Wednesday 3 February 2010

காணி நிலம் வேண்டும்

தனக்கு என்று ஒரு வீடோ மனையோ மனிதனுக்கு இருந்து விட்டால் வாழ்க்கையில் ஏதோ 'சாதித்து' விட்ட பெருமை வந்து விடுகிறது என்னவோ உண்மை தான்.  என்ன இருந்தாலும் நம்முடைய சொந்த வீடு, சொந்த நிலம் எனும் போது ஒரு அலாதி மகிழ்ச்சி வருகிறது அல்லவா? என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சென்னைக்கு அருகில் ஒரு நிலம் இருப்பதாகவும் சில வருடங்களில் அதன் விலை கண்டிப்பாக உயர்ந்து விடும் என்று கூறியவுடன், 'சரி, ஒரு முறை போய் தான் பார்ப்போமே' என்று சென்று வந்தேன்.

நண்பன் கூறியது என்னவோ சரிதான், ஆனால் 'சென்னைக்கு அருகில்' என்று கூறியதில் தான் சற்றே திருத்தம். செங்கல்பட்டை எல்லாம் தாண்டி ஒரு சிறிய கிராமத்தில் அந்த நிலம் இருந்தது. ஆனால் சும்மா சொல்லக்கூடாது, எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென வயல் வெளிகள், கவலைககளை மறந்து மேயும் பசு மாடுகள், அருகிலேயே ஒரு புராதனமான கோவில், ஐந்து அடியிலேயே அருமையான நிலத்தடி தண்ணீர் என்று என் மனதை கொள்ளை கொண்டு விட்டதால், உடனடியாக பணத்தை பிரட்டி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்தேன். எனக்கு நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தெரியுமே தவிர, அதற்கான வழிமுறைகள் என்னவென்று தெரியாததால், அந்த பொறுப்பை நண்பனிடமேயே கொடுத்து விட்டேன். "எதற்கும் கவலைப்படாதே, பத்திரப்பதிவுக்கு நீ கொடுக்கும் பணத்திலேயே எல்லாவற்றையும் சேர்த்து நான் பார்த்து கொள்கிறேன்' என்று கூறினான்.

ஒரு நல்ல நாள் பார்த்து பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றோம். வண்டியில் செல்லும் போது என்னுடைய நினைவலைகள் சற்றே பின்னோக்கி சென்றன. பல வருடங்களுக்கு முன்பு நான் செளதி அரேபியாவுக்கு செல்வதற்கு முன் என்னுடைய சார்பாக எனது தந்தையை அலுவல் ரீதியான தஸ்தாவேஜுகளில் கையெழுத்து போட வைப்பதற்காக (Power of Attorney)சார்பதிவாளர் (Sub- Registrar) அலுவலகத்துக்கு சென்றேன். அந்த அலுவலகத்தில் நடுத்தர வயது நிரம்பிய ஒரு பெண் சார்பதிவாளராக இருந்தார். இது போன்ற அலுவலகங்களில் பணம் கொடுக்காவிடில் நமது காரியம் எதுவுமே நடக்காது என்று பிறர் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு பெண் லஞ்சம் வாங்க மாட்டார் என்றொரு நம்பிக்கையில் (!) எனது வேலை முடிந்த உடன் மிகவும் தயங்கி தயங்கி ஒரு ஐந்நூறு ருபாய் நோட்டை எனது தந்தையிடம் கொடுத்து அவரிடம் கொடுக்க சொன்னேன்.

அந்த அலுவலகத்தில் ஒரு மேசைக்கும்  மற்றொரு மேசைக்கும் திரையோ அல்லது வேறு எந்த விதமான ஒளிவு மறைவோ கிடையாது. எல்லோரும் மற்ற எல்லோருடைய நடவடிக்கைகளையும் தாராளமாக பார்க்கலாம்.ஐந்நூறு ரூபாய் நோட்டை எனது தந்தை அந்த பெண்மணியிடம் கொடுத்தது தான் தாமதம். பிரளயம் என்றால் என்ன என்று அன்று கண்டு கொண்டேன். "இன்னாது, ஐந்நூறு ரூபாயா  குடுக்கற கபோதி, இது எந்த மூலைக்கு?" என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு சரமாரியாக சிறப்பான சென்னை தமிழில் எனது தந்தையை அர்ச்சனை செய்து விட்டாள். தான் ஒரு பெண் என்றோ, ஒரு பெரியவரை இப்படி அசிங்கமாக திட்டுகிறோம் என்றோ மற்றவர்கள் பார்க்கிறார்களே என்றோ அவளுக்கு சிறிதளவும் வெட்கமே இல்லை. முடிவில் ஆயிரத்தி ஐந்நூறு ரூபாயை கறந்து விட்டு தான் எங்களிடம் அந்த காகிதங்களை கொடுத்தாள்.

 நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஏற்கனவே ஏற்பட்ட இந்த அனுபவத்தால் சார்பதிவாளர் அலுவலகம் என்றாலே ஒருவித பயம் எனக்கு. அதனால் நண்பனை அழைத்து கொண்டு  ஒரு சுபயோக சுபதினத்தில் புதிதாக வாங்கிய நிலத்தை பதிவு செய்வதற்காக சென்றேன். நான் அந்த அலுவலகத்தில் நுழையும்போது மணி மதியம் ஒன்றரை. சார்பதிவாளர் குனிந்த தலை நிமிராமல் வேலை செய்து கொண்டிருந்தார். அவரை சுற்றி ஒரு பத்து பேர் நின்று கொண்டிருந்தனர்.

எனது நண்பன் புதிதாக ஒரு நபரை அறிமுகப்படுத்தினான். அவருடைய கைகளில் கத்தை கத்தையாக தஸ்தாவேஜுகள் இருந்தன. என்னுடைய நிலத்துக்கான காகிதங்களை சரியாக எடுத்து கொடுத்து கையெழுத்து போட வேண்டிய இடங்களை எல்லாம் அந்த நபர் சொல்லிக்கொடுத்தார். அவர் சென்ற பின் அவர் யார் என்று நண்பனிடம் கேட்டேன். "ஏஜென்ட்" என்று கூறினான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'சரி, அல்லாவற்றையும் நண்பன் பார்த்து கொள்கிறான் அல்லவா, நாம் ஏன் மண்டையை போட்டு உடைத்து கொள்ள வேண்டும்' என்று எண்ணினேன்.

மணி ஒன்றரை ஆகியும் கூட சார்பதிவாளர் தனது நாற்காலியில் இருந்து எழவே இல்லை. "அடடா, தனது கடமையில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அதுவும் அரசாங்க அலுவலகத்தில் இப்படி ஒரு அதிசயமா?" என்று நினைத்துக்கொண்டேன். எனது தஸ்தாவேஜுகளை ஏஜென்ட் சார்பதிவாளரிடம் கொடுக்கும்போது மணி கிட்டத்தட்ட இரண்டு ஆகி விட்டது.

அப்போது அழுக்கு வேட்டியுடன் ஒரு விவசாயி உள்ளே நுழைந்தார். சற்றே வயதான மனிதர். வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்றதற்கான கோடுகள் அவரது முகத்தில் தெரிந்தன. நேரிடையாக சார்பதிவாளரிடம் வந்து ஏதோ ஒரு காகிதத்தை நீட்டினார். அவ்வளவுதான். மனிதருக்கு வந்ததே கோபம். விவசாயியை கண்டபடி  கத்தி தீர்த்து விட்டார். "என்னை என்னவென்று நினைத்து கொண்டிருக்கிறாய் நீ? மனிதன் சாப்பிட வேண்டுமா வேண்டாமா" என்று ஏக வசனத்தில் அந்த பெரியவரை திட்டி தீர்த்து விட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. "ஒரு ஓரமாய் போய் உக்காரு" என்று அவரை விரட்டி விட்டார்.

எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. எனது நண்பனின் முகத்தை பார்த்தேன். எனது  எண்ண அலைகளை தெரிந்து கொண்டவன் போல "இதுக்கு தான் ஏஜென்ட் மூலம் போக வேண்டும். நாம் ஏஜென்டிடம் பணத்தை கொடுத்து விட்டால் மாலையில் அவன் சார்பதிவாளர் வீட்டுக்கே சென்று பட்டுவாடா செய்துவிடுவான். வர வர இந்த லஞ்ச ஒழிப்பு துறையின் தொல்லை தாங்க முடியவில்லை. ரொம்ப அதிகமாக பணம் கேட்கிறார்கள் (!) அதனால் தான் நேரிடையாக பணத்தை வாங்காமல் ஏஜென்ட் மூலமாக வாங்குகிறார்கள். நமக்கும் நேரம் மிச்சமாகிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு காகிதங்களில் கையெழுத்து போடுகிறாரோ அவ்வளவு பணம். அதனால் தான் சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலை செய்கிறார் " என்று சொல்லி கொண்டே போனான்.

"அந்த விவசாயியை பார்த்தால் பாவமாக இருக்கிறது" என்று கூறினேன். அதற்கு நண்பன் "ஒரு முறை அடிபட்டு விட்டால் அவரும் ஏஜென்ட் மூலமாக பணத்தை கொடுப்பார்" என்று கூறினான். சுவற்றில் காந்தியின் புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது.  அந்த பெரியவர் முகம் சுருங்கி ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து விட்டார்.

"ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை " என்ற கவிஞர் கண்ணதாசனின்  பாடல் வரிகள் மனதில் ஏனோ தேவையில்லாமல் வந்தன. எனது தஸ்தாவேஜுகளை ஏஜென்ட் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பின்னர் எனக்கு பிறகு வந்த ஒருவரின் தஸ்தாவேஜுகளை சார்பதிவாளர் பார்க்க ஆரம்பித்தார். விவசாயி அங்கேயே உட்கார்ந்திருந்தார்.

நாங்கள் சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தோம். சார்பதிவாளரிடம் அந்த விவசாயி ஏன் தட்டி கேட்கவில்லை? படிப்பறிவு இல்லை என்பதாலா? அல்லது ஏழை என்பதாலா? "படித்த" எனக்கு அவர் சார்பாக சார்பதிவாளரிடம் கேட்க ஏன் தோன்றவில்லை?  'நமது வேலை எப்படியாவது நடந்தால் போதும், மற்றவனை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்' என்ற சுயநலமா? மனசாட்சியின் குரலுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த பெரியவர் எத்தனை நேரம் அங்கு காத்திருந்தாரோ? இன்னும் எத்தனை நாட்கள் அவர் இங்கு அலைய வேண்டி இருக்குமோ?

 வண்டி தாம்பரத்தை நோக்கி வரும்போது ஒரு சிற்றுண்டி விடுதியில் தேனீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்தினோம். பெரியவரின் முகத்தை என்னால் மறக்க முடியவில்லை. நண்பனிடம் கூறினேன். "சரிதான், விடுடா" என்றான். தேனீரை அருந்தும் போது அங்கிருந்த வானொலி பெட்டியில் பாடல் அலறிக்கொண்டிருந்தது. "கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி".