஒட்டினார்கள். சிறிது தூரம் சென்றிருப்பேன். தூரத்தில் மற்றொறு கும்பல் காத்து கொண்டிருந்தது. என்ன நடக்கும் என்று நான் யூகித்து விட்டேன். அவசரம் அவசரமாக ஸ்டிக்கரை பிய்த்து எரிந்து எதுவும் நடக்காதது போல சென்றேன்.

நாட்கள் செல்ல செல்ல ஒருவிதமான வெறுப்பே கொள்ள ஆரம்பித்து விட்டேன். பிழைப்புக்காக தமிழ் நாட்டை விட்டு குஜராத் வரை ஏன் வந்தோம் என்று இருந்தது. கடவுளே, எப்பொழுது தான் இது தீரும்?

இதாவது பரவாயில்லை. சகஜமாக பேசிக்கொண்டிருந்த வேற்று மதத்தினர் கூட திடீரென்று வித்யாசமாக பழக தொடங்கினார்கள். திடீரென்று தங்களுடைய மதத்தினர் அதிகம் வாழும் பகுதிக்கு வீட்டை காலி செய்து கொண்டு சென்றனர். அது தான் எனது மனதை மிகவும் வருத்தப்பட செய்தது.

படித்த மக்கள் கூட 'இவன் நமது ஆள் இல்லை, அதனால் இவனுடைய மதத்தினர் அனைவரும் காட்டு மிராண்டிகள், நமது மதத்தினர் அனைவரையும் கொன்று குவித்து விடுவார்கள்' என்று நினக்க வைப்பது என்ன‌? மனிதனுக்கு மனிதன் கொடுக்கும் சாதாரண மரியாதை கூட இப்படி தவிடு பொடியாவதற்கு என்ன காரணம்? எங்கே போயிற்று மனித நேயம்? நேற்று வரை நல்ல நண்பர்களாக, சகோதரர்களை விட நெருக்கமாக இருந்தவர்கள் திடீரென்று எதிரிகள் ஆனதற்கு என்ன காரணம்?எல்லாவற்றுக்கும் காரணம் இந்த பாழாய்ப்போன மதம் தானோ?

ஒரு சிங்கம் மற்றொறு சிங்கத்தை அடித்து சாப்பிடுவதில்லை, ஒரு புலி மற்றொறு புலியை தாக்குவதில்லை, இந்த மனிதன் மட்டும் ஏன் மற்றொறு மனிதனை காரணமே இல்லாமல் தாக்குகிறான்? 'எவனோ எங்கேயோ என்னவோ செய்து விட்டு போகிறான், நாம் ஒற்றுமையாக இருப்போம்' என்று ஏன் யாரும் நினைப்பதில்லை?

ப‌த‌ட்ட‌ம் இனி த‌ணிய‌வே த‌ணியாதா என்று ஏங்கி கொண்டிருந்த‌ போது செப்ட‌ம்ப‌ர் 1993ல் ஒரு நாள் திடீரென்று ம‌ஹாராஷ்ட்ராவில் லாட்டூர் என்ற‌ இட‌த்தில் ப‌ய‌ங்க‌ர‌ பூக‌ம்ப‌ம் வெடித்த‌து. அத‌ன் அதிர்ச்சி சூர‌த் வ‌ரை தெரிந்த‌து. அதிகாலை ந‌ட‌ந்த‌ அந்த‌ பூக‌ம்ப‌த்தினால் வீடுக‌ள் திடீரென்று ஆட‌ ஆர‌ம்பித்த‌ன‌. அனைவ‌ரும் அல‌றி அடித்து கொண்டு வெளியே ஓடி வ‌ந்த‌ன‌ர். ம‌ண் வீடுக‌ள் எல்லாம் பொடி பொடியாக‌ உதிர்ந்த‌ன‌. தொலைக்காட்சியில் வெளிவ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ள் ம‌ன‌தை உருக்குவ‌தாக‌ இருந்த‌ன‌. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் லாட்டூரில் இற‌ந்த‌ செய்தி சூர‌த் ந‌க‌ர‌ம் முழுவ‌தும் ப‌ர‌விய‌து.

உட‌னே ஒவ்வொறு ஏரியாவிலும் இருந்த‌ இளைஞ‌ர்க‌ள் ஒன்று கூடி ர‌த்த‌ தான‌ம் செய்து அந்த‌ பாட்டில்க‌ளை லாட்டூருக்கு வ‌ண்டியில் எடுத்து சென்ற‌ன‌ர்.

வீட்டில் இருந்த‌ ப‌ழைய‌ துணிம‌ணிக‌ள், எல்லாவ‌ற்றையும் தெரு தெருவாக‌ சேக‌ரித்து கொண்டு சென்ற‌ன‌ர். இத‌ற்கு பிற‌கு ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் வித‌மாக‌ சூரத் நகரில் ப‌த‌ற்ற‌ம் முழுவ‌துமாக‌ த‌ணிந்த‌து. ந‌க‌ர‌த்தில் உள்ள‌ வியாபாரிக‌ள், பொது ம‌க்க‌ள், பெரிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையாக‌ இருப்ப‌தென்று முடிவு செய்த‌ன‌ர். இத‌ற்கு பிற‌கு (சூர‌த் ந‌க‌ரை பொருத்த‌ வ‌ரை) எங்கு க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்தாலும் சூர‌த் ந‌க‌ர‌ம் ம‌ட்டும் அதிலிருந்து பிழைத்து வ‌ழ‌க்க‌ம் போல‌ வாழ்க்கை ந‌ட‌ந்த‌து என்றே கூற‌லாம்.

மிருக‌ ம‌ன‌தை ம‌னித‌ ம‌ன‌மாக‌ ஆக்குவ‌த‌ற்கு இது போன்ற‌ இய‌ற்கை சீற்ற‌ங்க‌ளை கொடுத்து, 'நான் ஒருவ‌ன் உன‌க்கு மேலே இருக்கிறேன் மூட‌ ம‌னித‌னே' என்று இறைவ‌ன் சொல்லாம‌ல் சொல்கிறானோ?

Tuesday, 2 September 2008

அட‌ 'ராக' வா

கர்நாடக சங்கீதத்தில் எனக்கு மிக நன்றாக‌ தெரிந்த ராகம் ‍'காபி'. கொஞ்சம் இருங்கள். ஏதோ சங்கீதத்தை கரைத்து 'குடித்தவன்' என்று நினைத்து விடவேண்டாம். ஹி, ஹி, நான் சொன்னது பால், சர்க்கரை எல்லாம் சேர்த்து குடிப்போமே, அந்த காபியை தான்!

சென்னையில் டிசம்பர் மாதத்தில் தான் எல்லா சபாக்களிலும் களை கட்டும். அப்போது அங்கு நடக்கும் கச்சேரிகளை விட அதற்கு வரும் மக்களை பார்ப்பதே ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும். பாகவதர் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது தலையை இரு பக்கமும் ஆட்டிக்கொண்டிருப்பார்கள். நடு நடுவில் 'பேஷ் பேஷ், பலே' என்றெல்லாம் கூறுவார்கள். 'ஓஹோ, இப்படி தான் ரசிக்க வேண்டும் போலிருக்கிறது' என்று நினைத்து கொள்வேன்!

ஒரு முறை சபாவில் தெரியாமல் ஒரு பெரியவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து விட்டேன். பாகவதரின் பாட்டில் லயித்து கொண்டிருந்தவர், "சபாஷ்" என்று பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனது தொடையில் ஒரு அடி விட்டாரே பார்க்கலாம்! ஒரு நிமிடம் பொறி கலங்கிவிட்டது எனக்கு! அடுத்த அடியை வாங்குவதற்குள் நைசாக இங்கிருந்து தப்பி விடவேண்டும் என்று நான் எனது இருக்கையை விட்டு எழுந்திருக்க நினைத்த போது கொலை வெறியுடன் என்னை அவர் பார்த்தார். எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது. பாட்டு நடுவில் நான் எழுந்திருப்பதை அவர் விரும்பவில்லை. பாகவதரோ பாட்டை நிறுத்துவதாக இல்லை. நான் பெரியவரின் கைகளை பார்க்க, அவர் பாடகரின் முகத்தை பார்க்க, பாடகரோ கண்களை இறுக்க மூடிக்கொண்டே ஆலாபனை செய்ய மனிதர் எப்போது கருணை கண்களை திறப்பார், பாட்டை எப்போது முடிப்பார், நாம் எப்போது தப்பிக்கலாம் என்று ஆகி விட்டது!


சரி, 'ரசிகன்' என்று வேஷம் போட்டாகி விட்டது, அதை நடத்துவோம் என்று எனது வலது பக்கம் உட்கார்ந்திருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். 'பாருங்கள், பாகவதர் பல்வலியை எப்படி அழகாக பாடுகிறார்' என்றேன். அவர் என்னை ஒரு ஏளன பார்வை பார்த்து விட்டு, 'அது பல்வலி இல்லை, பல்லவி என்றார்'. போச்சுடா, இன்றைக்கு வசமாக இருவரின் நடுவிலும் மாட்டிக்கொண்டு விட்டேன்!

ஒரே வரியை கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்டு மாதிரி திரும்ப திரும்ப பாகவதர் பாடிக்கொண்டே இருந்தார். என்னப்பா இது, இதை கூட மக்கள் இப்படி ரசிக்கிறார்களே. அடுத்த வரி பாகவதருக்கு தெரியவில்லையா? யாராவது போய் அவரிடம் அடுத்த வரி என்னவென்று கூறுங்களேன்!


பள்ளி கூடத்தில் சுதந்திர தின விழா பேச்சு போட்டியில் மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பித்த போது 'லாலா லஜபதி ராய் நல்லவர். வல்லவர், 'லாலா லஜபதி ராய் நல்லவர். வல்லவர்,' என்று திரும்ப திரும்ப பத்து முறை ஒரே வரியை நான் கூற, (அடுத்த வரி எனக்கு மறந்து விட்டது) அனைவரின் முன்னிலையிலும் எனது தமிழ் வாத்யார் 'நறுக்' என்று எனது தலையில் குட்டியது என்னவோ இப்போது ஞாபகம் வந்து தொலைத்தது!

ஒரு வழியாக பாடி முடித்தார் என்று நினைத்து நான் எழுந்திருக்க நினைத்த போது வயலின் வாசிப்பவர் 'கீ கீ' என்று ஆரம்பித்து விட்டார். போச்சுடா! இது தான் தனி ஆவர்த்தனமா? அது முடிய ஒரு கால் மணி நேரம் ஆகியது. உடனே மிருந்தங்க காரர் 'டகடக' என்று தனது வேலையை ஆரம்பித்தார். பிறகு கடம் வாசிப்பவர் முகத்தை அஷ்ட கோணத்தில் வைத்து கொண்டு அதே போல வாசித்தார்.

அவர் பானையை அடிக்கிறாரா அல்லது தனது தொந்தியை அடிக்கிறாரா என்று தெரியவில்லை! மோர்சிங் வித்வான் தன் பங்குக்கு 'டொய்ங் டொய்ங்' என்று வாயில் எதையோ விட்டு பிடுங்குவது போல வாசிக்க இதை எதையுமே காதில் வாங்காத முனிவர் போல பின்னால் தம்புரா போடுபவர் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று ஒரு கட்டத்தில் பாகவதர் முதல் வரியை மட்டும் பாட கூட்டத்தினர் அனைவரும் கை தட்ட ஆரம்பித்தனர். அப்பாடா, பாட்டு முடிந்து விட்டது என்று நான் ஒரே பாய்ச்சலில் வெளியே ஓடினேன்.


அங்கு பார்த்தால் சபாவின் உள்ளே இருப்பதை விட அதிக கூட்டம். என்னடா இது, இங்கு வேறு ஒரு கச்சேரி நடக்கிறதா என்று எட்டி பார்த்தால் அது சபா காண்ட்டீனாம். அது சரி. பேசாமல் நாம் வந்து இங்கு போண்டா சாப்பிட்டு விட்டு நிஜமான 'காபி'யை குடித்து விட்டு போயிருந்திருக்கலாம்.

இத‌ற்கு பிற‌கு 'ராகவன்' என்று யாராவது பெயர் வைத்திருந்தால் கூட அவர் பக்கத்திலே போவதில்லை.