Friday 23 January 2009

புரியாத புதிர்கள்-1

இந்த உலகில் அனைத்துமே தமது ஆதிக்கத்தில் தான் நடக்கின்றன என்று மனிதன் நினைத்து கொண்டிருக்கின்றான். ஆனால் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாத சில புரியாத புதிர்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உண்மை. ஏன் இவ்வாறு நடக்கின்றன, எப்படி இவை சாத்தியம் என்பதை "ஆறறிவு படைத்த" மனிதனால் இன்னும் விளக்க முடியவில்லை. எனது அனுபவத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளே இதற்கு உதாரணம். அதை தொடர் வடிவில் எழுத நினைத்துள்ளேன். உங்களது வரவேற்பை பொறுத்து அடுத்த பகுதி வருமா வேண்டாமா என்பது நிர்ணயிக்கப்படும்.



சில வருடங்களுக்கு முன்பு நேபால் நாட்டின் தலைநகரான காட்மாண்டுவிற்கு எனது தாய் தந்தையர் சென்றிருந்தனர். அங்கிருந்து ஒரு ஐந்து முக ருத்திராக்ஷ கொட்டையை வாங்கி வந்தார்கள். வரும் முன், அந்த ருத்ராக்ஷத்தை அங்குள்ள பசுபதிநாதர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து வந்து எனக்கு கொடுத்தார்கள். நானும், சரி புதிதாக இருக்கிறதே, என்று அதை ஒரு சங்கிலியில் கோர்த்து எனது கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.



பிறகு இதை பற்றி மறந்தேவிட்டேன்.
ஒரு நாள் வீட்டில் பனியனோடு உட்கார்ந்து கொண்டிருந்தபோது எனது நண்பர் வந்தார். கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தை பார்த்து விட்டு அதை எங்கு வாங்கினீர்கள், என்றெல்லாம் விசாரித்தார். நானும் விபரங்களை கூறினேன். உடனே வீட்டிலிருந்து ஒரு எலுமிச்சை பழம், ஒரு உருளைக்கிழங்கு மற்றும் ஒரு பூண்டை எடுத்து வரும்படி கூறினார். எதற்காக கேட்கிறார் என்று புரியாமல் நானும் அவற்றை கொண்டு வந்து மேஜை மீது வைத்தேன். அவர் எனது ருத்ராக்ஷத்தை கழற்றி தரும்படி கூறினார். ஏன் என்று கேட்டதற்கு, "நான் செய்வதை மட்டும் பாருங்கள், பிறகு கூறுகிறேன்", என்றார்.



முதலில் உருளைக்கிழங்கையும் பூண்டையும் தள்ளிவிட்டு, எலுமிச்சை பழத்தை மட்டும் மேஜை மீது வைத்தார். பிறகு அந்த ருத்ராக்ஷத்தை எலுமிச்சையின் மேல் அரை அங்குல உயரத்தில் நிற்குமாறு சங்கிலியை தன் விரல் மீது தாங்கிக்கொண்டார். அவ்வளவு தான். ருத்ராக்ஷ கொட்டை வெகு வேகமாக இடமிருந்து வலமாக சுற்ற தொடங்கியது.

என்னால் எனது கண்களை நம்பவே முடியவில்லை.
அடுத்து, எலுமிச்சை பழத்துக்கு பதில் பூண்டை மேஜை மேல் வைத்தார். முன்பு செய்தது போலவே இப்போது ருத்ராக்ஷத்தை பூண்டின் அருகில் கொண்டு சென்றதுமே மிக வேகமாக சுற்ற ஆரம்பித்தது. ஆனால், இப்போது வலமிருந்து இடமாக சுற்ற ஆரம்பித்தது.
கடைசியாக உருளைக்கிழங்கின் மேல் இதை கொண்டு சென்றபோது ஒன்றுமே ஆகவில்லை.

அந்த ருத்ராக்ஷத்தை நான் கையில் வாங்கி "நானே முயற்சி செய்கிறேன்" என்று கூறினேன். என்ன ஆச்சரியம்! நண்பரின் கைகளின் சுற்றியது போலவே எனது கைகளிலும் ருத்ராக்ஷம் சுற்ற ஆரம்பித்தது.

இடமிருந்து வலமாக சுற்றுவது positive energy என்றும் வலமிருந்து இடமாக சுற்றுவது negative energy என்றும் அவர் கூறினார். அதனால் தான் நம் உடம்புக்கு சாத்வீகமான உணவையே உண்ண வேண்டும் என்று கூறினார்.இந்த அனுபவத்துக்கு பிறகு அந்த ருத்ராக்ஷத்தை மேலும் பரீட்சித்து பார்க்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதை அணிந்தது முதல் எனது சிந்தனையில் தெளிவும் மனதில் பக்தியும் அமைதியும் குடிகொண்டுள்ளதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.

சில வருடங்களுக்கு பிறகு எதேச்சையாக மற்றொரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். புதிதாக வாங்கிய வீட்டில் கிணறு வெட்டியிருந்தார்கள். கிணறு வெட்டும் முன் எந்த இடத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதை அறிய ஒரு water divinerஐ கூப்பிட நினைத்திருந்தாராம் எனது நண்பர். ஆனால் அவரது அண்ணன் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தை அவிழ்த்து பூமிக்கு வெகு அருகில் உயரே கைகளில் தொங்கவிட்டு மெதுவாக நடந்து சென்றாராம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ருத்ராக்ஷம் மிக வேகமாக சுழல ஆரம்பித்ததாம். அந்த இடத்தில் தோண்டிய கிணற்றில் மிக இனிப்பான தண்ணீர் கிடைத்தது.

ருத்ராக்ஷம் என்பது ஒரு மரத்திலிருந்து கீழே விழும் காய்ந்த விதை தானே. அதற்குள் இப்படி ஒரு சக்தி எப்படி வந்தது? நமது கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தி இருக்கிறதா? இதை பற்றி தெரிந்தவர்கள் உங்களது அனுபவங்களையும் கூறுங்களேன்.

Saturday 10 January 2009

நெஞ்சு பொறுக்குதிலையே

1996ம் ஆண்டு. குஜராத்தில் மின் நிலையங்களை அமைக்க தனியார்களுக்கு அந்த மாநிலம் அழைப்பு விடுத்திருந்த நேரம். பம்பாயில் தனியார் வேலை செய்து கொண்டிருந்தேன். புதிய மின் நிலையங்களை அமைத்து நடத்துவது தான் எனது நிறுவனத்தின் முக்கிய வேலை.




ஒரு இடத்தில் மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அந்த இடத்தில் நிறைய தண்ணீர், மின்சாரத்தை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல கோபுரங்கள் (towers) அமைக்க இடம், எரிபொருள், நிலத்தின் விலை, என்று மிக தீவிரமான ஆய்வு செய்த பிறகே அந்த இடத்தில் மின் நிலையம் அமைக்க தோது படுமா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள். அதற்காக நேரே சென்று ஆராய்ந்து அரிக்கையை சமர்ப்பிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது.



பம்பாயிலிருந்து அஹமதாபாதுக்கு சென்று அங்கிருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்து கொண்டு கிட்டத்தட்ட 12 இடங்களுக்கு சென்று நேரில் ஆராய்ந்து எனது நிறுவனத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த இடங்களுக்கு செல்வது இருக்கட்டும், அது போன்ற இடங்களின் பெயர்களை கூட நான் அதற்கு முன் கேள்விப்பட்டிருக்கவில்லை.





பல இடங்களில் சரியான சாலை வசதி கூட இருக்கவில்லை. என்ன செய்வது? பிழைப்பு என்றால் இது போன்ற இடங்களுக்கு சென்றுதானே ஆகவேண்டும்?
இப்படி ஊர் ஊராக சென்று எனது வேலையை நான் கவனித்து கொண்டிந்த போது "வியாரா" என்ற ஒரு ஊருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. நீங்கள் இந்த ஊரின் பெயரை உலக atlasல் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாது. அப்படிப்பட்ட பட்டிக்காடான ஊர். சாலை என்று ஒன்று இருந்தால் தானே வண்டி செல்ல முடியும். சாலையே இல்லை என்றால் என்ன செய்வது? எனது நிலைமையை யோசித்து பாருங்கள்.



"என்னடா பிழைப்பு இது, இப்படி ஒரு டொக்கு ஊருக்கு வந்து மாட்டிக்கொண்டோமே" என்று எனது மேலதிகாரியை மனதுக்குள் திட்டிக்கொண்டேன். கரடுமுரடான பாதையில் காரை விடவே எனது ஓட்டுனரும் பயங்கர கடுப்புடன் புலம்பிக்கொண்டே வந்தார். சரியான உச்சி வெயில் வேறு. வழியில் ஈ, காக்கை என்ன, கொசுவை கூட காண முடியவில்லை. ஊரை கண்டுபிடிக்கவே இத்தனை நேரம் ஆகிறதே, இனிமேல் அங்கே சென்று எப்பொழுது நான் விபரங்களை திரட்டி எப்பொழுது அங்கே இருந்து மீண்டு வருவது என்று எனக்குள் மன போராட்டமே நடந்து கொண்டிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு பல மணி நேரம் சுற்றி கடைசியில் ஒரு வழியாக அந்த ஊரையும் கண்டுபிடித்து விட்டேன்.



"இப்படி கூட ஒரு ஊர் இருக்குமா? அதில் மக்கள் என்னதான் செய்கிறார்கள்? இவர்களுக்கு மின்சாரம் வந்தால் என்ன, வரவில்லை என்றால் என்ன, சரியான சே!" என்றெல்லாம் மனதுக்குள் திட்டிக்கொண்டே சென்றேன்.



திடீரென்று எங்கிருந்து அத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியவில்லை, எனது வண்டியை அப்படியே சூழ்ந்து கொண்டனர்.




வண்டியை விட்டு நான் இறங்கியதும் அதிசயத்துடன் என்னை பார்த்தார்கள். அனைவரின் தலையிலும் விதவிதமான தலைப்பாகைகள் இருந்தன. அந்த ஊர் பெண்கள் என்னை பார்த்ததும் அவசரம் அவசரமாக தங்களது தலைகளை சேலை முந்தானையால் மூடிக்கொண்டு குடிசைகளுக்குள் ஓடின. அம்மணமாக இருந்த சிறுவர்கள் எனது காரை சூழ்ந்துகொண்டு தொட்டு தொட்டு பார்த்து கொண்டிருந்தனர்.



ஊர் பெரியவர் போல இருந்த ஒருவரிடம் நான் வந்த விஷயத்தை சுருக்கமாக கூறி எனது அலுவல் விஷயமான விபரங்களை கேட்டேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே நான் அங்கு வந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி அக்கம் பக்கத்திலிருந்தெல்லாம் அனைவரும் வேடிக்கை பார்க்க வந்து விட்டனர். ஒருவன் எங்கிருந்தோ ஓடிப்போய் ஒரு குவளையில் சில்லென்று குடிக்கு தண்ணீர் கொண்டு வந்தான். மற்றொருவன் நான் கேட்காமலேயே தேனீரை கொண்டு வந்து வைத்தான்.





ஏற்கனவே நல்ல பசியுடன் நான் இருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் கொடுத்த தேனீரை உடனடியாக குடித்து விட்டேன். அதற்கு பிறகு மெல்ல எனது பார்வையை அவர்களின் மீது செலுத்தினேன்.
அத்தனை பேரின் முகத்திலும் வறுமை அப்பட்டமாக தெரிந்தது. துணியில் கிழிசல் இல்லாமல் ஒருவர் கூட இல்லை. உழைத்து உழைத்து கன்னிப்போயிருந்த கைகள். ஒருவர் காலில் கூட செருப்பு இல்லை. எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. சில அலுவல் ரீதியான தகவல்களை சேகரித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்து கொண்டேன். எனக்கு தேனீர் கொண்டு வந்தவனிடம் எனது பாக்கெட்டை துழாவி கையில் கிடைத்த பத்து ரூபாயை திணித்தேன். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான்.

வண்டியில் ஏறி ஒரு அரை கிலோமீட்டர் தூரம் தான் சென்றிருப்பேன். சாலையின் நடுவே ஒருவன் வந்து இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி எனது வண்டியின் முன்னால் வழியை மறித்துக்கொண்டு நின்றான்.



என்ன விஷயம் என்று கேட்டேன். தன்னை 'தஹேஜ்' என்ற சற்றே பெரிய ஊருக்கு என்னை அழைத்து செல்லுமாறு கெஞ்சினான். நானும் அந்த ஊர் வழியாக தான் செல்வதாக இருந்ததால் அவனை காரின் முன் இருக்கையில் ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்து கொள்ள சொன்னேன். அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் எனக்கு பல முறை நன்றி கூறிக்கொண்டு அமர்ந்து கொண்டான்.



அவனுடன் பேச்சு கொடுத்து கொண்டே வந்தேன். தனது கிராமத்துக்கு ஒரு கார் வருவது இது தான் முதல் முறை என்று கூறினான். அரசாங்க அதிகாரிகள் எட்டி கூட பார்ப்பது கிடையாது. பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ எதுவுமே கிடையாது என்றான். வெள்ளம் வந்தால் கிராமமே தீவு போல மிதக்க ஆரம்பித்து விடும் என்றும், பிரசவத்துக்கு தான் மிக மிக கடினம் என்றும் கூறினான். கோடை காலத்தில் வறட்சியால் மக்கள் பல நாட்கள் பட்டினி கிடப்பது சர்வ சாதாரணம் என்று கூறினான்.



இறைவா! இப்படியும் ஒரு இடமா? நிலவுக்கு ராக்கெட் விடுகிறோம், சுதந்திர நாடு என்று நம்மை நாமே மார்தட்டி கொள்கிறோம், ஆனால் ஒரு சாதாரண கிராமத்துக்கு தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதி போன்றவைகளை கூட செய்து தர இயலவில்லையா? இந்த மக்கள் என்னதான் பாவம் செய்தார்கள்? படிப்பறிவு இல்லை என்பது அவர்களின் குற்றமா? கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்று ஒளவையார் பாடினார். ஆனால் அதனினும் கொடிது வாழ்க்கை முழுவதும் வறுமையிலேயே பிறந்து வளர்ந்து இறப்பது தானோ? நகரத்திலேயே பிறந்து, வளர்ந்து வந்த எனக்கு இதை நேரில் பார்த்தவுடன் மனதை மிகவும் பாதித்தது.




இந்த சம்பவம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு யதேச்சையாக தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த போது "7000 கோடி ரூபாய் மோசடி செய்த கணிணி தொழிலதிபர்" என்ற தலைப்பு செய்தியை பார்த்தேன். ஏனோ தெரியவில்லை. அடுத்த வேளை சாப்பாடுக்கே கஷ்டப்படும் அந்த கிராம மக்களின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அவர்கள் ஏழைகள் தான். ஆனால் கண்டிப்பாக திருடர்கள் அல்ல. ஒரு கோடிக்கு பின் எவ்வளவு பூஜ்யங்கள் இருக்கின்றன என்பது இருக்கட்டும், "கோடி" என்றால் என்ன என்பதையே தெரியாத மக்கள் உள்ள நாட்டில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். என்னத்தை சொல்வது?

Monday 5 January 2009

கணிணி துறையினரும் நிதி நெருக்கடியும்

நிதி நெருக்கடி உலகம் முழுவதும் பரவி விட்டது. இதில் எல்லா துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக கணிணி துறையினருக்கு பாதிப்பு அதிகம் என்றே கூறலாம்.


கணிணி துறையினரின் இந்த வீழ்ச்சி யாருமே எதிர்பாராதது. இதற்கு முக்கிய காரணமே பெரும்பாலான கணிணி துறையினர் அமெரிக்காவினரால் outsource செய்யப்பட்ட வேலைகளை செய்வதால் தான். அமெரிக்கா தும்மினால் உலகம் முழுவதும் ஜலதோஷம் பிடித்து கொள்ளும் என்று ஒரு ஆங்கில பழமொழி உள்ளது. அது கணிணி துறைக்கு நன்றாகவே பொருந்தும்.


துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் நிதி நெருக்கடி உலகம் முழுவதும் இப்பொழுது பரவிவிட்டது. பல இரும்பு உருக்காலைகள் மூடும் தருவாயில் உள்ளன. வாகன உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பலவற்றில் ஆட்குறைப்பு நடந்து கொண்டுதான் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் துபாய், அபுதாபி போன்ற இடங்களில் இதன் தாக்கம் மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது. செளதியை மற்றும் கத்தாரை பொருத்தவரை புதிய projectகள் பல தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான ஒப்பந்தக்கார நிறுவனங்களும் அதில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கணிணி துறையின் வீழ்ச்சியை சிலர் உள்ளூர மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பது அறியாமையின் வெளிப்பாடே. ஆழ்ந்து ஆராய்ந்தால் சமூகத்தில் கணிணி துறையினர் ஏற்படுத்திய திடீர் பொருளாதார ஏற்ற தாழ்வு பலருக்கு கடுமையான பண தட்டுப்பாட்டையும் அதனால் இந்த துறையினர் மீது பொறாமையும் சேர காரணமாக இருந்து விட்டது என்பதே உண்மை.


நான் அனைவரையும் குற்றம் சொல்லவில்லை, ஆனால் "சில" கணிணி துறையினர் திடீர் பணக்காரர்கள் ஆனதால் தலைக்கேறிய போதையில் ஏதோ மேலை நாட்டில் இருப்பது போல பொது இடங்களில் நடந்து கொள்வதும், ஆண்/பெண் பேதமின்றி மிகவும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொள்வதும், அந்த ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக அனைத்து கணிணி துறையினரும் மற்ற சிலரின் வெறுப்பையே சம்பாதித்து கொண்டதும் உண்மை. குறிப்பாக சென்னையிலிருந்து மஹாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாரக்கடைசிகளில் நடந்த சம்பவங்களை யாராலும் எளிதாக மறக்க முடியாது.


இது ஒரு புறம் இருக்க, இந்த திடீர் பணக்காரர்களுக்கு கையில் இவ்வளவு பணம் வந்தவுடன் ஊரில் இருக்கும் வீடுகளை எல்லாம் வாங்க ஆரம்பித்தனர். பணப்புழக்கம் திடீரென்று அதிகமானவுடன் கூடவே விலைவாசியும் ஏற ஆரம்பித்தது. இதனால் சாதரண மக்களின் பாடு தான் திண்டாட்டம் ஆகிவிட்டது.


உதாரணமாக‌, 5000 மாத வாடகை கொடுத்து கொண்டிருந்தவனை வீட்டுக்காரன் திடீரென்று "15000 கொடு, இல்லையென்றால் கணிணி துறையினர் கொடுக்க தயாராக உள்ளனர், அதனால் வீட்டை காலி செய்" என்று சர்வ சாதாரணமாக கூறியதால் எத்தனை பேருக்கு வயிற்றெரிச்சல் தெரியுமா? இவர்களாவது பரவாயில்லை, வட்டி விகிதம் அதிகம் வரும் என்ற நினைப்பில் VRS பெற்று கொண்டு திடீரென்று ஏறிய விலைவாசியால் தவித்த/தவிக்கின்ற நடு வயதுக்காரர்கள் எத்தனை பேர் தெரியுமா? லட்சக்கணக்கில் விற்ற வீடுகளை கோடிக்கணக்கில் விலை ஏறிவிட ஒரு சாதாரண நடுத்தர மனிதன் சென்னை போன்ற நகரங்களில் வீடு வாங்குவது இந்த ஜென்மத்தில் முடியாது என்கிற நிலைமை ஆகிவிட்டது. இதற்க்கு காரணம் கணிணி துறையினர் மட்டும் தான் என்று கூறவில்லை, ஆனால் கணிணி துறையினர் சமுதாயத்தில் ஏற்படுத்திய பொருளாதார தாக்கமும் ஒரு காரணம் என்று தான் கூற விரும்புகின்றேன்.



இந்த நிதி நெருக்கடி தற்காலிகமானது தான். ஆனால் பழையபடி நிலவரம் சரியாக பல மாதங்களாகும் போல தோன்றுகிறது. நஷ்டப்படுவது கணிணி துறை மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளுமே. இந்த‌ நஷ்டத்தால் நாட்டின் பொருளாதாரமும் நஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பணம் வரும்போது தலை தெரிக்க ஆடுவதும் பணம் தீர்ந்ததும் திண்டாடுவதும் மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். ஆனால், கணிணி துறையாகட்டும் அல்லது மற்ற துறையினராகட்டும், மீண்டும் ஒரு நிதி சுனாமி அடிக்காமல் நம்மை நாம் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் நமது முன்னோர்கள் கூறியபடி "சேமிப்பு" என்கிற பழக்கத்தை எல்லோரும் ஆரம்பிக்க வேண்டும்.