Tuesday, 23 April 2013

விட்டதும் பெற்றதும்

இன்று எனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். தனது தங்கை ஏர் இந்தியா விமானத்தில் சமீபத்தில் பயணம் செய்தாரம். விமானம் தரை இறங்கிய போது பெட்டியை காணவில்லையாம். இவர் தவித்து போய் புகார் கொடுத்தாராம். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு  விமான நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததாம். இவர் சென்று பார்த்தால் கிழிந்த நிலையில் தனது பெட்டியை கண்டாராம்.

"அவர் ஏன் அந்த பெட்டியை பெற்றுக்கொண்டார், புகார் செய்யவில்லையா?" என்று நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர், "யார் இதற்கெல்லாம் அலைவது என்று விட்டு விட்டாள்", என்றார்.

2007ம் வருடம் என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து செளதியில் உள்ள தமாமுக்கு இலங்கை வழியாக சென்றேன். கொழும்பில் ஒரு 5 நாட்கள் தங்கி விட்டு, ஊர் சுற்றி பார்த்து விட்டு அப்படியே செளதிக்கு செல்வதாக திட்டம். சுனாமி முடிந்து சில மாதங்களே ஆகியிருந்த படியால் பல சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு செல்வதற்கே பயப்பட்டு கொண்டிருந்தனர். நான் பயணச்சீட்டை வாங்கும்போதே ஒரு முறைக்கு பல முறை விசாரித்து கொண்டதில் 40 கிலோ வரை சாமான்களை எடுத்து செல்லலாம் என்று கூறியிருந்தனர். அதன்படி, சென்னையிலிருந்து கிளம்பும்போது 37 கிலோ சாமான்களை எடுத்து சென்றேன். மறு பேச்சு பேசாமல் சென்னையில் ஏற்றி கொண்டனர்.

கொழும்பு சென்று 5 நாட்கள் சுற்றுலா முடிந்த பின் தமாமுக்கு செல்ல விமான நிலையத்துக்கு வந்தேன். கண்டிப்பாக 20 கிலோவுக்கு மேல் எடுத்து செல்ல கூடாது என்று கூறிவிட்டனர். "பயணச்சீட்டை வாங்கும் போதும் சென்னையிலும் இதை பற்றி யாருமே ஒன்றும் கூறவில்லை, இப்போது நான் எனது சாமான்களை யாரிடம் கொடுப்பேன்?" என்று கேட்டேன். நான் எவ்வளவோ மன்றாடியும் முடியவே முடியாது என்று அந்த விமான நிறுவன பெண் கூறிவிட்டாள். அது மட்டுமல்லாமல், நான் தமிழில் எனது மனைவியிடம் பேசுவதை பார்த்து விட்டு, கிண்டலாக மற்ற பெண்களிடம் என்னை பற்றி சிங்களத்தில் ஏதோ கூற அவர்கள் அனைவரும் ஏளனமாக சிரித்தனர். 

இலங்கையில் நான் 3 கிலோவுக்கு ஊர் சுற்றி பார்த்த போது வாங்கிய சாமான்கள் வேறு வாங்கி விட்டேன். அப்போது கூட மொத்தம் 40 கிலோ எடை தான் ஆயிற்று. சாமான்களை நான் எங்கு தான் விடுவது? வேறு வழியே இல்லாமல் 20 கிலோவுக்கு உண்டான அதிகப்படி பணத்தை  அபராதமாக அழுது விட்டு விமானத்தில் ஏறினேன். நல்ல வேளை என்னிடம் கடன் அட்டை இருந்ததால் தப்பித்தேன்.


தமாமில் இறங்கிய பின்பும் என்னால் இதை மறக்க முடியவில்லை. பணம் கட்டியது ஒரு புறம், கொழும்பில் அந்த பெண் என்னை எல்லோர் எதிரிலும் மிக கேவலமாக நடத்தியதில் அவமானத்தில் கூனி குறுகி விட்டேன். இவர்களை சும்மா விடக்கூடாது என்று மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது.

ஆனது ஆகட்டும் என்று காரசாரமாக ஒரு  மின் அஞ்சலை எழுதினேன். நான் எப்படி இலங்கை விமான நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்டேன் என்றும், நான் எவ்வளவு எடுத்து கூறியும் அவர்கள் என்னை அவமானப்படுத்தியதையும், சுனாமி முடிந்து சில மாதங்களே ஆன இலங்கையில் சுற்றி பார்க்க வந்த எனக்கு நல்ல பாடம் என்றும் கன்னா பின்னாவென்று ஆவேசமாக எழுதிவிட்டேன். எழுதி முடித்தவுடன் இதை யாருக்கு அனுப்புவது என்று எண்ணினேன். இலங்கை விமான நிலைய அதிகாரிகளுக்கு இதை அனுப்பினால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்களை விட மேலானவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்தேன். 


கூகிள் தான் இருக்கவே இருக்கிறதே. இலங்கை அரசின் வலை தளத்தை நோண்டி பார்த்தேன். சுற்றுலா துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என்று அனைவரது மின் அஞ்சல்களும் இருந்தன. அனைவருக்கும் சகட்டு மேனிக்கு அதே மின் அஞ்சலை அனுப்பினேன். "நான் பயணச்சீட்டை வாங்கும் போதே  பல முறை விசாரித்தேன். சென்னையில் விமானத்தை ஏறும்போது கூட யாரும் எதுவும் கூறவில்லை. கொழும்பில் தான் என்னை தவிக்க விட்டனர். அது மட்டும் இல்லாமல் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டனர். குடும்பத்துடன் இருந்ததால் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதே அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?" என்றெல்லாம் எழுதியிருந்தேன்.

பிரஷர் குக்கரிலிருந்து விடுபட்ட நீராவி போல எனது கோபத்தை எல்லாம் கோர்த்து அவர்களை ஒரு வாங்கு வாங்கி விட்டேன். சரி, மின் அஞ்சலை அனுப்பியாகி விட்டது. இனி என்ன செய்வது? என்னால் என்னதான் செய்ய முடியும்? இனிமேல் ஸ்ரீலங்கா விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். என்னால் அவ்வளவுதானே முடியும்?

வாழ்க்கையில் பல முறை நம்மை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை பார்த்து இப்படி பொங்கியது உண்டு. 'நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே' என்ற வெறுப்பை ஒவ்வொரு சாதாரண மனிதனும் கண்டிப்பாக எப்போதாவது நினைத்திருப்பான். இந்த கையாலாகாத்தனம் நடுத்தர வர்கத்தினர் பெற்ற சாபமா? "தனி மனிதனாக நம்மால் என்னத்தை சாதித்து விட முடியும்" என்கிற தவிப்பா?

இந்த மின் அஞ்சல் அனுப்பி அந்த நிகழ்ச்சியை நானும் மெல்ல மெல்ல மறக்க ஆரம்பித்திருந்தேன். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு திடீரென்று எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. ஸ்ரீலங்கா விமானத்தின் மிக மிக உயர்மட்ட அதிகாரியிடமிருந்து வந்திருந்தது. அவசரம் அவசரமாக அதை திறந்து படிக்க ஆரம்பித்தேன்.

"உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்களை இப்படி அலைக்கழித்திருக்க கூடாது. இது எங்களது தவறு தான். நீங்கள் 20 கிலோவுக்கு கட்டிய அதிகப்படி அபராதத்தை உங்களது செளதி முகவரிக்கு அனுப்புகிறோம்." என்று கூறியிருந்தார்.

வாடி, வா. உனது மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் எழுதியதால் அலறி அடித்து கொண்டு பதில் போட்டிருக்கிறாய் அல்லவா?

நான் உடனடியாக பதில் எழுதினேன். "நான் அபராதமாக கட்டிய பணத்தை எனது சென்னை முகவரிக்கே இந்திய ரூபாயாக அனுப்பிவிடுங்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த பிரச்னை இதோடு முடிவடைந்து விடவில்லை. எனது பணத்தை தான் நீங்கள் திரும்ப கொடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். என்னை அலைக்கழித்ததற்கு நீங்கள் எப்படி இழப்பீடு கொடுக்க போகிறீர்கள்?" என்று மிகவும் காட்டமாக கேட்டு எழுதினேன். ஆனால் இம்முறை அந்த அதிகாரிக்கு மட்டும் மின் அஞ்சலை எழுதினேன். மன்னிப்பு கேட்டு விட்டானே, போனால் போகிறான் என்று தான்.

ஒரு மணி நேரத்தில் அதற்கு பதில் மின் அஞ்சல் வந்தது. "நீங்கள் கேட்டு கொண்டபடி உங்களுடைய பணத்தை சென்னையில் இருக்கும் ஸ்ரீலங்கா விமான நிறுவனம் உங்களது வீட்டுக்கு வரைவோலையாக அனுப்பும்படி நாங்கள் ஆணையிட்டிருக்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட வருந்தத்தக்க அனுபவம் மீண்டும் இனி யாருக்கும் நடக்க கூடாது என்று விமான நிலையத்தினருக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளோம். இத்துடன் ஒரு கூப்பனை அனுப்பியுள்ளோம். எங்களுடைய சிறிய பரிசாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்த முறை ஸ்ரீலங்கா விமானத்தில் நீங்கள் பயணம் செய்யும் போது இந்த கூப்பனை விமான பணிப்பெண்ணிடம் கொடுக்கவும். எங்களது Duty Free கடையிலிருந்து  60 டாலருக்கு மதிப்பிலான உங்களுக்கு விருப்பமான எந்த பொருளையும் நீங்கள் தேர்வு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும். நீங்கள் பயணம் செய்யப்போகும் விமான விபரங்களை எங்களுக்கு கூறினால், அந்த பொருளை உங்களுக்கு நாங்கள் கொடுத்து விடுகிறோம்" என்றெல்லாம் அதில் எழுதியிருந்தது.

செளதியிலிருந்து திருச்சிக்கு எனது நண்பன் கொழும்பு வழியாக அதற்கு அடுத்த வாரம் செல்ல இருந்தான். நான் அவனது பயண விபரங்களை மின் அஞ்சலில் அனுப்பினேன். "எனது சார்பாக எனது நண்பனிடம் ஒரு perfume பாட்டிலை கொடுத்து விடவும்" என்று எழுதியிருந்தேன்.

விடுமுறைக்கு சென்று திரும்பிய நண்பன் அந்த perfume பாட்டிலை என்னிடம் கொடுத்தான். ஆனால் அதை விட சுவாரசியம் என்ன தெரியுமா? அந்த பயணத்தில் அவனுக்கு ராஜ மரியாதையாம். இவனது இருக்கைக்கு வந்து மிக மிக பணிவுடன் விமான பணிப்பெண் அந்த perfume பாட்டிலை கொடுத்தாளாம். அது மட்டும் இல்லாமல், பயணம் முழுவதும் பத்து முறை இவனிடம் வந்து விசாரித்து விட்டு போனாளாம்! எல்லாம் ஒரு புகார் செய்த வேலை! எனது நண்பனுக்கு பதிலாக நானே இலங்கை விமானத்தில் மீண்டும் சென்றிருந்தால் எனக்கும் "ராஜ மரியாதை" கிடைத்திருக்குமோ அல்லது ஜனாதிபதிக்கு மின் அஞ்சல் எழுதியதற்காக  விமானம் கொழும்பில் இறங்கியவுடன்  "ராஜாதிராஜ" மரியாதை என்று உள்ளே தள்ளி இருப்பார்களோ, தெரியாது.

நமது பக்கம் நியாயம் இருக்கும் போது நாம் துவண்டு விடக்கூடாது. ஒரு வேளை நான் ஸ்ரீலங்கா விமான அதிகாரிக்கு மட்டும் எழுதியிருந்தால் அதற்கு பதில் வந்திருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. இந்த அனுபவத்தால் நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். யாராவது தவறு செய்தால், அவர்களுக்கு மேல் உள்ளவர்களின் கவனத்துக்கு அதை கொண்டு செல்லுங்கள். உங்களது பக்கத்து நியாயத்தை கூறுங்கள். அவர்கள் நாக்கை பிடுங்கி கொண்டு சாகிற மாதிரி கேளுங்கள். மிக முக்கியமாக, அந்த புகாரை பல பெரிய மனிதர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி பார்த்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு நியாயம் கிடைக்கும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை யாராலும் பறிக்க முடியாது. இது நிச்சயம்!


 

Saturday, 6 April 2013

தலைப்பு செய்திகளும் மொழி பெயர்ப்புகளும்

"அலுவலகத்தில் படு பயங்கரமான வேலை" என்று சொல்லி கொள்ள வேண்டும். அப்போது தான் உலகம் நம்மை மதிக்கும். எல்லோரும் கூறும் இந்த பொய்யை நானும் கூறுவது உண்டு. (அவ்வப்போது வேலையும் செய்வது உண்டு  - சொன்னால் நம்புங்கள்). அலுவலகத்துக்கு வந்த பின் முதல் வேலையே  'மாலை மலரை' காலையிலேயே படிப்பது தான். வெறும் தலைப்பு செய்திகளை ஒரு பத்து நிமிடம் புரட்டினால் பிறகு உண்மையாகவே வேலையில் ஆழ்ந்து விடுவேன். பொதுவாக தலைப்பு செய்திகளை பார்த்தாலேயே அதன் சாராம்சத்தில் உள்ளே இருக்கும் குப்பை தெரிந்து விடுவதால் மேற்கொண்டு நான் செய்தியை படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

வழக்கம் போல இன்றும் தலைப்பு செய்திகளை பார்க்கும் போது ஒரு செய்தி கண்களில் பட்டது. "கம்பத்தில் கோலம் போட்ட பெண்ணை தாக்கி நகை கொள்ளை" என்பது தான் அந்த செய்தி. நகை கொள்ளை என்று எழுதி இருந்தால் அந்த செய்தி அவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காது. நான் தான் தலைப்பு செய்தியை மட்டும் பார்ப்பவன் ஆயிற்றே! அது என்ன கம்பத்தில் கோலம் போட்ட பெண்? ஒரு பெண் எப்படி கம்பத்தில் கோலம் போட முடியும்? ஒரு வேளை அந்த பெண்ணுக்கு மரை கழன்று விட்டதா? கம்பத்தில் சிறுவர்கள் கிறுக்கத்தானே செய்வார்கள்? கோலம் போட போயும் போயும் கம்பம் தானா கிடைத்தது? அப்படி கோலம் போடுபவளின் நகையை திருடன் எப்படி பறித்தான்?

இப்படி எல்லாம் என் மனதில் எண்ண அலைகள் தோன்றியவுடன் என்றைக்கும் இல்லாத திருநாளாக அந்த செய்தியின் விபரத்தை படிக்க ஆரம்பித்தேன். அதற்கு பிறகு தான் உண்மை விளங்கியது. கம்பம் என்ற ஊரில் ஒரு பெண் கோலம் போட்டு கொண்டிருந்தாள். அவளின் நகையை தான் திருடன் பறித்தானாம். நான் தான் வேறு விதமாக எண்ணி விட்டேன். ஹி, ஹி!

http://www.maalaimalar.com/2013/04/05114028/Cumbam-near-woman-attack-jewel.html


இது போன்ற பல தலைப்பு செய்திகளில் நான் ஏமாந்திருக்கிறேன். சில தலைப்பு செய்திகள் ஆங்கிலத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யும் போது பயங்கர நகைச்சுவையாக இருக்கும். அதே போல, சில செய்திகள் நாட்டுக்கு 'மிக உபயோகமானவையாக' இருக்கும். உதாரணத்துக்கு, நான் கல்லூரியில் படிக்கும் போது தினத்தந்தியில் முதல் பக்கத்தில் வந்த தலைப்பு செய்தியை மறக்கவே முடியாது. அது என்னவென்றால்,

"பிரசவ வலி!! பாகியராஜ் மனைவி பூர்ணிமாவுக்கு!!"

சத்தியமாக சொல்கிறேன், உலகின் வேறு எந்த செய்தித்தாளிலும் வராத தலைப்பு செய்தி இது. அதுவும் முதல் பக்கத்தில். செய்தியை சற்று மேலும் படித்தால் அதை விட சுவாரசியமாக இருந்தது.

"நடிகை பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா ஜெயராமன் கர்பமாக இருந்தார் என்பது தெரிந்ததே (!!)".

 இதற்கு அடியில் சிறியதாக குட்டி தலைப்புகள்.

"பிரசவ வலி". 

இன்று காலை அவருக்கு பிரசவ வலி எடுத்தது. 

"ஆஸ்பத்திரியில் அனுமதி"

பிரசவ வலி எடுத்தவுடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

"ஆணா பெண்ணா?"

பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதில் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்"

இது போன்ற செய்திகளை கேவலம் என்று கூறுவதா சுவாரசியம் என்று கூறுவதா அல்லது நமது தரம் இவ்வளவு தான் என்பதா, எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், முதல் பக்கத்தில் 'தினத்தந்தி' என்று கொட்டை கொட்டையாக  எழுத்து இருக்கும் அல்லவா, அதன் மேல், "தினத்தந்தி வெளி நாடுகளிலும் பிரபலம் பெற்றது" என்று எழுதியிருந்தார்கள். எதற்கு என்று தான் தெரியவில்லை.

தமிழ் பத்திரிகைகள் தான் இது போல உள்ளன என்று இல்லை. தொலைக்காட்சியிலும் இது போன்ற முத்துக்களை நான் பார்த்திருக்கிறேன் . இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்திருந்த சமயம். எங்கு பார்த்தாலும் அரசை புகழ்ந்து வாசகங்கள். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடைவெளி வெண்டும் என்று குடும்ப கட்டுப்பாட்டு பிரசாரம் செய்வதற்காக ஹிந்தியில் ஒரு வாசகத்தை தொலைக்காட்சியில் முதலில் காண்பித்தார்கள். அந்த வாசகம் என்னவென்றால்,


अगला बच्चा कब्?
पॆहला स्कूल् जायॆ तब्

"அகலா பச்சா கப், பெஹலா ஸ்கூல் ஜாயே தப்|"

இது தான் அந்த வாசகம்.

தமிழ் நாட்டில் தான் மூன்று தலைமுறைகளாக ஹிந்தியின் வாசனையே வராமல் நமது அரசியல்வாதிகள் தடுத்து விட்டனரே. அதனால்,
'இந்தி அரக்கியை' தெரியாத மகா ஜனங்களுக்கு இதன் மொழி பெயர்ப்பு என்னவென்றால்,

"அடுத்த குழந்தை எப்போது? முதல் குழ்ந்தை பள்ளிக்கு செல்லட்டும் அப்போது"

இப்படி இருந்திருக்க வேன்டும் மொழி பெயர்ப்பு. தமிழ் நாட்டில் தான் தமிழில் எழுதினாலோ பேசினாலோ தன்மான குறைவாயிற்றே, ஆங்கில புலமையை காட்டி விடவேண்டாமா? தமிழ் புத்தாண்டு வாழ்த்தை கூட ஆங்கிலத்தில் கூறி வாழ்த்திக்கொள்ளும் இனமல்லவா  நாம்!

திரையில் வந்த மொழி பெயர்ப்பு என்ன தெரியுமா?

"Next child when?
First go to school, then"

போகிற போக்கை பார்த்தால் இப்படி கூட தலைப்பு செய்திகள் வரலாம்

"விஸ்வனாதன் ஆனந்த் பம்பரத்தின் மேல் வலது பக்கத்தில்"

புரியவில்லையா?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அது வேறு ஒன்றும் இல்லை.

'Viswanathan Anand right on top" என்ற ஆங்கில தலைப்பின் தமிழ் மொழி பெயர்ப்பு தான்.

என்னை நீங்கள் அடிக்க வருவதற்குள் நான் கிளம்புகிறேன்!




Friday, 10 August 2012

பாத்திரமறிந்து...

எண்பதுகளில் பம்பாய் நரிமன் பாயிண்ட் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் நான் வேலைக்கு சேர்ந்திருந்த நேரம். அப்போதெல்லாம் வீ.டி. இரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நரிமன் பாயிண்ட்டிலிருந்து நிறைய 'ஷேர் டாக்ஸிகள்' கிடைக்கும். ஒரு பயணிக்கு மூன்று ரூபாய் வாடகை. முக்கால்வாசி டாக்ஸிகளை சர்தாஜிகள் தான் ஓட்டுவார்கள்.


பொதுவாக நான் மந்த்ராலயா வரை நடந்து வந்து அங்கிருந்து பஸ் பிடித்து நான் தங்கியிருந்த‌ மாடுங்காவுக்கு செல்வேன். சில சமயம் மிகவும் சோர்ந்து போயிருந்தால், பேசாமல் ஷேர் டாக்ஸி பிடித்து வீ.டி. வரை சென்று, அங்கிருந்து இரயில் பிடித்து செல்வேன். அது போல ஒரு முறை டாக்ஸியில் சென்று கொண்டிருந்த போது மறக்க முடியாத ஒரு அனுபவம் ஏற்பட்டது.


டாக்ஸியை ஒரு சர்தார்ஜி ஓட்டி கொண்டிருந்தார். நான் அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். சிக்னலுக்காக வண்டி நின்று கொண்டிருந்த போது தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கிழவி ஒவ்வொரு வண்டி அருகிலும் சென்று பிச்சை எடுத்து கொண்டிருந்தாள். ஆனால், அவளை கண்ட உடனேயே பலர் முகத்தை சுளித்து கொண்டனர். யாருமே அவளுக்கு பிச்சை போடவில்லை. எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது. நான் அமர்ந்திருந்த டாக்ஸி அருகே கிழவி வந்தாள்.


அதற்குள் சிக்னல் விளக்கு மஞ்சளுக்கு வந்து விட்டது. எனது பர்ஸில் அவசரம் அவசரமாக விரலை துழாவி கையில் கிடைத்த நாணயத்தை அவளிடம் இருந்த பாத்திரத்தில் போட்டேன். அது எந்த நாணயம் என்று கூட நான் பார்க்கவில்லை. வண்டி கிளம்புவதற்குள் அவளுக்கு ஏதாவது போட வேண்டும் என்ற நோக்கத்தில் கிடைத்த நாணயத்தை துழாவி எடுத்து போட்டேன்.

துரதிர்ஷ்டவசமாக எனது கையில் கிடைத்த நாணயம் வெறும் 25 பைசா தான். சிக்னல் அதற்குள் பச்சையாக மாறி விட்டது. வண்டியை ஓட்டுனர் கிளப்ப ஆயத்தமானார்.

ஒரு கணம் தான். அந்த ஒரே கணத்தில் யாருமே எதிர்பாராத விதமாக கிழவி அந்த 25 பைசா நாணயத்தை எடுத்து தரையில் ஓங்கி விட்டெறிந்து 'தூ' என்று காறி துப்பினாள். வண்டி கிளம்பி விட்டது.

எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மிகவும் அவமானமாக போய் விட்டது. வண்டியை ஓட்டி கொண்டு வந்த சர்தார்ஜி, " நல்லதுக்கே காலம் இல்லை. இதை  போல பத்து பேரிடம் 25 பைசா வசூல் செய்திருந்தால் ஒரு டீ, பன் வாங்க காசு சேர்ந்திருக்குமே" என்றார். (அப்போதெல்லாம் டீ ஒரு ரூபாய் தான்).

அப்படி நான் என்ன தவறு செய்து விட்டேன்? யாருமே காசு போடாமல் அவளுடைய குஷ்ட ரோகத்தை கண்டு முகம் சுளித்த போது நான் ஏதோ கையில் கிடைத்ததை போட்டது தவறா? அல்லது, மற்றவர்களை போல நானும் முகத்தை வேறு பக்கமாக திருப்பி கொண்டு இருந்திருக்க‌ வேண்டுமா? ஏழை என்று நினைத்து தானே நான் பிச்சை போட்டேன்? ரொம்ப நேரம் மனது மிகவும் சங்கடப்பட்டு கொண்டிருந்தது.

ஏனோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை செய்தி தாள்களில் 'உதவி தேவை' என்று விளம்பரங்களை பார்க்கும்போதும் இந்த சம்பவமே ஞாபகம் வரும். 'உண்மையிலேயே இவர்களுக்கு உதவி தேவையா, இவர்கள் ஏழைகள் என்றால் விளம்பரம் செய்யும் அளவுக்கு எப்படி பணம் வந்தது', என்றெல்லாம் மனதில் எண்ண அலைகள் தோன்றும். அப்படி நினைக்க கூடாது தான். பாவம், எத்தனையோ பேர் உதவிக்காக உண்மையிலேயே காத்திருக்கிறார்கள்.னால், எனது அன்றைய அனுபவம் ஏனோ ஆழ்மனதில்  பதிந்து விட்டது.


ஒரு வேளை அன்றைய தினம் நான் 25 பைசா போடுவதற்கு பதிலாக ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ போட்டிருந்தால் அந்த கிழவி பேசாமல் வாங்கி கொண்டு போயிருப்பாளோ? நான் எதுவுமே போடாமல் இருந்திருந்தால் கூட அந்த கிழவிக்கு ஒன்றும் தெரிந்திருக்காது, 25 பைசா என்றவுடன் அப்படி தூற எரிந்து விட்டாளே. அப்படி என்றால் பிச்சையிலேயே பெரிய பிச்சை, சிறிய பிச்சை என்று இருக்கிறதோ?

யோசித்து பார்த்தால் நாம் அனைவ‌ருமே பிச்சைக்கார‌ர்க‌ள் தான். எல்லோருமே பெரிய‌ பிச்சையை எதிர்ப்பார்த்து தான் அலைகிறோம். வ‌ங்கிக்கு சென்று கால் க‌டுக்க‌ வ‌ரிசையில் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னாய் நின்றால் சீந்த‌ ஆளில்லாம‌ல் இருப்போம். அதே ஒரு பெரிய‌ தொகையை 'டெப்பாசிட்' செய்தால், வ‌ங்கி மேலாள‌ர் வாச‌ல் வ‌ரை வ‌ந்து விடை கொடுப்பார். ந‌கை க‌டைக்கோ துணி க‌டைக்கோ  சென்று பெரிய‌ அள‌வில் வாங்கினால், நம‌க்கு குளிர் பான‌ உப‌ச‌ரிப்பு கிடைக்கிற‌து.  ஒரு கைக்குட்டை மட்டும் வாங்கி பாருங்களேன்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை பிச்சை எடுத்து கொண்டே இருக்கிறோம். குழந்தை பிறந்த உடன் ஆஸ்பத்திரியின் ஆயாவுக்கு ஏதாவது கொடுத்தால் தான் சரியாக கவனிப்பாள். அதுவும் ஆண் குழந்தை என்றால் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டும் என்ன குறைச்சலா? சாதாரணமாக இயற்கை பிரசவம் அடையும் தாய்களுக்கு கூட 'நீங்கள் அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்யா விட்டால் தாயின் உயிருக்கே ஆபத்து' என்று கடைசி நிமிடத்தில் பயமுறுத்தி பணம் பண்ணும் பிச்சைக்காரர்கள் தானே.

குழந்தை பிறந்து பள்ளியில் சேர்க்க நன்கொடை எதிர்பார்க்கும் பள்ளி நிர்வாகத்தினர், அந்த குழந்தைக்கு தேவையான சீருடைகள், ஷூ, சாக்ஸ் முதல் எல்லாவற்றையும் குறிப்பிட்ட கடையிலிருந்து மட்டும் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தும் ஆசிரியர்கள், இது தான் சாக்கு என்று பல மடங்கு விலையை கூட்டும் கடைக்காரர்கள், இவர்கள் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான்.

சரி விடுங்கள், வெளியே சென்றால் ஆட்டோ காரர் பெயருக்கு மீட்டரை வைத்து கொண்டு அதை போடாமலேயே அநியாயமாக கேட்கும் வாடகை, வீட்டுக்கு காஸ் சிலிண்டரை வைக்கும் ஆள், ஹோட்டலுக்கு சென்றால் சாப்பிட்ட தொகைக்கு மேல் ஏதாவது எதிர்ப்பார்க்கும் சர்வர் இவர்கள் எல்லாரும் 'சிறிய' பிச்சைக்காரர்கள். இவர்களாவது பரவாயில்லை, ஏதோ வயிற்று பிழைப்புக்கு கேட்கிறார்கள் என்று கூறலாம்.


ஏதாவது ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு செல்லுங்கள். 9 மணிக்கு ஆரம்பிக்கும் அலுவலகத்துக்கு நிதானமாக 10 மணிக்கு வந்து பெயருக்கு இரண்டு கோப்புகளை பார்த்து விட்டு மின் விசிறிக்கு அடியில் அரட்டை அடித்து கொண்டு வெட்டிக்கு 'வேலை' பார்க்கும் அதிகாரிகளுக்கு 'ஏதாவது' அன்பளிப்பு கொடுத்தால் தானே நமது காரியம் ஆகிறது? இவர்களை கெளரவ பிச்சைக்காரர்கள் என்று கூறலாமா? வேண்டாம், லஞ்சத்தில் என்ன கெளரவம் வேண்டி கிடக்கிறது?

தேர்தல் சமயத்தில் மட்டும் இரு கை கூப்பி கூழை கும்பாடு போட்டு வோட்டு கேட்கும் அரசியல் குப்பைகளும் நமது சமுதாயத்திலிருந்து வந்த பிச்சைக்காரர்கள் தானே, அவர்கள் என்ன வெளி நாட்டிலிருந்து குதித்தவர்களா? வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அரசாங்கமும் பிச்சையின் ஒரு வேறுபாடு தான். இதில் வேடிக்கை என்னவென்றால், வாங்கும் சம்பளத்தை தவிர வேறு எந்த விதமான வருமானமும் இல்லாமல் இருப்பவர்கள் தான் பாவப்பட்ட மக்கள். அவர்களை கசக்கி பிழிந்தெடுத்து ஒரு வழி செய்து விடுவார்கள்.

அதே சமயம், நீங்கள் கோடீஸ்வரராகவோ, ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு சொந்தமான 'விவசாயி'யாகவோ, கோடிக்கணக்கில் வங்கியில் கடன் வாங்கி திருப்பி தராமல், அரசாங்கத்திடமிருந்து எல்லா சலுகைகளையும் பெற்று கொண்டு வரியே கட்டாமல் ஏய்க்கலாம். இது தான் இந்தியா.

குழந்தைகள் பெரியவர்களாகி திருமணம் செய்து கொடுப்பது பிச்சையின் உச்சகட்டம். பிள்ளை வீட்டாரின் கோபத்துக்கு ஆளாக கூடாது என்று பதறும் பெண்ணை பெற்றவன் படும் பாடு இருக்கிறதே, சொல்லவே வேண்டாம். இத்தனைக்கும் பிச்சை போடுபவன் பெண் வீட்டுக்காரன். அதனால் தான் கன்னிகா'தானம்' என்று கூறுகிறார்களோ?

மரணத்துக்கு பிறகு மருத்துவ சான்றிதழ் இல்லாமல் சமரசம் உலாவும் சுடுகாட்டில் கூட சடலத்தை எரிக்க மாட்டார்கள். அதற்கு ஏதாவது கொடுத்தாக வேண்டும். சரி, அது முடிந்த கதை என்றால், அதற்கு பிறகு இறப்பு சான்றிதழ் அலைச்சல் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றாலும் பிச்சை போட்டால் தான் முடியும்.


இதை எல்லாம் கூட விட்டு தள்ளுங்கள். கோவிலுக்கு சென்றால் கடவுளிடம், 'எனக்கு இது வேண்டும், அது வேண்டும்' என்று தானே கேட்கிறோம்? எப்போதாவத,  ஒரே ஒரு முறையாவது "கடவுளே, குளிரிலும் வெயிலிலும் எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களை காப்பாற்று" என்றோ, "தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தீ அணைக்கும் படையினரை காப்பாற்று" என்றோ, 'யாராவது நமக்கு ஏதாவது கொடுக்க மாட்டார்களா' என்று அனாதை விடுதிகளில் அன்புக்கு ஏங்கும் குழந்தைகளை காப்பாற்று " என்றோ கடவுளிடம் வேண்டுகிறோமா? ஆகையால், கடவுள் முன் நாமும் பிச்சை எடுக்கும் பரதேசிகள் தான். இதில் மற்றவர்களை குறை கூற நமக்கு என்ன அருகதை இருக்கிறது?

தன்னலமில்லாத மனிதர்கள் என்பதே கிடையாது என்பது தான் நிதர்சனம். ஒரு யுகத்துக்கு ஒரு மகா புருஷர் அப்படி அவதரித்து அந்த கால கட்டத்தில் நாம் வாழ்ந்து அவரை பின்பற்றினாலேயே அதுவே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். 











Friday, 6 July 2012

எனது மெட்ராஸ்



புதிய நண்பர்களை பார்க்கும் பொழுது பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு பொதுவாக கேட்கப்படும் கேள்வி, "உங்களுக்கு எந்த ஊர்?" என்பது தான். என்னுடைய நண்பர்கள் பெரும்பாலும் மெட்ராஸை தவிர மற்ற ஊர்களின் பெயர்களை தான் முதலில் கூறுவர். நிறைய பேர், "எங்களது சொந்த ஊர் ......, ஆனால் இப்போது சென்னையில் குடி புகுந்து விட்டோம்" என்று கூறுவர். யாருமே, 'எனக்கு சொந்த ஊர் சென்னை' என்று கூறியது இல்லை. அது ஏன் என்று தான் எனக்கும் புரியவில்லை. எனது ஊர் மெட்ராஸ் என்று நான் கூறினால், "மெட்ராஸே தானா?" என்று கேட்பார்கள். அது என்ன மெட்ராஸ் வேறு கிரகத்தில் இருக்கிறதா என்ன? இல்லை, மெட்ராஸ் யாருக்கும் சொந்த ஊராக‌ இருக்க கூடாதா?

நான் பிறந்து வளர்ந்த ஊர் மெட்ராஸ் தான். என்னவோ தெரியவில்லை, மெட்ராஸின் பெயரை சென்னை என்று மாற்றிய பிறகு கூட  'சென்னை' என்ற பெயரை என் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கும் கிராமத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது. கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. அதில் எனக்கு வருத்தம் தான்.

எனது நண்பர்கள் பலர், "எங்களது ஊரில் ஆற்றில் குதித்து நீந்துவோம், மாங்காயை கல்லால் அடித்து தின்போம்" என்றெல்லாம் கூறும்போது பட்டிணத்தான் புண்ணாக்கு கடையை பார்ப்பது போல (நான் தான் பட்டிக்காட்டான் இல்லையே, மிட்டாய் கடையை பார்ப்பதற்கு!) அவர்கள் பேசுவதை ஆச்சரியத்துடன் பார்ப்பேன். இது வரை எனக்கு நீச்சல் தெரியாது. என்ன செய்வது, சென்னையில் இருக்கும் ஒரே நதியும்  அதற்கு லாயக்கில்லாமல் போய் விட்டது.

கிராமத்து நண்பர்கள் தத்தம் ஊர்களின் திருவிழாக்களை பற்றி கூறும்போது மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஊர் கட்டுப்பாடு, வீட்டு வாசலில் சாலைக்கு பாதி தூரம் வரை அதிகாலையில் பெண்கள் கோலம் போடுவது, பச்சை பசேலென்ற வயல், என்றெல்லாம் கூறுவார்கள். எனக்கு தான் அதற்கான வாய்ப்பே கிடையாதே! எனக்கு தெரிந்ததெல்லாம் கபாலி கோவில் (கபாலீஸ்வரர் தான், வைத்யனாதன் என்பதை வைத்தி என்று சுருக்குவது இல்லையா, அது போல), அறுபத்தி மூவர், தேர், என்பது தான்.

கமர்கட், மாங்காய் தலையன், கையில் குடத்தை வைத்து கொண்டு 'கோவிந்தோ' என்று கத்திக்கொண்டே சாலையில் உருளும் பிச்சைக்காரன், இவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். மேற்கு மாட வீதியில் இறைவனின் தேர் வரும்போது 'ஓ' என்று கத்திக்கொண்டே  தேர் வடத்தை இழுப்பது ஒரு ஜாலி தான். சற்றே விவரம் தெரிந்த வயது வந்த பிறகுதான் பாதி பேர் வடத்தை பிடித்து கொண்டு வெறும் சத்தத்தை மட்டும் போடுகிறார்கள் என்று புரிந்தது! 

உடம்பு முழுவதும் வேர்வை மழையில் நனைய தேர் வடத்தை இழுத்துக்கொண்டு வரும்போது பால்கனியிலிருந்து பெண்கள் பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை கொட்டுவார்கள். சித்திரை மாத சுட்டெறிக்கும் வெயிலில் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். நான் தண்ணீரை சொன்னேன்!

நான் படித்தது லாயிட்ஸ் சாலையில் உள்ள பிரபல பள்ளியில். பின்னாளில் தான் அது மிக பிரபலமாயிற்று. விளையாடுவதற்கு கிராமங்களை போல எங்களுக்கு என்ன ஏரியா, குளமா, ஒன்றும் கிடையாது. அதனால், கோபாலபுரத்தில் உள்ள மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவோம். சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணனும் நானும் பல நாட்கள் கோபாலபுரம் தெருக்களில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். பாருங்கள், கூட விளையாடிய நண்பன் பிரபல கிரிக்கெட் வீரனாகி விட்டான். என்னால் தான் அப்படி ஆக முடியவில்லை. நல்ல வேளை கிரிக்கெட் உலகம் பிழைத்தது! 

கோபாலபுரத்தில் அருமையான கிருஷ்ணர் கோவில் உள்ளது. மார்கழி மாதத்தில் தினமும் நான்கு மணிக்கே எழுந்து குளித்து விட்டு அதிகாலை குளிரில் சாமி கும்பிட சென்ற அனுபவத்தை மறக்க முடியாது. குறிப்பாக அந்த கோவிலில் சுடச்சுட சர்க்கரை பொங்கல் தருவார்கள். பிரமாதமாக இருக்கும். சாமியை பார்க்க போகிறோமோ இல்லையோ, பிராசாதத்துக்காக கண்டிப்பாக ஆஜராகி விடுவோம்.

 1975ம் ஆண்டு. இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தை கொண்டு வந்த நேரம். அந்த கிருஷ்ணர் கோவில் வாசலில் பரட்டை தலையுடன் எப்போது பார்த்தாலும் ஒரு பைத்தியக்காரன் படுத்து கொண்டே இருப்பான். தனக்கு தானே பேசிக்கொள்வான். திடீரென்று சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை சரளமாக கூறுவான். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.பள்ளியில் இருந்து நாங்கள் வீடு திரும்பும் போது அவனை சுற்றி நின்று கொண்டு கிண்டல் செய்வது எங்களுக்கு பொழுது போக்காக இருந்தது. 

அப்போது ஸ்டாலினை இந்திரா காந்தி அரசு கைது செய்திருந்த நேரம். சென்னை நகரமே பதற்றத்தில் இருந்தது. தினமும் பள்ளியில் இருந்து வரும்போது கோவில் வாசலில் படுத்து கொண்டு இருந்த பைத்தியத்தை திடீரென்று சில நாட்களாக காணவில்லை. ஒரு முறை இதை பற்றி காவல் துறையில் இருந்த எனது பெரியப்பாவிடம் எதேச்சையாக கூறியபோது அவர் சிரித்து கொண்டே, "அவன் பைத்தியம் இல்லை. கோவிலின் எதிரே இருக்கும் முக்கிய அரசியல்வாதியின் வீட்டுக்கு வருபவர்களை வேவு பார்க்க மத்திய அரசு அனுப்பிய ஒற்றன்" என்று கூறினார்! இதில் வேடிக்கை என்னவென்றால், இவன் மத்திய அரசின் உளவுப்படையை சேர்ந்தவன் என்பது இந்த அரசியல்வாதிக்கும் தெரியும் என்பது தான். அவரது வீட்டிலிருந்து பல நாட்கள் அவனுக்கு சாப்பாடு போவதை கண்டிருக்கிறேன். கெளண்டமணி கூறுவது போல, அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா!


1978ம் ஆண்டு என்று நினைக்கிறேன். படு பயங்கரமான வறட்சி. சென்னையில் சுத்தமாக தண்ணீர் என்பதே கிடையாது என்ற நிலைமை ஆகி விட்டது. விஜயவாடாவில் இருந்து இரயிலில் தண்ணீர் வரும். லாரிகளில் ஒவ்வொறு பேட்டையாக வந்து தண்ணீர் கொடுப்பார்கள். அப்போதெல்லாம், "சே! நாமும் கிராமத்தில் ஆற்றோரத்தில் பிறந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று நினைத்திருக்கிறேன்.

அடிக்கடி 'தொண்டர்கள் தீக்குளிப்பு' என்ற செய்தியை படித்திருப்பீர்கள். ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? தீக்குளிப்பவன் எப்போதும் கிராமத்தை சேர்ந்தவனாக தான் இருப்பான். சென்னையை சேர்ந்தவன் ஒருவனும் தீக்குளிப்பதில்லை. இன்னும் சொல்ல போனால் சோப் போட்டே குளிப்பதில்லை என்றே கூறலாம்.

 
நண்பர்கள் 'மெட்ராஸ்' என்றவுடனேயே எனது நண்பர்கள் திட்ட ஆரம்பிப்பார்கள். "ஊராடா இது, ஆட்டோக்காரன் எவ்வளவு அடாவடி செய்கிறான், கூவம் எவ்வளவு நாறுகிறது" என்றெல்லாம் கூறுவார்கள். ஆமாம், ஆட்டோக்காரர்கள் அடாவடி செய்வது உண்மை தான் ஆனால் நல்லவர்களும் இருக்கிறார்களே. நம்பினால் நம்புங்கள், எழுபதுகளில் கூவம் நதி கடலில் கலக்கும் இடத்தில் தெளிவான நீரில் நான் படகு சவாரி செய்திருக்கிறேன்.

மெட்ராஸில் தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். 1956ல் சென்னா ரெட்டி சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று 'மதராஸ் மனதே' என்ற போராட்டத்தை தொடங்கினார். நல்ல வேளை, அது பிசுபிசுத்து விட்டது. இங்கு தமிழர்களை விட தெலுங்கு, கன்னடம், மலையாளிகள், மார்வாடிகள் போன்றவர்கள் தான் அதிகம் என்றே தோன்றுகிறது. உழைக்க தயாராக இருந்தால், கண்டிப்பாக இங்கு வேலை உண்டு. நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போகலாம், ஆனால்  வயிற்று பிழைப்புக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் ஊர் மெட்ராஸ்.

பல தெருக்களின் பெயர்களை மாற்றி விட்டார்கள். எட்வர்ட் எலியட்ஸ் ரோடு ராதாகிருஷ்ணன் சாலை ஆகி விட்டது. லாயிட்ஸ் ரோடு அவ்வை சண்முகம் சாலையாகி விட்டது (ஒளவை என்று எழுத கூடாதாம்!). தெருக்களில் ஜாதி பெயர்களை அழித்து விட்டார்கள். ஜாதிகளை ஒழித்து விட்ட பாரதம் வாழ்க. அதற்காக மைலாபூரில் உள்ள பிள்ளையார் தெருவை 'யார்' தெரு என்று மாற்றி இருக்க வேண்டாம்! ஒவ்வொரு வீட்டுக்கும் பழைய எண், புதிய எண் என்று இரண்டு எண்கள் உள்ளன. புதிய எண்ணே பழையதாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பது வேறு விஷயம்.


தமிழ் நாட்டின் தலைநகரத்தில் கிராமத்து தமிழ் பேசினால் நீங்கள் வெளி நாட்டிலிருந்து தப்பி வந்தவர். பஸ்ஸில் ஏறி 'அண்ணா சாலை'க்கு ஒரு டிக்கட் கொடுங்கள் என்று கேட்டு பாருங்களேன்.யாருக்கும் புரியாது. 'மவுண்ட் ரோடு' என்று நல்ல தமிழில் கேட்டு பாருங்கள், அப்போது தான் எல்லோருக்கும் புரியும்.இங்கு நுனி நாக்கு ஆங்கிலம் பேசினால் பப்பு வேகாது. சிறப்பான சென்னை தமிழை உலகில் வேறு எங்குமே பேசுவது கிடையாது. 'ஓ...., சாவு கிராக்கி, ஊட்ல சொல்லிகுனு வன்ட்டியா?'என்பதெல்லாம் இங்கு சர்வ சாதாரணமாக கேட்கலாம். 80 வயது கிழவரை 'யோவ், ஐயாசாமி, வாய்யா இங்க‌' என்று 20 வயது பையன் அழைத்தால், கிழவர் "ஐயா, சாமி" என்று கும்பிட்டு கொண்டே வரும் காட்சியை சென்னையில் காணலாம். கிராமத்து நண்பர்களுக்கு இது மரியாதை குறைவாக தோன்றும். ஆனால், எல்லோரும் எல்லோரையும் 'நீ' 'வா' 'போ' என்று அழைப்பதால் சென்னையில் யாரும் இதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. பழக பழக சென்னை தமிழ் உங்களது தினசரி பேச்சில் எதிரொலிக்க ஆரம்பிக்கும். அதற்கு பிறகு உங்களிடம் யாராவது ராங் காட்னா மெர்சல் பண்ணிட வேண்டியது தான். இன்னா, நான் சொல்றது கரீட் தானே?

ஏமாற்று பேர்வழிகள் இருக்கும் ஊர் தான், ஆனால் ஏமாறாமல் இருப்பது உங்களது சாமர்த்தியம், இதற்கு ஊர் என்ன செய்யும்?
 
வியர்வை வழியும் ஊர் தான். கூவ நாற்றம் எடுக்கும் ஊர் தான். இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் ஊர் மெட்ராஸ். என்னதான் குறை இருந்தாலும் எனது மெட்ராஸுக்கு இணை இல்லை என்றே கூறலாம்.

Wednesday, 30 May 2012

இலையுதிர் காலம்

1997ம் ஆண்டு என்று நினைக்கிறேன். புதிய பம்பாயின் நேருல் பகுதியில் வசித்து வந்தேன். அப்போதெல்லாம் புதிய பம்பாயில் சி.பி.எஸ்.ஈ. பள்ளி ஒன்று தான் இருந்தது. (இப்போது நிறைய பள்ளிகள் வந்து விட்டன.) அந்த பள்ளியில் பிள்ளைகளை சேற்க உண்மையிலேயே பயங்கர போட்டா போட்டி இருந்தது. எனது பெண்ணை அந்த பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்க்கலாம் என்று நானும் எனது மனைவியும் எண்ணினோம்.


பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் "அந்த பள்ளியில் வெறும் 150 விண்ணப்ப படிவங்கள் தான் கொடுப்பார்கள். அதனால் நீங்கள் சீக்கிரமே போய் வாங்கி கொள்ளுங்கள்" என்று கூறினார். "சீக்கிரம்" என்றால், 9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு ஒரு 8 மணிக்கே சென்று வரிசையில் நின்றால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.

கடையில் ஏதோ வாங்குவதற்காக அந்த வழியாக முந்தைய நாள் மாலை போக வேண்டி இருந்தது. அங்கு பார்த்தால் பள்ளியின் வாசலில் ஒரு பத்து பேர் இருந்தார்கள். என்ன விஷயம் என்று விசாரித்தால், "நாளை காலை விண்ணப்ப படிவம் கொடுக்கிறார்கள் இல்லையா, உங்களுக்கு விஷயமே தெரியாதா?" என்று கேட்டார்கள். அப்போது மாலை 5.30 மணி!


அடப்பாவிகளா, ஒரு எல்.கே.ஜி. அட்மிஷனுக்கு இவ்வளவு போட்டியா? உடனடியாக வீட்டுக்கு வந்து அவசரம் அவசரமாக காபியை குடித்து விட்டு எனது மனைவியிடம், "நான் போய் கியூவில் நிற்கிறேன். இரவு உணவை சமைத்த பின் நீ வந்து எனது இடத்தை பிடித்துக்கொள். நான் சாப்பிட்டு விட்டு வந்து உன்னை வீட்டுக்கு அனுப்புகிறேன்" என்று கூறி விட்டு கையில் ஒரு செய்தி தாளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன். நான் போய் சேர்வதற்குள் அந்த வரிசையில் ஒரு 25 பேர் எனக்கு முன் நின்று கொண்டிருந்தார்கள்.

இது போன்ற பைத்தியக்காரத்தனத்தை நான் பார்த்திருக்கவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள். என்ன செய்வது, எப்படியாவது குழந்தையை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டுமே!


நேரம் செல்ல செல்ல, வரிசையில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பெரிய டாக்டர்கள், வக்கீல்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். அந்த பள்ளியில் பணம் எதுவும் வாங்குவது கிடையாதாம். அதனாலேயே அதற்கு மவுசு அதிகமாகி விட்டது. ஒரு எட்டு மணி இருக்கும். பக்கத்தில் திடீர் 'பாவ் பாஜி' கடைகள் ஆரம்பித்து விட்டன. வேர்க்கடலை, பட்டாணி முதல் ஜரூராக வியாபாரம் பிய்த்துக்கொண்டு போனது. சிறிது நேரத்தில் எனது மனைவி அங்கு வந்தவுடன், நான் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, ஒரு கொசுவர்த்தி சுருளையும் கொண்டு வந்தேன். இன்று இரவு சிவராத்திரிதான்!


நேரம் ஆக ஆக தூக்கம் கண்களை சுழற்ற ஆரம்பித்தது. வரிசையில் உள்ளவர்கள் ஜோக் அடித்துக்கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு அரசியல் பேசிக்கொண்டு பொழுதை கழித்தனர். கையில் கொண்டு சென்ற செய்தித்தாளை பிளாட்பாரத்தில் விரித்துக்கொண்டு எனது கட்டையை நான் விரித்தேன். பொறியாளனையும் பிளாட்பாரத்தில் படுக்க வைத்த மாபெரும் சமத்துவபுரம் இந்த அனுபவம்!

ம‌றுநாள் காலையில் ப‌ள்ளி திற‌ந்த‌வுட‌ன் வெற்றிக‌ர‌மாக‌ விண்ண‌ப்ப‌ ப‌டிவ‌த்தை வாங்கினேன். என்னவோ எவரெஸ்ட் சிகரத்தை எட்டியது போன்ற உணர்வு!

ஒரு வாரம் கழிந்த பிறகு என‌து 4 வ‌ய‌து பெண்ணை 'இண்ட‌ர்வியூ' செய்ய போவதாக பள்ளியிலிருந்து கடிதம் வந்தது. இண்டர்வியூ நடக்கும் போது அப்பா, அம்மா யாரும் கூட இருக்க கூடாதாம். குழந்தையை பள்ளி நிர்வாகத்தினர் மட்டும் இண்டர்வியூ செய்வார்களாம்.

அவ்வளவுதான். வீடே அல்லோலகல்லோல பட்டுவிட்டது. அந்த ஒரு வாரம் நாங்க‌ள் ப‌ட்ட‌ பாடு இருக்கிற‌தே! 'இந்த‌ கேள்வி கேட்டால் இப்ப‌டி ப‌தில் சொல், அப்ப‌டி கேட்டால் அப்ப‌டி சொல், பாபா பிளாக் ஷீப் தெரியுமா, வீ விலி விங்க்கி தெரியுமா, எல்லா ரைமையும் ஒழுங்காக சொல்' என்று குழ‌ந்தையை பாடாய் படுத்தி ஒரு வ‌ழி ப‌ண்ணி விட்டோம்.

இண்ட‌ர்வியூ நாளும் வ‌ந்த‌து. நானும் எனது மனைவியும் பள்ளியின் வெளியே காத்திருந்தோம். "ஒழுங்காக பதில் சொல்லு. அங்கே இங்கே பாராக்கு பார்க்காதே" என்றெல்லாம் குழந்தைக்கு போதனை செய்து கடவுளை வேண்டிக்கொண்டு உள்ளே அனுப்பினோம். இறைவா, எப்படியாவது பள்ளியில் அட்மிஷன் கிடைக்க வேண்டுமே!

கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு குழந்தை வெளியே வந்தாள். நாங்க‌ள் சொல்லி கொடுத்த‌ ஒரு கேள்வியையும் அவ‌ர்க‌ள் கேட்க‌வில்லையாம். ஒரு த‌ட்டு நிறைய‌ இனிப்புக‌ளை அவள் முன் வைத்து எடுத்து கொள்ளும்ப‌டி கூறினார்க‌ளாம். என‌து பெண்ணும், இர‌ண்டு கைக‌ளால் அள்ளி கொண்டாளாம். ஒன்றிலிருந்து ப‌த்து வ‌ரை கூறும்ப‌டி சொன்னார்க‌ளாம்.

 "நீ சொன்னியா?" என்று நான் அத‌ட்ட‌ அவ‌ள், "நானா? வந்து...........வந்து..........ம்ம்ம்ம்ம்......ஏதோ சொன்னேன்" என்று அல‌ட்டி கொள்ளாம‌ல் இழுக்க‌ என‌து இர‌த்த‌ கொதிப்பு ஏறிவிட்ட‌து! நடந்தவற்றை கேட்ட பக்கத்து வீட்டு பெண் "யார‌வ‌து சாக்லேட் கொடுத்தால் அள்ளிக்கொண்டு எடுத்து கொள்ள‌ கூடாது. ஒரே ஒரு சாக்லெட்டை எடுத்து கொண்டு 'தாங்க் யூ' சொல்ல‌ வேண்டும் என்று பள்ளியில் எதிர்பார்கிறார்கள்" என்றாள்.   இதை முதலிலேயே சொல்லி தொலைத்திருக்க கூடாதா?  இது 4 வயது குழந்தைக்கு எப்படி தெரியும்?

க‌ட‌வுளே, குழ‌ந்தையை குழ‌ந்தையாக‌ இருக்க‌ விடாம‌ல் இது என்ன‌ ம‌ட‌த்த‌ன‌மாக‌வும் செய‌ற்கைத்த‌ன‌மாக‌வும்  இருக்கிறது? இப்போது என்ன செய்வது, அவளுக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைக்குமோ கிடைக்காதோ?

சோகமே உருவாக நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.எவ்வளவு கஷ்டப்பட்டு அவளுக்கு சொல்லி கொடுத்து, இரவெல்லாம் தூங்காமல் பிளாட்பாரத்தில் படுத்து விண்ணப்ப படிவத்தை வாங்கி........சே! போச்சு, போச்சு, எல்லாம் போச்சு. இனி அட்மிஷன் கிடைத்த மாதிரிதான்! எனது பெண்ணோ, நிலவரம் புரியாமல் வழக்கம் போல விளையாடி கொண்டிருந்தாள்.


ஒரு பத்து நாட்கள் கழித்து வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. எனது குழந்தைக்கு அட்மிஷன் கொடுப்பதாகவும், உடனடியாக பள்ளிக்கு வரும்படியும் எழுதியிருந்தது. எங்களுக்கு ஆச்சரியம். தாங்க முடியாத மகிழ்ச்சி. எப்படி இது சாத்தியமாயிற்று? ஒன்றுமே புரியவில்லை. சரி,  எப்படியோ அட்மிஷன் கிடைத்ததே!

தினமும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு அன்று நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் கூறுவாள். யார் யாருடன் சண்டை போட்டாள், யார் யாரை கடித்தாள், இத்யாதி! வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாட்டில், பென்சில், என்று எதையாவது பள்ளியில் விட்டு விட்டு வருவாள். இப்படியே ஒரு வருடம் கழிந்தது. அதற்குள் எனக்கு செளதியில் வேலை கிடைத்து விட்டது. ஒரு நல்ல பள்ளியிலிருந்து செல்கிறோமே என்ற சோகம் இருந்தது. என்ன செய்வது, வயிற்று பிழைப்புக்காக வெளி நாடு செல்ல வேண்டிய நிர்பந்தம்.

செளதிக்கு வந்த பிறகு இந்தியன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தோம். இந்தியாவை போல இல்லாமல் இங்கு வேறு விதமான அனுபவங்கள் ஏற்பட்டன.

எனது பெண் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது தினமும் அழுது கொண்டே வீட்டுக்கு வருவாள். என்ன விஷயம் என்று கேட்டால் ஒன்றும் பதில் கூறாமல் இருப்பாள். நாங்களும், பள்ளியில் ஏதாவது நடந்து இருக்கும், பெரிது படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டோம்.

ஒரு நாள் பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் எனது பெண் சற்றே அதிகமாகவே அழுது கொண்டு வந்தாள். கன்னத்தில் ஒரு பக்கம் பயங்கரமாக வீங்கி இருந்தது. ஏதோ ஆயுதம் பட்ட மாதிரி அழுத்தமாக காயம் வேறு பட்டிருந்தது. எனது மனைவி பயந்து போய் எனக்கு போன் செய்தார். நான் அவசரம் அவசரமாக வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தேன்.

குழந்தையை பார்க்கவே பாவமாக இருந்தது. அவளை ஆசுவாசப்படுத்தி விட்டு, சாவகாசமாக "என்ன நடந்தது" என்று கேட்டேன். ஹிந்தியில் எழுத்து பிழை இருந்ததால் டீச்சர் தன்னை அடித்து விட்டதாக கூறினாள். எனக்கு பேரதிர்ச்சி. வேகமாக குழந்தையை ஆசிரியை அறைந்ததால் மோதிரம் பட்டு கன்னத்தில் அடி விழுந்து ஒரு பக்கம் வீங்கி விட்டிருந்தது. அது மட்டுமல்ல, தினமும் இந்த மாதிரி குழந்தையை அடித்திருக்கிறார். அதனால் தான் இவளும் தினமும் அழுது கொண்டே வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

செளதியில் ஒரு சட்டம் உள்ளது. குழந்தையை யாராவது அடித்தால், அது பெற்றோர்களாக இருந்தாலும் சரி, அது நிரூபணம் ஆனால் உடனடியாக அடித்தவர் கைது செய்யப்படுவார்கள். பெரிய சூப்பர் மார்கெட்களில் குழந்தைகள் சாக்லெட் போன்றவைகளை எடுத்து சாப்பிட்டால் கடைக்காரர்கள் ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். சட்டப்படி அவர்களை தடுக்கவும் கூடாது.

குழந்தையின் நிலைமையை பார்த்து எனக்கு கடும் கோபம் வந்து விட்டது. நேரிடையாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை பார்த்தேன். உடனடியாக அந்த ஆசிரியையை நான் பார்த்தாக வேண்டும், இல்லை என்றால் போலீசுக்கு தகவல் கொடுப்பேன் என்று கூறினேன். அந்த ஆசிரியை பீகாரை சேர்ந்தவர். 'பேபி தபஸூம்' என்று பெயர். பெயர் தான் பேபியே தவிர 5 பேபிகளுக்கு தாயாம்!

என்னை பார்த்தவுடன் "இந்த மதராஸி குழந்தைகளே இப்படிதான், ஹிந்தி தெரியாமல்..."என்று ஆரம்பித்தார். உடனே தலைமை அசிரியர் அவரை கடுமையான வார்த்தைகளால் கடிந்து கொண்டார். "நீங்கள் குழந்தையை அடித்ததால் ஒரு கன்னமே வீங்கி விட்டது. இப்படி ஒரு ஆசிரியை இந்த பள்ளிக்கே வேண்டாம்" என்றெல்லாம் கூறினார். அப்போது தான் அந்த அசிரியைக்கு விபரீதம் புரிந்தது.

தான் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் அவருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. பல முறை என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். நான் கடும் கோபத்தில் இருந்தேன். ஒரு கட்டத்தில் எனது காலில் விழாத குறையாக அவர் கேட்டுக்கொண்டார். "சரி, இப்போது நான் போகிறேன். ஆனால் இந்த மாதிரி எதிர்காலத்தில் ஏதாவது நடந்தால் நான் பள்ளிக்கு வர மாட்டேன், நேராக காவல் துறையிடம் தான் செல்வேன்" என்று எச்சரித்து விட்டு வந்தேன். அதற்கு பிறகு அந்த பள்ளியில் எந்த அசிரியையும் எந்த குழந்தையையும் அடிப்பதில்லை என்று கேள்விப்பட்டேன்.


நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் சென்று விட்டன. ஒவ்வொரு வகுப்பையும் கடந்து அடுத்த வகுப்புக்கு இவள் செல்லும் போதும், "அட, இப்போது தானே பள்ளியில் சேர்த்தோம்" என்று நினைப்பேன். கடினமான பாடங்களுக்கு டியூஷன் வைத்தோம். சில பாடங்களை நானே சொல்லி கொடுப்பேன்.


இப்போது எனது பெண் 12ம் வகுப்பு முடித்து விட்டாள்.  யோசித்து பார்த்தால் பழைய நினைவுகள் எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கின்றன.

ஆயிற்று. இன்னும் சில வருடங்களில் அவள் பட்டப்படிப்பை முடித்து விடுவாள். அதற்கு பிறகு திருமணம் முடிந்து அவளுக்கும் குழந்தை பிறக்கும். ஒரு வேளை அவளது கணவனும் என்னை போன்று வேறு ஒரு பள்ளி வாசலில் பிளாட்பாரத்தில் விண்ணப்ப படிவத்துக்காக படுத்திருப்பானோ என்னவோ, யார் கண்டது. ஒரு இலை உதிர மற்றொரு இலை மரத்தில் வளர்வது இயற்கை தானே. 

இப்போது நினைத்து பார்க்கிறேன். பள்ளியிலும் கல்லூரியிலும் எனக்கு சொல்லி கொடுத்த பாடங்களுக்கும் நான் செய்கின்ற வேலைக்கும் சம்பந்தமே இல்லை. ஏதோ படித்தோம், எங்கேயோ வேலைக்கு  சேர்ந்து இப்போது என்னவோ செய்கிறோம். இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் பள்ளி நாட்களில் இருந்த அந்த ஆனந்தம், அந்த குதூகலம், அந்த இன்பம் திரும்ப கிடைக்குமா? இல்லை பணத்துக்காக ஆன்மாவை விற்று விட்டோமா? தெரியவில்லை.  





Friday, 4 May 2012

உங்களுக்கு ஏழரை நாட்டு சனியா?

சூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த கால கட்டம். 1993ம் வருடம் என்று நினைக்கிறேன். எப்படியாவது ஏதாவது வளைகுடா நாட்டுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்று மனதில் ஒரு வெறி இருந்தது. ஒவ்வொறு ஞாயிற்றுக்கிழமையும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் வளைகுடா வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வரும். அவற்றை ஆவலுடன் படித்து விட்டு விண்ணப்பம் செய்வதே முழு நேர தொழிலாக கொண்டிருந்தேன். அவ்வப்போது பம்பாய்க்கு 'இண்டர்வ்யூவுக்கு' செல்வது வழக்கம்.


அப்படி ஒரு முறை பம்பாய் சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறேன். இப்போது என்னை போன்ற விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறதாம். எனக்கு மட்டும் வித்யாசம் ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், எனக்கு நல்ல நாளிலேயே தில்லானா. அதனால், மோசமான நிலைமைக்கும்,  மிக மோசமான நிலைமைக்கும் உள்ள வித்யாசம்தான் என்று வைத்து கொள்ளுங்களேன். சரி, விஷயத்துக்கு வருகிறேன்.


சூர‌த்திலிருந்து மாலையில் ஒரு இர‌யிலை பிடித்து இர‌வு ப‌ம்பாயில் த‌ங்கி விட்டு காலையில் இண்ட‌ர்வ்யூவுக்கு செல்வ‌தாக‌ ஏற்பாடு. இப்ப‌டி இர‌வில் ப‌ம்பாயில் த‌ங்க‌ வேண்டுமென்றால் நான் வ‌ழ‌க்க‌மாக‌ ப‌ம்பாய் சென்ட்ர‌ல் இர‌யில் நிலைய‌த்தின் அருகில் உள்ள‌ ஒரு கெஸ்ட் ஹ‌வுசில் தான் த‌ங்குவ‌து வ‌ழ‌க்க‌ம்.

ஒரு சிறிய பெட்டியில் என்னுடைய சான்றிதழ்கள் மற்றும் ஒரு ஜட்டி, பனியன், சட்டை இத்யாதிகளை அள்ளி போட்டு கொண்டு சூரத் இரயில் நிலையத்துக்கு சென்றேன். நல்ல வேளையாக அஹமதாபாதிலிருந்து ஒரு இரயில் அப்போது தான் பிளாட்பாரத்துக்குள் வந்து கொண்டிருந்தது. அப்போது மாலை 5 மணி. இர‌யிலில் ஏறி உட்கார்ந்த‌ உட‌னேயே க‌ன‌ ம‌ழை பெய்ய‌ ஆர‌ம்பித்து விட்ட‌து! என‌க்கு தான் விருச்சிக‌ ராசி ஆயிற்றே. நாம் என்ன‌ நினைப்போமோ அத‌ற்கு நேர் மாறாக‌ ந‌ட‌ந்தால்தான் ந‌ம‌து ராசியின் புக‌ழை போற்ற‌ முடியும் அல்ல‌வா? ம‌ணிக்கு 60 கிலோமீட்ட‌ர் வேக‌த்தில் செல்லும் அந்த 'சூப்ப‌ர் பாஸ்ட்' வ‌ண்டி இப்போது ஒரு இடி இடித்த‌வுட‌ன் 40 கிலோமீட்ட‌ர் வேக‌த்தில் செல்ல‌ ஆர‌ம்பித்த‌து!

வ‌ழி முழுவ‌தும் ச‌ரியான‌ ம‌ழை. ஒரு வ‌ழியாக‌ ப‌ம்பாய்க்குள் இரவு 12 மணிக்கு இர‌யில் நுழைந்த‌து. ஆனால் வ‌ழியில் பாந்த்ரா இர‌யில் நிலைய‌த்திலேயே நின்று விட்ட‌து. த‌ண்ட‌வாள‌த்தில் த‌ண்ணீர் நிர‌ம்பி வ‌ழிந்த‌தால் இர‌யில் இத‌ற்கு மேல் செல்லாது என்று அனைவ‌ரையும் இற‌க்கி விட்டு விட்டார்க‌ள். நான் செல்ல‌ வேண்டிய‌தோ ப‌ம்பாய் சென்ட்ர‌ல்.


பொதுவாக‌ பாந்த்ரா இர‌யில் நிலைய‌ம் 'ஜே ஜே' என்று எப்பொழுதுமே கூட்ட‌மாக‌ இருக்கும். அன்று பெய்த மழையில் இரயில் நிலையமே வெறிச்சோடி இருந்தது. அந்த இரவு வேளையில் வெளியே ஆட்டோவோ, பஸ்ஸோ ஒன்றுமே இல்லை. மழை முழுவதுமாக நிற்கவில்லை. பெரிது பெரிதாக தூறிக்கொண்டிருந்தது. சரி, பக்கத்தில் ஏதாவது ஹோட்டலுக்கு போய் இரவு தங்கி விட்டு காலையில் செல்லலாம் என்று நினைத்தேன். தரையில் கிடந்த ஒரு பிளாஸ்டிக் கவரை தலையில் வைத்துக்கொண்டே வேக வேகமாக இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கொண்டிருந்தது. அருகில் இருக்கும் எல்லா ஹோட்டல்களிலும் ஏறி இறங்கினேன். ஒரு ஹோட்டலில் கூட இடமே இல்லை. இப்போது என்ன செய்வது? எத்தனை நேரம் தான் இரவில் வெளியே இருப்பது? மீண்டும் இரயில் நிலையத்துக்குள் வந்து அங்கே பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து கொண்டேன். சரி, இன்று இரவு பிளாட்பாரத்தில் தான் என்று நினைத்து கொண்டேன். கண்களில் அசதி, வயிற்றில் ஏதோ பிசைவது போல இருந்தது.

கையில் இருந்த பெட்டியை கெட்டியாக பிடித்து கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே தூங்கினேன். நடு நடுவே நாய் தொல்லை வேறு இருந்தது. எத்தனை நேரம் அப்படி இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. திடீரென்று சத்தம். பார்த்தால் விடிய ஆரம்பித்திருந்தது. காலை சுமார் 5 மணி இருக்கும். மழை விட்ட பாடில்லை.


அதற்குள் பிளாட்பார டீ கடையை திறந்து விட்டிருந்தனர். டீயை குடித்து விட்டு வெளியே வந்தேன். கன மழை என்றால் அப்படி ஒரு மழை. எனக்கு 8 மணிக்கு இண்டர்வ்யூ ஆயிற்றே. என்ன செய்வது. எப்படியாவது பம்பாய் சென்ட்ரல் சென்று விட்டால் அங்கிருந்து ஏதாவது டாக்ஸியை பிடித்து சென்று விடலாம். வந்தது வரட்டும் என்று அந்த பிளாஸ்டிக்கை தலையில் வைத்து கொண்டே வெளியே வந்தேன். அது எந்த மூலைக்கு? பெய்கின்ற மழையில் அப்படியே அடித்து கொண்டு போய் விட்டது. இப்போது நான் முழுவதுமாக நனைந்து விட்டேன்.

தட்டி தடுமாறி வெகு நேரம் நடந்த பின் எங்கிருந்தோ ஒரு பஸ் வந்தது. அதில் ஏறி வடாலா வரை சென்று அங்கிருந்து வேறு ஒரு பஸ் பிடித்து ஒரு வழியாக பம்பாய் சென்ட்ரலை அடைந்தேன். அப்பாடா. மணி ஏழரை தான். வெளியே ஒரு டாக்ஸி நின்று கொண்டிருந்தது. அதை பிடித்து ஏஜெண்ட் ஆபீஸை தேடி அடைந்த போது மணி சரியாக 8. எப்படியோ, வந்து சேர்ந்து விட்டோமே.

பொதுவாக ஏஜெண்ட் அலுவலகங்களில் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும். அன்று ஈ, காக்காயை கூட பார்க்க முடியவில்லை. கதவு பூட்டியிருந்தது. இரண்டு முறை சுற்றி வந்து முகவரி சரியாக இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து விட்டு கடைசியில் அங்கு இருந்த காவலாளியிடம் விசாரித்தேன். அவன், "இந்த மழையில் எவன் வருவான்? இன்று இண்டர்வ்யூ எதுவும் கிடையாது. மறுபடியும் எப்பொழுது இருக்கும் என்றும் தெரியாது" என்று கூறிவிட்டான். 


வெளியே இடித்த இடி இப்போது எனது தலையில் விழுந்த மாதிரி இருந்தது. 'இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்று எங்கோ படித்தது இப்போது நினைவுக்கு வந்தது. இப்போது என்ன செய்வது? ஊருக்கு கிளம்ப வேண்டியது தான். வெளியே வந்தால் அடை மழை மீண்டும் அரம்பித்து விட்டது. சாலையில் எங்கும் வெள்ள பெருக்கு. நல்ல வேளை, நான் வந்த டாக்ஸி ஆள் கிடைக்காமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதை பிடித்து மீண்டும் பம்பாய் சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தேன். அங்கு அதை விட பெரிய அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் தண்ணீர் புகுந்ததால் எல்லா இரயில்களையும் பாந்த்ராவோடு நிறுத்தி விட்டார்களாம். இப்போது பாந்த்ராவுக்கு எப்படி செல்வது? அங்கு சென்றால் தானே சூரத்துக்கு எனக்கு வண்டி கிடைக்கும்?


சோர்வுடன் வெளியே வந்தேன். எத்தனை நேரம் நின்று கொண்டிருந்தேன் என்று தெரியாது. தொலைவில் ஒரு 'எஸ்.டி.' பஸ் வந்து கொண்டிருந்தது. இது நம்மூர் மொபஸில் பஸ் மாதிரி. தகர டப்பாவில் சக்கரம் கட்டி ஓட விட்டால் இருக்குமே, அந்த மாதிரி தான். பம்பாயிலிருந்து புதிய பம்பாயில் பன்வேல் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. எதோ பஸ் என்று ஒன்றாவது கிடைத்ததே. இதை விட்டால் எனக்கு வேறு வழியே இல்லை. நட்ட நடு ரோடுக்கு வந்து இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கொண்டு அந்த பஸ்ஸின் வழியை மறித்தேன். என்னை மீறி பஸ் போனால் என் மேல் ஏறிக்கொண்டு தான் போக வேண்டும்.

என்னை பார்த்தவுடன் பஸ் நான் எதிர்ப்பார்த்தது போல நின்றது. சட்டென்று உள்ளே நான் ஏறிக்கொண்டேன். நல்ல வேளை பஸ் காலியாக இருந்தது. கையில் இருந்த பெட்டியை ஸீட்டின் மேல் சாமான்கள் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு உட்கார்ந்தேன். உடம்பெல்லாம் ஒரே வலி. அப்பாடா. ஒரு வழியாக உட்கார்ந்தாகி விட்டது. பாந்த்ரா வரை சென்று விட்டால் அங்கிருந்து அஹமதாபாத் செல்லும் ஏதாவது ஒரு இரயிலில் ஏறி ஊர் போய் சென்று விடலாம்.

வந்த வேலை முடியவில்லையே என்று மனதில் சோர்வு. காலையில் ஸ்டேஷனில் குடித்த டீயை தவிர வயிற்றில் வேறு ஒன்றுமே இல்லை. பசி மயக்கம். எல்லாம் சேர்ந்து கொண்டு கண்ணை சொருகி விட்டது. இந்த தூக்கம் என்பது இறைவன் கொடுத்த பெரிய சோஷியலிஸ சமத்துவபுரம். தூங்கிய பிறகு பொறியாளனா பிச்சைக்காரனா, எல்லாமே கட்டை தான்! பாந்த்ரா வந்தால் கூறுமாறு நடத்துனரிடம் கூறியிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம். பாந்த்ரா வந்ததும் இறங்கிக்கொண்டேன். அப்பாடா, ஒரு வழியாக ஸ்டேஷன் வந்தாகிவிட்டது. என்னை இறக்கி விட்டு விட்டு பஸ் கிளம்பி விட்டது.

ஒரு நிமிடம் தான். ஒரே நிமிடம் தான். சட்டென்று பார்த்தால் என் கையில் எதுவும் இல்லை. அட கடவுளே, நான் பஸ் ஸீட்டின் மேல் எனது பெட்டியை வைத்திருந்தேனே, அதை அங்கேயே மறந்து விட்டேனே! அதில் தானே என்னுடைய சான்றிதழ்கள் எல்லாமே இருக்கின்றன. ஐயோ, இப்போது நான் என்ன செய்வேன்!

அந்த பஸ் பன்வேல் வரை செல்கிறதல்லவா? உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்தேன். பன்வேலுக்கு செல்லும்படி கூறினேன். வழியெல்லாம் கடவுளை வேண்டிக்கொண்டே வந்தேன். இறைவா, இது என்ன சோதனை! ஒரு வேலை தேட போய் இப்போது என்னுடைய சான்றிதழ்கள் அத்தனையும் கோட்டை விட்டு விட்டேனே!


கிட்டத்தட்ட முக்கால் மணி நேர பயணம். ஒரு வழியாக பன்வேல் பஸ் ஸ்டாண்டை வந்தடைந்தேன். ஆட்டோ காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு நேராக டெப்போ மானேஜரிடம் சென்றேன். விஷயத்தை சுருக்கமாக சொன்னேன். அவர், 'அந்த பஸ் நம்பார் ஞாபகம் இருக்கிறதா?' என்றார். யார் பஸ் நம்பரை எல்லாம் பார்க்கிறார்கள்? அவரிடம், "ஐயா, என்னிடம் இருப்பதெல்லாம் இந்த பஸ் டிக்கட் தான். இதை வைத்து அந்த பஸ்ஸை தயவு செய்து கண்டு பிடியுங்கள். எனது சான்றிதழ்கள் எல்லாமே அதில் மாட்டி கொண்டுள்ளன" என்றேன். அவர், அந்த டிக்கட் நம்பரை வைத்து கொண்டு கணணியில் ஏதோ தேடினார். என்னை பார்த்து, "அடடா, ஒரு 10 நிமிடங்களுக்கு முன்னால் தான் அந்த பஸ் லோவர் பரேல் டெப்போவுக்கு சென்றது. நீங்கள் உடனடியாக லோவர் பரேலுக்கு செல்லுங்கள். நான் போன் செய்து அந்த டெப்போ மானேஜருக்கு தகவல் கூறிவிடுகிறேன்" என்றார். லோவர் பரேல் என்பது பம்பாய் நகருக்குள் இருக்கிறது.


மறுபடியும் ஒரு ஆட்டோவை பிடித்து லோவர் பரேலுக்கு செல்லுமாறு கூறினேன். ஆட்டோ காரர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். செங்கல்பட்டிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஆட்டோவில் சென்றால் எப்படியோ, அது மாதிரி இது. என்ன செய்வது, என்னுடைய நிலைமை அப்படி.
'வழி முழுவதும் மனதில் எண்ண அலைகள். ஒரு வேளை சான்றிதழ்கள் கிடைக்காவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும், டூப்ளிகேட் சான்றிதழ்கள் வாங்குவதற்கு எங்கெல்லாம் அலைய வேண்டுமோ', இப்படி எல்லாம் என் மனதில் குழப்பங்கள். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று கூறுவார்களே, அப்படி ஒரு சூழ்நிலை.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆட்டோவில் பயணம். உடம்பெல்லாம் ஒரே வலி. அதை விட மனதில் துக்கமும் வெறுப்பும் எக்கச்'சக்கம். லோவர் பரேல் டெப்போ வாசலில் ஆட்டோ காரரை 'வெயிட்டிங்கில் இருக்க சொன்னேன் (ஒரு வேளை அந்த பஸ் இங்கிருந்து வேறு எங்காவது சென்று விட்டிருந்தால்?). டெப்போவினுள் ஒரு 50 பஸ்களுக்கு மேல் நின்று கொண்டிருந்தன. எந்த பஸ் என்று நான் தேடுவது?

மறுபடியும் டெப்போ மானேஜரின் அலுவலகத்துக்கு சென்றேன். எனது ராசி தான் விருச்சிகம் ஆயிற்றே! அவர் தனது ஸீட்டில் இல்லை. எத்தனை நேரம் அங்கு காத்து கிடந்தேன் என்று தெரியாது. வெளியே ஆட்டோ காரர் வேறு 'வெயிட்டிங்கில்' இருக்கிறார். கடைசியில் மானேஜர் வந்தார்.

அவரது கால்களை பிடித்து கதறாத குறை தான். எப்படியாவது எனது சான்றிதழ்களை கண்டுபிடித்து தருமாறு கூறும்போதே எனக்கு துக்கம் தொண்டையை அடைத்து கொண்டது. ஒரு மனிதன் எவ்வளவு தான் தாங்குவான்?

அவர் வாயில் வெற்றிலை பாக்கை மென்று கொண்டே, "உங்கள் பெட்டியின் நிறம் என்ன, எப்படி இருக்கும், எங்கு விட்டீர்கள், அதில் என்னவெல்லாம் இருந்தது" என்று கேட்டு கொண்டே ஒரு படிவத்தில் எல்லாவற்றையும் எழுதி கொண்டிருந்தார். நான் எல்லா தகவல்களையும் கூறிக்கொண்டே, "ஐயா, நான் சூரத்துக்கு செல்ல வேண்டும். அந்த பெட்டியில் பணம் வேறு வைத்திருந்தேன்" என்றேன்.

பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்பார்களே, அதை அன்று தான் நேரிடையாக கண்டேன். பெட்டியில் பணம் வைத்திருக்கிறேன் என்று நான் கூறியது தான் தாமதம், திபுதிபு என்று ஒரு பத்து  பன்னிரெண்டு பேர், எல்லோரும் காக்கி சட்டை போட்டவர்கள் (அந்த டெப்போவில் வேலை செய்பவர்கள் என்று நினைக்கிறேன்), அது வரை எங்கு இருந்தார்களோ தெரியவில்லை, உடனே என்னை சூழ்ந்து கொண்டார்கள்.

கடைசியில், ஒரு காக்கி சட்டைக்காரன், வேறு ஒரு அறைக்கு சென்று உடனே திரும்பி வந்தான். "இது தான் உங்கள் பெட்டியா பாருங்கள்" என்றான். எனக்கு போன உயிர் திரும்பி வந்தது. எனது பெட்டி தான்.

அதற்குள் வெளியே 'வெயிட்டிங்கில்' இருந்த ஆட்டோ காரர் என்னை தேடிக்கொண்டு வந்து விட்டான். நான் அவரிடம், "ரொம்ப சாரி. இப்போது தான் பெட்டி கிடைத்தது" என்றேன். ஆட்டோக்காரர், "நான் எப்போதோ மீட்டரை நிறுத்தி விட்டேன். உள்ளே சென்ற ஆள் எனக்கு தெரியாமல் எங்கோ ஓடி விட்டான் என்று நினைத்தேன்" என்றார். என்ன செய்வது, அவரது கவலை அவருக்கு.

டெப்போ மானேஜர், "சரி, பணம் இருக்கிறது என்றீர்களே" என்றார். நான் என்ன ஹாஜி மஸ்தானா, கத்தை கத்தையாக பணம் வைத்திருக்க? பெட்டியை திறந்து காண்பித்தேன். உள்ளே எனது சான்றிதழ்கள், ஒரு ஜட்டி, பனியன் மற்றும் இருநூறு ரூபாய் பணம் இருந்தது. அனைவருக்கும் ஒரே ஏமாற்றம். நான் டெப்போ மானேஜரிடம், "ஐயா, தெய்வாதீனமாக எனது பெட்டி கிடைத்து விட்டது. உங்களுக்கு சன்மானமாக வழங்க என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால், இந்த 10 ரூபாயை வைத்து கொள்ளுங்கள்" என்றேன். அவரும் பதில் பேசாமல் அதை வாங்கி கொண்டார். (என்னை அடிக்காமல் விட்டாரே, அது வரை சந்தோஷம் தான்!)

ஆட்டோ காரரிடம், "என்னிடம் இருப்பது இந்த 190 ரூபாய் தான். உங்களுக்கு எவ்வளவு தர வேண்டும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் சூரத் செல்வதற்கு டிக்கட் வாங்க கூட என்னிடம் வேறு பணம் இல்லை. அதனால், நீங்கள் இந்த 100 ரூபாயை வைத்து கொள்ளுங்கள்" என்றேன்.

ஆட்டோக்காரர் மெளனமாகி விட்டார். நான் அவரிடம் , "ஐயா, உங்களை ஏமாற்ற வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. உண்மையிலேயே எனக்கு நீங்கள் பேருதவி செய்தீர்கள். கண்டிப்பாக பன்வேலிலிருந்து இங்கு வருவதற்கு பல நூறு ரூபாய் ஆகியிருக்கும் என்று எனக்கு தெரியும். வேண்டும் என்றால் உங்களது முகவரியை சொல்லுங்கள். நான் மணி ஆர்டர் செய்து விடுகிறேன். அது வரை எனது கை கடிகாரத்தி வைத்து கொள்ளுங்கள்" என்றேன்.

ஆட்டோக்காரர், "நான் படிக்காதவன். ஆனால் நீங்கள் படித்து வேலை தேட வந்திருக்கிறீர்கள். நீங்கள் உண்மை கூறுவது எனக்கு தெரிகிறது. கஷ்டம் என்பது எல்லோருக்கும் வருவது தான். இந்த பணத்தை நான் எப்படியாவது சம்பாதித்து கொள்கிறேன். நீங்கள் நல்லபடியாக ஊர் போய் சேருங்கள்" என்றார். நான் கண் கலங்கி விட்டேன்.

"எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்" என்பது இது தானோ? அங்கு இருந்த அனைவரிடமும் விடை பெற்றேன். மழை நின்று தூறல் பன்னீர் போல தெரிக்க ஆரம்பித்திருந்தது.

ஒரு வழியாக இரயில் பிடித்து சூரத் வந்து சேர்ந்து வீட்டுக்குள் நொந்து நூடுல்ஸாகி வந்து சேர்ந்த போது மணி இரவு 1.30.

மக்களே, இப்போதாவது சொல்லுங்கள். ஏழரை நாட்டு சனியை பார்த்து நான் ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு தான் தினமும் ஏழரை நாட்டு சனியின் அனுபவம் ஏற்படுகிறதே. உங்களுக்கு ஏழரை நாட்டு சனியின் கஷ்டம் வந்தால், இந்த பதிவை படித்து ஆறுதல் பட்டு கொள்ளுங்கள். 'இரு கோடுகள்' படத்தில் வருவது மாதிரி, 'இவனை விட நாம் தேவலை' என்று ஒரு அல்ப சந்தோஷம் பட்டு கொள்ளலாம், வேறு என்ன?





Sunday, 8 April 2012

அபாய சங்கிலி

ஏழேழு ஜென்ம உறவு என்று கூறுவார்களே,அது போல தான் எனக்கும்  இரயில் அனுபவங்களுக்கும் உள்ள தொடர்பு என்று நினைக்கிறேன். என்னுடைய முந்தைய அனுபவங்களை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது. ஆனால் அன்றைய சூழ்நிலையில் பதட்டம், திகில் என்று ஒரு பரபரப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு தான் இருந்தது.

என்னுடைய திருமணத்திற்கு முன் சூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது என்னுடைய பெற்றோர் என்னை பார்க்க ஒரு முறை வந்திருந்தனர். அப்போதெல்லாம் கைபேசி கிடையாது. வீட்டில் தொலை பேசியும் கிடையாது. யாராவது என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் பக்கத்தில் உள்ள கடைக்கு தொடர்பு கொண்டு பேச வேண்டும். என் பெயரை சொல்லி வரவழைத்தால் கடைக்காரன் என்னை கூப்பிடுவான். அதற்காகவே அந்த கடையில் நான் சாமான்கள் வாங்கி தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். என்ன செய்வது, வாழ்க்கையே ஒரு கொடுக்கல் வாங்கல் வியாபாரம் தானே?

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  சில நாட்கள் என்னுடன் இருந்து விட்டு மீண்டும் பம்பாய் வழியாக சென்னைக்கு எனது பெற்றோர் புறப்பட்டனர். சூரத்திலிருந்து பம்பாய்க்கு 'ஆகஸ்டு கிராந்தி எக்ஸ்பிரஸ்' என்ற வண்டியில் அவர்களது டிக்கெட்டை  நான் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த வண்டி சூரத்தில் இரண்டு நிமிடங்கள் தான் நிற்கும். சூரத்தை விட்டால் அடுத்து பம்பாய் போரிவிலியில் தான் நிற்கும். 

என்னுடைய பெற்றோர் நிறைய சாமான்களுடன் இருந்ததால் அவர்களை முதலில் வண்டியில் ஏற்றி விட்டு நான் சாமான்களை  ஒவ்வொன்றாக அவர்களது இடத்துக்கு அருகே வைத்தேன். என்னுடைய நேரம் பாருங்கள்,  அன்று இரயிலில் கூட்டம் ரொம்பி வழிந்தது. இரண்டே நிமிடங்கள் தான் இரயில் சூரத்தில் நிற்கும் என்பதால் நான் சாமான்களை வைத்து விட்டு வெளியே வருவதற்குள் திடீரென்று ஒரு கும்பல் உள்ளே முட்டி அடித்து கொண்டு உள்ளே நுழைந்தது. திபு திபுவென்று ஒரு பத்து பேர் வந்ததால் என்னால் அவர்களை மீறிக்கொண்டு வெளியே செல்ல முடியவில்லை. அதற்குள் இரயில் கிளம்பி விட்டது.


இப்போது என்ன செய்வது? அடுத்தது பம்பாயில் தானே இந்த இரயில் நிற்கும்? என்னிடம் வெறும் பிளாட்பாரம் டிக்கெட் மட்டும் தான் இருந்தது. இரயில் சிறிது சிறிதாக வேகம் எடுக்க துவங்கியது. ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரம் வண்டி சென்றிருக்கும்.  இன்னும் யோசிக்க நேரம் இல்லை. இப்படியே விட்டால் பம்பாய் வரை டிக்கெட் இல்லாமல் செல்ல வேண்டும். வேறு வழியே இல்லை என்று நான் அபாய சங்கிலியை இழுத்து விட்டேன். இரயில் சட்டென்று கிரீச்சிட்டு நின்றது.


 நான் இருந்த பெட்டியின் வாசலில் வாஷ் பேசின் மேலே  ஒரு சிறிய ஸ்பீக்கரிலிருந்து 'கீ கீ' என்று பயங்கரமாக சத்தம் வர ஆரம்பித்தது. இரயிலில் அங்கு அப்படி ஒரு சாதனம் இருந்ததை அன்று தான் முதலில் பார்த்தேன். அபாய சங்கிலியை இழுத்தால் என்னவாகும் என்று அன்று முதன் முதலில் தெரிந்து கொண்டேன். எந்த பெட்டியில் அபாயம் என்று சுலபமாக இதனால் தெரிந்து கொள்ளலாமாம். கூட்டத்தில் முண்டி அடித்து கொண்டு நான் சட்டென்று இரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தின் ஓரமாக சூரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


இரயிலில் இருந்தவர்கள் என்னை ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல ஏளனமாக பார்த்து சத்தம் போட ஆரம்பித்தனர். சிலர் என்னை கெட்ட வார்த்தைகளால்  ஏச ஆரம்பித்தனர். என்னுடைய அவசரம் அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது? அதற்குள் எங்கிருந்தோ பெட்டிக்கு கார்டும் ஒரு போலீஸ்காரனும் வந்தனர். நான் அவர்களை பார்க்காதவன் போல வேறு எங்கோ பார்த்து கொண்டே தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்றேன். அதற்குள் 'யார் அபாய சங்கிலியை இழுத்தது? என்ன ஆயிற்று?' என்று கார்டு மற்ற பயணிகளிடம் விசாரிக்க அவர்கள் கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பனை  போல "அதோ சிவப்பு சட்டை போட்டு கொண்டு எதுவும் தெரியாதவன் போல நடந்து செல்கிறானே, அவன் தான் இழுத்தான்" என்று கூறி விட்டார்கள். கிராதகர்கள்!

திடீரென்று என் கழுத்தில் ஒரு அடி விழுந்தது. ஒரு நிமிடம் பொறி கலங்கி விட்டது. அந்த போலீஸ்காரன் பின்னால் இருந்து வந்து என்னை அடித்து விட்டு அப்படியே என்னுடைய காலரை கெட்டியாக பிடித்து கொண்டான். இரயிலில் இருந்த மற்ற பயணிகள் ஏதோ சாதித்து விட்டதை போல "அவனை சும்மா விடாதீர்கள். நன்றாக 'கவனித்து' அனுப்புங்கள்" என்று போலீஸ்காரனை உசுப்பேற்றி விட்டனர். ஒருவன், "அவனை முட்டிக்கு முட்டி அடித்து ஜெயிலில் அடையுங்கள், அப்போது தான் புத்தி வரும்" என்றான். அட பாவிகளா! என்னை வெளியே செல்ல விடாமல் தடுத்தது நீங்கள் தானே டா! நான் என்ன, வேண்டும் என்றேவா சங்கிலியை இழுத்தேன்?


இரயில் சிறிது சிறிதாக வேகம் எடுக்க துவங்கியது. நானும் போலீஸ்காரனும் தண்டவாளத்தில் கீழே நின்று கொண்டிருந்தோம். 'என்னுடைய பெற்றோர் கதி என்ன ஆனதோ? பாவம், அவர்கள் ஊருக்கு போய் சேரும் வரை கவலையில் இருப்பார்களே. போலீஸ்காரன் வேறு என்னுடைய காலரை கெட்டியாக பிடித்து கொண்டிருக்கிறான். இவனிடம் இருந்து தப்பிக்க சீக்கிரமாக எதையாவது செய்ய வேண்டுமே ' என்று என் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.


இரயில் சென்று விட்டது. இப்போது தண்டவாளத்தில் நானும் என்னுடைய காலரை இன்னும்  கெட்டியாக பிடித்து கொண்ட  போலீஸ்காரனும் மட்டும் தான். ஒரு உந்துதலில் என்னுடைய pant பாக்கெட்டில் இருந்த பர்சை தொட்டு பார்த்து கொண்டேன். வடிவேல் ஒரு படத்தில் "எல்லாரும் நம்பள பாக்குறாங்க, அலர்ட்டா இருந்துக்கோ ஆறுமுகம்" என்று கூறுவது போல போலீஸ்காரன் நான் என்ன செய்கிறேன் என்றே என்னை விழியால் உருட்டி பார்த்து கொண்டிருந்தான். பர்சை நான் வெளியே எடுத்த அடுத்த நொடியே,  உடனேயே காலரில் இருந்த அவனுடைய பிடி தளர்ந்தது! இது தான் மாஜிக்கோ? "கூட்டத்தில் என்னால் வெளியே வர முடியவில்லை.  பெற்றோர்களை வழியனுப்ப வந்தேன். ஹீ ஹீ " என்று வழிந்து கொண்டே அவனிடம் ஒரு நூறு ருபாய் நோட்டை கொடுத்தேன்.


அவ்வளவுதான். சட்டென்று அதை தனது பாக்கெட்டில் போட்டு கொண்டான். அதற்கு பிறகு தான் வேடிக்கையே. அது வரையில் எனது காலரை தனது கையால் பிடித்து கொண்டிருந்த போலீஸ்காரன், இப்போது தனது கை முழுவதையும் எனது இரு தோள்களின் மேல் போட்டு கொண்டு ஏதோ பால்ய நண்பர்கள் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து கொண்டால் எப்படி இருப்பார்களோ , அது போல சிரித்து பேசிக்கொண்டே என்னுடன் சூரத் வரை தண்டவாள ஓரத்தில் நடந்து வந்தான்!

பம்பாய் சென்ற எனது பெற்றோர், முதல் காரியமாக இரயில் நிலையத்தில் இருந்து என் வீட்டுக்கு அருகில் இருந்த கடைக்கு போன் செய்து மிக பதற்றத்துடன் பேசினார்கள். என்னுடைய குரலை கேட்ட பிறகு தான் அவர்களுக்கு நிம்மதி. பாவம், மிகவும் அரண்டு போயிருந்தார்கள். நான் எனது அம்மாவிடம்  "ஏன் நீங்கள் இதற்கெல்லாம் போய் அலட்டி கொள்கிறீர்கள்" என்றேன். சரமாரியாக என்னை திட்ட ஆரம்பித்தார். "ராஸ்கல், உன்னை யார் அபாய சங்கிலியை இழுக்க சொன்னார்கள்? உனக்கு என்ன ஆச்சோ என்று நாங்கள் பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும். உன்னை இப்படியே விட்டால் நீ உருப்பட மாட்டாய். உன்னை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும்" என்று பீடிகையோடு போனை வைத்து விட்டார். 


'இது ஏதுடா வம்பு, அப்படி நான் என்னதான் செய்து விட்டேன்? அவர்கள் ஊருக்கு போய் என்ன செய்ய போகிறார்கள்?' என்று சற்றே நினைத்து நானும் அதை பற்றி மறந்து விட்டேன். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு தான் சாவகாசமாக ஒரு கடிதம் வருகிறது. எனக்கு பெண் தேட ஆரம்பித்து விட்டார்களாம். போச்சுடா! ஒரு ஜெயிலில் இருந்து தப்பித்தோம் என்று நினைத்தால்.......! இருங்கள், பக்கத்தில் தங்கமணி எங்கே என்று பார்த்து விட்டு வருகிறேன்!