இந்த வானமும் பூமியும் இருக்கும் வரை டாக்டர் ஜோக்குகளுக்கும் ராஜா ஜோக்குகளுக்கும் பஞ்சமே இருக்காது என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்த ஒரு பெண் டாக்டரை பற்றிய சம்பவம் இது. அவர் பெயர்....சரி, பாமா என்றே வைத்துக்கொள்வோமே.
எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற பின் ஒரு சிறிய க்ளினிக்கை அந்த நகரத்தின் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் திறந்தார் பாமா. பெயருக்கு தான் அது க்ளினிக்கே தவிர, தன் வீட்டின் வாசல் அறையைதான் அவர் க்ளினிக்காக மாற்றி இருந்தார்.
பொதுவாக எல்லா மருத்துவர்களிடமும் நீல நிறத்தில் ஒரு புத்தகம் இருக்கும். அதில், ஒவ்வொறு இரசாயனத்துக்கும் (chemical combination) ஏற்றாற்போல கடையில் கிடைக்கும் மாத்திரைகளின் பெயர்கள் இருக்கும். உதாரணத்துக்கு, ஜூரத்துக்கு கொடுக்கும் paracetamol என்ற இரசாயன பெயருக்கு equivalentஆக கடையில் கிடைக்கும் Crocin என்ற மாத்திரையின் பெயர் அந்த புத்தகத்தில் இருக்கும். சரி, நம் கதைக்கு வருவோம்.
க்ளினிக்கை திறந்த முதல் 4 நாட்களுக்கு ஒரு நோயாளி கூட வரவில்லை. ஐந்தாம் நாள் ஒருவன் இருமிக்கொண்டே வந்தான். உடனே டாக்டர் வீட்டில் பரபரப்பு. அந்த வீட்டில் இருக்கும் வயதான தாத்தா உள்ளே இருந்து ஒரு easy chairஐ பரபரவென்று இழுத்து வாசல் அறையில் உட்கார்ந்து கொண்டார்.
நோயாளிக்கு இரண்டு நாட்களாக ஒரே இருமலாம். தொண்டை வற்றி விட்டதாம். அவரின் மார்பில் ஸ்டெத் கருவியை வைத்து கேட்டு விட்டு பாமா "கொஞ்சம் இருங்க" என்று கூறிவிட்டு உடனே அடுத்த அறைக்கு சென்றார். அங்கே நீல புத்தகம் இருந்தது. அதில் அந்த இரசாயனத்துக்கு ஏற்ற மாதிரி கடையில் கிடைக்கும் மாத்திரையின் பெயரை மனப்பாடம் செய்து கொண்டு மெல்ல முதல் அறைக்கு வந்தார்.
அதற்குள் க்ளினிக்கில் ஒரு சிறிய கலவரமே நடந்து முடிந்து விட்டிருந்தது அவருக்கு தெரியாது. டாக்டர் உள்ளே சென்றதுமே, தாத்தா நோயாளியிடம் எல்லா தகவல்களையும் கேட்க ஆரம்பித்து விட்டார். "அந்த காலத்துல நாங்க எல்லாம் வெறும் மிளகு, ஓமம், திப்பிலி எல்லாம் அரைத்து பத்தியம் வெச்சுப்போம். ஹூம், இந்த காலத்துல தடுக்கி விழுந்ததுக்கெல்லாம் டாக்டரு கிட்ட வந்டுடறீங்க. இப்படி தான் என் மச்சினனோட பக்கத்து வீட்டுக்காரன் ஏதோ ஒரு மாத்திரய விழுங்கி கடைசில பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கூட ஒண்ணும் பண்ண முடியல" என்று ஏதோ உளறி வைக்க நோயாளிக்கு என்னவோ போல ஆகி விட்டது.
இதை பற்றி ஒன்றுமே அறியாத டாக்டர், முதல் அறைக்குள் மீண்டும் வந்து "நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க (!) இந்த மாத்திரய 3 நாளைக்கு சாப்பிடுங்க" என்று சொல்லி ஏதோ எழுத ஆரம்பித்தார்.
தாத்தா சும்மா இருக்காமல், "ஏண்டி பாமா, இருமலுக்கு எரித்ரோமைசின் தானே கொடுக்கணும்" என்று தனக்கு தெரிந்ததை கூற நோயாளி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் எடுத்தாரே பார்க்கணும்.
இப்படி தன் practiceஐஆரம்பித்த இந்த டாக்டர் பிற்காலத்தில் மிக பிரபலமான டாக்டராகிவிட்டார் (சும்மாவா, எத்தனை நோயாளிகள் கிட்ட தொழில் கற்றுக்கொண்டிருப்பார்!)
நேரில் கண்ட இந்த அனுபவத்துக்கு பிறகு புதிதாக மருத்துவம் பார்க்கும் டாக்டரிடம் போகவே பயமாக இருக்கிறது!
No comments:
Post a Comment