Tuesday, 27 May 2008

காந்திஜியின் கடிகாரம்

1940களில் நடந்த சம்பவம் இது. காந்திஜியை டெல்லியில் தனது மாளிகையில் நேரில் சந்திக்க மவுண்ட்பேட்டன் பிரபு விரும்பினார். முதன்முறையாக நடக்கப்போகும் இந்த சந்திப்பை மிக ஆவலோடு எதிர்ப்பார்த்தார் மவுண்ட்பேட்டன்.

காந்திஜியை தான் நேரில் சந்திக்க விரும்புவதாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தை படித்த காந்திஜி, தான் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பதில் எழுதினார். ஆனால், அதை உடனடியாக அனுப்ப வேண்டாம் என்றும், ஓரிரு நாட்களுக்கு பிறகு சாதாரண தபாலில் அனுப்பும்படியும் தனது உதவியாளரிடம் கூறினார். "நான் ஆங்கிலேயர்களின் அழைப்பிற்கு ஏங்குவதாக இந்த சின்ன பையன் நினைத்துவிட கூடாது" என்று சிரித்துக்கொண்டே கூறினார். அதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் ஆங்கிலேய பிரதமர் சர்ச்சில், காந்திஜியை "அரை நிர்வாண பிச்சைக்காரர்"(half naked fakir ) என்று தரக்குறைவாக வர்ணித்திருந்தார். காந்திஜியுடன் எந்த ஆங்கிலேய அதிகாரியும் எவ்விதமான தொடர்பும் வைத்திருக்க கூடாது என்று தடை வேறு விதித்திருந்தார். ஆனால், காலத்தின் கட்டாயத்தை யாரால் தான் வெல்ல முடியும்? இது எல்லாம் ம‌ன‌தில் இருந்தாலும், எவ்வித‌ க‌ச‌ப்புண‌ர்ச்சியையும் காந்திஜி வெளியே காண்பிக்க‌வில்லை.

க‌டித‌ம் கிடைத்த‌ ம‌வுண்ட்பேட்ட‌ன் மிக‌வும் குஷியாகிவிட்டார். த‌ட‌புட‌லான‌ ஒரு வ‌ர‌வேற்பை அவ‌ருக்கு த‌ர‌வேண்டும் என்று எல்லா ஏற்பாடுக‌ளையும் செய்தார். காந்திஜிக்காக டெல்லிக்கு த‌னியாக‌ ஒரு விமான‌த்தையும் (chartered flight) ஏற்பாடு செய்தார். ஆனால், எளிமையே உருவான‌ காந்திஜி, அதை நிராக‌ரித்து விட்டு வ‌ழ‌க்க‌ம் போல‌ இர‌யிலில் மூன்றாம் வ‌குப்பு பெட்டியிலேயே ப‌ய‌ண‌ம் செய்தார்.

டெல்லி வந்து சேர்ந்த காந்திஜியை பார்த்த மவுண்ட்பேட்டன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பை தன்னால் மறக்க முடியாது என்று வர்ணித்தார். காந்திஜியை மிகவும் ஆக்ரோஷமான மனிதர் என்று நினைத்த மவுண்ட்பேட்டனுக்கும் அவரது மனைவிக்கும் அவரின் எளிமையும் அன்பும் மிக வித்யாசமாகவும் வியப்பாகவும் இருந்தது.

ஆனால் இந்த முதல் சந்திப்பின்போது காந்தியின் முகத்தில் ஒருவித சோகம் இருப்பதை உணர்ந்தார் மவுண்ட்பேட்டன். தனது விருந்தோம்பலில் ஏதாவது குறை இருந்ததோ என்று எண்ணி அதை அவரிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.

தனது மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார் காந்திஜி. "எனக்கு என்று நான் எந்த பொருளையும் சேர்த்து வைத்துக்கொள்ளவில்லை. என்னுடைய சொத்து என்று நான் கூறிக்கொள்ள கூடியது நான் உடுத்திக்கொண்டிருக்கும் துணி, கீதை புத்தகம், ராட்டை மற்றும் இடுப்பில் தொங்கும் என்னுடைய கடிகாரம் தான். காலத்தின் மதிப்பை உணர்த்துவதற்காகவே அந்த கடிகாரத்தை எப்போதும் இடுப்பிலேயே நான் சொருகிக்கொண்டிருப்பேன். ஆனால் இன்று இரயிலில் நான் வரும்போது யாரோ அந்த கடிகாரத்தை திருடிவிட்டார்கள்" என்று மிக வருத்தத்துடன் கூறினார்.

"கடிகாரம் திருடு போனது கூட எனக்கு பெரிதாக படவில்லை. ஆனால் இந்த நாட்டு மக்களின் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போய்விடுமோ என்று தான் பயமாக இருக்கிறது" என்று காந்திஜி கூறும்போது அவரது தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்து விட்டன.

இது நடந்து முடிந்து சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் சபர்மதி ஆசிரமத்துக்கு ஒரு மனிதன் வந்தான். காந்திஜியை சந்திக்க விரும்புவதாக அவரின் உதவியாளரிடம் கூறினான். "அவருடைய கடிகாரத்தை திருடியவன் நான் தான். வறுமையால் நான் அறியாமல் செய்து விட்ட இந்த பிழையை காந்திஜி மன்னிப்பாரா?" என்று கேட்டான்.

விஷயத்தை கேள்விப்பட்ட காந்திஜி உடனேயே தனது அறையிலிருந்து வெளியே வந்து அந்த மனிதனை நெஞ்சார கட்டி தழுவிக்கொண்டார். இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது. காந்திஜியின் நம்பிக்கை வீண் போகவில்லை. வாய்மையே வெல்லும்!
(ஆதாரம்: Freedom at Midnight by Lapierre and Collins )

Wednesday, 21 May 2008

மீண்டும் இரயில் பயணங்களில்-II

1998ம் ஆண்டு. செளதி அரேபியாவில் எனக்கு வேலை கிடைத்ததால் பம்பாயில் எனது வேலையை ராஜினாமா செய்து விட்டேன். வீட்டு சாமான்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு மீதம் உள்ள சில‌ சாமான்களை இரயிலிலேயே சென்னைக்கு சரக்கு பெட்டியில் கொண்டு செல்ல முடிவு செய்தேன். இது எவ்வளவு முட்டாள்தனமான செயல் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.


என்னுடைய போதாத காலம் முன்பதிவு கிடைக்கவில்லை. யாரோ கூறினார்கள் என்று ஒரு 'ஏஜெண்ட்டை' பிடித்தேன். ஒரு பயணச்சீட்டுக்கு 150 ரூபாய் மேலே கொடுத்தால் உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைத்துவிடும் என்று கூறினான். எனக்கோ கட்டாயம் அந்த தேதியில் செல்ல வேண்டிய அவசரம். 'சரி' என்று ஒப்புக்கொண்டு பணத்தை அவனிடம் அழுதேன். அவனோ அடுத்த நாளே 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் உள்ள பயணச்சீட்டை என்னிடம் கொடுத்து விட்டு 'நீங்கள் புறப்படும் நாளன்று இரயில் நிலையத்தில் கண்டிப்பாக இது உறுதி செய்யப்பட்டு விடும்' என்று கூறினான். நான் அதை வேறு நம்பி தொலைத்தேன்.
பம்பாயில் நுழையும் எல்லா சாமான்களுக்கும் 'octroi' என்ற கலால் வரி கட்ட வேண்டியிருந்தது. நானோ புதிய பம்பாயில் இருந்தேன். இரயில் நிலையமோ பம்பாயில் உள்ள வீ.டீ.யில் இருந்தது. சாமான்களை எல்லாம் ஒரு லாரியில் போட்டு விட்டு நான் மட்டும் லாரியின் முன்னே எனது 'ஸ்கூட்டரை' ஓட்டிக்கொண்டு சென்றேன் (அதையும் லாரியில் போட்டால் கலால் அதிகமாக கட்ட வேண்டி வருமே என்றுதான்!). பம்பாயில் நுழைந்த உடனேயே வழக்கம் போல 100 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டர் பின்னால் வந்த லாரியை 'ஆக்ட்ராய்' காரன் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டான். பிறகு, ஸ்கூட்டரை லாரியில் ஏற்றி நான் லாரியின் முன் இருக்கையில் வீ.டீ. வரை வந்து சேர்ந்தேன். அதற்கு பிறகுதான் எனது போதாத காலமே ஆரம்பித்தது!


இரயில்வே சட்டப்படி ஸ்கூட்டரை சரக்கு பெட்டியில் ஏற்ற வேண்டுமென்றால் அதிலுள்ள பெட்ரோலை முதலில் முழுவதுமாக வெளியேற்றி விட வேண்டுமாம். அதற்கு பிறகுதான் அதை வைக்கோல் வைத்து pack செய்து சரக்கு பெட்டியினுள் ஏற்றுவார்களாம். அடக்கடவுளே! இதை ஏன் யாரும் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை. இஞ்ஜின் உள்ளே உள்ள பெட்ரோலை எப்படி நான் வெளியே எடுப்பேன்? இதை சொன்ன இரயில்வே ஊழியன் அதிலிருந்து மீள்வதற்கான வழியையும் கூறிவிட்டான். வேறு என்ன, எல்லாம் பணம் தான்! நான் உள்ளூர அழுதுகொண்டே அவன் கேட்ட பணத்தை கொடுத்து விட்டேன். ஒரு வழியாக‌ சரக்கு பெட்டியில் ஸ்கூட்டரையும் மற்ற வீட்டு சாமான்களையும் ஏற்றி விட்டு நான் எனது இருக்கைக்கு சென்றேன்.


எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. எனது இருக்கை இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. 'ஏஜெண்ட்' என்னை நன்றாக ஏமாற்றி விட்டிருந்தான். என்ன செய்வது, ஊருக்கு போய்தானே ஆக வேண்டும். இரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருந்தன. கூட்டம் பின்னி எடுத்து விட்டது. சரி, வந்தது வரட்டும் என்று நான் இரயிலில் ஏறிக்கொண்டேன்.


இரயில் கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு பிறகு பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார்.அவரை சுற்றி ஒரு பட்டாளமே மொய்த்து கொண்டிருந்தது. நானும் முண்டி அடித்துக்கொண்டு விடாப்பிடியாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கெஞ்சு கெஞ்சென்று அவரை விடாமல் துளைத்து எடுத்து விட்டேன். கடைசியில், பயணச்சீட்டு விலையை விட இரண்டு மடங்கு கொடுத்தால் உட்கார மட்டும் இடம் கொடுக்கும்படி செய்து தருவதாக கூறினார். இது RAC இருக்கை என்றும் மிகவும் கஷ்டப்பட்டு என் மேல் பரிதாபப்பட்டு கொடுப்பதாகவும் வேறு கூறினார். என்ன செய்வது? வேறு வழியில்லாமல் பணத்தை அவரிடம் கொடுத்தேன். அவர் ஒரு இருக்கை எண்ணை கொடுத்து அங்கே சென்று உட்காரும்படி கூறினார். அந்த எண்ணுக்கு சென்றால், என்னை போலவே இன்னும் மூன்று பேர் அதிலே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். படுபாவி, அனைவரிடமும் அவன் இது போல வசூல் செய்திருக்கிறான்! Sideல் இருக்கும் இரண்டு இருக்கைகளை மடக்கி நாங்கள் 4 பேரும் உட்கார்ந்து கொண்டே அன்றைய பொழுது முழுவதையும் கழித்தோம்.


வழியில் அரவாணி தொல்லை வேறு இருந்தது. ஒருத்தி என் முன்னே வந்து 10 ரூபாய் கொடுக்காவிட்டால் அந்த இடத்தில் இருந்து நகர மாட்டேன் என்று கூறினாள். நானோ, ஏற்கனவே நொந்து போயிருந்தேன்.


கோபத்தில்,"உனக்கு ஒரு பைசா கூட கிடையாது, முதலில் இங்கிருந்து போ" என்று கத்தி விட்டேன். அவ்வளவுதான், இவள் எங்கிருந்தோ ஒரு அரவாணி கூட்டத்தையே கொண்டு வந்து விட்டாள். எனக்கு பயமாகி விட்டது. ஒவ்வொறுத்தியும் WWF வீராங்கனை போல இருந்தாள். ஏதாவது ஏடாகூடமாக ஆவதற்கு முன் அவளிடம் ஒரு பத்து ரூபாய் தாளை கொடுத்தேன். அவளோ, வெற்றிக்களிப்புடன் 'இதை முதலிலேயே கொடுத்திருக்கலாமில்ல' என்று என் மோவாயில் ஒரு இடி இடித்து விட்டு சென்றாள். அப்பாடா, பிழைத்தேன்!


இரவு வந்தது. பகல் முழுவதும் நான்கு பேரும் உட்கார்ந்து கொண்டே பயணம் செய்ததால் உடம்பெல்லாம் வலி. இரவு 11.30 மணிக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஒரு செய்தி தாளை கீழே விரித்து அதற்கு மேலேயே படுத்துக்கொண்டேன். படுத்த உடனே தூக்கம் தான். கண்களை மூடி உறங்கி விட்டால் ஏழை, பணக்காரன், பொறியாளன், பிச்சைக்காரன் எல்லோரும் ஒன்று தானோ! கடவுள் கொடுத்திருக்கும் ஒரு மிக பெரிய வரம் இந்த தூக்கம். இதில் நமது போலி கெளரவங்கள் அனைத்தும் அடி பட்டு போய் விடுகின்றன அல்லவா?


மறு நாள் பகல் முழுவதும் பயணம் செய்து பல மணி நேரம் தாமதத்துக்கு பிறவு ஒரு வழியாக இரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து சேர்ந்த போது இரவு மணி 1.30. உடம்பு முழுவதும் ஒரே வலி. சரி, ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தோம். இப்போது சரக்கு பெட்டியிலிருந்து ஸ்கூட்டரை வெளியே எடுத்து விட்டால் போதும் என்று நினைத்தேன்.


சக‌ பயணிகள் அனைவரும் சென்று விட்டனர். நான் மட்டும் இரயிலின் கடைசியில் உள்ள சரக்கு பெட்டிக்கு நடந்து சென்றேன். அங்கே பார்த்தால் உள்ளே இருந்த சாமான்களை இரயில்வே ஊழியர்கள் சரமாரியாக பிளாட்பாரத்தில் விசிறி எரிந்து கொண்டிருந்தார்கள் உடையக்கூடிய சாமான்கள் (fragile) எத்தனையோ! ஒருவன் தரதரவென்று என்னுடைய ஸ்கூட்டரை standடுடன் இழுத்துக்கொண்டிருக்கும் போதே ந்ல்ல வேளையாக நான் அங்கு சென்று விட்டேன். என்னை பார்த்தவுடன் திடீரென்று அங்கு இருந்த ஒரு 5 இரயில்வே ஊழியர்களும் மிக மிக பவ்யமாக என்னுடைய ஸ்கூட்டரை மிக மெதுவாக பூ போல எடுத்து பிளாட்பாரத்தில் வைத்தனர். பிறகு ஒருவன், "சார், நீங்கள் முதலில் counterக்கு சென்று ரசீதை வாங்கிக்கொண்டு வாருங்கள்" என்றான். கவுண்ட்டரோ இரயில் நிலையத்தின் வாசலில் இருந்தது. மீண்டும் இரயிலின் கடைசியில் இருந்து பிளாட்பாரம் முழுதும் நடந்து கவுண்ட்டரை தேடிக்கொண்டு வந்தடைந்தால் அங்கே ஆள் இல்லை. ஒரு 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு நான் மீண்டும் லோ லோ வென்று பிளாட்பாரம் முழுவதும் நடந்து சரக்கு பெட்டியை வந்தடைந்தேன்.


என்ன ஆச்சரியம், அந்த 5 ஊழியர்களும் அதே இடத்தில் இன்னும் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். என்னிடம் முதலில் பேசியவன், "சார், நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க. பணத்தை பாய்ச்சிக்கிட்டே போங்க, எல்லாம் சரியா ஆய்டும்" என்றான். 5 பேருக்கு 700 ரூபாய், கவுண்ட்டரில் ரசீது எழுதுபவனுக்கு 200, trolley கொண்டு வருபவனுக்கு 100 என்று மொத்தம் ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கொண்டான். அதற்கு பிறகுதான் வேலையே ஆரம்பித்தது. ஒரு வழியாக நொந்து நூடுல்ஸாகி வீடு வந்து சேர அதிகாலை 4 மணி ஆகிவிட்டது.


'மணல் கயிறு' படத்தில் விசு, 'இனிமேல் வாழைப்படம் சாப்பிடுவியா, சாப்பிடுவியா' என்று தூணில் தலையை முட்டிக்கொள்வாரே, அது போல நானும் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது!


இதில் வேடிக்கை பாருங்கள். பணம் வாங்கிய யாருக்குமே தாம் ஒரு தவறான காரியத்தை செய்கிறோம் என்ற ஒரு உணர்வே இல்லாமல் இருந்தார்கள். மனசாட்சி என்பதெல்லாம் வெறும் பொய்யா? நல்ல வேளை என்னிடம் பணம் இருந்தது. பிழைத்தேன். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? பணத்தை இழந்தேன், ஆனால், இப்படி ஒரு வித்யாசமான அனுபவத்தை பெற்றேன்.

Saturday, 10 May 2008

தொ(ல்)லைக்காட்சியின் கதை!

சென்னையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1975ல் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது ஒரு விசித்திரமான பொருளாக இருந்தது. ஏனெனில் அந்த நாட்களில் அனைவரிடமும் வானொலி தான் இருந்தது.
திடீரென்று எங்கள் தெருவில் ஒருவர் ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியை வாங்கினார். அவ்வளவுதான்! எங்கள் பகுதியில் இருந்த எல்லா சிறுவர்களுக்கும் கொண்டாட்டம் தான். தினமும் அவர்கள் வீட்டுக்கு மாலை 7 மணிக்கு சென்று தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து விடுவோம். பெரியவர்கள் மட்டும் சும்மாவா? ஏதோ சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு சரியாக 7 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து விடுவார்கள்! அவர்களுக்கும் ஒரு ஆவல் தான், தொலைக்காட்சியில் அப்படி என்ன தான் காண்பிக்கிறார்கள் என்று!


அவர்கள் வீட்டு பையன் மிகவும் மோசமாக கிரிக்கெட் ஆடுவான். ஆனால் தொலைக்காட்சி பெட்டியை அவர்கள் வாங்கிய உடனே எங்கள் மத்தியில் அவனுடைய மவுசு பெருகி விட்டது. அவன் LBW அவுட் ஆகி விட்டால் கூட அவுட் இல்லை என்று அம்பயர் கூறி விடுவான். அப்போது தானே அவனை ஓசியில் டீ.வீ. பார்க்க விடுவான்! அதே போல அந்த பையனை மட்டும் அதிகமாக bat செய்து காஜி அடிக்க விடுவார்கள். அவன் bat செய்யும் போது வேண்டுமென்றே பந்தை பிடிக்காமல் விட்டுவிடுவார்கள்.
அப்போதெல்லாம் சனி, ஞாயிறன்று திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். வெள்ளி தோறும் "ஒளியும் ஒலியும்" என்ற நிகழ்ச்சி இருக்கும். இந்த இரு திரைப்படங்களையும் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியையும் பார்ப்பதற்கென்றே அவர்கள் வீட்டில் கூட்டம் கூடி விடும். அடுத்த வாரம் என்ன திரைப்படம் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருக்கும்.

அந்த வீட்டுக்காரருக்கோ ஒரே கடுப்பு. 'ஏன் தான் இந்த தொலைக்காட்சியை வாங்கினோம்' என்று தோன்றி இருக்கும் போல. ,ஏனென்றால் எப்போது பார்த்தாலும் வீடே ஒரு திரைப்பட அரங்கு மாதிரி 'ஜே ஜே' என்று இருக்கும். பார்த்தார் மனிதர். திடீரென்று டீ.வீ. இருக்கும் அறையில் ஒரு உண்டியலை வைத்தார். சிறுவர்களுக்கெல்லாம் 25 பைசா, பெரியவர்களுக்கு 50 பைசா என்று வெளியே ஒரு போர்டை தொங்க விட்டார் (70க‌ளில் 50 பைசா என்ப‌து ஒரு பெரிய‌ தொகைதான், வீட்டு வாட‌கையே 300 ரூபாய்தான் அப்போது!)

இதை அறிந்த‌ பெரிய‌வ‌ர்க‌ள் கூட்ட‌ம் திடீரென்று குறைந்த‌து! ஆனால் ப‌ச‌ங்க‌ள் யாருமே இதை க‌ண்டுகொள்ள‌வில்லை. வ‌ழ‌க்க‌ம் போல‌ அவ‌ர்க‌ள் வீட்டுக்கு ப‌டை எடுப்போம். வீட்டுக்கார‌ரும் நாங்க‌ள் எல்லோரும் வந்து உட்கார்ந்த உடனேயே தொண்டையை கனைத்துக்கொண்டு உண்டிய‌லை ஒரு முறை குலுக்குவார். நாங்க‌ள் தான் ய‌ம‌காத‌க‌ ப‌ய‌ல்க‌ள் ஆயிற்றே! அதை ஓர‌க்க‌ண்ணால் கூட‌ பார்க்காம‌ல், த‌ன் முய‌ற்சியில் ச‌ற்றும் ம‌ன‌ம் த‌ள‌ராத‌ விக்ர‌மாதித்ய‌ன் போல தொலைக்காட்சி பெட்டியையே பார்த்து கொண்டிருப்போம்.

வாரா வார‌ம் அவ‌ர்க‌ள் வீட்டுக்கு இந்த ப‌டை எடுப்பு தொடர்ந்தது. சில‌ வார‌ங்க‌ளுக்கு பிற‌கு வீட்டுக்கார‌ருக்கே அலுத்து போய் விட்ட‌து. 'எக்கேடாவ‌து கெட்டு போங்கள்' என்று நாங்க‌ள் உள்ளே நுழைந்த‌வுட‌ன் அவ‌ர் எங்காவ‌து சென்று விடுவார்.

அத‌ற்கு பிற‌கு ப‌ரீட்சை நேர‌ம் வ‌ந்த‌தால் எல்லோர் வீட்டிலும் வெளியே செல்வ‌த‌ற்கு த‌டை விதித்திருந்த‌ன‌ர்.
இதற்குள் ஒரு 3 மாதங்கள் ஓடி விட்டது. எல்லா பயல்களும் தத்தம் பெற்றோர்களை தொலைக்காட்சி வாங்குமாறு நச்சரிக்க தொடங்கினர். நாளடைவில் எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டியை வாங்க துவங்கினார்கள். மெல்ல மெல்ல வானொலியை கேட்பதையே அனைவரும் நிறுத்தி விட்டிருந்தனர்.

பல
வருடங்களுக்கு பிறகு வண்ண தொலைக்காட்சி பெட்டி வந்தது. அதற்கு பிறகு பல channelகள், பல குப்பை நிகழ்ச்சிகள், சில தரமான நிகழ்ச்சிகள் என்று காலம் உருண்டோடி விட்டது. இப்போது வானொலியில் மீண்டும் FM நிகழ்ச்சிகள் வர தொடங்கிய பின் நல்ல பாடல்களை கேட்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். ஆனால், என்ன இருந்தாலும், சிறுவர்களாக இருந்த போது வானொலி முன்பு அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு "பாப்பா மலர், ஒலிச்சித்திரம்" ஆகியவற்றை கேட்ட இன்பம் இனி மீண்டும் வருமா என்றுதான் தெரியவில்லை.

Sunday, 4 May 2008

துரத்திய பூனை

இன்று காலை எனக்கு ஒரு வித்யாசமான அனுபவம் ஏற்பட்டது. வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக எனது காரை கிளப்பினேன். கார் நகர்ந்து சிறிது தூரம் தான் சென்றிருக்கும். ஒரு பூனை எனது வண்டியை துரத்த ஆரம்பித்தது.
பொதுவாக நாய்கள் வண்டிகளை துரத்துவது உண்டு. இதுவோ பூனை. அதுவும் வண்டியின் பின்னால் துரத்தவில்லை. எனது ஜன்னலின் பக்கத்திலேயே காரின் வேகத்துக்கு சமமாக சாலையில் வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. ஒரு அரை கிலோமீட்டர் வண்டியை நான் ஓட்டியிருப்பேன். ஏதோ மனதுக்கு சரியாக படவில்லை.
'இது என்ன ஆச்சரியமாக இருக்கிறதே. இப்படி இதுவரை ஆனதே இல்லையே' என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தேன். 'சரி, வந்தது வரட்டும்' என்று காரை சாலை ஓரமாக நிறுதினேன். பூனையும் சட்டென்று அதே இடத்தில் நின்று விட்டது. நான் காரை விட்டு கீழே இறங்கினேன்.
"மியாவ் மியாவ்" என்று என்னை பார்த்து பூனை கத்த ஆரம்பித்தது. ஏதோ சொல்ல வருகிறாற்போல இருந்தது. ஆனால் என்ன என்று தான் புரியவில்லை. காரில் இருந்து இறங்கிய நான் ஏதோ ஒரு உந்துதலில் இஞ்ஜின் 'போனட்டை' திறந்தேன். உள்ளே பார்த்தால் ஒரு அதிர்ச்சி.
ஒரு டென்னிஸ் ப்ந்து அளவுக்கு மிக சிறிய பூனைக்குட்டி ஒன்று "மியாவ் மியாவ்" என்று என்னை பார்த்து கத்தியது. அந்த சிறிய ப்ந்துக்குள் அழகான கண்கள், மீசை எல்லாம் இருந்தன. நேற்று இரவு தான் பிறந்திருக்கும் போல! அடக்கடவுளே! இதற்காக தான் தாய் பூனை என்னை துரத்திக்கொண்டு வந்ததா? சரி, எப்படி இந்த பூனைக்குட்டியை வெளியே எடுப்பது என்று எண்ணிக்கொண்டே காரிலிருந்து ஒரு டிஷ்யூ காகிதத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை பிடிக்க முயற்சி செய்தேன். பூனைக்குட்டியோ என்னை பார்த்து பயந்து கொண்டு வண்டியின் அடியில் சென்று ஒளிந்து கொண்டது. 'இது என்னடா வம்பாக போய் விட்டது' என்று நினைத்துக்கொண்டேன். இஞ்ஜின் வேறு சூடாக இருந்தது. பல நிமிடங்கள் போராடிய பிறகு பூனைக்குட்டி இஞ்ஜின் அடியில் இருந்து சாலையில் குதித்தது. அவ்வளவுதான். தாய் பூனை ஒரே தாவாக தாவி அதை தன் வாயால் கவ்விக்கொண்டு சிறிது தூரம் சென்று குட்டியை கீழே போட்டது. பிறகு அதை தனது நாக்கால் வாஞ்ஜையுடன் நக்கியது.
பார்க்கவே மிகவும் பரவசமாக இருந்தது. அந்த தாய் பூனையின் விடா முயற்சியும் குட்டியின் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் கண்டு வியந்தேன்.
அலுவலகம் போய் சேர்ந்த பிறகு வெகு நேரம் எனக்கு இந்த பூனைக்குட்டியின் நினைவே இருந்தது. ஏதோ பணத்துக்காக நாமும் தினமும் வேலைக்கு செல்கிறோம். அடிமை வாழ்வு வாழ்கிறோம். இயந்திரத்தனமான வாழ்க்கையில், கடவுள் நமக்கு கொடுத்த‌ இந்த சிறிய இன்பங்களை அனுபவிக்க மறந்து விடுகிறோம் இல்லையா? ஆறரிவு படைத்த மனிதனுக்கு ஐந்தறிவு படைத்த பிராணி ஏதோ கற்று கொடுத்த மாதிரி இருந்தது எனக்கு. இதை படிக்கும் உங்களுக்கு?

Thursday, 21 February 2008

வரலாற்று சம்பவங்கள் - 1

ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து தற்போது சுதந்திரமாக இருக்கும் நாடுகளை ஆங்கிலத்தில் (commonwealth countries)காமன்வெல்த் நாடுகள் என்று கூறுவார்கள். இந்த காமன்வெல்த் தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடுவார்கள் (கூடி என்ன பேசுவார்கள் என்பது வேறு விஷயம், ஏதோ ஒரு நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாகும் என்பது தான் உண்மை!). 1975ம் ஆண்டு ஜமைகா நாட்டில் இந்த கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சென்றிருந்தார். இந்திராவை 'இரும்பு பெண்' (Iron Lady) என்று அப்போதைய ஆங்கிலேய பத்திரிகைகள் பட்ட பெயர் வைத்திருந்தனர். இந்த பெயருக்கு ஏற்ப ஒரு சம்பவம் நடந்தது.

மாநாடு நடந்து முடிந்த அன்று இங்கிலாந்து ராணி எலிஸபெத்‍ எல்லா தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். ஆனால் முன்னாள் தலைவர்களெல்லாம் ஒரு காலத்தில் தனது நாட்டுக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்ற எண்ணம் எலிஸபெத் ராணிக்கு இருந்திருக்கும் போல. எல்லா தலைவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் இருந்த வாக்கியம் என்னவென்றால் "Her Majesty will be pleased to grant an audience to you" என்று இருந்தது. அதாவது மற்ற தலைவர்கள் ஏதோ எலிஸபெத்தை பார்க்க நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருப்பது போலவும் ராணியார் 'தரிசனம்' தருவதற்கு சம்மதிப்பது போலவும் அந்த கடிதத்தின் தொனி இருந்தது.

சிறிய வயது முதலே இந்திரா நேருவின் சத்யாகிரஹ போராட்டத்தை அருகிலேயே பார்த்தவர். அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா? பதிலுக்கு தனது ஹோட்டல் அறையில் இருந்த ஒரு லெட்டர் பேடை கிழித்து "The Prime Minister of India will be pleased to meet you" (இந்திய பிரதமர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவார்) என்று எழுதி அனுப்பினார். மற்ற தலைவர்கள் மத்தியில் இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தவறை உணர்ந்த எலிஸபெத், முதலில் எழுதிய கடிதத்தை வாபஸ் வாங்கி கொண்டு "Her Majesty will be pleased to meet you" என்று திருத்தி அனுப்பினார்.

அது மட்டுமல்ல, அதற்கு பிறகு நடந்த எல்லா காமன்வெல்த் மாநாடுகளிலும் எந்த நாட்டில் மாநாடு நடக்கிறதோ, அந்த நாட்டின் தலைவர்தான் மற்ற தலைவர்களூக்கு அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்தனர், எலிஸபெத் ராணி அல்ல‌. 'ஒரு காலத்தில் நாங்கள் உங்களுக்கு அடிமையாக இருந்தோம், இப்போது இல்லை' என்று சொல்லாமல் சொல்லி ஆங்கிலேயர்களின் ஆணவத்தை அடக்கிய‌ இந்த கடிதம் உண்மையில் சரித்திரம் படைத்து விட்டது என்றே கூறலாம் அல்லவா?

Tuesday, 19 February 2008

உங்கள் சாய்ஸ்

வர வர தொலைக்காட்சியில் வரும் இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சி ஒரு பெரிய கடி என்றே தோன்றுகிறது. கிட்டத்தட்ட கடந்த 15 வருடங்களாக பிரபலமான (?) தொலைக்காட்சி ஒன்றில் இதை நடத்தி வரும் கனவுக்கன்னி (!) கொக்கோ கோலா பாமா என்கிற பாட்டியை பற்றி தான் இந்த இழை. முதலிலேயே இதை 'கற்பனை' என்று கூறி விட்டால் பிறகு வம்பில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வசதியாக இருக்கும் அல்லவா, அதனால் இதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்! 15 வருடங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் உங்கள் கோக் பாமா வின் உரையாடல் எப்படி இருக்கும் தெரியுமா?

ட்ரிங் ட்ரிங்........

ஹலோ, கொக்க கோலா உங்கள் சாய்ஸ்..

"ஹலோ, நான் காத்தவராயன் பட்டி கந்தசாமி பேசறேங்க"

"வணக்கம் கந்தசாமி"

"ஹலோ"

"ம் சொல்லுங்க வணக்கம்"

"ஹலோ"

"வணக்கம் கந்தசாமி, சொல்லுங்க"

"ஹலோ, நான் காத்தவராயன் பட்டி கந்தசாமி பேசறேங்க"

பாமா ஒரு போலி புன்னகையுடன்
"சொல்லுங்க கந்தசாமி, எப்படி இருக்கீங்க?"

"வணக்கங்க, நான் காதவராயன் பட்டி..."

பாமா இடை மறித்து
"கந்தசாமி, உங்க டீ.வீ. வால்யூமை கொஞ்சம் கம்மியாக்குங்க"

"ஹலோ, கொக்க கோலா பாமா பேசறீங்களா?"

"ஆமாங்க, நான் பாமா தான் பேசறேன்"

"நீங்க நல்ல இருக்கீங்களா?"

"நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா?"

"ஹலோ, நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன் கந்தசாமி. நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?"

நமக்கு அதற்குள் பொறுமை எல்லை மீறி ரிமோட்டை தேடுவதற்குள்,

"கந்தசாமி, நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன். உங்க டீ.வீ. வால்யூமை கம்மி பண்ண்றீங்களா?"

"பாமா மேடம், நீங்க ரொம்ப அளகா இருக்கீங்க ஹீ ஹீ"

பாமா வழிந்து கொண்டே "அப்படியா? ரொம்ப நன்றி கந்தசாமி"

"உங்களுக்காக நான் ஒரு மணி நேரமா ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கேங்க. இப்ப தான் லைன் கிடச்சுது"

"ஓ அப்படியா? சரி சரி. இப்போ சந்தோஷம் தானே"

"ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. என்னால நம்பவே முடியலீங்க. ஹீ ஹீ, இருங்க என் வூட்டுகாரம்மா கிட்ட குடுக்கறேன்"

" சரி குடுங்க"

"ஹலோ, கொக்க கோலா பாமாவுங்களா?"

"ஆமாங்க, நீங்க யாருங்க பேசறது?"

"எம்பேரு முனியம்மாங்க. நீங்க நல்லகிறீங்களா?"

"நான் ரொம்ப நல்லா இருக்கேன்"

இதற்குள் நேரமாகிறது என்று ப்ரொட்யூசர் பின்னாலிருந்து முறைக்க

"சரி முனியம்மா, உங்களுக்கு என்ன பாட்டு வேணும் சொல்லுங்க"

முனியம்மா அதை காதில் வாங்காதது போல
"இருங்க உங்களோட பேச என் தம்பி சேகர், தங்கை கோமதி, மச்சினன் கோவாலு எல்லாரும் இருக்காங்க"

பாமா இடைமறிப்பதற்குள்

"ஹலோ கொக்க கோலா பாமாவுங்களா, நான் காத்தவராயன்பட்டி சேகர் பேசறேங்க. நீங்க ரொம்ப செவப்பா அளகா இருக்கீங்க. நீங்க நல்லா இருக்கீங்களா?"

"நான் நல்லா இருக்கேன் சேகர். உங்க எல்லாருக்கும் எந்த பாட்டு வேணும் சீக்கிரம் சொல்லுங்க"

அதற்குள் சேகர் கையிலிருந்து கோவாலு தொலைபேசியை பிடுங்கி

"ஹலோ கொக்க கோலா பாமாவுங்களா? நான் காத்தவராயன்பட்டி கோவாலு பேசறேங்க. நீங்க நல்லா இருக்கீங்களா?"

ப்ரொட்யூசருக்கு வெறி ஏறிக்கொண்டே செல்ல பாமா அவசரம் அவசரமாக

"நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க எல்லாருக்காகவும் என்ன பாட்டு வேணும் சீக்கிரம் சொல்லுங்க"

"கில்லி படத்துலேந்து ஏதாவது பாட்டு போடுங்க"

"உங்களுக்காகவும் உங்க எல்லாருக்காகவும் உங்கள் மூன் டீ.வியில் அடுத்து வருவது கில்லி பட பாடல்.
அப்பாடா ஒரு வழியாக முடித்தார்கள் என்று நாம் பெருமூச்சு விடுவதற்குள்

"அந்த பாடலை கேட்பதற்கு முன் ஒரு சின்ன் ப்ரேக்"

நியாயம் தான். நமக்கு தான் தேவை இது போன்ற சேனல்களிடமிருந்து ஒரு ப்ரேக், அல்லவா?

Saturday, 2 February 2008

சியாச்சன்

உலகிலேயே மிகவும் உயரமான பனி மலைகளுள் சியாச்சன் பனி மலையும் ஒன்று. கோடை காலத்தின் உச்ச கட்ட வெய்யில் ‍இங்கு -35 டிகிரியும் 'குளிர்' காலத்தில் -60 டிகிரியும் இருக்கும். இந்த சியாச்சன் மலையில் அப்படி என்ன தனித்தன்மை தெரியுமா? இந்த மலை உச்சியிலிருந்து பார்த்தால் கீழே நடப்பவை அனைத்தும் தெரியும். அதாவது மனிதர்கள், வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் பார்க்கலாம்.

ஒரு பக்கம் இந்திய, மற்றொரு பக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் என்று இரு பக்கமும் பார்க்கலாம். ஏனெனறால், சியாச்சன் மலையின் உயரம் 21000 அடி!

சியாச்சன் மலையை யார் பிடித்தாலும் காஷ்மீரையே பிடித்த மாதிரி தான். ஏனென்றால் கீழே செல்லும் நெடுஞ்சாலையை மேலிருந்து கண்காணிக்க‌லாம். அதனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் அனைத்தையும் சுட முடியும். மிக முக்கியமான இந்த நெடுஞ்சாலையை கை பற்றி விட்டால் காஷ்மீரையே துண்டித்து விடும் அபாயம் இருந்தது.

1987ம் ஆண்டு வரை இதன் முக்கியத்துவத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே பொருட்படுத்தவில்லை. ஆனால் 1987ல் தீவிரவாதத்தின் உச்சகட்டத்தில் எப்படியாவது காஷ்மீரை கைபற்றி விடவேண்டும் என்று பாகிஸ்தான் இந்த சியாச்சன் மலையை ஆக்கிரமித்து கொண்டது. ஓசைப்படாமல் ஆக்கிரமித்து கொண்ட இடத்தில் 500 மீட்டர் உயரத்துக்கு ஒரு பனி சுவரையும் (ice wall) கோட்டை போல கட்டிக்கொண்டது. பனி சுவற்றின் ஒரு பக்கம் அதள பாதாளம். கரணம் தப்பினால் மரணம் நிச்சயம். மற்றொரு பக்கம் கீழே மலை அடிவாரம்.

இந்த 'கோட்டையிலிருந்து' சியாச்சன் மலை அடிவாரத்திலுள்ள இந்திய இராணுவத்தின் பிலாஃபொண்டு கணவாயை (Bilafond Pass) நோக்கி மேலிருந்து பாக் இராணுவத்தினர் திடீரென்று ஒரு நாள் சுட ஆரம்பித்தனர். தற்காப்புக்காக நமது இராணுவம் படைகளை திரட்டி வந்தால் அதையும் சுட ஆரம்பித்தனர். ஏனென்றால், மேலே உயரத்திலிருந்து தான் கீழே நடப்பவை அனைத்தையும் கண்காணிக்க முடிகிறதே. அது மட்டுமல்ல, gravity யின் காரணமாக மேலிருந்து கீழே சுடுவது அவர்களுக்கு எளிதாக இருந்தது.எப்படியாவது இவர்களை சியாச்சினிலிருந்து விரட்டி விட வேண்டும் என்று இந்திய இராணுவம் எண்ணியது. அந்த நாளும் வந்தது.

1987ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி. ராஜீவ் பாண்டே என்ற துடிப்பான இளம் இராணுவ அதிகாரியின் (2nd lieutenant) தலைமையில் ஒரு சிறப்பு படை சியாச்சனை பிடித்து விடும் குறிக்கோளோடு கிளம்பினார்கள். பிலாஃபொண்டு கணவாயிலிருந்து சென்றால் மேலிருந்து சுட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் உலக போர் வரலாற்றில் யாருமே இதுவரை செய்ய துணிந்திடாத ஒரு காரியத்தை ராஜீவ் பாண்டே செய்தார்.

அதாவது 90 டிகிரி செங்குத்தான பனி சுவற்றில் ஏறி எதிர் பக்கத்திலிருந்து தாக்குவதுதான் வியூகம். நடுநடுங்க வைக்கும் குளிரில் இந்த பனி சுவற்றில் கீழே வருபவர்களுக்கு கால்களை வைப்பதற்கு ஏதுவாக கோடாரியால் கொத்திக்கொண்டே மேலே சென்றார். எதிரி படைகளை அடைவதற்கு வெறும் 30 மீட்டர் தூரத்தில் இருக்கும் போது அவரை நோக்கி பாக் இராணுவம் கண் மூடித்தனமாக சுட ஆரம்பித்தது. அந்த இடத்திலேயே ராஜீவ் பாண்டே மற்றும் 4 இந்திய இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.

ஆனால் மரணத்திலும் ஒரு மிக பெரிய உதவியை ராஜீவ் செய்திருந்தார். கீழே இருந்து மேலே தனக்கு பின் வருபவர்களுக்கு ஏதுவாக ஒரு தாம்பு கயிறை மேலே உள்ள பாறையில் சொருகி விட்டிருந்தார். வரலாற்றையே மாற்றி விட்ட இந்த செயலால் தான் இன்று சியாச்சன் இந்தியாவிடம் உள்ளது.

ராஜீவை சுட்ட வெற்றி களிப்பில் இருந்த பாக் இராணுவத்தினர் அவர் எவ்வாறு மேலே ஏறி வந்தார் என்பதை மமதையில் மறந்து விட்டிருந்தனர். ராஜீவ் விட்டு சென்ற கயிற்றின் ரகசியத்தை அவரது குழுவினர் கீழே வந்து கூறினர். இந்த ஒரு துருப்பு போதுமே!
ஜூன் 23ம் தேது. 'ஆப்ப‌ரேஷ‌ன் ராஜீவ்' என்ற‌ புதிய‌ திட்ட‌த்துட‌ன் (வீர‌ ம‌ர‌ண‌ம் அடைந்த‌ ராஜீவ் பாண்டேயின் நினைவாக‌) மேஜ‌ர் வ‌ரிந்த‌ர் சிங் ஒரு புதிய‌ ப‌டையுட‌ன் கிள‌ம்பினார். ராஜீவின் பாதையிலேயே மிக‌வும் மெதுவாக‌ ஏற‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். ஒவ்வொறு அடி எடுத்து மேலே வைப்ப‌த‌ற்க்கு ஒரு ஜென்ம‌ம் போல‌ இருந்த‌து. மேலே ஏறி செல்வ‌த‌ற்கே மூன்று நாட்க‌ள் ஆன‌து. க‌டும் குளிர், ப‌சி, ம‌ய‌க்க‌ம் என்று எதையும் பொருட்ப‌டுத்த‌வில்லை இந்த‌ இள‌ம் சிங்க‌ங்க‌ள். தாக‌த்துக்கு ப‌னிக்க‌டிக‌ளையே உறிஞ்சிக்க்கொண்ட‌ன‌ர்.

ஜூன் 26, 1987. இந்திய‌ வ‌ர‌லாற்றிலே ஒரு பொன் நாள். ராஜீவ் பாண்டே விட்டு சென்ற‌ க‌யிற்றை இந்திய‌ வீர‌ர்க‌ள் ஒரு வழியாக‌ க‌ண்டு பிடித்து விட்ட‌ன‌ர். பொதுவாக‌ இர‌வு நேர‌த்தில் தான் தாக்குத‌ல்க‌ள் இருக்கும். ஆனால் இர‌வில் க‌டும் குளிரில் துப்பாக்கிக‌ள் செய‌ல்ப‌ட‌வில்லை (jam ஆகிவிட்டன) என்று ராஜீவுட‌ன் சென்ற‌ வீர‌ர்க‌ள் கூறியிருந்த‌ன‌ர். அத‌னால் ம‌திய‌ம் 1.30 ம‌ணிக்கு சுபேதார் பாணா சிங் என்ற‌ வீர‌ருட‌ன் 4 பேர் மெது மெதுவாக‌ ராஜீவ் விட்டு சென்ற‌ க‌யிற்றில் ஏற‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.
மேலே சென்ற பாணா சிங்கின் வருகையை பாக் இராணுவம் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. மளமளவென்று கீழிருந்து இந்திய படைகள் கயிற்றில் ஏறி பனி சுவற்றில் ஏறி குதித்தனர். முதலில் சென்ற பாணா சிங் கையிலிருந்த எறி குண்டுகளை ஏவி 5 பாக் இராணுவத்தினரை காலி செய்தார். பிறகு அவர்களிடமிருந்த அதி நவீன துப்பாகிகளை கொண்டே மளமளவென்று சுட ஆரம்பித்தார்.
இதற்குள் கீழே இருந்து மேஜர் வரிந்தர் சிங்கும் அவரது படைகளும் கயிற்றின் மூலமாக மேலே ஏறி பாணா சிங்குடன் சேர்ந்து பாக் படைகளை தவிடுபொடியாகி விட்டனர். 21000 அடி உயரத்தில் நடந்த இந்த போர் வெகு சீக்கிரம் முடிந்து விட்டது. பாக் கொடியை வெட்டி சாய்த்து இந்திய தேசிய கொடியை சியாச்சன் பனிப்பாறையில் பாணா சிங் பறக்க விட்டார். தனது தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராஜீவ் பாண்டேக்கு இந்த வெற்றியை நமது மாவீரர்கள் அர்ப்பணம் செய்தனர்.

தனது உயிரையே கொடுத்து பிறருக்காக கயிறை விட்டு வைத்த ராஜீவ் பாண்டேயின் நினைவாக இந்திய அரசு வீர் சக்ரா அளித்து கெளரவித்தது. வீர சாகசம் புரிந்து எதிரி படைகளிடமிருந்து சியாச்சனை மீட்டெடுத்த சுபேதார் பாணா சிங்கிற்கு பரம் வீர் சக்ரா என்ற மிகப்பெரிய விருதை அளித்தது. அது மட்டுமல்ல, சியாச்சன் மலை உச்சிக்கு பாணா போஸ்ட் (Bana Post) என்றும் பெயரிட்டு கெளரவித்தது.

தன் உயிரை பணயம் வைத்து, ஒரு தாம்பு கயிற்றால் ஒரு வரலாற்று திருப்புமுனையை உருவாக்கிய அந்த இளம் வீரருக்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது.

இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த பதக்கமான பரம் வீர் சக்ராவை வழங்கி கெளரவித்த நமது அரசும் மக்களும் அதற்கு பிறகு அவரை மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. தன் உயிரையே பணயம் வைத்து நம் நாட்டை காப்பாற்றிய பாணா சிங்கிற்கு அரசு தரும் சன்மானம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு ரூ. 160 தான். சினிமா நடிகர்களின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து 500 ரூபாய் டிக்கட் எடுத்து தங்கள் 'தலைவரின்' படத்தை பார்க்கும் நமது மக்களுக்கு இதெல்லாம் எங்கே தெரிய போகிறது? மாவீரர் பாணா சிங்கின் பேட்டியை இந்த சுட்டியில் பாருங்கள். இதை படித்து விட்டு நான் உண்மையிலேயே அழுது விட்டேன்.
http://www.bharat-rakshak.com/LAND-FORCES/Army/History/1984/BanaSingh...