Tuesday, 4 February 2014

பயணங்களும் பாதைகளும்

பல வருடங்களுக்கு பிறகு கல்லூரியில் என்னுடன் படித்த நண்பனின் பரிச்சயம் வலைப்பதிவில் 'லிங்க்டின்' உதவியுடன் மீண்டும் கிடைத்தது. அவன் துபாயில் நல்ல வேலையில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சில மாதங்களுக்கு பிறகு எனக்கு துபாய் போகும் சந்தர்ப்பம் கிடைத்தபோது குடும்பத்துடன் சென்று வந்தேன்.
நண்பனை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு பார்த்ததில் இருவருக்குமே மகிழ்ச்சி. இரவு உணவு சாப்பிட்டபின் வெகு நேரம் எங்களது பழைய நண்பர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

எனது கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூட்டம் என்று மிக பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நண்பனும் உண்மையிலேயே முத்து முத்தாக‌ இருந்தார்கள்.

எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று அலைந்து திரிந்து கலாட்டா செய்திருக்கிறோம். இப்போது பரோட்டா காமெடி என்று சினிமாவில் வருகிறது அல்லவா, கிட்டத்தட்ட அதே போல‌ எனது நண்பர்கள் கூட்டத்தில் ஒரு முறை நடந்தது.

ஒரு 'மெஸ்'ஸில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ரவி என்ற நண்பன், "இது மாதிரி பூரி மெல்லிதாக இருந்தால் 50 பூரி கூட சாப்பிடுவேன்" என்று வீராப்பாக கூறிவிட்டான். அவ்வளவுதான். நண்பர்கள் அனைவரும் அவனை பிடித்து கொண்டு "மரியாதையாக இப்போது 50 பூரியை சாப்பிட்டு காண்பி. அப்படி நீ சாப்பிட்டு காண்பித்து விட்டால் அதற்கான காசை நாங்கள் கட்டுகிறோம். உனக்கு 100 ரூபாயும் கையில் கொடுக்கிறோம். அப்படி உன்னால் சாப்பிட முடியவில்லை என்றால் சாப்பிட்ட பூரிக்கு நீ தான் காசு கொடுக்க வேண்டும். எங்கள் அனைவருக்கும் உண்டான பில் பணத்தையும் நீ தான் கட்டவேண்டும்" என்று கூறினோம். நம்ப மாட்டீர்கள், 50 பூரியையும் அன்று அவன் சாப்பிட்டு காண்பித்தான். அன்றிலிருந்து அவனுடைய பெயர் பூரி ரவி என்றாகி விட்டது.
 
செளந்திரராஜன் என்ற நண்பன் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆர் படத்தை நாங்கள் tent கொட்டகையில் பார்க்கும் போது படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை காது கிழிய‌ விஸில் அடித்தே தொண்டை கட்டிவிடும். அவனுக்கு 'Sound' என்று பெயர் வைத்தோம் (Sound-ararajan என்பதால்).இப்படி ஒவ்வொருவனுக்கும் ஒரு பட்டப்பெயர்.வாழ்க்கையில் மறக்க முடியாத மிகவும் ஜாலியான காலகட்டம் அது.
 

பொறியியல் இரண்டாம் வருடம் படிக்கும்போது எதிர்பாராதவிதமாக RK என்ற நண்பன் (பெயர் வேண்டாமே) இறுதி தேர்வில் தோல்வியுற்றான். அதனால் அவன் ஒரு வருடம் மற்றவர்களை விட பின் தங்க நேரிட்டுவிட்டது.  நண்பர்கள் கூட்டத்தில் இப்படி நடந்து விட்டதே என்று எங்கள் அனைவருக்கும் மிகவும் சங்கடமாகி விட்டது. அவனை ஒரு வழியாக தேற்றி அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தான். ஆனால் ஒரு வருடம் போனது போனதுதான்.
 
 
இறுதி ஆண்டு முடிந்த பிறகு சிலர் வேலைக்கு சென்றார்கள்,  சிலர் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றார்கள். அதில் அல்போன்ஸ் என்ற நண்பனும் ஒருவன். கனடா நாட்டுக்கு படிக்க சென்ற அல்போன்ஸ், படிப்பு முடிந்த பிறகு அங்கேயே ஒரு வேலையையும் தேடி கொண்டதாக கேள்விப்பட்டேன்.
 
 
அந்த காலகட்டத்தில் யாரை பார்த்தாலும் GRE/TOEFL எழுதி அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு செல்வதை பெருமையாக எண்ணி கொண்டிருந்தார்கள். அது மட்டும் இல்லை, 'என் பையன் அமெரிக்காவில் இருக்கிறான்' என்று சொல்வதை அப்படி சென்றவர்களின் பெற்றோர்கள் மிகவும் பெருமையாக கூறிக்கொள்வார்கள். சமுதாயத்தில் அப்படி சொன்னால் ஏதோ பெரிய விஷயமாம். என்ன எழவோ.
 
என்னுடன் படித்த சில நண்பர்களுக்கு திருமணம் ஆகி விட்டிருந்தது. சில வருடங்கள் வரை அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருந்தோம். சிறிது சிறிதாக அந்த தொடர்புகளும் நின்று விட்டன. அவரவர் தத்தம் வாழ்க்கையில் மூழ்கி விட்டிருந்தனர். தவிர, ஒவ்வொருவரும் ஒரு ஊரில் இருந்ததால் தொடர்பு சிறிது சிறிதாக தேய்ந்து கடைசியில் நின்றே விட்டது.
 
 
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் அல்போன்ஸிடமிருந்து ஒரு மின் அஞ்சல் வந்தது. தான் மிகவும் சிரமப்படுவதாக எழுதியிருந்தான். படிப்பு முடிந்த பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வேலையில் சேர்ந்தானாம். ஆனால், அங்கு நிலவும் வேலை இல்லா திண்டாட்டத்தினாலும் விலைவாசியினாலும்  (acute recession) எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என்ற நிலைமை இருப்பதனாலும் (Hire and Fire policy), செலவுகளை சமாளிக்க மாலை வேளையில் கார்களை கழுவும் வேலையை செய்வதாகவும் கூறியிருந்தான். இவ்வளவு செலவு செய்து கனடா வந்த பிறகு வேலை இல்லாமல் திரும்பி வந்தால் வீட்டில் அவமானமாகி விடும் என்று வேறு எழுதியிருந்தான். நம் சமுதாயத்தில் இது போன்ற போலி கெளரவத்தினாலேயே பிரச்னைகள் துளிர்விடுகின்றன என்று நினைக்கிறேன்.
 
 
அது வரை அமெரிக்கா / கனடா போன்ற நாடுகளுக்கு செல்பவர்கள் செழிப்புடன் இருப்பதாக ஒரு மாயை இருந்தது. அதை மெய்ப்பிப்பது போல, 4 வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்காவிலிருந்து வரும் 'சிலர்' (அனைவரும் அல்ல) போடும் அலப்பறை தாங்காது சாமி. அமெரிக்கா ஏதோ சொர்க்க பூமி மாதிரியும் பாலும் தேனும் சாலையில் ஓடுவது போல ஒரு தோற்றத்தையும் இவர்கள் கொடுப்பார்கள். அது போன்றவர்களுக்கு பெண் கொடுக்க அலையும் ஒரு கூட்டமே இருக்கும். எதுவாக இருந்தாலும், கூட படித்த நண்பன் கஷ்டப்படுகிறானே என்ற வருத்தம் இருந்தது. அதற்கு பிறகு அவனிடமிருந்து தகவலே இல்லை. எங்கேயாவது நலமாக இருந்தால் சரி.
 
 
துபாய் நண்பனிடம் அல்போன்ஸ் பற்றி கேட்டதற்கு அவனுக்கும் தகவல் எதுவும் தெரியாது என்று கூறினான். ஆனால், இரண்டாம் வருடத்தில் தோல்வியுற்ற RK இப்போது ஜெர்மனியில் granite கற்களின் மிக பெரிய டீலர் என்று கூறினான்.  அவனையும் இப்போது 'லின்க்டின்ல்' தொடர்பு கொண்டுள்ளேன். 'பொறியியல் படித்தவன் எப்படி சம்பந்தமே இல்லாத ஒரு தொழிலை செய்கிறாய்'என்று அவனிடம் கேட்டேன். "எல்லாமே வாழ்க்கையில் நடக்கும் திருப்புமுனைகள் தான் காரணம். சிலருக்கு முதலில் நடக்கிறது, சிலருக்கு பிறகு, அவ்வளவுதான் வித்யாச‌ம்". என்றான். எவ்வளவு பெரிய‌ உண்மை. பொறியியலில் தோல்வியுற்றவன் வாழ்க்கையில் ஜெயித்து விட்டான்.
 
 
இதாவது பரவாயில்லை, கணேசன் என்ற நண்பன் பொறியியல் முடித்துவிட்டு இப்போது  முந்திரி பருப்பு வியாபாரம் செய்கிறானாம். அதுவும் ஏற்றுமதி தொழிலில் இருக்கிறானாம். ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. மற்றொருவன், இந்திய கடற்படையில் சேர்ந்து பெரிய ஆளாகி விட்டிருந்தான்.
 
 
படிக்கும் போது எதிர்காலத்தில் என்னவாக இருப்போம் என்று நாங்கள் சற்றும் யோசித்ததே இல்லை. அன்றைய பொழுது, அன்றைய தினம் சுகமாக இருந்தது, அவ்வளவுதான். எங்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. எதிர்ப்பார்ப்பே இல்லாத வாழ்க்கையில் என்றுமே நிம்மதி தான். ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு, ஒரு பாதை. படித்து முடித்த பிறகு திடீரென்று பாதைகள் தாறுமாறாக மாறி படித்த படிப்புக்கும் செய்கிற தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் வாழ்க்கை அலை அனைவரையும் அடித்து கொண்டு ஓடிவிட்டது.
 
 
இப்போது எங்கள் அனைவருக்கும் வளர்ந்த குழந்தைகள். சில வருடங்களில் அவர்களுக்கும் படிப்பு முடிந்துவிடும். அவர்களும் எங்களை போல கனவுலகிலிருந்து வாழ்க்கையின் யதார்த்த வெள்ளத்தில் தள்ளப்படுவார்கள். அது வரை அவர்களாவது நிம்மதியாக தூங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
 
 
 
 
 

 

Tuesday, 21 January 2014

திண்ணியம் முருகன் கோவில்

ராஜராஜ சோழனின் அக்கா பெயர் குந்தவை பிராட்டியார். இவர் ஆன்மீக கொடை வள்ளலாக திகழ்ந்தார். சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ( தோராயமாக கி.பி.995). ஒரு மாட்டு வண்டியில் முருகன், வள்ளி மற்றும் தெய்வானை விக்ரகங்களை ராஜ மரியாதையுடன் குந்தவை பிராட்டியார் தஞ்சாவூருக்கு சிப்பாய்களுடன் எடுத்து சென்று கொண்டிருந்தார். முருகனை சுமந்து கொண்டு சென்ற மாட்டு வண்டி கூழையாறு என்ற சிறு நதியை கடந்த உடனே  மாட்டின் கால் இடறி  கவிழ்ந்து விட்டது.  அதில் அந்த முருகன் விக்ரகத்தின் வலது கால் உடைந்து விட்டது. விக்ரகத்தை எவ்வளவு முயற்சி செய்தும் விழுந்த இடத்திலிருந்து தூக்க முடியவில்லை. அதனால் அதே இடத்தில் குந்தவை முருகனுக்கு ஒரு அழகான் கோவில் கட்டினார். இது கல் வெட்டில் பதிவாகியுள்ளது.


பல நூற்றாண்டுகள் கழிந்தன. பலர், எத்தனையோ முறை அந்த‌ உடைந்த மூலவரின் காலை செப்பனிட முயற்சித்து அது ஏதாவது ஒரு காரணத்தால் ஒவ்வொறு முறையும் தோல்வியிலேயே முடிந்தது. ஒரு முறை அவ்வாறு முயற்சிக்கும் போது ஊர் பெரியவர் ஒருவரின் கனவின் முருகன் தோன்றி "உங்கள் வீட்டில் உள்ள குழந்தை ஊனமாகி விட்டால் அந்த குழந்தையை தூக்கி எறிந்து விடுவீர்களா? அதே போல என்னை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று கூறிவிட்டார்.  முருகனே கட்டளை இட்டுவிட்டதால் அதற்கு பின் இன்று வரை யாருமே மூலவரின் காலை சரி செய்ய முயற்சிக்கவில்லை. இன்று கூட அபிஷேகத்தின் போது கூர்ந்து கவனித்தால் தான் இது தெரியும். மற்றபடி வெள்ளி கவசம் சாத்தியிருந்தால் தெரியாது.

இந்த கோவில் இன்றைய திருச்சி மாவட்டம், லால்குடியிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில், காட்டூர் சர்க்கரை ஆலையிலிருந்து 5 கிலோமீட்டர்  தூரத்தில் உள்ளது. இந்த கோவிலில் சில விசேஷங்கள் உள்ளன. எல்லா கோவில்களிலும் தக்ஷிணாமூர்த்தி தெற்கு திசையை பார்த்து கொண்டிருப்பார். ஞானத்தை தரும் தக்ஷிணாமூர்த்தி போல, முருகன்  தெற்கு திசையை பார்த்து அருள் புரிகிறார். இது மிக மிக விசேஷமாகும். உலகில் தெற்கு பார்த்த மூலவர் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு அதீதமான, அற்புதமான‌  சக்தி இருப்பதை உணரலாம். உதாரணம், மயிலை கற்பகாம்பாள், திருச்செந்தூர் முருகன், திருக்கடையூர் அபிராமி போன்றவை. அதே போல, வள்ளி மற்றும் தெய்வானை விக்ரகங்களுக்கும் தனித்தனியே மயில் வாகனங்கள் உள்ளன. ஒரே இடத்திலிருந்து நேராக பார்த்தால் முருகனும், இடது பக்கம் பார்த்தால் சிவனும் தெரிவார்கள். இந்த கோவிலில் உள்ள நவகிரகங்கள் அனைத்துமே சூரியனை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இது போன்ற விசேஷங்கள் உள்ள கோவில் உலகில் வேறு எங்கும் கிடையாது. இந்த கோவிலில் முருகனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். சிவனின் பெயர் இங்கு கோஷ்டீஸ்வரர். அன்னையின் பெயர் ப்ருஹன் நாயகி. 

வெளி பிரகாரத்தில் வினாயகர் ந்ருத கணபதியாக காட்சி தருகிறார். இந்த கணபதியை வேண்டுபவர்களுக்கு எதிரிகளின் பயமும் தொல்லையும் தீரும் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. துர்கை, கால பைரவர், நாக தேவர் என்று பல மூர்த்திகள் வெளி பிரகாரத்தில் உள்ளன. மனிதனின் மனதில் தோன்றும் ஆறு தீயவைகளை களைந்து அருள் புரிகிறான் ஆறுமுகன். காமம் (இச்சை), க்ரோதம் (கோபம்), லோபம் (கஞ்சத்தனம்), மோஹம் (ஆசை), மதம் (செருக்கு), மாஷர்யம் (பொறாமை) ஆகிய 6 தீய குணங்களை ஆறுமுக கடவுளாக காட்சி தரும் முருகன் தீர்த்து வைக்கிறான்.

இத்தனை விசேஷங்கள் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுகிறது. எழைகளுக்கு அன்னதானம் உட்பட பல நல்ல காரியங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தங்களால் இயன்ற பண உதவிகளை செய்யலாம். 

T V MURALI
SECRETARY
THINNIAM WELFARE TRUST
24 ROYAR THOPE
SRIRANGAM
TRICHY - 620006
MOBILE: 9994442934
email: thinniamkovil@gmail.com 

ராஜராஜ சோழன் காலத்து கோவிலில் இத்தனை விசேஷங்கள் இருப்பது எல்லா தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க கூடியது அல்லவா? இந்த அற்புதமான் கோவிலுக்கு ஒரு முறை விஜயம் செய்து முருகனின் அருளை பெற்று வளமாக வாழுங்கள். 


Friday, 20 December 2013

மெரீனா மாலைகள்

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரு தனித்துவமான அழகும் வசீகரமும் இருக்கும் இடம் ஒன்று உண்டென்றால் அது கண்டிப்பாக மெட்ராஸ் மெரீனா கடற்கரை என்பதில் சந்தேகமில்லை. நான் பிறந்து வளர்ந்த மெட்ராஸில் மெரீனா ஒரு மறக்க முடியாத அங்கமாக திகழ்கிறது. ஒவ்வொரு முறையும் மெரீனா கடற்கரையை கடக்கும்போது நினைவலைகள் பசுமையாக என் மனதை ஆட்கொள்கின்றன.

எழுபதுகளில் தொலைக்காட்சி என்றால் என்னவென்று தெரியாத வயது. வீட்டில் திரைப்படங்களுக்கு மிக அரிதாகவே கூட்டி செல்வார்கள். எனது தந்தை எங்களை அடிக்கடி கூட்டி செல்லும் இடம் இந்த மெரீனா கடற்கரைதான்.

வானொலி நிலையத்தின் முன் இருக்கும் கலங்கரை விளக்கம் (லைட் ஹெளஸ்) அப்போது கட்டப்படவில்லை. அப்போதெல்லாம் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் கூரையில் தான் லைட் ஹெளஸ் இருந்தது. மண் எண்ணெய் ஊற்றி தான் அதன் விளக்கை ஏற்றுவார்கள். வாகனங்களும் மெரீனாவில் குறைவாக இருந்ததால் அதன் வெளிச்சம் பிரகாசமாகவே இருந்தது. அந்த பிரகாசமான வெளிச்சமே அந்த லைட் ஹெளஸுக்கு வினையாகி விட்டது. முதலாம் உலக போரின் போது எம்டன் என்ற ஜெர்மானிய கப்பல் மெட்ராஸில் குண்டு வெடித்தார்கள் அல்லவா, அப்போது இந்த லைட் ஹெளஸை தான் தாக்கினார்கள். சீராக அணைந்து எரியும் அந்த வெளிச்சத்தை பார்க்கவே பரவசமாக இருக்கும். 

மெரீனாவுக்கு சென்று வருவதே எங்களுக்கு ஒரு குதூகலமான அனுபவமாக இருந்தது. இப்போது உள்ளது போல குப்பை மேடாக இல்லாமல் உண்மையிலேயே சுத்தமாக இருந்தது. பட்டாணி, சுண்டல், முறுக்கு போன்றவற்றை விற்கும் பையன்கள்,  குறி சொல்லும் குறத்தி, ஐஸ்க்ரீம் விற்பவன் என்று அப்போதும் இருந்தார்கள். இப்போது கடிகாரம் இருக்கும் இடத்தில், ஐ.ஜி. அலுவலகத்தின் எதிரில் அழகிய தாமரை சிற்பம் ஒன்று இருந்தது. மணலில் உட்கார்ந்து எனது அப்பா, அம்மா இருவரும் எதையாவது அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள். நானும் எனது உடன் பிறந்தவர்களுடன் கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டு அலைகளில் கால்களை நனைத்து கொண்டிருப்போம். ஒவ்வொரு அலையும் வந்து கால்களை தொடும்போதும் மனம் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று வரும். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.





எங்கள் வீட்டில் சிவப்பு நிறத்தில் பழைய ஹெரால்டு கார் இருந்தது. பல வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்த அந்த காரை விற்று விட்டு புதிதாக ஒரு ஃபியட் காரை எனது தந்தை வாங்கினார். புதிய கார் வாங்கி ஒரு வாரம் இருந்திருக்கும். 


ஒரு நாள் மாலை குடும்பத்தினர் அனைவரும் மெரீனாவுக்கு சென்றோம். போகும் வழியில் லஸ் கார்னரில் உள்ள பாலத்தின் மேல் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று அருகில் சென்று பார்த்தால் எங்களுக்கு ஒரு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. எங்கள் வீட்டில் பல வருடங்கள் இருந்து யாரிடமோ ஒரு வாரத்துக்கு முன்பு விற்ற அந்த ஹெரால்டு கார் திகுதிகுவென்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 

என்னவென்று விசாரித்ததில், காரை வாங்கிய நபர் ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றாமல் ஒரு வாரமாக ஓட்டியதால் இஞ்ஜின் சூடாகி தீ பற்றி கொண்டது தெரிய வந்தது. பல வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்த கார் (இப்போது விற்று விட்டாலும்) எங்கள் கண் முன் எரிந்து கொண்டிருப்பதை கண்டவுடன் எங்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அங்கிருந்து புறப்பட்டு மெரீனாவுக்கு சென்றோம். அன்று வெகு நேரம் எரிந்து போன அந்த காரை பற்றியே அனைவரும் பேசி கொண்டிருந்தோம். 

எங்களது பெற்றோர் இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்த போது நாங்கள் மணலில் ஒரு சிறிய மலையை கட்டி கொன்டிருந்தோம். அப்போது தான் விதி விளையாடியது. பேசி கொண்டிருந்த எனது தந்தை, பேச்சு வாக்கில் தனது கையில் இருந்த தங்க‌ மோதிரத்தை கழற்றி மறுபடியும் விரலில் போட்டு மாற்றி மாற்றி எடுப்பது போடுவதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் நன்றாக இருட்டி விட்டிருந்தது. நாங்கள் அனைவரும் வீட்டுக்கு கிளம்ப எழுந்திருக்கும் போது தான் திடீரென்று எனது தந்தை தனது விரலில் இருந்த மோதிரத்தை காணவில்லை என்று கூறினார். அந்த இடத்தை கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல் தேடியும் கிடைக்கவில்லை. மணலில் எங்கோ புதைந்து போயிருந்தது. கடைசியில், எங்களை அந்த இடத்தில் காவலுக்கு வைத்து விட்டு, வீட்டுக்கு சென்று ஒரு பெரிய சல்லடையையும் முறத்தையும் டார்ச் லைட் ஒன்றையும் எனது பெற்றோர் எடுத்து வந்தனர். அந்த இடத்தில் இருந்த மணலை சல்லடை போட்டு (!) தேடி கடைசியில் ஒரு வழியாக மோதிரத்தை கண்டு பிடித்தபின் தான் உயிர் வந்தது. ஒரே நாளில் இப்படி இரண்டு வித்யாசமான அனுபவங்கள்!


1975ம் ஆண்டில் சென்னையில் அடை மழை பெய்தது. அந்த ஆண்டு அடித்த புயலில் சென்னை கடற்கரையின் மணல் முழுவதும் தண்ணீரில் மூழ்கி போய் கடல் அலைகள் விவேகானந்தர் இல்லம் வரை அடித்தது. நானும் எனது அண்ணனும் அதை பார்க்க கிளம்பி சென்றோம். அங்கே பார்த்தால் எங்களை போலவே நூற்றுக்கணக்கான மக்கள்  மழையில் நனைந்தபடியே மெரீனா கடற்கரை சாலையில் அடிக்கும் அலைகளை கண்டு ரசித்து கொண்டிருந்தார்கள். காணக்கிடைக்காத காட்சி அல்லவா? அதற்கு பிறகு சுனாமி அடித்த போது தான் அதே போல அலைகள் சாலை வரை வந்தன. 

1977ல் புதிய லைட் ஹெளஸை கட்டிய பிறகு பழைய லைட் ஹெளஸில் இருந்து விளக்கு ஏற்றுவதை நிறுத்தி விட்டார்கள். அதே போல அந்த அழகிய தாமரை சிற்பத்தையும் எடுத்து விட்டு அந்த இடத்தில் கடிகாரத்தை வைத்து விட்டனர். நிரந்தரமாக அழிந்துவிட்ட நமது  பல பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. ஐ.ஜி. அலுவலகத்தையும் இப்போது வேறு எங்கோ மாற்றி விட்டார்கள். நல்ல வேளை அந்த அழகிய வெள்ளை கட்டிடத்தை இடித்து அடுக்கு மாடி வீடுகளை கட்டவில்லை.

எண்பதுகளில் காந்தி சிலையை சுற்றி பூங்காவை அமைத்தனர். காலை வேளையில் முக்கியஸ்தர்கள் நடை பயில நடை பாதையை சீரமைத்தனர். 1987ம் வருடம் மெட்ராஸில் மிக கடுமையான வறட்சி. தண்ணீர் பஞ்சத்தில் மக்கள் தவித்தபோது மெரீனா கடற்கரையில் புதிதாக கிணற்றை தோண்டினார்கள். அதிலிருந்து வற்றாத குடிநீர் கிடைத்தது. தாகம் தீர்த்த அந்த கிணற்றை அழகு செய்கிறேன் பேர்வழி என்று இப்போது மூடி விட்டார்கள். 


இப்போது மெரீனாவை பார்த்தால் குப்பை மலையாக காட்சி அளிக்கிறது. பானி பூரி, பேல் பூரி என்று நாற்றம் எடுத்த எண்ணெயில் வறுத்த தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு மக்கள் அதே இடத்தில் கை கழுவி காகித குப்பைகளையும் அங்கேயே போட்டு விட்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது. மணலில் வண்ணமயமான கிளிஞ்சல்கள் முன்பு கிடைக்கும். இப்போது சர்வ சாதாரணமாக ஆணுறைகள் தட்டுப்படுகின்றன. கால்களை  மணலில் வைப்பதற்கே கூசுகின்றது. போகிற போக்கை பார்த்தால் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றே தோன்றுகிறது. நான் வளர்ந்த மெட்ராஸ் கண்டிப்பாக இதுவல்ல. நான் நேசித்த மெரீனா நிச்சயமாக இதுவல்ல. 

தொலைத்து விட்ட நல்ல‌ நினைவுகளுக்காக மனம் ஏங்குகிறது. எனது மெரீனா திரும்ப கிடைக்குமா?

Thursday, 5 December 2013

கண்ணன் அந்தாதி

அரிந்தோடும்        செல்வத்தை                ஓயாது              தினம்தேடித்
திரிந்திங்கே          தவிக்குமென்               மனமே!              - நடப்பது
அரியின்                  ஆட்டம்தான்              அறிவாயே        உனதுயிரும்
பிரியியுமுன்      அவன்பாதம்                   பற்று.

பற்றறுத்து           அரிப்பாதம்                   பற்றிடும்             நல்லடியார்க்கு
குற்றம்                  குறையேது                   மனமே!               - என்றும்
சற்றேயும்            தளராது                          நாராயணன்         நாமத்தை
ஒற்றிப்                  பணிந்து நீ                      செல்.

செல்வமும்          ஞானமும்                     கல்வியும்            ஓங்கிடவே
வல்வினையை  அழிப்பாயே                   மனமே!              - நாவின்
சொல்லாலே         பாடிடுவாய்                 கண்ணபிரான்    திருநாமம்
நல்வழியை          காட்டிடுவான்              அவன்.

அவன்நாமம்        நினைத்திட்டால்        நற்கதியும்          கிட்டிடுமே
சிவனும்                 அன்றுரைத்தானே    மனமே!              -  மனிதர்
தவம்செய்ய          வேண்டாமே             முக்தியையும்    தந்திடுவான்
எவனும்                  நினைத்திட்டால்     அவனடி.

அடிபணியும்         அடியார்க்கு                 தடையதனை        தகர்த்திடுவான்
முடிப்பீலி               மயிலிறகோன்         மனமே!                    -  பாதம்
பிடித்தோர்க்கு      பதமலரின்                அருளுண்டாம்       அடியோர்க்கு
மடிப்பிச்சை          தந்திடுவான்             முரளி.

முரளியவன்         பாதத்தை                     பற்றுடனே           பற்றிட்டால்
வரமாயிரம்           வழங்கிடுவான்          மனமே!                -அருளை
கரமதனால்           பொழிந்திடுவான்      கருத்துள்ளே     காத்திட்டு
சிரம்தாழ்ந்தால்   சென்றிடுமே                வினை.

வினையாவும்      வீழ்ந்திடுமே               வாமனனின்        நாமத்தை
நினைத்தாலே      நற்கதியாம்                 மனமே!                 - மாந்தர்
தனைத்தானே     அறிந்திட்டால்           சத்தியமாய்         கேட்டிடுமே
மனையாவும்       மங்கலத்தின்              ஒலி.

ஒலியாவும்           கேட்பதுவே               அவன்கருணை    மழையாலொப்
பிலியப்பன்           அருளால்தான்         மனமே!                   - ஞாலக்
கலிவினைகள்     களைந்திடுமே        திருமாலின்             திருக்கரச்சங்
கொலியதனை     கேட்டாலே               சுகமே.

சுகமிங்கு          நிலைத்திடவே    நாராயணன்     நாமத்தை
அகமகிழக்       கேட்டிடுவாய்       மனமே!             - கண்ணன்
புகழினையே   பைந்தமிழில்       பாடவந்தேன்  அந்தாதி
இகம்காக்க      இயம்பிடுவாய்     அரி.




Wednesday, 23 October 2013

தேடல்

மெட்ராஸில் லாயிட்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தான் நான் படித்தேன். கோபாலபுரத்தில எங்கள் வீடு இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு சென்னையின் வேறு ஒரு பகுதியில் சொந்த வீட்டுக்கு குடி புகுந்தோம். அதனால் தினமும் இரண்டு பஸ் மாறி பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கான பஸ் பாஸ் சற்றே விசித்திரமாக இருக்கும். பாஸின் இரு முனைகளிலும் மேலிருந்து கீழ் வரை 1 முதல் 31 வரை தேதி இருக்கும். தினமும் நடத்துனரிடம் இந்த பாஸை காண்பித்தால் ஒவ்வொறு முறை பயணம் செய்யும் போதும் பாஸில் அந்த குறிப்பிட்ட தேதியின் மேல் ஒரு ஓட்டை போட்டு விடுவார். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அந்த பாஸில் செல்ல முடியாது.

நான் ஆழ்வார்பேட்டை வரை ஒரு பஸ்ஸில் சென்று அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து லாயிட்ஸ் சாலை வரை சென்று அங்கிருந்து கோபாலபுரம் வரை நடந்து செல்வேன். நடுவில் வரும் ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் சில நாட்கள் 30 நிமிடங்கள் வரை  காத்திருந்த அனுபவம் கூட உண்டு. அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த அனைவருமே பல்வேறு அலுவலகங்களில் வேலை செய்பவர்களாக இருந்தார்கள். நானும் எனது நண்பனும் மட்டும் அந்த பஸ் ஸ்டாப்பில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களாக இருந்தோம். தினமும் அதே நேரத்தில் இறங்கி அதே நேரத்தில் அடுத்த பஸ்ஸை பிடிப்பதால் பல முகங்கள் பரிச்சயமானவையாகவே இருந்தன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், யாருமே மற்றொருவரிடம் பேசிக்கொள்ள கூட மாட்டார்கள். ஏன், ஒரு புன்முறுவல் கூட இருக்காது. அவரவருக்கு ஆயிரம் கவலைகள். எனது அடுத்த பஸ் வந்த உடன் நானும் நண்பனும் ஏறி சென்று விடுவோம். இது தினமும் நடக்கும் விஷயம்.

இப்படி இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் அந்த பஸ் ஸ்டாப்புக்கு ஒரு பிச்சைக்காரன் வந்தான். கண்கள் இரண்டிலும் பார்வை இல்லை. கூட ஒரு நாய் மட்டும் அவனுக்கு துணையாக இருந்தது. கையில் தடியும், தோளில் ஒரு ஜோல்னா பையும் இருந்தன. பஸ் ஸ்டாப்பில் தரையில் அப்படியே உட்கார்ந்து பையிலிருந்து எதோ ஒரு விசித்திரமான கருவியை எடுத்தான். ஒரு கிழிந்த துண்டை விரித்து அதன் மேல் அந்த கருவியை வைத்தான். அது ஏதோ ஒரு வாத்தியம் போல கம்பிகளுடனும் பல பொத்தான்களுடனும் வித்யாசமாக இருந்தது. செய்தி தாள்களை படித்து கொண்டிருந்த சிலரும் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் இவனையே பார்த்து கொண்டிருந்தனர்.

அவனது பக்கத்திலேயே அந்த நாயும் ஏதோ சொல்லுக்கு கட்டுப்பட்டது போல உட்கார்ந்து விட்டது. பிச்சைக்காரன் இப்போது அந்த கருவியில் உள்ள கம்பிகளை ஒரு கையால் திருகிக்கொண்டே மற்ற கையால் பொத்தான்களை அமுத்த ஆரம்பித்தான். 'டொய்ங் டொய்ங்' என்று சத்தம் வந்தது. "இது என்ன கருவி" என்று பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். "புல்புல் தாரா" என்று சொன்னார். ஓஹோ, இப்படி கூட ஒரு வாத்தியம் இருக்கிறதா என்ன?

தொண்டையை கனைத்துக்கொண்டே பிச்சைக்காரன் கணீரென்று பாட ஆரம்பித்தான்.

'நீயல்லால் தெய்வம் இல்லை, எனது நெஞ்சே நீ வாழும் எல்லை - முருகா....'

அது வரை அப்படி ஒரு கணீர் குரலை நான் கேட்டதே இல்லை. ஒரு கட்டத்தில் இவன் பிச்சைக்காரனா பின்னணி பாடகனா என்றே தெரியாத அளவுக்கு அவ்வளவு பிரமாதமாக பாடி முடித்தான். அவ்வளவுதான். அந்த துண்டில் சில்லரை மழை பொழிந்தது. அதற்குள் எனது பஸ் வந்து விட்டதால் நான் ஏறி சென்று விட்டேன். 

மறு நாள் ஆழ்வார்பேட்டையில் நான் பஸ்ஸில் வந்து இறங்கியபோது அதே பிச்சைக்காரன் அங்கு ஏற்கனவே உட்கார்ந்திருந்தான். இப்போது வேறு ஒரு பாட்டு. அந்த பஸ் ஸ்டாப்பில் ஒவ்வொருவரும் அவனுடைய குரலின் இனிமையில் திளைத்திருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. பஸ்ஸுக்காக காத்திருக்கும் அந்த பத்து நிமிடங்களுக்குள் அங்கு நிலவிய இருக்கமான சூழல் தளர்ந்து அனைவருமே அவனது பாடல்களை ரசிக்க ஆரம்பித்தனர். தினமும் ஒர ரம்மியமான பாடல். தூய தமிழில் பிசிறே இல்லாத குரல். ஆஹா, இதை கேட்பதற்கு உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இவ்வளவு அற்புதமான குரலை இவனுக்கு கொடுத்த கடவுள் கண் பார்வையை ஏன் எடுத்து கொண்டாரோ! 

நாட்கள் செல்ல செல்ல இவனது பாடல்கள் மிகவும் பிரபலமாகிவட்டன. அந்த 10-15 நிமிடங்களில் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் முன் போல விரைப்பாக இல்லாமல் சற்றே சிரித்த முகத்துடன் காணப்பட்டனர். சிலர் அவனிடம் சென்று 'இந்த பாட்டை பாடு', 'அந்த பாட்டை பாடு' என்று நேயர் விருப்பம் போல‌ சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவனும் பிரமாதமாக‌ அந்த பாடல்களை வாசித்து கொண்டே பாடியதால் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டது போல இருந்தார்கள். தினமும் ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் இவனை சுற்றி ஒரு கூட்டமே கூட ஆரம்பித்து விட்டது.

அவன் அந்த பஸ் ஸ்டாப்பில் எவ்வளவு நேரம் இருப்பான் என்று தெரியவில்லை. எனது பஸ் வந்ததும் நான் கிளம்பி விடுவேன். இது போலவே மற்றவர்களும் என்பது எனது யூகம். நாட்கள் பல நகர்ந்தன.

ஒரு நாள் வழக்கம் போல அவன் அடுத்த பாடலை "உள்ளம் உருகுதையா..." என்று பாட ஆரம்பித்தான். அனைவரும் உண்மையிலேயே அந்த பாடலில் சொக்கி விட்டோம்.  பாடலின் ஆரம்பத்தில் கணீரென்று இருந்த குரல் அடுத்தடுத்த வரிகளில் சற்றே பிசிறினாற்போல இருந்தது. திடீரென்று அவனது குரல் கம்மியது.  ஒரு கட்டத்தில் "பாவி என்று இகழாமல் முருகா ஓடி வருவாயப்பா" என்று பாடும்போது அதற்கு மேல் அவனால் பாட முடியவில்லை. என்ன விஷயம் என்று தெரியவில்லை. ஒரு கணம் திடீரென்று மெளனம் காத்தான். பஸ் ஸ்டாப்பில் அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர். ஏன் திடீரென்று பாடுவதை நிறுத்தி விட்டான் என்றே தெரியவில்லை. அதற்குள் எனது பஸ் வந்து விட்டபடியால் நான் அதில் ஏறி விட்டேன்.

அடுத்த நாள் அந்த பஸ் ஸ்டாப்பில் அவனை காணோம். 'என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே! உடம்பு ஏதாவது சரியில்லையா? ஏன் திடீரென்று அன்று பாடுவதை நிறுத்தினான்? ஏன் இன்று வரவில்லை?' என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாப்பில் இருந்த மற்றவர்கள் அனைவரும் அவன் வழக்கமாக உட்காரும் இடத்தையே பார்த்து கொண்டிருந்தனர். அவன் அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. எங்கு சென்றான், ஏன் சென்றான் என்றும் தெரியவில்லை.

பஸ் ஸ்டாப்பில் மீண்டும் பழைய நாட்களை போல அனைவரும் மெளனம் காக்க ஆரம்பித்து விட்டனர். 

ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை. ஒரு தேடல். பள்ளி தேர்வு என்ன ஆகுமோ என்று மாணவனுக்கு தேடல். அலுவலகத்தில் பிரமோஷன் கிடைக்குமா என்று வேலை செய்பவனின் தேடல். படிப்பை முடித்த பையனுக்கு வேலை கிடைக்குமா, பெண்ணுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்குமா என்று தந்தையின் தேடல். யார் செருப்பாவது அறுந்து நம்மிடம் வருவார்களா என்று அந்த பஸ் ஸ்டாப்பிலேயே உட்கார்ந்திருக்கும் செருப்பு தைப்பவனின் தேடல். இப்படி ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஆயிரம் கவலைகள் ஆயிரம் தேடல்கள். சும்மாவா கண்ணதாசன் பாடினார் "ஒருவன் மனதில் ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா" என்று!

'ஒரு வேளை இவன் வேறு ஏதாவது பஸ் ஸ்டாப்புக்கு சென்று விட்டானோ? போலீஸ்காரர்கள் பிடித்து கொண்டு போய் விட்டார்களோ? அல்லது விழும் சில்லரையை பார்த்து கேடிகள் திருடிக்கொண்டு சென்று விட்டார்களோ? என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே' என்று எனது நண்பனிடம் கூறினேன். அவன் ஒரு நீண்ட‌ மெளனம் காத்து விட்டு என்னை நேருக்கு நேர் பார்த்து சொன்னான் "விடுடா, பிச்சைக்காரன் தானே",














Sunday, 6 October 2013

காப்பாய் தாயே !

ஆடியநர்த்       தனகளிருனை       ய‌கத்தினுள்       வைத்திட்டு
நாடிப்ப             ணிந்திங்கு               பாட்டிசைக்க      நான்வந்தேன்
கோடிட்டு        காட்டிடுவாய்         கணநாதா            என்நாவில்
பாடிடுவேன்  தீந்தமிழில்              தாயுமையின்        பாசுரமே! 

நாதனுடன்             நெஞ்செனதில்        நீயருளும்            நற்பொழுதில்
வேதத்தின்             தலைவனிட            மெம்மின்னல்    உரைத்திடுவாய்
பாதத்தை                பிடித்திட்டேன்       அம்பிகையே      காத்தருள்வாய்
பேதையெனக்      குனையன்றி           வேறேது               கதிதாயே!

கயல்விழியால்      கருணைமழை    பொழிந்திடுவாய்   அம்பிகையே
மயிலேறி                 வந்திடுமென்         மால்மருகன்          மலர்த்தாயே
ஜெயமாதுன‌           தருளாலே              வேண்டுவரம்         கிடைத்திடுமே
பயமேது                   பதமலரை                பணிந்தோர்க்கு      பூரணியே !    

நோய்நொடியின்       நாவெனைதீண்     டிடுகிறதே                 என்செய்வேன்
தாயுனையே               நாடிட்டேன்            தாங்கியெனை         யணைத்திடுவாய்
சேயெனைநீ               தள்ளிட்டால்          கதியெங்கே               சொல்தாயே?
நாயேனின்                 பிழைதன்னை        பொருத்தள்வாய்     பார்வதியே !

பரமனென                 தப்பனினி                 டமிருக்கும்                ஈஸ்வரிநீ
வரமதனை               பொழிவாயே           பாகீஸ்வரி                யுமையாளே
சிரம்தாழ்ந்து            பணிந்திட்டோம்    பரமேஸ்வரி           ஜெகன்மாதா
அரன்மனைவி       அம்பிகையே            அருள்தருவாய்      எனதம்மா

திக்கெட்டும்          உனதருளில்                 திகட்டாது              திளைத்திட்டோம் 
சக்திச்சர                வணன் தாயே               எனைக்காக்க       வந்தருள்வாய்
பக்தியுடன்           பேர்சொன்னோம்        உன்கோவில்        வாசலிலே
முக்தியையே      தந்தெமைநீ                   காத்திடுவாய்       மகமாயீ 

வேல்தந்த              ழகனுக்கோர்                ஜெயந்தந்த          ஜெகன்மாதா
கோலாட்ட            மீனாக்ஷி                        நானுமுன்             பாலகனே
நூல்தந்து                தமிழதனை                  யெனக்குள்ளே    அளிப்பாயே 
தோல்போர்த்த    பரமனின்பத்                 தினிதாயே            எமைகாப்பாய் !     

Wednesday, 2 October 2013

மீண்டும் இரயில் பயணங்களில்....

பல வருடங்களுக்கு முன்பு நடந்த  சம்பவம். கல்லூரியை முடித்த பின் பம்பாயில் முதன்  முதலில் வேலை கிடைத்தது. ஒரு நான்கு நாட்கள் வரிசையாக விமுறை கிடைத்தால் ஊருக்கு சென்று விடுவேன். 

பம்பாயில் இருந்து மெட்ராஸுக்கு இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மெய்லில் வந்தால் இரண்டு இரவுகள் பயணம் செய்ய  வேண்டும்.   களைப்பான பயணம், ஆனால் சரியான நேரத்துக்கு மெட்ராஸுக்கு வந்து சேர்ந்து விடும் என்பதால் பலர் இந்த இரயிலில் செல்வதையே  விரும்பினர். 
 
இது போன்ற நீண்ட பயணங்களில் சில எதிர்பாராதவிதமாக நண்பர்களாகி விடுவது உண்டு. இன்னும் சிலருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் அனுபவங்களும் நடந்து விடுகின்றன. எனக்கும் அது போன்ற ஒரு அனுபவம் தான் ஏற்பட்டது.நீண்ட பயணம் என்பதால் சிலர் சக பயணிகளுடன் அரட்டை அடித்து கொண்டும், சிலர் சீட்டு விளையாடி கொண்டும் நேரத்தை போக்கி கொண்டிருந்தனர். 

குல்பர்கா அருகே வண்டி வந்தபோது ஒரே குப்பையும் சத்தையுமாக இருந்தது. அப்போது ஒரு சிறுவன்-பத்து வயது கூட நிறைவடைந்திருக்காது-வண்டியில் ஏறினான். உடலில் சட்டை இல்லை. கிழிந்த அரை டிராயர் மட்டும் இருந்தது. நாங்கள் பயணம் செய்த கம்பார்ட்மெண்ட்டின் ஒரு மூலையில் இருந்து இரு கைகளால் குப்பைகளை அள்ளி ஒரு பெரிய செய்தி தாளில் போட்டுக்கொண்டே, ஒவ்வொறு இருக்கையின் அடியிலும் நகர்ந்து கொண்டே வந்தான். இருக்கையின் அடியில் இருந்த குப்பைகளை அள்ளிய பிறகு சிலர் சில்லரை காசுகளை போட்டார்கள். சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரி முகத்தை திருப்பி கொண்டார்கள். ஆனால் சிறுவனோ எதற்கும் கவலைப்படாமல் கையில் கிடைத்த காசுகளை தனது அரை டிராயருக்குள் இருந்த சுருக்கு பையில் போட்டுக்கொண்டே அடுத்த இருக்கைக்கு சென்றான்.  அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. இத்தனை வறுமையிலும் அவன் பிச்சை எடுக்காமல் உழைத்து அதற்கான கூலியை கேட்கிறானே, அவனது தன்மானத்தை என்னவென்று சொல்வது?

கடவுளின் செயல்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. பால் மணம் மாறாத சிறுவர்களை படைத்து விட்டு அவர்களை வறுமையிலும் பசியிலும் ஏன் உழல விடுகிறான்? கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் பெருச்சாளிகள் எல்லாம் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது போன்றவர்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். என்னிடம் இருந்த பணத்தில் சிறிது அவனுக்கு கொடுத்தேன். ஆனால் அது அந்த வேளை உணவோடு சரியாகிவிடுமே. அவனது வாழ்க்கையே இப்படி இரயிலில் குப்பை கூட்டுவதோடு முடிந்து விடுமோ? இப்படி எல்லாம் எனது மனதில் எண்ண ஓட்டங்கள் நெடுநேரம் அலை பாய்ந்து கொண்டே இருந்தன. சில மணி நேரங்களுக்கு பிறகு இரயில் ஆதோனி என்ற ஊரில் நின்றது. சிறுவன் இறங்கி சென்று விட்டான்.

அலுவலகம் விடும் நேரம் என்று நினைக்கிறேன். திபுதிபுவென்று சிலர் எங்களது கம்பார்ட்மெண்ட்டில் ஏறினார்கள். அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கி விடுகிறேன் என்று ஒருவர் எனக்கு அருகில் உட்கார்ந்து கொண்டார். இது போன்று முன்பதிவு செய்யப்பட்ட கம்பார்ட்மெண்ட்களில் இப்படி நடப்பது சகஜம். டிக்கெட் பரிசோதகர் இவர்களை கண்டுகொள்வதே இல்லை. ஏனென்றால் இவர்கள் தினமும் இதே வண்டியில் வீட்டுக்கு திரும்பி செல்வார்கள். அதே போல காலையில் வேறு ஒரு வண்டியில் இப்படி ஏறி உட்கார்ந்து கொண்டு வருவார்கள். 

சரி, பரவாயில்லை ஒரு மணி நேரத்தில் இறங்கி விடுவார் என்று நானும் எனது இருக்கைக்கு அருகில் அவருக்கு உட்கார இடம் கொடுத்தேன். அது தான் நான் செய்த தவறாகி விட்டது. 

வண்டி நகர ஆரம்பித்த உடனேயே அவர் தனது பையிலிருந்து ஒரு பொட்டலத்தை திறந்தார். அதை பிரித்து அதில் இருந்த வறுத்த வேர்க்கடலைகளை ஒவ்வொன்றாக கொறிக்க ஆரம்பித்தார். அது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. வாயில் கடலைகளை போட்டுக்கொண்டே தோலிகளை இருக்கைக்கு அடியில் போட ஆரம்பித்தார். என் கூட வந்த சக பயணிகள் அனைவரும் அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லோர் மனதிலும் சற்று முன்பு இருக்கையை தன் கைகளால் சுத்தம் செய்த சிறுவனின் முகம் வந்து போயிருப்பதை நான் கண்டேன். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லோரும் முகம் சுளித்தார்களே தவிர‌ யாருமே அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு கையளவு நிறைய வேர்க்கடலை தோலியை இருக்கைக்கு அடியில் போட்டார். எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கோபத்தை அடக்கி கொண்டே அவரிடம், "சார், தயவு செய்து இங்கே அசுத்தம் செய்யாதீர்கள். தோலியை உங்களிடம் உள்ள பொட்டலத்திலேயே கொட்டிவிட்டு சாப்பிட்டு முடித்த பின் ஜன்னல் வெளியே எறிந்து விடுங்கள்" என்றேன். அதற்கு அவர் என்னை ஒரு ஈன பிறவி மாதிரி பார்த்து தெலுங்கில் ஏளனமாக "அவன்னி நீக்கு எந்துகுரா வெதவா" என்றார். அதாவது, " உன் வேலையை பார்த்து கொண்டு போ" என்று பொருள் படும் விதத்தில் கேவலமாக பேசினார். 

எனக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி விட்டது. அவரை உடனடியாக எனது இருக்கையை விட்டு எழுந்திருக்க சொன்னேன். அவரோ எழுந்திருக்காமல் தெலுங்கில் என்னை திட்டி கொண்டே இருந்தார். மற்ற பயணிகள் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டே இருந்தனர். இந்த ஆளை இப்படியே விட கூடாது என்று எனது உள் மனது கூறியது. டிக்கெட் பரிசோதகரை காணோம். ஒரு வேகத்தில் இருக்கைக்கு அடியில் இருந்த தோலிகளை எனது கைகளால் அள்ளினேன். அப்படியே அந்த நபரின் தலையில் கொட்டி ஆங்கிலத்தில் "வெளியே போடா நாயே" என்று திட்டினேன். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த கணத்தில் நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது நினைத்தாலும் தெரியவில்லை. ஏதோ மனதுக்கு தோன்றி விட்டது, அதனால் செய்து விட்டேன். இள இரத்தம் என்பார்களே, அது இது தானோ என்னவோ.

ஒரு நிமிடத்தில் அந்த ஆள் நிலை குலைந்து போய் விட்டான். என்னை அடிக்க வருவதற்கு கையை ஓங்கினான். அதற்குள் மற்ற இருக்கைகளில் இருந்த, காலையில் இருந்து என்னுடன் அரட்டை அடித்து நண்பர்களாகிவிட்ட சக பிரயாணிகள் இவனது காலரை பிடித்து கத்த ஆரம்பித்தனர். 

அவ்வளவுதான். தனக்கு எதிராக கூட்டம் சேர்வதை உணர்ந்து கொண்டவன் மரியாதையாக எழுந்து அவமானம் தாங்க முடியாமல் மற்றொருறு பெட்டிக்கு vestibule வழியாக சென்று விட்டான். 

இவன் சென்ற பிறகு சக பிரயாணிகள் அனைவரும் நான் ஏதோ பெரிய விஷயத்தை சாதித்து விட்ட மாதிரி சிலாகித்து ரொம்ப நேரம் பேசிக்கொன்டிருந்தார்கள். நான் அவர்களிடம் எனக்கு உதவியாக இருந்தமைக்கு நன்றி கூறினேன்.

நமது நாட்டில் படிக்காத பாமரர்களை விட இது போன்ற படித்து அகங்காரத்தோடு மூடர்களாக இருப்பவர்களால் தான் முன்னேறாமல் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கு அப்படி செய்கிறோம் என்ற ஒரு சுரணையோ வெட்கமோ இல்லாமல் இருக்கிறார்களே, அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. இப்படி இருப்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு என்ன முன் உதாரணம் வைக்க போகிறார்கள்? அப்பன் திருடனாக இருந்தால் அதை பார்த்து பையனுக்கும் திருட தோன்றும் அல்லவா?

இதை எல்லாம் முன் கூட்டியே அறிந்து தான் பாரதி அன்றே பாடி சென்று விட்டான் என்று நினைக்கிறேன்.

பாதகம் செய்பவரை கண்டால் நீ
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா! அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!