Saturday 18 February 2017

'பைலட்' போகின்றது

"போவியா மாட்டியா?" என்று பூசாரி வேப்பிலையால் 'பேய் பிடித்திருந்த' எங்கள் வீட்டு வேலைக்காரி சரஸ்வதியை அடித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. 


மெட்ராஸ் ராயப்பேட்டை பகுதியில் பைலட் தியேட்டர் பின்புறம் உள்ள கொலைகாரன்பேட்டை என்ற இடத்தில் எங்கள் வீடு இருந்தது. கோலக்காரன் பேட்டை என்பது நாளடைவில் மருவி கொலைகாரன்பேட்டை ஆனது வேறு விஷயம். அங்கு பச்சையப்ப நாயக்கன் தெருவில் தான் எழுபதுகளில் சில வருடங்கள் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். தொலைக்காட்சி இல்லாத அந்த கால கட்டத்தில் எங்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு சினிமாதான். அருகில் இருந்த பைலட் தியேட்டரில் பல படங்கள் பார்த்திருக்கிறோம். 

அந்த பகுதியில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு ஏற்ற மாதிரி டிக்கெட் விலையும் அதிகமில்லாமல் இருந்தது. ஆங்கில படங்களே அதிகமாக‌ வரும். பல ஜேம்ஸ் பாண்ட் படங்களை பார்த்திருக்கிறேன். டஸ்ஸு புஸ்ஸு என்று திரையில் பேசுவது ஒரு எழவும் புரியாது. ஆனால் செம ஜாலியாக இருக்கும். 

பைலட் தியேட்டரின் பின் புறம் மிக சிறிய சந்து ஒன்று உள்ளது. சந்தின் ஒரு பக்கம் பைலட் தியேட்டரின் மதில் சுவரும் மற்றொரு பக்கம் இன்னொரு சுவரும் இருக்கும். ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக இரண்டு நபர்கள் மட்டுமே நடந்து செல்ல முடியும். அந்த அளவு குறுகலான சந்து அது. ஆனால், எப்பொழுதும் ஜன நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஏனென்றால், சந்தின் ஒரு முனை ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் மற்றொரு முனை கெளடியாமடம் சாலை என்று இரு மிக முக்கியமான சாலைகளை இணைக்கும் சந்து அது. அந்த சந்தின் பெயர் பைலட் சந்து. ஆங்கிலத்தில் அதன் மொழி பெயர்ப்பை நீங்களே பாருங்கள். 
ஹாமில்ட்டன் வாராவதி என்ற ஆங்கில துரையின் பெயரில் இருந்த பாலத்தை "அம்.....ட‌ன் வாராவதி" என்று தமிழில் மாற்றி பின் அதையே Barber's bridge என்று மீண்டும்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த‌ சிறப்பான சென்னை மாநகரம் அல்லவா? இதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது! 

சரி, அது இருக்கட்டும். இந்த பைலட் சந்து எப்பொழுதும் ஜன நடமாட்டத்துடன் இருக்கும் என்று கூறினேன் இல்லையா? அது பகலில் ம்ட்டும் தான். இரவில் ஈ காக்காய் கூட இருக்காது. கொலைகாரன்பேட்டையில் எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென்று ஒரு நாள் 'பேய்' பிடித்து விட்டதென்று அவர்கள் வீட்டில் ஒரு மந்திரவாதியை கூட்டி வந்தார்கள். அமாவாசையன்று மாலையில் தெருவில் தம்பட்டம் அடித்துக்கொண்டே ஒருவன் சென்றான். "இரவில் பேய் ஓட்ட போகிறார்கள். யாரும் எதிரே வராதீர்கள்" என்று கூவிக்கொண்டே சென்றான். எங்களுக்கோ இருப்பு கொள்ளவில்லை. என்னதான் நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க ஆவல். பேய் ஓட்டும் போது எதிரே சென்றால் அந்த பேய் எதிரே வருபவர்களை பிடித்து விடும் என்று எங்கள் அம்மா எங்களை பயமுறுத்தி வைத்து எங்களை வெளியே செல்ல விடாமல் கதவை அடைத்து விட்டார். 

மறுநாள் காலையில் விசாரித்த போது பேயை அந்த பைலட் சந்தில் விரட்டி விட்டார்கள் என்று கூறினார்கள். கீழே எலுமிச்சம் குங்குமம் எல்லாம் கிடந்ததை பார்த்து நாங்களே பயந்து விட்டோம். வீட்டுக்கு திரும்பி வரும்போது அந்த பெண்ணை மந்திரவாதி அடித்து கொண்டிருந்தான். அது தான் முதல் பத்தியில் நீங்கள் படித்தது. ஓஹோ, இன்னும் பேய் போகவில்லையா? அந்த பெண் கண்களை எல்லாம் உருட்டி கொண்டு தலையை விரித்துக்கொண்டு பயங்கரமாக ஆவேசத்துடன்ஆடிக்கொண்டிருந்தாள். அதற்கு பிறகு சில நாட்களுக்கு பைலட் சந்து வழியாக செல்வதையே நிறுத்தி விட்டோம். விரட்டிய பேய் நிஜமாகவே எங்களை பிடித்து விட்டால் என்ன செய்வது?


 சில மாதங்களுக்கு பிறகு அது வெறும் நடிப்பு என்றும், வீட்டில் தனது மாமனுக்கு தன்னை கட்டாயப்படுத்தி திருமண ஏற்பாடு செய்ததை விரும்பாததால் இப்படி அவளே ஒரு நாடகமாடியது தெரிய வந்தது. பேயாவது புண்ணாக்காவது, நாங்கள் தான் கட்டபொம்மன் வீர பரம்பரை ஆயிற்றே. வழக்கம் போல பைலட் சந்து வழியாக சென்று தியேட்டரில் படம் பார்க்க ஆரம்பித்தோம்!

இடைவேளையின் போது பைலட் தியேட்டரில் கிடைக்கும் சமோஸா அருமையாக இருக்கும். ஒரு செம கடி படத்தை இந்த தியேட்டரில் பார்த்து வாழ்க்கையே வெறுத்த அனுபவமும் உள்ளது. 

அதே மாதிரி Poltergeist என்ற திகில் படம் வந்த போது தியேட்டர் வாசலில் ஒரு அம்புலன்ஸ் நின்று கொண்டிருக்கும். படம் பார்ப்பவர்களில் சிலர் பயந்து போய் மயக்கம் அடைந்து விட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்வதற்காக இந்த ஏற்பாடு.

பைலட் தியேட்டரின் வாசலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசேஷ நாட்களிலும் திடீர் மார்கெட் ஒன்று முளைக்கும். வினாயக சதுர்த்தியின் போது நானும் எனது தந்தையும் அங்கு சென்று பிள்ளையாரையும் குடையையும் வாங்கி வருவோம். 

பைலட் சந்தின் ஒரு முனை கெளடியா மடம் சாலை என்று கூறியிருந்தேன் அல்லவா? அது ஒரு-வழி சாலை என்பதால் வண்டிகள் எல்லாம் எதிர் பக்கம் செல்ல முடியாமல் இருந்தது. பைலட் தியேட்டரில் படம் பார்த்து விட்டு சந்து வழியாக சைக்கிளில் நானும் எனது அண்ணனும் டபுள்ஸில் வருவோம். சந்து முடியும் நேரத்தில் என்னை எனது அண்ணன் இறக்கி விட்டு விடுவான். அந்த காலத்தில் டபுள்ஸ் வருவதும் சைக்கிளில் இரவில் விளக்கில்லாமல் வருவதும் குற்றம். சரியாக சந்து முடியும் இடத்தில் நல்ல பிள்ளையாக எனது அண்ணன் சைக்கிளை தள்ளிக்கொண்டு வருவான். சொல்லி வைத்தாற்போல ராயப்பேட்டை காவல் நிலைய ஏட்டு அங்கு நின்று கொண்டிருப்பார். சைக்கிளை ஒன்-வேயில் தள்ளி வந்தால் அபராதம் கிடையாது, ஓட்டி வந்தால் தான். அந்த கால கட்டத்தில் பெரும்பான்மையான போலீஸ்காரர்கள் மிகவும் நேர்மையாகவே இருந்தார்கள். அந்த காவல் நிலையம் இன்றும் இருக்கிறது. அதை கடந்து போகும் போதெல்லாம் இந்த நினைவுகள் வந்து போகும்.

கால வெள்ளத்தின் ஓட்டத்தில் நிலையானது என்று எதுவும் இல்லையே. பைலட் தியேட்டரை இடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடன் மனது ஏனோ மிகவும் சங்கடப்பட்டது. சில நாட்களில் அந்த இடம் தரை மட்டம் ஆகிவிடும். அதற்கு பிறகு அங்கு என்ன வரும் என்று தெரியாது. ஒரு வேளை அங்கு பெரிய அடுக்குமாடி கட்டிடமோ அல்லது பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸோ வரலாம். யார் கண்டது? அடுத்த தலைமுறைக்கு அந்த இடத்தில் இப்படி ஒரு தியேட்டர் இருந்தது என்றே தெரியாமல் போகலாம். இது ஒரு கட்டிடம் மட்டும் அல்ல. நினைவலைகளின் சான்று. கால வெள்ளம் இதை அடித்து கொண்டு போனாலும் அதன் பசுமையான நினைவுகளை எப்படி மறக்க முடியும்?

5 comments:

bala said...

எவ்வளவு அழகாக பழைய ஞாபகங்களை பகிர்ந்து இருக்கிறாய். மிகவும் நன்றி.

Expatguru said...

மிக்க நன்றி bala

காரிகன் said...

பழைய நினைவுகளை திரும்பிப் பார்ப்பதே ஒரு ஆனந்தம். அதிலும் உங்கள் எழுத்து ஒரு பேரானந்தம். வழக்கம் போலவே மிக அருமையாக எழுதப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்.

Expatguru said...

மிக்க நன்றி காரிகன். உங்களிடமிருந்து உற்சாகமான விமர்சனங்கள் வரும்போது தான் எழுதுவதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கின்ற எண்ணத்தை தள்ளி போட வேண்டி இருக்கிறது.

காரிகன் said...

எழுதுவதை எதற்காக நிறுத்த வேண்டும்? அதுவும் இத்தனை தெளிவான நீரோட்டம் போன்ற எழுத்துக்கள் எல்லாம் பலருக்கு சாத்தியமேயில்லை. அவர்களே எழுதிக்கொண்டு இருக்கையில் நீங்கள் தாராளமாக இன்னும் ஆயிரம் பதிவுகள் எழுதலாம்.