Monday, 29 September 2014

சூரத் நினைவுகள்-2

வாழ்க்கையில் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். சிலரை சந்தித்த பின் பல இனிமையான நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலரை ஏன் சந்தித்தோம் என்று நினைக்க தோன்றும். சூரத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. 

இதற்கான முந்தைய பதிவை இங்கே படிக்கலாம். எனக்கு திருமணம் ஆவதற்கு சில மாதங்கள் முன்பு சூரத்தில் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு குடி பெயர்ந்தேன். இது என்னுடைய நிறுவனம் வாடகைக்கு எடுத்த வீடு. எனது எதிர் வீட்டில் கணேஷ் என்ற நண்பன் இருந்தான். அவனுக்கு திருமணம் ஆகவில்லை. பெரும்பாலும் நான் அவனது வீட்டிலோ அல்லது அவன் எனது வீட்டிலோ தான் அரட்டை அடித்து கொண்டிருப்போம்.

அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்த சில மாதங்களில், கணேஷ் அவனுடைய சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து இன்னும் இரண்டு நண்பர்களை அழைத்து வந்துவிட்டான். அவர்களில் ஒருவன் சூரத்தில் ஒரு தனியார் நிறுவனத்திலும் மற்றொருவன் வருமான வரி அலுவலகத்திலும் வேலை பார்த்து வந்தனர்.

தினமும் நடக்கும் அரட்டை கச்சேரிகளில் அரசியல்வாதிக‌ள் அனைவரையும் போட்டு அலசி விளாசி எடுத்து விடுவோம். தமிழகத்தை எப்படி ஒவ்வொரு கட்சியும் வந்து சீரழித்து விட்டது என்றெல்லாம் விவாதிப்போம். காசா, பணமா, வெறும் பேச்சு தானே!  வருமான வரி அலுவலகத்தில் வேலை பார்த்த நண்பன் பெயர் டென்னிஸ். அந்த அலுவலகத்தில் ஒரு கடை நிலை குமாஸ்தாவாக (Lower Division Clerk) வேலை பார்த்து வந்தான். அவன் வேலைக்கு சேர்ந்து சில நாட்கள் தான் ஆகியிருந்தன.
 
நாங்கள் ஊழல் பற்றி பேசும் போது எல்லா அரசியல் வாதிகளையும் கட்சி பேதமில்லாமல் தாக்கி பேசுவான். எப்படியாவது நம்து நாட்டை ஊழல் இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற வெறி அனைவரிடமும் இருந்தது. குறிப்பாக காமராஜர் பற்றி பேசும்போது அவன் வெறி வந்தவன் போல் ஆகிவிடுவான். "எப்பேற்பட்ட மனிதர்டா. இவனுகளை எல்லாம் சுட்டு பொசுக்கி விட்டு அவர் மாதிரி யாராவது நல்லவர் வந்து இந்த நாட்டை ஆளணும்டா" என்றெல்லாம் ஆவேசமாக கூறுவான்.
 

சூரத் சிறிய ஊர் தான். ஆனால் அந்த சிறிய ஊரில் பண புழக்கம் பல கோடி ரூபாய்க்கு இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அங்கு நடந்த வைர வியாபாரமும் ஜவுளி வியாபாரமும் தான். சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு பிரபல அரசாங்க வங்கியில் ஒரு சாதாரண எஸ்.பி. அக்கவுண்ட்டை திறக்க வேண்டும் என்றால் 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு வங்கியிலும் அவ்வளவு பணப்புழக்கம். கோடிக்கணக்கில் டெப்பாஸிட்டுகள் புழங்கும் வங்கிகளுக்கு மாத சம்பளக்காரனான எனது சொற்ப பணம் அவர்களுக்கு தேவையே இல்லை. மெட்ராஸில் இருக்கும் போது வங்கிகள் டெப்பாசிட்டுக்காக நம்மிடம் அலைவார்கள். இங்கு நேர்மாறாக இருந்தது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது.

 
தினமும் நடக்கும் எங்களது அரட்டை கச்சேரியில் தத்தம் அலுவலகங்களில் நடக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். டென்னிஸ் தனது அனுபவத்தை கூறும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கும். சூரத்தில் வைர வியாபாரிகள் அதிகம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வருமான வரியை கட்டுவதே இல்லை. அப்படி கட்டுபவர்கள் முதலிலேயே அட்வான்ஸாக பணத்தை கட்டிவிட்டு ஆண்டு கடைசியில் தகுந்த தஸ்தாவேஜுகளை கொடுத்த பிறகு பணத்தை திரும்ப பெற்று கொள்ள வேண்டும். இது எல்லா வருமான வரி அலுவலகங்களிலும் நடக்கும் சாதாரணமான விஷயம் தான்.
 
 
பணத்தை திரும்ப பெற வேண்டும் என்றால் நீங்கள் கொடுத்த பேப்பர்களை சரி பார்த்து அதற்கு தகுந்த மாதிரி returns கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்த கடை நிலை குமாஸ்தாக்களின் வேலை. அந்த வேலையை தான் டென்னிஸ் செய்து கொண்டிருந்தான்.

வருமானவரி அலுவலகத்தில் ரிட்டர்ன் ஃபைல் செய்து பணத்துக்காக காத்திருக்க வியாபாரிகளிடம் நேரம் இல்லை. அதனால், அந்த அலுவலகத்தில் இருக்கும் இந்த குமாஸ்தாக்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்து கொள்வார்கள். பல கோடி ரூபாய் பணம் வரும்போது சில ஆயிரங்களை கொடுத்தால் உடனடியாக பணம் கைக்கு வந்து விடுகிறதே, எல்லாம் அந்த கணக்கு தான். இப்படி வாரா வாரம் பல ஆயிரக்கணக்கான ரூபாய் அந்த அலுவலகத்தில் புழங்கியது.

சூரத்தில் சுக் சாகர் என்ற பிரபல ஹோட்டல் இருந்தது (இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை). ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் அந்த ஹோட்டலில் எல்லா குமாஸ்தாக்களும் டிபன் காபி சாப்பிட்டு விட்டு அந்த வாரத்துக்கான லஞ்சப்பணத்தை பகிர்ந்து கொள்வது வழக்கமாம். பல வருடங்களாக இப்படி நடந்து கொண்டிருந்ததாம்.

"இவர்கள் இப்படி என்றால் என்னுடைய மேலாளன் கொட்டை போட்டவன். அவனுக்கு பெரிய அளவில் பணம் வந்து கொட்டும்" என்றெல்லாம் சொல்வான். அவனுடைய அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கூறினான். ஒரு முறை காலை 11.30 மணிக்கு ஒரு முதியவர் வந்தாராம். இவர்களிடம் பணம் கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்ற நிலை ஆகி விட்டது அல்லவா? ஆனால் அந்த முதியவர் பணம் கொடுக்க விருப்பப்படவில்லை. "உங்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்கிறார்கள்?" என்றெல்லாம் கத்த ஆரம்பித்தாராம். அதற்கு அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பியூன் சொன்னானாம், " நாங்கள் தினமும் வந்து ரெஜிஸ்டரில் கையெழுத்து போடுகிறோம் இல்லையா, அதற்கு தான் சம்பளம் கொடுக்கிறார்கள். உனக்கு வேலை ஆக வேண்டும் என்றால் நீ எங்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டும்" என்று சொல்ல அவனது அலுவலகத்தில் அனைவரும் சிரித்தார்களாம்.
 
பாவம் முதியவர். எங்களுக்கு அதை கேட்க கேட்க ஆத்திரமாய் வந்தது.
"நீ என்னடா செய்து கொண்டிருந்தாய், அவருக்கு ஏதாவது உதவி செய்திருக்கலாமே" என்று நான் கேட்க, "தனி ஒருவனாக நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறினான். அத்துடன் அன்றைய பொழுது முடிந்தது.
 

சில மாதங்கள் கழித்து எனக்கு திருமணம் ஆனது. 1992ல் வண்ண தொலைக்காட்சி பெட்டி என்பது ஒரு மிக பெரிய விஷயம். எனது சொற்ப சம்பளத்தில் 18000 ரூபாய் டி.வி.யை எப்படி வாங்க முடியும்? (அப்போது ஒரு வண்ண டி.வி.யின் விலை அவ்வளவு இருந்தது). அதனால், எனது நிறுவனத்தில் கடன் வாங்கினேன். முதன் முதலில் ஓனிடா என்ற டி.வி.யை  வாங்கிய போது நான் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல முடியாது. கடனை ஒரு வருடத்தில் வட்டி இல்லாமல் மாதா மாதம் எனது சம்பளத்தில் இருந்து பிடித்து கொண்டே வந்தார்கள்.

அதே போல, எதிர் வீட்டு கணேஷுக்கும் திருமணம் ஆனதால், அவனுடன் இருந்த இரண்டு நண்பர்கள் வேறு வீட்டுக்கு காலி செய்து கொண்டு போய் விட்டனர். இதில் இந்த டென்னிஸும் ஒருவன்.
 
 
பல நாட்களுக்கு பிறகு டென்னிஸை பார்த்து விட்டு வரலாம் என்று அவனுடைய புதிய வீட்டுக்கு சென்றிருந்தேன். அடையாளமே தெரியவில்லை. உள்ளே அத்தனை ஆடம்பர பொருட்களும் இருந்தன. எனக்கு முதலில் சற்று சந்தேகம். கடைசியில் அவனிடம் நேரிடையாகவே கேட்டு விட்டேன். எனது கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவன் சற்று திணறியது தெரிந்தது.
 
குரலை கனைத்து கொண்டு பேச ஆரம்பித்தான். "முதலில் நானும் மிகவும் நேர்மையாக தான் இருந்தேன். ஆனால், என்னுடன் வேலை செய்யும் மற்ற மூன்று குமாஸ்தாக்களும் வரும் வியாபாரிகளிடம் 'அவனுக்கு சேர்த்து கொடு' என்று எனது பெயரை சொல்லி பணம் வாங்க ஆரம்பித்தார்கள். அதற்கு பிறகு நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். நான் பணம் வாங்கவில்லை என்றால் எப்படியும் எனது பெயரை சொல்லி இவர்கள் வாங்கத்தான் செய்ய போகிறார்கள். அதனால் நானே ஏன் பணம் வாங்க கூடாது என்று நினைத்தேன். முதலில் சிறிது சங்கோஜமாக தான் இருந்தது. போக போக அதுவே பழகி  விட்டது" என்றான்.
அதற்கு மேல் அவன் கூறியது எதுவுமே எனது காதுகளில் விழவில்லை.  அவனிடமிருந்து விடை பெற்று சோர்வுடன் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எப்படி இருந்தவன் எப்படி மாறிவிட்டான்! எவ்வளவு மதிப்பு வைத்திருந்தேன். எல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடியாகி விட்டதே. அவனுடைய கொள்கைகள் எல்லாம் வெறும் வீரவசனம் தானா? அவன் இப்படி மாறிவிட்டான் என்பதை விட அவனா இப்படி மாறிவிட்டான் என்ற எண்ணமே என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதைவிட, அவன் மாறியதற்கான காரணத்தை கூறுகிறானே, அதை நினைக்க நினைக்க எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.
 
 
கேவலம் ஒரு டி.வி. வாங்க நான் எனது நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கி அதை மாதாமாதம் தவணை முறையில் கட்டி கொண்டு வருகிறேன். இவன் ஒரு வேலையும் செய்யாமல் தனது கடமையை செய்வதற்கு பணம் வாங்கிக்கொண்டு உல்லாசமாக இருக்கிறானே. அப்படி என்றால் நேர்மையாக இருப்பவர்கள் எல்லாம் எப்பொழுதும் கஷ்டத்தில் தான் இருக்க வேண்டுமா? அவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழவே முடியாதா, என்றெல்லாம் மன உளைச்சலுடன் தூங்க போனேன்.
 
 
 சில நாட்கள் மனது மிகவும் கஷ்டப்படும். என்ன செய்வது, வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம். அதில் இவனும் ஒருவன். நாம் ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும் போது நமது இருக்கை கிழிந்திருந்தால் என்ன செய்வது? அதையே நினைத்து கொண்டா இருக்க முடியும்? நாம் இறங்க வேண்டிய இடம் வரும்வரை பல்லை கடித்துக்கொண்டு அதற்கு பிறகு அதை பற்றி மறந்து விடுகிறோம் இல்லையா?
இதற்கு பிறகு மனதை தேற்றிக்கொண்டு அவனை பற்றி நினைப்பதையே நிறுத்திவிட்டேன். அவன் வீட்டுக்கும் செல்லாமல் இருந்தேன். ஒரு இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. கால சுழற்சியில் அவரவர் தத்தம் வேலைகளில் ஈடுபட்டுவிட்டதால் கிட்டத்தட்ட டென்னிஸை நான் மறந்தே விட்டேன்.
இந்த மறதி என்பது எவ்வளவு பெரிய மருந்து. கால வெள்ளத்தில் நமது மனப்புண்களையும் கையாலாகாத்தனங்களையும் ஆற வைக்கும் மிகப்பெரிய தைலம் அல்லவா?
திடீரென்று ஒரு நாள் எதிர் வீட்டு கணேஷ் என் வீட்டு கதவை தட்டினான். "யார் வந்திருக்காங்க பாரு" என்றான். அவன் வீட்டுக்கு சென்றால் டென்னிஸும் அவனுடன் ஒரு பெண்ணும் இருந்தார்கள். சற்றே உடல் பெருத்திருந்தான். என்னை கண்டதும் கையை பிடித்து பலமாக குலுக்கி அந்த பெண்ணை அறிமுகம் செய்தான். அவள் அவனுடைய மனைவியாம். 
அப்போது தான் அவனுக்கு திருமணம் ஆன விஷயம் எனக்கு தெரிந்தது. இரவு சாப்பிட்டு விட்டு பால்கனியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு விஷயத்தை கூறினான். "நான் இப்போது கெசடட் ஆபீசர் ஆகிவிட்டேன் தெரியுமா?" என்றான். எப்படி என்று ஆச்சரியத்துடன் நான் கேட்க, "பரீட்சை எழுதி இன்ஸ்பெக்டராகி விட்டேன். கொடுக்க வேண்டியதை கொடுத்து இதே சூரத்துக்கு நான் பார்த்த இதே அலுவலகத்துக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்" என்று ஏதோ பெரிதாக சாதித்து விட்டவன் போல கூறினான்.
 
 
குமாஸ்தாக்களுக்கு ஒரு தொகை லஞ்சமாக கிடைக்கும் என்றால் அவர்களை மேய்க்கும் இன்ஸ்பெக்ட்டருக்கு அவர்களை விட அதிகமாக கிடைக்கும் என்று ஒரு முறை கூறியது நினைவுக்கு வந்தது. சம்பிரதாயமான வார்த்தைகளுக்கு பிறகு நான் விடை பெற்றேன். கிளம்பும் போது, "உனக்கு ஏதாவது அட்டஸ்ட் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் வா. நான் செய்து தருகிறேன்" என்று சிரித்து கொண்டே சொன்னான்.
 
 
நானும் சிரித்து கொண்டே, "அப்படி நீ அட்டஸ்ட் செய்து கொடுக்க உன்னிடம் தருவதற்கு என்னிடம் பணம் இல்லப்பா" என்று கூறிக்கொண்டே திரும்பி பார்க்காமல் சென்றேன். ஏனோ தெரியவில்லை, அன்று இரவு நிம்மதியாக தூங்கினேன்.


7 comments:

யாஸிர் அசனப்பா. said...

அக்கவுண்ட் ஓப்பன் பண்ணவே 500 ரூபாயா?
ஆச்சர்யமாய்க்கீதே????, அநியாயமாவுங்க்கீது!!!!!.

Expatguru said...

உண்மைதான் யாஸிர். அவர்களிடம் எக்கச்சக்கமான டெப்பாசிட்டுகள் உள்ளன. எனது அக்கவுண்ட்டை ஓப்பன் செய்ய‌ எனது நிறுவனத்திடம் இருந்து ஸ்பெஷலாக கடிதம் எல்லாம் எடுத்து சென்றேன்.

G.M Balasubramaniam said...

இதுவரை அறியாத நம்பமுடியாத சம்பவங்கள் . இன்றையப் பிரதமருக்கு இதெல்லாம் அத்துப்படியாய் இருக்கும் ...குஜராத் மனிதர் அல்லவா. ?

Expatguru said...

உண்மைதான் ஜி.எம்.பி. சார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது.

காரிகன் said...

நண்பரே,

வீர வசனம் பேசுபவர்களை இத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்வதா? எதோ அன்றைய சிந்தனைக்கு அந்தப் பேச்சு என்று விட்டுவிட்டு போகவேண்டும். அருமையான கட்டுரை. படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்த்துக்கள்.

Expatguru said...

நன்றி காரிகன்.

Unknown said...

in gujerat the percentage of girls/ladies who have lesser nourishment in their diet is in excess. my god that means the corrupt buggars do not even feed their girls/ladies.