Saturday 29 November 2008

மாவீரர்கள்

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் உண்மையான மாவீரர்கள் யார் தெரியுமா? கண்டிப்பாக அரசியல்வாதிகள் அல்ல. தங்கள் உயிரையே பணயம் வைத்து நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றிய தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தான் (National Security Guards)உண்மையான மாவீரர்கள்.

இந்த தேசிய பாதுகாப்பு படையில் எல்லோரும் சேர்ந்து விட முடியாது. இதில் சேர வேண்டும் என்றால் ஒருவர் ஏற்கனவே காவல் துறையிலோ அல்லது இராணுவத்திலோ பணியாற்றி கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இதில் வீரர்களாக சேர்த்து கொள்ளப்படுவார்கள். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க தாமாகவே முன்வந்து (voluntary) சேருபவர்களுக்காக தான். அதாவது, இதில் ஆள் சேர்ப்பதற்கு எந்த செய்தித்தாளிலும் விளம்பரத்தை நீங்கள் பார்க்க முடியாது.


தேசிய பாதுகாப்பு படையில் கொடுக்கப்படும் பயிற்சி உண்மையிலேயே மிக மிக கடினமானவையாகும். உதாரணத்துக்கு, ஒரு பத்து நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் விட்டு விடுவார்கள். சாப்பாடு, தண்ணீர் எதுவுமே தரப்பட மாட்டாது. உணவுக்கு காட்டில் கிடைக்கும் பழங்களையும் பூச்சிகளையும் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்தால் தங்கள் சிறுநீரையே குடித்து பிழைத்து கொள்ளவும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. அனைவருக்கும் கராத்தே, ஜூடோ போன்ற சண்டை பயிற்சியில் வல்லுனர்கள். கையில் ஆயுதமே இல்லாமல் இருந்தால் கூட தீவிரவாதிகளை எப்படி சமாளிப்பது என்று இவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவர்களால் பல விதமான துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் உபயோகிக்க முடியும். அதே போல, பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளையும் இவர்களால் எளிதாக செயலிழக்க வைக்க முடியும்.


இவர்களது பணியின் முக்கியமான நோக்கமே பயங்கரவாதிகளை சமாளிப்பது தான். இங்கிலாந்தில் உள்ள எஸ்.ஏ.எஸ். போன்ற கமாண்டோக்கள் போல தான் இவர்கள். குறிப்பாக, விமான கடத்தல்காரர்களை எப்படி சமாளிப்பது போன்ற வித்தைகளில் கை தேர்ந்தவர்கள்.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் சில வீரர்களும் உயிரை இழந்துள்ளனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.


தங்களது உயிரையே பணயம் வைத்து நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றிய இந்த அஞ்சா நெஞ்சங்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் இந்த தியாகத்துக்காக நாம் தலை வணங்குவோம். உண்மையிலேயே இவர்கள் மாவீரர்கள் தான், இல்லையா?

Wednesday 19 November 2008

உணவுக்கு பதில் மண்

1960களில் நடந்த சம்பவம் இது. சீனாவுடன் ஆன போரில் இந்தியா தோல்வியை தழுவியது. போருக்கு பிறகு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் தலை விரித்தாடியது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து நாம் உணவு கேட்குமளவுக்கு பஞ்சம் இருந்தது.



அப்போது அமெரிக்கா "இலவசமாக" உணவு வழங்க ஒப்புக்கொண்டு பல கோதுமை கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்பியது.


என்ன இருந்தாலும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? லால் பஹதூர் சாஸ்திரிக்கு பிறகு அப்போது தான் இந்திரா காந்தி பதவி ஏற்றிருந்த நேரம். அமெரிக்கா நமக்கு அளித்த கோதுமைக்கு பதிலாக ஏதாவது நாம் திரும்ப அவர்களுக்கு கொடுக்க வேண்டுமே. அதனால் நட்புறவை காப்பதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரிடம் இந்திரா இந்த விஷயத்தை பற்றி பேசினார். அமெரிக்கா உடனே மேலும் சில கப்பல்கள் நிறைய கோதுமை அனுப்பியது. பிறகு சாவகாசமாக ஒரு நாள் ஒரு கோரிக்கை விடுத்தது. அதை கேட்டு இந்திரா அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார்.


அமெரிக்கா அளித்த கோதுமைக்கு பதிலாக அவர்கள் பதிலுக்கு கேட்டது என்ன தெரியுமா? இந்திய மண். அதுவும் சாதாரணமான மண் இல்லை, கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் தெற்கே கடலோரத்தில் இருக்கும் மண் தான் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது.


கோதுமைக்கு பதிலாக மண் கேட்கிறார்களே, அப்படி அதில் என்ன விசேஷம் என்று உளவுத்துறை அதிகாரிகளை விட்டு ஆராய இந்திரா உத்தரவிட்டார். அவர்கள் கொடுத்த ஆய்வரிக்கை பல உண்மைகளை உடைத்தது.
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவின் தெற்கு பகுதி வரை உள்ள கடற்கரை மணல் சாதாரணமான மணல் இல்லை. கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்படும் தோரியம் மற்றும் பல அரிய வகை மினரல்கள் இந்த மணலில் கலந்து இருக்கிறது. இந்த தோரியம் அணு ஆயுதங்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு பொருள். உளவுத்துறையின் அறிக்கை படி அமெரிக்கா தனது செயற்கைகோள்களின் உதவியுடன் இதை கண்டுபிடித்து விட்டிருந்தனர். அது மட்டும் அல்ல, இந்த ஏரியாவில் பல தனியார் நிறுவனங்கள் தோரியம் போன்ற பல அரிய மினரல்களை கடல் மணலிலிருந்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


உடனே விழித்துக்கொண்ட இந்திரா, உடனடியக இந்த தனியார் நிறுவனங்களை எல்லாம் தேசியமயமாக்கி Indian Rare Earths Limited என்ற நிறுவனத்துடன் ஐக்கியமாக்கி விட்டார். தமிழகத்தில் மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் IREL லின் பெரிய ஆராய்ச்சி கூடத்தை நிறுவினார்.
அமெரிக்காவின் இந்த‌ சூழ்ச்சி இந்திராவை பெரிதும் பாதித்த‌து. அத‌ற்கு பிற‌கு சிறிது சிறிதாக‌ இந்தியா அப்போதைய‌ சோவிய‌த் யூனிய‌னுட‌ன் நெருங்கி செல்ல‌ ஆர‌ம்பித்த‌து. அன்று மட்டும் நாம் இந்திய மண்ணை விஷயம் தெரியாமல் அமெரிக்காவுக்கு கொடுத்திருந்தோமானால் சரித்திரம் மாறியிருக்கும்.

Saturday 15 November 2008

இந்திய குடிமக்கள்

நமது செய்கைகளை வைத்து பிறர் நம்மை எடை போடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நமது நாட்டினர் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்.



எனக்கு பல வருடங்களாக ஒரு சந்தேகம். வெளி நாட்டு விமான பயணங்களின் போது விமான பணிப்பெண்கள் இந்தியர்கள் என்றால் ஒரு மாதிரி சேவையையும் வெள்ளைக்காரர்கள் என்றார் சிறப்பான சேவையையும் செய்வதை கண்டு பல முறை எனது மனம் கொதித்தது உண்டு. வெள்ளைக்காரர்களுக்கு புன்முறுவலுடனும், இந்தியர்கள் என்றால் வேண்டா வெறுப்புடனும் இவர்களுடைய சேவை இருக்கும். வெள்ளைக்காரர்கள் ஏதாவது கேட்டால் உடனடியாக ஓடோடி அதை கொண்டு வரும் பணிப்பெண்கள், இந்தியர்கள் ஒரு கோப்பை தண்ணீர் கேட்டால் கூட ஏதோ பெரிய தொண்டு செய்வது போல நினைத்துக்கொண்டு இரண்டு முறை ஞாபகப்படுத்திய பிறகே கொண்டு வருவார்கள்.

இருவரும் ஒரே கட்டணத்தை தானே செலுத்துகிறோம், அது என்ன வெள்ளை தோல் என்றால் ஒரு அடிமை புத்தி என்று பல முறை நான் மனதுக்குள்ளேயே பொங்கியதுண்டு.



அதற்கு விடை சென்ற முறை நான் செளதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் போது கிடைத்தது. செளதி அரேபியா ஒரு மிக மிக கண்டிப்பான இஸ்லாமிய நாடு என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு மதுபானங்கள் அருந்துவதோ, விற்பதோ, வாங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது. இது எல்லா நாட்டினருக்கும் பொருந்தும்.



அவ்வப்போது கள்ளத்தனமாக சிலர் வீட்டிலேயே சாராயத்தை காய்ச்சி காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவங்கள் கூட உண்டு. அப்படி மாட்டிக்கொண்டவர்களுக்கு மிக கடுமையான சிறை தண்டனை மற்றும் சவுக்கடி கொடுக்கப்படுவது வழக்கம்.



அண்டை நாடான பஹ்ரைன் இதற்கு முற்றிலும் நேர்மாரானது. அங்கு தாராளமாக எல்லா வகை மதுபானங்களும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் பெண்கள் சமாசாரத்துக்கும் பெயர் பெற்ற இடம் (!)


இந்த கட்டுப்பாடுகளில் இருந்து 'தப்ப' வாரக்கடைசிகளில் செளதியிலிருந்து போர் தொடுப்பது போல ஆயிரக்கணக்கில் பஹ்ரைன் நாட்டுக்கு பலர் காரில் செல்வார்கள். இதில் முக்கால்வாசி பேர் செளதி நாட்டினரே. சரி விஷயத்துக்கு வருகிறேன்.


செளதியில் வேலை செய்யும் வெளி நாட்டினர்களின் பெரும்பான்மையோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்களிலும் பெரும்பான்மையோர் கடை நிலை தொழிலாளர்கள் தான். இவர்களுக்கு 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒரு முறை தான் சொந்த நாட்டுக்கு செல்ல அனுமதி கிடைக்கும். மிக குறைந்த சம்பளத்தில் கடினமான வேலை செய்யும் நம் நாட்டினரை பார்க்க மிக பரிதாபகரமாக இருக்கும். ஊரில் உள்ளவர்களுக்கு இவர்கள் படும் கஷ்டம் ஒன்றுமே தெரியாது. "அவனுக்கு என்ன, துபாயில் வேலை செய்கிறான். பணம் மரத்தில் கொட்டும்" என்று பேசுவார்கள். (நமது ஊரில் செளதி, பஹ்ரைன், கத்தார், ஓமன் எல்லாமே "துபாய்" தான்!)




இப்படி 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒரு முறை விடுமுறை வரும்போது பெரும்பாலானோர் பஹ்ரைன் வழியாக ஊருக்கு திரும்பி செல்வார்கள். பஹ்ரைனிலிருந்து புறப்படும் விமானங்களில் மதுபானம் கொடுக்கப்படுவது வழக்கம்.




இங்கு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. விமானம் பஹ்ரைன் எல்லையை விட்டு தாண்டியது தான் தாமதம். உடனே காணாததை கண்டது போல இவர்களுக்கு வெறி ஏறி விடும். கொடுக்கும் ஒரு கப் மதுவை ஒரேயடியாக குடித்து விட்டு உடனேயே மற்றொறு கப் கேட்பார்கள். யாராவது மது வேண்டாம் என்று கூறி விட்டால் போதும். அவர்களுடைய கோப்பையை கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை. அதை எனக்கு கொடுங்கள் என்று பிடுங்காத குறையாக எடுத்துக்கொள்வார்கள்.





சிறிது நேரத்திலேயே 'ஆ' 'ஊ' என்று கத்தி ரகளை செய்து வாந்தி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த விமானத்தில் நாம் குடும்பத்துடன் சென்றால் அதோ கதி தான். குழந்தை குட்டிகளுடன் செல்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். வாந்தி நாற்றத்தில் 'எப்பொழுதுடா ஊர் போய் சேர்வோம் சாமி' என்று ஆகி விடும்.



இது போன்ற குடிமகன்கள் இருக்கும்போது, 'இந்தியர்கள் எல்லோருமே இது போன்றவர்கள் தான்' என்று தவறாக நம்மை இந்த பணிப்பெண்கள் எடை போடுவதில் வியப்பில்லை.. ஏனென்றால், வெள்ளைக்காரர்கள் கூட விமானத்தில் மது அருந்துவார்கள். ஆனால் இவர்களை போன்று சுய கட்டுப்பாட்டை இழந்து கலாட்டா செய்ய மாட்டார்கள்.





குடிமக்களே! உங்களுக்காக உங்களது குடும்பத்தினர் ஊரில் காத்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் தள்ளாடியபடி வந்து இறங்கினால் விமான நிலையத்தில் உங்களை வரவேற்க காத்திருக்கு உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? உங்களுடைய குழந்தைகள் தான் என்ன நினைக்கும்? செளதியா விமானத்தில் மட்டும் பெட்டிப்பாம்பாக வரும் நீங்கள் Gulf Air விமானத்தில் ஏன் கூத்தடிக்கிறீர்கள்? நீங்கள் செய்யும் அட்டகாசம் உங்களை மட்டும் பாதிப்பதில்லை. அது நீங்கள் மற்ற இந்தியர்களுக்கும், ஏன், இந்திய நாட்டுக்குமே செய்யும் பெரிய அவமானம் ஆகும். எதுவாக இருந்தாலும் உங்களுடைய ஊருக்கு சென்று செய்து கொள்ளுங்களேன். வெளி நாட்டில் இருக்கும் வரையாவது கண்ணியமாக இருந்து கொள்ளுங்களேன். ஏழையாக இருப்பதில் தவறில்லை - பணம் நிலையற்றது, ஆனால் ஒழுக்கமில்லாமல் இருப்பது தான் தவறு என்பதை எப்பொழுது அறிந்து கொள்வீர்கள்?








Saturday 8 November 2008

அன்பளிப்பு

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முடித்திருந்த நேரம். பட்டப்படிப்புக்கான சான்றிதழை தயார் செய்து அனுப்ப சில மாதங்கள் ஆகும் என்பதால் தற்காலிகமாக ஒரு சான்றிதழை (Provisional Certificate) பல்கலைக்கழகத்தில் கொடுப்பதாக கூறினர். இதை வைத்து கொண்டு வேலை தேடவோ மேற்படிப்பு படிக்கவோ நிரந்தர சான்றிதழ் வரும் வரை உபயோகித்து கொள்ளலாம்.


இந்த தற்காலிக சான்றிதழை வாங்குவதற்காக ஒரு விண்ணப்ப படிவத்தை நிரப்பி வங்கியில் பணம் கட்டிவிட்டு அதற்கான நகலை படிவத்துடன் கொடுக்க வேண்டும்.


காலையிலேயே பல்கலைக்கழகத்துக்கு சென்று அங்கு இருந்த நீண்ட வரிசையில் காத்திருந்து எனது விண்ணப்ப படிவத்தை அங்கிருந்த குமாஸ்தாவிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்கி பார்த்து விட்டு, "ஆமேலே பா" ("பிறகு வா") என்று கன்னடத்தில் விரட்டினார். நானும் விடுவதாயில்லை. "பிறகு" என்றால் எப்பொழுது? நான் நகராமல் அங்கேயே இருந்தேன். எப்பொழுது வரவேண்டும் என்று கேட்டதற்கு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு வரச்சொன்னார். ஒன்றும் பெரிய காரியம் இல்லை. ஒரே ஒரு முத்திரை அடிக்க வேண்டும். அதற்குதான் இத்தனை பீடிகை. என்னுடைய விபரங்கள் எல்லாம் ஏற்கனவே கணணியில் இருந்ததால் அதை ஒரு நகல் எடுத்து முத்திரை குத்தி பதிவாளரிடம் கையெழுத்து வாங்கினால் வேலை முடிந்தது.



நானும் அவர் கூறியது போல இரண்டு மணி நேரத்துக்கு பிறகு வரிசையில் போய் நின்றேன். என்னை பார்த்தவுடன், "மதிய உணவுக்கு பிறகு வா" என்றார். எனக்கு சுரீர் என்று கோபம் வந்து விட்டது. "நீங்கள் தானே இரண்டு மணி நேரத்துக்கு பிறகு வரச்சொன்னீர்கள். இதை முன்பே கூறி இருந்தால் நான் மதிய உணவுக்கு பிறகே வந்திருப்பேனே" என்று கேட்டேன். அவ்வளவுதான். என்னவோ எனக்கு பெரிய உபகாரம் செய்வது போல மிக கேவலமான வார்த்தைகளால் என்னை திட்டி ஜன்னல் கதவை பட்டென்று மூடிவிட்டார்.


எனக்கு ஒரே அவமானமாக ஆகிவிட்டது. சரி, மதிய உணவுக்கு பிறகு நமது சான்றிதழை வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று அந்த ஜன்னல் அடியிலேயே உட்கார்ந்து கொண்டுவிட்டேன். (இடத்தை விட்டால் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டுமே!).



மதிய உணவு வேளை முடிந்து கூட ரொம்ப நேரம் ஜன்னல் திறக்கவே இல்லை. ஒரு வழியாக ஜன்னலை திறந்த போது நான் நிற்பதை பார்த்த அந்த குமாஸ்தா என்னை ஒரு கிருமியை பார்ப்பது போல ஏளனமாக பார்த்து சிரித்தான். நான் ஒன்றும் கூறாமல் நின்று கொண்டிருந்தேன். அந்த குமாஸ்தா உடனே "உனக்கு இன்றே இந்த சான்றிதழ் வேண்டுமா?' என்று கேட்டான். நான், "எனக்கு மிக அவசரமாக வேண்டும். இரவு ஊருக்கு செல்ல வேண்டும்" என்று கூறினேன்.



அவன் உடனே, "எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இன்று முடியும் போல தோன்றவில்லை. உனக்காக செய்ய வேண்டும் என்றால் நீ எனக்கு 500 ரூபாய் அன்பளிப்பாக தர வேண்டும்" என்று கூறினான். நான், "என்னிடம் 500 ரூபாய் இல்லை" என்று கூறினேன். அவ்வளவுதான். அவன் என்னை விரட்டாத குறையாக "போய் எடுத்து கொண்டு வா" என்று கூறிவிட்டான்.



காலையில் இருந்து எனக்கு பசி வேறு. ஒன்றுமே சாப்பிடவில்லை. எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இவனை இன்று ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது என்று தீர்மானித்தேன். அலுவலகத்துக்குள் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக என்னை கேவலப்படுத்தினான் அல்லவா? இவனுக்கு மேலதிகாரி யார் என்று தெரியவில்லையே. சரி, வந்தது வரட்டும், என்று நேரிடையாக பதிவாளரையே பார்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.



பதிவாளர் ஒரு தனி அறையில் இருந்தார். வாசலில் இருந்த பியூன் என்னை தடுத்து, "அவர் மிகவும் busyயாக இருக்கிறார். இப்பொழுது பார்க்க முடியாது" என்று கூறினான். நானும் விடாப்பிடியாக, 'அவர் freeயாக ஆகும்வரை நான் காத்திருக்கிறேன்' என்று அவரது அறையின் வாசலில் நின்றுகொண்டேன். அந்த அறைக்கு நேர் எதிரில் உள்ள அறையில் தான் அந்த குமாஸ்தா உட்கார்ந்து கொண்டிருந்தான். ஆனால் நான் அங்கு நிற்பதை அவன் பார்க்கவில்லை.

நேரம் செல்ல செல்ல நான் பொறுமையை இழந்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து வாசலில் இருந்த ப்யூன் கழிவறைக்கு செல்ல, ஒரு உத்வேகத்தில் வந்தது வரட்டும் என்று பதிவாளரின் அறையை திறந்து கொண்டு நேரே உள்ளே நுழைந்தேன். எனக்கு பின்னால் கதவை மூடாமல் திறந்தே வைத்தேன்.
இப்பொழுது நினைத்து பார்த்தாலும் ஏன் அப்படி செய்தேன் என்று தெரியவில்லை, ஆனால் எப்படியோ அது நடந்து விட்டது. உள்ளே நுழைந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
"Busy" என்று கூறப்பட்ட பதிவாளர் ஒரு செய்தி தாளை அகல விரித்து மும்முரமாக பார்த்து கொண்டிருந்தார். அவரது மேஜையில் ஒரு பத்து லாட்டரி சீட்டுக்கள்!! என்னை கண்டதும் சிறிது திடுக்கிட்டு பிறகு சுதாரித்து கொண்டு "என்ன?" என்பது போல பார்த்தார்.
நான் ஆங்கிலத்தில் அவரிடம் மெல்ல ஆரம்பித்தேன். நான் பேச பேச என்னை அறியாமலேயே எனது குரல் சிறிது சிறிதாக அதிகமாக ஆரம்பித்தது. பதிவாளரிடம், "ஐயா, நான் காலையில் இருந்தே சாப்பிடாமல் வரிசையில் நின்று கொண்டிருக்கிறேன். ஒரு சாதாரண சான்றிதழுக்காக உங்களது அலுவலக குமாஸ்தா என்னை அலைக்கழிய வைக்கிறார். அவருக்கு 500 ரூபாய் கொடுத்தால் தான் எனது வேலையை செய்வாராம். நானோ ஒரு மாணவன். இன்னமும் சம்பாதிக்க கூட ஆரம்பிக்கவில்லை. எனது செலவுக்கே எனது தந்தையை நம்பிக்கொண்டிருக்கிறேன். இவருக்கு லஞ்சம் கொடுத்தால் தான் வேலை செய்வார் என்றால் பிறகு இந்த அலுவலகம் எதற்கு, சம்பளம் எதற்கு, மேலதிகாரி நீங்கள் எதற்கு?" என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டேன்.
கதவு திறந்திருந்ததால் அலுவலகத்தில் அனைவருக்கும் நான் கத்தி பேசியது கேட்டுவிட்டது. அனைவரும் திக்பிரம்மை பிடித்தது போல அமைதி ஆகிவிட்டனர். அது மட்டுமல்ல, ஜன்னல் திறந்திருந்ததால், வெளியே காத்திருந்த மற்றவர்களுக்கும் நான் கத்தியது கேட்டிருக்க வேண்டும்.
அதிர்ச்சியில் உறைந்த பதிவாளர் உடனே தனது இருக்கையை விட்டு எழுந்தார். எனது தோளில் கையை வைத்து, "இல்லை தம்பி. நீங்கள் நினைப்பது போல இல்லை" என்று ஏதோ கூறினார். கோபத்தில் எனது கண்கள் சிவந்திருந்தன. எனது கையை பிடித்து என்னை தனது அறையின் வெளியே அழைத்து வந்தார். நேராக அந்த குமாஸ்தாவிடம் சென்று "என்ன செய்வீர்களோ தெரியாது, 10 நிமிடத்தில் இந்த பையனுக்கு சான்றிதழ் தயாராக வேண்டும்" என்றார். குமாஸ்தாவின் முகத்தில் அதிர்ச்சி மின்னல்.
சரியாக பத்தாவது நிமிடம் எனது கைகளில் சான்றிதழ் வந்தடைந்தது. பதிவாளரிடம் எனது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்து விட்டு அந்த குமாஸ்தாவை ஒரு பார்வை பார்த்தேன்.
ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட அந்த பார்வையை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், ஒரு 21 வயது பையனிடம் நேர்ந்த அவமானத்தால் கூனிக்குறுகி வேறு எங்கோ பார்த்தார்.
அன்று ஒரு மிக முக்கியமான பாடத்தை கற்று கொண்டேன். நமது பலவீனத்தை சாதகமாக்கி கொள்ள யாராவது முயற்சி செய்தால் நாம் பயந்து விடக்கூடாது. நேருக்கு நேராக அதை எதிர்கொள்ள வேண்டும். ஒரு வேளை எனது கோபமான வார்த்தைகளால் அன்று வேறு ஏதாவது கூட நடந்திருக்கலாம். ஆனால் நான் கூறியதில் நியாயம் இருந்ததாலும் மனதில் இருந்து உண்மையான வார்த்தைகள் வெளிவந்ததாலும் அன்று வெற்றி பெற்றேன் என்றே நினைக்கிறேன்.
இத்தனை வருடங்களுக்கு பிறகு கூட பெங்களூர் பல்கலைக்கழகத்தின் வழியாக நான் செல்லும் போது மறக்க முடியாத இந்த சம்பவத்தை நினைத்து சிரிப்பு தான் வருகிறது!