Friday 20 May 2011

சுமை

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் எனது தாயார் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கும். அவரும் அவரது மனைவியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கின்றனர். அவர்களது ஒரே மகள் அமெரிக்காவில்
தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கிறாளாம்.


சம்பிரதாயமான சில வார்த்தைகளுக்கு பிறகு பெரியவர் திடீரென்று மனம் திறந்து பேச துவங்கினார். "நீங்கள் 'மெயில்' செய்தித்தாளை படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சிறுவனாக இருந்த பொழுது 'தி மெயில்' என்ற ஆங்கில நாளேடு மிக பிரபலமாக
இருந்தது. நான் என்ன கூற போகிறேன் என்று அறிய மிக ஆவலுடன் பெரியவர் என்னை உற்று பார்த்து கொண்டிருந்தார். "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் ஏனோ திடீரென்று அந்த நாளேடு நின்று விட்டதே" என்றேன்.


பெரியவரின் முகம் சட்டென்று வாடிவிட்டது. எனக்கோ மிக தர்ம சங்கடமாக போய் விட்டது. "ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன். பெரியவர் ஒரு பெரிய பெருமூச்சுடன் தொடர்ந்தார்.
அந்த செய்தித்தாளின் தலைமை நிருபராக பல வருடங்கள் பணி புரிந்து நான் ஓய்வு பெற்றேன். மாலை செய்தித்தாள் என்பதால் , மின்சார ரெயிலில் போவோர், அலுவுலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோர் என்று பலரும் மிக ஆவலுடன் வரிசையில் நின்று வாங்கி செல்வார்கள். அதை ஒரு பொற்காலம் என்றே கூறலாம்" என்று கூறியபடி  குவளையில் இருந்த தண்ணீரை பெரியவர் குடித்தார்.


அவர் பேசுவதை நான் இடைமறிக்க விரும்பவில்லை. பெரியவர் குரலை கனைத்து கொண்டு தொடர்ந்தார். "ஹிந்து பேப்பருடன் எங்களால் போட்டி போட முடியவில்லை. சிறிது சிறிதாக எங்களது செலவுகள் ஏறிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் தாக்கு பிடிக்க
முடியாது என்று 1981ம் ஆண்டு மெயில் செய்தித்தாளை மூடிவிட்டார்கள்" என்றார். அதை கூறும்போதே அவருக்கு குரல் கரகரத்தது. ஏதோ  கூட்டத்தில் குழந்தையை தவற விட்ட தாயை போன்ற தவிப்பு அவரது குரலில் ஆழ்மனது ஏக்கம் தெரிந்தது.

சிறிது நேரம் அவருடன்  இருந்து விட்டு நான் விடை பெற்றேன்.ஆனால் நெடு நேரம் அவர்
கூறியதை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.

இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்கு 'மெயில்' என்று ஒரு செய்தித்தாள் இருந்தது என்று தெரியும்? அந்த செய்தி தாளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று எனது தந்தை கூறியுள்ளார். ஒரு 30 வருட காலத்தில் சுவடே இல்லாமல் மறைந்து விட்ட ஒரு செய்தி தாளை பற்றி அந்த பெரியவர் எவ்வளவு ஏக்கத்துடன் பேசினார் என்று எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட சென்னை மவுண்ட் ரோடில் உள்ள ஹிந்து நாளேட்டிற்கு அடுத்த கட்டிடத்தில் 'தி மெயில்' என்று எழுதியிருக்கும் அந்த பழமையான கட்டிடத்தை கடந்து செல்லும் போதெல்லாம் பெரியவரின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன.



உண்மையில் நாம் அனைவருமே பழைய நினைவுகளின் அடிமைகளாக உள்ளோம் அல்லவா? ஒரு முறை எனது மகள் எதையோ வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்க நான்
மறுத்துவிட "பத்து ரூபாய் தானேப்பா" என்றாள். எனக்கு கடும் கோபம் வந்து விட்டது. "அது என்ன பத்து ரூபாய் ‘தானே’ என்று ஒரு இளக்காரம்? உனக்கு அதன் மதிப்பு தெரியுமா? நான் பள்ளிக்கு செல்ல இரண்டு பஸ் மாறி தினமும் கஷ்ட்டப்பட்டு  போனேன். நீ என்னடாவென்றால் பொறுப்பே இல்லாமல் இருக்கிறாய்" என்று பொரிந்து தள்ளிவிட்டேன்.

இதை கேட்ட எனது மனைவி "இன்னும் எத்தனை வருடங்கள் தான் நீங்கள் இதே பல்லவியை பாடுவீர்கள்? நீங்கள் இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதால் உங்களது மகளும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா" என்று கேட்க எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

சற்றே யோசித்து பார்த்தால் நாம் அனைவருமே ஒரு பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அது எண்ணம் என்கிற பெரும் சுமை. பிறப்பு முதல் மரணம் வரை இந்த எண்ண பாரத்திலேயே பொழுதை கழிக்கிறோம். நம்மால்
சிந்திக்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லையே. இந்த சிந்தனையில் தானே
ஆசை, பொறாமை, வக்கிரம், அன்பு, கருணை என்று பலவித பரிமாணங்கள்
உருவாகின்றன? பறவைகள் மற்றும் விலங்குகள் இது போன்று சிந்திப்பது இல்லையோ?
அதனால் தானோ நம்மை விட மிக ஆனந்தமாக இருக்கின்றன?

மனித இனத்தின் மிகப்பெரிய எதிரியே இந்த சிந்தனை சுமைதான். இதை சற்றே இறக்கி
வைக்க முடியுமா? இறைவா, எண்ண சுமையை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கி
கொடுப்பாயா?