Sunday, 20 July 2008

சென்னை ஆட்டோக்காரர்கள்

சென்னை நகரில் ஆட்டோவில் ஏறும் முன்பு பேரம் பேசிவிட்டு தான் ஏற வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 'மீட்டர் படி கொடுக்கிறேன்' என்று தெரியாமல் நீங்கள் ஆட்டோவில் ஏறி பயணம் செய்து விட்டால் நியாயமான வாடகையை விட மூன்று மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கும். மீட்டருக்கு 'சூடு' வைத்து திருத்தியிருப்பார்கள். இரண்டாவது காரணம் (இது முக்கியமானது), ஆட்டோக்காரர்களின் வசையை கேட்க விரும்பாமல் பலர் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுவதுதான். சிறப்பான சென்னை தமிழில் அர்ச்சனை செய்து அனுப்பி விடுவார்கள். புதிதாக சென்னைக்கு வருபவர்கள் இந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் மாட்டிக்கொண்டால் அதோகதி தான். இது போன்ற ஆட்டோக்காரர்களுக்கு பயந்து நிறைய பேர், குறிப்பாக பெண்கள், இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் சில சமயம் பேரம் பேசிவிட்டு பயணம் செய்தால் கூட நம்மை ஏமாற்ற நினைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களும் இருக்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. எனது 70 வயது தந்தை நுங்கம்பாக்கத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு ஒரு ஆட்டோவை பிடித்தார். வழக்கம் போல, ஏறும் முன் பேரம் பேசிவிட்டு 60 ரூபாய் என்று ஓட்டுனர் ஒப்புக்கொண்ட பிறகு ஆட்டோவில் ஏறினார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு ஊர்வலம் வந்ததால் வண்டி ஒரு 10 நிமிடம் ஒரே இடத்தில் நிற்க வேண்டியதாக போய்விட்டது. வீட்டுக்கு வந்த பிறகு ஆட்டோக்காரரிடம் 60 ரூபாயை கொடுத்தால் வாங்க மறுத்து விட்டார். 10 நிமிடம் ஒரே இடத்தில் நின்றதால் பெட்ரோல் செலவாகி விட்டது என்றும், அதற்காக 100 ரூபாய் தரவேண்டும் என்றும் ஓட்டுனர் கேட்டார்.
எனது தந்தை பேசியபடி 60 ரூபாய்தான் கொடுப்பேன் என்று கூறி விட்டார். உடனே ஆட்டோக்காரன் வாய்க்கு வந்தபடி கன்னா பின்னாவென்று சென்னை தமிழில் அந்த 'ஆத்தா' வார்த்தையை உபயோகப்படுத்தி கத்த ஆரம்பித்து விட்டான். கொடுத்த அந்த 60 ரூபாயை முகத்தில் வீசி எறிந்து விட்டு அந்த‌ ஏரியாவில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள எல்லோரையும் தனக்கு ஆதரவாக பேச அழைத்துக்கொண்டு வந்து கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டான். எங்களுக்கோ அவன் வசை பாடியது பெரிய அவமானமாகி விட்டது. அவன் உபயோகித்த வார்த்தைகள் அப்படி.

எனது தந்தை அசரவில்லை. வீட்டுக்குள் வந்து உடனே காவல் துறைக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூறினார்.


நான் வெளியே வந்து "இதை பார். உன்னிடம் பேசிய தொகையை கொடுத்து விட்டார். இங்கிருந்து உடனே கிளம்பாவிட்டால் உனக்கு தான் கெட்ட நேரம். காவல் துறைக்கு தகவல் சொல்லியாகிவிட்டது" என்றேன். வந்திருந்த கூட்டத்தில் பலர் உடனே கலைய தொடங்கினர். ஆனாலும் இவனுக்கு ஆதரவாக 2 பேர் அதே இடத்தில் நின்று கொண்டு வசை பாடிக்கொண்டிருந்தனர்.

எனது தந்தை காவல் துறைக்கு போன் செய்து இரண்டே நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். ரோந்து பணியில் இருந்த ஒரு காவல் துறை ஜீப் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டது. அதை பார்த்த உடனேயே ஆதரவுக்கு வந்த இரண்டு ஆட்டோக்காரர்களும் ஓடி விட்டனர். இப்போது தகராறு செய்த ஓட்டுனன் மட்டும் தான் தனியாக இருந்தான்.

ஜீப்பிலிருந்து இறங்கிய காவல் அதிகாரி, நேராக எனது தந்தையிடம் வந்து நடந்த விஷயத்தை கேட்டார். ஆட்டோக்காரனுக்கு ஆத்திரம் பொங்கி எழ ஆரம்பித்தது. "ஏய் பெர்சு" என்று கத்தினான். அவ்வளவுதான். கண் இமைக்கும் நேரத்தில் போலீஸ் அதிகாரி பளார் என்று அவன் கன்னத்தில் ஒரு அடி விட்டாரே பார்க்கணும்!ஆட்டோக்காரனுக்கு பொறி கலங்கிவிட்டது. அந்த ஒரு அடியிலேயே சுருண்டு கீழே விழுந்து விட்டான். ஓஹோ, இது தான் போலீஸ் அடியா? திரைப்படங்களில் போலீஸ்காரர்கள் குற்றவாளிகளை அடிப்பது போல காண்பிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், நேரில் ஒரு போலீஸ் அதிகாரி அடித்த அடியை அப்போது தான் பார்த்தேன்.

அவர் ஒரே முறை தான் அடித்தார், ஆனால் அந்த அடி சரியான நெத்தியடி தான்! இதற்காகவே காவல் துறையினருக்கு பயிற்சி கொடுப்பார்களோ என்னவோ!
கீழே விழுந்த ஆட்டோக்காரனின் சட்டை காலரை கொத்தாக பிடித்து போலீஸ் அதிகாரி "என்னடா பேசற, மரியாதையா கொடுத்த பணத்தை வாங்கிட்டு போ" என்றார். அவன் பதில் எதுவும் பேசாமல் கீழே விட்டெறிந்த ரூபாய் நோட்டுக்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். காவல் அதிகாரி எனது தந்தையிடம் "நீங்க உள்ளே போங்க சார், நான் பாத்துக்கறேன்" என்று கூறினான்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்கு எனது தந்தையை நாங்கள் வெளியே அனுப்பவே இல்லை. ஆத்திரத்தில் அந்த ஆட்டோக்காரன் சாலையில் நடக்கும்போது ஏதாவது செய்து விடுவானோ என்கிற பயம் தான். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

இந்தியாவில் வேறு எந்த நகரத்திலாவது இந்த மாதிரி ஆட்டோக்காரர்கள் உண்டா என்று தெரியவில்லை. பம்பாயில் நான் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். மீட்டருக்கு மேல் சல்லி காசு கூட அங்கு இருக்கும் ஆட்டோக்காரர்கள் வாங்க மாட்டார்கள். பெட்ரோல் விலை உயர்ந்தால் அதற்கு தகுந்தாற்போல ஆட்டோ வாடகையும் ஏறும். ஆனால் மீட்டருக்கு சூடு வைப்பது, பயணிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவது போன்ற பேச்சுக்கே இடமில்லை.

அது போன்று சென்னை ஆட்டோக்காரர்கள் என்று தான் திருந்துவார்களோ தெரியவில்லை.

26 comments:

வடுவூர் குமார் said...

சமீபத்தில் டெல்லி போனபோது முதலில் எவ்வளவு என்று பேசிவிடுகிறார்கள் அதன்படி நடந்துகொள்கிறார்கள்,அதே சமயத்தில் விலையும் மிகவும் மலிவாக இருக்கு.

Anonymous said...

அதற்குதான் இப்போதேல்லாம் நான் கால் டாக்ஸி எடுத்து செல்கிகேறேன் , லாபமோ நஷ்டமோ இது போல் பேச்சு வாங்க தேவையில்லை

Expatguru said...

வருகைக்கு நன்றி, குமார். சென்னைக்கு மட்டும் ஏன் இந்த சாபக்கேடோ தெரியவில்லை. முதன்முதலில் சென்னைக்கு வரும் வெளி மாநிலத்தார் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்?

ரவி said...

கேரள ஆட்டோக்காரர்கள் இந்த விடயத்தில் ரொம்ப நேர்மையானவர்கள்

Expatguru said...

உண்மைதான் அனானி. ஆனால், பல சமயங்களில் கால் டாக்ஸி உடனே கிடைப்பதில்லை. ஒருவரோ இருவரோ மட்டும் செல்வதானால் கால் டாக்ஸியில் செல்வது சிக்கனமாக இருக்காது இல்லையா? காவல் துறை மட்டும் சிறிது கண்டிப்பாக இருந்தால் இந்த பிரச்னையே இருக்காதே! பெங்களூர் ஆட்டோக்காரர்களில் பலர் தமிழர்கள் தான். சென்னையில் மட்டும் தான் இந்த மாதிரி இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

Anonymous said...

Not only in chennai even coimbatore also the rates of auto are more than cars. But they are not using offensive language. If you travel 25km from coimbatore and reach kerala, the scene is entirely different. You can see sweet auto drivers with nominal charges. It's the fate of tamilnadu.

Expatguru said...

//கேரள ஆட்டோக்காரர்கள் இந்த விடயத்தில் ரொம்ப நேர்மையானவர்கள்//

நானும் அதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ரவி. ஆனால் அங்கு வேறு விதமான பிரச்னை இருக்கிறதாம். கேரள இரயில் நிலையங்களில் உங்கள் சாமான்களை நீங்கள் உங்களை வரவேற்பவர்களிடம் கொடுக்க கூடாதாம். அங்குள்ள போர்ட்டர்களிடம் தான் கொடுக்க வேண்டுமாம். அப்படி உங்கள் உறவினர்களிடம் சாமான்களை கொடுத்தால் கூட போர்ட்டருக்கு அதற்கான கூலியை கொடுத்து விடவேண்டுமாம். இது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. என்னுடைய நண்பர் கூறியது.

Expatguru said...

//But they are not using offensive language. //

This is the point, Anonymous. These auto drivers think that they are doing a big favour to passengers and start fleecing them. If anyone questions them, they start a volley of abuse.

புருனோ Bruno said...

நான் கேரளாவில் இந்த சுமைதூக்குபவர் பிரச்சனையை எதிர்கொண்டது கிடையாது

அதே போல் கடந்த நவம்பர் மாதம் எர்ணாகுளம் சென்றிருந்தேன். நான் செல்ல வேண்டிய இடத்திற்கு (அம்ரிதா மருத்துவமனை) போகும் வழியில் உள்ள தொடர்வண்டி கதவு சிக்கிக்கொண்டதால் வேறு வழியில் சுற்றி செல்லவேண்டியிருந்தது.

சுற்று வழியில் சென்றதற்கு அதிகம் வேண்டும் என்று அந்த மூவுருளி ஓட்டுனர் மிகவும் கூச்சப்பட்டுக்கொண்டு கேட்டார். சரி தருகிறேன் என்று சொன்ன பின்னரும் “சுற்றியதால் தான் அதிகம்” என்ற பல முறை கூறிக்கொன்டிருந்தார்.

கடைசியில் 5 ரூபாய் மட்டுமே அதிகம் பெற்றார்.

Expatguru said...

வருகைக்கு நன்றி, புருனோ. சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் சொந்தக்காரர்களில் பாதி பேர் காவல் துறையினர்தான் என்றும் அதனால் தான் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஜோசப் பால்ராஜ் said...

99 ஆம் ஆண்டு சென்னையில் வேலைக்கு சேர்வதற்காக சென்ற நான் பெட்டி மற்றும் உடமைகளுடன் அண்ணா சாலை சிம்சன் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஜாம் பஜாரில் உள்ள ஒரு மேன்சனுக்கு செல்ல ஆட்டோ எடுத்த போது, அந்த ஓட்டுநர் எவ்வளவு என்று சொல்லாமல் என்னை ஏற்றிக்கொண்டு சென்றார்.
அங்கு சென்று இறங்கியதும், 100 ரூபாய் கேட்டார். சற்று பொருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று என் நண்பர்களை அழைத்து வந்தேன், நியாயமாக 15 ரூபாய் கொடுக்க வேண்டியதற்கு அவர்கள் கொடுத்த வெறும் 10 ரூபாயை வாங்கிக்கொண்டு சென்றார் அவர்.

Expatguru said...

பரவாயில்லையே ஜோசப், ஒன்றுமே பேசாமல் அவர் 10 ரூபாயை வாங்கிக்கொண்டு சென்றது அதிசயம் தான்.

Veera said...

நான் பெங்களூரிலும், திருவனந்தபுரத்திலும் ஆட்டோக்காரர்களிடம் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டது கிடையாது. இரண்டு இடங்களிலும் எவ்வளவு தூரமானாலும், ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட்டுத்தான் வண்டியை எடுப்பர். கட்டணமும் நியாயமாகத்தான் இருக்கும்.

ஆனால், சென்னையில் தான் இது போன்ற சம்பவங்களை அதிகம் கேட்கிறேன்! மாநகரமல்லவா!? :-)

rapp said...

ஆமாங்க, நீங்க சொல்றது உண்மை. அதோட, கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள கல்லூரிகள் முக்கால்வாசி பேருந்து நிலையத்தில் இருந்து குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர்களாவது இருக்கும். அங்குள்ள ஆட்டோக்களை எப்பொழுதாவது முடியவில்லை என்று அமர்த்தினால், அவர்கள் கேட்கும் தொகைக்கு நமக்கு மயக்கமே வந்துவிடும் . word verification எடுத்து விடுங்களேன்

Expatguru said...

//மாநகரமல்லவா!? //

பம்பாய் கூட தான் மாநகரம். அங்கு இந்த மாதிரி நடப்பதே கிடையாதே. எனக்கு என்னவோ 'எப்படியாவது ஏமாற்றி சம்பாதித்து விடவேண்டும்' என்கிற இந்த போக்கு (attitude)தான் காரணம் என்று நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

Expatguru said...

கருத்துக்களுக்கு நன்றி rapp. Car அல்லது இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்போர்களுக்கு பரவாயில்லை, எப்படியாவது சமாளித்து விடுவார்கள். ஆனால் பஸ்ஸில் போவோர்கள், முதியவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் பாடு திண்டாட்டம் தான்.

பி.கு: Word Verification ஐ எடுத்து விட்டேன். நன்றி.

புருனோ Bruno said...

//வருகைக்கு நன்றி, புருனோ. சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் சொந்தக்காரர்களில் பாதி பேர் காவல் துறையினர்தான் என்றும் அதனால் தான் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.//

நான் கேள்விப்பட்டது

சென்னை முவுருளி சொந்தக்காரர்களில் பாதி பேர் காவல் துறையினர் என்று

ஆனால் நான் பல நேர்மையான ஓட்டுனர்களையும் பார்த்திருக்கிறேன்.

அதை விட நான் அனுபவத்தில் கண்டது. பகிர்வு முவுருளி ஓட்டுனர்கள் பரவாயில்லை. நீங்கள் தனியாக ஏறி, முழுத்தொகையும் தருகிறேன் என்று கூறினால், பகிர்வு முவுருளி ஓட்டுனர் கேட்கும் கட்டணம் குறைவு. அதே போல் அவர்களிடம் இருந்து கெட்ட வார்த்தையும் கேட்டதில்லை

Jackiesekar said...

என்னை பொறுத்த வரை பெங்களுர் ஆட்டோ வாலக்கள் தங்கமானவர்கள் என்பேன், மீட்டர் போடாமல் ஆட்டோ எடுக்கமாட்டார்கள்

Expatguru said...

உண்மைதான் புருனோ. ஆனால் இந்த ஆட்டோக்களை புறநகர் பகுதியில் மட்டும் தான் ஓடுகின்றன. நகரத்துக்குள் இவற்றை ஓடவிட்டாலேயே மற்ற ஆட்டோக்காரர்களின் கொட்டம் அடங்கிவிடும் என்று நினைக்கிறேன்.

பி.கு: "பகிர்வு மூவுருளி" ‍ Share ஆட்டோவுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது.

Expatguru said...

வருகைக்கு நன்றி ஜாக்கிசேகர்.
//பெங்களுர் ஆட்டோ வாலக்கள் தங்கமானவர்கள் //

பெங்களூர் காவல் துறையிடம் ஏதாவது ஆட்டோக்காரர் மேல் நீங்கள் புகார் செய்தார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். சென்னையில் அது நடப்பதில்லை, அது தான் பிரச்னையே.

Anonymous said...

இது சுமார் 10 பத்து வருடங்களுக்கு முன் நடந்தது.

வடபழனியிலிருந்து மாம்பலம் செல்ல ஒரு ஆட்டோ பிடித்தேன். இரவு மணி 9.30. எவ்வளவு என்று கேட்டதற்கு 'எப்போதும் கொடுக்குறதை கொடுங்க சார்' என்று மிகப் பணிவுடன் அந்த ஆட்டோ ஓட்டுநர் கூறினார். எப்போதும் பத்து ரூபாய் தருவோம். (பத்து வருடத்துக்கு முன்னால்!)

சரி 15 ஆக கொடுப்போம் என்று நினைத்தேன்.

இரண்டு நாட்களாக நண்பன் ஒருவன் திருமண அலைச்சல். எனவே இடத்தை கூறிவிட்டு சற்றே கண்ணயர்ந்தேன்.

15 நிமிடம் கழித்து ஆட்டோக்காரன் எழுப்பினான் (அவனுக்கென்ன மரியாத கெடக்கு நாதறிப்பயல்)



எவ்வளவு குடுக்கணும்ன்னு திரும்ப கேட்டேன்.

நூறு ரூபா கொடு சார் என்றான் மிக பணிவாக.

தூக்கி வாரிப்போட்டது எனக்கு.

எதுக்கு நூறு ரூபாய்? என்று கேட்டதற்கு. மீட்டரைப் பாரு சார் என்றான்.

டேந், நீ எப்போடா மீட்டரை போட்ட? என்று நினைத்துக் கொண்டு மீட்டரைப் பார்த்தால் அது நூத்து சொச்சம் காட்டியது.

அடப்பாவி வடபழனியிலிருந்து மாம்பலத்துக்கு நூறு ரூபாயா என்று நினைத்தவாறு இவனிடம் இப்போது வம்பு பேசினால் சரி வராது என்று நினைத்துக் கொண்டு,

"என்கிட்ட அவ்வளவு காசு இல்ல, இதோ எடுத்திட்டு வந்திடறேன். அப்படியே கே.கே. நகருக்கு போகணும், இங்கேயே வெயிட் பண்ணூ" என்று சொன்னேன்.

"வெயிட்டிங் சார்ஜ் வேண்டாம் சார்" என்று அன்பாகக் கூறினான் அவன்.

அப்புறமென்ன? அபார்ட்மெண்ட்டில் சென்று என்னுடைய பாட்டி வீட்டினுள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு படுத்தேன்.

நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்ட அந்த நாதாறி எவ்வளவு நேரம் எனக்காக காத்து நின்றானோ தெரியாது!

Expatguru said...

அனானி,

உண்மையிலேயே நீங்கள் தைரியசாலி தான். சென்னை ஆட்டோக்காரனுக்கே டிமிக்கி கொடுத்து விட்டீர்களே! ஆனால் இது போன்ற ஆட்டோக்காரர்களுக்கு இப்படி தான் செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது.

வெண்பூ said...

இந்த நிகழ்வில் பாரட்டப்படவேண்டிய முக்கிய விசயம், உங்கள் தந்தை அவனை எதிர்கொண்ட முறை. என் வாழ்த்துக்கள் அவருக்கு.

வெண்பூ said...

இது ஆட்டோ மட்டுமல்ல, சென்னை முழுவதுமே நேர்மை, நியாயம் என்பதை விட பணம் மட்டுமே முக்கியமாகப் போய்விட்டது.. என்ன செய்ய? சென்னையில் வாழ ஆரம்பித்தபின் கடந்த 10 மாதங்களில் முன்னைவிட சென்னையின் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது.

Expatguru said...

வருகைக்கு நன்றி வெண்பூ. இந்த சம்பவம் நடந்து சில‌ நாட்களுக்கு நாங்கள் சிறிது பயத்துடன் தான் இருந்தோம். 'அடி வாங்கிய ஆட்டோக்காரன் குடித்து விட்டு எனது தந்தையை சாலையில் செல்லும்போது ஏதாவது செய்து விடுவானோ' என்று அஞ்சினோம். ஆனால் எனது தந்தையோ எதை பற்றியும் பொருட்படுத்தவில்லை. பெரும்பாலான நடுத்தர மக்கள் 'நமக்கேன் வம்பு' என்று சும்மா இருப்பதால் தான் (silent majority) இவர்கள் அதை தனக்கு சாதகமாக ஆக்கி கொள்கிறார்கள்.

Expatguru said...

//இது ஆட்டோ மட்டுமல்ல, சென்னை முழுவதுமே நேர்மை, நியாயம் என்பதை விட பணம் மட்டுமே முக்கியமாகப் போய்விட்டது.. //

பணத்தாசை இருப்பது கூட தப்பில்லை, வெண்பூ. மற்றவனை ஏமாற்றி அந்த பணத்தை சம்பாதிக்க நினைக்கிறார்களே, அதை தான் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதில் ஆட்டோக்காரர்கள் மட்டுமல்ல, பெரிய பணக்காரர்களும் தான் சேர்த்தி. சென்னை தி.நகரில் பல வருடங்களாக உள்ள ஒரு மிக பிரபலமான மூன்றெழுத்து நகைக்கடையில் முன்பு இரண்டு வளையல்களை வாங்கியிருந்தேன்.
நான் செளதி வந்து சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த வளையல்களை விற்று புதிதாக நகைகளை வாங்கலாம் என்று இங்கு உள்ள நகைக்கடைக்கு சென்றேன். நகைக்கடையின் சொந்தக்காரன் ஒரு செளதி. அவன் நான் கொடுத்த வளையல்களை பார்த்து விட்டு, அது 18 காரட் தான் என்று கூறினான். எனக்கு அது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அந்த வளையலின் உட்புறத்தில் மிக தெளிவாக 22 காரட் என்றும் தி.நகர் கடையின் முத்திரையும் இருந்தன. செளதிக்காரன் சிரித்துக்கொண்டே உண்மையான 22 காரட் நகையையும் 18 காரட் நகையையும் அருகருகில் வைத்து நான் ஏமாற்றப்பட்டதை விளக்கி கூறினான். செளதியில் இந்த மாதிரி ஏமாற்றினால் அது நிரூபணமானால் மிக கடுமையான தண்டனை கிடைக்கும்.

இதற்கு பிறகு அந்த 'பிரபலமான' கடைக்கு நான் செல்வதையே நிறுத்திவிட்டேன். அவன் 300 மீட்டர் தள்ளி அதே சாலையில் மற்றொரு கடையை கூட ஆரம்பித்து விட்டான். இவர்கள் இரவில் எப்படிதான் நிம்மதியாக தூங்குகிறார்களோ தெரியவில்லை.