Friday, 5 December 2014

சிவ துதி

சடைமுடியில் சிக்கியநல் சலமக‌ளை காத்ததுபோல்

கடையேனுக் கருளிடுவாய் என்னீசா! - வெண்மை

விடைமீது வந்தெந்தன் வினைதனையே விரட்டிடவே

குடைபோலே காத்திடுவாய் நீ



கார்த்திகைமா தீபந்தன் ஒளியினிலே ஒளிர்கின்றாய்

பார்வேந்தா போற்றுகிறேன் திருவடியை - நாட்டில்

ஏர்தூக்கும் ஏழைக்கும் அருளிடுமென் அண்ணாமலை

யார்போலே இங்காரும் இலை

போற்றுகிறேன் பரமாவுன் திருவடியை பற்றிநான்

ஆற்றுகிறேன் உன்நாமம் தனையே! - ஆடுமெல்

காற்றிலுமே நீயுள்ளாய் காளத்தி நாதாவிதி

மாற்றிடுவாய் எந்தன் நிலை

உண்ணாமுலை தாயாரை இடந்தனிலே நீயமர்த்தி

கண்கொள்ளா காட்சியெமக் களித்தாய் - மாந்தர்

மண்ணதனில் மாபாவம் செய்திடினும் பொறுத்திடுபொன்

வண்ணாவுனை தொழுதிட்டோம் கேள்

தன்னுடலில் திருநீரை தரித்தேவுன் திருமுடியில்

கொன்றைமலர் சூட்டியகுற் றாலீசா! - நாயேன்

சிந்தையிலே அன்பென்ற சிவமயமாய் அருளிடுவாய்

என்றென்றும் நீதானே கதி

3 comments:

சிவகுமாரன் said...

அஞ்செழுத்து மந்திரத்தை அன்றாடம் உச்சரித்து
தஞ்சமென ஈசனவன் தாள்சேர் - நெஞ்சே
சிவனை மறவாதே ! சீரோடு வாழ
அவனே உனக்கு அரண்.


--- வணங்குகிறேன் தங்களை - தாங்களும் சிவனடியார் என்பதால் .
http://arutkavi.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

saamaaniyan said...

நண்பரே,

நண்பர் காரிகன் மூலம் தங்களின் தளம் அறிந்தேன். முதல் கருத்தே சிவ துதிக்கானதாய் அமைந்தது சிறப்பு !

இனி தொடருவேன்.

நன்றி
சாமானியன்

எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

Expatguru said...

முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சாமானியன். அடிக்கடி வருகை தாருங்கள்.