Monday 11 August 2014

கண்ணன் வெண்பா

கண்மூடி      குழலூதும்        கலிவரதா         மாந்தர்க்கிம்
மண்ணதனில்  உனையன்றி கதியேது?     தேரோட்டித்
திண்டோளா நின்பாதம் பற்றுவோ   ரகந்தனிலே
கொண்டாட்டம் தானே தினம்!


விரலொன்றில் மலைதூக்கி புவிகாத்த பூபதியே
வரமொன்றை வழங்கவா   வரதா!  -   கூட்டை 
மற‌ந்தான்மா உனைத்தேடி பரிதவிக்கும் நேரத்தில்

பரந்தாமா எனைக் காக்கவா !


கோவிலுள் குடிகொண்ட கருவழகன் கண்ணனைத்
தாவியே வளைத்திடத் தோன்றுதே! தவிக்கும்
ஆவியை அணைத்திடுவாய் அச்சுதா   னந்தனே
பாவியெனை பொருத் தருள்வாய்!

கரந்தூக்கி உனைத்தொழுதேன் கார்வண்ணக் கண்ணாமதி
மறந்தேநான் பிழைசெய்தின் பொறு - என்றும்
புறந்தள்ளி பாவியெனப் பகராமல் பரம்பொருளே

நரனென்னை காத்திடுவாய் நீ!


பற்றிட்டேன் உன்பாதம் பூவுலகில் எனக்கிங்கு
மற்றேதும் வேண்டாமே மாதவா - தாமதம்
சற்றேயும் செய்யாமல் எம்மின்னல் அகற்றிடவே
கொற்றாநீ வந்துடனே காப்பாய்!


சீர்நல்கும் திருவுள்ளத் திருத்தாயும்  மாலுந்தன்
மார்பதனில் அருள்கின்றாள் அழகாக  - மாந்தர்
பாரினிலே உன்பாதம் பற்றிற்றால் போதுமினி
ஓர்பிறவி வேண்டாமே எமக்கு.

கண்ணனவன் திருப்பாதம் பற்றிற்றால் போதுமுன‌
தெண்ணமும் ஈடேறும் மனமே - முன்செய்
பண்டைவினை தீர்த்திடுவான் பரமபத பரந்தாமன்  
விண்டைநீ விடா திரு!

நாராயணா வென்றத் திருநாமம் நாமுரைத்தால்
தீராத நோயாவும் தீர்ப்பான் - மாந்தர்
கோராமல் தானுணர்ந்து வரந்தன்னை வழங்கிடுவான்
மாறாது அவன்பாதம் பற்று!