Sunday, 8 June 2008

'இனிப்பான‌' அனுப‌வ‌ம்

சூரத் நகரில் நான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நடந்த மறக்க முடியாத சம்பவம் இது. பட்டப்படிப்பை முடித்துவிட்டு அப்போது தான் பணியில் சேர்ந்திருந்த நேரம். புதிதாக ஒரு இரசாயன தொழிற்சாலையை கட்டிக்கொண்டிருந்தார்கள். நான் ஒரு மின் பொறியாளன் என்றாலும் இருந்தவர்ரகளிலேயே மிகவும் ஜூனியரும் வயது குறைந்தவனும் நான் தான் என்பதால் எல்லா சில்லரை வேலைகளும் என் தலை மேல் தான் விழும். இது காலாகாலமாக நடந்து வரும் ஒரு பழக்கம் தான். வடிவேலு "டேய் அப்ரசண்ட்டுகளா!" என்று ஒரு திரைப்படத்தில் அழைப்பாரே, அதே போலதான் என்று வைத்து கொள்ளுங்களேன்!

புதிய‌ தொழிற்சாலைக்கு க‌ட்டுமான‌ப்ப‌ணி ந‌ட‌ந்து கொண்டிருந்த‌தால் எங்கு பார்த்தாலும் ப‌ல‌ ஒப்ப‌ந்த‌ தொழிலால‌ர்க‌ள் வேலை செய்து கொண்டிருந்த‌ன‌ர். ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டும் குழியுமாக‌ தோண்டி வைத்திருந்த‌ன‌ர் (அஸ்திவார‌ம் போடுவ‌த‌ற்காக‌). அது ம‌ழைக்கால‌மாத‌லால், இந்த‌ குழிக‌ளில் எல்லாம் த‌ண்ணீர் நிர‌ம்பி சிறிய‌ குள‌ங்க‌ள் போல‌ இருக்கும். அந்த‌ நீரை வெளியே இரைப்ப‌த‌ற்கு அங்க‌ங்கு சிறிய‌ பம்ப்புக‌ளை வைத்திருந்த‌ன‌ர்.

ஒரு நாள் இப்ப‌டிதான் ஒரு சிறிய‌ குள‌த்தில் நீரை இறைப்ப‌த‌ற்காக‌ ஒரு ப‌ம்ப்பை 'ஆன்' செய்து விட்டு ஒப்ப‌ந்த‌க்கார‌ர் வீட்டுக்கு சென்று விட்டார். இர‌வு முழுவ‌தும் அந்த‌ மோட்டார் ஓடிக்கொண்டே இருந்திருக்கிற‌து. விடிய‌ற்காலைக்குள் அத்த‌னை த‌ண்ணீரும் காலியாகி விட்டிருந்த‌து. ஆனால் மோட்டார் ஓடிக்கொண்டே இருந்த‌தை க‌வ‌னித்த‌ காவ‌ல்கார‌ர் அதை அணைப்ப‌த‌ற்காக‌ ஈர‌க்கையுட‌ன் அந்த‌ ப‌ம்ப்பின் சுவிட்ச்சை தொட்டிருக்கிறார். அவ்வ‌ள‌வுதான். உட‌லில் மின்சார‌ம் பாய்ந்து அந்த‌ இட‌த்திலேயே ப‌ரிதாப‌மாக‌ அவ‌ர் உயிர் இழ‌ந்தார். இர‌வு நேர‌ம் என்ப‌தால் அருகில் யாருமே இல்லை.

விடிய‌ற்காலை ஒப்ப‌ந்த‌க்கார‌ர் சாவ‌காச‌மாக‌ வ‌ந்த‌ போது பிண‌மாக‌ கிட‌ந்த‌ காவ‌லாளியை பார்த்து அல‌றி விட்டார். உட‌னே, அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ மின்சார‌த்தை அணைத்து விட்டு ஆம்புல‌ன்ஸை கூப்பிட்டு காவலாளியின் உடலை ஆஸ்ப‌த்திரிக்கு எடுத்து சென்றிருக்கிறார். ஆனால் எங்க‌ள் நிறுவ‌ன‌த்தில் யாருக்குமே இதை ப‌ற்றி த‌க‌வ‌லே கூற‌வில்லை. அவ‌ர் செய்த‌ மிக‌ப்பெரிய‌ ம‌ட‌த்த‌ன‌ம் இது தான்.

இதற்குள் ஆஸ்பத்திரியிலிருந்த மருத்துவர்கள் உடனே காவல் துறைக்கும் மின்சார ஆய்வாளருக்கும் ( electrical inspector ) தகவல் கொடுத்துவிட்டார்கள். வந்தது வினை!

தொழிற்சாலைகளில் எலெக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் என்றாலே ஒருவித பீதி இருக்கும். இந்த பதவி மிக மிக சக்திவாய்ந்ததாகும். ஒரு நிறுவனத்தில் மின்சார இயந்திரங்கள் எல்லாம் சரியாக உள்ளனவா என்பதை ஆராய்ந்து அதற்கான சான்றிதழை கொடுப்பதுதான் இந்த எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டரின் வேலை. இவர் நினைத்தால் ஒரு நிறுவனத்தின் மின்சாரத்தை கூட நிறுத்த முடியும்.

நடந்த விஷயம் எதுவுமே எங்களுக்கு தெரியாமல் நாங்கள் வழக்கம் போல காலையில் வேலைக்கு வந்தோம். எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எங்கள் department வாசலில் காவல் துறையினரும் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டரும் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்!

எங்களுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. நாங்கள் வாயை திறப்பதற்கு முன்பே எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் 'காச் மூச்'சென்று கத்த ஆரம்பித்து விட்டார். அப்போது தான் தொழிற்சாலையில் ஒரு மரணம் நிகழ்ந்த விஷயமே எங்களுக்கு தெரியும்!

"மின்சாரம் தாக்கி ஒரு மனிதன் இறந்திருக்கிறான். இந்த விஷயத்தை என்னிடமிருந்து மறைக்க பார்த்திருக்கிறீர்கள். உங்களை ஒரு வழி பண்ணாமல் நான் விடப்போவதில்லை. நாளை என்னுடைய அலுவலகத்தில் விசாரணை நடத்த போகிறேன்" என்று எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் காட்டு கத்தல் கத்திவிட்டு சென்று விட்டார். எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு கூப்பிடுகிறார் என்றால் கதை கந்தல்தான் என்று அர்த்தம்.

எங்கள் எல்லோருக்கும் mood out ஆகி விட்டிருந்தது. நிறுவனத்துக்குள்ளே இப்படி மரணம் நிகழ்ந்ததே இல்லை. அந்த ஒப்பந்தக்காரர் எங்களுக்கு ஒரு போன் கூட போட்டு பேசாமல் மறைத்திருந்தது எவ்வளவு பெரிய பிரச்னை ஆகி விட்டது! சரி, இப்போது என்ன செய்வது? எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்ட்டரை வேறு நாளை சந்திக்க வேண்டுமே!

அப்போது எங்கள் department டின் தலைவர் அனைவரையும் அவசரமாக கூப்பிட்டு ஒரு meeting போட்டார். அறையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த என்னை அழைத்தார். எனக்கு வெலவெலத்து விட்டது. "நீ தான் நாளைக்கு விசாரணைக்கு செல்ல வேண்டும். நாங்கள் யாரும் வர மாட்டோம்" என்றார். எனக்கு நாக்கு குழற ஆரம்பித்தது. "சார், எனக்கு ஒன்றுமே தெரியாதே" என்று தட்டு தடுமாறி வார்த்தைகள் வந்தன. "அதனால் தான் உன்னை அனுப்புகிறேன். நான் சொன்னால் சொன்னது தான்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அங்கு மயான அமைதி நிலவியது. எனக்கு அழுகையே வந்து விட்டது. நான் வாய் திறப்பதற்குள் அவர் "நீ எதற்கும் கவலைப்படாதே. எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்ட்டர் ரொம்ப திட்டுவார். ரொம்ப கோபப்படுவார். அவர் என்ன சொன்னாலும் நீ, 'என்னை மன்னித்துவிடுங்கள்'("I am sorry Sir" ) என்று மட்டும் கூறிக்கொண்டே இரு. வேறு எதையும் பேசாதே. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்.

மறு நாள் ஒரு காரில் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் அலுவலகத்துக்கு சென்றேன். அவர் குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு முன்பே அங்கு போய் ஆஜரானேன். அந்த அலுவலகத்தில் என்னை பார்த்ததும் அனைவரின் முகத்திலும் ஒரு எக்காளம் இருந்தது போல இருந்தது.

விசாரணை அறைக்குள் சென்றேன். ஆஜானபாகுவாக என்னை சுட்டெரிப்பது போல எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் பார்த்தார். "யார் நீ? வேறு யாரும் உங்கள் நிறுவனத்திலிருந்து வரவில்லையா?" என்று கர்ஜித்தார். எனக்கு வெலவெலத்து விட்டது. "இல்லை சார். வேறு யாரும் வரவில்லை. நான் மின் பொறியாளனாக பணி புரிகிறேன்" என்று கூறினேன். விசாரணைக்கு ஒரு 22 வயது பையனை எங்கள் நிறுவனம் அனுப்பியது அவரின் கோபத்தை இன்னும் அதிகரித்து விட்டது! இருப்பதிலேயே மிகவும் ஜூனியரான ஒருவனை அனுப்பியிருக்கிறார்களே என்ற அவமானமோ!

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் என்னை நைய புடைத்து விட்டார் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர். அவர் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் நான் " I am sorry Sir" என்றே கூறினேன். இப்படி எத்தனை முறை Sorry கேட்டிருப்பேன் என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு எனது Department தலைவரின் மேலே கோபம் கோபமாக வந்தது. 'வேண்டுமென்றே என்னை மாட்டி விட்டு விட்டானே, இவன் நல்லா இருப்பானா' என்று மனதுக்குள் சபித்துக்கொண்டேன்.

ஒரு மணி நேரத்துக்கு பிறகு 'இவனிடம் பேசி இனி பிரயோஜனம் இல்லை, எதற்கெடுத்தாலும் Sorry என்கிறான்' என்று நினைத்திருப்பார் போல. 'விசாரணை முடிந்தது, நீ போகலாம்' என்று கத்தினார்.

ஆளை விட்டால் போதும் என்று நான் அந்த அறைக்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்தால் ஒரு ஆச்சரியம்.

எங்கள் நிறுவனத்திலிருந்து ஒரு பெரிய van நிறைய இனிப்பு பண்டங்கள் வந்திறங்கி கொண்டிருந்தன. அப்போது தீபாவளி சமயம் என்பதால் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கிக்கொள்வது சூரத்தில் சாதாரணமான விஷயமாக இருந்தது. அந்த அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் (கடை நிலை ஊழியரிலிருந்து மேல் மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்கும் மிக விலை உயர்ந்த இனிப்பு பண்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டது). பணமாக கொடுத்தால் தானே லஞ்சம், இனிப்புகளை வழங்கினால் குற்றமாகாதே!! சொன்னால் ந‌ம்ப‌ மாட்டீர்க‌ள், அது வ‌ரை அங்கு நில‌விய‌ ஒரு மிக‌ இறுக்க‌மான‌ சூழ்நிலை த‌ள‌ர்ந்து அனைவ‌ரும் மிக‌ ச‌க‌ஜ‌மாக‌ ஜோக்க‌டித்து பேச‌ துவ‌ங்கி விட்டார்க‌ள்!

ம‌று நாள் காலை நான் தொழிற்சாலைக்கு சென்ற‌ போது என்னை அழைத்த‌ department த‌லைவ‌ர், "என்ன‌, எப்ப‌டி இருந்த‌து விசார‌ணை?" என்று சிரித்துக்கொண்டே என் ப‌திலை கூட‌ கேட்காம‌ல் என் முதுகில் லேசாக‌ த‌ட்டிவிட்டு சென்றார். ஒரு வார‌த்துக்கு பிற‌கு எல‌க்ட்ரிக‌ல் இன்ஸ்பெக்ட‌ரின் அறிக்கை வ‌ந்த‌து. நாங்க‌ள் நிர‌ப‌ராதி, ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ஒரு விப‌த்து தான். ஆனால் அதை அனைவ‌ரிட‌மும் ம‌றைத்த‌ ஒப்ப‌ந்த‌க்கார‌ர் இனி அப்ப‌டி செய்ய‌க்கூடாது என்று எச்ச‌ரிக்கை செய்ய‌ப்ப‌டுகிறார் என்று இருந்த‌து. எங்க‌ள் அனைவ‌ருக்கும் நிம்ம‌தி. அப்பாடா, பிழைத்தோம்!

ஒரு இக்க‌ட்டான‌ சூழ்நிலையை எப்ப‌டி சாத‌க‌மாக்கி கொள்ள‌ முடியும் என்ற‌ Management technique ஐ அன்றுதான் நான் க‌ற்றுக்கொண்டேன்.

1 comment:

Anonymous said...

interesting, Thanks