Thursday, 17 November 2011

வீடு

இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. 1976ம் வருடம். ஆயுட்கால கனவாகிய சொந்த நிலம் என்ற கனவு எனது தந்தைக்கு நனவாகிய வருடம். மெட்ராஸ் நகரத்தின் மைய பகுதியில் தனது நண்பரிடமிருந்து வாங்கிய அந்த நிலத்தில் உடனடியாக கடன் வாங்கி வீடு கட்ட துவங்கினார். பூமி பூஜை செய்த தினத்தில் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்ட போது எனது தந்தைக்கு மிகவும் பெருமையாக இருந்தது. கூடவே இந்த வீட்டை நல்லபடியாக கட்டி குடியேற வேண்டும் என்ற கவலையும் மனதுக்குள் இருந்தது.


கல்யாணம் பண்ணி பார், வீட்டை கட்டி பார் என்று சும்மாவா சொன்னார்கள்? உண்மையிலேயே வீட்டை கட்டி முடிப்பதற்குள் ரொம்பவே கஷ்டப்பட்டு போய் விட்டார் எனது தந்தை. குறிப்பாக, வேலையை ஒழுங்காக செய்யாமல் ஏமாற்றிய ஒப்பந்தக்காரர், கடன் சுமை என்று பலவிதமான இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. அதை எல்லாம் மீண்டு வந்து கடைசியில் புதுமனை புகுவிழாவும் நடந்த போது அது ஒரு பெரிய சாகசமாகவே தெரிந்தது. ஒரு சராசரி மனிதனின் மிக சாதாரணமான ஆசையான‌ சொந்த வீடு என்பதை கட்டி முடிப்பதற்குள் என்னென்ன இன்னல்களை எல்லாம்  சந்திக்க வேண்டியிருக்கிறது?


எங்கள் வீட்டுக்கு பின் பக்கம் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. மெட்ராஸ் மாநகராட்சியிடம் பணம் கட்டி இரண்டு மாட்டு வண்டி நிறைய எருவை வாங்கி தோட்டத்தில் பரப்பினோம். சுவரோரமாக சில தென்னங்கன்றுகளை எனது தந்தை நட்டார். நடுவில் புடலங்காய், அவரைக்காய் என்று சில காய்கறி விரைகளையும் விதைத்தோம்.தோட்ட நடுவில் அழகாக ஒரு துளசி மாடமும் ஓரத்தில் ஒரு கிணறும் இருந்தன. கிணற்று பக்கத்தில் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. தினமும் செடிகளுக்கு கிணற்றிலிருந்து தண்ணீரை இரைத்து செடிகளுக்கு எனது தந்தை ஊற்றுவார். தென்னங்கன்றுகள் மரங்களாக வளர்ந்தன. எங்களது கண் முன் வளர்ந்த அந்த மரங்களை நாங்கள் எதோ பெரிதாக சாதித்து விட்டதை போல பெருமையுடன் பார்ப்போம்.


எனது தந்தை வங்கியில் வேலை செய்து கொண்டிருந்ததால் அடிக்கடி ஊர் மாற்றம் செய்து விடுவார்கள். 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் ஒரே பதவியில் இருக்க கூடாது என்று எதோ ஒரு சட்டமாம். திடீரென்று ஒரு நாள் எனது தந்தைக்கு பதவி உயர்வு கொடுத்து ஹைதராபாதுக்கு மாற்றி விட்டார்கள். நாங்கள் எல்லோரும் மிகவும் சோகமாகி விட்டோம். எனது தாயாருக்கு நன்றாக அனுபவித்து கொண்டிருந்த வீட்டை விட்டு செல்ல வேண்டுமே என்ற கவலை. பள்ளியில் நண்பர்களை எல்லாம் விட்டு விட்டு புதிய ஊருக்கு செல்ல வேண்டுமே என்ற வெறுப்பு எங்களுக்கு. என்ன செய்வது? வேறு வழியில்லாமல் எங்களது தந்தை வீட்டை வாடகைக்கு விட்டு விட்டார். நாங்கள் எல்லோரும் ஹைதராபாதுக்கு சென்றோம்.

காலம் தான் எத்தனை வேகமாக செல்கிறது? ஒரு 4 வருட காலத்துக்குள் நிறைய விஷயங்கள் நடந்தன. எனது அண்ணன் படிப்பை முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். எனது சகோதரிகளுக்கு திருமணம் முடிந்தது. இதற்கிடையில், அந்த மெட்ராஸ் வீட்டில் பல பேர் வாடகைக்கு வந்து சென்றார்கள். ஒவ்வொரு முறையும் வீட்டை வாடகைக்கு விடும் போது குடியிருப்போர் வீட்டை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று எனது தந்தை கடவுளிடம் வேண்டுவார். நல்ல வேளை, வந்தவர்கள் அனைவருமே நல்லவர்களாக இருந்தார்கள். இந்த காலத்தில் ஒரு வீட்டை கட்டுவது பெரிய விஷயம் இல்லை, அதை வாடகைக்கு விடுவது கூட அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. ஆனால் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் வாடகைதாரர்கள் ஒழுங்காக வாடகை கட்டி வீட்டை பாழ் செய்யாமல் இருப்பதே பெரிய வரப்பிரசாதம்தான்.


1988ம் வருடம் எனது தந்தை ஒய்வு பெற்ற பின் எனது பெற்றோர் மீண்டும் அந்த மெட்ராஸ் வீட்டுக்கே வந்து குடியேறினார். இதற்கிடையில் எனது அண்ணன் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் குழந்தைகள் பிறந்து அந்த வீடே குதூகலமானது. ஆனால் நாங்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் / நாடுகளில் வேலை செய்ததால் மெட்ராஸுக்கு வருவதே அரிதாகி விட்டது.


எனக்கு செளதியில் வேலை கிடைத்தது. வருடத்துக்கு ஒரு முறை விடுமுறை நாட்களில் நாங்கள் அந்த வீட்டுக்கு வரும்போது ஆனந்தமாக இருக்கும்.
பக்கத்து வீடுகளில் வசித்த எனது நண்பர்கள் அனைவரும் என்னை போலவே வளர்ந்து பெரியவர்களாகி வெவ்வேறு இடங்களில் வேலையில் இருந்தனர். பலர் வீட்டை காலி செய்து விட்டு சென்றிருந்தனர். வீட்டுக்கு பழைய எண், புதிய எண் என்று வேறு எந்த ஊரிலும் பின்பற்ற படாத வழக்கம் வந்தது. எதிரே இருந்த காலி மைதானத்தில் பெரிய அடுக்கு மாடி கட்டிடம் வந்து விட்டது. அந்த மைதானத்தில் தான் எத்தனை முறை நாங்கள் விளையாடி இருப்போம்?


 அந்த வீட்டில் எனது பெற்றோர் தனியாக வசித்து வந்தனர். ஒரு முறை வீட்டுக்குள் பகலிலேயே திருடன் புகுந்து விட்டான். பீரோவிலிருந்து அவன் திருடிக்கொண்டிருந்த போது சமயோசிதமாக எனது தாயார் கதவின் தாழ்ப்பாளை வெளிப்புறத்திலிருந்து பூட்டிவிட்டார். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்து அவனுக்கு வாயிலிருந்து ரத்தம் வரும் வரை தர்ம அடி கொடுத்தனர். கடைசியில் எனது தந்தை அவனை காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல் போனால் போகிறது என்று விட்டுவிட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு எனது தாயார் பல நாட்களுக்கு மிகவும் பயந்து போயிருந்தார். 


இதற்கிடையில் ஒவ்வொருவரும் வீடுகளை வெவ்வேறு இடங்களில் கட்டி கொண்டோம். எனது வீட்டின் பூமி பூஜைக்கு எனது பெற்றோர் வந்திருந்தனர். எனது தந்தைக்கு அன்று எந்த மன நிலை இருந்ததோ எனது வீட்டு பூமி பூஜைக்கும் அதே போல மன நிலையில் நான் இருந்தேன்.
என்ன இருந்தாலும் நாங்கள் வளர்ந்த வீட்டை மறக்க முடியுமா?


ஆகஸ்டு 19, 2007. எனது வாழ்வில் மறக்க முடியாத நாள். திடீரென்று எனது தந்தை மாரடைப்பால் காலமாகிவிட்டதாக செளதியில் இருந்த எனக்கு தொலைபேசி தகவல் வந்தது. என்னால் அந்த அதிர்சியை தாங்கி கொள்ள முடியவில்லை. எந்த வீட்டை பார்த்து பார்த்து அவர் கட்டினாரோ, அதே வீட்டில் அவரது உயிரும் பிரிந்தது. ஒரு 30 வருடத்துக்குள் என்னென்னவோ மனிதனின் வாழ்க்கையில் நடந்து விடுகின்றன அல்லவா?


நாங்கள் ஒவ்வொருவரும் வெளியூரில் இருந்ததால் கிட்டதட்ட ஒரு வருடம் வரை என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தது. கடைசியில் அந்த வீட்டை விற்க முடிவு செய்தோம். வீட்டில் இருந்த சாமான்களை எல்லாம் வந்த விலைக்கு விற்றோம். பல சாமான்களை கேட்போருக்கு இலவசமாகவே கொடுத்தோம். அந்த பிலிப்ஸ் வானொலி பெட்டியை மட்டும் கொடுக்க எனக்கு மனது கேட்கவில்லை. எனது இளமைக்காலத்தின் ஒரு அங்கம் அல்லவா?அதை மட்டும் நான் ஞாபகார்த்தமாக வைத்து கொண்டேன்.


 அந்த வீட்டை விற்ற பின் அந்த தெருவுக்குள் செல்வதற்கே ஒரு மாதிரியாக இருந்தது. அந்த வீட்டை வாங்கியவர் அதை ஒரு பெரிய 'பில்டருக்கு' விற்று விடும் முயற்சியில் இருப்பதாகவும் அந்த பில்டர் அந்த வீட்டை இடித்து விட்டு ஒரு அடுக்கு மாடி கட்டிடம் கட்ட இருப்பதாகவும் யாரோ சொன்னார்கள். எனக்கு சுரீர் என்றது. அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலை கட்டுவதற்கும் எனது தந்தை என்ன பாடு பட்டிருப்பார்!  


அது கற்களால் ஆன வெறும் வீடு மட்டும் இல்லை, நாங்கள் வளர்ந்து ஆளாகிய இல்லம் அது. எத்தனை சந்தோஷமான நிகழ்வுகள், எத்தனை சின்ன சின்ன சண்டைகள், சமரசங்கள், எத்தனை பேர் வந்து போயுள்ளனர் அந்த வீட்டில்? ஜனனம், மரணம், எல்லாவற்றையும் பார்த்த வீடல்லவா? அதை இடிக்க போகிறார்களா? அவர்களால் வீட்டை மட்டும் தானே இடிக்க முடியும்? எனது  நினைவுகளை ஒன்றுமே செய்ய முடியாதே. எனக்கு மிக மிக வருத்தமாக இருந்தது.

 
என் மனைவி என்னை விட தெளிவாக இருந்தார். "விடுங்கள், நாம் தான் அந்த வீட்டை விற்று விட்டோமே. இன்று அது யாருடைய வீடோ தானே!"