Wednesday, 5 August 2009

அண்ணன் என்னடா தம்பி என்னடா..

பல வருடங்களுக்கு முன்பு எஸ்.வீ.சேகரின் நாடகம் ஒன்றில்  கீழ்க்கண்ட வசனங்கள் இடம் பெறும்.
ஒருவர் சேகரிடம் சென்று கேட்பார்,

"ஏன் சார், எப்ப பாத்தாலும் பணம் பணம்னு பேயா அலயுறீங்களே, உங்களுக்கு 'பணப்பேய்' அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்துடலாமா?"

சேகர் அதற்கு மிகவும் வெட்கத்துடன்,

"ஐயோ, வேண்டாங்க, பட்டம் எல்லாம் வேண்டாம்"

 "அப்போ?"

"பட்டமெல்லாம் வேண்டாம். பணமா குடுத்துடுங்க!"

கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இந்த வசனத்தில் எவ்வளவு யதார்த்தம் இருக்கிறது பாருங்கள். நானும் பல முறை பார்த்து விட்டேன், "வாழ்க்கை என்றால் பணம் மட்டும் தானா?" என்று சில பேர் கேட்பார்கள். அப்படி கேட்பவர்கள் எல்லோருமே பணக்காரர்களாக இருப்பார்கள்!

இன்றைய உலகில் பணம் இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களை நாய் கூட மதிக்காது என்பது தான் கசப்பான உண்மை. மனிதன் பிறந்த நிமிடம் முதல் இந்த பணம் என்னும் வேதாளம் அவனை தொற்றிக்கொள்கிறது. பிறப்பு சான்றிதழ் வேண்டுமா? பணத்தை வெட்டுங்கள். குழந்தைக்கு உடல் நலம் சரியில்லையா? மருத்துவரிடம் கூட்டி சென்றால் தலைவலிக்கு கால்களில் இருந்து கழுத்து வரை அனைத்து பரிசோதனைகளையும் செய்ய சொல்வார். அதையும் ஒரு குறிப்பிட்ட Labல் தான் செய்ய வேண்டும்.

குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டுமா? முதல் நாள் இரவில் இருந்தே வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கி பள்ளியில் கொடுத்தால் கட்டிட நிதி என்று நன்கொடையை கறந்து விடுகிறார்கள். குழந்தை சற்றே பெரிய வகுப்பை அடைந்தால் 'ட்யூஷன்' என்ற பெயரில் அவர்களை வாட்டி வதைப்பது மற்றொறு கலை. ஒரு வழியாக பள்ளியை முடித்து கல்லூரியில் சேர வேண்டும் என்றால் அதற்கான நன்கொடை தனியாக. நம் மக்களுக்கு தெரிந்ததெல்லாம் நமது பையன்/பெண் டாக்டராகவோ இஞ்ஜினியராகவோ ஆக வேண்டும் என்பது தானே. உலகத்தில் வேறு தொழிலே கிடையாதே. அதனால் எப்பாடு பட்டாவது கடனை உடனை வாங்கி இந்த இரண்டு படிப்புகளில் ஏதாவது ஒன்றில் சேர்த்து  ஜென்ம சாபல்யத்தை அடைவார்கள். எல்லாவ‌ற்றுக்கும் தேவை ப‌ண‌ம் ப‌ண‌ம் ப‌ண‌ம் தான்.

சரி, எப்படியோ படிப்பை ஒரு வழியாக முடித்தால் அடுத்த தடை வேலை. ஏற்கனவே படித்து முடித்து வெளியே  இருப்பவனே வேலைக்கு சிங்கி அடித்து கொண்டிருக்கிறான். இதில் புதிதாக வேறா? சரி, எப்படியோ எவனெவன் கால் கையிலோ விழுந்து கொடுக்க வேண்டியதை கொடுத்து பையனை வேலையில் சேர்த்தால், தான் வாடகை வீட்டில் இருப்பது அப்போது தான் திடீரென்று ஞாபகம் வரும். உடனே வங்கிக்கு ஓடி டாமேஜரிடம் பல் இளித்து ஒரு கடனை வாங்கி வீட்டை கட்டி முடித்து நிமிரலாம் என்று நினைக்கும் போதே பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடும்.

அதற்குள் பதவி காலம் வேறு முடியும் தருவாயாக இருக்கும். சரி, ஓய்வு பெற்ற பணத்தில் பெண்ணுக்கு ஒரு வழியாக கல்யாணத்தை செய்து முடித்து 'அம்மாடி' என்று மூச்சு விட்டால் ஆடி சீர், ஆடாத சீர் என்று ஒவ்வொன்றாக ஆரம்பித்து விடும். அதை எல்லாம் முடித்து ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தால் எங்கே விடுகிறார்கள்? சாலைக்கு பைபாஸ் இருக்கிறதோ இல்லையோ, இதயத்துக்கு கண்டிப்பாக பைபாஸ் செய்தே ஆக வேண்டும். அதுவும் அப்போலோவில் செய்தால் தான் இன்னும் விசேஷம்.

எனது தந்தையும் என்னை போல பிழைக்க தெரியாத ஒரு நேர்மையான அதிகாரியாக தானே இருந்தார். உண்மையாக இரு, திருடாதே, பொய் சொல்லாதே என்று சொல்லி சொல்லி எங்களை எல்லாம் வளர்த்தார். முந்தின நாள் இரவு வரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று காலமானதில் குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது. காரியத்தை எல்லாம் முடித்து விட்டு நான்காவது நாள் சுடுகாட்டில் உள்ள மாநகராட்சி அலுவலரிடம் சென்று இறப்பு சான்றிதழை கேட்டேன். இரண்டு முறை அலைக்கழித்தார். எனது மர மண்டைக்கு அவரது தேவை அப்போது தான் உறைத்தது. 'சார், நீங்க ஆனந்த பவன் வாசலுக்கு வந்துடுங்க, எல்லா சான்றிதழ்களையும் கொடுத்து விடுகிறேன்' என்றார். அங்கு சென்று பார்த்தால் அவரது பத்து விரல்களிலும் ஜொலிக்கும் மோதிரங்கள். கால் விரல்களிலும் மோதிரங்கள் இருந்தனவா என்று தெரியவில்லை! பணம் கை மாறிய பிறகு, "உங்களுக்கு Legal Heir சான்றிதழ் வேண்டியிருக்குமே'  என்று கேட்டார் (அட, இது இவருக்கு எப்படி தெரியும்?). 'ஓண்ணும் கவலைப்படாதீங்க சார், என்னோட wife அந்த டிபார்ட்மெண்ட்டில்தான் இருக்காங்க. எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிடலாம்' என்றார். அடப்பாவி, குடும்பமே கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கிறதோ! தந்தையை இழந்த துக்கத்தில் இருந்து மீள கூட முடியவில்லை. கருணையாவது கத்திரிக்காயாவது. பணம் வேண்டும் சார், பணம் வேண்டும். அது இருந்தால் தான் உயிர் வாழ முடியும். இது தான் நிதர்சனம். இது தான் உண்மை நிலை.

எல்லாமே பணம் என்றாகிவிட்டது. இதில் அண்ணனா தம்பியா, அப்பனா பிள்ளையா, ஒட்டா உறவா? பிறப்பிலிருந்து இறப்பு வரை பணம் பணம் என்று அனைவரையும் இந்த பேய் வாட்டுகிறது. நல்ல வேளை சுவாசிக்கும் காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் காசு கொடுக்க வேண்டாம். இறைவா, உண்மையிலேயே நீ க‌ருணை உள்ள‌வ‌ன் தான். எதையுமே என்னிட‌ம் இருந்து எதிர்ப்பார்க்காம‌ல் இருக்கிறாயே! ஆனால் உன்னை கோவிலில் நான் பார்க்க‌ வேண்டும் என்றால் அத‌ற்கு த‌னியாக‌ ப‌ண‌ம் கொடுத்து டிக்க‌ட் எடுக்க‌ வேண்டுமே இறைவா! ப‌ண‌த்தை நீ கேட்க‌வில்லை, நீ ப‌டைத்த‌ ம‌னித‌ன் தான் கேட்கிறான்.

ஆக மக்களே! நமது அடுத்த சந்ததியினருக்கு என்ன சொல்லி கொடுக்கிறோமோ இல்லையோ, அவர்கள் கண்டிப்பாக பணம் பண்ண வேண்டும் என்பதை அனைவரும் கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். நீ பெரியவனாக ஆன பிறகு என்னவாக போகிறாய் என்று யாராவது கேட்டால், "பணம் பண்ணுவேன்' என்று கூறுமாறு சொல்லி கொடுக்க வேண்டும். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
இந்த பணம் பண்ணும் வித்தையில் தேர்ச்சி பெறாமல் தமது உயிரையே கொடுத்து நமது நாட்டு எல்லையில் காக்கும் படை வீரர்கள், முகம் சுளிக்காமல் நோயாளியின் கழிவை எடுக்கும் நர்ஸுகள், கொதிக்கும் வெயிலில் தார் சாலை போடும் தொழிலாளிகள என்று மிக மிக சிலரின் நல்ல உள்ளங்களினால் தான் அவ்வப்போது நாட்டில் மழை பெய்கிறது. பிழைக்க தெரியாத நேர்மையான மனிதர்கள்! உண்மையிலேயே, க்வியரசர் கூறியது போல,

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா!

அந்த நல்ல உள்ளங்களை சிரம் தாழ்த்தி வணங்குவோம்!

Friday, 15 May 2009

ஓய்வு

ஆரல்வாய்மொழி! எத்தனை அழகான தமிழ் பெயர்! என்னை மிகவும் கவர்ந்த கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர்தான் இது.

சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பசுமை. பசுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு பக்கம் காற்றாலைகள். மறு பக்கம் பச்சை பசேலென்ற வயல் வெளிகள். சில்லென்ற குளிர் காற்று. ஆஹா, என்ன ஆனந்தம்! நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை என்ற ஊரில் உள்ள எனது நண்பன் வீட்டுக்கு செல்லும்போது தான் நான் ஆரல்வாய்மொழியை பார்த்தேன். அப்பொழுதே தீர்மானித்து விட்டேன், நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த ஊரில் தான் வந்து தங்குவேன் என்று.

ஓய்வு என்றவுடன் எனது நினைவலைகள் பின்னோக்கி செல்கின்றன. நாம் கடைசியாக எப்பொழுது உண்மையிலேயே ஓய்வு எடுத்துக்கொண்டோம்? நினைவு தெரிந்து பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதல் நமது பெற்றோர்கள் "படி படி" என்று வாட்டுகிறார்கள். ஒரு 15 வருடங்களுக்கு இது போல ஓய்வே இல்லாமல் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிறோம். பட்டப்படிப்பு முடிந்தவுடன், 'சரி, இனிமேல் நமக்கு வேலை கிடைத்த பிறகு ஓய்வு கிடைக்கும் இந்த படிப்பிலிருந்து' என்று நினைக்கிறோம். ஆனால் கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது வேலை என்பது குதிரைக்கொம்பு போன்றது என்று. வேலை தேடி அலைந்து திரிந்து கடைசியில் ஒரு வழியாக ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து விடுகிறோம்.

அப்பொழுதாவது 'அக்கடா' என்று ஓய்வெடுக்க முடிகிறதா? மேலதிகாரி என்ற யாரோ ஒருவனுக்காக அடிமை வாழ்வு வாழ்கிறோம். சரி, கொஞ்சம் பணம் சேர்த்த பிறகு ஓய்வு எடுக்கலாம் என்றால் உடனே வீட்டில் திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள்.

திருமணத்துக்கு பிறகு அல்லவா தெரிகிறது, வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய போராட்டம் என்று. ஒரு குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் மூச்சு விடலாம் என்றால் அப்பொழுது தான் போராட்டம் இன்னும் அதிகமாக தோன்றுகிறது. குழந்தை வளர வளர நமது தொள்களின் மேல் ஒவ்வொரு கடமையாக ஏறிக்கொண்டே போகிறது. சிலர் பிழைப்புக்காக வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சென்று அதே அடிமை வாழ்வை வாழ்கிறார்கள்.

ஒரு வழியாக இருக்க வீடு என்று ஒன்றை கட்டிவிட்டால் சிறிது ஓய்வு கிடைக்கும், அது வரை பொறுத்து கொள்ளலாம் என்று மனம் கூறுகிறது. வீடு கட்டியது தான் தாமதம் திடீரென்று நமது குழந்தை குமரனாகவோ குமரியாகவோ மாறிவிட்டதை ஏற்றுக்கொள்ள அதே மனம் மறுக்கிறது. மகனின்/மகளின் கல்விக்கு தேவை பணம். அதை நிறைவேற்ற இன்னும் சில காலம் வேலை செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

கல்வி முடிந்தபின் அவர்களுடைய திருமணம். சரி, திருமணத்தை செய்து கொடுத்ததோடு நமது கடமை முடிந்து விட்டது. இனியாவது ஓய்வு பெறலாம் என்று சற்றே கண்ணாடி முன்பு நம்மை பார்த்தால் தலையில் வெள்ளை முடி அல்லது வழுக்கை. கூடவே ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற இயற்கையின் பரிசுகள். 60 வயது முடிவதற்கு முன்பாகவே கையில் காசு வரும் என்ற நோக்கோடு மிக சீக்கிரமாகவே "விருப்ப ஓய்வு" பெற்றுக்கொண்ட இள முதியோர்கள் திடீரென்று வட்டி விகிதம் இறங்க பெட்ரோல் விலை ஏற "ஏண்டா ஓய்வு எடுத்துக்கொண்டோம்" என்ற வெறுப்பில் நாட்களை ஓட்டுபவர்கள் ஒரு பக்கம்.

உடல் நலம் ஒத்துழைக்காவிட்டாலும் பணத்தேவை எனும் நிதர்சனம் வாட்டி வதைக்க, வயது வரம்பை காட்டி கட்டாயமாக பணியிலிருந்து ஓய்வு கொடுத்து அனுப்ப பட்டவர்கள் மற்றொரு புறம்.

சரி, இப்போதாவது ஓய்வு பெறலாம் என்றால் பேரன், பேத்தி என்று பந்தங்களுடன் நம்மை நாமே கட்டி போட்டுக்கொண்டு வாழ்க்கை சக்கரத்தில் அல்லோலப்பட்டு மீளத்தெரியாமல் தவிக்கிறோம்.

என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக உண்மையிலேயே ஓய்வு கிடைக்கும். சலசலவென்று ஓடும் ஆற்றில் காலை வைத்து நீரில் துள்ளி விளையாடும் மீன்கள் நம்மை தொடுவதை பார்த்து ஆனந்த படவேண்டும். மலை மீதிருந்து பார்க்கும் போது தூரத்தெரியும் சூரிய அஸ்தமனத்தை பார்த்து மகிழ வேண்டும். மனிதர்களே இல்லாத நடுக்காட்டில் பாறை மீது அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். பயம் இல்லை, மகிழ்ச்சி இல்லை, துக்கம் இல்லை, கோபம் இல்லை, எதுவுமே இல்லாத அந்த அமைதி வேண்டும். உண்மையான ஓய்வு வேண்டும். கிடைக்குமா இறைவா?

தோவாளை நண்பனின் மைத்துனன் என்னிடம் கூறினான் "ஆரல்வாய்மொழியா? இந்த கிராமத்தில் என்ன கண்டீர்கள். செளதியில் எனக்கு ஒரு வேலை வாங்கி தருவீர்களா?"

Tuesday, 21 April 2009

இரயில் பயணங்களில்

நான் கூறப்போகும் இந்த‌ அனுபவம் எனக்கு ஏற்பட்டது அல்ல,  சூரத்தில் என்னுடன் பணி புரிந்த நண்பன் ராவுக்கு ஏற்பட்டதாகும். இருந்தாலும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலே படியுங்கள்.

1990வது வருடம். ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் அருகில். அப்போதெல்லாம் சென்னையிலிருந்து சூரத்துக்கு நேரிடையாக செல்லும் ஒரே இரயில் நவஜீவன் எக்ஸ்ப்ரெஸ் என்ற வண்டி தான். ஒரே ஒரு வண்டி என்பதால் அதில் பல நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டும், இல்லயென்றால் உறுதியான இருக்கை கிடைக்காது. அதனால் குறிப்பாக ஆந்திராவிலிருந்து வரும் பலர் பூனா வரை ஒரு இரயிலில் வந்து பிறகு அங்கிருந்து வடக்கே செல்லும் வேறு இரயில்கள் மூலம் சூரத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது.

சூரத் செல்பவர்களுக்கு பூனா ஒரு transit இரயில் நிலையமாகதான் இருந்தது. ராவும் ஒரு முறை விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவ்வாறே பூனாவுக்கு செல்லும் இரயிலில் வந்தான். அவன் வந்த இரயில் வழக்கம் போல தாமதமாக பூனாவுக்கு வந்து சேர்ந்தது. அப்போது இரவு 3 மணி இருக்கும். பொதுவாக பூனாவில் ஒரு 2 அல்லது 3 மணி நேரம் காத்திருந்தபின் சூரத்துக்கு செல்லும் இரயில் வரும். இந்த இரயில் வேறு எங்கிருந்தோ வருகிறது. இதில் ஏதாவது ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்தால் சூரத் சென்றடைவதற்கு ஒரு 4 அல்லது 5 மணி நேரம் ஆகும். (இப்போது route எல்லாம் மாற்றி விட்டார்கள், நான் கூறுவது 1990ல்).

ராவ் பூனா வந்து சேர்வதற்கு தாமதமாகி விட்டது என்று கூறினேன் அல்லவா? அவனுடைய அதிர்ஷ்டம் சூரத் வழியாக அஹமதாபாத் செல்லும் இரயில் மற்றொரு தடத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அவசரம் அவசரமாக இறங்கி சூரத் செல்லும் இரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டான். இரயிலும் கிளம்பி விட்டது. அப்பாடா, அவன் ஏறிய பெட்டியில் உட்கார இடம் கிடைத்து விட்டது. காலையில் ஊர் போய் சேர்ந்து விடலாம். இரவு 3 மணி என்பதால் மற்ற பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இரயில் கிளம்பி ஒரு 10 அல்லது 15 நிமிடம் தான் ஆகியிருக்கும். தான் கொண்டு வந்த suitcase பெட்டியை எங்காவது ஜாக்கிரதையாக வைக்கலாம் என்று எண்ணினால், திடீரென்று ஒரு அதிர்ச்சி! அப்போது தான் suitcase பெட்டியை தவற விட்டு விட்டதை உணர்ந்தான்! அடக்கடவுளே! அதில் தானே அவனுடைய துணி மணிகள் எல்லாமே உள்ளன. இரவு படுக்க போகும் முன் அவனுடைய purseஐ கூட அதில் தானே வைத்திருந்தான் (pantல் purseஐ வைத்திருந்தால் ஜேப்டிக்காரர்கள் எடுத்து விடுவார்கள் என்று பயந்து இவன் அதை suitcase பெட்டியில் வைத்துள்ளான். எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல தான்!) இப்போது அதுவும் கோவிந்தா! என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு உந்துதலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துவிட்டான். இரயிலும் சிறிது தூரம் சென்ற பின் நின்று விட்டது. அவசரம் அவசரமாக இரயிலில் இருந்து கீழே குதித்து பூனா இரயில் நிலையம் நோக்கி இருப்பு பாதை ஓரமாக நடக்க தொடங்கினான். இரவு நேரம் என்பதால் ஒரே கும்மிருட்டு. ஒரு பக்கம் பணமும் suitcaseம் தொலைந்த வருத்தம். மற்றொரு பக்கம் தூக்க கலக்கம் / அசதி. சரி இப்படியே இருப்பு பாதை வழியாக நடந்து போனால் பூனா சென்றடைவதற்குள் விடிந்து விடுமே என்ன செய்வது?

இரவு நிசப்தத்தில் எங்கோ தூரத்தில் வாகனங்கள் செல்லும் சத்தம் கேட்டது. சரி, அங்கு ஏதோ சாலை இருக்கும் போலிருக்கிறது. லாரியோ ஏதாவது வாகனமோ கிடைத்தால் அதில் ஏறிக்கொண்டு பூனா இரயில் நிலையம் வரை சென்று விடலாம் என்று இருப்பு பாதையிலிருந்து திசையை மாற்றி சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கும்மிருட்டில் எங்கே நடந்தால் என்ன - மிதிப்பது நாயின் வாலாகவோ அல்லது பாம்பாகவோ இல்லாமல் இருந்தால் சரி!

கிட்டத்தட்ட ஒரு 25 நிமிடம் நடந்த பின் சாலையை வந்தடைந்து விட்டான். அப்பாடா, ஏதாவது ஒரு வாகனம் கிடைக்காதா? சட்டை pocketஐ தொட்டு பார்த்தான். முந்தைய இரவு தேனீர் அருந்தி விட்டு மீதி இருந்த பணம் 4 ரூபாய் இருந்தது. சரி, வந்தது வரட்டும் என்று சாலையில் நடக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு 35 நிமிடங்கள் கடந்த பின் ஒரு கிராமத்தை வந்தடைந்தான்.

அதற்குள் மணி 4.30 ஆகியிருந்தது. அங்கு பார்த்தால் ஒரு ஆட்டோ தென்பட்டது. ஆட்டோவினுள் அதன் ஓட்டுனர் தூங்கிக்கொண்டிருந்தான். சரி, இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அவனை ராவ் தூக்கத்திலிருந்து எழுப்பினான். "எப்படியாவது என்னை பூனா இரயில் நிலையத்துக்கு கொண்டு போய் சேர்த்துவிடு" என்று அந்த ஓட்டுனனிடம் ராவ் கெஞ்சினான். ஆட்டோகாரன் உடனே எழுந்து ராவை ஏற இறங்க பார்த்தான். "சரி சரி, இன்று நமக்கு வேட்டைதான், வசமாக கிராக்கி சிக்கியிருக்கிறது" என்று நினைத்திருப்பான் போல். ஒரு ஊதுபத்தியை ஏறி ஆட்டோவினுள் இருந்த ஷிர்டி சாய்பாபா படத்துக்கு முன் ஏற்றிவிட்டு ஆட்டோவை கிளப்பினான். ஒரு 15 நிமிடத்துக்குள் பூனா நகரம் வந்து விட்டது.

வீடுகள் எல்லாம் தெரிகின்றன. ஆனால் இரயில் நிலையம் தான் வரவில்லை. சந்து பொந்துகளில் எல்லாம் ஓட்டிக்கொண்டு பூனா நகரத்தையே வலம் வந்தான். ஒரு வேளை இந்த ஓட்டுனன் நம் சென்னை ஆட்டோகாரன் எவனுக்காவது சொந்தக்காரனாக இருந்திருப்பானோ? கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரத்துக்கு பிறகு பூனா இரயில் நிலையம் வந்தே விட்டது. இப்போது தானே பிரச்னையே ஆரம்பமாக போகிறது! ஆட்டோவிலிருந்து இறங்கிய ராவ் ஓட்டுனனிடம் தன்னிடம் இருந்த 4 ரூபாயை கொடுத்து விட்டு "இதோ பாருப்பா, என்னிடம் இருக்கும் பணம் இவ்வளவுதான். தலைகீழாக புரட்டி போட்டாலும் இதற்கு மேல் ஒரு பைசா கூட கிடையாது. என்னுடைய suitcase தொலைந்து விட்டது" என்று அவனுடைய சட்டை மற்றும் pant pocket அனைத்தையும் காண்பித்தான்! ஆட்டோக்காரனுக்கு வந்ததே கோபம். ராவை தர்ம அடி அடிக்காத குறை தான்! "வந்து சேந்தான் பார் சாவு கிராக்கி" என்று சென்னை செந்தமிழில் நமது ஆட்டோக்காரர்கள் திட்டுவது போல் மராத்தியில் திட்டி தீர்த்தான்.

ஒரு வழியாக பூனா இரயில் நிலையத்துக்குள் நுழைந்து நேராக Station Masterன் அறைக்கு சென்றான். நடந்தவை அனைத்தையும் கூறி "என்னிடம் சல்லி காசு கூட கிடையாது. நீங்கள் தான் எப்படியாவது எனக்கு ஊர் போய் சேர உதவ வேண்டும்" என்று கூறினான். அனைத்தையும் பொறுமையாக கேட்ட station master, பெட்டியின் அடையாளங்களை எல்லாம் கேட்டுக்கொண்டார். பிறகு, ஒரு புன்சிரிப்புடன் தன் மேஜைக்கு அடியிலிருந்து ஒரு suitcaseஐ தூக்கி காண்பித்து "உன் suitcase இது தானா பார்" என்றார்.

ராவுக்கு இன்ப அதிர்ச்சி. காணாமல் போன பெட்டி கிடைத்து விட்டது! ராவ் பூனாவுக்கு ஒரு இரயிலில் வந்தான் இல்லையா? அவன் பயணம் செய்த அந்த இரயில் பெட்டியை கழற்றி விட்டு மீதி இரயில் பம்பாய் நோக்கி சென்று விட்டிருந்தது. அவனுடைய அதிர்ஷ்டம், ஆந்திராவில் இருந்து வந்த இந்த இரயில் பெட்டிக்கு இது தான் கடைசி நிறுத்தம். இந்த பெட்டியை கழற்றி விட்டவுடன் அதை சுத்தம் செய்வதற்காக இரயில் ஊழியர்கள் உள்ளே சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் இந்த suitcase அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதை station masterஇடம் கொடுத்திருக்கிறார்கள்.

என்ன நண்பர்களே, உழைத்து சம்பாதித்த பொருளை என்றுமே நம்மிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமோ? ராவினுடைய விதி அவனுக்கு அந்த suitcase பெட்டி கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. பெட்டி மட்டுமா கிடைத்தது- மறக்க முடியாத ஒரு அனுபவமும் அல்லவா கிடைத்தது?

Monday, 23 March 2009

செளதியில் வேலை தேடுகிறீர்களா?

நீங்கள் வளைகுடாவிலோ அல்லது செளதியிலோ வேலை தேடுகிறீர்களா? அப்போது இந்த கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள்.

எனது நண்பர் கணேஷ் செளதியில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலையில் இருக்கிறார். அவரை பார்ப்பதற்க்காக ஒரு நாள் அவருடைய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அவருடைய அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்வதற்காக புதிதாக கேரளாவை சேர்ந்த ஒருவரை அன்றுதான் நியமித்திருந்தார்.  எனது நண்பரிடம், "என்ன, புதிதாக ஆள் சேர்த்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே" என்றேன். அதற்கு அவர் அந்த ஆளை பற்றி கூற ஆரம்பித்தார். அவருடைய பெயர் சோமன்.  அவருக்கு நேர்ந்த அனுபவங்களை கேளுங்கள்.

9 வருடங்களுக்கு முன்பு  கொச்சியிலிருந்த ஒரு ஏஜெண்ட் மூலமாக தோட்டக்காரன் வேலைக்கு சோமனை ஒரு செளதிக்காரன் தேர்ந்தெடுத்தான். சோமன் 8-வது வகுப்பு வரைதான் படித்துள்ளார். வீட்டில் வறுமை காரணமாக, 'சரி, செளதிக்கு போய் கொஞ்சம் சம்பாதித்துவிட்டு வருவோம், பசி பிரச்னையாவது தீரும்' என்ற நம்பிக்கையில் தோட்டக்காரன் வேலைக்கு ஒப்புக்கொண்டார். மாதம் 800 ரியால் சம்பளம், 2 வருடங்களுக்கு ஒரு முறை விடுப்பு என்று ஒப்பந்தம் போடப்பட்டது. வீட்டில் இருக்கும் நகைகளை விற்று சிறிது கடனும் வாங்கி ஏஜெண்ட்டுக்கு 75000 ரூபாய் கொடுத்தார் சோமன். "எப்படியும் செளதிக்கு போய் சம்பாதிக்க போகிறோம், 2 வருடங்களில் இந்த கடனை எல்லாம் அடைத்து விடலாம்" என்று நினைத்தார்.

செளதிக்கு வந்து சேர்ந்த உடனேயே சோமனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமான நிலையத்தில் அவரை வரவழைக்க வந்திருந்த செளதிக்காரன், முதலில் அவருடைய கடவுச்சீட்டை (passport) பிடுங்கிக்கொண்டான். பிறகு வண்டியில் உட்கார வைத்து பல மணி நேரம் பாலைவனத்தில் அவரை அழைத்து சென்றான்.

வெகு தூரம் பாலைவன மணலில் சென்ற பிறகு கீற்று கொட்டகையை போல ஒரு இடம் தென்பட்டது. அந்த இடத்தை சுற்றி ஒரு 25 ஒட்டகங்கள் இருந்தன. வண்டியை நிறுத்திய செளதி, சோமனை இறங்க சொன்னான். ஒரு பெரிய  நிறைய தண்ணீரையும் 'கபூஸ்' என்ற சுக்கா ரொட்டி ஒரு 15ம் கொடுத்து விட்டு, இனிமேல் இந்த ஒட்டகங்களை பார்த்து கொள்வது தான் உன்னுடைய வேலை என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

வாரம் ஒரு முறை அந்த செளதிக்காரன் வந்து தண்ணீரும் 15 கபூஸையும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவான். பேச்சு துணைக்கு கூட அள் இல்லை. மைல் கணக்கில் வெறும் மணல் தான். அவருடைய நிலைமையை யோசித்து பாருங்கள். ஒரு நாள், இரண்டு நாட்கள் இல்லை, ஒரு வாரம் இரண்டு வாரங்கள் இல்லை, 5 வருடங்கள் இதே போல கழிந்துவிட்டன. சோமனின் உடல் நலமும் வெகுவாக பாதிப்படைந்தது. ஆனால் அதை விட அவரின் மனம் கிட்டத்தட்ட பித்து பிடித்தது போல ஆகிவிட்டது.

ஒரு முறை இதே போல செளதிக்காரன்  வந்த போது, சோமன் அவனிடம்  தான் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவர் மேல் பரிதாபப்பட்டு செளதிக்காரன் அவரை அழைத்துக்கொண்டு சில மணி நேரம் பயணம் செய்து கடைசியில் ஜூபைல் என்கிற ஊருக்கு வந்து சேர்ந்தான். அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவரை பார்ப்பதற்காக வெளியே உட்கார்ந்திருந்தார்கள். 5 வருடங்களுக்கு பிறகு வெளி மனித முகத்தை பார்த்த சோமனுக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அந்த மருத்துவமனையில் எனது நண்பர் கணேஷ் தனக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் சென்றிருந்தார். யாருடனோ தொலைபேசியில் மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்த போது சோமன் அதை கேட்டுவிட்டார். உடனே அவரிடம் ஓடி வந்து அவரது கால்களில் விழுந்து "எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்" என்று கதறினார்.

அதற்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. அந்த செளதிக்காரனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது.

தெய்வாதீனமாக அதே சமயத்தில் கணேஷுக்கும் அவரது அலுவலகத்தில் வேலை செய்ய ஒரு ஆள் தேவைப்பட்டது. உடனே அவர் செளதிக்காரனிடம் சோமனுடைய‌ விசாவை இவரது நிறுவனத்துக்கு மாற்றி தருமாறு கேட்டார். அதற்குண்டான செலவுகளை தனது நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறினார். முதலில் இதற்கு ஒப்புக்கொள்ளாத செளதிக்காரன் அரை மனதாக பிறகு ஒப்புக்கொண்டான். விசா மாற்றப்படும் வரை சோமன் தனது அலுவலகத்திலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் (கணேஷ் அந்த நிறுவனத்தின் மேலாளர் என்பதால் இன்னும் வசதியாகிவிட்டது).

சோமனுக்கு கையில் பணமே இல்லை. இவருக்கு பேசியபடி 800 ரியால் தராமல் மிக மிக குறைந்த சம்பளத்தை 5 வருடங்களுக்கு கணக்கு பார்த்து ஒட்டுமொத்தமாக செளதி கொடுத்தான். எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று சோமனும் அதற்கும் ஒப்புக்கொண்டார்.ஒரு 10 நாட்களில் சோமனுடைய விசா கணேஷுடைய நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.  அன்று தான் அவரும் எனது நண்பரது அலுவலகத்தில் சேர்ந்திருந்தார்.

அவரது அனுபவங்களை கேட்ட பிறகு எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. நானும் எனது நண்பரும் பேசிக்கொண்டிருக்கும் போதே சோமன் இரு கோப்பைகளில் எங்களுக்கு தேனீரை கொண்டு வந்து வைத்தார். பிறகு அங்கேயே ஒரு ஓரமாக தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்.

எனது நண்பர் "என்னப்பா?" என்று கேட்க, சோமன் மிகவும் தயங்கி தயங்கி , "நான் ஊருக்கு பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. தயவு செய்து என்னுடைய ஊருக்கு போன் போட்டு கொடுக்கிறீர்களா" என்று பரிதாபமாக கேட்டார். உடனே கணேஷ் தன்னுடைய கைப்பேசியிலிருந்தே அவருடைய கிராமத்துக்கு போன் செய்தார். அப்பொழுதெல்லாம் கைப்பேசி இப்போது இருப்பதை போன்று அனைவரிடமும் இல்லை. இவரது வீட்டுக்கு 5 வீடு தள்ளி ஒரு வீட்டில் போன் இருந்தது. "செளதியிலிருந்து சோமன் பேசுகிறேன், என்னுடைய மனைவியை கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? நான் 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் போன் செய்கிறேன்" என்று கூறினார்.

வாழ்க்கையிலேயே மிக நீண்ட 5  நிமிடங்கள் அதுவாகத்தான் இருந்திருக்கும். சோமனுக்கு கை நடுங்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் அதே எண்ணுக்கு போன் செய்தார்.

"சாந்தா..." என்று மிகவும் சன்னமான குரலில் ஆரம்பித்தார். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. ஒரு நிமிடம் முழுவதும் இங்கே இவரும் ஊரில் அவரது மனைவியும் 'ஓ' வென்று விடாமல் அழ ஆரம்பித்தனர்.அந்த ஒரு நிமிடத்துக்கு இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வெறும் அழுகை தான். கூடி இருந்த எங்கள் அனைவருக்குமே கண்கள் கலங்கிவிட்டன. 5 வருடங்களாக இவர் தன் மனைவி மக்களிடம் பேசவே இல்லை. இவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா என்றே தெரியாமல் அவரது குடும்பம் இத்தனை நாட்கள் தவித்து கொண்டு இருந்திருக்கிறது.

இப்படியும் கூட மனிதர்களா? இவரை மாதிரி எத்தனையோ இந்தியர்கள் இங்கு செளதியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மீன்பிடி தொழிலில் இருப்பவர்கள், பெட்ரோல் பங்க்குகளில் வேலை செய்பவர்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள், சாலை போடுபவர்கள், பண்ணைகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுடைய பாடு மிக மிக பரிதாபகரமானது. பலருக்கு சம்பளம் கொடுத்து மாதக்கணக்காகிறது. பிச்சைக்காரர்களை போல பிறரை நம்பி வாழ வேண்டிய நிலைமை இவர்களுக்கு.

இந்திய தூதரகமும் இவர்களை கண்டுகொள்வதில்லை என்று ஒரு புகார் உள்ளது. ஒரு முறை இதை பற்றி தூதரக அதிகாரி ஒருவரிடம் நேரேயே கேட்டுவிட்டேன். "பிரிட்டன், அமெரிக்க தூதரகங்கள் தங்களது குடிமக்களை எப்படி பாதுகாக்கின்றன? ஒரு வெள்ளைக்காரனைக்கூட நீங்கள் சிறையில் அடைக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களது தூதரகம் மிக மிக பலமானது. இந்தியர்களை மட்டும் ஏன் இப்படி நீங்கள் பாதுகாக்க முடியவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர் கூறியது வியப்பாக இருந்தது. "செளதியில் இந்தியர்கள் மட்டுமே 5 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இதில் 90% மிக மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இத்தனை பேருக்கு நாங்கள் எப்படி சேவை செய்ய முடியும்? எங்களால் முடிந்த வரை உதவி செய்கிறோம்" என்றார்.

இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் நமது மக்களுக்கு முதலில் செளதியை பற்றி விபரங்களை தெரிந்தவர்கள் எடுத்து கூற வேண்டும். "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து ஏஜெண்ட்டிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாவது செளதியில் வேலை வாங்கி சென்று விடவேண்டும்" என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை இந்த நிலைமை மாறாது.

"எப்படியாவது செளதிக்கு வந்து விட வேண்டும், அது எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை" என்று நினைப்பவர்களுக்கு இங்கு உள்ள நிலைமையை எடுத்து கூற வேண்டும். நமது அரசாங்கத்தை நம்பி பயனில்லை. முதலில் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம்.

இப்படி ஏமாற்றப்படுபவர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் தான். நம்முடைய பாமர மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி செளதிக்கு வர தயாராக இருப்பவர்கள் ஏன் தங்களுடைய சொந்த ஊரிலேயே அந்த ஒரு லட்சம் ரூபாயை முதலீடாக போட்டு ஒரு சிறிய பெட்டிக்கடை ஆரம்பிக்க கூடாது? கிராமங்களில் போணி ஆகவில்லையா? சென்னை போன்ற நகரங்களில் இப்போதெல்லாம் தச்சு வேலை செய்பவர்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள் போன்றவர்களுக்கு ஏக கிராக்கி. இதில் ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம். கார் மெக்கானிக்குகள் எவ்வளவு பணம் செய்கிறார்கள் தெரியுமா(குறை கூற வரவில்லை, அந்த அளவுக்கு அவர்களுக்கு Demand இருக்கிறது). அட ஒன்றுமே தெரியாதவரா? சென்ட்ரல் இரயில் நிலையத்திலோ கோயம்பேடிலோ சென்னை துறைமுகத்திலோ சுமை தூக்கலாமே. கெளரவமாகவும் நேர்மையாகவும் வாழ ஆயிரம் வழிகள் உள்ளனவே.

Wednesday, 4 March 2009

சூரத் நினைவுகள்=1

சூரத்திலிருந்து பம்பாய்க்கு அடிக்கடி அலுவலக விஷயமாக இரயிலில் செல்ல
வேண்டி இருந்தது. சூரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு "பறக்கும் ராணி" (Flying Rani)
என்ற இரயிலில் தான் நான் வழக்கமாக செல்வேன். இது பம்பாய்க்கு 10 மணி
அளவில் சென்று விடும். அதே போல் மாலை 5.30 மணி அளவில் பம்பாயிலிருந்து கிளம்பி சூரத்துக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்து விடும். ஒரே நாளில்
பம்பாய் சென்று வர வசதியாக இருந்ததால் இந்த இரயில் மிகவும் பிரபலமாக‌
இருந்தது. அத‌னால் எப்போதுமே இந்த‌ இர‌யிலில் கூட்ட‌ம் இருந்து கொண்டே
இருக்கும்.

முன் ப‌திவு செய்யாத‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ இர‌யிலில் முன்பதிவு
செய்தவர்கள் பெட்டியில் ஏறி ஏதாவ‌து காலி இருக்கையில் அம‌ர்ந்து
விடுவார்க‌ள். பிற‌கு ப‌ய‌ண‌ச்சீட்டு ப‌ரிசோத‌க‌ர் வ‌ந்த‌வுட‌ன் முன்
ப‌திவுக்கான‌ க‌ட்ட‌ண‌த்தை கொடுத்து விடுவார்க‌ள். இது வ‌ழ‌க்க‌மாக‌
ந‌ட‌க்கும் ஒன்று தான்.

இதே போல், ஒரு முறை ப‌ம்பாய் செல்வ‌த‌ற்காக‌ நான் இந்த‌ இர‌யிலில் ஏறி
என‌து இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். என‌து ப‌க்க‌த்து இருக்கை
காலியாக‌ இருந்த‌து. ச‌ரி, ஒரு வேளை இந்த‌ இருக்கைக்கான‌ ஆள் வ‌ர‌வில்லை
போலிருக்கிற‌து என்று நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி சிறிது
தூர‌ம் சென்றிருக்கும். மிக‌வும் அழுக்கான‌ குர்தாவுட‌ன் ஒரு ஆள் அந்த‌
காலி இருக்கையில் வ‌ந்து அம‌ர்ந்து கொண்டான்.

என‌க்கோ உள்ளூர பயம். 'இவ‌னை பார்த்தால் பிச்சைக்கார‌ன் போல‌
இருக்கிறான். ச‌ம‌ய‌ம் பார்த்து ந‌ம்முடைய‌ ப‌ர்ஸை அபேஸ் செய்ய‌
போகிறான். நாம் தான் உஷாராக‌ இருக்க‌ வேண்டும்' என்று
நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி ஒரு முக்கால் ம‌ணி நேர‌ம்
இருக்கும். ஒரு சிறிய‌ ட‌ப்பாவை திற‌ந்தான். உள்ளே ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில்
ஜிலேபி இருந்த‌து. என்னிட‌ம் ஒரு ஜிலேபியை கொடுத்தான். நான் உஷாராக‌
ம‌றுத்து விட்டேன். அவ‌ன் விட‌வில்லை. நான் க‌டைசியில் என‌க்கு உட‌ல்
ந‌ல‌ம் ச‌ரியில்லை என்று கூறி ச‌மாளித்து விட்டேன்.

' இவ‌ன் ப‌ய‌ங்க‌ர‌மான‌ ஆளாக‌ இருப்பான் போலிருக்கிற‌தே. முத‌ல்
ஜிலேபியை என்னிட‌ம் கொடுத்த‌திலேயே தெரிந்து விட்ட‌து இவ‌ன் ஏதோ ஒரு
திட்ட‌த்துட‌ன் தான் வ‌ந்திருக்கிறான்'

இரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென்று என்னிடம் பேச்சு கொடுக்க
ஆரம்பித்தான்.

"நீங்கள் பம்பாய் செல்கிறீர்களா?"

"ஆமாம்"
(மனதுக்குள் : இல்லடா கலப்பை, ஆப்கானிஸ்தான் செல்கிறேன்)

"இரயில் சரியான நேரத்தில் தான் செல்கிறது, இல்லையா?"

"ஆமாம்"
(டேய், டேய், என‌க்கு தான் நேர‌ம் ச‌ரி இல்லை)

"நீங்க‌ள் சூர‌த்தில்தான் இருக்கிறீர்க‌ளா"

"ஆமாம்"
(இல்லை, செள‌தியில் இருக்கிறேன். அங்கிருந்து ஒட்டக‌த்தின் மேல் ஏறி
சூர‌த்துக்கு வ‌ந்தேன்)

இப்ப‌டியாக‌ அவ‌ன் கேட்ட‌ கேள்விக‌ளுக்கெல்லாம் "ஆமாம்" என்று ஒரே ப‌தில்
கூறினேன். பேச்சை வ‌ள‌ர்த்தால் தானே பிர‌ச்னை?

திடீரென்று எனது வலது கையை பிடித்து இழுத்து அதில் இருந்த மோதிரத்தை
உன்னிப்பாக கவனித்தான். நான் வெலவெலத்து போய் விட்டேன். உடனே எனது கையை இழுத்து கொண்டு ஒரு முறை முறைத்தேன். எனது மோதிரத்தில் ஒரு ஒற்றை வைரக்கல் இருந்தது. அதை தான் அவன் உற்று பார்த்தான். எனது சந்தேகம் சரியாகி விட்டது போல. இவனிடம் 200% உஷாராக இருக்க வேண்டும்.

அவன் சிரித்துக்கொண்டே, "இது நல்ல வைரம்" என்றான். அடப்பாவி, தீர்மானமே
செய்து விட்டான் போல இருக்கிறது.

அதற்கு பிறகு எனக்கு இருப்பே கொள்ளவில்லை. 'எப்படா பம்பாய் வரும்' என்று
ஆகிவிட்டது. இந்த திருட்டுப்பயலிடமிருந்து எப்பொழுது தப்பிக்க போகிறோம்
என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இரயில் திடீரென்று மெதுவாக செல்ல ஆரம்பித்தது. ஜன்னல் வழியே வெளியே
பார்த்தேன். இப்போது இரயில் நின்றே விட்டது. சிகப்பு சிக்னலில் இரயில்
நின்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நிமிடங்களில் போரிவலி என்ற இரயில்
நிலையம் வந்து விடும். இந்த நிலையத்தில் முக்கால்வாசி பேர் இறங்கி
விடுவார்கள். வண்டி சிக்னலுக்காக காத்திருந்தபோது போரிவலியில் இறங்க
வேண்டியவர்கள் தத்தம் சாமான்களை இறக்கி கீழே இறங்குவதற்கு தயாராக
இருந்தார்கள்.

அப்போது என் அருகில் இருந்த திருட்டு பிச்சைக்காரன் தனது இடுப்பிலிருந்து
ஒரு சுருக்கு பையை எடுத்தான். ஒரே ஒரு நொடி தான். அந்த பையை நன்றாக
முடித்து போட்டு தனது அழுக்கு குர்த்தாவுக்குள் வைத்துக்கொண்டான். ஆனால்
அந்த ஒரு நொடியில் அந்த பைக்குள் இருந்ததை நான் பார்த்து விட்டேன்.
எனக்கு மிக பெரிய அதிர்ச்சி. அந்த பைக்குள் நான் பார்த்தது பல விதமான
சிறிய கற்களை போன்ற பொருட்கள். ஆனால் பளபளவென்று மின்னியது போல இருந்தது.

இரயில் மெதுவாக நகர்ந்து தளத்துக்குள் நுழைந்தது. நான் அவ‌னை பார்த்து
"நீங்க‌ள் என்ன‌ வேலை செய்கிறீர்க‌ள்?" என்று கேட்டேன். அந்த
'பிச்சைக்காரன்'  "நான் சூரத்தில் வைரங்களை வெட்டும் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு கீழே இறங்கி விட்டான்.

அவனது சுருக்கு பையில் இருந்தது அத்தனையும் வைர கற்கள் என்று அப்போது
தான் எனக்கு உறைத்தது. இத்தனை நேரம் ஒரு சாதாரண பயணி போல என் அருகில் அமர்ந்து வந்திருக்கிறான். தன்னிடம் இருக்கும் பொருள் யாருக்கும்
தெரியக்கூடாது என்பதற்காக இப்படி அழுக்கு உடையில் வந்திருந்தானோ என்னவோ.

ஒருவரை அவரின் உடைகளை வைத்து எடை போடுவது எவ்வளவு தவறு என்று அன்று எனக்கு தெரிந்தது. அந்த இரயில் பயணமும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

நான் என்னவோ அவன் என்னுடைய ஒற்றைக்கல் வைர மோதிரத்தை
தான் திருடப்போகிறான் என்று நினைத்து கொண்டிருந்தேன். அவன் தன்னிடம்
இருக்கும் வைரங்களை மற்றவர்கள் திருடிவிடக்கூடாது என்று பிச்சைக்காரன்
உடையில் இருந்தானோ என்னவோ? கவியரசர் அனுபவித்து அல்லவா
எழுதியிருக்கிறார்,

'ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா'

Wednesday, 18 February 2009

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

சென்னையில் வீட்டை ஒழித்து கொண்டிருந்த போது ஒரு நாள் பழைய கண்டா முண்டா சாமான்களை எல்லாம் வெளியே எறிந்து கொண்டிருந்தேன். 1970ம் ஆண்டு டைரி, கரையான் கடித்து துப்பிய கறுப்பு வெள்ளை புகைப்படம், ஓடாத அலாரம் கடிகாரங்கள், அறுந்து போன காஸெட்கள், பழைய 'மங்கை' பத்திரிகை, 'என்றைக்காவது உபயோகப்படும்' என்று காப்பாற்றி வைத்திருந்த பேனாக்கள்,(இவற்றில் ஒன்று கூட எழுதவில்லை என்பது வேறு விஷயம்), இலுப்பை கரண்டி, அந்த காலத்து ரேஸர் (!) என்று ஒவ்வொறு குப்பையாக பரண் மீதிருந்து வெளியே வந்தன. கடைசியில் ஒரு பிலிப்ஸ் வானொலி பெட்டியை வெளியே எடுத்தேன். பழைய நினைவலைகளில் மூழ்கி விட்டேன்.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டி வந்திருக்கவில்லை. வானொலி தான் வீட்டில் இருந்த ஒரே மின்னணு கருவி. காலையில் 5 மணிக்கெல்லாம் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால், 'வந்தே மாதரம்' என்ற பாடலை தினமும் வானொலி மூலம் கேட்டுதான் மனப்பாடம் ஆகியது. சினிமா பாடல்களை வானொலி மூலம் விரும்பி கேட்போம். எனது தந்தைக்கோ நாங்கள் வானொலி முன்பு உட்கார்ந்து சினிமா பாடல்களை கேட்டால் அறவே பிடிக்காது. "போங்கடா, போய் படிக்கிற வேலையை பாருங்க" என்று விரட்டி விடுவார்.

ஞாயிற்று கிழமை மட்டும் இதற்கு விதிவிலக்கு இருந்தது. வானொலியில் வரும் 'பாப்பா மலர்' போன்ற நிகழ்ச்சிகளை விரும்பி கேட்போம்.  இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. தமிழ் நிகழ்ச்சிகளை கே.எஸ். ராஜா மிக அழகாக வழங்குவார். அவரின் குரலை கேட்பதற்காகவே பல நாட்கள் காத்து கிடப்போம். இதற்கு போட்டியாகவே 'விவித் பாரதி' என்ற தனி வர்த்தக ஒலிபரப்பை அகில இந்திய வானொலி ஆரம்பித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!  வர்த்தக ஒலிபரப்பு என்பதால் விளம்பரங்கள் நிறைய வரும். அவற்றை கேட்பதே ஒரு தனி சுகம். "இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் போன்றைய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது கோபால் பல்பொடி!", "ஆரோக்கிய வாழ்வினையை காப்பது லைப்பாய்...", "Pond's Dreamflower talc", "பொன்னான புதிய ரெக்ஸோனா", ஹார்லிக்ஸின் "சுசித்ரா, ஷங்கர், ராஜூ, சுஜாதா" போன்ற விளம்பரங்களில் வரும் பாடல்கள் திரைப்பட பாடல்களுக்கு ஈடாக பிரபலமாக இருந்தன.

வானொலிப்பெட்டியை 'ஆன்' செய்தால் உடனே சத்தம் வெளி வராது. இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பச்சை நிறத்தில் மேலிருந்து கீழாக இரு கோடுகள் தெரியும். மெல்ல வலது புறத்தில் உள்ள tuner மூலம் திருப்பி கொண்டே வந்தால் ஏதோ ஒரு இடத்தில் இந்த இரண்டு பச்சை நிற கோடுகளும் ஒன்று சேரும். அது தான் சரியான அலைவரிசை. அந்த அலைவரிசையில் தான் ஒலி கேட்கும். இல்லையென்றால் கேட்காது.

எனது தந்தை இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கில செய்திகளை விடவே மாட்டார். 15 நிமிடங்களில் உலக நடப்புகள் அனைத்தும் அதில் இருக்கும். தினமும் வரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனது தந்தையிடம் ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டேன். "ஏன்ப்பா செய்திகளின் முதல் வரி மட்டும் எப்பொழுதும் 'The Prime Minister Mrs. Indira Gandhi...' என்றே ஆரம்பிக்கிறது?" அவர் அதற்கு பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டார். அந்த சிரிப்புக்கு அர்த்தம் பல வருடங்களுக்கு பிறகுதான் புரிந்தது!

வருடாவருடம் பிப்ரவரி மாதத்தின் கடை நாளன்று 'பட்ஜெட்' செய்திகள் வெளிவரும். இரவு 9 மணிக்கு தான் எந்தெந்த விலை ஏறியிருக்கிறது என்று அறிவிப்பார்கள். வழக்கம் போல பெட்ரோல் விலை ஏறி விட்டது என்று அறிவிப்பு வந்தால் உடனே எனது தந்தை வண்டியை அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு எடுத்து சென்று ரொப்பிக்கொண்டு வந்து விடுவார் (மறு நாளிலிருந்து விலை ஏற்றம் அல்லவா, அதற்காக!).

அந்த காலகட்டத்தில் வீட்டில் வானொலி பெட்டி வைத்திருந்தால் அதற்கு license வாங்கவேண்டும். கப்பம் கட்டுவது போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை இதற்காக தனியாக வரி கட்டியே தீர வேண்டும். நினைத்தாலே வியப்பாக இருக்கிறது இல்லையா? தேர்தல் நேரத்தில் வானொலி செய்திகளுக்கு மிகவும் கிராக்கி ஏற்பட்டு விடும். எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன என்று முதலில் தெரிந்து கொள்வதற்கு  தொண்டர்களுக்குள் போட்டியே இருந்தது.

1971ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மறக்கவே முடியாது. இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டிருந்த நேரம். சென்னை நகரம் முழுவதும் இரவு ஏழு மணி முதல் அரசாங்கத்தின் 'blackout ' உத்தரவு இருந்தது. வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விடவேண்டும். தெருவிளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விடுவார்கள். திடீரென்று வானில் தாழ்வாக பறக்கும் விமானத்தின் ஓசை கேட்கும். 'திக்திக்' என்று இருக்கும். அப்போது என்ன நடக்கிறது என்றே தெரியாது. அனைவரும் வானொலிப்பெட்டியின் முன்பு உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்து கேட்டு கொண்டிருப்போம். பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவாகி விட்டது என்றும் இந்தியாவிடம் பாகிஸ்தான் போரில் தோற்றுவிட்டது என்றும் வானொலியில் அறிவிப்பு வந்தவுடன்  அனைவரும் குதூகலத்துடன் ஆடிப்பாடி கொண்டாடினார்கள். நாங்கள் சிறுவர்களாக இருந்ததால் எதற்காக இந்த கொண்டாட்டம், என்ன, ஏது என்றே தெரியாது. ஆனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இலவசமாக சாப்பிட இனிப்புகள் சாக்லேட்டுகள் கிடைத்தன என்பதால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான்!

1975ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்திருந்த நேரம். எந்த அலைவரிசையை திருப்பினாலும் அரசாங்கத்தை புகழ் பாடி '20 அம்ச திட்டத்தை' பற்றி நிகழ்ச்சிகள், பாடல்கள் என்று ஓயாமல் நிகழ்ச்சிகள் இருக்கும். வானொலி மீது ஒருவித வெறுப்பே எங்க‌ளுக்கு வந்து விட்டது. பின்னே என்ன? சுவாரசியமாக பாட்டு கேட்டு கொண்டே இருக்கும் போது அதை நிறுத்திவிட்டு "உழைப்பே உயர்வுக்கு உறுதுணை" என்று அறிவிப்பாளரின் குரல் ஒலித்தால் கடுப்பாக இருக்குமா இருக்காதா?

பல பழைய நினைவுகளை இந்த பிலிப்ஸ் வானொலி பெட்டி மீண்டும் நினைவுபடுத்தியது. தொலைக்காட்சி வந்த பிறகு வானொலி கேட்கும் பழக்கம் கிட்டத்தட்ட நின்றேவிட்டது என்று கூறலாம். இப்போது கூட எப்.எம் அலைவரிசைகளில் வரும் பாடல்களுக்காகவே வானொலி பெட்டியை இன்னமும் கடைசி அடக்கம் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இப்போது தொலைக்காட்சி பெட்டி, கணிணி, Ipod என்று பலவிதமான புதிய சாதனங்கள் வந்து விட்டன. சாதனங்கள் பெருக பெருக மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து பேசி அரோக்கியமாக‌ நேரத்தை செலவிடுவதை மெல்ல மெல்ல மறந்து போய்விட்டனர் என்றே தோன்றுகிறது. பொங்கல், தீபாவளி நாட்களில் அனைவரும் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து கொண்டு சினிமா காட்சிகளை பார்ப்பதையே விரும்புகின்றனர். மற்ற நாட்களில் சீரியல்கள். வெறும் வானொலி பெட்டி மட்டும் இருந்தபோது இருந்த நிம்மதி இப்போது எங்கே காணாமல் போய்விட்டது? எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு?

Tuesday, 10 February 2009

மாற்றத்தை மாற்ற முடியாது!

எனது புதிய வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. பழைய கள் தான். மொந்தை மட்டும் தான் புதிது. பருகிவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்களேன்.

திடீரென்று ஏன் இந்த மாற்றம்? மாற்றம் தான் வாழ்க்கைக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது அல்லவா? தினமும் அதே வேலை, அதே முகங்கள், அதே கணினி, அதே அதே என்று செய்ததையே செய்து கொண்டிருந்தால் விரக்தி வந்து விடாதா? (அதற்காக அதே மனைவியா என்று கேட்காதீர்கள்!). இந்த பதிவை எழுத மற்றும் ஒரு காரணம் உண்டு.

என்னுடைய நெருங்கிய நண்பர் டேவிட். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கடந்த 27 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அவருக்கு 60 வயது நிரம்புவதால் ஏப்ரல் மாதத்திலிருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்போவதாக (பணி நீக்கத்துக்கு இப்படி ஒரு கெளரவமான வார்த்தை) மேலதிகாரி கூறினார். அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. "நான் என்ன தவறு செய்தேன்? வயதை கூறி இப்படி என்னை நீக்குகிறார்களே. இன்னும் 5 வருடங்கள் வேலை செய்ய என் உடம்பிலும் மனதிலும் சக்தி உள்ளதே" என்று புலம்பி தீர்த்து விட்டார். இத்தனைக்கும் அவரது மகனும் மகளும் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆனால் இவர் தான் பாவம்.

இந்த் 27 வருட வாழ்க்கையில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக செளதியில் வாழ்ந்து வந்தார். என்ன செய்வது, குடும்ப நிலவரம் அந்த மாதிரி. இங்கு வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களை போல இவரும் குடும்பத்துக்காக தியாகம் செய்து தனி மனிதனாக வேலை செய்தார். இதனால் இவரது குடும்பம் செழிப்பானது என்னவோ உண்மைதான். ஆனால் இவரை பொறுத்த வரை வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி வீணாகி விட்டது அல்லவா?

இப்பொழுது ஓய்வு பெறும் வேளையில் அந்த மாற்றத்தை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

ஊரில் இருக்கும் உறவினர்கள் "இவ‌னுக்கு என்ன‌? துபாயில் வேலை செய்கிறான். கொள்ளையாய் ப‌ண‌ம் இருக்கும்" என்று மிக‌ சுல‌ப‌மாக‌ கூறிவிடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தெரியும் இங்கு செள‌திக்கார‌ன் எவ்வ‌ள‌வு மோச‌மான‌வ‌ன் என்றும் இங்கு கோடை கால‌த்தில் 52 டிகிரி வெயில் என்றும் குளிர் கால‌த்தில் 0 டிகிரி ப‌னி என்றும்.

வாழ்க்கையில் நம் அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது. முதலில் ஏற்கனவே இருக்கும் கடன்களை அடைக்க. பிறகு வீடு கட்ட. பிறகு வீட்டு க‌ட‌னை அடைக்க. அதற்கு பிறகு குழந்தைகளின் படிப்பு. அது முடிந்த பின் கல்லூரி நுழைவு மற்றும் தேர்வுக்கான செலவுகளை சமாளிக்க. அதன் பின் கல்யாணம். சரி ஒரு வழியாக இது முடிந்தது என்று நினைத்தால் வரிசையாக வளைகாப்பு, சீமந்தம், பிரசவ செலவு என்று ஓயாத அலைகளை போல ஒன்றன் பின் ஒன்றாக பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது.

இதன் நடுவில் வீட்டில் பெரியவர்களோ அல்லது வேறு யாராவது நோய்வாய் பட்டாலோ கேட்கவே வேண்டாம். இவை எல்லாவற்றையும் கடந்து 'அப்பாடா' என்று மூச்சு விடும் வேளையில் நமக்கே முதுமையும் நோயும் வந்து விடுகிறது. இறைவா! இந்த சுழற்சியிலிருந்து விடுதலை எப்போது?

முதுமையும் மூப்பும் "நான் ஒருவன் இருக்கிறேன்" என்று இறைவன் நமக்கு மீண்டும் மீண்டும் நினைவு கூர்வதற்கு தானோ? டேவிட்டை போலவே எனக்கும் ஒரு நாள் முதுமை வரும். என்னையும் கட்டாய ஓய்வு பெற கூறுவார்கள் (அது வரை நான் இங்கே இருந்தால்). சரி,  இங்கு இல்லை என்றால் வேறு எங்காவது. இதில் இருந்து மீண்டு வருவது எப்போது?

யோசித்து பார்க்கும் போது,  மாற்றம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்பது நிதர்சனமாக தெரிகிறது. எனது பாட்டன் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் எனக்கே வேலை கிடைத்திருக்காது அல்லவா? இதைத்தானே கவியரசர் "வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது" என்று கூறினார்? சரி, மாற்றம் என்பது மாற்ற முடியாதது தான். அதை மனது ஏற்று கொள்ள என்ன செய்ய வேண்டும்?

முதலில், நடப்பது எல்லாம் நம்மால் தான் என்கிற நினைப்பை நாம் விட்டொழிய வேண்டும். நம்மை விட பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. எப்பொழுது "நான்" என்கிற அகந்தை நம்மை விட்டு விலகிறதோ, அப்பொழுதே மனது லேசாகிவிடுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்க வேண்டிய நேரத்தில் சம்பவங்கள் நடந்தே தீரும். ஒன்று நடக்க கூடாது என்று இருந்தால், தலை கீழாக நின்றாலும் கண்டிப்பாக அது நடக்காது.

அதிகாலையில் கிழக்கே உதிக்கு சூரியனை பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது? கூட்டம் கூட்டமாக பறவைகள் பறப்பதை பாருங்கள். ஆஹா, எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது? குழந்தைகளின் பேச்சை கேளுங்கள். இதை விட பேரின்பம் உண்டோ?

பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ கிடைத்த இறையை சேமிக்க வேண்டும் என்றோ எண்ணமே வருவதில்லை. சொல்ல போனால், அவைகளுக்கு அடுத்த வேளை உணவு கூட தேடினால் தான் கிடைக்கும். ஆனால் அதற்காக அவை கவலைப்படுவதில்லை. மனிதன் மட்டும் தான் கவலையில் மூழ்கி தன்னை தானே முதுமைக்கு தள்ளிக்கொள்கிறான். இதில் சண்டை சச்சரவு வேறு.

பக்கத்து தெருவுக்கு போவதற்கு  வண்டியை எடுக்காமல் காலார நடந்து செல்லுங்கள். உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி வருவதை உணர்வீர்கள். உண்மையான நண்பர்களிடம் மனம் விட்டு சிரித்து பேசுங்கள். மனது பத்து வருடம் இளமையாகி விடும். இதை எல்லாம் விட்டுவிட்டு பாழாய்ப்போன பணத்துக்காக எவனிடமோ சேவகம் செய்து அடிமை வாழ்வு வாழ்ந்து அந்த வாழ்க்கையே அர்த்தமற்றதாகி போவதற்கா நம்மை இறைவன் படைத்தான்? மாற்றத்தை எதிர்கொண்டு வாழ்க்கையை இன்பகரமாக அனுபவிப்போம்.