Saturday 19 January 2008

நாடி ஜோதிடம்

இப்போது நான் கூறப்போகும் சம்பவம் அதிசயமானதும் ஆச்சரியமானதும் ஆகும். அதை நம்புவதும் நம்பாததும் உங்களிடம் விட்டு விடுகிறேன். சற்றே கடினமான கால கட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு இருந்தேன். அப்போது வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு புகழ் பெற்ற நாடி ஜோதிடத்தை பற்றி எனது நண்பர் ஏற்கனவே கூறியிருந்தார். நானும் ஒரு ஜோதிட நிலயத்தினுள் சென்று எனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கேட்டுக்கொண்டேன். எனது வலது கை கட்டை விரலின் ரேகைகளை ஒரு வெள்ளைத்தாளில் பதித்து கொண்டு என்னை கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு 2 மணி நேரத்துக்கு பிறகு வருமாறு ஜோதிடர் கூறினார். மற்றபடி எனது பெயர், ஊர் என்று எந்த விதமான தகவல்களையும் கேட்கவில்லை.

நானும் கோவிலுக்கு சென்று அவர் கூறியபடியே 2 மணி நேரத்துக்கு பிறகு சென்றேன். ஒரு மேஜை மேல் கட்டு கட்டாக ஓலைச்சுவடிகள் இருந்தன. ஜோதிடர் என்னிடம்,"நான் கேட்கும் கேள்விகளுக்கு 'ஆம்' அல்லது 'இல்லை' என்று மட்டும் கூறுங்கள்" என்றார். முதல் கட்டை எடுத்து அதில் உள்ளதை படிக்க ஆரம்பித்தார். அது மிகவும் பழமையான தமிழில் இருந்தது (க்ரந்தம் என்று நினைக்கிறேன்). ஒவ்வொறு 4 வரிகள் படித்து முடித்ததும் என்னிடம் சில கேள்விகளை கேட்டார்.

உதாரணமாக, "உங்களுக்கு நான்கு தாய் மாமன்கள் இருக்கிறார்களா?", "உங்களுக்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனரா" என்று எனது குடும்பத்தை பற்றிய கேள்விகளை கேட்டுக்கொண்டே போனார். நான் "இல்லை" என்று ஏதாவது கேள்விக்கு பதில் கூறிவிட்டால் அந்த ஓலைச்சுவடி கட்டை அப்படியே பக்கத்தில் ஒதுக்கி விட்டு மற்றொரு கட்டை எடுத்து பிரிக்க ஆரம்பித்தார். இப்படியாக 4 கட்டுகளை ஒதுக்கி விட்டார். ஐந்தாவது கட்டில் அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்குமே விடை "ஆம்" என்று இருந்தது. ஒவ்வொறு பத்தியாக படித்து அதன் பொருளை விளக்க ஆரம்பித்தார். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், முதல் பத்தியின் கடைசி வார்த்தையும் அடுத்த பத்தியின் முதல் வார்த்தையும் ஒன்றாக இருந்தன (இதை அந்தாதி என்று கூறுவார்கள் என்று நினைக்கிறேன்). என்னால் தாங்க முடியாத ஆச்சரியம். எனது குடும்பத்தை பற்றிய அத்தனை விபரங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக கூறிவிட்டார். எனது தாய், தந்தை பெயர்கள், எனது மனைவியின் பெயர் உட்பட அனைத்தும் அந்த ஓலைச்சுவடியில் இருந்தன. எனக்கோ தாங்க முடியாத வியப்பு.

ஒரு வேளை இது கண்கட்டு வித்தை மாதிரி இருக்குமோ என்று நினைத்து நான் ஜோதிடரிடம் அவர் படிப்பதை சிறிது நிறுத்த சொல்லி விட்டு, "அந்த ஓலைச்சுவடியை நான் பார்க்கலாமா?" என்று கேட்டேன். அவர் "தாராளமாக பாருங்களேன்" என்று அந்த ஓலையை என்னிடம் கொடுத்தார். எனது தாய் தந்தையின் பெயர்கள் மிகவும் தெளிவாக அதில் எழுதியிருந்தன‌. என்னால் என் கண்களை நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்துடன் அந்த ஓலையை அவரிடம் கொடுத்தேன். அதற்கு பிறகு நடந்தது தான் வியப்பின் உச்ச கட்டம்.

ஜோதிடர் அடுத்த வரியை படிக்க ஆரம்பித்தார். "இந்த ஓலைக்கு உரியவர் இதை இந்த வருடம், இந்த மாதம், இந்த தேதியில் தன் கையாலேயே வாங்கி படிப்பார்" என்று எழுதியிருந்தது. பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டரை பார்த்தேன். அதில் கூறியிருந்த படியே தமிழ் வருடம், மாதம், தேதி எல்லாமே சரியாக இருந்தது!! ஜோதிடர் சிரித்து கொண்டே கூறினார் "எல்லாம் இறைவன் செயல். அது அது அந்த அந்த நேரத்தில் நடக்கும் என்பது ஏற்கனவே நிச்சயிக்க பட்டுவிட்டது. நீங்கள் இன்று வந்து இந்த ஓலையை படிக்க வேண்டும் என்பது விதி. அது நடந்து விட்டது" என்று கூறினார். நான் இதற்கு முன் அந்த ஜோதிடரை பார்த்தது கூட கிடையாது. எப்படி ஒரு விரல் ரேகை மூலமாக இத்தனை சரியாக அவரால் சொல்ல முடிகிறது என்றே தெரியவில்லை. ஓலை சுவடியை படிப்பது அவரது குலத்தொழில் என்று கூறினார். இதை பற்றி யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன். உங்களது அனுபவம் எப்படி இருந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். நான் ஏற்கனவே கூறியபடி, இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். ஒன்று மட்டும் நிதர்சனமாக அவர் கூறினார். அது என்னவென்றால், 'நடப்பவை அனைத்துமே இறைவன் செயல்'.

இதில் நாம் தான் ஏதோ சாதித்து விட்டோம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். எல்லாமே கடவுள் செயல். பிறகு நாம் யார்? இந்த உடலா? அல்லது அதனுள் இருக்கும் உயிரா? அப்படி என்றால் உயிர் என்பது என்ன? அதுதான் கடவுளா? எனக்கு தெரியவில்லை நண்பர்களே. உங்களுக்கு?

Wednesday 9 January 2008

மொழி

ஒரு மொழியை கற்றுக்கொள்வதால் எவ்வளவு ஆதாயம் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டேன்.

செளதி அரேபியாவுக்கு வந்த புதிதில் எனக்கு சுத்தமாக அரபி மொழி தெரியாது. (இப்போது மட்டும் என்னவாம்?). நான் வேலை செய்யும் தொழில் நகரத்தின் நுழைவாயிலில் தினமும் என்னுடைய அடையாள அட்டையை காவலர்களிடம் காண்பிக்க வேண்டும். அவர்களுடைய மன நிலைக்கு ஏற்ப சில சமயம் ஒன்றுமே கூறாமல் விட்டு விடுவார்கள், சில சமயம் குடைந்து எடுத்து விடுவார்கள்.
ஒரு முறை எனது வாகனத்தில் நான் சென்று கொண்டிருந்த போது ஒரு போலீஸ்காரன் எனது வண்டியை நிறுத்தினான்.

வழக்கம் போல அடையாள அட்டையை தான் கேட்கிறான் என்று நினைத்து அதை காண்பித்தேன். அவன் அதை வாங்கி பார்த்து விட்டு "அஃப்த்தா சாந்தா" என்று அரபியில் கூறினான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒரு வேளை 'இக்காமா' எனப்படும் எனது Work Permit டை தான் கேட்கிறானோ என்று நினைத்து அதை கொடுத்தேன்.
அவன் மீண்டும் "அஃப்த்தா சாந்தா" என்று கூறினான்.
'ஓஹோ, நாம் தான் தவறான பொருளை கொடுத்து விட்டோம் போலிருக்கிறது. சரி ஒரு வேளை 'இஸ்திமாரா' எனப்படும் என்னுடைய வண்டி பதிவு சீட்டை தான் கேட்கிறானோ' என்று நினைத்து அதை அவனிடம் கொடுத்தேன்.

அவன் கடுப்பாகி மீண்டும் "அஃப்த்தா சாந்தா" என்று குரலை உயர்த்தி கூறினான்.

'அடக்கடவுளே, கத்த ஆரம்பித்து விட்டானே, இவன் என்ன இழவு சொல்கிறான் என்று கூட புரியவில்லையே. ஒரு வேளை என்னுடைய ஓட்டுன உரிமத்தை (driving license)தான் கேட்கிறான் போல இருக்கிறது' என்று நினைத்து அதை அவனிடம் கொடுத்தேன்.
அவன் கோபத்தின் உச்சத்துக்கே சென்று விட்டான்.
"அஃப்த்தா சாந்த்தா" , "அஃப்த்தா சாந்த்தா" என்று மீண்டும் மீண்டும் கத்த ஆரம்பித்தான்.

'சரி, ஏதோ தவறு நடந்து விட்டது. நமது நிறுவன அடையாள அட்டையை தான் கேட்கிறானோ' என்று நினைத்து மீண்டும் அதை அவனிடம் கொடுத்தேன்.
அவன் கண்களில் கோபம் கொப்பளிக்க என்னை பார்த்தான். பிறகு என்ன தோன்றியதோ தெரியவில்லை, தலையில் கையை வைத்துக்கொண்டு 'ரோ' என்று கத்திக்கொண்டே என்னை போகும்படி கூறினான்.

'சரி, நம்மை மேலும் குடையாமல் விட்டானே' என்று நினைத்து கொண்டே எனது நிறுவனத்துக்குள் நுழைந்தேன். ஆனால் எனக்கு உள்ளூர ஒரு அரிப்பு. 'அப்படி அவன் என்ன தான் கேட்டான், நான் என்ன செய்து விட்டேன் அவன் கோபப்பட' என்று எனக்குள் நினைத்து கொண்டேன்.
மதிய வேளையில் எனது செளதி நண்பனிடம் "அஃப்த்தா சாந்தா என்றால் என்ன" என்று கேட்டேன். அவன் என்னை ஆச்சர்யமாக பார்த்து விட்டு "முதலில் என்ன நடந்தது என்று கூறு" என்றான்.

"சரி, ஏதோ வில்லங்கம் போல இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டே நடந்தவை அனைத்தையும் அவனிடம் கூறினேன். எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவன் வயிறு வலிக்க சிரிக்க ஆரம்பித்து விட்டான். எனக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"டேய், அப்படி என்னதான் அதற்கு அர்த்தம்" என்று கேட்டேன். அப்போது தான் அவன் "அஃப்த்தா சாந்தா என்றால் உனது வண்டியின் டிக்கியை திற என்று அர்த்தம்" என்றான்!

'அடப்பாவி, அதான் போலீஸ்காரன் வெறியாகிவிட்டான். சரி, எப்படியோ நாமும் அரபியில் ஒரு வார்த்தை புதிதாக கற்றுக்கொண்டோம்' என்று நினைத்துக்கொண்டேன்.
இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களுக்கு பிறகு நண்பர் ஒருவரை சந்திதேன். அவர் தன்னுடைய மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெயர் "சாந்தா" என்று கூறினார். திடீரென்று நான் சிரித்து விட்டேன். அவர்கள் என்னை ஆச்சர்யத்துடன் பார்க்க நான் சமாளித்துக்கொண்டு "சாந்தா என்ற பெயரை கேட்டாலே இப்போதெல்லாம் எனக்கு எனது வண்டியின் டிக்கி தான் ஞாபகம் வருகிறது" என்று அவரிடம் நடந்த சம்பவத்தை கூறினேன். பிறகு என்ன, அவர் தன் மனைவியை கலாய்க்க அவர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஹாரி பாட்டர்

நான் சிறுவனாக இருந்த போது 'ஷோலே' என்ற ஹிந்தி படம் வந்தது. என் நண்பர்கள் எல்லோரும் இந்த படத்தை பார்க்க சென்றார்கள். 'சரி, ஹிந்தி படத்தை பார்த்து நமக்கு என்ன புரிய போகிறது' என்று நானும் பேசாமல் இருந்து விட்டேன்.

அவ்வளவுதான். அதற்கு பிறகு நான்கு நண்பர்கள் கூடினால் "நீ ஷோலே படம் பாத்தியா" என்று கேட்டால் நான் அப்பாவியாக "இல்லை" என்று கூறுவேன். ஒரு பெரிய கொலை குற்றம் செய்தவன் போல "அடப்பாவி, நீ இன்னும் ஷோலே படம் பாக்கலயா?" என்று பாய்ந்து கொண்டு வருவார்கள்.

இதே போல தான் அண்மையில் ஹாரி பாட்டர் புத்தகமும். சத்தியமாக யார் இந்த ஹாரி பாட்டர் என்று எனக்கு ஒரு வாரம் வரையில் தெரியாது. 'இது ஏதோ ஒரு புத்தகம், அதை படிப்பதற்கு ஒரு ஊதாரி கும்பல் அலைகிறது' என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது ஹாரி பாட்டர் புத்தகத்தை படிக்காவிட்டால் இந்த உலகத்தில் நாம் பிறந்ததற்கு அர்த்தமே இல்லை என்று!!

எவனை பார்த்தாலும் "ஹாரி பாட்டர் படம் பாத்தியா, ஹாரி பாட்டர் புத்தகம் படிச்சியா?" என்று தான் கேட்கிறான். தெரியாமல் "இல்லை" என்று சொல்லி விட்டால் அவ்வளவுதான். தீர்ந்தீர்கள்! "அடப்பாவி, இன்னுமா நீ பாக்கல?" என்று நான் அந்நிய‌ கிரகத்திலிருந்து வந்தவன் போல பேசுகிறார்கள்.
இனிமேல் இவர்களிடமிருந்து தப்பிக்க "ஆமாம், புத்தகத்தை படித்து விட்டேன்" என்று பொய் சொல்லலாம் என்று கூட தோன்றுகிறது. ஆனால் உடனே அடுத்த கேள்வியாக‌ பார்த்திபன் வடிவேலுவிடம் கேட்பது மாதிரி எடக்கு மடக்காக கேள்வி கேட்டு விட்டால் என்ன செய்வது என்று தான் புரியவில்லை! வாழவும் விட மாட்டேன் என்கிறார்கள், சாகவும் விட மாட்டேன் என்கிறார்கள் அல்லவா?

இந்த புத்தகத்தை வாங்குவதற்காக மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அலைகிறார்களாம்! எத்தனையோ மில்லியன் பிரதிகள் விற்று தீர்த்து விட்டனவாம். சரி, அதற்கு நான் என்ன செய்ய? ஏன் என் உயிரை வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
கடைசியில் இந்த தொல்லை தாங்காமல் ஒரு புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளேன். யாராவது என்னிடம் வந்து "ஹாரி பாட்டர் புத்தகம் படித்தாயா?" என்று கேட்டால் நான் திரும்பி அவர்களிடம் "நீ T.Rajenderன் வீராசாமி படம் பாத்தியா?" என்று கேட்டு விடுகிறேன். அப்புறம் ஏன் பேசுகிறார்கள்?!!

மீசையின் மேல் ஆசை

ஊர் முழுவதும் ஒரு செய்தியை பத்து பைசா செலவில்லாமல் பிரசாரம் செய்ய வேண்டுமா? அல்லது அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தம் முதல் அரசியல்வாதிகளின் அந்தரங்க கிசுகிசுக்கள் வரை இலவசமாக 30 நிமிடங்களில் கேட்க வேண்டுமா?

இதெல்லாம் எங்கே என்று கேட்கிறீர்களா? என்னுடைய ஆஸ்தான முடி வெட்டுபவரின் கடையில் தான் நண்பர்களே!

எனது முடி திருத்துபவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, அரபி என்று சகட்டு மேனிக்கு எல்லா மொழிகளிலும் வெளுத்து வாங்குவார். எனக்கு பல முறை ஆச்சரியமாக இருக்கும். கை வேலை செய்து கொண்டிருக்கும். வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும். மூளை வேறு ஏதோ சிந்தனையில் இருக்கும். எப்படி எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இந்த சகலகலா வல்லவருக்கு செய்ய முடிகிறது?
ஒரு முறை அவரிடம் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டு விட்டேன். "சார், உங்க மீசைல நரச்ச முடி வந்திருக்கே" என்று ஆரம்பித்தார். 'கடவுளே, உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செய்தியை கூறிவிட்டாரே, அடுத்து என்ன ஆகுமோ' என்று பயந்து 'சரி, அதுக்கு நீங்களே ஏதாவது செய்யுங்க" என்று தெரியாத்தனமாக கூறிவிட்டேன்.

அதற்கு பிறகு ஒரு முக்கால் மணி நேரத்துக்கு நாய்குடையின் மகிமை பற்றியும் மலேஷியாவிலிருந்து தயாராகும் ஒரு நாய்குடை பேஸ்ட் பற்றியும் அதிவேக இரயில் வண்டி (!) மாதிரி பேசிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நான் சிறிது கண் அயர்ந்து விட்டேன்.
திடீரென்று சில்லென்று முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தவுடன் அதிர்ச்சியில் எழுந்து பார்த்தால் மீசை ஒரு பக்கம் அதிகமாக மழிக்கப்பட்டிருந்தது.

போச்சுடா! சாலையில் நடந்து போகும்போது நாய் துரத்தாமல் இருந்தால் சரி. (சீ! நாய்குடை பற்றி இவர் இத்தனை நேரம் என்னை போட்டு தள்ளியதில் நாயை பற்றியே நினைவு வருகிறது!) இப்போது என்ன செய்வது?
"நாயரே, என்ன இப்படி பண்ணிட்டீங்க?" என்று அழாத குறையாக நான் சொல்ல அவர் ஒரு கை தேர்ந்த 'அறுவை சிகிச்சை' நிபுணர் போல " ஒன்னும் ப்ரஷ்ன இல்ல சாரே" என்று மற்றொரு பக்கத்து மீசையை மழிக்க ஆரம்பித்தார்!

எனக்கு என்னவோ இரண்டு பூனைகளுக்கு நடுவில் அப்பத்துக்காக குரங்கு வந்து பஞ்சாயத்து செய்த கதை தேவை இல்லாமல் ஞாபகம் வந்தது.

இப்போது பார்த்தால் முன்பை விட கோரமாக இருந்தது. ஹிட்லரின் மீசையை பார்த்திருப்பீர்கள் அல்லவா? அது போல இரண்டு பக்கமமும் மழித்திருந்தார்! எனக்கு கோபம் வந்து விட்டது. "யோவ் நாயரே! என்னய்யா செஞ்சுட்ட நீ" என்று கத்த நினைப்பதற்குள் நாயர் கையை பார்த்தேன். பளபளவென்று ஒரு கத்தியை என் கழுத்தருகே கொன்டு வந்தார். சடக்கென்று ஒரு பக்க கிருதாவை மழிக்க ஆரம்பித்தார். அப்பாடா, நான் என்னவோ ஏதோ என்று நினைத்து விட்டேன்!

நான் இப்படியே வெளியே சென்றால் என்னை தீவிரவாதி என்று நினைத்து உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயத்தில் நாயரிடம் நான் ஆசையாக வளர்த்த என் மீசையை முழுவதும் எடுத்து விடும்படி கூறினேன். ஹூம், என்ன செய்வது! நம் கையில் என்ன இருக்கிறது? (எல்லாம் முடி திருத்துபவர் கையில் அல்லவா இருக்கிறது?)
எனது பொக்கிஷம் என் கண் முன்னே எடுக்கப்படுவதை பார்த்து கண்ணீர் வடித்தேன். கடவுளே! என்னை மீசை இல்லாத இந்த கோலத்தில் பிறர் பார்த்தால் என்ன சொல்லுவார்களோ!! 'நாயரே, இருய்யா உனக்கு வெச்சிருக்கேன்' என்று கருவிக்கொண்டே கடையை விட்டு வெளியே வந்தேன். சுவரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. முறுக்கிய மீசையுடன் சிவாஜியின் படம் இருந்தது. அடப்பாவிகளா! எல்லாரும் சேர்ந்து சதி செய்கிறீர்களா?

எங்கள் காலனிக்குள் நுழையும்போது முதன்முதலில் என்னை பார்த்தது கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வாண்டு. 'குபுக்' என்று சிரித்து விட்டான்!

'டேய், டேய், உனக்கும் இப்போது தான் மீசை அறும்ப ஆரம்பித்திருக்கிறது' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். 'போச்சு, இப்போது இந்த ஏரியாவின் Hot Topic இதுவாகத்தான் இருக்க போகிறது' என்று வெறுப்பின் உச்சகட்டத்துக்கே சென்று விட்டேன்.

அப்போது திடீரென்று அந்த பையன், "Cool" என்றான். இதன் அர்த்தம் புரிய சிறிது நேரம் ஆயிற்று. அதற்குள் மற்ற பையன்கள் என்னை சூழ்ந்து கொண்டு "அங்கிள், மீசை இல்லாமல் நன்றாக இருக்கிறீர்கள்" என்றான். அப்போது தான் எனக்கு உறைத்தது. ஓஹோ, இப்போது மீசை இல்லாமல் இருப்பது தான் fashion போல!
வீட்டுக்குள் நுழைந்தவுடன் எல்லோர் முகத்திலும் முதலில் அதிர்ச்சி. பிறகு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹூம், எல்லாம் என் நேரம் தான். மறு நாள் அலுவலகத்திலும் இதே போல நடந்தது. ஆனால் ஒரிரு நாட்களுக்குள் எல்லோருக்கும் எனது 'புதிய முகம்' பழகி விட்டது. இப்போதெல்லாம் நான் தினமும் தாடி மீசை இரண்டையும் சுத்தமாக மழித்து விடுகிறேன். ஒன்றும் பெரிய வித்யாசம் தெரியவில்லை.

அதனால் நண்பர்களே, மீசையின் மேல் ஆசை வைக்காதீர்கள்! பிறக்கும் போது நாம் மீசையுடன் பிறந்தோமா என்ன?

மறதி திலகங்கள்

எல்லா தந்தை குலங்களும் கேட்க வேண்டிய சோகக்கதை இது!

பொதுவாகவே மனைவிகள் அனைவரும் தத்தம் கணவன்கள் மேல் ஒரு புகார் கூறுவார்கள். அது என்னவென்றால், உலகில் உள்ள கணவன்கள் அனைவரும் மறதி திலகங்கள் என்பது தான். இந்த பட்டியலில் நானும் ஒருவன் என்பதை பரிதாபத்துடன் கூறிக்கொள்கிறேன்.

விஷயம் ஒன்றும் இல்லை ஐயா. எனது நண்பன் தன் குழந்தைக்கு பிறந்த நாள் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். விழாவில் கேக் எல்லாம் வெட்டி சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்காக ஒரு பல்சுவை நிகழ்ச்சி இருந்தது. இதில் ஒவ்வொரு குழந்தையாக மேடை மேல் ஏறி தனக்கு தெரிந்த பாடலை பாடியோ அல்லது வாத்தியத்தை இசைத்தோ அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.
இது போன்ற விழாக்களில் சில புதிய நண்பர்களின் சகவாசம் கிடைக்கும் அல்லவா?

புதிதாக சந்திக்கும் நண்பர்களை நாமே வலிய சென்று அறிமுகப்படுத்தி கொள்ளலாம் என்று எனது நண்பன் தீபக்கிடம் கூறினேன். அவனும், "சரி வா. எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலரை உனக்கு முதலில் நான் அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறினான்.

அதோடு மட்டும் நிறுத்திக்கொண்டிருக்கலாம். "இந்த மனைவிகளுக்கு எப்போது பார்த்தாலும் டீ.வீ. சீரியல்களை பற்றி பேசத்தான் நேரம் இருக்கும். புதிய நண்பர்கள் கிடைத்தால் கூட 'அவன் மனைவி பச்சை நிற மைசூர் சில்க் புடவை கட்டிக்கொண்டு வந்தா' என்று ஒரு மாதத்துக்கு பிறகு கூட ஞாபகம் வைத்துக்கொண்டிருப்பார்கள்" என்று கமெண்ட் அடித்தான். அவன் எவ்வளவு பெரிய வம்பில் மாட்டிக்கொள்ள போகிறான் என்று அப்போது தெரியவில்லை.

தீபக் ஒருவரிடம் சென்று, "தியாகராஜன், இவர் தான் என் நண்பர் ராஜூ" என்று கூறினான். தீபக்கின் மனைவியும் தியகராஜனின் மனைவியும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நானும் தியாகராஜனிடம் கை குலுக்கினேன். அவர் உடனே தீபக்கிடம் "சார், நான் தியாகராஜன் இல்லை. என் பெயர் ஜெகன்னாதன்" என்றார். தீபக்கின் முகம் என்னவோ போலாகிவிட்டது. ஒரு நிமிடம் அங்கு மயான அமைதி நிலவியது.

நானாவது சும்மா இருந்திருக்க வேண்டும். என் நண்பனை நான் விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா? நிலைமையை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே! உடனே நான் "ஜெகன்னாதன் சார், உங்க பையன் ரொம்ப நல்லா புல்லாங்குழல் வாசிச்சான்" என்றேன்.இப்போது என் மனைவி என்னை பார்த்து முறைத்தாள். 'என்னடா, நான் ஏதாவது தப்பாக கூறிவிட்டேனா' என்று நான் நினைப்பதற்குள் ஜெகன்னாதன் குரலை கனைத்துக்கொண்டே "சார், இப்போ வாசிச்சது என் பையன் இல்லை. எனக்கு பையனே கிடையாது" என்றாரே பார்க்கலாம்!

பிறகு என்ன, எல்லா மனைவிகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். கவுத்துட்டாங்கய்யா, கவுத்துட்டாங்கய்யா!

நேயர் விருப்பம்

வர வர தொலைக்காட்சியில் வரும் இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சி ஒரு பெரிய கடி என்றே தோன்றுகிறது. கிட்டத்தட்ட கடந்த 15 வருடங்களாக பிரபலமான (?) தொலைக்காட்சி ஒன்றில் இதை நடத்தி வரும் கனவுக்கன்னி (!) கொக்கோ கோலா பாமா என்கிற பாட்டியை பற்றி தான் இந்த இழை. முதலிலேயே இதை 'கற்பனை' என்று கூறி விட்டால் பிறகு வம்பில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வசதியாக இருக்கும் அல்லவா, அதனால் இதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்!

15 வருடங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் உங்கள் கோக் பாமா வின் உரையாடல் எப்படி இருக்கும் தெரியுமா?

ட்ரிங் ட்ர்ங்........
ஹலோ, கொக்க கோலா உங்கள் சாய்ஸ்..

"ஹலோ, நான் காத்தவராயன் பட்டி கந்தசாமி பேசறேங்க"

"வணக்கம் கந்தசாமி"

"ஹலோ"

"ம் சொல்லுங்க வணக்கம்"

"ஹலோ"

"வணக்கம் கந்தசாமி, சொல்லுங்க"

"ஹலோ, நான் காத்தவராயன் பட்டி கந்தசாமி பேசறேங்க"

பாமா ஒரு போலி புன்னகையுடன்
"சொல்லுங்க கந்தசாமி, எப்படி இருக்கீங்க?"

"வணக்கங்க, நான் காதவராயன் பட்டி..."

பாமா இடை மறித்து
"கந்தசாமி, உங்க டீ.வீ. வால்யூமை கொஞ்சம் கம்மியாக்குங்க"

"ஹலோ, கொக்க கோலா பாமா பேசறீங்களா?"

"ஆமாங்க, நான் பாமா தான் பேசறேன்"
"நீங்க நல்ல இருக்கீங்களா?"

"நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா?"

"ஹலோ, நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன் கந்தசாமி. நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?"

நமக்கு அதற்குள் பொறுமை எல்லை மீறி ரிமோட்டை தேடுவதற்குள்,
"கந்தசாமி, நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன். உங்க டீ.வீ. வால்யூமை கம்மி பண்ண்றீங்களா"

"பாமா மேடம், நீங்க ரொம்ப அளகா இருக்கீங்க ஹீ ஹீ"

பாமா வழிந்து கொண்டே "அப்படியா? ரொம்ப நன்றி கந்தசாமி"

"உங்களுக்காக நான் ஒரு மணி நேரமா ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கேங்க. இப்ப தான் லைன் கிடச்சுது"

"ஓ அப்படியா? சரி சரி. இப்போ சந்தோஷம் தானே"

"ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. என்னால நம்பவே முடியலீங்க. ஹீ ஹீ, இருங்க என் வூட்டுகாரம்மா கிட்ட குடுக்கறேன்"

" சரி குடுங்க"

"ஹலோ, கொக்க கோலா பாமாவுங்களா?"

"ஆமாங்க, நீங்க யாருங்க பேசறது?"

"எம்பேரு முனியம்மாங்க. நீங்க நல்லகிறீங்களா?"

"நான் ரொம்ப நல்லா இருக்கேன்"

இதற்குள் நேரமாகிறது என்று ப்ரொட்யூசர் பின்னாலிருந்து முறைக்க
"சரி முனியம்மா, உங்களுக்கு என்ன பாட்டு வேணும் சொல்லுங்க"

முனியம்மா அதை காதில் வாங்காதது போல

"இருங்க உங்களோட பேச என் தம்பி சேகர், தங்கை கோமதி, மச்சினன் கோவாலு எல்லாரும் இருக்காங்க"

பாமா இடைமறிப்பதற்குள்

"ஹலோ கொக்க கோலா பாமாவுங்களா, நான் காத்தவராயன்பட்டி சேகர் பேசறேங்க. நீங்க ரொம்ப செவப்பா அளகா இருக்கீங்க. நீங்க நல்லா இருக்கீங்களா?"

"நான் நல்லா இருக்கேன் சேகர். உங்க எல்லாருக்கும் எந்த பாட்டு வேணும் சீக்கிரம் சொல்லுங்க"

அதற்குள் சேகர் கையிலிருந்து கோவாலு தொலைபேசியை பிடுங்கி

"ஹலோ கொக்க கோலா பாமாவுங்களா? நான் காத்தவராயன்பட்டி கோவாலு பேசறேங்க. நீங்க நல்லா இருக்கீங்களா"

ப்ரொட்யூசருக்கு வெறி ஏறிக்கொண்டே செல்ல பாமா அவசரம் அவசரமாக

"நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க எல்லாருக்காகவும் என்ன பாட்டு வேணும் சீக்கிரம் சொல்லுங்க"

"கில்லி படத்துலேந்து ஏதாவது பாட்டு போடுங்க"

"உங்களுக்காகவும் உங்க எல்லாருக்காகவும் உங்கள் மூன் டீ.வியில் அடுத்து வருவது கில்லி பட பாடல்.

அப்பாடா ஒரு வழியாக முடித்தார்கள் என்று நாம் பெருமூச்சு விடுவதற்குள்

"அந்த பாடலை கேட்பதற்கு முன் ஒரு சின்ன் ப்ரேக்"

நியாயம் தான். நமக்கு தான் தேவை இது போன்ற சேனல்களிடமிருந்து ஒரு ப்ரேக், அல்லவா?