நேற்று செளதியி அரேபியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான Arab News ல் வெளியான ஒரு செய்தி. இந்தியாவிலிருந்து வேலை தேடி வந்த 70 பேர் செளதிக்காரனால் ஏமாற்றப்பட்டு சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுகிறார்களாம். இந்த சுட்டியை பார்க்கவும். இவர்கள் அனைவரும் தலா ரூ. 1 லட்சம் பம்பாயில் உள்ள ஏஜெண்ட்டிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஏஜெண்ட் இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரியால் (சுமார் பதினோராயிரம் ரூபாய்) சம்பளம் என்று கூறி அனைவரும் ஒப்பந்தத்தில் வேறு கையெழுத்திட்டுள்ளார்கள். வந்த அனைவருமே சமையற்காரர்களாகவும் cashierகளாகவும் வேலை என்று ஏஜெண்ட் கூறியிருக்கிறான்.
செளதி வந்த பிறகு அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. "உங்கள் சம்பளம் வெறும் 500 ரியால் தான் (அதாவது பேசிய சம்பளத்தில் பாதி தான்). மீதி உங்களுடைய விசா செலவுகளுக்கு சரியாக போய் விட்டது" என்று செளதிக்காரன் கூறியிருக்கிறான். அது மட்டுமல்ல, அனைவரையும் க்ளீனர்களாக வேலை செய்ய கூறியிருக்கிறான்.
இவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் 7 பேரை உடனேயே மீண்டும் இந்தியாவுக்கே திரும்ப அனுப்பி இருக்கிறான். பயந்து போன மீதி பேர், கடனை உடனை வாங்கி 1 லட்ச ரூபாய் ஏஜெண்ட்டிடம் கட்டிய பணத்தை ஊருக்கு திரும்பினால் சம்பாதிக்க வழியில்லை என்று எண்ணி குறைந்த சம்பளத்துக்கே ஒப்புக்கொண்டு விட்டனர்.
இதில் 13 பேர் மட்டும் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நண்பர்களே, செளதியில் இது ஒன்றும் புதிதானது அல்ல. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே இருப்பார்கள். இதை தமிழகத்தில் இருந்து படிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். செளதியில் வேலை என்பது ஏதோ சொர்கபுரியில் வேலை என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். 52 டிகிரி வெயிலில் படாத பாடு பட்டு மனைவி, குழந்தைகளை விட்டு 3 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஊருக்கு செல்லும் தியாகிகள் தான் இங்கு நிறைய உண்டு. 'இவனுக்கு என்ன, துபாயில் சம்பாதிக்கிறான்' என்று கிண்டலாக ஊரில் சிலர் கூறிக்கொண்டு திரிவார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், அப்படி நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள் 10 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். பெரும்பாலான இந்தியர்கள் கூலிகளாகவும், சுமை தூக்குபவர்களாகவும், சாலை போடுபவர்களாகவும், மிகவும் கஷ்ட ஜீவனமே நடத்துகிறார்கள். இன்னும் சிலர் ஒட்டகம் மேய்ப்பவர்களாக உள்ளனர். இவர்கள் பாடு திண்டாட்டம் தான். பேசுவதற்கு கூட ஆளே இல்லாமல் நடு பாலைவனத்தில் ஒட்டகங்களுடல் நாட்கணக்கில் இருக்க வேண்டும். 7 நாட்களுக்கு ஒரு முறை செளதிக்காரன் ஒரு பையில் ரொட்டியும் தண்ணீரையும் கொடுத்து விட்டு சென்று விடுவான். இந்த 7 நாட்களுக்குள் அந்த மனிதன் இறந்து விட்டால் கூட யாருக்கும் தெரியாது.
இங்கு வந்த பிறகு "இந்திய தூதரகம் நமக்கு உதவவில்லை" என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை. அவர்களும் என்னதான் செய்வார்கள்? இது ஒவ்வொறு நாளும் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம் அல்லவா?
தமிழகத்திலிருந்து செளதிக்கு வேலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரை. ஏஜெண்ட்டிடம் கொடுக்க நீங்கள் 1 லட்ச ரூபாய் கடன் வாங்கப்போகிறீர்களா? தயவு செய்து அதை ஏஜெண்ட்டிடம் கொடுக்காதீர்கள். அந்த பணத்தில் ஊரில் ஒரு பெட்டி கடை வைத்தால் கூட உங்களால் கெளரவமாக வாழ்க்கையை ஓட்ட முடியும். இதை பற்றிய ஆங்கில சுட்டி இங்கே உள்ளது. இதை படிக்கும் அன்பர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் செளதியில் உள்ள நிலைமையை பற்றி தயவு செய்து புரிய வையுங்கள்.
1 comment:
இது செளதிக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும்! நமது மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. இதுவே ஒரு அமெரிக்கா காரனுக்கு நடந்திருந்தால் கதை கந்தலாகி இருக்கும். Indian life is cheap!
Post a Comment