Wednesday 29 February 2012

செந்தமிழ் நாடெனும் போதினிலே


பொழுது போகாமல் இருக்கும் போது ஒரு நாள் கணினியில் பல்வேறு வானொலி நிலையங்களை கேட்டுக்கொண்டிருந்தேன். எதேச்சையாக சிங்கப்பூர் வானொலியின் 'ஒலி'யை கேட்க நேர்ந்தது. நான் கேட்ட அந்த அரை மணி நேரத்தில் சத்தியமாக ஒரு வார்த்தை ஆங்கிலம் கூட இல்லை. அவ்வளவு இயல்பாக நல்ல தமிழில் மிக அருமையாக நிகழ்ச்சியை வழங்கினார்கள்.சில வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. 'கடவுசீட்டு' என்ற வார்த்தையை நான் அன்று தான் கற்றுக்கொண்டேன். கடவுசீட்டு என்றால் பாஸ்போர்ட்டாம். "இப்படி தெளிவாக தமிழில் கூறுவதை விட்டுவிட்டு ஏன் 'புரியாத' மொழியில் படுத்துகிறார்கள்" என்று எனது மகள் கேட்டாள். "இது தான் தமிழ், நாம் பேசுவது தமிழே அல்ல" என்று நான் கூறினேன். 

நமது பேச்சு வழக்கில் தான் எத்தனை ஆங்கில வார்த்தைகள் கலந்து விட்டன! காலையில் எழுந்தவுடன் 'காபி' குடித்தபடி 'பேப்பர்' படித்துவிட்டு, பின் 'வாக்கிங்' சென்று வந்தவுடன் 'பாத்ரூமில்' குளித்து விட்டு 'ப்ரேக்பாஸ்ட்' சாப்பிட்டு விட்டு 'பஸ்' பிடித்து 'ஆபீசுக்கு' சென்று .....இதை ஒரு இலங்கை தமிழரிடமோ மலேசிய தமிழரிடமோ கொடுத்து படிக்க சொன்னால் அடிக்க வந்து விடுவார்கள்!

மத்திய புகை வண்டி நிலையத்தில் (சரி, சரி, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் என்று தூய தமிழில் கூறுகிறேன்) ஒரு முறை முன்பதிவு செய்ய சென்றிருந்தேன். எனக்கு கிடைத்த படிவத்தில் ஒரு பக்கம் ஆங்கிலமும் மறு பக்கம் தமிழிலும் இருந்தது. சரி, தமிழில் எழுதலாமே என்று மெனக்கெட்டு பெயர் புறப்படும் ஊர், செல்லும் ஊர், பயணிகளின் பெயர் என்று எல்லாவற்றிலும் தமிழிலேயே எழுதி 'கெளன்ட்டரில்' கொடுத்தேன். (இதை பெரியார் தமிழில் எழுதினால் கவுண்ட்டர் என்று ஆகி விடும், அப்புறம் சாதி வெறியன் என்று கூறி விடுவார்கள் அதனால் counter என்று கூறலாமா? )

படிவத்தை வாங்கியவர் என்னை வேற்று கிரகத்தில் இருந்து வந்து இறங்கியவனை போல ஒரு பார்வை பார்த்து விட்டு நமுட்டு சிரிப்புடன் அதை ஆங்கிலத்தில் கணினியில் தட்டெழுதினார் ('டைப்' அடித்தார் - அப்பாடா, புரிந்ததா?)எனக்கு பின்னால் வரிசையில் நின்றவர்கள் என்னை எரித்து விடுவது போல பார்த்தார்கள். 'ஏன்யா யோவ், ஊட்ல சொல்லிகினு வண்ட்டியா சாவு கிராக்கி, இவன் ஒர்த்தனால இன்னிக்கு அல்லாருக்கும் லேட்டு, டாமேஜர் பெண்டு நிமித்த போறான்யா " என்று சிறப்பான சென்னை செந்தமிழில் யாரோ என்னை அர்ச்சனை செய்ய அங்கிருந்து அவசரம் அவசரமாக நான் கிளம்ப வேண்டியதாக போய் விட்டது.


சென்னை மாநகராட்சி வாசலில் நின்று கொண்டிருந்த பொது 'எமிரா வெதவா, நேனு அப்புடு செப்தானு நீக்கு" என்று ஒரு கரை வெட்டி கை பேசியில் ('மொபைல்') யாரையோ திட்டி கொண்டிருந்தார். கட்டிடத்தின் மேலே 'தமிழ் வாழ்க' என்று பெரிய பலகையில் எழுதி இருந்தனர்.

சரி, துணிமணிகளை வாங்க 'டீ' நகர் போகலாம் என்று ("தியாகராய நகர் என்றால் யாருக்கு புரியும்?) 'ஆட்டோவில்' ஏறினேன். வழக்கம் போல 'மீட்டர்' இல்லை. பேரம் பேசி படிந்த பின் வேண்டா வெறுப்பாக என்னை ஏற்றிக்கொண்ட ஓட்டுனன் வழி முழுவதும் வசை பாடிக்கொண்டே வந்தான். லேசாக பசிப்பது போல இருந்தது. ஒரு 'டீ' கடையில் இறங்கி தேநீர் செய்யும்படி கூறினேன். "ஓரி சாயா" என்று உள்ளே யாரிடமோ சம்சாரித்தான். 'டீ'யை குடித்து விட்டு சாலை ஓரமாக நடந்து செல்லும் போது "அரே பாய், மைனே போலா தா ந" என்று செருப்பு கடைக்காரர் யாரிடமோ எதையோ கூறிக்கொண்டிருந்தார். உடுப்பி ஹோட்டல் கல்லாவில் ஒருவர் யாரிடமோ "நானு நிமகே அவாகலே மாடி கொடுதீனி" என்று சில்லறை பாக்கியை கொடுத்தார். அட கடவுளே. மெட்ராசில் ஒரு தமிழன் கூட கிடையாதா?  


வீட்டுக்கு வந்து 'டீ.வி.'யை போட்டால் "உங்கல் பேவரிட் ஷோவை கான் தவுர வேண்டாம்" என்று அரை குறை ஆடையுடன் கிளுகிளுப்பு ஊட்டுவதாக நினைத்து கொண்டு ரவிக்கைக்கு பதிலாக இரண்டு நூல்களில் மேலாடையை பிடித்து கொண்டு முதுகை முழுவதுமாக காட்டி கொண்டு கிழட்டு நடிகை பேசிக்கொண்டு இருந்தாள். இதை   அணைத்து விட்டு வானொலியை கேட்டால் "ஒன்ன எவண்டி பெத்தான்" என்று பாடல் வருகிறது. ச்சே!

ஒரு முப்பது வருடங்களில் தமிழ் நாடு எப்படி மாறி விட்டது? பாவாடை சட்டை அணிந்து கொண்டு நெற்றியில் அழகிய குங்குமம் வைத்து கொண்டு அழகாய் வந்த அந்த சிறிய பெண்கள் எங்கே சென்றார்கள்? இப்போது எங்கு பார்த்தாலும் நைட்டி தேசிய உடையாகி விட்டதே. மார்கழி மாதத்தில் வீட்டுக்கு வீடு கேட்கும் அந்த ஆண்டாள் பாசுர பாடல்கள் இப்போது காணாமல் போய் விட்டதே. வாரா வாரம் கல்கியில் வரும் பொன்னியின் செல்வனை படிக்க ஆர்வமாக இருந்த அந்த கூட்டம் எங்கே? இப்போது யாரை பார்த்தாலும் டீ.வி. முன்பு உட்கார்ந்து விடுகிறார்களே. நல்ல தமிழை இனி கேட்கவே முடியாதா?

ஊரில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தேன். உள்ளே காத்திருக்கும் போது 'பாத்ரூம்' எங்கே என்று தெரியவில்லை. யாரையோ போய் கேட்க "அங்கே பாருங்கள்" என்றார். மேலே பார்த்தால் "ஒப்பனை அறை" என்று யாருக்குமே புரியாத தமிழில் எழுதி இருந்தார்கள். இனிமேல் தாங்காது டா சாமி, நான் இலங்கை தமிழர்களிடமே தமிழை கற்று கொள்கிறேன். ஆளை விடுங்கள்.