திருவிழா என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். பல வருடங்கள் சென்னை மயிலையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவுக்கு செல்லும் பழக்கம் எனக்கு இருந்தது. அதில் முக்கியமானதாக கருதப்படும் தேர் திருவிழாவும் அதற்கு மறுநாள் அறுபத்து மூவர் திருவிழாவும் மிகவும் விசேஷம்.
சிறுவனாக இருந்தபோது இந்த திருவிழாக்கள் வந்தால் தானாகவே உற்சாகம் பிறந்து விடும். இதில் என்ன வேடிக்கை என்றால் சுவாமி தரிசனம் ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த திருவிழா கூட்டத்தை பார்ப்பதே ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தது. தேரை ஒரு மிக நீண்ட வடத்தில் கட்டி இழுப்பார்கள். தேரிலிருந்து ஒருவர் பச்சை கொடியை அசைத்து "ப்பீஈஈ!" என்று விசில் அடித்த உடனேயே நூற்றுக்கணக்கான பேர் வடத்தை பிடித்து இழுக்க ஆரம்பிப்பார்கள்.
அந்த வடத்தை ஒரு கையால் பிடிக்க முடியாது. அவ்வளவு பெரிதாக இருக்கும்.வடத்தை எத்தனை பேர் நிஜமாகவே இழுக்கிறார்கள் என்று எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் இருந்தது. "வ்வ்வ்வ்வ்" என்று முகத்தை அஷ்டகோணத்தில் வைத்துக்கொண்டு வடத்தை இழுப்பவர்கள் உண்மையிலேயே இழுக்கிறார்களா அல்லது சும்மா தொட்டுக்கொண்டு பாவ்லா காட்டுகிறார்களா என்று தெரியாது! இதை எனது அம்மாவிடம் கேட்டால் "சும்மா இருடா" என்று அதட்டி அடக்கி விடுவார்கள்.
ஆனால், வடத்தை இழுக்கும்போது தேர் அசைந்து அசைந்து ஆடி வரும் மயில் போல பார்க்க மிக அழகாக இருக்கும். தேரின் இரு புறமும் பல நிறங்களை கொண்ட நீண்ட வட்ட வடிவமான துணியை மாட்டி வைத்திருப்பார்கள். இதற்கு பெயர் 'அசைந்தாழி' என்று பிறகு தெரிந்து கொண்டேன். தேரின் ஓட்டத்துடன் இதுவும் சேர்ந்து அசையும் போது பார்க்கவே பரவசமாக இருக்கும்.
தேர் தெற்கு மாட வீதியில் வரும்போது மாடி வீடுகளில் உள்ளவர்கள் மேலிருந்து பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை தேர் இழுப்பவர்கள் மீது கொட்டுவார்கள். காதலிக்க நேரமில்லை படத்தில் "விஸ்வநாதன் வேலை வேண்டும்" என்ற பாடல் நினைவுக்கு வரும். கொதிக்கும் வெயிலுக்கு மிக அருமையாக இருக்கும் அந்த குளியல்!
மறுநாள் அறுபத்து மூவர் விழா. ஒவ்வொறு நாயன்மாரையும் பல்லக்கில் வைத்து அலங்கரித்து தூக்கி கொண்டு வருவார்கள். அப்போது சில அறிய காட்சிகளை காணலாம்.
கன்னத்தில் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் வரை கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு வருபவர். உடல் முழுவதும் வேலை குத்திக்கொண்டு காவடி எடுத்துக்கொண்டு வருபவர். இவர்களை பார்த்தால் ஒருவித பயம் கொண்ட பரவசம் ஏற்படும். இவர்களுக்கெல்லாம் வலிக்காதோ?
பிச்சைக்காரர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும். மாங்காய் தலையன், பெரிய நாமத்தை நெற்றியிலும் உடலிலும் இட்டுக்கொண்டு மஞ்சள் வேட்டியுடனும் கையில் சொம்புடனும் சாலையில் "கோவிந்தோ, கோவிந்தோ" என்று கூறிக்கொண்டே உருண்டு அங்க பிரதட்சிணம் செய்பவன், தோளில் அழுக்கு பைக்குள் கைக்குழந்தையும் கையில் முரசு / குச்சியுடன் "டகர டகர டகர" என்று அடித்துக்கொண்டே வருபவள், உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்பவன் (அது குங்குமம் தான், ரத்தம் இல்லை என்று சொன்னார்கள்) ஆனால் கால்களில் சலங்கையுடன் அவன் தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும்போது கொஞ்சம் பயமாக தான் இருக்கும்). இப்படி பலவிதமான பிச்சைக்காரர்கள் தென்படுவார்கள்.
காணாமல் போன குழந்தைகளை பற்றி அதற்கான பந்தலில் ஒரு போலீஸ்காரர் வாய் ஓயாமல் கத்திக்கொண்டே இருப்பார். மைக்கில் "அம்மா, உடனே வா" என்று ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கும். அந்த சத்தத்தில் குழந்தையின் தாய்க்கு கேட்குமோ கேட்காதோ! "திருடர்கள் ஜாக்கிரதை, உங்கள் பர்ஸ்ஸை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று இன்னொரு பக்கத்திலிருந்து மைக்கில் வேறொருவர் கத்திக்கொண்டிருப்பார். இன்னொரு பக்கம் கண்மலரில் இருந்து கமர்கட் வரை விற்பனை செய்யும் வியாபாரிகளின் கூச்சல். எங்கு பார்த்தாலும் கூட்டமோ கூட்டம். பஞ்சு மிட்டாய் விற்பவன், கடிகாரம் போன்ற வடிவத்தில் கைகளில் மிட்டாயை கட்டிக்கொண்டு விற்பவன், காத்தாடி வியாபாரி என்று பல தரப்பட்டவர்களை பார்க்கலாம்.
இது போல வேறு எந்த நாட்டிலும் உள்ளதா என்று தெரியவில்லை. உண்மையிலேயே நம்மூர் திருவிழாக்களை போல குதூகலமும் உற்சாகமும் வேறு எங்கும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
2 comments:
ஐயா,
அப்படியே இது போல் நடக்கும் மதுரை சித்திரை திருவிழாவை கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது உங்களுடைய இந்த போஸ்ட்.
நான் மதுரைக்காரன், நானும் சவுதியில் தான் (கோபர்) ல் இருக்கிறேன். தங்களது இன்னொரு ப்ளோக்கின் மெயின் ரசிகன் நான். மிக மிக பயனுள்ள தகவல் மையம் அது. அதை உபயோகமாக நடத்துவது ஒரு தமிழன் என்பதில் நான் மிகப் பெருமை கொள்கிறேன். தொடரட்டும் நற்பணி.
சிவா.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சிவா.
Post a Comment