புதிய நண்பர்களை பார்க்கும் பொழுது பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு பொதுவாக கேட்கப்படும் கேள்வி, "உங்களுக்கு எந்த ஊர்?" என்பது தான். என்னுடைய நண்பர்கள் பெரும்பாலும் மெட்ராஸை தவிர மற்ற ஊர்களின் பெயர்களை தான் முதலில் கூறுவர். நிறைய பேர், "எங்களது சொந்த ஊர் ......, ஆனால் இப்போது சென்னையில் குடி புகுந்து விட்டோம்" என்று கூறுவர். யாருமே, 'எனக்கு சொந்த ஊர் சென்னை' என்று கூறியது இல்லை. அது ஏன் என்று தான் எனக்கும் புரியவில்லை. எனது ஊர் மெட்ராஸ் என்று நான் கூறினால், "மெட்ராஸே தானா?" என்று கேட்பார்கள். அது என்ன மெட்ராஸ் வேறு கிரகத்தில் இருக்கிறதா என்ன? இல்லை, மெட்ராஸ் யாருக்கும் சொந்த ஊராக இருக்க கூடாதா?
நான் பிறந்து வளர்ந்த ஊர் மெட்ராஸ் தான். என்னவோ தெரியவில்லை, மெட்ராஸின் பெயரை சென்னை என்று மாற்றிய பிறகு கூட 'சென்னை' என்ற பெயரை என் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கும் கிராமத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது. கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. அதில் எனக்கு வருத்தம் தான்.
எனது நண்பர்கள் பலர், "எங்களது ஊரில் ஆற்றில் குதித்து நீந்துவோம், மாங்காயை கல்லால் அடித்து தின்போம்" என்றெல்லாம் கூறும்போது பட்டிணத்தான் புண்ணாக்கு கடையை பார்ப்பது போல (நான் தான் பட்டிக்காட்டான் இல்லையே, மிட்டாய் கடையை பார்ப்பதற்கு!) அவர்கள் பேசுவதை ஆச்சரியத்துடன் பார்ப்பேன். இது வரை எனக்கு நீச்சல் தெரியாது. என்ன செய்வது, சென்னையில் இருக்கும் ஒரே நதியும் அதற்கு லாயக்கில்லாமல் போய் விட்டது.
கிராமத்து நண்பர்கள் தத்தம் ஊர்களின் திருவிழாக்களை பற்றி கூறும்போது மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஊர் கட்டுப்பாடு, வீட்டு வாசலில் சாலைக்கு பாதி தூரம் வரை அதிகாலையில் பெண்கள் கோலம் போடுவது, பச்சை பசேலென்ற வயல், என்றெல்லாம் கூறுவார்கள். எனக்கு தான் அதற்கான வாய்ப்பே கிடையாதே! எனக்கு தெரிந்ததெல்லாம் கபாலி கோவில் (கபாலீஸ்வரர் தான், வைத்யனாதன் என்பதை வைத்தி என்று சுருக்குவது இல்லையா, அது போல), அறுபத்தி மூவர், தேர், என்பது தான்.
கமர்கட், மாங்காய் தலையன், கையில் குடத்தை வைத்து கொண்டு 'கோவிந்தோ' என்று கத்திக்கொண்டே சாலையில் உருளும் பிச்சைக்காரன், இவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். மேற்கு மாட வீதியில் இறைவனின் தேர் வரும்போது 'ஓ' என்று கத்திக்கொண்டே தேர் வடத்தை இழுப்பது ஒரு ஜாலி தான். சற்றே விவரம் தெரிந்த வயது வந்த பிறகுதான் பாதி பேர் வடத்தை பிடித்து கொண்டு வெறும் சத்தத்தை மட்டும் போடுகிறார்கள் என்று புரிந்தது!
உடம்பு முழுவதும் வேர்வை மழையில் நனைய தேர் வடத்தை இழுத்துக்கொண்டு வரும்போது பால்கனியிலிருந்து பெண்கள் பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை கொட்டுவார்கள். சித்திரை மாத சுட்டெறிக்கும் வெயிலில் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். நான் தண்ணீரை சொன்னேன்!
நான் படித்தது லாயிட்ஸ் சாலையில் உள்ள பிரபல பள்ளியில். பின்னாளில் தான் அது மிக பிரபலமாயிற்று. விளையாடுவதற்கு கிராமங்களை போல எங்களுக்கு என்ன ஏரியா, குளமா, ஒன்றும் கிடையாது. அதனால், கோபாலபுரத்தில் உள்ள மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவோம். சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணனும் நானும் பல நாட்கள் கோபாலபுரம் தெருக்களில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். பாருங்கள், கூட விளையாடிய நண்பன் பிரபல கிரிக்கெட் வீரனாகி விட்டான். என்னால் தான் அப்படி ஆக முடியவில்லை. நல்ல வேளை கிரிக்கெட் உலகம் பிழைத்தது!
கோபாலபுரத்தில் அருமையான கிருஷ்ணர் கோவில் உள்ளது. மார்கழி மாதத்தில் தினமும் நான்கு மணிக்கே எழுந்து குளித்து விட்டு அதிகாலை குளிரில் சாமி கும்பிட சென்ற அனுபவத்தை மறக்க முடியாது. குறிப்பாக அந்த கோவிலில் சுடச்சுட சர்க்கரை பொங்கல் தருவார்கள். பிரமாதமாக இருக்கும். சாமியை பார்க்க போகிறோமோ இல்லையோ, பிராசாதத்துக்காக கண்டிப்பாக ஆஜராகி விடுவோம்.
1975ம் ஆண்டு. இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தை கொண்டு வந்த நேரம். அந்த கிருஷ்ணர் கோவில் வாசலில் பரட்டை தலையுடன் எப்போது பார்த்தாலும் ஒரு பைத்தியக்காரன் படுத்து கொண்டே இருப்பான். தனக்கு தானே பேசிக்கொள்வான். திடீரென்று சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை சரளமாக கூறுவான். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.பள்ளியில் இருந்து நாங்கள் வீடு திரும்பும் போது அவனை சுற்றி நின்று கொண்டு கிண்டல் செய்வது எங்களுக்கு பொழுது போக்காக இருந்தது.
அப்போது ஸ்டாலினை இந்திரா காந்தி அரசு கைது செய்திருந்த நேரம். சென்னை நகரமே பதற்றத்தில் இருந்தது. தினமும் பள்ளியில் இருந்து வரும்போது கோவில் வாசலில் படுத்து கொண்டு இருந்த பைத்தியத்தை திடீரென்று சில நாட்களாக காணவில்லை. ஒரு முறை இதை பற்றி காவல் துறையில் இருந்த எனது பெரியப்பாவிடம் எதேச்சையாக கூறியபோது அவர் சிரித்து கொண்டே, "அவன் பைத்தியம் இல்லை. கோவிலின் எதிரே இருக்கும் முக்கிய அரசியல்வாதியின் வீட்டுக்கு வருபவர்களை வேவு பார்க்க மத்திய அரசு அனுப்பிய ஒற்றன்" என்று கூறினார்! இதில் வேடிக்கை என்னவென்றால், இவன் மத்திய அரசின் உளவுப்படையை சேர்ந்தவன் என்பது இந்த அரசியல்வாதிக்கும் தெரியும் என்பது தான். அவரது வீட்டிலிருந்து பல நாட்கள் அவனுக்கு சாப்பாடு போவதை கண்டிருக்கிறேன். கெளண்டமணி கூறுவது போல, அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா!
1978ம் ஆண்டு என்று நினைக்கிறேன். படு பயங்கரமான வறட்சி. சென்னையில் சுத்தமாக தண்ணீர் என்பதே கிடையாது என்ற நிலைமை ஆகி விட்டது. விஜயவாடாவில் இருந்து இரயிலில் தண்ணீர் வரும். லாரிகளில் ஒவ்வொறு பேட்டையாக வந்து தண்ணீர் கொடுப்பார்கள். அப்போதெல்லாம், "சே! நாமும் கிராமத்தில் ஆற்றோரத்தில் பிறந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று நினைத்திருக்கிறேன்.
அடிக்கடி 'தொண்டர்கள் தீக்குளிப்பு' என்ற செய்தியை படித்திருப்பீர்கள். ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? தீக்குளிப்பவன் எப்போதும் கிராமத்தை சேர்ந்தவனாக தான் இருப்பான். சென்னையை சேர்ந்தவன் ஒருவனும் தீக்குளிப்பதில்லை. இன்னும் சொல்ல போனால் சோப் போட்டே குளிப்பதில்லை என்றே கூறலாம்.
நண்பர்கள் 'மெட்ராஸ்' என்றவுடனேயே எனது நண்பர்கள் திட்ட ஆரம்பிப்பார்கள். "ஊராடா இது, ஆட்டோக்காரன் எவ்வளவு அடாவடி செய்கிறான், கூவம் எவ்வளவு நாறுகிறது" என்றெல்லாம் கூறுவார்கள். ஆமாம், ஆட்டோக்காரர்கள் அடாவடி செய்வது உண்மை தான் ஆனால் நல்லவர்களும் இருக்கிறார்களே. நம்பினால் நம்புங்கள், எழுபதுகளில் கூவம் நதி கடலில் கலக்கும் இடத்தில் தெளிவான நீரில் நான் படகு சவாரி செய்திருக்கிறேன்.
மெட்ராஸில் தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். 1956ல் சென்னா ரெட்டி சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று 'மதராஸ் மனதே' என்ற போராட்டத்தை தொடங்கினார். நல்ல வேளை, அது பிசுபிசுத்து விட்டது. இங்கு தமிழர்களை விட தெலுங்கு, கன்னடம், மலையாளிகள், மார்வாடிகள் போன்றவர்கள் தான் அதிகம் என்றே தோன்றுகிறது. உழைக்க தயாராக இருந்தால், கண்டிப்பாக இங்கு வேலை உண்டு. நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போகலாம், ஆனால் வயிற்று பிழைப்புக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் ஊர் மெட்ராஸ்.
பல தெருக்களின் பெயர்களை மாற்றி விட்டார்கள். எட்வர்ட் எலியட்ஸ் ரோடு ராதாகிருஷ்ணன் சாலை ஆகி விட்டது. லாயிட்ஸ் ரோடு அவ்வை சண்முகம் சாலையாகி விட்டது (ஒளவை என்று எழுத கூடாதாம்!). தெருக்களில் ஜாதி பெயர்களை அழித்து விட்டார்கள். ஜாதிகளை ஒழித்து விட்ட பாரதம் வாழ்க. அதற்காக மைலாபூரில் உள்ள பிள்ளையார் தெருவை 'யார்' தெரு என்று மாற்றி இருக்க வேண்டாம்! ஒவ்வொரு வீட்டுக்கும் பழைய எண், புதிய எண் என்று இரண்டு எண்கள் உள்ளன. புதிய எண்ணே பழையதாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பது வேறு விஷயம்.
தமிழ் நாட்டின் தலைநகரத்தில் கிராமத்து தமிழ் பேசினால் நீங்கள் வெளி நாட்டிலிருந்து தப்பி வந்தவர். பஸ்ஸில் ஏறி 'அண்ணா சாலை'க்கு ஒரு டிக்கட் கொடுங்கள் என்று கேட்டு பாருங்களேன்.யாருக்கும் புரியாது. 'மவுண்ட் ரோடு' என்று நல்ல தமிழில் கேட்டு பாருங்கள், அப்போது தான் எல்லோருக்கும் புரியும்.இங்கு நுனி நாக்கு ஆங்கிலம் பேசினால் பப்பு வேகாது. சிறப்பான சென்னை தமிழை உலகில் வேறு எங்குமே பேசுவது கிடையாது. 'ஓ...., சாவு கிராக்கி, ஊட்ல சொல்லிகுனு வன்ட்டியா?'என்பதெல்லாம் இங்கு சர்வ சாதாரணமாக கேட்கலாம். 80 வயது கிழவரை 'யோவ், ஐயாசாமி, வாய்யா இங்க' என்று 20 வயது பையன் அழைத்தால், கிழவர் "ஐயா, சாமி" என்று கும்பிட்டு கொண்டே வரும் காட்சியை சென்னையில் காணலாம். கிராமத்து நண்பர்களுக்கு இது மரியாதை குறைவாக தோன்றும். ஆனால், எல்லோரும் எல்லோரையும் 'நீ' 'வா' 'போ' என்று அழைப்பதால் சென்னையில் யாரும் இதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. பழக பழக சென்னை தமிழ் உங்களது தினசரி பேச்சில் எதிரொலிக்க ஆரம்பிக்கும். அதற்கு பிறகு உங்களிடம் யாராவது ராங் காட்னா மெர்சல் பண்ணிட வேண்டியது தான். இன்னா, நான் சொல்றது கரீட் தானே?
ஏமாற்று பேர்வழிகள் இருக்கும் ஊர் தான், ஆனால் ஏமாறாமல் இருப்பது உங்களது சாமர்த்தியம், இதற்கு ஊர் என்ன செய்யும்?
வியர்வை வழியும் ஊர் தான். கூவ நாற்றம் எடுக்கும் ஊர் தான். இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் ஊர் மெட்ராஸ். என்னதான் குறை இருந்தாலும் எனது மெட்ராஸுக்கு இணை இல்லை என்றே கூறலாம்.
10 comments:
நல்ல பதிவு ... சுவாரஸ்யமான நடை.... தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
நன்றி, பிரதாப்
என்னதான் இருந்தாலும், மனிதரை மனிதராக மதிக்கத்தெரியாதவர்கள் வாழும் ஊரும் ஒரு ஊரா?
இது எந்த ஊருக்கும் பொருந்தும் இல்லையா? பம்பாயை பற்றி நானும் இப்படி தான் ஒரு தவறான எண்ணத்தை வைத்திருந்தேன். எனது ஊர் என்பதற்காக சொல்லவில்லை. மெட்ராஸில் நல்லவர்களும் இருக்கிறார்கள் பந்து. இதையும் படியுங்களேன்:
http://madrasthamizhan.blogspot.com/2008/12/4.html
உண்மைதான்.. தேவையான பொழுது எங்கிருந்தோ மனித நேயம் வந்துவிடுகிறது.. மரியாதையே இல்லாமல் பேசும்போது வரும் கோபமே என்னை இப்படி நினைக்க தூண்டியது. ஆனாலும், நானும் பல நல்ல நண்பர்களை சென்னையில் பெற்றிருக்கிறேன்.. எனவே.. என் கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.. especially considering that i might eventually settle down there!
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ! இதே மெட்ராஸ அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. வீட்டின் முன்னால் கரவை மாட்டுடன் பால் கறந்து தரும் காலமும் இருந்தது. நடு வீதியில் ட்ராம் வண்டிகள் ஓடிய காலமும் இருந்தது. நகருக்குள்ளேயே சேரிகள் இருந்து பாகு படுத்தப் பட்டு இருந்த காலமும் இருந்தது. கூ என்று கூவி வந்தால் தயிர்க் காரி என்று புரிந்த காலமும் இருந்தது. வாழும் மனிதர்கள் எல்லா இடத்திலும் இருப்பது போல்தான் நல்லவர்களும் கெட்டவர்களும். உண்டு. பழைய திரைப் படங்கள் பார்த்தால் வித்தியாசம் புரியலாம்.
வருகைக்கு நன்றி, GMB Sir. பழைய நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள்.
மெட்ராஸ்-சென்னை பற்றி எழுதப்போய் வாங்கிக் கட்டிக் கொண்டேன். நீங்களுமா?
மெட்ராஸ்-சென்னை பற்றி எழுதப்போய் வாங்கிக் கட்டிக் கொண்டேன். நீங்களுமா?
அந்த பேமானிங்கலுக்கு இன்னா தெர்ய போவுது மெட்ராஸ் பத்தி, எவனாவது ரொம்ப மெர்ஸல் பண்ணா சும்மா மஞ்ஜா சோத்த கீசுட வேண்டியது தான், இன்னா தொர சாரு, கரீட்டா நான் சொல்றுது?
Post a Comment