Tuesday 7 May 2013

ஒளியும் ஒலியும்

சமீபத்தில் குடும்பத்துடன் ஒரு எலெக்ட்ரானிக் கடைக்கு சென்றிருந்த போது கடையின் வாசலில் ஒரு மிக பெரிய 65 அங்குல 3D LED தொலைக்காட்சி பெட்டியை காண நேர்ந்தது. பார்க்கவே சினிமா தியேட்டரின் திரை போல இருந்தது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அதை வாங்குவதற்கு கூட மக்கள் இருக்கிறார்கள் என்பது தான். பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் இந்த நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்களே, அவர்களுக்காகவே இது போன்ற விஷயங்கள் சந்தைக்கு வருகின்றன என்றே நினைக்கிறேன். அந்த தொலைக்காட்சி பெட்டியை சுற்றி திருவிழா போல ஒரு கூட்டமே கூடி இருந்தது. அந்த காட்சி எனது நினைவலைகளை பின்னோக்கி கூட்டி சென்றது.
 
 
 நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே கிடையாது. ஒரு பழைய பிபிப்ஸ் வானொலி பெட்டி தான் இருந்தது. அதை  ON செய்தவுடனேயே பாட ஆரம்பிக்காது. ON செய்து சில நிமிடங்களுக்கு பிறகு இடது பக்கத்தில் பச்சை நிறத்தில் மேலிருந்து கீழாக இரண்டு கோடுகள் தெரியும். அந்த இரண்டு கோடுகளையும் நாம் ஒன்று சேர்த்தால் தான் சரியாக கேட்கும். பல வருடங்கள் இதை பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஒவ்வொறு ஞாயிறன்றும் மதியம் 3 மணிக்கு 'ஒலிச்சித்திரம்' என்ற நிகழ்ச்சியை போடுவார்கள். ஏதாவது ஒரு திரைப்படத்தை ஒரு மணி நேரமாக சுருக்கி ஒலிபரப்புவார்கள். நாங்கள் (அண்ணன், சகோதரிகள்) எல்லோரும் வானொலியை சுற்றி உட்கார்ந்து கொண்டு சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்போம். ஞாயிறன்று எங்களது தந்தை மதியம் சிறிது நேரம் தூங்குவார். அந்த நேரம் பார்த்து தான் நாங்கள் எல்லோரும் இதை கேட்போம். மற்ற நேரங்களில் எங்களுக்கு வானொலியை கேட்க அனுமதி இல்லை. அதனாலேயே நாங்கள் ஞாயிறு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருப்போம்.
 
ஒரு கால கட்டத்தில் இலங்கை வானொலி மிகவும் பிரபலமாகி விட்டது. அதுவும் கே.எஸ்.ராஜா போன்றவர்களின் கம்பீர குரலை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. காலை 7.15 மணிக்கு  செய்திகள் மிக பிரபலமாக இருந்தது. "ஆகாஷவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி" என்று அவர் கூடவே நாங்களும் சேர்ந்து சொல்வோம். அதே போல தினமும் இரவு ஒன்பது மணி செய்திகளை எனது தந்தை தவறாமல் கேட்பார். இடியோ, மழையோ, வெள்ளமோ, பூகம்பமோ எதுவாக இருந்தாலும் செய்திகளின் முதல் வரி மட்டும் "The Prime Minister Mrs. Indira Gandhi..... " என்று ஆரம்பிக்கும். இது ஏன் என்று எனது தந்தையிடம் ஒரு முறை அப்பாவியாக கேட்டேன். அதற்கு அவர் லேசாக சிரித்து விட்டு பதில் கூறாமல் போய் விட்டார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது!
 
 
 
சில வருடங்கள் கழித்து தொலைக்காட்சி வந்தது. 1975ம் வருடம் தான் முதன் முதலில் மெட்ராஸில் தொலைக்காட்சி ஒளிபரப்பை ஆரம்பித்தனர். அப்போதெல்லாம் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி தான். ஒவ்வொறு சனி ஞாயிறன்றும் மாலை 7 மணிக்கு ஏதாவது ஒரு திரைப்படத்தை போடுவார்கள். எங்களது தெருவில் உள்ள நண்பனின் வீட்டில் மட்டும் தான் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். சரியாக 6.55 மணிக்கு நாங்கள் அனைவரும் நண்பனின் வீட்டில் ஆஜராகி விடுவோம். அனைவரும் தரையில் உட்கார்ந்து கொண்டு திரைப்படம் முடியும் வரை பார்த்து கொண்டிருப்போம். நடுவில் ஒரு 15 நிமிடங்கள் செய்திகளுக்காக இடைவெளி இருக்கும். அப்போது வீட்டுக்கு சென்று அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு மீண்டும் மீதி திரைப்படத்தை பார்க்க கிளம்பி விடுவோம்! இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு பத்து முறையாவது "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்று ஒரு அட்டையை காண்பிப்பார்கள். ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்த போது ஜனவரி 25ம் தேதி இரவு வழக்கம் போல நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஆனால் அவரது உரை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு slide போட்டார்கள்  - "Please standby for President's massage to the nation". வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவம் இது.
 
ஒவ்வொறு புதன்கிழமையும் 'எதிரொலி' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதில் பார்வையாளர்களின் கடிதங்களை வாசிப்பார்கள். பாதிக்கு மேல் வசை பாடும் கடிதங்களாக தான் இருக்கும். தொலைக்காட்சியின் அதிகாரி முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பார். அதை ரசிப்பதற்காகவே (!) ஒரு கூட்டம் இருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!

சில மாதங்கள் கழித்து மேலும் சிலரது வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை வாங்கினார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் 'ஒளியும் ஒலியும்' என்ற நிகழ்ச்சி வரும். இதில் ஒரு முக்கால் மணி நேரம் சினிமா பாடல்களை போடுவார்கள். ஒரு சிலர் வீட்டு வாசலில் ஒரு சிறிய உண்டியலை பொருத்திவிட்டு, பெரியவர்களுக்கு 50 பைசா, சிறுவர்களுக்கு 25 பைசா என்று வசூல் செய்த கதையும் நடந்தது. ஆனால் இதெல்லாம் புதிதாக காலனிக்கு வருபவர்களிடம் தான். நாங்கள் யாருமே இது வரை ஒரு பைசா கூட கொடுத்தது கிடையாது. எல்லாமே ஓசி தான். ரொம்ப பேசினால் அவர்கள் வீட்டு பையனை எங்களது கூட்டத்திலிருந்து நாடு கடத்திவிடுவோம் என்ற அச்சம் தான். அதனால் அவர்களும் பெரிதாக கண்டு கொள்ளாமல் எங்களை ஓசியிலேயே பார்க்க விட்டார்கள்.
 
1982ம் வருடம் டெல்லியில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்த போது தான் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் வானொலியை கேட்பது அறவே நின்று விட்டது. வானொலியை கேட்பவர்களை ஏதொ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்களை போல பார்த்தனர். "உங்கள் வீட்டில் இன்னுமா டி.வி. வாங்கவில்லை?" என்று ஏதோ 7 ஜென்மத்து பாவத்தை செய்து விட்டதை போல கேட்பார்கள். மனைவிமார்களின் நச்சரிப்பு தாங்காமல் பலரது வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை வாங்க ஆரம்பித்தனர். வானொலி பெட்டி அனைவரின் வீட்டிலும் ஒரு காட்சி பொருளாகவே மாறி விட்டிருந்தது.
 
1990களில் பல தனியார் தொலைக்காட்சியினர் வர ஆரம்பித்திருந்தனர். கிட்டத்தட்ட வானொலியை அனைவரும் மறந்தே போய் விட்டனர். சீரியல் நோய் என்கிற புது விதமான கலாச்சாரம் பரவ ஆரம்பித்திருந்தது. 'சித்தி' என்ற நெடுந்தொடரில் அடுத்த வாரம்  ராதிகா என்ன செய்ய போகிறார் என்று எங்கு பார்த்தாலும் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். பொங்கல், தீபாவளி என்று பண்டிகைகள் வந்தால் முன்பெல்லாம் உறவினர்கள் வீட்டுக்கு சென்று வாழ்த்து கூறுவது வழக்கமாக இருந்தது. இந்த தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு, பொங்கலன்று காலையில் புது திரைப்பட பாடல்களும் காட்சிகளும் போட ஆரம்பித்தனர். தெரியாமல் அந்த நேரத்தில் உறவினர்கள் வீட்டுக்கு நீங்கள் சென்று விட்டால் அதோகதி தான். அந்த வீட்டுக்கார அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். நம்மை உட்கார வைத்து விட்டு அனைவரும் தொலைக்காட்சி பெட்டியையே பார்த்து கொண்டிருப்பார்கள். நடுவில் வரும் விளம்பர இடைவேளை வரும்போது மட்டும் நாம் இருக்கிறோம் என்கிற நினைவு வந்து நமது பக்கம் திரும்பி "அப்புறம்? வேற என்ன விசேஷம்?" என்று கேட்பார்கள். அதற்குள் விளம்பரம் முடிந்து தொலைக்காட்சியில் பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டிருக்கும். நாமும் அடுத்த விளம்பர இடைவேளை எப்போது வரும் என்று காத்திருந்து விட்டு அது வந்த உடனே நைசாக நழுவும் வழியை பார்ப்போம்.
 
தனியார் வானொலி நிலையங்கள் வந்த பிறகு தான் மீண்டும் வானொலி புத்துயிர் பெற்றது என்றே சொல்லலாம். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, எந்த நிலையத்தை வைத்தாலும் குப்பை பாடல்களாக தான் வருகின்றது. "மன்மத ராசா", "கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடி போலாமா", "எவண்டி ஒன்ன பெத்தான்" என்று தமிழ் சேவை புரிந்து கொண்டு பாடல்கள் வருகின்றன. தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளும் இதற்கு சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு ஆபாசத்தை வீசுகின்றன. சத்தியமாக சொல்கிறேன், இப்போதெல்லாம் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது.
நல்ல வேளை எனக்கு பிடித்த பழைய பாடல்களை எனது கணிணியில் சேமித்து வைத்துள்ளேன். எனது பெண்ணுக்கு அதில் ஒரு பாடல் கூட சுத்தமாக பிடிக்காது. அவளுக்கு "ஒரு கூடை சன்லைட்" என்று நான்கு நாட்கள் மலச்சிக்கலில் மாட்டிக்கொண்டவன் போல யாரோ கத்தும் பாடல் தான் பிடித்திருக்கிறது. கேட்டால் அது "யோ" பாடலாம். என்ன எழவோ!
 
இரவில் தூங்கும் முன் பி.சுசீலாவின் "நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்" என்ற அருமையான பாடலை கேட்டு கொண்டே எனது பழைய வானொலி பெட்டியை நினைத்து கொண்டேன். எனது நினைவுகளை போன்றே அதுவும் மெல்ல தூங்கி கொண்டிருக்கிறது.