Monday, 12 May 2014

பர்மா பேஜார்!

உலகின் எல்லா பெரிய ஊர்களிலும் திருட்டு சமாசாரங்கள் விற்பனை செய்யப்படும் இடம் என்று ஒரு பகுதி பெயர் பெற்றிருக்கும். உதாரணம், டெல்லியின் 'சோர் பஜார்'. இது போன்ற இடங்களுக்கு சென்றால் கண்டிப்பாக நீங்கள் ஏமாறுவீர்கள் என்பது நிச்சயம். அது போன்ற 'சிறப்பான' இடம்தான் மெட்ராஸில் உள்ள பர்மா பஜார்.

1960களில் பர்மா (இன்றைய மியான்மார்) நாட்டிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக அன்றைய அரசாங்கம் அமைத்து கொடுத்த இடம் தான் இது. அதனால் அந்த இடத்தின் பெயரே பர்மா பஜார் என்றாகிவிட்டது. 'பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம்' என்ற அமைப்பு இங்கு உள்ள வியாபாரிகளின் சங்கம். 60களில் அகதிகளாக வந்தவர்கள் சாலை ஓரத்திலேயே கடைகளை விரித்து இன்று வருமான வரி கட்டாத பெரும் பணக்காரர்களாக மாறி விட்டார்கள் என்பது தான் உண்மை.
 
இவர்களது வாழ்க்கை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை ஓயாது வாடிக்கையாளர்களை கூவி கூவி அழைப்பதிலேயே கழிந்து விடுகிறது. கடற்கரை இரயில்வே நிலையத்திற்கு வெளியே உள்ள இடம் தான் பர்மா பஜாரின் ஆரம்பம். அந்த வரிசை முழுவதும் இவர்களது ஆதிக்கம் தான்.
 
 
 
நேற்று வெளியான திரைப்படத்தின் புதிய தகடு வேண்டுமா? வீடியோ ipod வேண்டுமா? வெளி வந்து ஒரு வாரமே ஆன புத்தம்புதிய காமெரா வேண்டுமா? சூட்கேஸில் இருந்து பேட்டரி வரை எல்லாமே இங்கு கிடைக்கும். ஆனால் இங்கு வாங்கும் எந்த பொருளுக்கும் பில் கிடையாது, காரண்ட்டியும் கிடையாது. வீட்டுக்கு எடுத்து சென்ற பிறகு ஓடவில்லை என்றால் அது உங்களது தலை எழுத்து. ஓடினால் அது உங்களது அதிர்ஷ்டம்.
 
உலகின் எந்த மூலையில் எப்படிப்பட்ட எலெக்ட்ரானிக் கருவியும் இவர்களிடத்தில் உண்டு. அதாவது அந்த கருவியின் போலி என்று சொல்ல வந்தேன். ஊருக்கு நீங்கள் புதிதா? தெரியாத்தனமாக பர்மா பஜாருக்கு தனியாக சென்று விட்டால் உங்கள் கதி அதோகதி தான்.
 
இந்த பர்மா பஜாரில் ஏதாவது ஒரு கடையில் நீங்கள் சும்மா 'பார்த்தாலே' போதும். உங்கள் கையை பிடித்து தரதரவென்று கடையின் உள்ளே இழுத்து கொண்டு போய் விடுவார்கள். தெரியாமல் ஏதாவது ஒரு சாமான் மீது உங்கள் கை பட்டுவிட்டால் முடிந்தது கதை. கண் இமைப்பதற்குள் அந்த சாமானின் அட்டையை பிரித்து உங்களை வாங்க வைத்து விடுவார்கள். 'நான் கேட்கவே இல்லையே' என்றெல்லாம் நீங்கள் கூறவே முடியாது. அதான் 'பார்த்து' விட்டீர்களே, அவ்வளவுதான். வாங்காமல் நீங்கள் அந்த கடையில் இருந்து வெளியே செல்லவே முடியாது. ஏனென்றால் அங்கு இருக்கும் கிட்டத்தட்ட ஒரு 200 கடைக்காரர்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை.
 
இத்தனைக்கும் ஒவ்வொரு கடையிலும்  நாற்காலி போட்டு உட்கார கூட இடம் கிடையாது. புறாக்கூண்டு மாதிரி இருக்கும் கடைகளின் வாசல்களில் ஸ்டூல் போட்டிருப்பார்கள். ஆனால் யாருமே அதில் உட்காருவது கிடையாது. ஏனென்றால், யாராவது ஒரு கடைக்காரன் உட்கார்ந்தால் அடுத்த கடைக்காரன் வாடிக்கையாளர்களை இழுத்து கொண்டு போய் விடுவான்.
 
இந்த வியாபாரிகளுக்குள் ஒரு சங்கேத மொழி உண்டு. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை 'பானசோனிக்' டேப் ரிக்கார்டரின் விலையை விசாரிப்பதற்காக இங்கு சென்றேன். முதல் கடையில் சில நொடிகள் சும்மா நின்றேன், அவ்வளவுதான். எனக்கு என்ன வேண்டும் என்று கடைக்காரன் கேட்டான். நான் "விலையை மட்டும் சொல்லுங்கள், அதற்கு பிறகு வாங்குவதா வேண்டாமா என்று சொல்கிறேன்" என்று முன்பே உஷாராக சொல்லி விட்டேன். அந்த கடையில் டேப் ரெக்கார்டர் இல்லை. ஸ்டூலில் என்னை உட்கார வைத்து விட்டு, எனக்கு புரியாத மொழியில் (பர்மீய மொழி என்று நினைக்கிறேன்) அடுத்த கடைக்காரனிடம் ஏதோ கூறினான். அவன், "பாறையா?" என்று கேட்டான். அதற்கு இவன் "ஆமாம்" என்று தலையை ஆட்டியவுடன், அடுத்த கடைக்காரன் அவசரம் அவசரமாக ஓடி சென்று ஒரு நிமிடத்துக்குள் புத்தம் புதிய டேப் ரிக்கார்டர் ஒன்றை கொண்டு வந்தான்.
 
உடனே நான், "அதை பிரிக்காதீர்கள், விலையை மட்டும் சொல்லுங்கள்" என்று கூறினேன். அவன் சொன்ன விலை, அசலின் விலையில் முக்கால் பங்கு இருந்தது. எனக்கு சந்தேகம். விலையை கேட்ட பின் கண்டிப்பாக அது போலி என்று எனக்கு தெரிந்தது. "பாறை" என்பது "போலி" என்பதற்கான சங்கேத வார்த்தை என்பது அப்போது தான் புரிந்தது. "எனக்கு வேண்டாம்" என்று நான் கூற அவன் உடனடியாக விலையை பாதியாக குறைத்தான். அப்படியும் நான் மசியாமல், "நான் தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே, விலை கேட்க தான் வந்தேன்" என்றவுடன் அவன் கடுப்பாகி சிறப்பான சென்னை செந்தமிழில் என்னை திட்டி தீர்த்தான். பதிலுக்கு நானும் அவ்வாறே தமிழ் தொண்டாற்ற 'இவனிடம் எதுவும் தேறாது, இவன் உள்ளூர்காரன்' என்று அவனுக்கு தெரிந்ததால் என்னை விட்டுவிட்டு வியாபாரத்தை கவனிக்க தொடங்கினான்.
 
அனைவருக்கு இந்த இடமே போலிகளுக்கு பெயர் பெற்றது என்று தெரியும். இருந்தாலும் கூட்டம் அலை மோதத்தான் செய்கிறது. சிங்கப்பூர், மலேஷியா, துபாய் போன்ற இடங்களில் இருந்து தினமும் பல பேர் இங்கு வந்து சாமான்களை இந்த வியாபாரிகளிடம் விற்கிறார்கள். அதில் பெரும்பாலும் போலியானவையே. சீனாவில் தயாராகி இந்த ஊர்களின் மூலமாக மெட்ராஸை வந்தடைகின்றன. எடுத்ததெல்லாம் போலிதான். உதாரணத்துக்கு, பாட்டா நிறுவனத்தின் BSC ஹவாய் செருப்பில் கூட BSE என்று எழுதி அசலை போலவே உள்ளதை கண்கூடாக பார்த்தேன்.
 
இங்கு கிடைப்பவை போலியாகவே இருக்கட்டும். ஆனால் சில சாமான்கள் உங்களுக்கு உண்மையிலேயே மலிவாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எவ்வளவு தூரம் பேரம் பேசுகிறீர்கள் என்பதை பொருத்து அது வேறுபடும். ஆனால் கண்டிப்பாக எந்த பொருளையும் தொட்டு விடாதீர்கள். முதலிலேயே விலையை பேசி விட்டு உங்களுக்கு அது ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். அதுவும் அந்த பொருளை உங்களின் எதிரிலேயே pack செய்து தரவேண்டும் என்று கூறுங்கள்.

பிறரை ஏமாற்றி வாழக்கூடாது என்ற காலம் போய் ஏமாற்றுவதே வாழ்க்கை என்ற கொள்கையில் உள்ள இடம் பர்மா பஜார். ஏமாறுபவர்கள் உள்ளவரை இவர்களது வியாபாரம் அமோகமாக நடக்கும் என்பது நிச்சயம்.












 

10 comments:

G.M Balasubramaniam said...

ஒரு முறை வடக்கத்தி நண்பன் என்னை பர்மாபஜாருக்குக் கூட்டிப்போகக் கேட்டான் அவன் அங்கு சென்று கடைக்காரன் காதில் எதையோ சொன்னான் முதலில் பார்வைக்கு வந்தது ஒரு ஆல்பம் நண்பன் அதை வாங்கிக் கொண்டான். பின் எதையோ கேட்டான் . கடைக்காரன் எங்கோ சென்று ஒரு பொருளைக் காட்டினான். என் நண்பனும் தலை ஆட்டினான் நான் எழுதத் தயங்கும் பொருள்கள் அவை. கேட்டது கிடைக்கும் இடம் எனலாமா.?

Expatguru said...

வாங்க, ஜி.எம்.பி. சார். 'எழுத தயங்குவதை' விட்டு தள்ளுங்கள். கடைக்காரனை கேட்டால் 'மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அரிய சமூக தொ|ண்டு' என்று கூறுவான்!

bandhu said...

ஒருமுறை தெரிந்தவர் மூலம் சென்று நல்ல நேஷனல் பானசாநிக் டேப் ரிகார்டர் வாங்கினேன். தெரிந்தவர் மூலம் சென்றதால் தரமாக இருந்தது.. தனியாக சென்று 'சாவுக் கிராக்கி' என்று திட்டும் வாங்கியிருக்கிறேன்! இங்கு தனியாக சென்று தரமான பொருளை மலிவாக வாங்குவது என்பது கடலில் கரைத்த பெருங்காயத்தை தேடி எடுப்பது போல!

சீனு said...

யுவ கிருஷ்ணா தனது அழிக்கப் பிறந்தவன் நாவலை பர்மா பசாரை மையமாய் வைத்துதான் எழுதியிருப்பார்... என்னாவயிருந்தாலும் சென்னையின் முக்கியமான அடையாளமாயிற்றே :-)

திண்டுக்கல் தனபாலன் said...

அடப் போங்க... இந்தக் காலத்தில்...?

Expatguru said...

பந்து சார், நல்ல வேளை தெரிந்தவருடன் சென்றீர்கள். இல்லை என்றால் நீங்கள் போட்டிருக்கும் சட்டையை தவிர எல்லாவற்றையும் உருவியிருப்பார்கள் !

Expatguru said...

சீனு, மெட்ராஸின் அடையாளம் பர்மா பஜாரா? அதுவும் சரி தான்.

Expatguru said...

வாங்க தனபாலன். சில மாதங்களுக்கு முன்பு பர்மா பஜார் கடைக்காரர்களை 'ஹிண்டு' செய்தித்தாளில் பேட்டி எடுத்தார்கள். 'இப்போதெல்லாம் வியாபாரம் சரியாக இல்லை' என்று அலுத்து கொண்டார்களாம். செய்வது திருட்டு, இதில் அலுப்பு வேறு!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அந்த வழியே போக நேர்ந்தாலும் இந்தக் கடைகள் பக்கம் கண்ணைத் திருப்புவதில்லை . நம் கண்ணசைவை வைத்தே நம்மை இழுத்து விடுவார்கள்

Expatguru said...

உண்மைதான் முரளிதரன். அனுபவ பட்டவர்களுக்கு தான் இது தெரியும்.