Sunday 8 April 2012

அபாய சங்கிலி

ஏழேழு ஜென்ம உறவு என்று கூறுவார்களே,அது போல தான் எனக்கும்  இரயில் அனுபவங்களுக்கும் உள்ள தொடர்பு என்று நினைக்கிறேன். என்னுடைய முந்தைய அனுபவங்களை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது. ஆனால் அன்றைய சூழ்நிலையில் பதட்டம், திகில் என்று ஒரு பரபரப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு தான் இருந்தது.

என்னுடைய திருமணத்திற்கு முன் சூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது என்னுடைய பெற்றோர் என்னை பார்க்க ஒரு முறை வந்திருந்தனர். அப்போதெல்லாம் கைபேசி கிடையாது. வீட்டில் தொலை பேசியும் கிடையாது. யாராவது என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் பக்கத்தில் உள்ள கடைக்கு தொடர்பு கொண்டு பேச வேண்டும். என் பெயரை சொல்லி வரவழைத்தால் கடைக்காரன் என்னை கூப்பிடுவான். அதற்காகவே அந்த கடையில் நான் சாமான்கள் வாங்கி தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். என்ன செய்வது, வாழ்க்கையே ஒரு கொடுக்கல் வாங்கல் வியாபாரம் தானே?

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  சில நாட்கள் என்னுடன் இருந்து விட்டு மீண்டும் பம்பாய் வழியாக சென்னைக்கு எனது பெற்றோர் புறப்பட்டனர். சூரத்திலிருந்து பம்பாய்க்கு 'ஆகஸ்டு கிராந்தி எக்ஸ்பிரஸ்' என்ற வண்டியில் அவர்களது டிக்கெட்டை  நான் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த வண்டி சூரத்தில் இரண்டு நிமிடங்கள் தான் நிற்கும். சூரத்தை விட்டால் அடுத்து பம்பாய் போரிவிலியில் தான் நிற்கும். 

என்னுடைய பெற்றோர் நிறைய சாமான்களுடன் இருந்ததால் அவர்களை முதலில் வண்டியில் ஏற்றி விட்டு நான் சாமான்களை  ஒவ்வொன்றாக அவர்களது இடத்துக்கு அருகே வைத்தேன். என்னுடைய நேரம் பாருங்கள்,  அன்று இரயிலில் கூட்டம் ரொம்பி வழிந்தது. இரண்டே நிமிடங்கள் தான் இரயில் சூரத்தில் நிற்கும் என்பதால் நான் சாமான்களை வைத்து விட்டு வெளியே வருவதற்குள் திடீரென்று ஒரு கும்பல் உள்ளே முட்டி அடித்து கொண்டு உள்ளே நுழைந்தது. திபு திபுவென்று ஒரு பத்து பேர் வந்ததால் என்னால் அவர்களை மீறிக்கொண்டு வெளியே செல்ல முடியவில்லை. அதற்குள் இரயில் கிளம்பி விட்டது.


இப்போது என்ன செய்வது? அடுத்தது பம்பாயில் தானே இந்த இரயில் நிற்கும்? என்னிடம் வெறும் பிளாட்பாரம் டிக்கெட் மட்டும் தான் இருந்தது. இரயில் சிறிது சிறிதாக வேகம் எடுக்க துவங்கியது. ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரம் வண்டி சென்றிருக்கும்.  இன்னும் யோசிக்க நேரம் இல்லை. இப்படியே விட்டால் பம்பாய் வரை டிக்கெட் இல்லாமல் செல்ல வேண்டும். வேறு வழியே இல்லை என்று நான் அபாய சங்கிலியை இழுத்து விட்டேன். இரயில் சட்டென்று கிரீச்சிட்டு நின்றது.


 நான் இருந்த பெட்டியின் வாசலில் வாஷ் பேசின் மேலே  ஒரு சிறிய ஸ்பீக்கரிலிருந்து 'கீ கீ' என்று பயங்கரமாக சத்தம் வர ஆரம்பித்தது. இரயிலில் அங்கு அப்படி ஒரு சாதனம் இருந்ததை அன்று தான் முதலில் பார்த்தேன். அபாய சங்கிலியை இழுத்தால் என்னவாகும் என்று அன்று முதன் முதலில் தெரிந்து கொண்டேன். எந்த பெட்டியில் அபாயம் என்று சுலபமாக இதனால் தெரிந்து கொள்ளலாமாம். கூட்டத்தில் முண்டி அடித்து கொண்டு நான் சட்டென்று இரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தின் ஓரமாக சூரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


இரயிலில் இருந்தவர்கள் என்னை ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல ஏளனமாக பார்த்து சத்தம் போட ஆரம்பித்தனர். சிலர் என்னை கெட்ட வார்த்தைகளால்  ஏச ஆரம்பித்தனர். என்னுடைய அவசரம் அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது? அதற்குள் எங்கிருந்தோ பெட்டிக்கு கார்டும் ஒரு போலீஸ்காரனும் வந்தனர். நான் அவர்களை பார்க்காதவன் போல வேறு எங்கோ பார்த்து கொண்டே தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்றேன். அதற்குள் 'யார் அபாய சங்கிலியை இழுத்தது? என்ன ஆயிற்று?' என்று கார்டு மற்ற பயணிகளிடம் விசாரிக்க அவர்கள் கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பனை  போல "அதோ சிவப்பு சட்டை போட்டு கொண்டு எதுவும் தெரியாதவன் போல நடந்து செல்கிறானே, அவன் தான் இழுத்தான்" என்று கூறி விட்டார்கள். கிராதகர்கள்!

திடீரென்று என் கழுத்தில் ஒரு அடி விழுந்தது. ஒரு நிமிடம் பொறி கலங்கி விட்டது. அந்த போலீஸ்காரன் பின்னால் இருந்து வந்து என்னை அடித்து விட்டு அப்படியே என்னுடைய காலரை கெட்டியாக பிடித்து கொண்டான். இரயிலில் இருந்த மற்ற பயணிகள் ஏதோ சாதித்து விட்டதை போல "அவனை சும்மா விடாதீர்கள். நன்றாக 'கவனித்து' அனுப்புங்கள்" என்று போலீஸ்காரனை உசுப்பேற்றி விட்டனர். ஒருவன், "அவனை முட்டிக்கு முட்டி அடித்து ஜெயிலில் அடையுங்கள், அப்போது தான் புத்தி வரும்" என்றான். அட பாவிகளா! என்னை வெளியே செல்ல விடாமல் தடுத்தது நீங்கள் தானே டா! நான் என்ன, வேண்டும் என்றேவா சங்கிலியை இழுத்தேன்?


இரயில் சிறிது சிறிதாக வேகம் எடுக்க துவங்கியது. நானும் போலீஸ்காரனும் தண்டவாளத்தில் கீழே நின்று கொண்டிருந்தோம். 'என்னுடைய பெற்றோர் கதி என்ன ஆனதோ? பாவம், அவர்கள் ஊருக்கு போய் சேரும் வரை கவலையில் இருப்பார்களே. போலீஸ்காரன் வேறு என்னுடைய காலரை கெட்டியாக பிடித்து கொண்டிருக்கிறான். இவனிடம் இருந்து தப்பிக்க சீக்கிரமாக எதையாவது செய்ய வேண்டுமே ' என்று என் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.


இரயில் சென்று விட்டது. இப்போது தண்டவாளத்தில் நானும் என்னுடைய காலரை இன்னும்  கெட்டியாக பிடித்து கொண்ட  போலீஸ்காரனும் மட்டும் தான். ஒரு உந்துதலில் என்னுடைய pant பாக்கெட்டில் இருந்த பர்சை தொட்டு பார்த்து கொண்டேன். வடிவேல் ஒரு படத்தில் "எல்லாரும் நம்பள பாக்குறாங்க, அலர்ட்டா இருந்துக்கோ ஆறுமுகம்" என்று கூறுவது போல போலீஸ்காரன் நான் என்ன செய்கிறேன் என்றே என்னை விழியால் உருட்டி பார்த்து கொண்டிருந்தான். பர்சை நான் வெளியே எடுத்த அடுத்த நொடியே,  உடனேயே காலரில் இருந்த அவனுடைய பிடி தளர்ந்தது! இது தான் மாஜிக்கோ? "கூட்டத்தில் என்னால் வெளியே வர முடியவில்லை.  பெற்றோர்களை வழியனுப்ப வந்தேன். ஹீ ஹீ " என்று வழிந்து கொண்டே அவனிடம் ஒரு நூறு ருபாய் நோட்டை கொடுத்தேன்.


அவ்வளவுதான். சட்டென்று அதை தனது பாக்கெட்டில் போட்டு கொண்டான். அதற்கு பிறகு தான் வேடிக்கையே. அது வரையில் எனது காலரை தனது கையால் பிடித்து கொண்டிருந்த போலீஸ்காரன், இப்போது தனது கை முழுவதையும் எனது இரு தோள்களின் மேல் போட்டு கொண்டு ஏதோ பால்ய நண்பர்கள் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து கொண்டால் எப்படி இருப்பார்களோ , அது போல சிரித்து பேசிக்கொண்டே என்னுடன் சூரத் வரை தண்டவாள ஓரத்தில் நடந்து வந்தான்!

பம்பாய் சென்ற எனது பெற்றோர், முதல் காரியமாக இரயில் நிலையத்தில் இருந்து என் வீட்டுக்கு அருகில் இருந்த கடைக்கு போன் செய்து மிக பதற்றத்துடன் பேசினார்கள். என்னுடைய குரலை கேட்ட பிறகு தான் அவர்களுக்கு நிம்மதி. பாவம், மிகவும் அரண்டு போயிருந்தார்கள். நான் எனது அம்மாவிடம்  "ஏன் நீங்கள் இதற்கெல்லாம் போய் அலட்டி கொள்கிறீர்கள்" என்றேன். சரமாரியாக என்னை திட்ட ஆரம்பித்தார். "ராஸ்கல், உன்னை யார் அபாய சங்கிலியை இழுக்க சொன்னார்கள்? உனக்கு என்ன ஆச்சோ என்று நாங்கள் பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும். உன்னை இப்படியே விட்டால் நீ உருப்பட மாட்டாய். உன்னை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும்" என்று பீடிகையோடு போனை வைத்து விட்டார். 


'இது ஏதுடா வம்பு, அப்படி நான் என்னதான் செய்து விட்டேன்? அவர்கள் ஊருக்கு போய் என்ன செய்ய போகிறார்கள்?' என்று சற்றே நினைத்து நானும் அதை பற்றி மறந்து விட்டேன். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு தான் சாவகாசமாக ஒரு கடிதம் வருகிறது. எனக்கு பெண் தேட ஆரம்பித்து விட்டார்களாம். போச்சுடா! ஒரு ஜெயிலில் இருந்து தப்பித்தோம் என்று நினைத்தால்.......! இருங்கள், பக்கத்தில் தங்கமணி எங்கே என்று பார்த்து விட்டு வருகிறேன்!