வாழ்க்கையில் சில வித்யாசமான மனிதர்களையும் அவர்களின் வித்யாசமான செயல்களையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒரு அனுபவம் தான் நான் பம்பாயில் வேலை செய்யும் போது எனக்கு கிடைத்தது.
(இதற்கு முந்தைய பதிவுகளை இங்கே வாசிக்கலாம்). பம்பாயில் வேலைக்கு சேர்ந்திருந்த நேரம். நான் வேலை செய்து கொண்டிருந்த அந்த மிக பெரிய நிறுவனம் குஜராத்தில் ஒரு பெரிய ஆலையை நிறுவுவதாக இருந்தது. அந்த ஆலையில் மின்சார உற்பத்திக்காக மிக பெரிய ஜெனரேட்டர்களை கொண்ட power plant - ஐ நிறுவுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து கொண்டிருந்தன.
ஒரு ஆலையை நிறுவ வேண்டும் என்றால், ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசாங்க துறைகளில் இருந்து அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு துறையிலிருந்தும் அனுமதி வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடும். உண்மையிலேயே இது போன்ற அறத பழசு சட்டங்கள் இருப்பதனால் தான் ஊழலே ஆரம்பமாகின்றது.
அப்படி ஒரு துறை தான் மத்திய அரசுக்கு சொந்தமான Central Electricity Authority (CEA) என்ற துறை. ஒரு power plant நிறுவ வேண்டும் என்றால் பிரதானமாக இவர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஒரு ஆலையை நிறுவ என்னென்ன தடைகள் எல்லாம் முடியுமோ அவை அனைத்தும் இவர்களின் சட்டதிட்டங்களில் உள்ளன. இதில் மிகவும் வேடிக்கையான ஒரு சட்டம் Section 48 என்பது தான். அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?
இந்த Section 48 சட்டத்தின் படி, ஒரு ஊரில் நீங்கள் ஒரு power plant-ஐ நிறுவ வேண்டும் என்றால் அந்த ஊரில் உள்ள ஒரு செய்தித்தாளில் ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும். அந்த விளம்பரத்தில், "நாங்கள் இந்த இடத்தில் ஒரு power plant-ஐ அமைக்க போகிறோம். பொது மக்கள் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் இந்த விளம்பரம் வந்த 30 நாட்களுக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்ற வாசகங்கள் இருக்க வேண்டும். 30 நாட்களுக்குள் யாராவது ஆட்சேபணை தெரிவித்தால் அதை CEAவிடம் தெரிவிக்க வேண்டும்.
இதில் கூத்து என்னவென்றால், எங்களது நிறுவனம் தேர்வு செய்த இடம் யாருக்குமே பயன்படாத ஒரு வெற்று இடம். அங்கு விவசாயமோ வேறு எந்த தொழிலோ செய்ய முடியாது. தண்ணீர் பற்றாக்குறை வேறு. வானம் பார்த்த பூமி. "யாராவது இங்கு வந்து ஏதாவது ஆலையைஆரம்பித்து வேலை வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா" என்று மக்கள் ஏங்கி கொண்டிருந்த இடம்.
எங்களது நிறுவனம், யாருமே படிக்காத ஒரு செய்தித்தாளில், கடைசி பக்கத்தில் சிறிய எழுத்தில் ஒரு மிக சிறிய விளம்பரத்தை வெளியிட்டார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அரசாங்க துறையிடம் அனுமதி பெறுவதற்கு வெறும் ஒரு formalityக்காக எதற்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம். இரண்டாவது, தேவையில்லாமல் எதற்கு விளம்பரம் என்ற எண்ணம்.
விளம்பரம் கொடுத்த 28 நாட்கள் வரை யாருமே ஆட்சேபணை செய்யவில்லை. சரி, வழக்கம் போல 30 நாட்கள் கழிந்த பிறகு CEAவிடமிருந்து அனுமதி வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் இருந்த நேரத்தில் யாருமே எதிர்பாராதவிதமாக 29ம் நாள் எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது.
ஊர், பெயர் தெரியாத ஒரு வக்கீல், "மக்கள் ஜனநாயக முன்னணி" என்று ஏதோ ஒரு பெயரை letter padல் அடித்து எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். "இந்த ஊரில் நீங்கள் ஒரு power plant நிறுவுவதால் எங்கள் வாழ்வாதாரமே முறிந்து போய் விடும். சுற்றுப்புற சூழல் பாதிக்கும். நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டு விடும்" என்றெல்லாம் இருந்தது. இல்லாத தண்ணீருக்கு இத்தனை பில்டப். என்ன செய்வது?
அரசாங்கத்திடம் பொய் சொல்ல முடியாதே. யாருமே ஆட்சேபணை செய்யவில்லை என்று கூறிவிட முடியாது. அப்படி சொன்னால் இந்த வக்கீல் நீதிமன்றத்துக்கு போய் பல வருடங்கள் இழுத்தடிப்பானே. உடனே எங்களது நிறுவனத்தில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். உடனடியாக டெல்லிக்கு சென்று CEAவின் பெரிய அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.
அவர்கள் அரை மனதோடு கடைசியில் எங்களுக்கு ஒரு சலுகை தந்தார்கள். அதாவது, "15 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் இந்த வக்கீல் மனது மாறி தனது ஆட்சேபணையை திரும்ப வாங்கி கொண்டால் உங்களுக்கு அனுமதி கொடுக்கிறோம்" என்றார்கள்.
வழக்கே இல்லாத வக்கீல்களுக்கு இது போன்ற சந்தர்ப்பங்கள் ஒரு மிக பெரிய வரப்பிரசாதம். எப்படியாவது பணத்தை கறந்து விட இதே தொழிலாக இன்றும் பலர் உள்ளனர். இதே போல சாலை விபத்துகளில் யாருக்காவது அடி பட்டுவிட்டால் நஷ்ட ஈடு வாங்கி தருகிறேன் பேர்வழி என்று ஒரு வக்கீல் கூட்டமே அலைகிறது. இவர்களை Ambulance Chasers என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். சரி, நம் விஷயத்துக்கு வருகிறேன்.
அந்த வக்கீலை தேடி எங்கள் நிறுவனத்தில் மேலதிகாரிகள் சிலர் சென்றனர். பெரு முயற்சிக்கு பிறகு அவரை கண்டு பிடித்தனர். ஆரம்பத்தில் மிகவும் பந்தா காண்பித்த வக்கீல் கடைசியில் பேரம் பேச ஆரம்பித்தார். தனக்கு ரொக்கமாக பணம் வேண்டும், தனது உறவினர்கள் இரண்டு பேருக்கு வேலை வேண்டும், என்றெல்லாம் கோரிக்கை வைத்தார்.
அதிகாரிகள் தான் இதற்கு தயாராக இருந்தார்களே. "நீங்கள் கேட்கும் அளவிற்கு நாங்கள் பணம் கொண்டு வரவில்லை. ஆனால் கண்டிப்பாகவே நாங்கள் திரும்பி சென்ற பிறகு அதற்கு ஏற்பாடு செய்கிறோம். அதே போல இந்த இருவருக்கும் நிச்சயம் வேலை உண்டு" என்று உறுதி அளித்து நைசாக பேசினர். வக்கீலோ, இதை எல்லாம் என்னால் நம்ப முடியாது. எழுத்து பூர்வமாக கொடுங்கள்" என்றார். அதிகாரிகளோ, "இது போன்ற விஷயங்களை நாங்கள் எழுத்து பூர்வமாக கொடுக்க முடியாது. அப்படி செய்தால் நீங்களும் மாட்டி கொள்வீர்கள்" என்றார்கள். வெகு நேரம் பேரம் பேசிய பிறகு சில ஆயிரங்கள் அன்பளிப்பு அளித்த பின் அரை மனதோடு வக்கீல் "நாட்டு நலனை கருதி (!) நான் எனது ஆட்சேபணையை வாபஸ் வாங்கி கொள்கிறேன்" என்று எழுதி கொடுத்தார்.
அதை வாங்கிய கையோடு நேராக CEA விடம் சென்று சமர்பித்து அனுமதியை வாங்கி விட்டார்கள்.
கதை இத்துடன் முடிந்து விடவில்லை. ஒரு 15 நாட்களுக்கு பிறகு எங்களது நிறுவன Chairmanக்கு அந்த வக்கீல் ஒரு கடிதம் அனுப்பினார். மிக மிக பணிவுடன் "மேதகு ஐயா" என்றெல்லாம் பீடிகையோடு ஆரம்பித்து இரண்டு பேருக்கு வேலை தருவதாக உங்களது அதிகாரிகள் கூறினார்கள். அதை எப்போது தருவீர்கள்" என்று கேட்டு எழுதியிருந்தார். அந்த கடிதம் கடைசியில் எனது மேலதிகாரிக்கு வந்து அதை என்னிடம் அவர் அனுப்பி file செய்யுமாறு கூறி விட்டார்.
இதே போல அடுத்த இரண்டு மாதங்களில் அந்த வக்கீல் இரண்டு கடிதங்கள் அனுப்பினார். எதற்கும் பதிலே அளிக்காமல் file செய்து விட்டோம். கடுப்படைந்த வக்கீல் அடுத்த கடிதத்தில் "மேதகு ஐயா"விலிருந்து வெறும் "ஐயா", அதன் பின் "சார்", என்று படிப்படியாக மரியாதையை குறைத்து கொண்டே விடாமல் கடிதம் மேல் கடிதம் போட்டு கொண்டே இருந்தார். ஒவ்வொரு கடிதமும் முந்தைய கடிதத்தை விட சற்றே கடுமையாக இருந்தது. 'அமைதி படை' சத்யராஜ் மாதிரி தான் கதையே.
கடைசியில் "டேய் மடையா" என்ற லெவலுக்கு மனிதர் போய் விட்டார். "உடனடியாக உங்களது அதிகாரிகள் கூறியபடி இருவருக்கு வேலை கொடுக்க போகிறீர்களா, இல்லையா? இல்லையென்றால் நான் மீண்டும் ஆட்சேபணை செய்வேன்" என்று எழுதினார். பாவம், அவருக்கு தெரியாது ஏற்கனவே அனுமதி வாங்கியாகி விட்டது என்று.
அவர் ஒழுங்காக கேட்டிருந்தால் கூட கண்டிப்பாகவே அந்த இருவருக்கும் வேலை கிடைத்திருக்கும். ஏனென்றால், கடைநிலை ஊழியர்கள் அனைவரும் அந்த ஊரில் உள்ளவர்களுக்கே வேலை கொடுக்கப்பட்டது. இவர் கூறிய அந்த இருவரை தவிர அனைவருக்குமே வேலை கிடைத்தது.
நான் கற்றுக்கொண்ட மிக பெரிய Management Lesson: "பெரிய முதலைகளிடம் வீணாக மோதாதே. அப்படி மோதினால் விலை போகாதே" என்பது தான். இந்த அனுபவம் எனக்கு வேடிக்கையாகவும் வித்யாசமான ஒன்றாகவும் இருந்தது.
7 comments:
சார்
உங்களின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு சிறு கதை வாசிப்பது போலவே உள்ளது . அழகான நடை கருத்தோட்டமுள்ள அனுபவம் இரண்டும் நல்ல செய்தியைத் தருகிறது . பூமி உள்ளவரை இந்தியாவில் லஞ்சம் ஒழிக்க முடியாது . நாம் நிறைய பேசினாலும் கோபப்பட்டாலும் நமது தேவைக்கு நாம் லஞ்சத்தின் பின்னே போக வேண்டிய சூழல் இருக்கத்தான் செய்கிறது .
நன்றி சார்ல்ஸ். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
MANYSTRATEGIES HAVE TO BE WORKED OUT BY EVERY ONE OF US TO KEEP THINGS GOING CORRECTLYTHE ABOVE INCIDENT SHOWS THAT
You are right, Nat Chander. Life is a cat and mouse game, after all.
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
cea ஊழல் இல்லாதது ஆச்சரியம் தான்.
அரசு ஊழியர்களில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள், துரை. ஆனால் அவர்கள் மிக அரிதானவர்களே.
Post a Comment