Wednesday 5 August 2009

அண்ணன் என்னடா தம்பி என்னடா..

பல வருடங்களுக்கு முன்பு எஸ்.வீ.சேகரின் நாடகம் ஒன்றில்  கீழ்க்கண்ட வசனங்கள் இடம் பெறும்.
ஒருவர் சேகரிடம் சென்று கேட்பார்,

"ஏன் சார், எப்ப பாத்தாலும் பணம் பணம்னு பேயா அலயுறீங்களே, உங்களுக்கு 'பணப்பேய்' அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்துடலாமா?"

சேகர் அதற்கு மிகவும் வெட்கத்துடன்,

"ஐயோ, வேண்டாங்க, பட்டம் எல்லாம் வேண்டாம்"

 "அப்போ?"

"பட்டமெல்லாம் வேண்டாம். பணமா குடுத்துடுங்க!"

கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இந்த வசனத்தில் எவ்வளவு யதார்த்தம் இருக்கிறது பாருங்கள். நானும் பல முறை பார்த்து விட்டேன், "வாழ்க்கை என்றால் பணம் மட்டும் தானா?" என்று சில பேர் கேட்பார்கள். அப்படி கேட்பவர்கள் எல்லோருமே பணக்காரர்களாக இருப்பார்கள்!

இன்றைய உலகில் பணம் இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களை நாய் கூட மதிக்காது என்பது தான் கசப்பான உண்மை. மனிதன் பிறந்த நிமிடம் முதல் இந்த பணம் என்னும் வேதாளம் அவனை தொற்றிக்கொள்கிறது. பிறப்பு சான்றிதழ் வேண்டுமா? பணத்தை வெட்டுங்கள். குழந்தைக்கு உடல் நலம் சரியில்லையா? மருத்துவரிடம் கூட்டி சென்றால் தலைவலிக்கு கால்களில் இருந்து கழுத்து வரை அனைத்து பரிசோதனைகளையும் செய்ய சொல்வார். அதையும் ஒரு குறிப்பிட்ட Labல் தான் செய்ய வேண்டும்.

குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டுமா? முதல் நாள் இரவில் இருந்தே வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கி பள்ளியில் கொடுத்தால் கட்டிட நிதி என்று நன்கொடையை கறந்து விடுகிறார்கள். குழந்தை சற்றே பெரிய வகுப்பை அடைந்தால் 'ட்யூஷன்' என்ற பெயரில் அவர்களை வாட்டி வதைப்பது மற்றொறு கலை. ஒரு வழியாக பள்ளியை முடித்து கல்லூரியில் சேர வேண்டும் என்றால் அதற்கான நன்கொடை தனியாக. நம் மக்களுக்கு தெரிந்ததெல்லாம் நமது பையன்/பெண் டாக்டராகவோ இஞ்ஜினியராகவோ ஆக வேண்டும் என்பது தானே. உலகத்தில் வேறு தொழிலே கிடையாதே. அதனால் எப்பாடு பட்டாவது கடனை உடனை வாங்கி இந்த இரண்டு படிப்புகளில் ஏதாவது ஒன்றில் சேர்த்து  ஜென்ம சாபல்யத்தை அடைவார்கள். எல்லாவ‌ற்றுக்கும் தேவை ப‌ண‌ம் ப‌ண‌ம் ப‌ண‌ம் தான்.

சரி, எப்படியோ படிப்பை ஒரு வழியாக முடித்தால் அடுத்த தடை வேலை. ஏற்கனவே படித்து முடித்து வெளியே  இருப்பவனே வேலைக்கு சிங்கி அடித்து கொண்டிருக்கிறான். இதில் புதிதாக வேறா? சரி, எப்படியோ எவனெவன் கால் கையிலோ விழுந்து கொடுக்க வேண்டியதை கொடுத்து பையனை வேலையில் சேர்த்தால், தான் வாடகை வீட்டில் இருப்பது அப்போது தான் திடீரென்று ஞாபகம் வரும். உடனே வங்கிக்கு ஓடி டாமேஜரிடம் பல் இளித்து ஒரு கடனை வாங்கி வீட்டை கட்டி முடித்து நிமிரலாம் என்று நினைக்கும் போதே பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடும்.

அதற்குள் பதவி காலம் வேறு முடியும் தருவாயாக இருக்கும். சரி, ஓய்வு பெற்ற பணத்தில் பெண்ணுக்கு ஒரு வழியாக கல்யாணத்தை செய்து முடித்து 'அம்மாடி' என்று மூச்சு விட்டால் ஆடி சீர், ஆடாத சீர் என்று ஒவ்வொன்றாக ஆரம்பித்து விடும். அதை எல்லாம் முடித்து ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தால் எங்கே விடுகிறார்கள்? சாலைக்கு பைபாஸ் இருக்கிறதோ இல்லையோ, இதயத்துக்கு கண்டிப்பாக பைபாஸ் செய்தே ஆக வேண்டும். அதுவும் அப்போலோவில் செய்தால் தான் இன்னும் விசேஷம்.

எனது தந்தையும் என்னை போல பிழைக்க தெரியாத ஒரு நேர்மையான அதிகாரியாக தானே இருந்தார். உண்மையாக இரு, திருடாதே, பொய் சொல்லாதே என்று சொல்லி சொல்லி எங்களை எல்லாம் வளர்த்தார். முந்தின நாள் இரவு வரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று காலமானதில் குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது. காரியத்தை எல்லாம் முடித்து விட்டு நான்காவது நாள் சுடுகாட்டில் உள்ள மாநகராட்சி அலுவலரிடம் சென்று இறப்பு சான்றிதழை கேட்டேன். இரண்டு முறை அலைக்கழித்தார். எனது மர மண்டைக்கு அவரது தேவை அப்போது தான் உறைத்தது. 'சார், நீங்க ஆனந்த பவன் வாசலுக்கு வந்துடுங்க, எல்லா சான்றிதழ்களையும் கொடுத்து விடுகிறேன்' என்றார். அங்கு சென்று பார்த்தால் அவரது பத்து விரல்களிலும் ஜொலிக்கும் மோதிரங்கள். கால் விரல்களிலும் மோதிரங்கள் இருந்தனவா என்று தெரியவில்லை! பணம் கை மாறிய பிறகு, "உங்களுக்கு Legal Heir சான்றிதழ் வேண்டியிருக்குமே'  என்று கேட்டார் (அட, இது இவருக்கு எப்படி தெரியும்?). 'ஓண்ணும் கவலைப்படாதீங்க சார், என்னோட wife அந்த டிபார்ட்மெண்ட்டில்தான் இருக்காங்க. எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிடலாம்' என்றார். அடப்பாவி, குடும்பமே கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கிறதோ! தந்தையை இழந்த துக்கத்தில் இருந்து மீள கூட முடியவில்லை. கருணையாவது கத்திரிக்காயாவது. பணம் வேண்டும் சார், பணம் வேண்டும். அது இருந்தால் தான் உயிர் வாழ முடியும். இது தான் நிதர்சனம். இது தான் உண்மை நிலை.

எல்லாமே பணம் என்றாகிவிட்டது. இதில் அண்ணனா தம்பியா, அப்பனா பிள்ளையா, ஒட்டா உறவா? பிறப்பிலிருந்து இறப்பு வரை பணம் பணம் என்று அனைவரையும் இந்த பேய் வாட்டுகிறது. நல்ல வேளை சுவாசிக்கும் காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் காசு கொடுக்க வேண்டாம். இறைவா, உண்மையிலேயே நீ க‌ருணை உள்ள‌வ‌ன் தான். எதையுமே என்னிட‌ம் இருந்து எதிர்ப்பார்க்காம‌ல் இருக்கிறாயே! ஆனால் உன்னை கோவிலில் நான் பார்க்க‌ வேண்டும் என்றால் அத‌ற்கு த‌னியாக‌ ப‌ண‌ம் கொடுத்து டிக்க‌ட் எடுக்க‌ வேண்டுமே இறைவா! ப‌ண‌த்தை நீ கேட்க‌வில்லை, நீ ப‌டைத்த‌ ம‌னித‌ன் தான் கேட்கிறான்.

ஆக மக்களே! நமது அடுத்த சந்ததியினருக்கு என்ன சொல்லி கொடுக்கிறோமோ இல்லையோ, அவர்கள் கண்டிப்பாக பணம் பண்ண வேண்டும் என்பதை அனைவரும் கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். நீ பெரியவனாக ஆன பிறகு என்னவாக போகிறாய் என்று யாராவது கேட்டால், "பணம் பண்ணுவேன்' என்று கூறுமாறு சொல்லி கொடுக்க வேண்டும். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
இந்த பணம் பண்ணும் வித்தையில் தேர்ச்சி பெறாமல் தமது உயிரையே கொடுத்து நமது நாட்டு எல்லையில் காக்கும் படை வீரர்கள், முகம் சுளிக்காமல் நோயாளியின் கழிவை எடுக்கும் நர்ஸுகள், கொதிக்கும் வெயிலில் தார் சாலை போடும் தொழிலாளிகள என்று மிக மிக சிலரின் நல்ல உள்ளங்களினால் தான் அவ்வப்போது நாட்டில் மழை பெய்கிறது. பிழைக்க தெரியாத நேர்மையான மனிதர்கள்! உண்மையிலேயே, க்வியரசர் கூறியது போல,

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா!

அந்த நல்ல உள்ளங்களை சிரம் தாழ்த்தி வணங்குவோம்!