பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். கல்லூரியை முடித்த பின் பம்பாயில் முதன் முதலில் வேலை கிடைத்தது. ஒரு நான்கு நாட்கள் வரிசையாக விமுறை கிடைத்தால் ஊருக்கு சென்று விடுவேன்.
பம்பாயில் இருந்து மெட்ராஸுக்கு இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மெய்லில் வந்தால் இரண்டு இரவுகள் பயணம் செய்ய வேண்டும். களைப்பான பயணம், ஆனால் சரியான நேரத்துக்கு மெட்ராஸுக்கு வந்து சேர்ந்து விடும் என்பதால் பலர் இந்த இரயிலில் செல்வதையே விரும்பினர்.
இது போன்ற நீண்ட பயணங்களில் சில எதிர்பாராதவிதமாக நண்பர்களாகி விடுவது உண்டு. இன்னும் சிலருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் அனுபவங்களும் நடந்து விடுகின்றன. எனக்கும் அது போன்ற ஒரு அனுபவம் தான் ஏற்பட்டது.நீண்ட பயணம் என்பதால் சிலர் சக பயணிகளுடன் அரட்டை அடித்து கொண்டும், சிலர் சீட்டு விளையாடி கொண்டும் நேரத்தை போக்கி கொண்டிருந்தனர்.
குல்பர்கா அருகே வண்டி வந்தபோது ஒரே குப்பையும் சத்தையுமாக இருந்தது. அப்போது ஒரு சிறுவன்-பத்து வயது கூட நிறைவடைந்திருக்காது-வண்டியில் ஏறினான். உடலில் சட்டை இல்லை. கிழிந்த அரை டிராயர் மட்டும் இருந்தது. நாங்கள் பயணம் செய்த கம்பார்ட்மெண்ட்டின் ஒரு மூலையில் இருந்து இரு கைகளால் குப்பைகளை அள்ளி ஒரு பெரிய செய்தி தாளில் போட்டுக்கொண்டே, ஒவ்வொறு இருக்கையின் அடியிலும் நகர்ந்து கொண்டே வந்தான். இருக்கையின் அடியில் இருந்த குப்பைகளை அள்ளிய பிறகு சிலர் சில்லரை காசுகளை போட்டார்கள். சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரி முகத்தை திருப்பி கொண்டார்கள். ஆனால் சிறுவனோ எதற்கும் கவலைப்படாமல் கையில் கிடைத்த காசுகளை தனது அரை டிராயருக்குள் இருந்த சுருக்கு பையில் போட்டுக்கொண்டே அடுத்த இருக்கைக்கு சென்றான். அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. இத்தனை வறுமையிலும் அவன் பிச்சை எடுக்காமல் உழைத்து அதற்கான கூலியை கேட்கிறானே, அவனது தன்மானத்தை என்னவென்று சொல்வது?
கடவுளின் செயல்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. பால் மணம் மாறாத சிறுவர்களை படைத்து விட்டு அவர்களை வறுமையிலும் பசியிலும் ஏன் உழல விடுகிறான்? கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் பெருச்சாளிகள் எல்லாம் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது போன்றவர்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். என்னிடம் இருந்த பணத்தில் சிறிது அவனுக்கு கொடுத்தேன். ஆனால் அது அந்த வேளை உணவோடு சரியாகிவிடுமே. அவனது வாழ்க்கையே இப்படி இரயிலில் குப்பை கூட்டுவதோடு முடிந்து விடுமோ? இப்படி எல்லாம் எனது மனதில் எண்ண ஓட்டங்கள் நெடுநேரம் அலை பாய்ந்து கொண்டே இருந்தன. சில மணி நேரங்களுக்கு பிறகு இரயில் ஆதோனி என்ற ஊரில் நின்றது. சிறுவன் இறங்கி சென்று விட்டான்.
அலுவலகம் விடும் நேரம் என்று நினைக்கிறேன். திபுதிபுவென்று சிலர் எங்களது கம்பார்ட்மெண்ட்டில் ஏறினார்கள். அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கி விடுகிறேன் என்று ஒருவர் எனக்கு அருகில் உட்கார்ந்து கொண்டார். இது போன்று முன்பதிவு செய்யப்பட்ட கம்பார்ட்மெண்ட்களில் இப்படி நடப்பது சகஜம். டிக்கெட் பரிசோதகர் இவர்களை கண்டுகொள்வதே இல்லை. ஏனென்றால் இவர்கள் தினமும் இதே வண்டியில் வீட்டுக்கு திரும்பி செல்வார்கள். அதே போல காலையில் வேறு ஒரு வண்டியில் இப்படி ஏறி உட்கார்ந்து கொண்டு வருவார்கள்.
சரி, பரவாயில்லை ஒரு மணி நேரத்தில் இறங்கி விடுவார் என்று நானும் எனது இருக்கைக்கு அருகில் அவருக்கு உட்கார இடம் கொடுத்தேன். அது தான் நான் செய்த தவறாகி விட்டது.
வண்டி நகர ஆரம்பித்த உடனேயே அவர் தனது பையிலிருந்து ஒரு பொட்டலத்தை திறந்தார். அதை பிரித்து அதில் இருந்த வறுத்த வேர்க்கடலைகளை ஒவ்வொன்றாக கொறிக்க ஆரம்பித்தார். அது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. வாயில் கடலைகளை போட்டுக்கொண்டே தோலிகளை இருக்கைக்கு அடியில் போட ஆரம்பித்தார். என் கூட வந்த சக பயணிகள் அனைவரும் அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லோர் மனதிலும் சற்று முன்பு இருக்கையை தன் கைகளால் சுத்தம் செய்த சிறுவனின் முகம் வந்து போயிருப்பதை நான் கண்டேன். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லோரும் முகம் சுளித்தார்களே தவிர யாருமே அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை.
சிறிது நேரத்தில் ஒரு கையளவு நிறைய வேர்க்கடலை தோலியை இருக்கைக்கு அடியில் போட்டார். எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கோபத்தை அடக்கி கொண்டே அவரிடம், "சார், தயவு செய்து இங்கே அசுத்தம் செய்யாதீர்கள். தோலியை உங்களிடம் உள்ள பொட்டலத்திலேயே கொட்டிவிட்டு சாப்பிட்டு முடித்த பின் ஜன்னல் வெளியே எறிந்து விடுங்கள்" என்றேன். அதற்கு அவர் என்னை ஒரு ஈன பிறவி மாதிரி பார்த்து தெலுங்கில் ஏளனமாக "அவன்னி நீக்கு எந்துகுரா வெதவா" என்றார். அதாவது, " உன் வேலையை பார்த்து கொண்டு போ" என்று பொருள் படும் விதத்தில் கேவலமாக பேசினார்.
எனக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி விட்டது. அவரை உடனடியாக எனது இருக்கையை விட்டு எழுந்திருக்க சொன்னேன். அவரோ எழுந்திருக்காமல் தெலுங்கில் என்னை திட்டி கொண்டே இருந்தார். மற்ற பயணிகள் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டே இருந்தனர். இந்த ஆளை இப்படியே விட கூடாது என்று எனது உள் மனது கூறியது. டிக்கெட் பரிசோதகரை காணோம். ஒரு வேகத்தில் இருக்கைக்கு அடியில் இருந்த தோலிகளை எனது கைகளால் அள்ளினேன். அப்படியே அந்த நபரின் தலையில் கொட்டி ஆங்கிலத்தில் "வெளியே போடா நாயே" என்று திட்டினேன். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த கணத்தில் நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது நினைத்தாலும் தெரியவில்லை. ஏதோ மனதுக்கு தோன்றி விட்டது, அதனால் செய்து விட்டேன். இள இரத்தம் என்பார்களே, அது இது தானோ என்னவோ.
ஒரு நிமிடத்தில் அந்த ஆள் நிலை குலைந்து போய் விட்டான். என்னை அடிக்க வருவதற்கு கையை ஓங்கினான். அதற்குள் மற்ற இருக்கைகளில் இருந்த, காலையில் இருந்து என்னுடன் அரட்டை அடித்து நண்பர்களாகிவிட்ட சக பிரயாணிகள் இவனது காலரை பிடித்து கத்த ஆரம்பித்தனர்.
அவ்வளவுதான். தனக்கு எதிராக கூட்டம் சேர்வதை உணர்ந்து கொண்டவன் மரியாதையாக எழுந்து அவமானம் தாங்க முடியாமல் மற்றொருறு பெட்டிக்கு vestibule வழியாக சென்று விட்டான்.
இவன் சென்ற பிறகு சக பிரயாணிகள் அனைவரும் நான் ஏதோ பெரிய விஷயத்தை சாதித்து விட்ட மாதிரி சிலாகித்து ரொம்ப நேரம் பேசிக்கொன்டிருந்தார்கள். நான் அவர்களிடம் எனக்கு உதவியாக இருந்தமைக்கு நன்றி கூறினேன்.
நமது நாட்டில் படிக்காத பாமரர்களை விட இது போன்ற படித்து அகங்காரத்தோடு மூடர்களாக இருப்பவர்களால் தான் முன்னேறாமல் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கு அப்படி செய்கிறோம் என்ற ஒரு சுரணையோ வெட்கமோ இல்லாமல் இருக்கிறார்களே, அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. இப்படி இருப்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு என்ன முன் உதாரணம் வைக்க போகிறார்கள்? அப்பன் திருடனாக இருந்தால் அதை பார்த்து பையனுக்கும் திருட தோன்றும் அல்லவா?
இதை எல்லாம் முன் கூட்டியே அறிந்து தான் பாரதி அன்றே பாடி சென்று விட்டான் என்று நினைக்கிறேன்.
பாதகம் செய்பவரை கண்டால் நீ
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா! அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!
16 comments:
தான் முதலில் திருந்தா விட்டால் எதுவும் உருப்படாது...
அடேங்கப்பா
இத்தனை துணிச்சலா ?
எனக்கு கூட இது போன்ற அனுபவங்கள் உண்டு. ஆனாலும் இந்த துணிச்சலுடன் அந்த குப்பையை அவர் தலைலே கொட்ட கூடிய அளவுக்கு ....
சபாஷ்...
ஒரு அசோக சக்ர ... அத்தனை வேண்டாம்.
ஒரு சாக்லேட் தர்றேன்.
சுப்பு தாத்தா.
வாங்க சுப்பு தாத்தா. நீங்க வேற. ஏதோ அந்த வயதில் அசட்டு துணிச்சலோடு அப்படி செய்து விட்டேன். இப்போது நினைத்து பார்த்தால் அப்படி செய்தது சரியா தவறா என்று தெரியவில்லை. மனதுக்கு சரி என்று பட்டதை அன்று செய்தேன், அவ்வளவுதான். ஆனால் இந்த அனுபவம் எனக்கு ஒரு சரியான பாடத்தை புகட்டியது. நம்மை சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒருவன் அயோக்கியத்தனம் செய்தால் அவர்கள் சும்மா இருந்து விடுகிறார்கள். 'நமக்கு ஏன் வம்பு' என்று தட்டி கேட்காமல் இருப்பதனால் தான் இன்று அரசியல்வாதிகளில் பல வழக்குகள் சுமத்தப்பட்டவர்களை நாம் பார்க்க வேண்டிய அவல நிலை இருக்கிறது.
தனபாலன், மிக சரியாக சொன்னீர்கள்.
Your response came back like a ball hit against a wall. Quite elated to read it.
Your particular action of collecting the refuse and putting them on his head, to me, appears more instinctive , but even then, I strongly doubt whether would I have ever mustered enough courage to do that.
subbu thatha.
உங்களின் துணிச்சலை பாராட்ட வார்த்தையில்லை.
நண்பரே! தெலுங்கர்கள் தான் என்பதில்லை, தமிழர்களும் இப்படித்தான் தொந்தரவு செய்வார்கள். சென்னையிலிருந்து காட்பாடிக்குப் பயணம் செய்யும் regular office-goers அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. காலை ஆறுமணிக்கே சீட்டுக்கட்டைப் பிரித்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். ரிசர்வ் செய்த சீட்டுகளிலும் கவலைப்படாமல் அமர்ந்துவிடுவர். இவர்களில் பலர் டிக்கட் இல்லாமல் பயணம் செய்யும் ரயில்வே ஊழியர்களாகவும் இருப்பர.....
நன்றி, ஜென்டில்மேன்.
உண்மை தான் ஸ்கந்த வேல்முருகன். பிரச்னை தெலுங்கா தமிழா என்பது இல்லை. பொது இடத்தில் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கிறோம் எனும் எண்ணமே இவர்களுக்கு இல்லை. என்ன செய்வது சொல்லுங்கள்.
இம்மாதிரி ரயில் பயணங்களில் சிறுவர்களை ஏவி பணி செய்ய வைத்து அப்படி வரும் வருமானம் கொண்டு பிழைப்பு நடத்தும் கும்பலே இருக்கிறது. சிலர் பிச்சை எடுப்பர். சிகர் குப்பை அள்ளுவர். பணம் கொடுக்காவிட்டால் குப்பையை அங்கேயே விட்டுச் செல்லும் சிறுவர்களையும் கண்டிருக்கிறேன். ஆனால் சுத்தம் செய்த இடத்தை மீண்டும் யாரையும் லட்சியம் செய்யாமல் அசுத்தம் செய்பவரை நீங்கள் தண்டித்தது சரியே. ( தெரிந்தோ அல்லது on impulse-ஒ)பகிர்வுக்கு நன்றி.
ஜி.எம்.பி. சார், நானும் இது போன்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது போன்ற சிறுவர்களின் நிலைமை தான் மிகவுமே பரிதாபமாக உள்ளது. சில சமயம், சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் ராக்கெட் விடுவதால் என்ன பயன், பசிப்பிணியை நம்மால் போக்க முடியவில்லையே என்று எண்ணுவது உண்டு.
இதே இந்தியன் சிங்கப்பூர் இல்லை மேலை நாடுகளுக்கு சென்றால் ஒழுக்கமாக இருக்கிறார்கள். ஏன்? இந்தியாவில் சுதந்திரம் என்றால் யாரும் எதுவும் இஷ்டப்படிசெய்யலாம் (பொது சொத்து என் சொத்து) என்ற தவறான அர்த்தம் எல்லார் மனத்திலும் ஆழமாக பதித்து விட்டார்கள் நமது அரசியல்வாதிகள். நமது பள்ளிகள் குழந்தைகளின் 3 வயது முதல் 1+1=2 அல்லது A for Apple என்று சொல்லித்தருவதில் கவனம் செலுத்துகிறது ( நமது பிள்ளைகள் முதல் நாளிலேயே A for Apple சொல்லவில்லையென்றால் அந்த பள்ளிக்கூடம் மட்டமான ஒன்று என முடிவு செய்துவிடுகிறோம்) தனி மனித ஒழுக்கம், நாட்டுப்பற்று, வீட்டிலிருந்து ஆரம்பித்து பள்ளிகளிலும் முக்கியமாக கருதப்பட்தால்தான் நிலமை மாறும். 5ல் வளையாதது 90ல்(நமது முன்னால் முதல்வர்) வளையுமா?.
நானும்(நாமும்) மாறவேண்டும்
இதே இந்தியன் சிங்கப்பூர் இல்லை மேலை நாடுகளுக்கு சென்றால் ஒழுக்கமாக இருக்கிறார்கள். ஏன்? இந்தியாவில் சுதந்திரம் என்றால் யாரும் எதுவும் இஷ்டப்படிசெய்யலாம் (பொது சொத்து என் சொத்து) என்ற தவறான அர்த்தம் எல்லார் மனத்திலும் ஆழமாக பதித்து விட்டார்கள் நமது அரசியல்வாதிகள். நமது பள்ளிகள் குழந்தைகளின் 3 வயது முதல் 1+1=2 அல்லது A for Apple என்று சொல்லித்தருவதில் கவனம் செலுத்துகிறது ( நமது பிள்ளைகள் முதல் நாளிலேயே A for Apple சொல்லவில்லையென்றால் அந்த பள்ளிக்கூடம் மட்டமான ஒன்று என முடிவு செய்துவிடுகிறோம்) தனி மனித ஒழுக்கம், நாட்டுப்பற்று, வீட்டிலிருந்து ஆரம்பித்து பள்ளிகளிலும் முக்கியமாக கருதப்பட்தால்தான் நிலமை மாறும். 5ல் வளையாதது 90ல்(நமது முன்னால் முதல்வர்) வளையுமா?.
நானும்(நாமும்) மாறவேண்டும்
மிக சரியாக சொன்னீர்கள் ராஸ்ரீ. நம் நாட்டில் கடுமையான தண்டனைகள் இல்லை என்பதால் தான் இது போன்று இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.
ஒன்றை சொல்லிகொடுத்து அதை செய்யவில்லைஎன்றால், தண்டனை கொடுப்பதில் நியாயம். முறையானசட்டமும், எல்லா தப்புகள்ளுக்கும் தண்டனையும் இந்தியாவில் இருக்கிறது. அதை follow செய்வததில்தான் பிரச்னை. நமது நாட்டில் தனிமனிதனின்ஒழுக்கத்தை (சுதந்திரத்தின் அர்த்தம் என்ன என்பதை) சொல்லி கொடுக்காத்ததினால் இந்த நிலமை என்பது என் கருத்து.
'பாதகம் செய்பவரை கண்டால் நீ
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா!
அவர்
தலையில் வேர்கடலை தோலை போட்டு விடு பாப்பா!' :-)))) Good
Post a Comment