Monday, 28 March 2016

மறக்கமுடியாத மனோஹர் !

சிறிய வயதில் வீட்டில் இருந்த ஃபிலிப்ஸ் வானொலிதான் எங்களுக்கு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய ஒரே சாதனம்.தினமும் எங்கள் தந்தை இரவு ஒன்பது மணி ஆங்கில செய்திகளை ஆர்வமுடன் கேட்பார். எங்களுக்கோ செய்திகள் என்றாலே ஒரே போர். அவர் இருக்கும்போது யாரும் வானொலி பக்கத்திலேயே போக மாட்டோம். வீட்டில் அப்படி ஒரு கட்டுப்பாடு இருந்தது.

பல நாட்கள் எங்களது தந்தையுடன் கெஞ்சி கூத்தாடி கடைசியில் அவர் அரை மனதுடன் ஒப்புக்கொண்டார். அதாவது, இரவு எட்டு மணி முதல் எட்டேகால் வரை மட்டும் வானொலியை கேட்கலாம். ஆனால் அன்றைய வீட்டு பாடங்கள் அனைத்தையும் அதற்குள் முடித்து விட வேண்டும். இரவு சாப்பாட்டையும் முடித்து விட வேண்டும் என்பது அவரின் நிப்பந்தனை. நாங்கள் வேண்டா வெறுப்போடு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டோம்.

சரியாக எட்டு மணிக்கு தினமும் ஏதாவது ஒரு நாடகத்தை ஒலிபரப்புவார்கள். அதை கேட்பதில் எங்கள் அனைவருக்கும் அவ்வளவு ஆர்வம். அதில் 'நேஷனல் தியேட்டர்ஸ்' வழங்கிய ஆர்.எஸ். மனோஹரின் நாடகங்கள் அவ்வளவு பிரசித்தம்.


மனோஹரின் நாடகங்கள் அனைத்துமே சரித்திர நாடகங்கள் தான். அதிலும் வில்லன் கதாபாத்திரத்தை கதாநாயகனாக சித்தரிப்பார். உதாரணமாக, இராமாயணத்தில் இராவணன் வில்லன், இராமன் கதாநாயகன் அல்லவா? ஆனால் மனோஹரின் நாடகங்களில் எப்போதுமே இராவணன் போன்ற அசுரர்களின் கதாபாத்திரங்களையே பிரதானமாக எடுத்து நடிப்பார். இதே பாணியில் இவர் சுக்கராச்சாரியார், கம்சன், துரியோதனன் என்று பல நாடகங்களை நடத்தினார்.மக்கள் மத்தியில் இது வித்யாசமான ஒரு அணுகுமுறையாக இருந்தது. அவரின் இலங்கேஸ்வரன் நாடகம் சக்கை போடு போட்டது.ஒவ்வொரு வசனமும் அனல் பறக்கும். வானொலியில் அவற்றை கேட்கும் போது எப்பொழுதாவது நேரில் இவரின் நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்க வைத்தது.

மனோஹரின் நாடகங்களில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் மிக மிக தத்ரூபமான மேடை காட்சிகளை உருவாக்குவார். ஒவ்வொரு நாடகத்திலும் பல காட்சிகளில் புதுமையை புகுத்தி பார்ப்போரை களிப்புற வைப்பதில் அவர் வல்லவர். போர் காட்சிகளில் மேடையில் அம்புகள் பறக்கும். இடி, மின்னல் என்று தத்ரூப்பமாக இருக்கும்.

இலங்கேஸ்வரன் நாடகம் வெளிவந்த போது பல ஆன்மீகவாதிகள் முதலில் முகம் சுளித்தனர். அது எப்படி இராமனை போற்றாமல் இராவணனை போற்றி நாடகம் போடுவார் என்று சர்ச்சை கிளம்பியது. காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளிடம் சென்றனர். அவர் நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு இதில் தவறு ஏதும் இல்லை.  இதற்கு முன்பு கூட பலர் இது போல முயற்சித்திருக்கிறார்கள் என்று தெளிவான ஒரு தீர்ப்பை கூறியபிறகு சர்ச்சைகள் அனைத்தும் அடங்கின. 

இதில் விசேஷம் என்னவென்றால் யார் மனதையும் புண்படுத்தாமல் இந்த கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். இராவணன் என்றால் அசுரன் தான், ஆனால் அவனிடமும் நல்ல குணங்கள் இருந்தன என்பதை தான் அவர் வலியுறுத்தினார்.

மெட்ராஸில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு முறை மனோஹர் இந்திரஜித் என்ற நாடகத்தை நடத்தினார். அதை காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது. திடீரென்று பாறை ஒன்று படாரென்று வெடித்து அதிலிருந்து அசுரன் ஒருவன் அட்டகாசமாக சிரித்து கொண்டே வெளியே வருவான்.


வானத்திலிருந்து யாருமே எதிர்பாராதவிதமாக ஏதாவது வந்து விழும். இப்படி ஒரு அதி அற்புதமான அனுப்பவத்தை உணர முடிந்தது.  அம்பில் தீயை வைத்து சர் சர் என்று மேடையிலே பறக்கும் போர் காட்சியின் பிரம்மாண்டம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. திடீரென்று 10 வினாடிகளுக்கு மேடை இருட்டாகி விட்டிருக்கும். பத்து வினாடிகளுக்கு பிறகு பார்த்தால் மேடையில் புத்தம் புதிதாக வேறு ஒரு 'செட்' போட்டிருப்பார்கள். இவ்வளவு தத்ரூபமாக உலகில் வேறு யாரும் மேடை அமைத்ததாக தெரியவில்லை.

இந்திரஜித் நாடகத்தின் போது நடந்த ஒரு சம்பவம். போர் காட்சியில் அம்பிலிருந்து வந்த ஒரு தீப்பொறி முதல் வரிசையில் வாத்தியங்கள் வாசிப்பவர் மீது வந்து விழுந்தது. நல்ல வேளையாக விபத்து எதுவும் ஏற்படவில்லை.

இந்திரஜித் நாடகத்துக்கு பிறகு மனோஹரின் மிக பெரிய விசிறி ஆகிவிட்டிருந்தேன். மனோஹர் பிரபலத்தின் உச்சியில் இருந்தார். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அவர் நாடகம் நடத்திய போது தனியாக ஒரு கப்பலையே வாடகைக்கு எடுத்தார். அத்தனை சாமான்கள் இருந்தன.

யார் கண் பட்டதோ தெரியவில்லை, ஒரு முறை இலங்கேஸ்வரன் நாடகம் நடந்து கொண்டிருந்த போது மேலிருந்து இடறி விழுந்து மனோஹரின் கால் முறிந்து விட்டது. அந்த விபத்தினால் பல மாதங்கள் நாடகம் நடத்தவே முடியாமல் போனார். இதன் பிறகு அவரால் நாடகமே நடத்த முடியாமல் போய் விட்டது. இதனால் அவர் மிக மிக வருத்தத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில், இனி நாடகம் நடத்தப்போவது இல்லை என்று அறிவித்தார். எம்.ஜி.ஆரே அவரிடம் பேசி தனது முடிவை மாற்றிக்கொள்ள சொல்லியும் தன்னால் முன் போல நாடகம் நடத்த முடியவில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்..நாடகம் நடத்த முடியாமல் போன வருத்தத்தை விட தனக்கு பிறகு இந்த கலையை வழி நடத்த யாரும் இல்லை என்கிற வருத்தம் தான் அவருக்கு நிறைய இருந்தது. தொண்ணூறுகளில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் ஆரம்ப்பித்த பிறகு நாடகம் பார்க்கும் பழக்கமே மக்களிடம் கிட்டத்தட்ட நின்று விட்டிருந்தது. 

2006ம் ஆண்டு மனோஹர் மறைந்தார். கால வெள்ளத்தில் கரையோரம் ஒதுங்கிய கற்களை போல மனோஹரின் தமிழ் நாடகங்களின் நினைவுகள் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன. அடுத்த தலைமுறைக்கு இது போன்ற ஒரு மாபெரும் கலைஞன் கிடைப்பானா என்பது கேள்விக்குறி தான். உண்மையிலேயே நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்.

5 comments:

Unknown said...

R S MANOHAR STARTED HIS CINE CAREEERAS A HANDSOME HERO ONLY WITH PADMINI HE FILM VAIRAMALAI... A STYLISH GUY HE WAS A GRADUATE COMING FROM ORTHODOX IYENGAR FAMILY..
HE WAS INTELLIGENT TO CHANGE HIS PROFILE AS VILLAIN WHEN HEROSCHANCES WERENOT FORTHCOMING...
HIS LOVE FOR DRAMA WAS VERY GREAT.. HE HAD MAINTAINED HIS HEALTH IN TOPCONDITION....A MAN OF NO VICES HE DIED AFTER HE HAD CROSSED EIGHTY LET US REMEMBER THIS GREAT ACTOR

Unknown said...

R S MANOHAR STARTED HIS CINE CAREEERAS A HANDSOME HERO ONLY WITH PADMINI HE FILM VAIRAMALAI... A STYLISH GUY HE WAS A GRADUATE COMING FROM ORTHODOX IYENGAR FAMILY..
HE WAS INTELLIGENT TO CHANGE HIS PROFILE AS VILLAIN WHEN HEROSCHANCES WERENOT FORTHCOMING...
HIS LOVE FOR DRAMA WAS VERY GREAT.. HE HAD MAINTAINED HIS HEALTH IN TOPCONDITION....A MAN OF NO VICES HE DIED AFTER HE HAD CROSSED EIGHTY LET US REMEMBER THIS GREAT ACTOR

காரிகன் said...

மக்கள் மறந்துவிட்ட ஒரு மகத்தான கலைஞன் மனோகர் பற்றி நீங்கள் எழுதியது பாராட்டுக்குரியது. பிரமாதமான நடிகர். நாடகக் கலையை ஆத்மார்த்தமாக நேசித்த ஒரு உண்மையான கலைஞன்.

சார்லஸ் said...

மனோகர் அவர்களை சினிமாக்களில் பார்த்து வியந்திருக்கிறேன். நாடக உலகில் மிகப் பெரிய ஜாம்பவான்களில் அவரும் ஒருவர் . ஆனால் அவர் நாடகத்தை நேரில் கண்டு ரசிக்கக் கொடுத்து வைக்கவில்லை. வில்லனாக நடித்து மக்களின் கோபத்தை சம்பாதித்தவர். நடிப்பு என்பதை புரிந்து கொண்ட பிறகு அவருடைய தனி பாணியை ரசிக்கவும் வைத்தவர்.

சுழல் மேடைகள் அமைத்து நாடகம் நடத்தியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன செய்திகள் எனக்கு கூடுதல் விசயங்களை கொடுக்கின்றன. பட்டொளி வீசி பறந்திட்டாலும் கொடி ஒரு நாள் கீழிறங்கித்தான் ஆக வேண்டியுள்ளது. எல்லா கலைஞனுக்கும் உள்ள சரிவை அவரும் சந்தித்திருக்கிறார். தொழில் நுட்பங்கள் பெருகும்போது கலைஞர்கள் காலத்திற்கேற்றவாறு தங்களை புதுப்பித்துக் கொள்ளாதபோது தோல்வி அடைந்து விடுகிறார்கள். அதில் மனோகரும் ஒருவர்.

யாரும் தற்சமயம் நினைத்துப் பார்த்திராத ஒரு அற்புத கலைஞனைப் பற்றி உங்களின் பகிர்வுக்கு பாராட்டுகள் . பெரும்பாலும் உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களை எல்லாம் நாஸ்டால்ஜிக் உலகத்திற்குக் கொண்டு செல்கின்றன. நன்றி.

Expatguru said...

மிக்க நன்றி சார்லஸ். மனோஹர் பற்றி நான் எழுதியதைவிட உங்களுடைய அழகான விமர்சன நடையை வெகுவாக ரசித்தேன்.