ஆடியநர்த் தனகளிருனை யகத்தினுள் வைத்திட்டு
நாடிப்ப ணிந்திங்கு பாட்டிசைக்க நான்வந்தேன்
கோடிட்டு காட்டிடுவாய் கணநாதா என்நாவில்
பாடிடுவேன் தீந்தமிழில் தாயுமையின் பாசுரமே!
நாதனுடன் நெஞ்செனதில் நீயருளும் நற்பொழுதில்
வேதத்தின் தலைவனிட மெம்மின்னல் உரைத்திடுவாய்
பாதத்தை பிடித்திட்டேன் அம்பிகையே காத்தருள்வாய்
பேதையெனக் குனையன்றி வேறேது கதிதாயே!
கயல்விழியால் கருணைமழை பொழிந்திடுவாய் அம்பிகையே
மயிலேறி வந்திடுமென் மால்மருகன் மலர்த்தாயே
ஜெயமாதுன தருளாலே வேண்டுவரம் கிடைத்திடுமே
பயமேது பதமலரை பணிந்தோர்க்கு பூரணியே !
நோய்நொடியின் நாவெனைதீண் டிடுகிறதே என்செய்வேன்
தாயுனையே நாடிட்டேன் தாங்கியெனை யணைத்திடுவாய்
சேயெனைநீ தள்ளிட்டால் கதியெங்கே சொல்தாயே?
நாயேனின் பிழைதன்னை பொருத்தள்வாய் பார்வதியே !
பரமனென தப்பனினி டமிருக்கும் ஈஸ்வரிநீ
வரமதனை பொழிவாயே பாகீஸ்வரி யுமையாளே
சிரம்தாழ்ந்து பணிந்திட்டோம் பரமேஸ்வரி ஜெகன்மாதா
அரன்மனைவி அம்பிகையே அருள்தருவாய் எனதம்மா
திக்கெட்டும் உனதருளில் திகட்டாது திளைத்திட்டோம்
சக்திச்சர வணன் தாயே எனைக்காக்க வந்தருள்வாய்
பக்தியுடன் பேர்சொன்னோம் உன்கோவில் வாசலிலே
முக்தியையே தந்தெமைநீ காத்திடுவாய் மகமாயீ
வேல்தந்த ழகனுக்கோர் ஜெயந்தந்த ஜெகன்மாதா
கோலாட்ட மீனாக்ஷி நானுமுன் பாலகனே
நூல்தந்து தமிழதனை யெனக்குள்ளே அளிப்பாயே
தோல்போர்த்த பரமனின்பத் தினிதாயே எமைகாப்பாய் !
6 comments:
மரபுக் கவிதை மனதை ஆட்கொள்ளுகிறது. இம்மாதிரி எழுத நிறையவே மெனக்கட்டிருக்க வேண்டும். பதம் பிரித்து படித்துணர கொஞ்சம் மெனக்கட வேண்டி இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா. நான் எழுதியது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. அதை நீங்கள் படித்து அதன் உள் அர்த்தத்தை ருசித்து கருத்து சொன்னதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
மெனக்கெட்டு படித்துவிட்டேன் ஒரு வரி மட்டும் புரியவில்லை. பரமனென தப்பனினி.... என்ற வரி.அதை எவ்வாறு பிரிப்பது ? தங்களின் நற்பணி தொடரட்டும் .
மெனக்கெட்டு படித்தமைக்கு மிக்க சந்தோஷம் மனஸ்வினி.
"பரமனென தப்பனினி டமிருக்கும் ஈஸ்வரிநீ"
பரமன் என்றால் சிவன். பரமன் எனது அப்பனின் இடமிருக்கும் ஈஸ்வரி நீ.
ரொம்பவும் படுத்திவிட்டேனோ?
Mele unnudaya vilakkam pramadam.idhuvum andha Easan Arule.
Idhu pol ezhudhum unnai en thambi yai
Adaindhadhil miga perumai kolgiren. Un Tamizhukku thalai vanangugiren. Vazhga nee . Vazhga min tamizh
மிக்க நன்றி விஜயா அக்கா
Post a Comment