Wednesday, 12 June 2013

தந்திக்கு அஞ்சலி

"கடங்காரா ,  நீ  நாசமா போக" என்று எனது பாட்டி தபால் காரனை வசை பாடியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது எனது தூரத்து உறவினர் இறந்து விட்டார். அந்த மரண செய்தியை தந்தி மூலமாக கொடுத்த தபால்காரனுக்கு தான் இந்த வசவு. இதே தபால்காரன் மணி ஆர்டர் கொண்டு வந்து கொடுக்கும்போது அவனுக்கு பாட்டி பணம் கொடுத்து அனுப்பியதும் நினைவுக்கு வருகிறது.

பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்பது போல கெட்ட செய்தியை கொண்டு வந்து கொடுத்த தந்திக்காரன் என்ன செய்வான்? ஆனால் அப்போதைய கால கட்டத்தில் தொலைபேசி கைபேசி, மின் அஞ்சல் என்று எதுவுமே கிடையாது. யார் வீட்டுக்காவது தந்தி வந்தால் அது கேட்ட செய்தியாக தான் இருக்கும் என்று எழுதப்படாத சட்டம் இருந்தது. தந்திக்காரன் வருகிறான்  எல்லோரும் அலறுவார்கள். அவன் வீட்டை கடந்து செல்லும்போது "அப்பாடா, நம் வீட்டுக்கு இல்லை என்று ஒரு  பெருமூச்சு விடுவார்கள். அதே  சமயம் யார் வீட்டுக்கு போகிறான் என்று ஜன்னல் வழியாக எட்டி  பார்த்து விட்டு "ஐயோ பாவம்" என்று உச்சு கொட்டுவார்கள்.

ஒரு முறை ஆதித்தனார் கடலூரில் டாக்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு "தந்தி ஆபிஸுக்கு போ" என்று ஓட்டுனரிடம் கூறிவிட்டு அசதியில் தூங்கி விட்டாராம். வண்டி நின்றவுடன் திடுக்கிட்டு எழுந்திருந்து வெளியே பார்த்தால் தினத்தந்தி அலுவலகத்துக்கு பதிலாக அவன் மத்திய தந்தி அலுவலகத்தின் எதிரில் போய்  நிறுத்தியிருந்தானாம்.  அப்போது தான் கடலூரில் தினத்தந்தி பிரதியை ஆரம்பிக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாம். "தந்தி" என்றாலே "தினத்தந்தி தான் மக்கள்  நிற்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.

1995ம் ஆண்டில் புதிய பம்பாய் நெருல் பகுதியில் வசித்து வந்தேன். எனது பக்கத்து வீட்டில் வயதான  இருவர் இருந்தனர் அவருடைய ஒரே மகளுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. மருமகன் இந்திய ராணுவத்தில் கேப்டனாக வேலை செய்து வந்தார். வடமேற்கு பகுதியில் சீன எல்லை  அருகே எங்கோ ஒரு இடத்தில் அவர் தனது மனைவி குழந்தையுடன் இருந்தார். அப்போதெல்லாம் தொலைபேசி வசதி அவ்வளவாக இல்லை. எங்கு  பார்த்தாலும் மஞ்சள் நிறத்தில் STD பூத்கள் தான் இருந்தன. இராணுவ விதிகளின்  படி எல்லையில் வேலை செய்பவர்கள் தான் எங்கே இருக்கிறோம்  என்பதை யாருக்கும்  தெரியப்படுத்த கூடாது. அதனால் தனது  மகளும் மருமகனும் எங்கே இருக்கிறார்கள் என்பதே இந்த தாத்தா பாட்டிக்கு தெரியாது. இவர்கள் போனில் பேசினால் முதலில் அது இராணுவ exchangeக்கு சென்று அங்கு இருப்பவர்கள் சரியான இடத்துக்கு connection போட்டு கொடுப்பார்கள் அனைத்து உரையாடல்களும் ஒட்டு கேட்கப்படும்.

தாத்தா என்னிடம் ஒரு  முறை "உனக்கு BSNLல் யாரையாவது தெரியுமாப்பா? வீட்டில் ஒரு phone கூட இல்லை. என் பெண்ணிடம் பேச வேண்டும் என்றால் எஸ்.டிடி பூத் வரை செல்ல வேண்டி இருக்கிறது. என்னால் முடியவில்லை" என்று கூறினார்.  அப்படி கூறும்போதே அவரின் ஏக்கம் மனதை பிசைந்தது. ஒரு தொலைபேசி இணைப்பு பெறுவது அவ்வளவு கடினமாக இருந்த காலம்  அது. அவருடைய மனம் நோகக்கூடாது என்பதற்க்காக நானும் "தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன்" என்று கூறினேன். தனிமை மிகவும் கொடிது அதுவும் முதுமையில் தனிமை மிக மிக கொடிது. 

பல நாட்கள் தாத்தா பாட்டி தனது மகள் எப்போது கூப்பிடுவாள் என்று     
ஏங்கிக்கொண்டிருப்பார்கள். அப்படி அந்த மகள் கூப்பிடும்போது குழந்தை போல அவர்களின் மனம் குதூகலித்து விடும்.

ஒரு  நாள் திடீரென்று தாத்தாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு உதவி செய்ய அருகில் யாருமே இல்லை. நான் வேலைக்கு சென்றிருந்தேன். எனது மனைவியும் பாட்டியும் தாத்தாவை ஒரு ஆட்டோவில் உட்கார வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். வழி முழுவதும் தாத்தா மூச்சு விட மிகவுமே திணறிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரொம்பவுமே முடியாமல் எனது மனைவி மீது சாய்ந்து விட்டார். அதற்குள் மருத்துவமனை வந்துவிட்டது. மாடியில் உள்ள  மருத்துவமனைக்கு தாத்தாவை எப்படி அழைத்து செல்வது?  எப்படியோ எனது மனைவியும் ஆட்டோக்காரரும் கஷ்டப்பட்டு அவரை தூக்கி மாடிப்படியில் ஏறி தாத்தாவை அங்கு உள்ள பெஞ்சில் படுக்க வைத்தனர். அவரை வந்து பரிசோதித்த மருத்துவர் அவர் சற்று முன் இறந்து விட்டார் என்று கூறினார். பாட்டியை சமாதான படுத்தவே முடியவில்லை.

மாலையில் நான் வீட்டுக்கு வந்த போது நடந்ததை மனைவி கூறினார். நான் பாட்டியை தேற்றி விட்டு உறவினர்களின் முகவரிகளை ஒரு டைரியில் எழுதிக்கொண்டேன். அவசரம் அவசரமாக தந்தி அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது தான் அவர்கள் தபால் அலுவலகத்தை மூடி கொண்டிருந்தார்கள். "இது மிகவும் சிறிய அலுவலகம். நீங்கள் வாஷி தந்தி அலுவலகத்துக்கு செல்லுங்கள் அவர்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பார்கள்" என்று கூறினார்கள். நான், "சார், இது மிகவும் அவசரம். ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மகளுக்கு முதலில் தந்தி கொடுக்க வேண்டும். மற்ற உறவினர்களுக்கும் கொடுக்க வேண்டும்" என்றேன் 

நம்பினால் நம்புங்கள், நான் அப்படி கூறியவுடன் பூட்டி கொண்டிருந்த கதவை அவர் திறந்து கத்தையாக சில தாள்களை (forms) என் கையில் திணித்தார். "சார், இந்த  தாள்களில் நீங்கள் முகவரிகளை மட்டும் எழுதி தாருங்கள். நான் இவை அனைத்திலும் அதே செய்தியை அடித்து வாஷி அலுவுலகத்தில் கொடுத்து விடுகிறேன்" என்றார். 5 மணி ஆனால் ஒரு நிமிடம் கூட வேலை செய்யாத அரசாங்க அலுவலர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மா மனிதர். மனித நேயம் இன்னும் சாகவில்லை. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான். தாத்தா, உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். 


சில வருடங்களில் இந்த தந்தி வெறும் அசுப செய்திகளுக்காக மட்டும் என்ற நிலை சிறிது சிறிதாக மாறியது. முதன் முதலில் வானொலியில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு அழைப்பு தந்தி மூலமாக வந்தது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சி அலாதியானது என்றே கூறலாம். எனக்கு செளதியில் வேலைக்கான இண்டர்வியூ விஷயத்தை ஏஜெண்ட் தந்தி மூலமாக தான் தெரிவித்தான். 

ஒரு கட்சியில் தலைவர் அடிக்கடி தனது தொண்டர்களுக்கு "டெல்லிக்கு தந்தி அனுப்புங்கள்" என்று கூறுவார். பிரதமர் அலுவலகத்தில் அப்படி வந்து சேரும் தந்திகளை அவர் பார்ப்பாரா என்பது வேறு விஷயம் எதோ தந்தி அலுவலகத்துக்கு இதனால் சிறிது லாபம் வந்தால் சரி தான். Post and Telegraph (P&T) என்று காலா காலமாக நமக்கு தெரிந்த தபால் நிலையங்களை திடீரென்று Department of Posts என்று மாற்றி விட்டார்கள். Morse Codeல் அடித்து அனுப்பிய தந்தியின் காலம் போய்  கணினியிலேயே அடிக்க ஆரம்பித்தார்கள்.

காலத்தின் வெள்ளத்தில் தந்தி மெல்ல சாக ஆரம்பித்தது. தந்தியை விடுங்கள் இப்போதெல்லாம் யாரும் கடிதமே எழுதுவதில்லை என்றே  சொல்லலாம். அது தான் எதற்கெடுத்தாலும் கைப்பேசி மூலமாகவோ மின் அஞ்சல் மூலமாகவோ விஷயத்தை கூறி விடுகிறார்களே. தந்தி போல இனி "சார் போஸ்ட்" என்ற குரலை கேட்க முடியுமா என்றும் தெரியவில்லை 

Telex மாதிரி இப்போது தந்திக்கும் மூடுவிழா சொல்லி விட்டது நமது தபால் துறை. அடுத்த தலைமுறைக்கு தந்தி என்றால் என்ன என்பதை விளக்குவதே கடினமாக இருக்கும். ஜூரம் வரும்போது பற்கள் தந்தி அடிக்கின்றன என்று இனிமேல் கூற முடியாது. தந்திக்கம்பி என்றால் என்ன என்று இன்றைய தலைமுறையினரே கேட்கிறார்கள்.  தந்தி இறந்து விட்டது என்று இனி யாரிடம் தந்தி அடிப்பது? 





Saturday, 8 June 2013

சலாம் பம்பாய்-5

வந்தோரை வாழ வைக்கும் ஊர் பம்பாய் என்றால் அது மிகையாகாது. (வந்தது தான் வந்தீர்கள் எனது முந்தைய பம்பாய் பதிவுகளையும் படித்து விட்டு செல்லுங்களேன். இங்கே 'க்ளிக்' செய்யுங்கள் -சலாம் பம்பாய் - 1, 2, 3, 4).

1998ம்  வருடம் திருமணத்துக்கு முன்பு பம்பாய் மாதுங்காவில் இருந்த போது கிடைத்த நண்பர்களை மறக்கவே முடியாது. இந்தியன் ஜிம்கானாவுக்கு எதிரே உள்ள வீட்டில் ஒரு அறையில் தங்கி இருந்தேன். மாத வாடகை 400 ரூபாய். அந்த அறையின் மூலையில் ஒரு சிறிய தொட்டியும் ஒரு குழாயும் இருந்தது. அதில் தான் குளியல் எல்லாம். மற்ற அறைகளில் ஒரு மராத்தி குடும்பம் இருந்தது. பம்பாயில் பிழைக்க வரும் என்னை போன்றவர்களுக்கு இது போல தங்க இடம் கிடைப்பதே அரிது. ஒரு இரண்டு பில்டிங் தள்ளி எனது நண்பன் சந்தானம் மற்றொரு அறையில் தங்கி இருந்தான். "அறை" என்றால் என்னை போன்ற  தனி ரூம் எல்லாம் இல்லை. எதிர்நீச்சல் படத்தில் நாகேஷ் தங்கி இருப்பாரே அது போல மாடிப்படியின் கீழே உள்ள இடத்தில் (landing) தங்கி இருந்தான். அவனுக்கு மாத வாடகை 60 ரூபாய். அவனுடைய வீட்டுக்காரர் ஒரு தமிழர்.

ஒரு முறை சந்தானம் அவனுடைய வீட்டுக்காரரிடம் "சார் ஒரே மூட்டை பூச்சி தொல்லையாய் இருக்கு. சத்தம் வேற தாங்கல." என்று புகாரை அடுக்கி கொண்டே  போனான். வெறுப்படைந்த வீட்டுக்காரர், "நீ கொடுக்கும் 60 ரூபாய் வாடகைக்கு ஹேமமாலினி வந்து டான்ஸ் ஆடுவாளா? போயா" என்று திட்டி விட்டார்!

மாதுங்காவில் Concerns என்று ஒரு இடம். மாடியில் வாழை இலையில் சாப்பாடு போடுவார்கள். மலை போல சாதத்தை இலையில் போட்டு அதன்  நடுவில் குழி செய்து அதில் நெய்யை ஊற்றி சாம்பாருடன் கலந்து உள்ளே தள்ளும்போது, ஆஹா, சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொறு வியாழன்  அன்றும் வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி என்று அட்டகாசமாக இருக்கும்.  Concerns தான் நண்பர்களுடைய ஆஸ்தான சந்திக்கும் இடம். எங்களை போன்று பம்பாய்க்கு பிழைக்க வரும் bachelorகளுக்கு அது ஒரு சொர்க்க பூமியாகவே இருந்தது. குடும்பத்தினரை விட்டு தனியாக இருக்கும் கஷ்டத்தை அனுபவித்தால் தான் புரியும். அங்கு கிடைத்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைவரும் மனம் விட்டு பேசிக்கொள்வதில் கவலைகள் எல்லாம் பறந்து போய்விடும்.

ஒரு முறை Concernsல்  ஆறு ரூபாயிலிருந்து எட்டு ரூபாயாக சாப்பாட்டு விலையை  திடீரென்று உயர்த்தி விட்டார்கள். அவர்களிடம் போய் கேட்டதற்கு "நாங்கள் அப்படி தான் உயர்த்துவோம். சாப்பாடு வேண்டும் என்றால் 8 ரூபாய் கொடுத்து சாப்பிடு இல்லையென்றால் இடத்தை காலி பண்ணு" என்று கத்திவிட்டார்கள். சுதாகர் என்ற நண்பனுக்கு இது ஒரு தன்மான பிரச்னையாகி விட்டது. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை "டேய், இவனை சும்மா விடக்கூடாது டா, ஒரு நல்ல பாடம் புகட்டணும்" என்று கறுவினான்.

மறுநாள் மாலை மாடிப்படி வாசலை மறித்து கொண்டு வருவோரை எல்லாம் திரும்பி அனுப்பி கொண்டிருந்தான். "இங்கே சாப்பிடாதீர்கள் விலை ஏற்றி விட்டான்" என்று கத்திக்கொண்டே எல்லோரையும் திரும்ப போக செய்தான். Concernsன் சொந்தக்காரர், யாருமே சாப்பிட வரவில்லையே, என்ன விஷயம் என்று விசாரிக்க கீழே இறங்கி வந்து பார்த்தார். அங்கு திரண்டிருந்த பெரிய கூட்டத்தை இவன் ஒருவன் மட்டும் திரும்ப அனுப்பி கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு மயக்கம் வராத குறைதான். "தம்பி விலைவாசி எல்லாம் ஏறி விட்டது. 6 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு எனக்கு கட்டுபடி ஆகவில்லை" என்று கூறினார். நாங்கள் இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய  ஆரம்பித்தது. அவர் கையை பிசைய ஆரம்பித்த உடன் எங்களுக்கே பாவமாகி விட்டது. "விடுடா பாவம், வியாபாரத்தை கெடுக்காதே" என்று நாங்கள் சுதாகரை இழுத்து கொண்டு வெளியே  சென்றோம். "இதை இவர் நேற்றே என்னை விரட்டாமல் கூறி இருக்கலாமே" என்றான். அன்று ஒரு நாள் மட்டும் Concernsக்கு சரியான நஷ்டம். இதுவும் ஒரு அனுபவம்!

சில நாட்களுக்கு பிறகு பார்வதி நிவாஸில் இருந்து மாதுங்கவின் அருகில் உள்ள ஸிஜிஎஸ் காலனிக்கு அறையை மாற்றி விட்டேன்.  நான் ஒருவனே 400 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக இருவர் ஒரு அறையில் தங்கி இருந்தால் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்தாலும் லாபம் தானே. 2000 ரூபாய் சம்பளத்தில் இருந்த எனக்கு ஒவ்வொறு ரூபாயின் சேமிப்பும்  மிகவும் முக்கியமாக இருந்தது. சுப்ரமணியன் என்ற நண்பனுடன் நான் அறையை பகிர்ந்து கொண்டேன். அவன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுடன் அடித்த கூத்துக்கு அளவே இல்லை.

மாதுங்கா இரயில் நிலையத்தை விட்டு வெளியெ வந்தால் உடனேயே இடது பக்கத்தில் உள்ள கட்டிடத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் இருக்கும். அதற்கு நாங்கள் வைத்த பெயர் 'பெரிய உடுப்பி'. அளவு சாப்பாடு தான் கொடுப்பார்கள் ஆனால் பிரமாதமாக இருக்கும். சிறிது தூரம் நடந்து வலது பக்கம் திரும்பினால் மற்றொரு உடுப்பி ஹோட்டல் இருக்கும். இது 'சின்ன உடுப்பி'. உடம்பு சரி இல்லை என்றால் இங்கு வந்து மிளகு ரசம் சாதம் சாப்பிடுவோம். பெரிய உடுப்பியில் அளவு சாப்பாடு 8 ரூபாய். Full Meals 16 ரூபாய். Full Meals வாங்கினால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சனிக்கிழமை இரவு சீக்கிரமே சாப்பிட்டு விடுவோம் அதுவும் இரண்டு இட்லி அல்லது போண்டா அவ்வளவு தான். மறுநாள் காலை ஒரு டீ குடித்து விட்டு  வேறு எதுவுமே  சாப்பிட மாட்டோம். கபகப என்று பயங்கரமாக பசிக்கும். ஒரு 12 மணி வாக்கில் சிஜி.எஸ் காலனியில் இருந்து நண்பர்கள் கூட்டத்துடன் பெரிய உடுப்பிக்கு நடந்து வந்து Full Meals ஒரு கட்டு கட்டுவோம் பாருங்கள். அவனவன் 10 பூரி, 5 அப்பளம் என்று சகட்டு மேனிக்கு உள்ளே  தள்ளுவான். உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு அல்லவா? அதனால் திரும்பி போகும் போது Share taxi எடுத்து கொண்டு அறைக்கு சென்று செம தூக்கம் ஒன்று போடுவோம். எல்லாம் ஒரு ஜாலி தான்.

ஒரு முறை மாதுங்கா கிங் சர்க்கிளில் உள்ள அரோரா தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் போட்டார்கள். நானும் சுப்ரமணியனும் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றால் House Full போர்டு போட்டு விட்டார்கள். எங்களுக்கு ஒரே ஏமாற்றம். சுப்பு விடுவதாக இல்லை. "கொஞ்சம் இரு வருகிறேன்" என்று எங்கோ சென்றான். சரி, blackல் வாங்க போகிறான் போல இருக்கிறது என்று நினைத்து கொண்டேன். அரோரா என்பது ஒரு மட்டமான தியேட்டர். இருக்கைகள் உடைந்து நாற்றம் எடுக்கும். ஆனால் தமிழ் படங்களை எப்போதும் போடுவார்கள். ஏண்டா இங்கு வந்து மாட்டிக்கொண்டோம் என்று நினைத்து கொண்டிருக்கையிலேயே சுப்பு வந்தான். ஆனால் கைகளில் டிக்கட் இல்லை. கூட தடி மாடு மாதிரி வேரு ஒருவான் வந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் கையை இழுத்து கொண்டு, "வா, எதுவும் பேசாதே" என்று அழைத்து சென்றான். கூட வந்தவன் டிக்கட் வாங்குபவனிடம் எதோ காதில் கிசுகிசுத்தவுடன் எங்களிடம் டிக்கட் எதுவும் வாங்காமல் "K வரிசையில் 15, 16 ஆகிய இருக்கைகளில் போய் உட்காருங்கள்" என்றான். உள்ளே சென்றால் எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கே மற்றும் அதன் பின்னே இருந்த எல் வரிசைகளில் ஒரு ஆள் கூட இல்லை. மற்ற அனைத்து வரிசைகளிலும் சரியான கூட்டம்.

படம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்த போது விளம்பரங்களை போட்டார்கள். "ஆரோக்ய வாழ்வினையை காப்பது லைப்பாய்......." என்று திரையில் பாடல் வந்தவுடன் விளக்கை அணைத்து விட்டார்கள். திடீரென்று ஒரு 20 அல்லது 25 பெண்கள் திபுதிபுவென்று உள்ளெ நுழைந்து காலியாக இருந்த இந்த இரண்டு வரிசைகலிலும் உட்கார்ந்து கொண்டார்கள். நானும் சுப்ரமணியனும் நடுவில் இருந்தோம் இரண்டு பக்கத்திலும் மற்றும் பின்புறம் உள்ள வரிசை  முழுவதிலும் அவர்கள் உட்கார்ந்திருந்து கொண்டார்கள். இருட்டியிருந்ததால் சரியாக கவனிக்க முடியவில்லை. நானும் எதோ  block booking செய்திருப்பார்கள் என்று நினைத்தேன்.

படம் ஆரம்பித்தது. விசில் சத்தம் விண்ணை பிளந்தது. எம்.ஜிஆர் படத்தில் விசில் சத்தம் கேட்பது அதிசயம் இல்லை ஆனால் இந்த முறை விசில் அடித்தது எனக்கு அருகில் இருந்தவள் !  முதல் காட்சி ஆரம்பித்த உடனேயே வாயில் வெற்றிலையை குதுப்பி கைகளை பட் பட் என்று பலமாக அடித்தாள். நான் அதிர்ச்சியில் அவளை கூர்ந்து பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது அவள் ஒரு அரவாணி என்று. 

நான் சுதாரித்து கொள்வதற்குள் எனது பின் இருக்கையில் இருந்தவள் தனது இரண்டு கால்களையும் தூக்கி முன்னாள் உட்கார்ந்திருக்கும் எனது இருக்கையில் தலையின் இரு புறமும் படீரென்று வைத்தாள். நான் திடுக்கிட்டு திரும்பி பார்த்தால் அவளும் ஒரு அரவாணி தான். இதற்குள் எனது நண்பன் அருகில் இருந்தவள் கரகரப்பான ஆண் குரலில் எதோ அருகில் இருந்தவளிடம் கூறினாள் பார்த்தால் அவளும் ஒரு அரவாணி. அது மட்டும் அல்ல. காலியாக இருந்த அந்த இரண்டு வரிசைகள் முழுவதும் இவர்களே! 

நான் சுப்ரமணியனின் கைகளை பற்றி இழுத்து கொண்டு அவசரம் அவசரமாக வெளியே ஓடினேன். பின் பக்கம் அமர்ந்திருந்த அத்தனை அலிகளும் எங்களை சிறப்பான சென்னை செந்தமிழில் வசைமாரி பொழிந்தார்கள். கதவில் நின்று கொண்டிருந்த அந்த டிக்கட் செக்கரை நான் பிடித்து கன்னா பின்னாவென்று கத்தினேன். அவன் அதற்கு நிதானமாக "இந்த படத்தின் டிக்கட் எல்லாமே விற்று தீர்ந்து விட்டன நாங்கள் எப்போதுமே இந்த இரண்டு வரிசைகளை காலியாக வைத்திருப்போம். இதில் அரவாணிகள் எப்போது வந்தாலும் காசு வாங்காமல் உள்ளே  வந்து படம் பார்க்க அனுமதிப்போம் அப்படி நாங்கள் அனுமதிக்கவில்லை என்றால் அவர்கள் மற்ற வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு கலாட்டா செய்வார்கள். அதனால் இவர்களுக்காக இந்த இரண்டு வரிசைகளை கொடுத்து விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் அல்லவா?" என்றான். அடப்பாவி, அதனால் தான் இந்த இரண்டு வரிசைகளும் காலியாக இருந்ததா? 

அன்று எடுத்த ஓட்டம் தான். அதற்கு பிறகு பம்பாயில் சினிமா பார்க்கும் ஆசையே போய் விட்டது!

கால சக்கரத்தின் சுழலில் ஒவ்வொறு நண்பனும் ஒரு திசையாக பிரிந்து விட்டோம். சுப்பிரமணியன் மஸ்கட் சென்று விட்டான் இரண்டு முறை கடிதம் எழுதினான் அதற்கு பிறகு நின்று விட்டது. இதே போல மற்றவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் எங்காவது இவர்களில் யாரையாவது சந்திப்பேனா என்று தெரியவில்லை. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். காற்றில் திடீரென்று மிதந்து வரும் மல்லிகை மணம் போல எங்கிருந்தோ வந்தோம், நண்பர்கள் ஆனோம், எங்கோ பிரிந்து சென்று விட்டோம். ஆனால் அந்த நட்பின் நினைவுகள் மட்டும் எப்போதும் பசுமையாக இருக்கிறது. 


Tuesday, 7 May 2013

ஒளியும் ஒலியும்

சமீபத்தில் குடும்பத்துடன் ஒரு எலெக்ட்ரானிக் கடைக்கு சென்றிருந்த போது கடையின் வாசலில் ஒரு மிக பெரிய 65 அங்குல 3D LED தொலைக்காட்சி பெட்டியை காண நேர்ந்தது. பார்க்கவே சினிமா தியேட்டரின் திரை போல இருந்தது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அதை வாங்குவதற்கு கூட மக்கள் இருக்கிறார்கள் என்பது தான். பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் இந்த நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்களே, அவர்களுக்காகவே இது போன்ற விஷயங்கள் சந்தைக்கு வருகின்றன என்றே நினைக்கிறேன். அந்த தொலைக்காட்சி பெட்டியை சுற்றி திருவிழா போல ஒரு கூட்டமே கூடி இருந்தது. அந்த காட்சி எனது நினைவலைகளை பின்னோக்கி கூட்டி சென்றது.
 
 
 நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே கிடையாது. ஒரு பழைய பிபிப்ஸ் வானொலி பெட்டி தான் இருந்தது. அதை  ON செய்தவுடனேயே பாட ஆரம்பிக்காது. ON செய்து சில நிமிடங்களுக்கு பிறகு இடது பக்கத்தில் பச்சை நிறத்தில் மேலிருந்து கீழாக இரண்டு கோடுகள் தெரியும். அந்த இரண்டு கோடுகளையும் நாம் ஒன்று சேர்த்தால் தான் சரியாக கேட்கும். பல வருடங்கள் இதை பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஒவ்வொறு ஞாயிறன்றும் மதியம் 3 மணிக்கு 'ஒலிச்சித்திரம்' என்ற நிகழ்ச்சியை போடுவார்கள். ஏதாவது ஒரு திரைப்படத்தை ஒரு மணி நேரமாக சுருக்கி ஒலிபரப்புவார்கள். நாங்கள் (அண்ணன், சகோதரிகள்) எல்லோரும் வானொலியை சுற்றி உட்கார்ந்து கொண்டு சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்போம். ஞாயிறன்று எங்களது தந்தை மதியம் சிறிது நேரம் தூங்குவார். அந்த நேரம் பார்த்து தான் நாங்கள் எல்லோரும் இதை கேட்போம். மற்ற நேரங்களில் எங்களுக்கு வானொலியை கேட்க அனுமதி இல்லை. அதனாலேயே நாங்கள் ஞாயிறு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருப்போம்.
 
ஒரு கால கட்டத்தில் இலங்கை வானொலி மிகவும் பிரபலமாகி விட்டது. அதுவும் கே.எஸ்.ராஜா போன்றவர்களின் கம்பீர குரலை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. காலை 7.15 மணிக்கு  செய்திகள் மிக பிரபலமாக இருந்தது. "ஆகாஷவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி" என்று அவர் கூடவே நாங்களும் சேர்ந்து சொல்வோம். அதே போல தினமும் இரவு ஒன்பது மணி செய்திகளை எனது தந்தை தவறாமல் கேட்பார். இடியோ, மழையோ, வெள்ளமோ, பூகம்பமோ எதுவாக இருந்தாலும் செய்திகளின் முதல் வரி மட்டும் "The Prime Minister Mrs. Indira Gandhi..... " என்று ஆரம்பிக்கும். இது ஏன் என்று எனது தந்தையிடம் ஒரு முறை அப்பாவியாக கேட்டேன். அதற்கு அவர் லேசாக சிரித்து விட்டு பதில் கூறாமல் போய் விட்டார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது!
 
 
 
சில வருடங்கள் கழித்து தொலைக்காட்சி வந்தது. 1975ம் வருடம் தான் முதன் முதலில் மெட்ராஸில் தொலைக்காட்சி ஒளிபரப்பை ஆரம்பித்தனர். அப்போதெல்லாம் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி தான். ஒவ்வொறு சனி ஞாயிறன்றும் மாலை 7 மணிக்கு ஏதாவது ஒரு திரைப்படத்தை போடுவார்கள். எங்களது தெருவில் உள்ள நண்பனின் வீட்டில் மட்டும் தான் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். சரியாக 6.55 மணிக்கு நாங்கள் அனைவரும் நண்பனின் வீட்டில் ஆஜராகி விடுவோம். அனைவரும் தரையில் உட்கார்ந்து கொண்டு திரைப்படம் முடியும் வரை பார்த்து கொண்டிருப்போம். நடுவில் ஒரு 15 நிமிடங்கள் செய்திகளுக்காக இடைவெளி இருக்கும். அப்போது வீட்டுக்கு சென்று அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு மீண்டும் மீதி திரைப்படத்தை பார்க்க கிளம்பி விடுவோம்! இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு பத்து முறையாவது "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்று ஒரு அட்டையை காண்பிப்பார்கள். ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்த போது ஜனவரி 25ம் தேதி இரவு வழக்கம் போல நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஆனால் அவரது உரை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு slide போட்டார்கள்  - "Please standby for President's massage to the nation". வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவம் இது.
 
ஒவ்வொறு புதன்கிழமையும் 'எதிரொலி' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதில் பார்வையாளர்களின் கடிதங்களை வாசிப்பார்கள். பாதிக்கு மேல் வசை பாடும் கடிதங்களாக தான் இருக்கும். தொலைக்காட்சியின் அதிகாரி முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பார். அதை ரசிப்பதற்காகவே (!) ஒரு கூட்டம் இருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!

சில மாதங்கள் கழித்து மேலும் சிலரது வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை வாங்கினார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் 'ஒளியும் ஒலியும்' என்ற நிகழ்ச்சி வரும். இதில் ஒரு முக்கால் மணி நேரம் சினிமா பாடல்களை போடுவார்கள். ஒரு சிலர் வீட்டு வாசலில் ஒரு சிறிய உண்டியலை பொருத்திவிட்டு, பெரியவர்களுக்கு 50 பைசா, சிறுவர்களுக்கு 25 பைசா என்று வசூல் செய்த கதையும் நடந்தது. ஆனால் இதெல்லாம் புதிதாக காலனிக்கு வருபவர்களிடம் தான். நாங்கள் யாருமே இது வரை ஒரு பைசா கூட கொடுத்தது கிடையாது. எல்லாமே ஓசி தான். ரொம்ப பேசினால் அவர்கள் வீட்டு பையனை எங்களது கூட்டத்திலிருந்து நாடு கடத்திவிடுவோம் என்ற அச்சம் தான். அதனால் அவர்களும் பெரிதாக கண்டு கொள்ளாமல் எங்களை ஓசியிலேயே பார்க்க விட்டார்கள்.
 
1982ம் வருடம் டெல்லியில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்த போது தான் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் வானொலியை கேட்பது அறவே நின்று விட்டது. வானொலியை கேட்பவர்களை ஏதொ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்களை போல பார்த்தனர். "உங்கள் வீட்டில் இன்னுமா டி.வி. வாங்கவில்லை?" என்று ஏதோ 7 ஜென்மத்து பாவத்தை செய்து விட்டதை போல கேட்பார்கள். மனைவிமார்களின் நச்சரிப்பு தாங்காமல் பலரது வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை வாங்க ஆரம்பித்தனர். வானொலி பெட்டி அனைவரின் வீட்டிலும் ஒரு காட்சி பொருளாகவே மாறி விட்டிருந்தது.
 
1990களில் பல தனியார் தொலைக்காட்சியினர் வர ஆரம்பித்திருந்தனர். கிட்டத்தட்ட வானொலியை அனைவரும் மறந்தே போய் விட்டனர். சீரியல் நோய் என்கிற புது விதமான கலாச்சாரம் பரவ ஆரம்பித்திருந்தது. 'சித்தி' என்ற நெடுந்தொடரில் அடுத்த வாரம்  ராதிகா என்ன செய்ய போகிறார் என்று எங்கு பார்த்தாலும் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். பொங்கல், தீபாவளி என்று பண்டிகைகள் வந்தால் முன்பெல்லாம் உறவினர்கள் வீட்டுக்கு சென்று வாழ்த்து கூறுவது வழக்கமாக இருந்தது. இந்த தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு, பொங்கலன்று காலையில் புது திரைப்பட பாடல்களும் காட்சிகளும் போட ஆரம்பித்தனர். தெரியாமல் அந்த நேரத்தில் உறவினர்கள் வீட்டுக்கு நீங்கள் சென்று விட்டால் அதோகதி தான். அந்த வீட்டுக்கார அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். நம்மை உட்கார வைத்து விட்டு அனைவரும் தொலைக்காட்சி பெட்டியையே பார்த்து கொண்டிருப்பார்கள். நடுவில் வரும் விளம்பர இடைவேளை வரும்போது மட்டும் நாம் இருக்கிறோம் என்கிற நினைவு வந்து நமது பக்கம் திரும்பி "அப்புறம்? வேற என்ன விசேஷம்?" என்று கேட்பார்கள். அதற்குள் விளம்பரம் முடிந்து தொலைக்காட்சியில் பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டிருக்கும். நாமும் அடுத்த விளம்பர இடைவேளை எப்போது வரும் என்று காத்திருந்து விட்டு அது வந்த உடனே நைசாக நழுவும் வழியை பார்ப்போம்.
 
தனியார் வானொலி நிலையங்கள் வந்த பிறகு தான் மீண்டும் வானொலி புத்துயிர் பெற்றது என்றே சொல்லலாம். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, எந்த நிலையத்தை வைத்தாலும் குப்பை பாடல்களாக தான் வருகின்றது. "மன்மத ராசா", "கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடி போலாமா", "எவண்டி ஒன்ன பெத்தான்" என்று தமிழ் சேவை புரிந்து கொண்டு பாடல்கள் வருகின்றன. தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளும் இதற்கு சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு ஆபாசத்தை வீசுகின்றன. சத்தியமாக சொல்கிறேன், இப்போதெல்லாம் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது.
நல்ல வேளை எனக்கு பிடித்த பழைய பாடல்களை எனது கணிணியில் சேமித்து வைத்துள்ளேன். எனது பெண்ணுக்கு அதில் ஒரு பாடல் கூட சுத்தமாக பிடிக்காது. அவளுக்கு "ஒரு கூடை சன்லைட்" என்று நான்கு நாட்கள் மலச்சிக்கலில் மாட்டிக்கொண்டவன் போல யாரோ கத்தும் பாடல் தான் பிடித்திருக்கிறது. கேட்டால் அது "யோ" பாடலாம். என்ன எழவோ!
 
இரவில் தூங்கும் முன் பி.சுசீலாவின் "நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்" என்ற அருமையான பாடலை கேட்டு கொண்டே எனது பழைய வானொலி பெட்டியை நினைத்து கொண்டேன். எனது நினைவுகளை போன்றே அதுவும் மெல்ல தூங்கி கொண்டிருக்கிறது.
 
 
 

Tuesday, 23 April 2013

விட்டதும் பெற்றதும்

இன்று எனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். தனது தங்கை ஏர் இந்தியா விமானத்தில் சமீபத்தில் பயணம் செய்தாரம். விமானம் தரை இறங்கிய போது பெட்டியை காணவில்லையாம். இவர் தவித்து போய் புகார் கொடுத்தாராம். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு  விமான நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததாம். இவர் சென்று பார்த்தால் கிழிந்த நிலையில் தனது பெட்டியை கண்டாராம்.

"அவர் ஏன் அந்த பெட்டியை பெற்றுக்கொண்டார், புகார் செய்யவில்லையா?" என்று நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர், "யார் இதற்கெல்லாம் அலைவது என்று விட்டு விட்டாள்", என்றார்.

2007ம் வருடம் என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து செளதியில் உள்ள தமாமுக்கு இலங்கை வழியாக சென்றேன். கொழும்பில் ஒரு 5 நாட்கள் தங்கி விட்டு, ஊர் சுற்றி பார்த்து விட்டு அப்படியே செளதிக்கு செல்வதாக திட்டம். சுனாமி முடிந்து சில மாதங்களே ஆகியிருந்த படியால் பல சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு செல்வதற்கே பயப்பட்டு கொண்டிருந்தனர். நான் பயணச்சீட்டை வாங்கும்போதே ஒரு முறைக்கு பல முறை விசாரித்து கொண்டதில் 40 கிலோ வரை சாமான்களை எடுத்து செல்லலாம் என்று கூறியிருந்தனர். அதன்படி, சென்னையிலிருந்து கிளம்பும்போது 37 கிலோ சாமான்களை எடுத்து சென்றேன். மறு பேச்சு பேசாமல் சென்னையில் ஏற்றி கொண்டனர்.

கொழும்பு சென்று 5 நாட்கள் சுற்றுலா முடிந்த பின் தமாமுக்கு செல்ல விமான நிலையத்துக்கு வந்தேன். கண்டிப்பாக 20 கிலோவுக்கு மேல் எடுத்து செல்ல கூடாது என்று கூறிவிட்டனர். "பயணச்சீட்டை வாங்கும் போதும் சென்னையிலும் இதை பற்றி யாருமே ஒன்றும் கூறவில்லை, இப்போது நான் எனது சாமான்களை யாரிடம் கொடுப்பேன்?" என்று கேட்டேன். நான் எவ்வளவோ மன்றாடியும் முடியவே முடியாது என்று அந்த விமான நிறுவன பெண் கூறிவிட்டாள். அது மட்டுமல்லாமல், நான் தமிழில் எனது மனைவியிடம் பேசுவதை பார்த்து விட்டு, கிண்டலாக மற்ற பெண்களிடம் என்னை பற்றி சிங்களத்தில் ஏதோ கூற அவர்கள் அனைவரும் ஏளனமாக சிரித்தனர். 

இலங்கையில் நான் 3 கிலோவுக்கு ஊர் சுற்றி பார்த்த போது வாங்கிய சாமான்கள் வேறு வாங்கி விட்டேன். அப்போது கூட மொத்தம் 40 கிலோ எடை தான் ஆயிற்று. சாமான்களை நான் எங்கு தான் விடுவது? வேறு வழியே இல்லாமல் 20 கிலோவுக்கு உண்டான அதிகப்படி பணத்தை  அபராதமாக அழுது விட்டு விமானத்தில் ஏறினேன். நல்ல வேளை என்னிடம் கடன் அட்டை இருந்ததால் தப்பித்தேன்.


தமாமில் இறங்கிய பின்பும் என்னால் இதை மறக்க முடியவில்லை. பணம் கட்டியது ஒரு புறம், கொழும்பில் அந்த பெண் என்னை எல்லோர் எதிரிலும் மிக கேவலமாக நடத்தியதில் அவமானத்தில் கூனி குறுகி விட்டேன். இவர்களை சும்மா விடக்கூடாது என்று மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது.

ஆனது ஆகட்டும் என்று காரசாரமாக ஒரு  மின் அஞ்சலை எழுதினேன். நான் எப்படி இலங்கை விமான நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்டேன் என்றும், நான் எவ்வளவு எடுத்து கூறியும் அவர்கள் என்னை அவமானப்படுத்தியதையும், சுனாமி முடிந்து சில மாதங்களே ஆன இலங்கையில் சுற்றி பார்க்க வந்த எனக்கு நல்ல பாடம் என்றும் கன்னா பின்னாவென்று ஆவேசமாக எழுதிவிட்டேன். எழுதி முடித்தவுடன் இதை யாருக்கு அனுப்புவது என்று எண்ணினேன். இலங்கை விமான நிலைய அதிகாரிகளுக்கு இதை அனுப்பினால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்களை விட மேலானவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்தேன். 


கூகிள் தான் இருக்கவே இருக்கிறதே. இலங்கை அரசின் வலை தளத்தை நோண்டி பார்த்தேன். சுற்றுலா துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என்று அனைவரது மின் அஞ்சல்களும் இருந்தன. அனைவருக்கும் சகட்டு மேனிக்கு அதே மின் அஞ்சலை அனுப்பினேன். "நான் பயணச்சீட்டை வாங்கும் போதே  பல முறை விசாரித்தேன். சென்னையில் விமானத்தை ஏறும்போது கூட யாரும் எதுவும் கூறவில்லை. கொழும்பில் தான் என்னை தவிக்க விட்டனர். அது மட்டும் இல்லாமல் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டனர். குடும்பத்துடன் இருந்ததால் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதே அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?" என்றெல்லாம் எழுதியிருந்தேன்.

பிரஷர் குக்கரிலிருந்து விடுபட்ட நீராவி போல எனது கோபத்தை எல்லாம் கோர்த்து அவர்களை ஒரு வாங்கு வாங்கி விட்டேன். சரி, மின் அஞ்சலை அனுப்பியாகி விட்டது. இனி என்ன செய்வது? என்னால் என்னதான் செய்ய முடியும்? இனிமேல் ஸ்ரீலங்கா விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். என்னால் அவ்வளவுதானே முடியும்?

வாழ்க்கையில் பல முறை நம்மை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை பார்த்து இப்படி பொங்கியது உண்டு. 'நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே' என்ற வெறுப்பை ஒவ்வொரு சாதாரண மனிதனும் கண்டிப்பாக எப்போதாவது நினைத்திருப்பான். இந்த கையாலாகாத்தனம் நடுத்தர வர்கத்தினர் பெற்ற சாபமா? "தனி மனிதனாக நம்மால் என்னத்தை சாதித்து விட முடியும்" என்கிற தவிப்பா?

இந்த மின் அஞ்சல் அனுப்பி அந்த நிகழ்ச்சியை நானும் மெல்ல மெல்ல மறக்க ஆரம்பித்திருந்தேன். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு திடீரென்று எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. ஸ்ரீலங்கா விமானத்தின் மிக மிக உயர்மட்ட அதிகாரியிடமிருந்து வந்திருந்தது. அவசரம் அவசரமாக அதை திறந்து படிக்க ஆரம்பித்தேன்.

"உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்களை இப்படி அலைக்கழித்திருக்க கூடாது. இது எங்களது தவறு தான். நீங்கள் 20 கிலோவுக்கு கட்டிய அதிகப்படி அபராதத்தை உங்களது செளதி முகவரிக்கு அனுப்புகிறோம்." என்று கூறியிருந்தார்.

வாடி, வா. உனது மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் எழுதியதால் அலறி அடித்து கொண்டு பதில் போட்டிருக்கிறாய் அல்லவா?

நான் உடனடியாக பதில் எழுதினேன். "நான் அபராதமாக கட்டிய பணத்தை எனது சென்னை முகவரிக்கே இந்திய ரூபாயாக அனுப்பிவிடுங்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த பிரச்னை இதோடு முடிவடைந்து விடவில்லை. எனது பணத்தை தான் நீங்கள் திரும்ப கொடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். என்னை அலைக்கழித்ததற்கு நீங்கள் எப்படி இழப்பீடு கொடுக்க போகிறீர்கள்?" என்று மிகவும் காட்டமாக கேட்டு எழுதினேன். ஆனால் இம்முறை அந்த அதிகாரிக்கு மட்டும் மின் அஞ்சலை எழுதினேன். மன்னிப்பு கேட்டு விட்டானே, போனால் போகிறான் என்று தான்.

ஒரு மணி நேரத்தில் அதற்கு பதில் மின் அஞ்சல் வந்தது. "நீங்கள் கேட்டு கொண்டபடி உங்களுடைய பணத்தை சென்னையில் இருக்கும் ஸ்ரீலங்கா விமான நிறுவனம் உங்களது வீட்டுக்கு வரைவோலையாக அனுப்பும்படி நாங்கள் ஆணையிட்டிருக்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட வருந்தத்தக்க அனுபவம் மீண்டும் இனி யாருக்கும் நடக்க கூடாது என்று விமான நிலையத்தினருக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளோம். இத்துடன் ஒரு கூப்பனை அனுப்பியுள்ளோம். எங்களுடைய சிறிய பரிசாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்த முறை ஸ்ரீலங்கா விமானத்தில் நீங்கள் பயணம் செய்யும் போது இந்த கூப்பனை விமான பணிப்பெண்ணிடம் கொடுக்கவும். எங்களது Duty Free கடையிலிருந்து  60 டாலருக்கு மதிப்பிலான உங்களுக்கு விருப்பமான எந்த பொருளையும் நீங்கள் தேர்வு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும். நீங்கள் பயணம் செய்யப்போகும் விமான விபரங்களை எங்களுக்கு கூறினால், அந்த பொருளை உங்களுக்கு நாங்கள் கொடுத்து விடுகிறோம்" என்றெல்லாம் அதில் எழுதியிருந்தது.

செளதியிலிருந்து திருச்சிக்கு எனது நண்பன் கொழும்பு வழியாக அதற்கு அடுத்த வாரம் செல்ல இருந்தான். நான் அவனது பயண விபரங்களை மின் அஞ்சலில் அனுப்பினேன். "எனது சார்பாக எனது நண்பனிடம் ஒரு perfume பாட்டிலை கொடுத்து விடவும்" என்று எழுதியிருந்தேன்.

விடுமுறைக்கு சென்று திரும்பிய நண்பன் அந்த perfume பாட்டிலை என்னிடம் கொடுத்தான். ஆனால் அதை விட சுவாரசியம் என்ன தெரியுமா? அந்த பயணத்தில் அவனுக்கு ராஜ மரியாதையாம். இவனது இருக்கைக்கு வந்து மிக மிக பணிவுடன் விமான பணிப்பெண் அந்த perfume பாட்டிலை கொடுத்தாளாம். அது மட்டும் இல்லாமல், பயணம் முழுவதும் பத்து முறை இவனிடம் வந்து விசாரித்து விட்டு போனாளாம்! எல்லாம் ஒரு புகார் செய்த வேலை! எனது நண்பனுக்கு பதிலாக நானே இலங்கை விமானத்தில் மீண்டும் சென்றிருந்தால் எனக்கும் "ராஜ மரியாதை" கிடைத்திருக்குமோ அல்லது ஜனாதிபதிக்கு மின் அஞ்சல் எழுதியதற்காக  விமானம் கொழும்பில் இறங்கியவுடன்  "ராஜாதிராஜ" மரியாதை என்று உள்ளே தள்ளி இருப்பார்களோ, தெரியாது.

நமது பக்கம் நியாயம் இருக்கும் போது நாம் துவண்டு விடக்கூடாது. ஒரு வேளை நான் ஸ்ரீலங்கா விமான அதிகாரிக்கு மட்டும் எழுதியிருந்தால் அதற்கு பதில் வந்திருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. இந்த அனுபவத்தால் நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். யாராவது தவறு செய்தால், அவர்களுக்கு மேல் உள்ளவர்களின் கவனத்துக்கு அதை கொண்டு செல்லுங்கள். உங்களது பக்கத்து நியாயத்தை கூறுங்கள். அவர்கள் நாக்கை பிடுங்கி கொண்டு சாகிற மாதிரி கேளுங்கள். மிக முக்கியமாக, அந்த புகாரை பல பெரிய மனிதர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி பார்த்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு நியாயம் கிடைக்கும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை யாராலும் பறிக்க முடியாது. இது நிச்சயம்!


 

Saturday, 6 April 2013

தலைப்பு செய்திகளும் மொழி பெயர்ப்புகளும்

"அலுவலகத்தில் படு பயங்கரமான வேலை" என்று சொல்லி கொள்ள வேண்டும். அப்போது தான் உலகம் நம்மை மதிக்கும். எல்லோரும் கூறும் இந்த பொய்யை நானும் கூறுவது உண்டு. (அவ்வப்போது வேலையும் செய்வது உண்டு  - சொன்னால் நம்புங்கள்). அலுவலகத்துக்கு வந்த பின் முதல் வேலையே  'மாலை மலரை' காலையிலேயே படிப்பது தான். வெறும் தலைப்பு செய்திகளை ஒரு பத்து நிமிடம் புரட்டினால் பிறகு உண்மையாகவே வேலையில் ஆழ்ந்து விடுவேன். பொதுவாக தலைப்பு செய்திகளை பார்த்தாலேயே அதன் சாராம்சத்தில் உள்ளே இருக்கும் குப்பை தெரிந்து விடுவதால் மேற்கொண்டு நான் செய்தியை படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

வழக்கம் போல இன்றும் தலைப்பு செய்திகளை பார்க்கும் போது ஒரு செய்தி கண்களில் பட்டது. "கம்பத்தில் கோலம் போட்ட பெண்ணை தாக்கி நகை கொள்ளை" என்பது தான் அந்த செய்தி. நகை கொள்ளை என்று எழுதி இருந்தால் அந்த செய்தி அவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காது. நான் தான் தலைப்பு செய்தியை மட்டும் பார்ப்பவன் ஆயிற்றே! அது என்ன கம்பத்தில் கோலம் போட்ட பெண்? ஒரு பெண் எப்படி கம்பத்தில் கோலம் போட முடியும்? ஒரு வேளை அந்த பெண்ணுக்கு மரை கழன்று விட்டதா? கம்பத்தில் சிறுவர்கள் கிறுக்கத்தானே செய்வார்கள்? கோலம் போட போயும் போயும் கம்பம் தானா கிடைத்தது? அப்படி கோலம் போடுபவளின் நகையை திருடன் எப்படி பறித்தான்?

இப்படி எல்லாம் என் மனதில் எண்ண அலைகள் தோன்றியவுடன் என்றைக்கும் இல்லாத திருநாளாக அந்த செய்தியின் விபரத்தை படிக்க ஆரம்பித்தேன். அதற்கு பிறகு தான் உண்மை விளங்கியது. கம்பம் என்ற ஊரில் ஒரு பெண் கோலம் போட்டு கொண்டிருந்தாள். அவளின் நகையை தான் திருடன் பறித்தானாம். நான் தான் வேறு விதமாக எண்ணி விட்டேன். ஹி, ஹி!

http://www.maalaimalar.com/2013/04/05114028/Cumbam-near-woman-attack-jewel.html


இது போன்ற பல தலைப்பு செய்திகளில் நான் ஏமாந்திருக்கிறேன். சில தலைப்பு செய்திகள் ஆங்கிலத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யும் போது பயங்கர நகைச்சுவையாக இருக்கும். அதே போல, சில செய்திகள் நாட்டுக்கு 'மிக உபயோகமானவையாக' இருக்கும். உதாரணத்துக்கு, நான் கல்லூரியில் படிக்கும் போது தினத்தந்தியில் முதல் பக்கத்தில் வந்த தலைப்பு செய்தியை மறக்கவே முடியாது. அது என்னவென்றால்,

"பிரசவ வலி!! பாகியராஜ் மனைவி பூர்ணிமாவுக்கு!!"

சத்தியமாக சொல்கிறேன், உலகின் வேறு எந்த செய்தித்தாளிலும் வராத தலைப்பு செய்தி இது. அதுவும் முதல் பக்கத்தில். செய்தியை சற்று மேலும் படித்தால் அதை விட சுவாரசியமாக இருந்தது.

"நடிகை பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா ஜெயராமன் கர்பமாக இருந்தார் என்பது தெரிந்ததே (!!)".

 இதற்கு அடியில் சிறியதாக குட்டி தலைப்புகள்.

"பிரசவ வலி". 

இன்று காலை அவருக்கு பிரசவ வலி எடுத்தது. 

"ஆஸ்பத்திரியில் அனுமதி"

பிரசவ வலி எடுத்தவுடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

"ஆணா பெண்ணா?"

பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதில் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்"

இது போன்ற செய்திகளை கேவலம் என்று கூறுவதா சுவாரசியம் என்று கூறுவதா அல்லது நமது தரம் இவ்வளவு தான் என்பதா, எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், முதல் பக்கத்தில் 'தினத்தந்தி' என்று கொட்டை கொட்டையாக  எழுத்து இருக்கும் அல்லவா, அதன் மேல், "தினத்தந்தி வெளி நாடுகளிலும் பிரபலம் பெற்றது" என்று எழுதியிருந்தார்கள். எதற்கு என்று தான் தெரியவில்லை.

தமிழ் பத்திரிகைகள் தான் இது போல உள்ளன என்று இல்லை. தொலைக்காட்சியிலும் இது போன்ற முத்துக்களை நான் பார்த்திருக்கிறேன் . இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்திருந்த சமயம். எங்கு பார்த்தாலும் அரசை புகழ்ந்து வாசகங்கள். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடைவெளி வெண்டும் என்று குடும்ப கட்டுப்பாட்டு பிரசாரம் செய்வதற்காக ஹிந்தியில் ஒரு வாசகத்தை தொலைக்காட்சியில் முதலில் காண்பித்தார்கள். அந்த வாசகம் என்னவென்றால்,


अगला बच्चा कब्?
पॆहला स्कूल् जायॆ तब्

"அகலா பச்சா கப், பெஹலா ஸ்கூல் ஜாயே தப்|"

இது தான் அந்த வாசகம்.

தமிழ் நாட்டில் தான் மூன்று தலைமுறைகளாக ஹிந்தியின் வாசனையே வராமல் நமது அரசியல்வாதிகள் தடுத்து விட்டனரே. அதனால்,
'இந்தி அரக்கியை' தெரியாத மகா ஜனங்களுக்கு இதன் மொழி பெயர்ப்பு என்னவென்றால்,

"அடுத்த குழந்தை எப்போது? முதல் குழ்ந்தை பள்ளிக்கு செல்லட்டும் அப்போது"

இப்படி இருந்திருக்க வேன்டும் மொழி பெயர்ப்பு. தமிழ் நாட்டில் தான் தமிழில் எழுதினாலோ பேசினாலோ தன்மான குறைவாயிற்றே, ஆங்கில புலமையை காட்டி விடவேண்டாமா? தமிழ் புத்தாண்டு வாழ்த்தை கூட ஆங்கிலத்தில் கூறி வாழ்த்திக்கொள்ளும் இனமல்லவா  நாம்!

திரையில் வந்த மொழி பெயர்ப்பு என்ன தெரியுமா?

"Next child when?
First go to school, then"

போகிற போக்கை பார்த்தால் இப்படி கூட தலைப்பு செய்திகள் வரலாம்

"விஸ்வனாதன் ஆனந்த் பம்பரத்தின் மேல் வலது பக்கத்தில்"

புரியவில்லையா?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அது வேறு ஒன்றும் இல்லை.

'Viswanathan Anand right on top" என்ற ஆங்கில தலைப்பின் தமிழ் மொழி பெயர்ப்பு தான்.

என்னை நீங்கள் அடிக்க வருவதற்குள் நான் கிளம்புகிறேன்!




Friday, 10 August 2012

பாத்திரமறிந்து...

எண்பதுகளில் பம்பாய் நரிமன் பாயிண்ட் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் நான் வேலைக்கு சேர்ந்திருந்த நேரம். அப்போதெல்லாம் வீ.டி. இரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நரிமன் பாயிண்ட்டிலிருந்து நிறைய 'ஷேர் டாக்ஸிகள்' கிடைக்கும். ஒரு பயணிக்கு மூன்று ரூபாய் வாடகை. முக்கால்வாசி டாக்ஸிகளை சர்தாஜிகள் தான் ஓட்டுவார்கள்.


பொதுவாக நான் மந்த்ராலயா வரை நடந்து வந்து அங்கிருந்து பஸ் பிடித்து நான் தங்கியிருந்த‌ மாடுங்காவுக்கு செல்வேன். சில சமயம் மிகவும் சோர்ந்து போயிருந்தால், பேசாமல் ஷேர் டாக்ஸி பிடித்து வீ.டி. வரை சென்று, அங்கிருந்து இரயில் பிடித்து செல்வேன். அது போல ஒரு முறை டாக்ஸியில் சென்று கொண்டிருந்த போது மறக்க முடியாத ஒரு அனுபவம் ஏற்பட்டது.


டாக்ஸியை ஒரு சர்தார்ஜி ஓட்டி கொண்டிருந்தார். நான் அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். சிக்னலுக்காக வண்டி நின்று கொண்டிருந்த போது தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கிழவி ஒவ்வொரு வண்டி அருகிலும் சென்று பிச்சை எடுத்து கொண்டிருந்தாள். ஆனால், அவளை கண்ட உடனேயே பலர் முகத்தை சுளித்து கொண்டனர். யாருமே அவளுக்கு பிச்சை போடவில்லை. எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது. நான் அமர்ந்திருந்த டாக்ஸி அருகே கிழவி வந்தாள்.


அதற்குள் சிக்னல் விளக்கு மஞ்சளுக்கு வந்து விட்டது. எனது பர்ஸில் அவசரம் அவசரமாக விரலை துழாவி கையில் கிடைத்த நாணயத்தை அவளிடம் இருந்த பாத்திரத்தில் போட்டேன். அது எந்த நாணயம் என்று கூட நான் பார்க்கவில்லை. வண்டி கிளம்புவதற்குள் அவளுக்கு ஏதாவது போட வேண்டும் என்ற நோக்கத்தில் கிடைத்த நாணயத்தை துழாவி எடுத்து போட்டேன்.

துரதிர்ஷ்டவசமாக எனது கையில் கிடைத்த நாணயம் வெறும் 25 பைசா தான். சிக்னல் அதற்குள் பச்சையாக மாறி விட்டது. வண்டியை ஓட்டுனர் கிளப்ப ஆயத்தமானார்.

ஒரு கணம் தான். அந்த ஒரே கணத்தில் யாருமே எதிர்பாராத விதமாக கிழவி அந்த 25 பைசா நாணயத்தை எடுத்து தரையில் ஓங்கி விட்டெறிந்து 'தூ' என்று காறி துப்பினாள். வண்டி கிளம்பி விட்டது.

எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மிகவும் அவமானமாக போய் விட்டது. வண்டியை ஓட்டி கொண்டு வந்த சர்தார்ஜி, " நல்லதுக்கே காலம் இல்லை. இதை  போல பத்து பேரிடம் 25 பைசா வசூல் செய்திருந்தால் ஒரு டீ, பன் வாங்க காசு சேர்ந்திருக்குமே" என்றார். (அப்போதெல்லாம் டீ ஒரு ரூபாய் தான்).

அப்படி நான் என்ன தவறு செய்து விட்டேன்? யாருமே காசு போடாமல் அவளுடைய குஷ்ட ரோகத்தை கண்டு முகம் சுளித்த போது நான் ஏதோ கையில் கிடைத்ததை போட்டது தவறா? அல்லது, மற்றவர்களை போல நானும் முகத்தை வேறு பக்கமாக திருப்பி கொண்டு இருந்திருக்க‌ வேண்டுமா? ஏழை என்று நினைத்து தானே நான் பிச்சை போட்டேன்? ரொம்ப நேரம் மனது மிகவும் சங்கடப்பட்டு கொண்டிருந்தது.

ஏனோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை செய்தி தாள்களில் 'உதவி தேவை' என்று விளம்பரங்களை பார்க்கும்போதும் இந்த சம்பவமே ஞாபகம் வரும். 'உண்மையிலேயே இவர்களுக்கு உதவி தேவையா, இவர்கள் ஏழைகள் என்றால் விளம்பரம் செய்யும் அளவுக்கு எப்படி பணம் வந்தது', என்றெல்லாம் மனதில் எண்ண அலைகள் தோன்றும். அப்படி நினைக்க கூடாது தான். பாவம், எத்தனையோ பேர் உதவிக்காக உண்மையிலேயே காத்திருக்கிறார்கள்.னால், எனது அன்றைய அனுபவம் ஏனோ ஆழ்மனதில்  பதிந்து விட்டது.


ஒரு வேளை அன்றைய தினம் நான் 25 பைசா போடுவதற்கு பதிலாக ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ போட்டிருந்தால் அந்த கிழவி பேசாமல் வாங்கி கொண்டு போயிருப்பாளோ? நான் எதுவுமே போடாமல் இருந்திருந்தால் கூட அந்த கிழவிக்கு ஒன்றும் தெரிந்திருக்காது, 25 பைசா என்றவுடன் அப்படி தூற எரிந்து விட்டாளே. அப்படி என்றால் பிச்சையிலேயே பெரிய பிச்சை, சிறிய பிச்சை என்று இருக்கிறதோ?

யோசித்து பார்த்தால் நாம் அனைவ‌ருமே பிச்சைக்கார‌ர்க‌ள் தான். எல்லோருமே பெரிய‌ பிச்சையை எதிர்ப்பார்த்து தான் அலைகிறோம். வ‌ங்கிக்கு சென்று கால் க‌டுக்க‌ வ‌ரிசையில் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னாய் நின்றால் சீந்த‌ ஆளில்லாம‌ல் இருப்போம். அதே ஒரு பெரிய‌ தொகையை 'டெப்பாசிட்' செய்தால், வ‌ங்கி மேலாள‌ர் வாச‌ல் வ‌ரை வ‌ந்து விடை கொடுப்பார். ந‌கை க‌டைக்கோ துணி க‌டைக்கோ  சென்று பெரிய‌ அள‌வில் வாங்கினால், நம‌க்கு குளிர் பான‌ உப‌ச‌ரிப்பு கிடைக்கிற‌து.  ஒரு கைக்குட்டை மட்டும் வாங்கி பாருங்களேன்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை பிச்சை எடுத்து கொண்டே இருக்கிறோம். குழந்தை பிறந்த உடன் ஆஸ்பத்திரியின் ஆயாவுக்கு ஏதாவது கொடுத்தால் தான் சரியாக கவனிப்பாள். அதுவும் ஆண் குழந்தை என்றால் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டும் என்ன குறைச்சலா? சாதாரணமாக இயற்கை பிரசவம் அடையும் தாய்களுக்கு கூட 'நீங்கள் அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்யா விட்டால் தாயின் உயிருக்கே ஆபத்து' என்று கடைசி நிமிடத்தில் பயமுறுத்தி பணம் பண்ணும் பிச்சைக்காரர்கள் தானே.

குழந்தை பிறந்து பள்ளியில் சேர்க்க நன்கொடை எதிர்பார்க்கும் பள்ளி நிர்வாகத்தினர், அந்த குழந்தைக்கு தேவையான சீருடைகள், ஷூ, சாக்ஸ் முதல் எல்லாவற்றையும் குறிப்பிட்ட கடையிலிருந்து மட்டும் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தும் ஆசிரியர்கள், இது தான் சாக்கு என்று பல மடங்கு விலையை கூட்டும் கடைக்காரர்கள், இவர்கள் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான்.

சரி விடுங்கள், வெளியே சென்றால் ஆட்டோ காரர் பெயருக்கு மீட்டரை வைத்து கொண்டு அதை போடாமலேயே அநியாயமாக கேட்கும் வாடகை, வீட்டுக்கு காஸ் சிலிண்டரை வைக்கும் ஆள், ஹோட்டலுக்கு சென்றால் சாப்பிட்ட தொகைக்கு மேல் ஏதாவது எதிர்ப்பார்க்கும் சர்வர் இவர்கள் எல்லாரும் 'சிறிய' பிச்சைக்காரர்கள். இவர்களாவது பரவாயில்லை, ஏதோ வயிற்று பிழைப்புக்கு கேட்கிறார்கள் என்று கூறலாம்.


ஏதாவது ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு செல்லுங்கள். 9 மணிக்கு ஆரம்பிக்கும் அலுவலகத்துக்கு நிதானமாக 10 மணிக்கு வந்து பெயருக்கு இரண்டு கோப்புகளை பார்த்து விட்டு மின் விசிறிக்கு அடியில் அரட்டை அடித்து கொண்டு வெட்டிக்கு 'வேலை' பார்க்கும் அதிகாரிகளுக்கு 'ஏதாவது' அன்பளிப்பு கொடுத்தால் தானே நமது காரியம் ஆகிறது? இவர்களை கெளரவ பிச்சைக்காரர்கள் என்று கூறலாமா? வேண்டாம், லஞ்சத்தில் என்ன கெளரவம் வேண்டி கிடக்கிறது?

தேர்தல் சமயத்தில் மட்டும் இரு கை கூப்பி கூழை கும்பாடு போட்டு வோட்டு கேட்கும் அரசியல் குப்பைகளும் நமது சமுதாயத்திலிருந்து வந்த பிச்சைக்காரர்கள் தானே, அவர்கள் என்ன வெளி நாட்டிலிருந்து குதித்தவர்களா? வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அரசாங்கமும் பிச்சையின் ஒரு வேறுபாடு தான். இதில் வேடிக்கை என்னவென்றால், வாங்கும் சம்பளத்தை தவிர வேறு எந்த விதமான வருமானமும் இல்லாமல் இருப்பவர்கள் தான் பாவப்பட்ட மக்கள். அவர்களை கசக்கி பிழிந்தெடுத்து ஒரு வழி செய்து விடுவார்கள்.

அதே சமயம், நீங்கள் கோடீஸ்வரராகவோ, ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு சொந்தமான 'விவசாயி'யாகவோ, கோடிக்கணக்கில் வங்கியில் கடன் வாங்கி திருப்பி தராமல், அரசாங்கத்திடமிருந்து எல்லா சலுகைகளையும் பெற்று கொண்டு வரியே கட்டாமல் ஏய்க்கலாம். இது தான் இந்தியா.

குழந்தைகள் பெரியவர்களாகி திருமணம் செய்து கொடுப்பது பிச்சையின் உச்சகட்டம். பிள்ளை வீட்டாரின் கோபத்துக்கு ஆளாக கூடாது என்று பதறும் பெண்ணை பெற்றவன் படும் பாடு இருக்கிறதே, சொல்லவே வேண்டாம். இத்தனைக்கும் பிச்சை போடுபவன் பெண் வீட்டுக்காரன். அதனால் தான் கன்னிகா'தானம்' என்று கூறுகிறார்களோ?

மரணத்துக்கு பிறகு மருத்துவ சான்றிதழ் இல்லாமல் சமரசம் உலாவும் சுடுகாட்டில் கூட சடலத்தை எரிக்க மாட்டார்கள். அதற்கு ஏதாவது கொடுத்தாக வேண்டும். சரி, அது முடிந்த கதை என்றால், அதற்கு பிறகு இறப்பு சான்றிதழ் அலைச்சல் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றாலும் பிச்சை போட்டால் தான் முடியும்.


இதை எல்லாம் கூட விட்டு தள்ளுங்கள். கோவிலுக்கு சென்றால் கடவுளிடம், 'எனக்கு இது வேண்டும், அது வேண்டும்' என்று தானே கேட்கிறோம்? எப்போதாவத,  ஒரே ஒரு முறையாவது "கடவுளே, குளிரிலும் வெயிலிலும் எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களை காப்பாற்று" என்றோ, "தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தீ அணைக்கும் படையினரை காப்பாற்று" என்றோ, 'யாராவது நமக்கு ஏதாவது கொடுக்க மாட்டார்களா' என்று அனாதை விடுதிகளில் அன்புக்கு ஏங்கும் குழந்தைகளை காப்பாற்று " என்றோ கடவுளிடம் வேண்டுகிறோமா? ஆகையால், கடவுள் முன் நாமும் பிச்சை எடுக்கும் பரதேசிகள் தான். இதில் மற்றவர்களை குறை கூற நமக்கு என்ன அருகதை இருக்கிறது?

தன்னலமில்லாத மனிதர்கள் என்பதே கிடையாது என்பது தான் நிதர்சனம். ஒரு யுகத்துக்கு ஒரு மகா புருஷர் அப்படி அவதரித்து அந்த கால கட்டத்தில் நாம் வாழ்ந்து அவரை பின்பற்றினாலேயே அதுவே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். 











Friday, 6 July 2012

எனது மெட்ராஸ்



புதிய நண்பர்களை பார்க்கும் பொழுது பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு பொதுவாக கேட்கப்படும் கேள்வி, "உங்களுக்கு எந்த ஊர்?" என்பது தான். என்னுடைய நண்பர்கள் பெரும்பாலும் மெட்ராஸை தவிர மற்ற ஊர்களின் பெயர்களை தான் முதலில் கூறுவர். நிறைய பேர், "எங்களது சொந்த ஊர் ......, ஆனால் இப்போது சென்னையில் குடி புகுந்து விட்டோம்" என்று கூறுவர். யாருமே, 'எனக்கு சொந்த ஊர் சென்னை' என்று கூறியது இல்லை. அது ஏன் என்று தான் எனக்கும் புரியவில்லை. எனது ஊர் மெட்ராஸ் என்று நான் கூறினால், "மெட்ராஸே தானா?" என்று கேட்பார்கள். அது என்ன மெட்ராஸ் வேறு கிரகத்தில் இருக்கிறதா என்ன? இல்லை, மெட்ராஸ் யாருக்கும் சொந்த ஊராக‌ இருக்க கூடாதா?

நான் பிறந்து வளர்ந்த ஊர் மெட்ராஸ் தான். என்னவோ தெரியவில்லை, மெட்ராஸின் பெயரை சென்னை என்று மாற்றிய பிறகு கூட  'சென்னை' என்ற பெயரை என் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கும் கிராமத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது. கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. அதில் எனக்கு வருத்தம் தான்.

எனது நண்பர்கள் பலர், "எங்களது ஊரில் ஆற்றில் குதித்து நீந்துவோம், மாங்காயை கல்லால் அடித்து தின்போம்" என்றெல்லாம் கூறும்போது பட்டிணத்தான் புண்ணாக்கு கடையை பார்ப்பது போல (நான் தான் பட்டிக்காட்டான் இல்லையே, மிட்டாய் கடையை பார்ப்பதற்கு!) அவர்கள் பேசுவதை ஆச்சரியத்துடன் பார்ப்பேன். இது வரை எனக்கு நீச்சல் தெரியாது. என்ன செய்வது, சென்னையில் இருக்கும் ஒரே நதியும்  அதற்கு லாயக்கில்லாமல் போய் விட்டது.

கிராமத்து நண்பர்கள் தத்தம் ஊர்களின் திருவிழாக்களை பற்றி கூறும்போது மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஊர் கட்டுப்பாடு, வீட்டு வாசலில் சாலைக்கு பாதி தூரம் வரை அதிகாலையில் பெண்கள் கோலம் போடுவது, பச்சை பசேலென்ற வயல், என்றெல்லாம் கூறுவார்கள். எனக்கு தான் அதற்கான வாய்ப்பே கிடையாதே! எனக்கு தெரிந்ததெல்லாம் கபாலி கோவில் (கபாலீஸ்வரர் தான், வைத்யனாதன் என்பதை வைத்தி என்று சுருக்குவது இல்லையா, அது போல), அறுபத்தி மூவர், தேர், என்பது தான்.

கமர்கட், மாங்காய் தலையன், கையில் குடத்தை வைத்து கொண்டு 'கோவிந்தோ' என்று கத்திக்கொண்டே சாலையில் உருளும் பிச்சைக்காரன், இவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். மேற்கு மாட வீதியில் இறைவனின் தேர் வரும்போது 'ஓ' என்று கத்திக்கொண்டே  தேர் வடத்தை இழுப்பது ஒரு ஜாலி தான். சற்றே விவரம் தெரிந்த வயது வந்த பிறகுதான் பாதி பேர் வடத்தை பிடித்து கொண்டு வெறும் சத்தத்தை மட்டும் போடுகிறார்கள் என்று புரிந்தது! 

உடம்பு முழுவதும் வேர்வை மழையில் நனைய தேர் வடத்தை இழுத்துக்கொண்டு வரும்போது பால்கனியிலிருந்து பெண்கள் பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை கொட்டுவார்கள். சித்திரை மாத சுட்டெறிக்கும் வெயிலில் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். நான் தண்ணீரை சொன்னேன்!

நான் படித்தது லாயிட்ஸ் சாலையில் உள்ள பிரபல பள்ளியில். பின்னாளில் தான் அது மிக பிரபலமாயிற்று. விளையாடுவதற்கு கிராமங்களை போல எங்களுக்கு என்ன ஏரியா, குளமா, ஒன்றும் கிடையாது. அதனால், கோபாலபுரத்தில் உள்ள மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவோம். சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணனும் நானும் பல நாட்கள் கோபாலபுரம் தெருக்களில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். பாருங்கள், கூட விளையாடிய நண்பன் பிரபல கிரிக்கெட் வீரனாகி விட்டான். என்னால் தான் அப்படி ஆக முடியவில்லை. நல்ல வேளை கிரிக்கெட் உலகம் பிழைத்தது! 

கோபாலபுரத்தில் அருமையான கிருஷ்ணர் கோவில் உள்ளது. மார்கழி மாதத்தில் தினமும் நான்கு மணிக்கே எழுந்து குளித்து விட்டு அதிகாலை குளிரில் சாமி கும்பிட சென்ற அனுபவத்தை மறக்க முடியாது. குறிப்பாக அந்த கோவிலில் சுடச்சுட சர்க்கரை பொங்கல் தருவார்கள். பிரமாதமாக இருக்கும். சாமியை பார்க்க போகிறோமோ இல்லையோ, பிராசாதத்துக்காக கண்டிப்பாக ஆஜராகி விடுவோம்.

 1975ம் ஆண்டு. இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தை கொண்டு வந்த நேரம். அந்த கிருஷ்ணர் கோவில் வாசலில் பரட்டை தலையுடன் எப்போது பார்த்தாலும் ஒரு பைத்தியக்காரன் படுத்து கொண்டே இருப்பான். தனக்கு தானே பேசிக்கொள்வான். திடீரென்று சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை சரளமாக கூறுவான். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.பள்ளியில் இருந்து நாங்கள் வீடு திரும்பும் போது அவனை சுற்றி நின்று கொண்டு கிண்டல் செய்வது எங்களுக்கு பொழுது போக்காக இருந்தது. 

அப்போது ஸ்டாலினை இந்திரா காந்தி அரசு கைது செய்திருந்த நேரம். சென்னை நகரமே பதற்றத்தில் இருந்தது. தினமும் பள்ளியில் இருந்து வரும்போது கோவில் வாசலில் படுத்து கொண்டு இருந்த பைத்தியத்தை திடீரென்று சில நாட்களாக காணவில்லை. ஒரு முறை இதை பற்றி காவல் துறையில் இருந்த எனது பெரியப்பாவிடம் எதேச்சையாக கூறியபோது அவர் சிரித்து கொண்டே, "அவன் பைத்தியம் இல்லை. கோவிலின் எதிரே இருக்கும் முக்கிய அரசியல்வாதியின் வீட்டுக்கு வருபவர்களை வேவு பார்க்க மத்திய அரசு அனுப்பிய ஒற்றன்" என்று கூறினார்! இதில் வேடிக்கை என்னவென்றால், இவன் மத்திய அரசின் உளவுப்படையை சேர்ந்தவன் என்பது இந்த அரசியல்வாதிக்கும் தெரியும் என்பது தான். அவரது வீட்டிலிருந்து பல நாட்கள் அவனுக்கு சாப்பாடு போவதை கண்டிருக்கிறேன். கெளண்டமணி கூறுவது போல, அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா!


1978ம் ஆண்டு என்று நினைக்கிறேன். படு பயங்கரமான வறட்சி. சென்னையில் சுத்தமாக தண்ணீர் என்பதே கிடையாது என்ற நிலைமை ஆகி விட்டது. விஜயவாடாவில் இருந்து இரயிலில் தண்ணீர் வரும். லாரிகளில் ஒவ்வொறு பேட்டையாக வந்து தண்ணீர் கொடுப்பார்கள். அப்போதெல்லாம், "சே! நாமும் கிராமத்தில் ஆற்றோரத்தில் பிறந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று நினைத்திருக்கிறேன்.

அடிக்கடி 'தொண்டர்கள் தீக்குளிப்பு' என்ற செய்தியை படித்திருப்பீர்கள். ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? தீக்குளிப்பவன் எப்போதும் கிராமத்தை சேர்ந்தவனாக தான் இருப்பான். சென்னையை சேர்ந்தவன் ஒருவனும் தீக்குளிப்பதில்லை. இன்னும் சொல்ல போனால் சோப் போட்டே குளிப்பதில்லை என்றே கூறலாம்.

 
நண்பர்கள் 'மெட்ராஸ்' என்றவுடனேயே எனது நண்பர்கள் திட்ட ஆரம்பிப்பார்கள். "ஊராடா இது, ஆட்டோக்காரன் எவ்வளவு அடாவடி செய்கிறான், கூவம் எவ்வளவு நாறுகிறது" என்றெல்லாம் கூறுவார்கள். ஆமாம், ஆட்டோக்காரர்கள் அடாவடி செய்வது உண்மை தான் ஆனால் நல்லவர்களும் இருக்கிறார்களே. நம்பினால் நம்புங்கள், எழுபதுகளில் கூவம் நதி கடலில் கலக்கும் இடத்தில் தெளிவான நீரில் நான் படகு சவாரி செய்திருக்கிறேன்.

மெட்ராஸில் தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். 1956ல் சென்னா ரெட்டி சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று 'மதராஸ் மனதே' என்ற போராட்டத்தை தொடங்கினார். நல்ல வேளை, அது பிசுபிசுத்து விட்டது. இங்கு தமிழர்களை விட தெலுங்கு, கன்னடம், மலையாளிகள், மார்வாடிகள் போன்றவர்கள் தான் அதிகம் என்றே தோன்றுகிறது. உழைக்க தயாராக இருந்தால், கண்டிப்பாக இங்கு வேலை உண்டு. நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போகலாம், ஆனால்  வயிற்று பிழைப்புக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் ஊர் மெட்ராஸ்.

பல தெருக்களின் பெயர்களை மாற்றி விட்டார்கள். எட்வர்ட் எலியட்ஸ் ரோடு ராதாகிருஷ்ணன் சாலை ஆகி விட்டது. லாயிட்ஸ் ரோடு அவ்வை சண்முகம் சாலையாகி விட்டது (ஒளவை என்று எழுத கூடாதாம்!). தெருக்களில் ஜாதி பெயர்களை அழித்து விட்டார்கள். ஜாதிகளை ஒழித்து விட்ட பாரதம் வாழ்க. அதற்காக மைலாபூரில் உள்ள பிள்ளையார் தெருவை 'யார்' தெரு என்று மாற்றி இருக்க வேண்டாம்! ஒவ்வொரு வீட்டுக்கும் பழைய எண், புதிய எண் என்று இரண்டு எண்கள் உள்ளன. புதிய எண்ணே பழையதாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பது வேறு விஷயம்.


தமிழ் நாட்டின் தலைநகரத்தில் கிராமத்து தமிழ் பேசினால் நீங்கள் வெளி நாட்டிலிருந்து தப்பி வந்தவர். பஸ்ஸில் ஏறி 'அண்ணா சாலை'க்கு ஒரு டிக்கட் கொடுங்கள் என்று கேட்டு பாருங்களேன்.யாருக்கும் புரியாது. 'மவுண்ட் ரோடு' என்று நல்ல தமிழில் கேட்டு பாருங்கள், அப்போது தான் எல்லோருக்கும் புரியும்.இங்கு நுனி நாக்கு ஆங்கிலம் பேசினால் பப்பு வேகாது. சிறப்பான சென்னை தமிழை உலகில் வேறு எங்குமே பேசுவது கிடையாது. 'ஓ...., சாவு கிராக்கி, ஊட்ல சொல்லிகுனு வன்ட்டியா?'என்பதெல்லாம் இங்கு சர்வ சாதாரணமாக கேட்கலாம். 80 வயது கிழவரை 'யோவ், ஐயாசாமி, வாய்யா இங்க‌' என்று 20 வயது பையன் அழைத்தால், கிழவர் "ஐயா, சாமி" என்று கும்பிட்டு கொண்டே வரும் காட்சியை சென்னையில் காணலாம். கிராமத்து நண்பர்களுக்கு இது மரியாதை குறைவாக தோன்றும். ஆனால், எல்லோரும் எல்லோரையும் 'நீ' 'வா' 'போ' என்று அழைப்பதால் சென்னையில் யாரும் இதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. பழக பழக சென்னை தமிழ் உங்களது தினசரி பேச்சில் எதிரொலிக்க ஆரம்பிக்கும். அதற்கு பிறகு உங்களிடம் யாராவது ராங் காட்னா மெர்சல் பண்ணிட வேண்டியது தான். இன்னா, நான் சொல்றது கரீட் தானே?

ஏமாற்று பேர்வழிகள் இருக்கும் ஊர் தான், ஆனால் ஏமாறாமல் இருப்பது உங்களது சாமர்த்தியம், இதற்கு ஊர் என்ன செய்யும்?
 
வியர்வை வழியும் ஊர் தான். கூவ நாற்றம் எடுக்கும் ஊர் தான். இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் ஊர் மெட்ராஸ். என்னதான் குறை இருந்தாலும் எனது மெட்ராஸுக்கு இணை இல்லை என்றே கூறலாம்.