Wednesday, 20 August 2008

சலாம் பம்பாய்‍ - 2

தங்குவதற்கு இடமில்லை என்று கல்லாவில் இருந்தவர் கூறியவுடன் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது (முதலில் இதற்கு முந்தைய பதிவை இங்கே பாரக்கவும், அப்போது தான் இந்த பதிவு புரியும்). அவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடினேன். கடைசியில் அவர் மனம் இறங்கி, "கொஞ்ச நேரம் இங்கே காத்திருங்கள். யாராவது காலி செய்தால் உங்களுக்கு அந்த இடத்தை தருகிறேன். ஆனால் சரியாக 24 மணி நேரத்தில் நீங்கள் அறையை காலி செய்து விடவேண்டும். நீட்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று கறாராக கூறினார்.சரி, இப்போதைக்கு பெட்டியை வைக்க ஒரு இடம் கிடைத்ததே. பிறகு பார்த்துக்கொள்வோம் என்று யாராவது காலி செய்வதற்காக காத்துக்கொண்டிருந்தேன். 'கடவுளே, இப்படி முன்பின் தெரியாத ஊரில் கொண்டு வந்து என்னை தவிக்க விட்டு விட்டாயே' என்று மனதுக்குள் அழுது கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு ஒருவர் காலி செய்தார். அப்பாடா!உடனடியாக அந்த இடத்துக்கு நான் துண்டு விரித்து விட்டேன். கல்லாவில் இருந்தவர் என்னிடம் 21ரூபாய் வாடகை பணத்தை முதலிலேயே வாங்கி கொண்டார். (இத்தனை வருடங்களுக்கு பிறகு கூட அந்த ரசீது என்னிடம் உள்ளது, மறக்க முடிமா சில நிகழ்ச்சிகளை?)

ஒரு அறையில் ஆறு கட்டில்கள் இருந்தன. அதில் அழுக்கு விரிப்புடன் ஒரு இரும்பு கட்டிலை காண்பித்து "இது தான் உங்களுடைய இடம். கண்டிப்பாக நாளை காலை நீங்கள் காலி செய்து விட வேண்டும்" என்று மறுபடியும் ஒரு முறை ஞாபகப்படுத்தி விட்டு சென்றார்.பெட்டியை கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு குளிக்க சென்றேன். மனது முழுவதும் கவலை கடலில் மூழ்கி இருந்தது. 'என்ன செய்வது கடவுளே! இது போன்ற சிக்கலை இது வரை நாம் சந்தித்தது இல்லையே' என்று எண்ணிக்கொண்டேன். திடீரென்று மனதில் ஒரு மின்னல்.'ஏதாவது உதவி தேவைப்பட்டால் இந்த எண்ணுக்கு போன் செய்' என்று எனது தந்தை ஒரு காகிதத்தை கொடுத்திருந்தார் அல்லவா, அது ஞாபகம் வந்தது. அவசரம் அவசரமாக குளித்து விட்டு நான் பெட்டியில் வைத்திருந்த ரயிலில் போட்ட அந்த சட்டையை எடுத்து பாக்கெட்டினுள் விரலை துழாவினேன். அப்பாடா, நல்ல வேளை காகிதம் கிடைத்து விட்டது.உடனே கல்லாவுக்கு ஓடி போய் "சார், எனக்கு அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும்" என்று கூறினேன். அவரோ, கறாராக "போனெல்லாம் பண்ண முடியாது" என்று கூறிவிட்டார். போனுக்கு உண்டான காசு கொடுத்து விடுவதாகவும், மிகவும் அவசரம் என்றும் அவரிடம் கெஞ்சி பார்த்தேன். அவரோ, மிகவும் கோபமாக என்னை விரட்டினார். சரி, இன்னும் கொஞ்சம் இங்கு இருந்தால் அறையை உடனடியாக காலி செய்ய சொல்லி விடுவார் என்று நினைத்து கீழே இறங்கி வந்தேன். அக்கம் பக்கத்தில் எங்குமே பொது தொலைபேசி பூத் இல்லை. (அந்த கால கட்டங்களில் கை பேசியோ STD PCO கடைகளோ வந்திருக்கவில்லை).


போன் செய்ய வேண்டும் என்றால் தபால் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அனால் இப்போது அதற்கு நேரம் இல்லையே. எதிரே பார்த்தால் சங்கர மடம் இருந்தது. அங்கு சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டேன். இப்போது என்ன செய்வது? அப்பாவின் கீழ் வேலை செய்தவர் எங்கே இருப்பார்? அவர் வேலை செய்த வங்கியின் கிளை 'கிங் சர்க்கிள்' என்ற இடத்தில் உள்ளது என்று எனது தந்தை பேச்சு வாக்கில் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே, பக்கத்தில் உள்ள ஒரு தமிழரிடம் 'கிங் சர்க்கிள் எங்கே உள்ளது' என்று கேட்டேன். அவர், 'இப்படி சென்றால் ஒரு 15 நிமிடங்களில் வந்து விடும்' என்று கூறினார். உடனடியாக அவர் சொன்ன அந்த வழியில் தேடிக்கொண்டே அந்த வங்கியின் கிளைக்கு நடந்தே சென்று விட்டேன். அப்போது மணி 9 தான் ஆகியிருந்தது. 10 மணிக்கு தான் கிளையை திறப்பார்களாம்.பரவாயில்லை. எப்படியாவது அவரை இன்று நேரில் சந்தித்து விடவேண்டும். சோர்வாக அப்படியே அந்த வங்கியின் படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டேன். கடவுளே, அவர் விடுமுறையில் இல்லாமல் இருக்க வேண்டுமே. அப்படியே வந்தாலும் எனக்கு உதவ வேண்டுமே! என்னை காப்பாற்று இறைவா!

சரியாக 9.50 மணிக்கு ஒவ்வொறு நபராக உள்ளே வர ஆரம்பித்தனர். இதில் ஸ்ரீனிவாசன் யாராக இருக்கும்? ஆபிசர் போல இருந்த ஒருவரிடம் "நான் ஸ்ரீனிவாசன் அவர்களை சந்திக்க வந்திருக்கிறேன்" என்று கூறினேன். அவர் என்னை உள்ளே வரவழைத்து உட்கார சொன்னார். சிறிது நேரத்தில் ஸ்ரீனிவாசனே வந்து சேர்ந்தார். அப்பாடி!

அவரிடம் என்னை இன்னாரின் மகன் என்று அறிமுகப்படுத்தி கொண்டேன். முதலில் சிறிது யோசித்தவர், பிறகு உற்சாகமாகி, "அடடா, நீ அவரின் மகனா" என்றார். எனது தந்தை தான் ஓய்வு பெற்றுவிட்டாரே. நல்ல வேளை, இவருக்கு அவருடைய பெயர் ஞாபகம் வந்து விட்டது. நான் ஸ்ரீனிவாசனிடம் "சார், எனக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. நாளைக்கு வேலையில் சேர வேண்டும். தற்போதைக்கு Concernsல் தான் தங்கி இருக்கிறேன். ஆனால் நாளை காலை அந்த அறையை காலி செய்து விட வேண்டும். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்கு பம்பாயில் உங்களை விட்டால் வேறு யாரையுமே தெரியாது. நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்று நான் கூறி முடிப்பதற்குள் எனக்கே துக்கம் தொண்டையை அடைக்க ஆரம்பித்து விட்டது.

அவர் எனது நிலைமையை புரிந்து கொண்டு என்னை ஆசுவாசப்படுத்தினார். "கட்டிங் சாப்பிடுகிறீர்களா" என்றார். எனக்கு "கட்டிங்" என்றால் என்ன என்று புரியவில்லை. எனது பதிலுக்கு காத்திருக்காமல் உள்ளே சென்று "தோ கட்டிங் தே தோ" என்று யாரிடமோ கூறினார். சிறிது நேரத்தில் ஒரு சிறுவன் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் பாதி அளவுக்கு தேனீரை ஊற்றி கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தான். ஓஹோ, இது தான் பம்பாய் பாஷையில் "கட்டிங்கோ"? பெங்களூரில் இதையே "பை டூ" என்பார்கள்.


அந்த தேனீரை மடக்கென்று ஒரே வாயில் குடித்து விட்டேன். நான் இருந்த நிலைமைக்கு காலை சிற்றுண்டி சாப்பிட கூட மறந்து விட்டிருந்தேன். அவர் என்னிடம் "பம்பாயில் வேலை கிடைப்பது பெரிய விஷயமே இல்லை. ஆனால் தங்க இடம் கிடைப்பது தான் கஷ்டம்" என்று ஆரம்பித்தார். அடுத்து என்ன கூற போகிறாரோ தெரியவில்லையே!

மளமளவென்று இரண்டு மூன்று போன் செய்தார். யார் யாரிடமோ மராத்தியில் பேசினார். பிறகு என்னை பார்த்து, "இங்கே மாதுங்காவிலேயே ஒரு அறை இருந்தது. உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அந்த அறை இன்னும் காலியாக இருக்கும். எதற்கும் வா நேரிலேயே போய் பார்த்து விடலாம்" என்றார். தனது மேலதிகாரியிடம் சென்று அனுமதி கேட்டுவிட்டு என்னுடன் மீண்டும் மாதுங்காவுக்கே நடந்து வந்தார். எனக்கு கண்களில் நீர் முட்டி விட்டது. கடவுளே! இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டேனே!

எனது எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்ட ஸ்ரீனிவாசன் எனது தோளின் மேல் தனது கையை போட்டு, "எதற்கும் கவலை படாதே!" என்றார். 'எங்கிருந்தோ வந்தான், இடை ஜாதி நான் என்றான், இன்றிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்' என்ற பாடல் ஞாபகம் வந்தது.
இந்தியன் ஜிம்கானா என்ற மைதானத்தின் எதிரில் ஒரு பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. அந்த ஏரியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 50 அல்லது 60 வருடங்களுக்கு மேல் கண்டிப்பாக இருக்கும். ஒரு வீட்டின் உள்ளே நுழைந்து இரண்டாம் மாடிக்கு ஏறி சென்றோம். ஒவ்வொறு படிக்கட்டும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொறு அடி நாங்கள் எடுத்து வைக்கும் போதும் 'கீ கீ' என்று சத்தம் போட்டது. இரண்டாம் மாடியில் ஒரு மராத்தி பெரியவர் கதவை திறந்தார். ஸ்ரீனிவாசன் அவரிடம் மராத்தியில் பேசி என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த பெரியவர் எங்களை உள்ளே அழைத்து ஆறு அடிக்கு ஆறு அடி உள்ள ஒரு அறையை காண்பித்தார். அந்த புறாக்கூட்டுக்குள்ளேயே ஒரு ஓரத்தில் ஒரு குழாயும், பாதி சுவரும் இருந்தது. அந்த இடத்தில் தான் குளிக்க வேண்டுமாம். வாடகை மாதத்துக்கு நானூறு ரூபாய். ஒரு மாத வாடகையை முதலிலேயே தந்து விட வேண்டும் என்றெல்லாம் கூறினார். எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. தங்குவதற்கு ஒரு இடம் இருந்தால் போதுமடா சாமி என்று இருந்தது. உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டு உடனேயே அவரிடம் ஒரு மாத வாடகையை கொடுத்து விட்டேன். Concernsக்கு சென்று எனது சூட்கேஸை எடுத்து கொண்டு வருவதாக கூறினேன்.

வெளியே நானும் ஸ்ரீனிவாசனும் வந்தோம். அவரின் காலில் விழாத குறையாக இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு பல முறை நன்றி கூறினேன்.

ஸ்ரீனிவாசன் மெதுவாக என்னிடம், "பல வருடங்களுக்கு முன் உனது தந்தை தான் எனக்கு இந்த வேலையே போட்டு கொடுத்தார். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவருடைய மகனை நான் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை" என்றார் மெதுவாக. நான் வியப்பில் அப்படியே நின்று விட்டேன். இதை பற்றி எனது தந்தை ஒன்றுமே கூறவில்லையே. 'தனக்கு கீழே வேலை செய்தவன்' என்று தானே கூறினார்.

நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன். எனக்கு துக்கம் தொண்டையை அடைக்க அழுது விட்டேன். அவர் ஆதரவாக என்னை அணைத்து கொண்டார். பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா! எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

எப்பொழுதோ யாருக்கோ எனது தந்தை பிரதிபலனை எதிர்பாராது செய்த ஒரு உதவி இத்தனை வருடங்களுக்கு பிறகு எனக்கு எப்படி உதவி இருக்கிறது பாருங்கள். உண்மையிலேயே நமக்கு மேல் கடவுள் இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறான் இல்லையா? பிறருக்கு நாம் செய்யும் உதவி நமக்கு உதவாவிட்டாலும் யார் மூலமாவது நமது குழந்தைகளுக்காவது உதவும் என்றே இந்த நிகழ்ச்சி நிரூபிக்கிறது இல்லையா?

இது நடந்து முடிந்து சரியாக 20 வருடங்கள் ஆகி விட்டன. பல இடங்களுக்கு சென்று கடைசியில் இப்போது செளதி அரேபியாவில் இருக்கிறேன். இதை எழுதும் இதே தேதி சென்ற வருடம் (19 ஆகஸ்டு, 2007) அதிகாலை சென்னையில் இருந்து ஒரு போன் வந்தது. திடீரென்று எனது தந்தை காலமாகி விட்டார் என்ற செய்தியே அது.

பிள்ளைக்கு தந்தை ஒருவன், நம் எல்லோருக்கு தந்தை இறைவன். நீ ஒருவனை நம்பி வந்தாயோ, இல்லை இறைவனை நம்பி வந்தாயோ!


10 comments:

CVR said...

எனது பெங்களூர் நாட்களை நினைவு படுத்தி விட்டது!!
உணர்வு பூர்வமான தருணங்கள் தான்..
நல்லா எழுதியிருக்கீங்க..
வாழ்த்துக்கள்.. :)

Anonymous said...

My deep condolence.

Expatguru said...

நன்றி அனானி. இந்த ஒரு வருடம் எனக்கு மிகவுமே கடினமாக இருந்தது. ஆனால், பிறப்பை போல இறப்பும் வாழ்க்கையில் ஒரு நிகழ்வுதான் என்பதை மனம் ஏற்று கொள்ள சிறிது காலம் தேவைப்படுகிறது அல்லவா? இருக்கும் வரை பிறருக்கு நல்லது செய்வோம், அப்படி செய்ய முடியவில்லை என்றால் தீமையாவது செய்யாமல் இருப்போம் என்பது தான் நான் கற்ற பாடம்.

Expatguru said...

நன்றி CVR. அடிக்கடி வாங்க.

ஜோசப் பால்ராஜ் said...

நம் முன்னோர் செய்த நல்லகாரியங்கள் நம்மை பல இடங்களில் காக்கும். இதை நானும் அனுபவபூர்வமாக உணர்ந்தவன்.

உங்கள் தந்தையின் நினைவு நாளுக்கு இதைவிட சிறந்த அஞ்சலி செலுத்த முடியாது. நாமும் நம் வருங்கால சந்ததிகளுக்கு இது போன்ற சொத்துக்களை சேர்க்க வேண்டும்.

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜோசப். சரியான தருணத்தில் எனக்கு தங்க இடம் கிடைத்திருக்காவிட்டால் உண்மையிலேயே நான் தவித்து போயிருப்பேன். நீங்கள் கூறியது போல, நாம் வருங்கால சந்ததியினருக்கு சேர்க்கும் உண்மையான சொத்து இது தான்.

Geetha Sambasivam said...

ரொம்ப வருத்தமா இருக்கு, உங்க தந்தையின் மறைவைக் கேட்டு, நீங்க எழுதி இருக்கிறதைப் பார்த்தால், நிறையவே அனுபவங்கள் உள்ளவர்னும் புரியுது. மறுபடியும் வரேன்.

Expatguru said...

வாங்க கீதாம்மா. உங்களுடைய பல பதிவுகளை நான் நெடு நாட்களாக படித்து கொண்டு வருகிறேன்.

மரணம் என்பதும் ஜனனத்தை போல ஒருவித அனுபவம் தானே? இது நிலையான ஒன்று இல்லை என்பதை நமக்கு நினைவு படுத்தவே கடவுள் கொடுக்கும் பாடம் என்றே தோன்றுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா! எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

கவிநயா said...

"பிரதிபலன் கருதாது செய்த உதவி", உண்மைதான். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.