Monday 23 March 2009

செளதியில் வேலை தேடுகிறீர்களா?

நீங்கள் வளைகுடாவிலோ அல்லது செளதியிலோ வேலை தேடுகிறீர்களா? அப்போது இந்த கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள்.

எனது நண்பர் கணேஷ் செளதியில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலையில் இருக்கிறார். அவரை பார்ப்பதற்க்காக ஒரு நாள் அவருடைய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அவருடைய அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்வதற்காக புதிதாக கேரளாவை சேர்ந்த ஒருவரை அன்றுதான் நியமித்திருந்தார்.  எனது நண்பரிடம், "என்ன, புதிதாக ஆள் சேர்த்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே" என்றேன். அதற்கு அவர் அந்த ஆளை பற்றி கூற ஆரம்பித்தார். அவருடைய பெயர் சோமன்.  அவருக்கு நேர்ந்த அனுபவங்களை கேளுங்கள்.

9 வருடங்களுக்கு முன்பு  கொச்சியிலிருந்த ஒரு ஏஜெண்ட் மூலமாக தோட்டக்காரன் வேலைக்கு சோமனை ஒரு செளதிக்காரன் தேர்ந்தெடுத்தான். சோமன் 8-வது வகுப்பு வரைதான் படித்துள்ளார். வீட்டில் வறுமை காரணமாக, 'சரி, செளதிக்கு போய் கொஞ்சம் சம்பாதித்துவிட்டு வருவோம், பசி பிரச்னையாவது தீரும்' என்ற நம்பிக்கையில் தோட்டக்காரன் வேலைக்கு ஒப்புக்கொண்டார். மாதம் 800 ரியால் சம்பளம், 2 வருடங்களுக்கு ஒரு முறை விடுப்பு என்று ஒப்பந்தம் போடப்பட்டது. வீட்டில் இருக்கும் நகைகளை விற்று சிறிது கடனும் வாங்கி ஏஜெண்ட்டுக்கு 75000 ரூபாய் கொடுத்தார் சோமன். "எப்படியும் செளதிக்கு போய் சம்பாதிக்க போகிறோம், 2 வருடங்களில் இந்த கடனை எல்லாம் அடைத்து விடலாம்" என்று நினைத்தார்.

செளதிக்கு வந்து சேர்ந்த உடனேயே சோமனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமான நிலையத்தில் அவரை வரவழைக்க வந்திருந்த செளதிக்காரன், முதலில் அவருடைய கடவுச்சீட்டை (passport) பிடுங்கிக்கொண்டான். பிறகு வண்டியில் உட்கார வைத்து பல மணி நேரம் பாலைவனத்தில் அவரை அழைத்து சென்றான்.

வெகு தூரம் பாலைவன மணலில் சென்ற பிறகு கீற்று கொட்டகையை போல ஒரு இடம் தென்பட்டது. அந்த இடத்தை சுற்றி ஒரு 25 ஒட்டகங்கள் இருந்தன. வண்டியை நிறுத்திய செளதி, சோமனை இறங்க சொன்னான். ஒரு பெரிய  நிறைய தண்ணீரையும் 'கபூஸ்' என்ற சுக்கா ரொட்டி ஒரு 15ம் கொடுத்து விட்டு, இனிமேல் இந்த ஒட்டகங்களை பார்த்து கொள்வது தான் உன்னுடைய வேலை என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

வாரம் ஒரு முறை அந்த செளதிக்காரன் வந்து தண்ணீரும் 15 கபூஸையும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவான். பேச்சு துணைக்கு கூட அள் இல்லை. மைல் கணக்கில் வெறும் மணல் தான். அவருடைய நிலைமையை யோசித்து பாருங்கள். ஒரு நாள், இரண்டு நாட்கள் இல்லை, ஒரு வாரம் இரண்டு வாரங்கள் இல்லை, 5 வருடங்கள் இதே போல கழிந்துவிட்டன. சோமனின் உடல் நலமும் வெகுவாக பாதிப்படைந்தது. ஆனால் அதை விட அவரின் மனம் கிட்டத்தட்ட பித்து பிடித்தது போல ஆகிவிட்டது.

ஒரு முறை இதே போல செளதிக்காரன்  வந்த போது, சோமன் அவனிடம்  தான் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவர் மேல் பரிதாபப்பட்டு செளதிக்காரன் அவரை அழைத்துக்கொண்டு சில மணி நேரம் பயணம் செய்து கடைசியில் ஜூபைல் என்கிற ஊருக்கு வந்து சேர்ந்தான். அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவரை பார்ப்பதற்காக வெளியே உட்கார்ந்திருந்தார்கள். 5 வருடங்களுக்கு பிறகு வெளி மனித முகத்தை பார்த்த சோமனுக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அந்த மருத்துவமனையில் எனது நண்பர் கணேஷ் தனக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் சென்றிருந்தார். யாருடனோ தொலைபேசியில் மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்த போது சோமன் அதை கேட்டுவிட்டார். உடனே அவரிடம் ஓடி வந்து அவரது கால்களில் விழுந்து "எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்" என்று கதறினார்.

அதற்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. அந்த செளதிக்காரனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது.

தெய்வாதீனமாக அதே சமயத்தில் கணேஷுக்கும் அவரது அலுவலகத்தில் வேலை செய்ய ஒரு ஆள் தேவைப்பட்டது. உடனே அவர் செளதிக்காரனிடம் சோமனுடைய‌ விசாவை இவரது நிறுவனத்துக்கு மாற்றி தருமாறு கேட்டார். அதற்குண்டான செலவுகளை தனது நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறினார். முதலில் இதற்கு ஒப்புக்கொள்ளாத செளதிக்காரன் அரை மனதாக பிறகு ஒப்புக்கொண்டான். விசா மாற்றப்படும் வரை சோமன் தனது அலுவலகத்திலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் (கணேஷ் அந்த நிறுவனத்தின் மேலாளர் என்பதால் இன்னும் வசதியாகிவிட்டது).

சோமனுக்கு கையில் பணமே இல்லை. இவருக்கு பேசியபடி 800 ரியால் தராமல் மிக மிக குறைந்த சம்பளத்தை 5 வருடங்களுக்கு கணக்கு பார்த்து ஒட்டுமொத்தமாக செளதி கொடுத்தான். எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று சோமனும் அதற்கும் ஒப்புக்கொண்டார்.ஒரு 10 நாட்களில் சோமனுடைய விசா கணேஷுடைய நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.  அன்று தான் அவரும் எனது நண்பரது அலுவலகத்தில் சேர்ந்திருந்தார்.

அவரது அனுபவங்களை கேட்ட பிறகு எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. நானும் எனது நண்பரும் பேசிக்கொண்டிருக்கும் போதே சோமன் இரு கோப்பைகளில் எங்களுக்கு தேனீரை கொண்டு வந்து வைத்தார். பிறகு அங்கேயே ஒரு ஓரமாக தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்.

எனது நண்பர் "என்னப்பா?" என்று கேட்க, சோமன் மிகவும் தயங்கி தயங்கி , "நான் ஊருக்கு பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. தயவு செய்து என்னுடைய ஊருக்கு போன் போட்டு கொடுக்கிறீர்களா" என்று பரிதாபமாக கேட்டார். உடனே கணேஷ் தன்னுடைய கைப்பேசியிலிருந்தே அவருடைய கிராமத்துக்கு போன் செய்தார். அப்பொழுதெல்லாம் கைப்பேசி இப்போது இருப்பதை போன்று அனைவரிடமும் இல்லை. இவரது வீட்டுக்கு 5 வீடு தள்ளி ஒரு வீட்டில் போன் இருந்தது. "செளதியிலிருந்து சோமன் பேசுகிறேன், என்னுடைய மனைவியை கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? நான் 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் போன் செய்கிறேன்" என்று கூறினார்.

வாழ்க்கையிலேயே மிக நீண்ட 5  நிமிடங்கள் அதுவாகத்தான் இருந்திருக்கும். சோமனுக்கு கை நடுங்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் அதே எண்ணுக்கு போன் செய்தார்.

"சாந்தா..." என்று மிகவும் சன்னமான குரலில் ஆரம்பித்தார். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. ஒரு நிமிடம் முழுவதும் இங்கே இவரும் ஊரில் அவரது மனைவியும் 'ஓ' வென்று விடாமல் அழ ஆரம்பித்தனர்.அந்த ஒரு நிமிடத்துக்கு இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வெறும் அழுகை தான். கூடி இருந்த எங்கள் அனைவருக்குமே கண்கள் கலங்கிவிட்டன. 5 வருடங்களாக இவர் தன் மனைவி மக்களிடம் பேசவே இல்லை. இவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா என்றே தெரியாமல் அவரது குடும்பம் இத்தனை நாட்கள் தவித்து கொண்டு இருந்திருக்கிறது.

இப்படியும் கூட மனிதர்களா? இவரை மாதிரி எத்தனையோ இந்தியர்கள் இங்கு செளதியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மீன்பிடி தொழிலில் இருப்பவர்கள், பெட்ரோல் பங்க்குகளில் வேலை செய்பவர்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள், சாலை போடுபவர்கள், பண்ணைகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுடைய பாடு மிக மிக பரிதாபகரமானது. பலருக்கு சம்பளம் கொடுத்து மாதக்கணக்காகிறது. பிச்சைக்காரர்களை போல பிறரை நம்பி வாழ வேண்டிய நிலைமை இவர்களுக்கு.

இந்திய தூதரகமும் இவர்களை கண்டுகொள்வதில்லை என்று ஒரு புகார் உள்ளது. ஒரு முறை இதை பற்றி தூதரக அதிகாரி ஒருவரிடம் நேரேயே கேட்டுவிட்டேன். "பிரிட்டன், அமெரிக்க தூதரகங்கள் தங்களது குடிமக்களை எப்படி பாதுகாக்கின்றன? ஒரு வெள்ளைக்காரனைக்கூட நீங்கள் சிறையில் அடைக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களது தூதரகம் மிக மிக பலமானது. இந்தியர்களை மட்டும் ஏன் இப்படி நீங்கள் பாதுகாக்க முடியவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர் கூறியது வியப்பாக இருந்தது. "செளதியில் இந்தியர்கள் மட்டுமே 5 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இதில் 90% மிக மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இத்தனை பேருக்கு நாங்கள் எப்படி சேவை செய்ய முடியும்? எங்களால் முடிந்த வரை உதவி செய்கிறோம்" என்றார்.

இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் நமது மக்களுக்கு முதலில் செளதியை பற்றி விபரங்களை தெரிந்தவர்கள் எடுத்து கூற வேண்டும். "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து ஏஜெண்ட்டிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாவது செளதியில் வேலை வாங்கி சென்று விடவேண்டும்" என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை இந்த நிலைமை மாறாது.

"எப்படியாவது செளதிக்கு வந்து விட வேண்டும், அது எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை" என்று நினைப்பவர்களுக்கு இங்கு உள்ள நிலைமையை எடுத்து கூற வேண்டும். நமது அரசாங்கத்தை நம்பி பயனில்லை. முதலில் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம்.

இப்படி ஏமாற்றப்படுபவர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் தான். நம்முடைய பாமர மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி செளதிக்கு வர தயாராக இருப்பவர்கள் ஏன் தங்களுடைய சொந்த ஊரிலேயே அந்த ஒரு லட்சம் ரூபாயை முதலீடாக போட்டு ஒரு சிறிய பெட்டிக்கடை ஆரம்பிக்க கூடாது? கிராமங்களில் போணி ஆகவில்லையா? சென்னை போன்ற நகரங்களில் இப்போதெல்லாம் தச்சு வேலை செய்பவர்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள் போன்றவர்களுக்கு ஏக கிராக்கி. இதில் ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம். கார் மெக்கானிக்குகள் எவ்வளவு பணம் செய்கிறார்கள் தெரியுமா(குறை கூற வரவில்லை, அந்த அளவுக்கு அவர்களுக்கு Demand இருக்கிறது). அட ஒன்றுமே தெரியாதவரா? சென்ட்ரல் இரயில் நிலையத்திலோ கோயம்பேடிலோ சென்னை துறைமுகத்திலோ சுமை தூக்கலாமே. கெளரவமாகவும் நேர்மையாகவும் வாழ ஆயிரம் வழிகள் உள்ளனவே.

Wednesday 4 March 2009

சூரத் நினைவுகள்=1

சூரத்திலிருந்து பம்பாய்க்கு அடிக்கடி அலுவலக விஷயமாக இரயிலில் செல்ல
வேண்டி இருந்தது. சூரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு "பறக்கும் ராணி" (Flying Rani)
என்ற இரயிலில் தான் நான் வழக்கமாக செல்வேன். இது பம்பாய்க்கு 10 மணி
அளவில் சென்று விடும். அதே போல் மாலை 5.30 மணி அளவில் பம்பாயிலிருந்து கிளம்பி சூரத்துக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்து விடும். ஒரே நாளில்
பம்பாய் சென்று வர வசதியாக இருந்ததால் இந்த இரயில் மிகவும் பிரபலமாக‌
இருந்தது. அத‌னால் எப்போதுமே இந்த‌ இர‌யிலில் கூட்ட‌ம் இருந்து கொண்டே
இருக்கும்.

முன் ப‌திவு செய்யாத‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ இர‌யிலில் முன்பதிவு
செய்தவர்கள் பெட்டியில் ஏறி ஏதாவ‌து காலி இருக்கையில் அம‌ர்ந்து
விடுவார்க‌ள். பிற‌கு ப‌ய‌ண‌ச்சீட்டு ப‌ரிசோத‌க‌ர் வ‌ந்த‌வுட‌ன் முன்
ப‌திவுக்கான‌ க‌ட்ட‌ண‌த்தை கொடுத்து விடுவார்க‌ள். இது வ‌ழ‌க்க‌மாக‌
ந‌ட‌க்கும் ஒன்று தான்.

இதே போல், ஒரு முறை ப‌ம்பாய் செல்வ‌த‌ற்காக‌ நான் இந்த‌ இர‌யிலில் ஏறி
என‌து இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். என‌து ப‌க்க‌த்து இருக்கை
காலியாக‌ இருந்த‌து. ச‌ரி, ஒரு வேளை இந்த‌ இருக்கைக்கான‌ ஆள் வ‌ர‌வில்லை
போலிருக்கிற‌து என்று நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி சிறிது
தூர‌ம் சென்றிருக்கும். மிக‌வும் அழுக்கான‌ குர்தாவுட‌ன் ஒரு ஆள் அந்த‌
காலி இருக்கையில் வ‌ந்து அம‌ர்ந்து கொண்டான்.

என‌க்கோ உள்ளூர பயம். 'இவ‌னை பார்த்தால் பிச்சைக்கார‌ன் போல‌
இருக்கிறான். ச‌ம‌ய‌ம் பார்த்து ந‌ம்முடைய‌ ப‌ர்ஸை அபேஸ் செய்ய‌
போகிறான். நாம் தான் உஷாராக‌ இருக்க‌ வேண்டும்' என்று
நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி ஒரு முக்கால் ம‌ணி நேர‌ம்
இருக்கும். ஒரு சிறிய‌ ட‌ப்பாவை திற‌ந்தான். உள்ளே ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில்
ஜிலேபி இருந்த‌து. என்னிட‌ம் ஒரு ஜிலேபியை கொடுத்தான். நான் உஷாராக‌
ம‌றுத்து விட்டேன். அவ‌ன் விட‌வில்லை. நான் க‌டைசியில் என‌க்கு உட‌ல்
ந‌ல‌ம் ச‌ரியில்லை என்று கூறி ச‌மாளித்து விட்டேன்.

' இவ‌ன் ப‌ய‌ங்க‌ர‌மான‌ ஆளாக‌ இருப்பான் போலிருக்கிற‌தே. முத‌ல்
ஜிலேபியை என்னிட‌ம் கொடுத்த‌திலேயே தெரிந்து விட்ட‌து இவ‌ன் ஏதோ ஒரு
திட்ட‌த்துட‌ன் தான் வ‌ந்திருக்கிறான்'

இரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென்று என்னிடம் பேச்சு கொடுக்க
ஆரம்பித்தான்.

"நீங்கள் பம்பாய் செல்கிறீர்களா?"

"ஆமாம்"
(மனதுக்குள் : இல்லடா கலப்பை, ஆப்கானிஸ்தான் செல்கிறேன்)

"இரயில் சரியான நேரத்தில் தான் செல்கிறது, இல்லையா?"

"ஆமாம்"
(டேய், டேய், என‌க்கு தான் நேர‌ம் ச‌ரி இல்லை)

"நீங்க‌ள் சூர‌த்தில்தான் இருக்கிறீர்க‌ளா"

"ஆமாம்"
(இல்லை, செள‌தியில் இருக்கிறேன். அங்கிருந்து ஒட்டக‌த்தின் மேல் ஏறி
சூர‌த்துக்கு வ‌ந்தேன்)

இப்ப‌டியாக‌ அவ‌ன் கேட்ட‌ கேள்விக‌ளுக்கெல்லாம் "ஆமாம்" என்று ஒரே ப‌தில்
கூறினேன். பேச்சை வ‌ள‌ர்த்தால் தானே பிர‌ச்னை?

திடீரென்று எனது வலது கையை பிடித்து இழுத்து அதில் இருந்த மோதிரத்தை
உன்னிப்பாக கவனித்தான். நான் வெலவெலத்து போய் விட்டேன். உடனே எனது கையை இழுத்து கொண்டு ஒரு முறை முறைத்தேன். எனது மோதிரத்தில் ஒரு ஒற்றை வைரக்கல் இருந்தது. அதை தான் அவன் உற்று பார்த்தான். எனது சந்தேகம் சரியாகி விட்டது போல. இவனிடம் 200% உஷாராக இருக்க வேண்டும்.

அவன் சிரித்துக்கொண்டே, "இது நல்ல வைரம்" என்றான். அடப்பாவி, தீர்மானமே
செய்து விட்டான் போல இருக்கிறது.

அதற்கு பிறகு எனக்கு இருப்பே கொள்ளவில்லை. 'எப்படா பம்பாய் வரும்' என்று
ஆகிவிட்டது. இந்த திருட்டுப்பயலிடமிருந்து எப்பொழுது தப்பிக்க போகிறோம்
என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இரயில் திடீரென்று மெதுவாக செல்ல ஆரம்பித்தது. ஜன்னல் வழியே வெளியே
பார்த்தேன். இப்போது இரயில் நின்றே விட்டது. சிகப்பு சிக்னலில் இரயில்
நின்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நிமிடங்களில் போரிவலி என்ற இரயில்
நிலையம் வந்து விடும். இந்த நிலையத்தில் முக்கால்வாசி பேர் இறங்கி
விடுவார்கள். வண்டி சிக்னலுக்காக காத்திருந்தபோது போரிவலியில் இறங்க
வேண்டியவர்கள் தத்தம் சாமான்களை இறக்கி கீழே இறங்குவதற்கு தயாராக
இருந்தார்கள்.

அப்போது என் அருகில் இருந்த திருட்டு பிச்சைக்காரன் தனது இடுப்பிலிருந்து
ஒரு சுருக்கு பையை எடுத்தான். ஒரே ஒரு நொடி தான். அந்த பையை நன்றாக
முடித்து போட்டு தனது அழுக்கு குர்த்தாவுக்குள் வைத்துக்கொண்டான். ஆனால்
அந்த ஒரு நொடியில் அந்த பைக்குள் இருந்ததை நான் பார்த்து விட்டேன்.
எனக்கு மிக பெரிய அதிர்ச்சி. அந்த பைக்குள் நான் பார்த்தது பல விதமான
சிறிய கற்களை போன்ற பொருட்கள். ஆனால் பளபளவென்று மின்னியது போல இருந்தது.

இரயில் மெதுவாக நகர்ந்து தளத்துக்குள் நுழைந்தது. நான் அவ‌னை பார்த்து
"நீங்க‌ள் என்ன‌ வேலை செய்கிறீர்க‌ள்?" என்று கேட்டேன். அந்த
'பிச்சைக்காரன்'  "நான் சூரத்தில் வைரங்களை வெட்டும் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு கீழே இறங்கி விட்டான்.

அவனது சுருக்கு பையில் இருந்தது அத்தனையும் வைர கற்கள் என்று அப்போது
தான் எனக்கு உறைத்தது. இத்தனை நேரம் ஒரு சாதாரண பயணி போல என் அருகில் அமர்ந்து வந்திருக்கிறான். தன்னிடம் இருக்கும் பொருள் யாருக்கும்
தெரியக்கூடாது என்பதற்காக இப்படி அழுக்கு உடையில் வந்திருந்தானோ என்னவோ.

ஒருவரை அவரின் உடைகளை வைத்து எடை போடுவது எவ்வளவு தவறு என்று அன்று எனக்கு தெரிந்தது. அந்த இரயில் பயணமும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

நான் என்னவோ அவன் என்னுடைய ஒற்றைக்கல் வைர மோதிரத்தை
தான் திருடப்போகிறான் என்று நினைத்து கொண்டிருந்தேன். அவன் தன்னிடம்
இருக்கும் வைரங்களை மற்றவர்கள் திருடிவிடக்கூடாது என்று பிச்சைக்காரன்
உடையில் இருந்தானோ என்னவோ? கவியரசர் அனுபவித்து அல்லவா
எழுதியிருக்கிறார்,

'ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா'