Monday 19 May 2014

நரசிம்ம பாமாலை

தும்பிக்கை          நாயகனே        தூமணிநற்            தூயவனே
எம்பாவை          ஏற்றுகிறேன்   காத்திடுவாய்        கணநாதா
அம்பிகைதன்     நற்பிள்ளை     யார்போல்             இப்பாரினிலே
உம்பக்கம்          அருள்வாயே     பாமரனென்          பாவினிலே
(
எம்பாவை=எனது பா, பக்கம்=அன்பு, ஆசி)

பாற்கடலில்          படுத்தருளும்       பரமபத           பரந்தாமா
நாற்றிசையும்       தொழுமேதா       மோதராநின்   பாதத்தை                                போற்றிட‌வே        வ‌ந்திடுவாய்       சீக்கிர‌மே         செந்த‌மிழில்
ஆற்றிட‌வே           நீயருள்வாய்      அடிய‌வ‌னின்    நாவினிலே

(நாற்றிசை = நான்கு திசை)

திருமாது             காதலுடன்          கொழுநன்னை             கண்டிடவே           
மறுபுறத்தில்      மாதேவர்             மலரடியை                   போற்றிடவே                 
கருடந்தன்         சிறகடித்து           பதமலரை                      பற்றிடவே
இருகரத்தை      இணைதூக்கி      தொழுதிட்டோம்          திருமாலே!

 (திரு = மஹாலக்ஷ்மி, கொழுநன் = கணவன்)

இரணியக‌சி       பென்றரக்கன்           தவமொன்றை       புரிந்தானே
பிரமா நீ               வரந்தாவென           மன்றாடி                  விழைந்தானே
தரமதனை          பாராது                        நான்முகனும்        நல்கிடவே
அரக்கனுந்தன்  சிரசதனில்                செருக்கேறி            சினந்திட்டான்

மறையோதும்     மாமுனிகள்    அரியவனின்      அடியவரை
சிறைபிடித்துத்    துன்புறுத்தி     சிரசுதிரம்              சிந்திட்டான்
அறையுச்சி           தனிலிருந்து   உருட்டியதை     செருக்குடனே     
பறைசாற்றி          பழிதீர்த்தான்   பரிகாசச்               சிரிப்புடனே

(ம‌றை=வேத‌ம், அரி=ம‌ஹாவிஷ்ணு, சிர‌சுதிர‌ம்=சிர‌சு(த‌லை)வெட்டிய‌ இர‌த்த‌ம்,அறை=ம‌லை)

பாலைதனில்    சோலைபோல்     பிறந்தானொரு    நன்மகன்
ஓலைபல           கற்றறிந்தான்        ஒழுக்கமுடன்      வீரனவன்
ஏலைபோல்       பரவியதவன்         அரிநாம                  பக்திமணம்
கோலைச்சின   மேற்றினான்          சிங்காரச்              செல்வனவன்

(சதிர்=சுட்டி,அழகு, ஏலை=ஏலக்காய், கோல்=அரசன் (அதாவது ஹிரண்யகசிபு), சினம்=கோபம்)


நானடா             அரியென்றான்      தரங்கெட்ட          தந்தையுமே
ஏனடா                தடம்மாறித்           தவிக்கின்றாய்   மகனேயென‌
கானகக்கரி       வேழத்தின்             காலடியில்          கிடத்திட்டான்
வானவந்தன்   கருணையினால் வடுவதனை      காத்திட்டான்

(கானகம்-காடு, வேழம்-யானை,வானவன்=மஹாவிஷ்ணு,வடு=சிறுவன்)

மதிமயங்கி      அரக்கனவன்     எங்கேயுன            தரியெனவே
பதியுள்ளார்      தூணிலும்         துரும்பிலுமே      அவனன்றி
கதியில்லை    என்றிட்ட           நல்லிளம்பிஞ்        சிறுவ‌னையே
அதிகோப         வ‌ன‌ல்ப‌ற‌க்க‌     அறைந்தானே     அர‌க்க‌னுமே
(பதி=மஹாலக்ஷ்மியின் கணவர்)


எங்கேயரி         எனக்கேட்டான்         செருக்கேறி        அரக்கனவன்    
இங்கேயென    வெடித்திட்டான்    விண்ணகரான்    விழிப்புடைக்க‌
பொங்கிய‌        ஆழினைப்போல்    மூவுலகும்           நடுநடுங்க‌
ரங்கனவன்     கொதித்திட்டான்     கோபத்தில்         கண்சிவக்க‌   

(செருக்கு = அகங்காரம், விண்ணகரான்=மஹாவிஷ்ணு, ஆழி=பெருங்கடல் )

நரவரிமா               மின்னல்போல்           தூண்பிளந்து            தகர்த்தெறிய‌‌    
அரக்கந்தன்          குடலதனை                 அடியோடு                  அழித்தவரி
பிரகலாத               பூம்பால‌ன்                    ம‌ழலைச்சொல்     மயக்கத்தில்
பரம்பொருளும்  பொன்வாயால்           புன்னகைப்பூ            புரிந்தானே

(நரவரிமா= நர+அரிமா, நர=மனிதன், அரிமா=சிங்கம்)
(அழித்தவரி = அழித்த + அரி, அரி = மஹாவிஷ்ணு)

பிரகலாதக்      குழந்தைக்கு              அருள்புரிந்த             அரங்காநீ
வரலாதா         வரதாயெம்                  குறைதீர்த்து            அருளிடவே
கரந்தூக்கி        எமைக்காத்து             அணைத்திடவே    வந்திடுவாய்
சிரந்தாழ்த்தி   வணங்குகிறேன்      அடியேனை             பொறுத்திடுவாய்

நாராயணா      என்றாலே             நன்மைபல      நல்கிடுமே
கோராமல்       கொடுப்பாயே     கோடானு         வரந்தனையே
ஏராதெனக்       கூறாமல்              அடியேனை    அணைத்திடுவாய்
தீராவினை      தன்னைத்            தீர்த்திடுவாய்   திருமாலே

(ஏரா = முடியாது)

நரசிம்மன்      கதைதன்னை     கேட்டிடும்                நல்லடியாரைக்
கரந்தூக்கி       காத்திடுவான்     கார்மேகக்               கண்ணபிரான்
மறவாமல்      இப்பாவை           ஓதிடும்                    நல்லடியார்க்கு
பரமபதப்          பரந்தாமன்           அருளிடுவான்      ஆனந்தமே   




Monday 12 May 2014

பர்மா பேஜார்!

உலகின் எல்லா பெரிய ஊர்களிலும் திருட்டு சமாசாரங்கள் விற்பனை செய்யப்படும் இடம் என்று ஒரு பகுதி பெயர் பெற்றிருக்கும். உதாரணம், டெல்லியின் 'சோர் பஜார்'. இது போன்ற இடங்களுக்கு சென்றால் கண்டிப்பாக நீங்கள் ஏமாறுவீர்கள் என்பது நிச்சயம். அது போன்ற 'சிறப்பான' இடம்தான் மெட்ராஸில் உள்ள பர்மா பஜார்.