மெட்ராஸில் லாயிட்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தான் நான் படித்தேன். கோபாலபுரத்தில எங்கள் வீடு இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு சென்னையின் வேறு ஒரு பகுதியில் சொந்த வீட்டுக்கு குடி புகுந்தோம். அதனால் தினமும் இரண்டு பஸ் மாறி பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கான பஸ் பாஸ் சற்றே விசித்திரமாக இருக்கும். பாஸின் இரு முனைகளிலும் மேலிருந்து கீழ் வரை 1 முதல் 31 வரை தேதி இருக்கும். தினமும் நடத்துனரிடம் இந்த பாஸை காண்பித்தால் ஒவ்வொறு முறை பயணம் செய்யும் போதும் பாஸில் அந்த குறிப்பிட்ட தேதியின் மேல் ஒரு ஓட்டை போட்டு விடுவார். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அந்த பாஸில் செல்ல முடியாது.
நான் ஆழ்வார்பேட்டை வரை ஒரு பஸ்ஸில் சென்று அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து லாயிட்ஸ் சாலை வரை சென்று அங்கிருந்து கோபாலபுரம் வரை நடந்து செல்வேன். நடுவில் வரும் ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் சில நாட்கள் 30 நிமிடங்கள் வரை காத்திருந்த அனுபவம் கூட உண்டு. அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த அனைவருமே பல்வேறு அலுவலகங்களில் வேலை செய்பவர்களாக இருந்தார்கள். நானும் எனது நண்பனும் மட்டும் அந்த பஸ் ஸ்டாப்பில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களாக இருந்தோம். தினமும் அதே நேரத்தில் இறங்கி அதே நேரத்தில் அடுத்த பஸ்ஸை பிடிப்பதால் பல முகங்கள் பரிச்சயமானவையாகவே இருந்தன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், யாருமே மற்றொருவரிடம் பேசிக்கொள்ள கூட மாட்டார்கள். ஏன், ஒரு புன்முறுவல் கூட இருக்காது. அவரவருக்கு ஆயிரம் கவலைகள். எனது அடுத்த பஸ் வந்த உடன் நானும் நண்பனும் ஏறி சென்று விடுவோம். இது தினமும் நடக்கும் விஷயம்.
இப்படி இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் அந்த பஸ் ஸ்டாப்புக்கு ஒரு பிச்சைக்காரன் வந்தான். கண்கள் இரண்டிலும் பார்வை இல்லை. கூட ஒரு நாய் மட்டும் அவனுக்கு துணையாக இருந்தது. கையில் தடியும், தோளில் ஒரு ஜோல்னா பையும் இருந்தன. பஸ் ஸ்டாப்பில் தரையில் அப்படியே உட்கார்ந்து பையிலிருந்து எதோ ஒரு விசித்திரமான கருவியை எடுத்தான். ஒரு கிழிந்த துண்டை விரித்து அதன் மேல் அந்த கருவியை வைத்தான். அது ஏதோ ஒரு வாத்தியம் போல கம்பிகளுடனும் பல பொத்தான்களுடனும் வித்யாசமாக இருந்தது. செய்தி தாள்களை படித்து கொண்டிருந்த சிலரும் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் இவனையே பார்த்து கொண்டிருந்தனர்.
அவனது பக்கத்திலேயே அந்த நாயும் ஏதோ சொல்லுக்கு கட்டுப்பட்டது போல உட்கார்ந்து விட்டது. பிச்சைக்காரன் இப்போது அந்த கருவியில் உள்ள கம்பிகளை ஒரு கையால் திருகிக்கொண்டே மற்ற கையால் பொத்தான்களை அமுத்த ஆரம்பித்தான். 'டொய்ங் டொய்ங்' என்று சத்தம் வந்தது. "இது என்ன கருவி" என்று பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். "புல்புல் தாரா" என்று சொன்னார். ஓஹோ, இப்படி கூட ஒரு வாத்தியம் இருக்கிறதா என்ன?
தொண்டையை கனைத்துக்கொண்டே பிச்சைக்காரன் கணீரென்று பாட ஆரம்பித்தான்.
'நீயல்லால் தெய்வம் இல்லை, எனது நெஞ்சே நீ வாழும் எல்லை - முருகா....'
அது வரை அப்படி ஒரு கணீர் குரலை நான் கேட்டதே இல்லை. ஒரு கட்டத்தில் இவன் பிச்சைக்காரனா பின்னணி பாடகனா என்றே தெரியாத அளவுக்கு அவ்வளவு பிரமாதமாக பாடி முடித்தான். அவ்வளவுதான். அந்த துண்டில் சில்லரை மழை பொழிந்தது. அதற்குள் எனது பஸ் வந்து விட்டதால் நான் ஏறி சென்று விட்டேன்.
மறு நாள் ஆழ்வார்பேட்டையில் நான் பஸ்ஸில் வந்து இறங்கியபோது அதே பிச்சைக்காரன் அங்கு ஏற்கனவே உட்கார்ந்திருந்தான். இப்போது வேறு ஒரு பாட்டு. அந்த பஸ் ஸ்டாப்பில் ஒவ்வொருவரும் அவனுடைய குரலின் இனிமையில் திளைத்திருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. பஸ்ஸுக்காக காத்திருக்கும் அந்த பத்து நிமிடங்களுக்குள் அங்கு நிலவிய இருக்கமான சூழல் தளர்ந்து அனைவருமே அவனது பாடல்களை ரசிக்க ஆரம்பித்தனர். தினமும் ஒர ரம்மியமான பாடல். தூய தமிழில் பிசிறே இல்லாத குரல். ஆஹா, இதை கேட்பதற்கு உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இவ்வளவு அற்புதமான குரலை இவனுக்கு கொடுத்த கடவுள் கண் பார்வையை ஏன் எடுத்து கொண்டாரோ!
நாட்கள் செல்ல செல்ல இவனது பாடல்கள் மிகவும் பிரபலமாகிவட்டன. அந்த 10-15 நிமிடங்களில் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் முன் போல விரைப்பாக இல்லாமல் சற்றே சிரித்த முகத்துடன் காணப்பட்டனர். சிலர் அவனிடம் சென்று 'இந்த பாட்டை பாடு', 'அந்த பாட்டை பாடு' என்று நேயர் விருப்பம் போல சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவனும் பிரமாதமாக அந்த பாடல்களை வாசித்து கொண்டே பாடியதால் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டது போல இருந்தார்கள். தினமும் ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் இவனை சுற்றி ஒரு கூட்டமே கூட ஆரம்பித்து விட்டது.
அவன் அந்த பஸ் ஸ்டாப்பில் எவ்வளவு நேரம் இருப்பான் என்று தெரியவில்லை. எனது பஸ் வந்ததும் நான் கிளம்பி விடுவேன். இது போலவே மற்றவர்களும் என்பது எனது யூகம். நாட்கள் பல நகர்ந்தன.
ஒரு நாள் வழக்கம் போல அவன் அடுத்த பாடலை "உள்ளம் உருகுதையா..." என்று பாட ஆரம்பித்தான். அனைவரும் உண்மையிலேயே அந்த பாடலில் சொக்கி விட்டோம். பாடலின் ஆரம்பத்தில் கணீரென்று இருந்த குரல் அடுத்தடுத்த வரிகளில் சற்றே பிசிறினாற்போல இருந்தது. திடீரென்று அவனது குரல் கம்மியது. ஒரு கட்டத்தில் "பாவி என்று இகழாமல் முருகா ஓடி வருவாயப்பா" என்று பாடும்போது அதற்கு மேல் அவனால் பாட முடியவில்லை. என்ன விஷயம் என்று தெரியவில்லை. ஒரு கணம் திடீரென்று மெளனம் காத்தான். பஸ் ஸ்டாப்பில் அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர். ஏன் திடீரென்று பாடுவதை நிறுத்தி விட்டான் என்றே தெரியவில்லை. அதற்குள் எனது பஸ் வந்து விட்டபடியால் நான் அதில் ஏறி விட்டேன்.
அடுத்த நாள் அந்த பஸ் ஸ்டாப்பில் அவனை காணோம். 'என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே! உடம்பு ஏதாவது சரியில்லையா? ஏன் திடீரென்று அன்று பாடுவதை நிறுத்தினான்? ஏன் இன்று வரவில்லை?' என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாப்பில் இருந்த மற்றவர்கள் அனைவரும் அவன் வழக்கமாக உட்காரும் இடத்தையே பார்த்து கொண்டிருந்தனர். அவன் அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. எங்கு சென்றான், ஏன் சென்றான் என்றும் தெரியவில்லை.
பஸ் ஸ்டாப்பில் மீண்டும் பழைய நாட்களை போல அனைவரும் மெளனம் காக்க ஆரம்பித்து விட்டனர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை. ஒரு தேடல். பள்ளி தேர்வு என்ன ஆகுமோ என்று மாணவனுக்கு தேடல். அலுவலகத்தில் பிரமோஷன் கிடைக்குமா என்று வேலை செய்பவனின் தேடல். படிப்பை முடித்த பையனுக்கு வேலை கிடைக்குமா, பெண்ணுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்குமா என்று தந்தையின் தேடல். யார் செருப்பாவது அறுந்து நம்மிடம் வருவார்களா என்று அந்த பஸ் ஸ்டாப்பிலேயே உட்கார்ந்திருக்கும் செருப்பு தைப்பவனின் தேடல். இப்படி ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஆயிரம் கவலைகள் ஆயிரம் தேடல்கள். சும்மாவா கண்ணதாசன் பாடினார் "ஒருவன் மனதில் ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா" என்று!
'ஒரு வேளை இவன் வேறு ஏதாவது பஸ் ஸ்டாப்புக்கு சென்று விட்டானோ? போலீஸ்காரர்கள் பிடித்து கொண்டு போய் விட்டார்களோ? அல்லது விழும் சில்லரையை பார்த்து கேடிகள் திருடிக்கொண்டு சென்று விட்டார்களோ? என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே' என்று எனது நண்பனிடம் கூறினேன். அவன் ஒரு நீண்ட மெளனம் காத்து விட்டு என்னை நேருக்கு நேர் பார்த்து சொன்னான் "விடுடா, பிச்சைக்காரன் தானே",
10 comments:
அவருக்கு என்ன ஆயிற்றோ... எங்கிருந்தாலும் நலமாக இருக்க வேண்டும்... அவர் வாழ்வும் மேன்மை அடைந்திருக்க வேண்டும்...
சிலர் மனதை பார்க்கிறேன்... பலர் உருவத்தையும் அழிந்து போகும் பலவற்றையும் பார்க்கின்றனர் என்பது முடிவில் உள்ள வரியில் தெரிகிறது...
அவருக்கு என்ன ஆயிற்றோ... எங்கிருந்தாலும் நலமாக இருக்க வேண்டும்... அவர் வாழ்வும் மேன்மை அடைந்திருக்க வேண்டும்...
சிலர் மனதை பார்க்கிறேன்... பலர் உருவத்தையும் அழிந்து போகும் பலவற்றையும் பார்க்கின்றனர் என்பது முடிவில் உள்ள வரியில் தெரிகிறது...
எனக்கும் இந்த மாதியான அனுபவம் உண்டு. பதிவில் எழுதி இருக்கிறேன். காலையில் நடைபயிலப் போகும் போது பூங்காவில் ஒரு சிறு குடும்பம். கணவன் மனைவி கைக்குழந்தை ஒன்று. நடக்கும் குழந்தை ஒன்று. தினமும் அவர்களைப் பார்ப்பதுண்டு. யார் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமிருந்தும் , “ உனக்கென்ன” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விடுவார்களோ என்று எதுவும் கேட்டதில்லை. நான்கைந்து நாட்கள் போனபின் அவர்களைக் காணாமல் என்ன ஆயிற்றோ என்று எண்ணியது உண்டு.
பொதுவாகவே கண்பார்வை இல்லாதோர் குரல் வளம் மிக்கவர்களாய்க் காண்கிறோம்.
இறுதி வரிகள் சுருக்கென்று தைத்தது. பிச்சைக்காரன் தானே என்ற சொல்லில் அந்த குரலும் பாடலின் இனிமையும் மறைந்து போய் விடுகிறது. ஒரு இனம் புரியா வலி மனசுக்குள்.
இறுதி வரிகள் சுருக்கென்று தைத்தது. பிச்சைக்காரன் தானே என்ற சொல்லில் அந்த குரலும் பாடலின் இனிமையும் மறைந்து போய் விடுகிறது. ஒரு இனம் புரியா வலி மனசுக்குள்.
இறுதி வரிகள் சுருக்கென்று தைத்தது. பிச்சைக்காரன் தானே என்ற சொல்லில் அந்த குரலும் பாடலின் இனிமையும் மறைந்து போய் விடுகிறது. ஒரு இனம் புரியா வலி மனசுக்குள்.
touching!!
வணக்கம்
கதை பின்னிய விதம் அருமை வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். இந்த வலைப்பூவில் நான் எழுதும் யாவையும் உண்மை சம்பவங்களே. எதுவுமே கற்பனை அல்ல.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
மிகவும் உருக்கமான பதிவு. இப்படி எத்தனை எத்தனை சாமானியர்களை தினம் தினம் கண்டிருப்போம், வெகு சிலர் என்றும் நம் மனதில் இடம் பிடித்துக் கொள்வதும் உண்டல்லவா?! ஒவ்வொரு மனிதனும் மற்றொருவனின் மீது எதோ ஒரு தாக்கத்தையும், தடத்தையும் விட்டுச் செல்கின்றான் என்பதை நினைக்கும் போது, அடுத்தமுறை இப்படியானவர்களைக் கடக்கும் போது மேலும் ஆழமாய் கவனிக்கத் தொடங்கியும் விடுகின்றோம்.
Post a Comment