வாழ்க்கையில் நடக்கும் சில விந்தையான சம்பவங்களுக்கு காரண காரியம் நமக்கு தெரிவதில்லை. "பகுத்தறிவுவாதிகள்" தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம் - இது உங்களுக்கான பதிவு இல்லை.
சில வருடங்களுக்கு முன்பு நானும் எனது மனைவியும் திருவண்ணாமலைக்கு சென்று வர முடிவு செய்தோம். அது வரை நாங்கள் திருவண்ணாமலைக்கு சென்றதே இல்லை. எங்களது நெருங்கிய குடும்ப நண்பர்களான குமார்-பத்மாவதி தம்பதியினர் பல முறை கிரிவலம் செய்து வந்த அனுபவங்களை சொல்ல கேட்டு எங்களுக்கும் அங்கு செல்ல மிக ஆர்வமாக இருந்தது. மெட்ராஸிலிருந்து மதியம் ஒரு பஸ் பிடித்து சுமார் 4 மணி வாக்கில் திருவண்ணாமலை சென்றடைந்தோம்.
திருவண்ணாமலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைத்தோம். நல்ல வேளை, நாங்கள் சென்ற போது வெகு சிலரே இருந்தனர். கோவிலுக்குள் நுழைந்த உடனேயே எங்களை ஒரு அதீதமான உணர்வு ஆட்கொண்டது என்று சொன்னால் மிகையாகாது. முருகன் சன்னதி முன்பு இருந்த தூணின் முன்பு பல பேர் அகல் விளக்குகளை ஏற்றியிருந்ததை கண்டோம். இங்கு தான் அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி அளித்தாராம். திருப்புகழ் என்ற அமர காவியம் இயற்றப்பட்ட இடமாயிற்றே. பரவசமாக இருந்தது.
வினாயகர் சன்னதியில் தரிசனத்தை முடித்து விட்டு நேராக அண்ணாமலையின் சன்னதிக்குள் நுழைந்தோம். எனது சட்டையை கழற்றி விட்டு இறைவனின் முன்பு நின்ற போது எங்களுக்குள் ஏற்பட்ட உணர்வை எழுத்துக்களால் வர்ணிக்க முடியாது. அந்த லிங்கத்திலிருந்து ஒரு விதமான அலைகள் வந்து என்னை ஆட்கொண்ட மாதிரி உணர்ந்தேன். அதை சொல்ல வார்த்தைகளால் முடியாது, உணர்ந்தால் தான் முடியும். உடல் முழுவதும் வியர்த்து விட்டது. அந்த சன்னதியில் அப்படி ஒரு வெப்பம். பஞ்ச பூதங்களில் அக்னி லிங்கம் இது தான் என்று கூறுவது 100க்கு 100 உண்மை.
மெட்ராஸிலிருந்து கிளம்பிய போது அண்ணாமலையானிடம் 'எனக்கு இது வேண்டும், அது வேண்டும்' என்று கேட்பதற்கு மனதுக்குள் ஒரு பெரிய பட்டியலே போட்டு வைத்திருந்தேன். ஆனால் இறைவனை பார்த்த பரவசத்தில் அவை அனைத்தையுமே மறந்து விட்டேன். அண்ணாமலையானை பார்த்த பிறகு எதையுமே கேட்க தோன்றவில்லை. எல்லாவற்றையும் பார்த்து கொள்ள நம்மை படைத்த இறைவன் இருக்கும்போது நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஆசை தீர தரிசனத்தை முடித்து விட்டு உண்ணமுலை அம்மன் சன்னதிக்கு சென்றோம். சிவன் சன்னதியில் இருந்த வெப்பத்துக்கு நேர்மாறாக இங்கு குளுமையாகவே இருந்தது. அன்னையை தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும்போது காலபைரவர் சன்னதியை வந்தடைந்தோம்.
எனக்கு காலபைரவர் பற்றி ஒன்றுமே தெரியாது. சிவனின் அம்சம் என்று கூறுவார்கள், அவ்வளவு தான் எனது சிற்றறிவுக்கு தெரிந்த ஒன்று. காலபைரவரின் வாகனம் நாயாம். பிரார்த்தனையை முடித்துக்கொண்டு கிரிவலம் செய்வதற்காக கோவிலின் வெளியே வந்தோம்.
மாலை 5.30 மணி இருக்கும். லேசாக இருட்டி கொண்டு வந்தது. கடைத்தெரு வழியாக கிரிவலம் செல்லும் பாதையை தெரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம். லேசாக தூறல் போட ஆரம்பித்தது. இதை நாங்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. மெட்ராஸில் எப்போது மழை பெய்திருக்கிறது, குடையை எடுப்பதற்கு? சரி, சிறிது நேரத்தில் தூறல் நின்றுவிடும் என்று நினைத்து முடிப்பதற்குள் தூறல் பெரிது பெரிதாக விழ ஆரம்பிக்க வானமே திடீரென்று இருண்டு விட்டது. இடி, மின்னலுடன் மிக பெரிதாக மழை கொட்ட ஆரம்பித்து விட்டது.
சட்டென்று ஒரு கடைக்குள் தஞ்சம் புகுந்தோம். கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தோம். எங்களுக்குள் கவலை ஆரம்பித்து விட்டது. "கடவுளே! முதன் முறையாக கிரிவலம் செய்யலாம் என்று வந்தால் என்ன இப்படி ஒரு சோதனை!" என்று இறைவனை நினைத்து வேண்டினோம். எத்தனை நேரம் தான் இப்படியே நின்று கொண்டிருப்பது? நான் என் மனைவியிடம் "இன்னும் ஒரு 5 நிமிடங்கள் பார்ப்போம். மழை நிற்கவில்லை என்றால் ஒரு ஆட்டோவை பிடித்து பேருந்து நிலையத்துக்கு சென்று மீண்டும் மெட்ராஸுக்கே சென்று விடலாம்" என்று கூறினேன். அப்படி கூறும்போதே எனது மனமும் என் மனைவியின் முகமும் வாடி விட்டன.
நம்ப மாட்டீர்கள், அடை மழையாக பெய்து தெருவெல்லாம் வெள்ளக்காடாக இருந்த நிலை மாறி சொல்லி வைத்த மாதிரி ஐந்தாவது நிமிடத்தில் மழை திடீரென்று நின்று விட்டது. எங்களுக்கே ஆச்சரியம். வந்தது வரட்டும், அண்ணாமலையார் பார்த்து கொள்வார் என்று நானும் என் மனைவியும் கிரிவலத்தை மீண்டும் ஆரம்பித்தோம்.
சிறிது சிறிதாக போக்குவரத்து குறைந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் ஊரை விட்டு வெளியே வந்து விட்டோம். எதிரே பார்த்தால் கும்மிருட்டு. காடு மாதிரி இரு பக்கமும் அடர்ந்த மரங்கள். மின்சார தடையால் தெரு விளக்குகள் எதுவுமே எரியவில்லை. கிரிவலத்துக்காக செருப்பை வேறு கோவில் வாசலில் கழற்றி வைத்து விட்டோம். இப்போது நானும் என் மனைவியும் மட்டும் கிரிவல பாதையில் தனியாக இருந்தோம். சாலையில் வேறு எந்த நடமாட்டமும் இல்லை.
கும்மிருட்டு என்றால் அப்படி ஒரு கும்மிருட்டு. மழை பெய்து ஓய்ந்திருந்ததால் வானத்தில் நிலவை கூட மேகங்கள் மறைத்து விட்டிருந்தன. வலது பக்கத்தில் எதேச்சையாக பார்த்தால் கல்லறைகளாக இருந்தன. எனக்கு தூக்கி வாரி போட்டது. 'என்னடா இது, தவறு செய்து விட்டோமா, துணைக்கு யாருமே இல்லையே, திரும்பி போய் விடுவோமா' என்றெல்லாம் மனது எண்ண ஆரம்பித்து விட்டது. எனது எண்ண ஓட்டத்தை பார்த்து விட்ட எனது மனைவியும் "சிவனை நினைத்து பிரார்த்தித்து கொண்டே செல்லலாம்" என்றார். வந்தது வந்து விட்டோம் என்று "ஓம் நம சிவாய" என்று கூறிக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.
மழை பெய்திருந்த சாலை முழுவதும் கழுவி விட்டது போல ஈரமாக இருந்தது. நாங்கள் இருவரும் இருட்டில் "ஓம் நம சிவாய" என்று கூறிக்கொண்டே நடக்கும் போது திடீரென்று என் மனைவி என்னை பிடித்து பின் பக்கம் இழுத்தார். எனக்கு என்னவென்றே புரியவில்லை. கீழே பார்த்தால் கறுப்பு நிறத்தில் ஒரு கையின் அளவுக்கு பெரிதாக ஒரு தேள் கொடுக்கை மேலே தூக்கி கொண்டு சாலையை கடந்து கொண்டிருந்தது. நல்ல வேளை எனது மனைவி என்னை பின்னால் இழுத்ததால் அதன் மேல் நான் காலை வைக்காமல் போனேன்.
எனக்கு குலை நடுங்கிவிட்டது. "இறைவா, இது என்ன சோதனை. நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்" என்று மனமுருக பிரார்த்தனை செய்தேன். திடீரென்று எங்கிருந்தோ ஒரு 5 நாய்கள் வந்தன. அவற்றை யாரும் வீட்டில் வளர்க்கிற மாதிரி தெரியவில்லை. ஏதோ காட்டிலிருந்து வந்தவை போல இருந்தன. எங்கள் இருவரை கண்டதும் பெரிதாக குறைத்து கொண்டே 'உர்ர்ர்' என்று பற்களை காட்டி கொண்டு எங்களுக்கு மிக அருகில் இரு பக்கமும் சூழ்ந்து கொண்டன. சாலையில் யாருமே இல்லை.
எங்களுக்கு சப்தநாடியும் அடங்கியது போல் ஆகிவிட்டது. ஓட கூட முடியாதே, இப்போது என்ன செய்வது? நாங்கள் இருவரும் "ஓம் நமசிவாய" என்று கூறி கொண்டே அந்த நாய்களை லட்சியம் செய்யாமல் நடக்க ஆரம்பித்தோம். அப்போது பழுப்பு நிறத்தில் ஒரு நாய் மட்டும் மற்ற நாய்களை விரட்டி அடிப்பதை பார்த்தோம். அதை பார்த்த உடன் மற்ற நாய்கள் சற்றே பின் வாங்க துவங்கின. நாங்கள் திரும்பி பார்க்காமல் பெரிதாக "ஓம் நம சிவாய" என்று கூறிக்கொண்டே வேகவேகமாக நடக்க ஆரம்பித்தோம். இப்போது அந்த ஒரு நாய் மட்டும் எங்களை பின் தொடர ஆரம்பித்தது. அதை விரட்டி விட்டால் கூட வேறு எங்கும் செல்லாமல் எங்களையே பின் தொடர்ந்து வந்தது.
'எது என்னடா வம்பாகி போய் விட்டதே' என்று நினைத்து கொண்டே கையில் இருந்த ஒரு பிஸ்கெட்டை அந்த நாயிடம் போட்டேன். ஆனால், அதிசயமாக அந்த நாய் அதை தொடக்கூட இல்லை. நாங்கள் நடந்து கொண்டே இருந்தோம். அந்த நாய் மட்டும் எங்களை பின் தொடர்ந்து கொண்டே வந்தது. ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு வேறு ஒரு நாய் கூட்டத்தை கண்டோம்.
சென்ற முறை போலவே இந்த முறையும் இந்த ஒற்றை நாய் மற்றவைகளை விரட்டி விட்டது. எங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எங்களுக்கு பாதுகாவலன் போல அந்த நாய் செயல்பட்டது வியப்பை தந்தது. இப்போது அந்த நாயின் மீதிருந்த பயம் போய் எங்களை அறியாமலேயே ஒருவிதமான நட்பு வளர ஆரம்பித்திருந்தது.
எப்போதாவது வழியில் அபூர்வமாக ஒரு லாரியோ வாகனமோ செல்ல நேர்ந்தால் நாங்கள் சாலையின் ஓரத்தில் ஒதுங்கி கொள்வோம். அந்த வாகனத்தை பார்த்து இந்த நாய் குறைக்கும். பிறகு, இருட்டில் மீண்டும் நாங்கள் நடக்க ஆரம்பித்தவுடன் அதுவும் எங்களை பழையபடி பின் தொடர்ந்து கொண்டே வரும். கிட்டத்தட்ட ஒரு 2 மணி நேரம் நடந்திருப்போம். அந்த நாயும் எங்கள் கூடவே பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. தூரத்தில் விளக்கு எரிவதை போல தெரிந்தது. அதன் அருகே சென்ற பிறகு அது ஒரு டீ கடை என்று தெரிந்தது. 'அப்பாடா, கடைசியில் மனித நடமாட்டத்தை கண்டோமே' என்று நிம்மதியாக இருந்தது.
அந்த கடையில் சிறிது நேரம் உட்கார்ந்து தேனீர் அருந்த உட்கார்ந்து கொண்டோம். ஒரு பொறையை வாங்கி அந்த நாய்க்கு போட்டோம். ஆனால் அது எதையும் சாப்பிட மறுத்து விட்டது. நாங்கள் மீண்டும் எங்களது பயணத்தை தொடர ஆரம்பிக்க, அதுவும் எங்களை பின் தொடர்ந்து வர ஆரம்பித்து விட்டது.
கிரிவலத்தின் கடைசி கட்டத்தில் ஈசான லிங்கத்தின் வழியாக செல்ல வேண்டும். இரு புறமும் சுடுகாடு. ஒரு பிணம் தகதகவென்று எரிந்து கொண்டிருந்தது. (இப்போது அதை மறைப்பதற்காக சுவர் எழுப்பி விட்டார்களாம்). எங்களுடன் வந்த நாய் திடீரென்று எங்களை விட்டு பிரிந்து சென்று ஒரு சமாதியின் முன் நின்று கொண்டது. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருட்டி விட்டதால் ஈசான லிங்க கோவிலையும் மூடி விட்டிருந்தார்கள். அது வரை எங்கள் கூடவே வந்த அந்த நாயை பிரிந்து நாங்கள் தனியே செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை.
வாயால் அதை 'புச்' என்று கூப்பிட உடனே அந்த நாய் மீண்டும் எங்களுடன் கிரிவலம் செய்ய ஆரம்பித்தது.
கடைசியில் கிரிவலத்தை முடித்து ஊருக்குள் நுழைந்தோம். ஒரு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். திரும்பி பார்த்தால் அந்த நாய் ஆட்டோவின் பின்னாலேயே நின்று கொண்டிருந்தது. கையில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து அதனிடம் கொடுக்க, அப்போது தான் முதன்முறையாக அந்த நாய் அதை சாப்பிட ஆரம்பித்தது. நன்றி கலந்த அன்புடன் அந்த நாயை நாங்கள் பிரிய எங்களின் ஆட்டோ கிளம்பியது.
அண்ணாமலையானே, நாங்கள் வேண்டிய அடுத்த கணமே எங்களை பாதுகாக்க நாயை அனுப்பி வைத்தாயா? அற்ப மனிதர்களான எங்களின் மேலும் நீ கருணை காட்டியிருக்கிறாயே! இது முன் ஜென்மத்து பந்தமா, அல்லது எங்கள் மேல் நீ காட்டிய இறக்கமா? திடீரென்று மின்சாரம் வந்ததால் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. மனதில் இருந்த இருட்டும் விலகி வெளிச்சம் தோன்றியது போல் இருந்தது இந்த மறக்க முடியாத அனுபவம்.
16 comments:
நமது வாழ்வில் நாம் சந்திக்கும் சில நிகழ்ச்சிகளுக்கு எப்படி தேடினாலும் விடை தெரிவதில்லை. உணர்தல் மட்டுமே.
உண்மைதான் இளங்கோ. இந்த அனுபவம் ஏற்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதை எழுதினால் பிறர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற சந்தேகத்தால் சும்மா இருந்து விட்டேன். உணர்வை எழுத்தால் சொல்ல முடியாது அல்லவா?
நல்ல அனுபவம்...
தென்னாடுடைய சிவனே போற்றி.....
நன்றி, மகேஷ்
எனக்கு இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமிட ஒப்புதல் உள்ளதா தெரியவில்லை. “பகுத்தறிவாளர்கள் “ படிக்க வேண்டாம் என்று எழுதிவிட்டீர்கள். பகுத்தறிவாளர்கள் என்பதை கடவுளை மறுப்பவர்கள் என்ற பொருளில் எழுதி உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் ஆனால் நான் எதையும் பகுத்து அறிபவன் என்றே நினைக்கிறேன். பகுத்து அறிபவனுக்கு எல்லா விடைகளும் கிடைத்து விடுவதில்லை. இருந்தாலும் தொடர்ந்து அதை மேற்கொள்பவன் நான் . நீங்கள் சொல்வது போல் சில அனுபவங்கள் உணர்ந்தே அறியப் படுபவை. கிரிவலம் பொதுவாக பௌர்ணமி இரவில் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் மற்ற நாளில் நானும் கிரிவலம் வந்ததுண்டு. ஆனால் அது ஒரு மோட்டார் காரில். உங்கள் அனுபவங்கள் உங்கள் மனம் விட்டு அகலாது. பிறருக்கு அது சில நிகழ்வுகள். அணுகுமுறை மாறுபடும் . நானும் என் மனைவியும் மலை மேலுள்ள ரமணாசிரமத்துக்கு போக மலைப் பாதையில் போய்க் கொண்டிருந்தபோது “ஓம் “ என்னும் ஒலி எதிரொலித்துக் கொண்டிருந்ததாக உணர்ந்தோம். ஆனால் எங்களுடன் வந்தவர்களுக்கு ஏதும் கேட்கவில்லை என்றனர்
அமானுஷயங்களின் அருமை
அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்
மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி, ரமணி
நம் மனதில் நம்பிக்கை இருந்தாலே அல்லது வந்தாலே போதும்...
சில நிகழ்வுகள் வியப்பைத் தரும்... அது போல் பைரவரும் கூடவே துணையாக வந்ததும்...
ஜி.எம்.பி.சார், பகுத்தறிவுவாதிகள் என்ற சொல்லை within quotes (" ")கூறியிருக்கிறேன். யாரையும் பின்னூட்டமிட வேண்டாம் என்று கூறவில்லையே! அது தவிர, அப்படி கூறியதற்கு சில காரணங்கள் உண்டு.
கடவுள் எதிர்ப்பை "பகுத்தறிவுத்தனம்" என்ற பைத்தியக்காரத்தனமான logicஐ தமிழ்நாட்டில் சிலர் கூறிக்கொண்டு அலைகின்றார்கள். Atheism என்பதும் Rationalism என்பதும் வெவ்வேறு என்பதை உள்ளூர் கீழ்த்தரமான அரசியலுக்காக மறைத்தவர்கள்.இன்னும் சொல்ல போனால் ஹிந்து கடவுள்களை எதிர்ப்பதே அவர்களின் "பகுத்தறிவுத்தனத்தின்" லட்சணம்.
நீங்கள் கூறியது போல, என்னுடைய அனுபவங்கள் அதீதமானவை. பிறருக்கு அவை வெறும் நிகழ்வுகள் தான்.
திருமலையில் நேர்ந்த அனுபவம். யோக நரசிம்மர் சன்னதி மூடப்பட்டிருந்தது. நான் மனமுருகி ஒரே ஒரு முறை தரிசனம் கிடைக்காதா என்று வேண்டிய சில நொடிகளிலேயே திடீரென்று எங்கிருந்தோ வந்த அர்ச்சகர், உள்ளே ஏதோ ஒரு பொருளை வைப்பதற்காக அந்த கதவை சில வினாடிகள் திறந்த போது கிடைத்த தரிசனம் - அப்பப்பா, சொல்லி மாள முடியாது. இது தற்செயலாக நடந்த நிகழ்வாக எனக்கு தோன்றவில்லை. மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வே. நம்மூர் "பகுத்தறிவுவாதிகளுக்கு" பரிகாசம் செய்ய இது போன்ற நிகழ்வுகள் ஒரு சந்தர்ப்பம் என்பதாலேயே முதல் பத்தியில் எழுதிய disclaimer!
உங்களுடைய ஓம்கார ஒலி அனுபவம் ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
நன்றி, தனபாலன்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் என்ற ஆனந்தி படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. எனக்கு கல் மட்டும்தான் தெரியும் கண்ணிலே அன்பிருந்தாலும்.
நன்றி, காரிகன். நல்ல பாடல்.
ஆத்திகர்கள் இதனை எப்படி வேண்டுமானாலும் குறை கூறலாம்.
உணர்வென்ற இந்த இடத்தில் தான் ஆத்திகம் , நாத்திகம் பிரிக்க படுகிறது.
உணர்வை அவரவரே அனுபவிக்க,அளக்க முடியும்.
அறிவியல் வளர இதற்கு விடை கிடைக்கலாம்.
ஆனால் இந்த நம்பிக்கை என்ற உணர்வு நம் நாட்டை படுத்தும் பாடு சொல்லி மாளாது .
இத்தனை கடவுள் இருந்தும் பற்பல மதங்களில் , நம் நாட்டின் நிலை மிக தாழ்வாக உள்ளது.
இந்த கடவுள் இல்லாவிட்டால் என்ன நட்டம் ? இங்கு உள்ள அனைத்தும் மனிதனால்செய்ய பட்டவை.
இந்த உணர்வு உங்களுக்கு கிடைத்ததால் என்ன பயன் சமுகத்துக்கு? உங்கள் குடும்பத்துக்கு? அடுத்தவருக்கு துன்பம் தராமல் வாழ்ந்தாலே சமுகம் நலமுடன் இருக்கும்.
இரு காதில் விரலை விட்டாலே ஒரு சத்தம் கேட்கும். அதற்கு ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தரலாம்.
ஆக ஏற்ற தாழ்வற்ற சமுகம் அமைய இரு தரப்பாரும் முயற்சிக்க வேண்டும்.
கடவுள் இருந்தால் அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுவார் என்று நினைக்கிறேன்.
நன்றி, அனானி.
இந்த உணர்வு எனக்கு கிடைத்ததால் இந்த சமூகத்துக்கு என்ன பயன் என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த சமூகத்துக்கு பயன்படுவதற்காக எனக்கு உணர்வு வர வேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? என்னுடைய உணர்வுகளை என்னுடைய வலைத்தளத்தில் எழுத எனக்கு உரிமை இல்லையா? அதற்கு இந்த சமூகத்தின் ஒப்புதல் தேவை இல்லையே. கடவுள் இல்லாவிட்டால் என்ன நட்டம் என்று கேட்கிறீர்கள். அது உங்களது கருத்து. அதை சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. அது போலவே என்னுடைய வலைத்தளத்தில் ஆன்மீகத்தை பற்றி எழுத எனக்கும் உரிமை உள்ளது.
அதனால் தான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே இது போன்ற விவாதங்களை என்னுடைய வலைத்தளத்தில் தவிர்ப்பதற்காக அப்படி எழுதினேன். எனக்கு ஏற்பட்ட உணர்வை பகிர்ந்து கொள்ள என்னுடைய வலைத்தளத்தில் அதை பற்றி எழுத யாருடைய அனுமதியையும் பெற தேவை இல்லை என்று எண்ணுகிறேன்.
ஒரு முறை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலையில் பௌர்ணமி அன்று ஏறினோம் .. நானும் கணவரும் தான் கடைசி போல என்று மலையைத்திருமிப்பார்த்து பயம் கொள்ள ஆரம்பித்த தருணம் ஒரு கணவன் மனைவி மகன் என்று ஒரு குடும்பம் கண்களில் பட்டு தைரியம் அடைந்து அந்த சிரமமான மலையிலிருந்து திருப்தியாக இறங்கினோம் ..
இப்போது நினைத்துப்பார்த்தால்
அது சிவனும் பார்வதியும் முருகனுமாகத்தான் இருக்கவேண்டும் என உறுதியாக நம்புகிறேன் நான் ..
உண்மை தான் இராஜராஜேஸ்வரி. இறைவன் பல வடிவங்களில் தோன்றுவான். அதை உணர்வதற்க்கு கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
Post a Comment