Saturday, 15 May 2010

அதனினும் கொடிது?

சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய கோயில்களுக்கு விஜயம் செய்ய நேர்ந்தது. கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள சுசீந்திரம் என்ற அருமையான கோயிலுக்கு சென்றேன். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்து இங்கே "தாணுமால்ய" சுவாமியாக அருள் பாலிக்கிறார்.

கோயிலே ஒருவிதமான கும்மிருட்டில் இருக்கிறது. வேணுகோபால சுவாமி சன்னதியில் விளக்கு கூட யாரும் ஏற்றுவதில்லை. நான் எதிர்பார்த்ததை விட மிக மிக மோசமான நிலைமையில் இருந்தது. கோவிலில் அர்ச்சகர்கள் அனைவருமே கேரளாவை சேர்ந்த நம்பூதிரிகள் தான். கன்யாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் மலபாரை சேர்ந்ததாக இருந்தது அல்லவா? தமிழ்நாடு என்ற மாநிலம் தோன்றியபோது இந்த மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இப்போது கூட கேரள மாநில தேவஸ்தானம்தான் இதை "பராமரிக்கிறது". ஒரு நம்பூதிரியை கூப்பிட்டு "இந்த கோவிலை சுற்றி காண்பியுங்களேன்" என்று கேட்டேன். அவரும் ஒவ்வொரு சன்னதியாக என்னை அழைத்து சென்றார். பல இடங்களில் கும்மிருட்டு. மிக அசுத்தமாக இருந்தது. விளக்கு கூட ஏற்றாமல் இவ்வளவு பெரிய கோயிலா?

அங்கு இருந்த சிற்பங்கள் மகா அற்புதம். குதிரை போன்ற முகத்தையுடைய யாழியின் சிலை ஒன்றை நம்பூதிரி காண்பித்தார். கீழே கிடந்த ஒரு வைக்கோலை எடுத்து அந்த யாழியின் காதுக்குள் விட்டார். என்ன ஆச்சரியம்! வைக்கோல் மற்ற காதிலிருந்து வெளியே வந்தது. "கெட்டவைகளை ஒரு காதில் வாங்கி மறு காதில் விட வேண்டும் என்ற தாத்பரியம் தான் இது" என்று நம்பூதிரி கூறினார். அந்த கல் சிலைக்குள் அவ்வளவு மெல்லிய ஓட்டையை வடிவமைத்த சிற்பியின் கலை நயத்தை கண்டு வியந்தேன்.  பேசிக்கொண்டே பிரகாரத்தை சுற்றி வந்தபோது மேலே யதேச்சையாக பார்த்தேன். ஒலிம்பிக் வளைவுகள் போல ஐந்து வளையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தன. அனைத்து வளையங்களும் கற்களால் செய்யப்பட்டவை. ஒரு வளையத்தில் மற்ற வளையத்தை எப்படி விட்டார்கள்? கோயிலை விட்டு வெளியே வரும்போது மனது மிகவும் கனத்தது.

கேரள  பிடியில் இருப்பதால் தான் இந்த கோயிலுக்கு இந்த நிலைமை என்று நினைத்தேன். அது எவ்வளவு தவறு என்று சிதம்பரத்துக்கு சென்ற பின் தெரிந்தது.

இங்கு நான் கண்ட காட்சிகளோ மனதுக்கு மிகவும் அதிர்ச்சியை தரக்கூடியதாக இருந்தது. கோயில் பிராகாரத்தில் எங்கு பார்த்தாலும் காதலர்கள் ஜோடிகளாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். பார்க்கவே மிக அருவருப்பாக இருந்தது. அந்த நகரத்து மக்கள் கோயிலின் பிரதான வாசலில் இருந்து கோயிலின் பின் பக்கம் உள்ள தெருவுக்கு கோவிலின் பிராகாரத்தையே குறுக்கு வழியாக உபயோகித்து கொண்டிருக்கிறார்கள். ஆட்டோ முதல் எருமை மாடு வரை சர்வ சாதாரணமாக கோவிலுக்குள் வந்து போகின்றனர். நாம் இருப்பது கோவிலா அல்லது கடை வீதியா என்ற சந்தேகம் வந்து விட்டது. கோவிலுக்குள் ஒவ்வொறு சன்னிதானத்திலும் பணம் கொடுத்தால் உங்களை அர்ச்சகர் நன்றாக கவனிப்பார். இலவசமாக இறைவனை பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு இரண்டாம்தர மனிதர் தான். இத்தனை நாட்களாக கடவுளை பார்க்க பக்தி மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்திருந்தேன். பணமும் வேண்டும் என்று இந்த கோவிலில் தான் கற்று கொண்டேன். ஒவ்வொறு சன்னிதானத்திலும் கையில் இரசீது புத்தகத்துடன் துரத்தும் அர்ச்சகர்களை பார்த்து மனம் வெதும்பியது. அம்பாள் சன்னிதானம் உள்ள பிராகாரத்தில் விளக்கே சுத்தமாக கிடையாது. இங்கு கொலை விழுந்தால் கூட உதவிக்கு யாரும் வர மாட்டார்கள். இறைவா, உனது சன்னிதானத்தில் இப்படி ஒரு நிலைமையா?

நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றால் கோபுரத்திலிருந்து வெளவால்கள் பறக்கின்றன. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றாலோ பேருந்திலிருந்து நாம் கீழே இறங்கியவுடனேயே புரோக்கர்கள் நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள். இந்த புரோக்கர்களுக்கு பணம் கொடுத்தால் முருகனுக்கு வெகு அருகில் தரிசனம் கிடைக்கும். இல்லையென்றால் பாதி நேரம் முருகனை அர்ச்சகர்கள் மறைத்துக்கொண்டே இருப்பார்கள்.

திருப்பதி கோவிலில் இதை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும்படி நடக்கிறது. எழுமலையானை தரிசிக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் கூட்டம். ஒரு பத்து வினாடிகள் நீங்கள் பெருமாளை பார்த்து விட்டால் கொடுத்து வைத்தவர்கள் தான். ஆடு மாடுகளை தள்ளுவது போல அங்கே இருப்பவர்கள் தள்ளுவார்கள். தோமாலை சேவை 2020ம் வருடம் வரை பணம் கட்டப்பட்டுள்ளதாம். "சீக்கிர சேவை" என்று 300 ரூபாய் வாங்குகிறார்கள். பார்த்தால் அதிலும் கிலோமீட்டர் கணக்கில் கூட்டம்.

இதெல்லாம் நமக்கு ஒத்து வராது, நாம் உள்ளூரில் மாம்பலத்தில் உள்ள சத்தியநாராயணர் கோவிலுக்கு போய் பெருமாளை பார்த்து கொள்ளலாம் என்று சென்றால், நரசிம்மரின் மேல் கரப்பான் பூச்சிகள் ஓடுகின்றன. ஆண்டவா, இது தான் கலி என்பதா? கோவிலை ப‌ராம‌ரித்து கொஞ்ச‌ம் சுத்த‌மாக‌ வைத்து கொள்ள‌க்கூடாதா?

சில வருடங்களுக்கு முன்பு எனது தந்தை சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருதய அருவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது 19 வயதே ஆன ஒருவன் மருத்துவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். அவனது இதயத்தில் ஒரு "வால்வு" வேலை செய்யவில்லையாம். அரசாங்க மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டுமாம். அந்த பையனின் தந்தை "ஐயா, நான் ஒரு சாதாரண விவசாயி. என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. எப்படியாவது எனது பையனை காப்பாற்றுங்கள்" என்று மருத்துவரின் கால்களில் விழாத குறையாக கெஞ்சிக்கொண்டிருந்தார். எனக்கு என்னவோ செய்தது. டாக்டர் மிகவும் பரிவுடன் "எனது ஊதியத்தை நீங்கள் தரவேண்டாம். நான் இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்து தருகிறேன். ஆனால் இந்த ஆஸ்பத்திரிக்கு தர வேண்டியது இருக்கிறதே ஐயா, அதற்கு நான் என்ன செய்வது?" என்றார். அந்த பையனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
2007ம் வருடம் ஜூலை மாதம் ஒரு நாள் மதிய உணவுக்கு பிறகு எனது தந்தை என்னை  கூப்பிட்டு "எழைகளுக்கு நிறைய செய்ய வேண்டும். குறிப்பாக மருத்துவ வசதிக்காகவும் படிப்பு வசதிக்காகவும் திண்டாடும் ஏழைகளுக்கு, அவர்கள் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் பரவாயில்லை, முடிந்த அளவு செய்ய வேண்டும்" என்றார். திடீரென்று ஏன் அப்படி கூறினார் என்று எனக்கு புரியவில்லை. சரியாக ஒரு மாதத்துக்கு பிறகு அவர் காலமானார்.

இப்போது யோசித்து பார்த்தால் எனது தந்தை கூறிய வார்த்தைகளின் உள் அர்த்தம் புரிகிறது. நாம் எத்தனை கோயில்களுக்கு சென்றாலும் கடைசியில் இறைவனை காண்பது ஏழைகளின் சிரிப்பில் தானே? ஒரு கோயிலுக்கு சென்று இறைவனை கும்பிடும் திருப்தி இதிலே கிடைக்கிறதே. அதற்காக கோயிலுக்கு போக கூடாது என்று கூறவில்லை. நாம் பிறக்கும் முன்பும் இறந்த பிறகும் பார்த்த பார்க்க போகின்ற‌ கடவுளை இது போன்ற ஏழைகளுக்கு உதவும்போது பார்க்க முடியும் அல்லவா? "கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்று ஒளவையார் சும்மாவா பாடியுள்ளார்?