Sunday, 20 July 2008

சென்னை ஆட்டோக்காரர்கள்

சென்னை நகரில் ஆட்டோவில் ஏறும் முன்பு பேரம் பேசிவிட்டு தான் ஏற வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 'மீட்டர் படி கொடுக்கிறேன்' என்று தெரியாமல் நீங்கள் ஆட்டோவில் ஏறி பயணம் செய்து விட்டால் நியாயமான வாடகையை விட மூன்று மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கும். மீட்டருக்கு 'சூடு' வைத்து திருத்தியிருப்பார்கள். இரண்டாவது காரணம் (இது முக்கியமானது), ஆட்டோக்காரர்களின் வசையை கேட்க விரும்பாமல் பலர் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுவதுதான். சிறப்பான சென்னை தமிழில் அர்ச்சனை செய்து அனுப்பி விடுவார்கள். புதிதாக சென்னைக்கு வருபவர்கள் இந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் மாட்டிக்கொண்டால் அதோகதி தான். இது போன்ற ஆட்டோக்காரர்களுக்கு பயந்து நிறைய பேர், குறிப்பாக பெண்கள், இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் சில சமயம் பேரம் பேசிவிட்டு பயணம் செய்தால் கூட நம்மை ஏமாற்ற நினைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களும் இருக்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. எனது 70 வயது தந்தை நுங்கம்பாக்கத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு ஒரு ஆட்டோவை பிடித்தார். வழக்கம் போல, ஏறும் முன் பேரம் பேசிவிட்டு 60 ரூபாய் என்று ஓட்டுனர் ஒப்புக்கொண்ட பிறகு ஆட்டோவில் ஏறினார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு ஊர்வலம் வந்ததால் வண்டி ஒரு 10 நிமிடம் ஒரே இடத்தில் நிற்க வேண்டியதாக போய்விட்டது. வீட்டுக்கு வந்த பிறகு ஆட்டோக்காரரிடம் 60 ரூபாயை கொடுத்தால் வாங்க மறுத்து விட்டார். 10 நிமிடம் ஒரே இடத்தில் நின்றதால் பெட்ரோல் செலவாகி விட்டது என்றும், அதற்காக 100 ரூபாய் தரவேண்டும் என்றும் ஓட்டுனர் கேட்டார்.
எனது தந்தை பேசியபடி 60 ரூபாய்தான் கொடுப்பேன் என்று கூறி விட்டார். உடனே ஆட்டோக்காரன் வாய்க்கு வந்தபடி கன்னா பின்னாவென்று சென்னை தமிழில் அந்த 'ஆத்தா' வார்த்தையை உபயோகப்படுத்தி கத்த ஆரம்பித்து விட்டான். கொடுத்த அந்த 60 ரூபாயை முகத்தில் வீசி எறிந்து விட்டு அந்த‌ ஏரியாவில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள எல்லோரையும் தனக்கு ஆதரவாக பேச அழைத்துக்கொண்டு வந்து கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டான். எங்களுக்கோ அவன் வசை பாடியது பெரிய அவமானமாகி விட்டது. அவன் உபயோகித்த வார்த்தைகள் அப்படி.

எனது தந்தை அசரவில்லை. வீட்டுக்குள் வந்து உடனே காவல் துறைக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூறினார்.


நான் வெளியே வந்து "இதை பார். உன்னிடம் பேசிய தொகையை கொடுத்து விட்டார். இங்கிருந்து உடனே கிளம்பாவிட்டால் உனக்கு தான் கெட்ட நேரம். காவல் துறைக்கு தகவல் சொல்லியாகிவிட்டது" என்றேன். வந்திருந்த கூட்டத்தில் பலர் உடனே கலைய தொடங்கினர். ஆனாலும் இவனுக்கு ஆதரவாக 2 பேர் அதே இடத்தில் நின்று கொண்டு வசை பாடிக்கொண்டிருந்தனர்.

எனது தந்தை காவல் துறைக்கு போன் செய்து இரண்டே நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். ரோந்து பணியில் இருந்த ஒரு காவல் துறை ஜீப் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டது. அதை பார்த்த உடனேயே ஆதரவுக்கு வந்த இரண்டு ஆட்டோக்காரர்களும் ஓடி விட்டனர். இப்போது தகராறு செய்த ஓட்டுனன் மட்டும் தான் தனியாக இருந்தான்.

ஜீப்பிலிருந்து இறங்கிய காவல் அதிகாரி, நேராக எனது தந்தையிடம் வந்து நடந்த விஷயத்தை கேட்டார். ஆட்டோக்காரனுக்கு ஆத்திரம் பொங்கி எழ ஆரம்பித்தது. "ஏய் பெர்சு" என்று கத்தினான். அவ்வளவுதான். கண் இமைக்கும் நேரத்தில் போலீஸ் அதிகாரி பளார் என்று அவன் கன்னத்தில் ஒரு அடி விட்டாரே பார்க்கணும்!ஆட்டோக்காரனுக்கு பொறி கலங்கிவிட்டது. அந்த ஒரு அடியிலேயே சுருண்டு கீழே விழுந்து விட்டான். ஓஹோ, இது தான் போலீஸ் அடியா? திரைப்படங்களில் போலீஸ்காரர்கள் குற்றவாளிகளை அடிப்பது போல காண்பிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், நேரில் ஒரு போலீஸ் அதிகாரி அடித்த அடியை அப்போது தான் பார்த்தேன்.

அவர் ஒரே முறை தான் அடித்தார், ஆனால் அந்த அடி சரியான நெத்தியடி தான்! இதற்காகவே காவல் துறையினருக்கு பயிற்சி கொடுப்பார்களோ என்னவோ!
கீழே விழுந்த ஆட்டோக்காரனின் சட்டை காலரை கொத்தாக பிடித்து போலீஸ் அதிகாரி "என்னடா பேசற, மரியாதையா கொடுத்த பணத்தை வாங்கிட்டு போ" என்றார். அவன் பதில் எதுவும் பேசாமல் கீழே விட்டெறிந்த ரூபாய் நோட்டுக்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். காவல் அதிகாரி எனது தந்தையிடம் "நீங்க உள்ளே போங்க சார், நான் பாத்துக்கறேன்" என்று கூறினான்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்கு எனது தந்தையை நாங்கள் வெளியே அனுப்பவே இல்லை. ஆத்திரத்தில் அந்த ஆட்டோக்காரன் சாலையில் நடக்கும்போது ஏதாவது செய்து விடுவானோ என்கிற பயம் தான். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

இந்தியாவில் வேறு எந்த நகரத்திலாவது இந்த மாதிரி ஆட்டோக்காரர்கள் உண்டா என்று தெரியவில்லை. பம்பாயில் நான் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். மீட்டருக்கு மேல் சல்லி காசு கூட அங்கு இருக்கும் ஆட்டோக்காரர்கள் வாங்க மாட்டார்கள். பெட்ரோல் விலை உயர்ந்தால் அதற்கு தகுந்தாற்போல ஆட்டோ வாடகையும் ஏறும். ஆனால் மீட்டருக்கு சூடு வைப்பது, பயணிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவது போன்ற பேச்சுக்கே இடமில்லை.

அது போன்று சென்னை ஆட்டோக்காரர்கள் என்று தான் திருந்துவார்களோ தெரியவில்லை.

Wednesday, 16 July 2008

சில நேரங்களில் சில மனிதர்கள்

பம்பாயின் இரயில் பாதைகள் மேற்கு இரயில்வே, மத்திய இரயில்வே, மற்றும் துறைமுக வழி என்று மூன்று விதமாக உள்ளன‌. இந்த மூன்று பாதைகளும் தனித்தனியாக இருந்தாலும் ஏதோ ஒரு இரயில் நிலையத்தில் ஒன்றாக சேரும். மத்திய மற்றும் மேற்கு இரயில்வே பாதைகள் தாதர் இரயில் நிலையத்திலும், துறைமுக மற்றும் மத்திய இரயில்வே பாதைகள் குர்லா இரயில் நிலையத்திலும் சேரும். இவ்விரு இரயில் நிலையங்களிலும் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் எப்போதுமே இருக்கும்.

பம்பாயில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பகுதி நேரமாக எம்.பி.ஏ படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தேன். நான் இருந்த‌ நேருல் என்ற இடம் துறைமுக பாதையில் உள்ளது. மேற்படிப்புக்காக மேற்கு இரயில் பாதையில் உள்ள வில்லே பார்லே என்ற இரயில் நிலையத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டியதாக இருந்தது. எப்படியும் போக ஒன்றரை மணி நேரமும் வர ஒன்றரை மணி நேரமும் ஆகி விடும். அந்த பயணங்களின் போது ஏற்பட்ட அனுபவங்களை மறக்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரும் இரயிலை அதே நேரத்தில் தினமும் பிடிக்கும் பயணிகள் இருந்தனர். அதில் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டி "பஜனை டப்பா" என்றே பெயர் பெற்றிருந்தது. இந்த பெட்டியில் எப்போதும் ஒரு கோஷ்டி பஜனை செய்து கொண்டே வரும். அதுவும் சாதாரண பஜனை அல்ல. ஜால்ரா, டோலக், என்று வாத்தியங்களுடன் பஜனை செய்வார்கள். இவர்கள் பக்திக்காக பஜனை செய்கிறார்களா அல்லது நீண்ட பயணத்தின் களைப்பை போக்குவதற்காக செய்கிறார்களா என்று சரியாக தெரியவில்லை. ஆனால் இரயில் கிளம்பும் நிலையத்திலிருந்து கடைசி நிறுத்தம் வரை பஜனை செய்து கொண்டே வருவார்கள். பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். இரயில் நிலையத்துக்குள் வண்டி வரும்போதே "ஜல் ஜல்" என்று சத்தம் அதிர வைக்கும்.

அந்த கோஷ்டியில் சில தமிழர்களும் இருந்தனர். இதில் இரண்டு பேர் "பாலசுப்ரமணியன்" என்று ஒரே பெயருடன் இருந்தனர். இவர்கள் இருவரையும் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதனால் ஒருவன் பெயர் "பஜனை பாலு" என்றும் மற்றொருவனுடைய பெயர் "அகண்ட பஜனை பாலு" (!!) என்றும் காலம் காலமாக அந்த பெட்டியில் பயணம் செய்து வரும் முன்னோர்கள் சூட்டி விட்டிருந்தனர்!

இவர்களை போன்றே சீட்டு கச்சேரி ஜாம்பவான்களும் பயணம் செய்வது வழக்கம். இரயில் கிளம்பியவுடனேயே சீட்டுக்கட்டை விரிக்க ஆரம்பித்து விடுவார்கள். கடைசி நிலையம் வரை ஆடிக்கொண்டே வருவார்கள். அப்படி ஒரு வெறி. முதலில் சிறிது நாட்கள் அந்த பெட்டியில் ஒரு பார்வையாளனாக நானும் பயணம் செய்தேன். பிறகு ஏனோ தெரியவில்லை, வேறு ஒரு பெட்டியில் பயணம் செய்ய ஆரம்பித்தேன் (ஒரு புதிய அனுபவம் கிடைக்குமே என்று கூட இருக்கலாம்).

ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் ஏறும் விதவிதமான மக்களை பார்ப்பதே ஒரு அலாதியான அனுபவம் தான். கூட்டம் குறைவாக உள்ள நேரத்தில் இரயில் வண்டி ஒரு நடமாடும் விற்பனை நிலையமாகவே மாறிவிடும். கண் பார்வை தெரியாத ஒருவன் கையில் ஊதுபத்தி கட்டுகளை எடுத்துக்கொண்டு வருவான். நல்ல மணமாக இருக்கும். பத்தே நிமிடங்களில் விற்று தீர்த்து விடுவான். அவன் இரயிலிலிருந்து இறங்குவதற்கும் ஏறுவதற்கும் யாருடைய உதவியையும் எதிர் பார்க்க மாட்டான். கையில் ஒரு வெள்ளை கம்புடன் தானே ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி இறங்கி ஊதுபத்திகளை விற்பான்.

இதில் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும் நண்பர்களே! அவன் குருடன் என்று பரிதாபத்தில் வாங்குபவர்களை விட ஒரு தரமான பொருளை அவனிடமிருந்து வாங்குபவர்கள் தான் அதிகமாக இருந்தனர். அவனுக்கு எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை இருக்கும் பாருங்கள். இரண்டு கண்கள், கை கால்கள் இருந்தும் கூட பட்டப்படிப்பை முடித்த கையோடு வேலை வாய்ப்பு நிலையத்தில் பேரை பதிவு செய்துவிட்டு "வேலை கிடைக்கவில்லை" என்று கூக்குரலிடும் நம் இளைஞர்கள் குருடர்களா, அல்லது யாருடைய உதவியும் இல்லாமல் தன்னந்தனியாக, அதுவும் இரண்டு கண்களும் தெரியாத போதும் கூட, பெட்டி பெட்டியாக ஏறி விற்கும் இந்த மனிதன் குருடனா என்று தெரியவில்லை.

ஊதுபத்தி விற்பவனை போலவே பலரும் பெட்டியில் ஏறி இறங்குவார்கள். நான் வழக்கமாக செல்லும் பெட்டியின் அடுத்த பெட்டி பெண்களுக்கான பெட்டி. இரண்டு பெட்டிகளுக்கு நடுவில் ஒரு வலை போட்டு தடுத்திருப்பார்கள் (பாதுகாப்பு காரணங்களுக்காக முழுவதும் மறைத்துவிடாமல் இந்த ஏற்பாடு என்று நினைக்கிறேன்). அந்த பெட்டியிலிருந்து வரும் சத்தம் வேறு விதமாக இருக்கும். வளையல்கள், தோடுகள், கொண்டை ஊசிகள், பொட்டுகள், safety pin என்று பெண்கள் சமாசாரங்கள் எல்லாம் இந்த பெட்டியில் விற்பனை செய்வார்கள். இவர்கள் மற்ற பெட்டிகளில் ஏறுவதில்லை. தங்களுடைய பொருட்களை யார் யார் வாங்குவார்கள், எங்கு செல்லுபடியாகும் என்று எவ்வளவு focussed-டாக இருக்கிறார்கள் பாருங்கள். படிப்பறிவில்லாத இந்த பாமர மக்களிடம் உள்ள அந்த பொது அறிவு எவ்வளவு பெரிய எம்.பி.ஏ. படிப்பிலும் கிடையாது என்றே சொல்லலாம்!

நேருல் இரயில் நிலையத்தில் நான் ஏறும் அதே பெட்டியில் கூட்டமாக ஒரு நான்கைந்து பேர் ஏறுவார்கள். கிழிந்த உடைகளுடன் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அனைவரின் கைகளிலும் ஏதாவது ஒரு வாத்தியம் இருக்கும் (தபலா, ஜால்ரா, ஹார்மோனியம், இத்யாதி). இவர்கள் இருக்கைகளில் உட்கார மாட்டார்கள். இரயில் கிளம்பியவுடன் தரையில் உட்கார்ந்து ஒவ்வொருவரும் ஒரு வாத்தியத்தை வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். பிரதான பாடகனாக ஒருவனும் அவனுடைய பெண்ணும் பாடிக்கொண்டே வருவார்கள். கேட்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும். சுருதி தப்பாமல் மிக மென்மையான ஹிந்தி பாடல்களை பாடிக்கொண்டே வருவார்கள். சமயத்தில் ஒரிஜினல் பாட்டில் உள்ள குரலை விட இவர்களின் குரல் நன்றாக இருக்கும்! ஒவ்வொரு பாட்டு முடிந்த பின்பும் அந்த சிறிய பெண் ஒரு தகர டப்பாவை எடுத்துக்கொண்டு பயணிகளிடம் பிச்சை கேட்டுக்கொண்டே செல்வாள். இவர்கள் பிச்சைக்காரர்களா அல்லது ஏழை கலைஞர்களா, எப்படி அழைப்பது?

இவர்களுடைய பாட்டை கேட்பதற்காகவே தினமும் அந்த குறிப்பிட்ட இரயிலில் பயணம் செய்வதை விரும்புவேன். நேரம் போவதே தெரியாது. இவர்களுடைய பாடல்களை கேட்டவுடன் மனதே லேசாகி விடும்.

ஒரு நாள் திடீரென்று காக்கி சட்டை போட்ட 5 பேர் அந்த பெட்டியில் ஏறி இந்த பாடகர்கள் கூட்டத்தை கொத்தாக அழைத்துக்கொண்டு சென்றார்கள். 'பறக்கும் படை' என்று கூறினார்கள். அதற்கு பிறகு அந்த வண்டியில் அவர்களை நான் பார்க்கவே இல்லை. ஏனோ தெரியவில்லை, முன்பின் தெரியாத அந்த பிச்சைக்கார கலைஞர்களுக்காக மனது அழுதது. இதுவும் ஒரு அனுபவமோ?

Sunday, 6 July 2008

குரங்குடன் கும்மாளம்

சில‌ வருடங்களுக்கு முன் திருப்பதி கோவிலில் எங்கு பார்த்தாலும் குரங்குகளாக இருக்கும். நாம் சிறிது அசந்து விட்டால் உடனேயே எங்கிருந்தோ ஒரு கெட்டிக்கார குரங்கு நம்முடைய கையில் உள்ள பையை அபகரித்துக்கொண்டு ஓடி விடும். அப்பொழுதெல்லாம் திருப்ப‌தியில் இந்த அளவுக்கு கூட்டம் கிடையாது. குரங்கு நம்மிடமிருந்து பையை பரித்துக்கொண்டு கோவில் கோபுரத்தின் மேல் போய் உட்கார்ந்து கொண்டுவிடும். அந்த பையினுள் தின்பண்டம் ஏதாவது இருந்தால் அதை அப்படியே சாப்பிட்டு விட்டு பையை தூக்கி எறிந்து விடும். குரங்கு கூட்டத்தை பார்க்கவே மிக வேடிக்கையாக இருக்கும்.

ஆனாலும் இவற்றின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பகுதியில் இருந்த எல்லா குரங்குகளையும் கோவில் அதிகாரிகள் பிடித்து வேறு எங்கோ காட்டுக்குள் விடுவித்து விட்டனர். பல சிறிய கோவில்களில் இன்று கூட குரங்குகளை பார்க்கலாம்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். குஜராத்தில் அம்பாஜி என்ற ஊர் ராஜஸ்தான் எல்லையில் உள்ளது. மலை மேல் உள்ள கோவிலை சென்றடைய 999 படிகளை ஏறி செல்ல வேண்டும். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள தேவியை தரிசனம் செய்ய வெகு தூரத்திலிருந்து மக்கள் வருவது உண்டு. குறிப்பாக நவராத்திரி நேரத்தில் நிறைய கூட்டம் இருக்கும்.இந்த 999 படிகளும் மிக செங்குத்தான படிகள். மலையை குடைந்து செய்யப்பட்ட கல் படிகள். ஏறுவதற்கே மிக சிரமாக இருக்கும். வயதானவர்களை 'டோலி' என்ற பல்லக்கில் வைத்து தூக்கி செல்வார்கள்.

இந்த கோவிலுக்கு நானும் எனது நண்பனும் ஒரு முறை சென்றோம். மலை ஏறுவதற்கு முன்பே கீழே பல கடைகளில் பெரிய கம்புகளை விற்றுக்கொண்டிருந்தனர். எதற்காக இந்த கம்புகள் என்று கேட்டபொழுது, 'குரங்குகளை விரட்ட' என்று சொன்னார்கள். 'திருப்பதியில் நாம் பார்க்காத குரங்குகளா' என்று அலட்சியமாக நாங்கள் அந்த கம்புகளை வாங்காமல் படியில் ஏற ஆரம்பித்தோம்.மேலே ஏற ஏற மூச்சு வாங்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு 300 படிகளை ஏறி இருப்போம். அருமையான குளிர் காற்று வீச ஆரம்பித்தது. கீழே சாலையில் செல்லும் ஒட்டக வண்டிகள் எல்லாம் எறும்பு போல மிக சிறிதாக தெரிந்தன. தொலைவில் மாலை சூரியன் ஒரு மிக பெரிய சிகப்பு பழமாக வானத்தில் மெல்ல அஸ்தமித்து கொண்டிருந்தது. இந்த மலை ஏறும் அனுபவம் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. இங்கு கைபேசி வேலை செய்யாது. கணணி கிடையாது. நெடுந்தொடர்களை பார்க்க தொலைக்காட்சி கிடையாது. 'தான்' என்ற மனித அகந்தையை அழிக்க இதை விட அருமையான அனுபவம் வேறு ஏது?இயற்கையை ரசித்துக்கொண்டே ஒரு வளைவில் திரும்பியவுடன் எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.கிட்டத்தட்ட ஒரு ஆளின் உயரத்துக்கு ஒரு கருங்குரங்கு எங்கிருந்தோ 'தொப்' என்று எங்கள் முன்னால் வந்து விழுந்தது. அதன் உட‌ல் முழுவதும் புசுபுசு வென்று முடி. ஒரு நிமிடம் எங்களுக்கு கையும் காலும் ஓடவில்லை. இவ்வளவு பெரிய குரங்கை நாங்கள் பார்த்ததே இல்லை. அடக்கடவுளே! இதற்காக தான் கீழே கம்புகளை விற்றுக்கொண்டிருந்தார்களா!ஒரே நொடியில் திபுதிபு என்று ஒரு குரங்கு படையே எங்களை சுற்றி வளைத்தது. ஒவ்வொறு குரங்கும் கிட்டத்தட்ட ஐந்தரை அடி இருக்கும். கன்னங்கரேல் என்ற நிறம். முதலில் வந்த குரங்கு தான் தலைவன் போல. மிக கோரமாக பற்களை காண்பித்தது. எங்களுக்கு எல்லா நாடிகளும் அடங்கி விட்டன.


நல்ல வேளையாக எங்கள் பைகளில் தின்பண்டம் எதுவும் இல்லை. நாங்கள் தப்பி ஓட நினைத்தாலும் எங்கு செல்வது? ஒரு புறம் செங்குத்தான மலை. மற்றொரு புறம் அதள பாதாளம். அப்படியே வந்த வழியே கீழே ஓடினாலும் குரங்குகள் ஓங்கி ஒரு அடி அடித்தால் நாங்கள் கைலாசம் போவது உறுதி!


மிகவும் பதற்றமான அந்த தருணத்தில் எங்களுக்கு பின்னால் வந்த ஒரு குஜராத்தி பக்தர் நிலைமையை பார்த்ததும் உடனே சுதாரித்து கொண்டார். "குரங்கின் கண்களை நேருக்கு நேர் பார்க்காதீர்கள். ஓடாமல், சாதாரணமாக ஆனால் வேகமா நடந்து மேலே செல்லுங்கள்" என்று கத்தினார். அந்த நேரத்தில் அவர் கூறியதை அப்படியே வேதவாக்காக எடுத்து கொண்டு விறுவிறு என்று நானும் நண்பனும் மேலே நடக்க ஆரம்பித்தோம். குரங்கு படை எங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது.


கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் உயிரை கையில் பிடித்துக்கொண்டே மலையை ஏறினோம். பயத்தில் உடல் முழுவதும் வியர்த்து விட்டது. 'கடவுளே! எங்களை காப்பாற்று' என்று மனதில் வேண்டிக்கொண்டே மலை உச்சி வரை வந்து விட்டோம். திரும்பி பார்த்தால் எங்களை பின் தொடர்ந்த குரங்கு கூட்டத்தை காணவில்லை. அப்பாடா! அப்போது தான் உயிர் வந்தது!


மாலையில் ந‌ட‌ந்த‌ தீபாராத‌னையை பார்த்து விட்டு ம‌ற்ற‌ ப‌க்த‌ர்க‌ளுட‌ன் சேர்ந்தே நாங்க‌ளும் கூட்ட‌த்துட‌ன் கீழே இற‌ங்கி வ‌ந்தோம். எங்க‌ளுக்கு நேர்ந்த‌ அனுப‌வ‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொண்டே இற‌ங்கினோம். அப்போது தான் த‌னியாக‌, அதுவும் கையில் க‌ம்பு இல்லாம‌ல் நாங்க‌ள் வ‌ந்த‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ ம‌ட‌த்த‌ன‌ம் என்று எங்க‌ளுக்கு புரிந்த‌து. இந்த கருங்குர‌ங்குக‌ள் காட்டிலிருந்து வ‌ருப‌வையாம். இவை க‌டித்தால் அதோக‌தி தானாம். அவ‌ற்றின் க‌ண்க‌ளை நேருக்கு நேர் பார்த்தால் நாம் அத‌னை தாக்க‌ போவ‌தாக‌ நினைத்துக்கொண்டு ந‌ம்மை தாக்கி விடுமாம். நல்ல‌ வேளை, நாங்க‌ள் பிழைத்தோம்!இந்த திகிலான‌ அனுப‌வ‌த்துக்கு பிற‌கு சாலையில் எங்காவ‌து குர‌ங்காட்டி "ஆடுடா ராமா, ஆடு" என்று குட்டி குரங்குடன் வித்தை காட்டினால் கூட‌ சிறிது ந‌க‌ர்ந்தே சென்றுவிடுகிறேன். எங்காவ‌து பிடுங்கி வைத்தால் யார் அவ‌ஸ்தை ப‌டுவ‌து :D

Wednesday, 2 July 2008

தங்கமே, தமிழுக்கில்லை தட்டுப்பாடு!

தமிழ் வருட பிறப்பு வாழ்த்தை தங்களது தாய் மொழியில் கூறாமல் ஆங்கிலத்தில் கூறி ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொள்ளும் ஒரே இனம் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதென்னமோ தெரியவில்லை, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு விலகி 60 வருடங்கள் ஆகிவிட்டாலும் ஆங்கில மோகம் மட்டும் நம்மை விட்டு விலகவில்லை. தமிழ் திரைப்படங்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும் , தமிழ் பத்திரிகைகள் ஆகட்டும், ஆங்கில ஆதிக்கம் நம்மை எந்த அளவுக்கு பாடாய் படுத்தி எடுக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இரண்டு மலையாளிகளோ இரண்டு தெலுங்கு பேசுபவர்களோ சந்தித்து கொண்டால் அவர்கள் பேசுவது தத்தம் தாய் மொழியிலாக தான் இருக்கும். ஆனால் இரண்டு "படித்த" தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் "ஹலோ, ஐ ஆம் ..." என்று ஆங்கிலத்திலேயே பிளந்து கட்டுவார்கள். தமிழில் பேசிக்கொண்டால் கெளரவ குறைச்சலாம். மூன்றாவது நபராக தமிழ் தெரியாதவர் ஒருவர் அருகில் இருந்தால் இதை ஏற்றுக்கொள்ளலாம். அதற்கு இங்கிதம் என்று பெயர். ஆனால் இருப்பதோ இரண்டே பேர், இருவருக்குமே தமிழ் தெரியும் என்கிற போது ஏன் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.


'ஒரு வேளை தமிழில் பேசினால் தன்னை படிக்காத முட்டாள் என்று மற்றவர்கள் நினைக்க கூடும்' என்று ஒரு தாழ்வு மனப்பான்மையா? அல்லது ஆங்கிலத்தில் பேசினால் தான் நான்கு தம்மை மதிப்பார்கள் என்கிற நினைப்பா?


இதற்காக ஆங்கில எதிர்ப்பு இருக்க வேண்டும் என்று கூறவில்லை. 'ஐஸ்க்ரீம், பஸ்' போன்ற மக்களிடம் சாதாரணமாக வழக்கில் இருக்கும் வார்த்தைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று அபத்தமாக வாதம் செய்ய வரவில்லை. ஆனால், தமிழில் எளிய சொற்கள் இருக்கும்போது, என்னவோ 'பிறந்தது லண்டன், வளர்ந்தது ஆஸ்திரேலியா' போல, சிலர் வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலத்தையே உபயோகித்தால் எரிச்சல் தான் வருகிறது. இன்று வானொலியில் கேட்கின்ற பல பாடல்களுக்கு அர்த்தமே புரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் 'இது த‌மிழ் பாட‌ல்தான்' என்று ஒருவ‌ர் வ‌ந்து விளக்க வேண்டும் போல் உள்ளது.

"நாயில் நதியாக" என்று சாதனா சர்கம் பாடினால் "ஆஹா ஓஹோ" என்று கேட்கிறோம். கடைசியில் அது என்ன 'நாயில் நதி', 'நதியில் நாய்' என்று அல்லவா இருக்க வேண்டும் என்று நண்பரிடம் கேட்டால் "நைல் நதியாக" என்பதை அவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் என்று கூறினார்! இதே போல தான் உதித் நாராயண் என்ற பாடகர் எத்தனை முறை தமிழை கொலை செய்தாலும் தாங்கி கொள்ள வேண்டியிருக்கிறது. கேட்டால், "மக்கள் விரும்புகிறார்கள்" என்று இசை அமைப்பாளர்கள் கூறுகிறார்கள். யாரோ போய் மக்களிடம் ஓட்டெடுப்பு எடுத்த மாதிரி! தமிழனுக்கு உண்மையிலேயே பெரிய மனது தான், இது போன்ற பாடல்களை கேட்டு சகித்து கொள்வதற்கு!

இவர்களையாவது, தாய் மொழி தமிழ் இல்லை என்பதால் 'போனால் போகிறது' என்று மன்னித்து விடலாம். ஆனால் தமிழையே தாய் மொழியாக கொண்டு தமிழ் நாட்டில் வாழ்பவர்களை பற்றி பார்ப்போம். "தமிழ்" என்கிற வார்த்தையை சரியாக எத்தனை பேரால் இன்று கூற முடிகிறது? "தமில்", "ஏல் ரூவா" என்றெல்லாம் கேட்டால் நாராசமாக இல்லை?


தமிழ் வலைத்தளங்களையே எடுத்துக்கொள்ளோம். பாதிக்கு மேல் தரம் தாழ்ந்து இருக்கின்றன. 'ஜனரஞ்சகம்' என்ற பெயரில் தமிழை கொலை செய்து கொச்சை படுத்தி இடுவது சரிதானா என்று வலைப்பதிவர்கள் யோசனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த அழகில் தமிழ் செம்மொழி என்று வேறு நம்மை நாமே முதுகில் தட்டிக்கொள்கிறோம்!


"தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு" என்ற அருமையான பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயர் "டூயட்"! "ஜூனியர் விகடன்", "குமுதம் பக்தி ஸ்பெஷல்" - இவை பத்திரிகைகளின் பெயர்கள். ஆங்கில அடிமைத்தனம் எவ்வளவு தூரம் நமது சமுதாயத்துக்குள் நுழைந்து விட்டது பார்த்தீர்களா?

ஒரு வெள்ளைக்காரரிடம் ஆங்கிலத்தில் பேசும் போது தமிழ் கலந்து பேசினால் எவ்வளவு கேவலமாக இருக்கும்? அது போல தானே ஒரு தமிழர் மற்றொறு தமிழரிடம் தேவை இல்லாமல் ஆங்கிலத்தில் பேசும்போது தன்னை தானே கேவலப்படுத்தி கொள்கிறார்?

போகிற போக்கை பார்த்தால் நல்ல தமிழை கேட்க இலங்கைக்கோ மலேசியாவுக்கோ செல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நண்பர்களே?