Tuesday 28 October 2008

பச்சோந்திகள்

நாம் சில 'பெரிய' மனிதர்களை மிகவும் மதித்து போற்றுவோம். அவர்களின் கொள்கை பிடிப்பு மிகவும் புரட்சிகரமானதாக இருக்கும். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் அவர்களின் உண்மையான முகத்தை பற்றி கூறும்போது அவர்களின் மேல் வைத்திருந்த மதிப்பே போய்விடும்.

எனது பெரியப்பா தமிழக காவல் துறையில் பல வருடங்கள் பணி புரிந்தவர். அவர் காலமாகி சில வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய வேலை என்னவென்றால் கட்சி தலைவர்கள் பொது கூட்டங்களிலோ கட்சி கூட்டங்களிலோ பேசும்பொழுது அதை பற்றி குறிப்பு எடுத்து அதை உடனுக்குடன் தலைமை செயலகத்துக்கு தெரியப்படுத்துவது தான். இது போன்ற குறிப்புகள் முதல்வரின் நேரடி பார்வைக்கு செல்லும். காலா காலமாக கட்சி பாகுபாடு இல்லாமல் யார் முதல்வராக வந்தாலும் நடை பெற்று வரும் வழக்கம் இது. வேலை நிமித்தமாக பல கட்சி தலைவர்களுடைய பொதுக்கூட்டங்களுக்கும் கட்சி கூட்டங்களுக்கும் (பொது ஜனம் போல சாதாரண உடையில் சென்று) குறிப்பெடுத்து நேரிடையாக தகவல் சொல்லும் ஒற்றர் பணியில் எனது பெரியப்பா இருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், வந்திருப்பது காவல் துறையின் நபர் என்பது அந்தந்த தலைவர்களுக்கும் தெரியும்! பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல தான் இது!

அவர் ஓய்வு பெற்ற பின் எங்களிடம் பல தலைவர்களை பற்றிய ருசிகரமான சம்பவங்களை பற்றி கூறுவார்.

கடவுள் எதிர்ப்பு கொள்கையை மிக தீவிரமாக கொண்ட ஒரு கட்சி தலைவரை பற்றி எனது பெரியப்பா கதை கதையாக கூறுவார். அவர் பொதுக்கூட்டங்களில் மிக வீரமாக பேசும்போது ஆலய மணி அடிப்பதை போன்று இருக்குமாம்! அவரின் பேச்சை (60களில்) கேட்பதற்கு கூட்டம் அலை மோதுமாம். "பகுத்தறிவு" என்று கூறிக்கொண்டு மேடை மேடையாக, தெருத்தெருவாக கடவுள் எதிர்ப்பையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே தங்களது பரம விரோதிகளாக பாவித்து அவர்களை கண்டால் செருப்பால் அடிக்குமாறு தங்களது தொண்டர்களை தூண்டி விட்டு பேசுவதில் அவர் வல்லவர். "பாம்பையும் ....னையும் கண்டால் பாம்பை விட்டு விடு. ....னை உடனடியாக கொன்றுவிடு" என்று (இத்தனை வருடங்களுக்கு பிறகு கூட) அமிலத்தை கக்கும் அந்த தலைவர் எப்பொழுதும் கறுப்பு சட்டையுடன் தான் வெளியே செல்வார். எனது பெரியப்பாவை பொதுக்கூட்டத்தில் முதல் வரிசையில் கண்டதும் மேடையிலேயே அந்த தலைவர் "மாமியார் வீட்டிலிருந்து வந்துட்டாங்கய்யா" என்று நக்கலாக கூறுவாராம்.


இவரது வீட்டுக்கு அடிக்கடி எனது பெரியப்பா சென்றிருக்கிறார். வெளியே வெறுப்பை கொட்டி பேசும் இந்த தலைவரின் வீட்டில் நிலைமை தலைகீழாம். அது மட்டுமல்ல, அவர் வீட்டில் அணிவது தூய வெள்ளை வெளேர் என்ற சலவை சட்டையை தானாம். ஆச்சரியமாக இருக்கிறதா? சற்று பொறுங்கள். அவரது வீட்டின் உள் அறையில் சுவற்றில் அத்தனை சாமி படங்களையும் காணலாமாம்! வெளியே பகுத்தறிவு பிரசாரத்தை மேற்கொள்ளும் இவருக்கு ஜோதிடத்தின் மேல் அலாதியான நம்பிக்கையாம். இது எப்படி இருக்கிறது?

மற்றொரு மிகப்பெரிய பகுத்தறிவு தலைவரின் வீட்டிலும் இதே கதை தானாம். இவரது மனைவி, மக்கள், பேரன் பேத்திகள் எல்லோரும் ஆத்திகவாதிகள். இவர் மட்டும் தீவிர கடவுள் எதிர்ப்பை பொது வாழ்க்கையில் கடைபிடித்து வருபவர். (இவரின் வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் கோவிலில் இவருடைய பிறந்த நாளில் இவருடைய பெயரில் அர்ச்சனையே நடந்தது). "உபயம் இன்னார்" என்று இவருடைய பெயரை வெளிப்படையாகவே எழுதியிருந்தார்கள்!

இவர்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் தங்களது இரட்டை வேடத்தால் இவர்கள் ஏமாற்றி வருவது என்றாவது ஒரு நாள் வெளியே தெரிய வந்தால் என்ன செய்ய போகிறார்களோ? இவர்களை ஆட்டு மந்தை போல நம்பி வந்த தொண்டர்களுக்கு என்ன பதில் கூறுவார்கள்? அரசியலில் மானமாவது மரியாதையாவது, வெங்காயம், இதெல்லாம் சகஜம்ப்பா!

Tuesday 21 October 2008

தித்திக்கும் தீபாவளி

வந்தேவிட்டது மற்றொரு தீபாவளி. எங்கு பார்த்தாலும் கூட்டம் கரை புரளும் நேரம் இது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஒரு மகிழ்ச்சியான நேரம் தான்.





மற்ற பண்டிகைகளுக்கும் தீபாவளிக்கும் ஒரு முக்கியமான வித்யாசம் உள்ளது. அதுதான் பட்டாசு. வருடா வருடம் விதம்விதமான பட்டாசுகள் வருகின்றன. ஆனால் அதற்கு தகுந்தாற்போல விலையும் கூடிக்கொண்டே போகிறது. நான் சிறுவனாக இருந்த போது தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே அதை பற்றிய கனவுடன் இருப்போம். எங்களது தெருவில் இருந்த பணக்கார நண்பன் "எங்கள் வீட்டில் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கி இருக்கிறோம்" என்று பீற்றிக்கொள்வான். அப்பொழுதெல்லாம் நூறு ரூபாய் என்பது மிக பெரிய தொகை.






தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் எனது தந்தை பட்டாசுகளை வாங்கி வருவார். அதற்கு முன்னால் வாங்கினால் கொளுத்தி தள்ளிவிடுவோம் என்று அவருக்கு தெரியும்! 40 ரூபாய்க்கு ஒரு பெரிய பை நிறைய பட்டாசுகளை வாங்கி வருவார். (இப்போதெல்லாம் 40 ரூபாய்க்கு ஒரு வெடி வந்தாலே அதிசயம் தான்!). அதை உடனே ஒரு பெரிய செய்தி தாளில் விரித்து காய வைப்போம். யாரும் எந்த வெடியையும் எடுத்து விடாமல் காவல் தெய்வமாக எனது அண்ணன் இருப்பான்! லக்ஷ்மி வெடி, குருவி வெடி, ஊசி பட்டாசு, இரயில், பூந்தொட்டி, அணுகுண்டு, மத்தாப்பு என்று விதவிதமான பட்டாசுகளை பார்க்கும்போதே மிக ஆசையாக இருக்கும்.






தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு தான் பட்டாசு பையை பிரிப்பார்கள். முதல் வெடி எப்பொழுதுமே அணுகுண்டு தான். உண்மையிலேயே மிக பயங்கர வெடி சத்தம் அணுகுண்டில் தான் இருக்கும். வீட்டின் உள்ளே இருந்து பாட்டி "கடங்காரா, தெருவில் போய் வெடியேன்டா" என்று கத்தியவுடன் ஒரு குரூர(!) திருப்தியுடன் வெளியே சென்று ஒவ்வொறு பட்டாசாய் வெடிக்க ஆரம்பிப்போம். மத்தாப்பு, குருவி வெடி, சட்டி வாணம் என்று ஒவ்வொன்றாய் மாற்றி மாற்றி வெடிக்க மறுநாள் காலை வெடிப்பதற்காக சில வெடிகளை பதுக்கி வைப்போம்.





தீபாவளியன்று காலை 3 மணிக்கே எழுந்து முதல் வெடியை வெடிக்க வேண்டும் என்று முந்தைய நாள் மாலையிலேயே நண்பர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வோம். அன்று இரவு தூக்கமே வராது. கிட்டத்தட்ட இரவு ஒரு மணி வரை அங்கொன்றும் இங்கொன்றும் வெடி சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்.








அதிகாலை 3 மணி ஆனது தான் தாமதம். வெளியே வந்து முதலில் ஒரு லக்ஷ்மி வெடியை வெடித்து தெருவையே எழுப்பி விட்டுதான் மறுவேலையே. அதற்குள் அம்மா உள்ளே இருந்து அனைவரையும் கூப்பிட்டு தீபாவளி மருந்தை கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பார். அடுத்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு அவசரம் அவசரமாக வீட்டில் செய்த இனிப்புகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் மிச்ச சொச்ச வெடிகளை வெடிக்க புறப்பட்டு விடுவோம். ஒரு ஆறு மணி வாக்கில் ஆய்ந்து ஓய்ந்து வீட்டுக்குள் வருவோம்.



உறவினர்கள் ஒவ்வொருவராக வர தொடங்குவார்கள். அவர்களின் வருகையே மிக மகிழ்ச்சியாக இருக்கும். பிற்காலங்களில் இந்த பாழாய்ப்போன தொலைக்காட்சி வந்த பிறகு எல்லோர் வீட்டிலும் விருந்தோம்பலின் அணுகுமுறையே மாறிவிட்டது.





தொலைக்காட்சியில் அன்று வெளிவந்த திரைப்படங்களின் பாடல் காட்சிகள், நடிக நடிகைகளின் அனுபவங்கள் போன்ற 'முத்துக்கள்' ஒளிபரப்ப துவங்கியபின் தெரியாமல் யாராவது உறவினர் வீட்டுக்கு வந்து விட்டால் போதும். வேண்டா வெறுப்பாக அவரை வரவேற்று 'உபசரிக்கும்' கலாச்சாரம் மெல்ல வர துவங்கியது. அப்படியே யாராவது உறவினர் வந்து விட்டால் கூட அவரிடம் பேசுவதை விட்டுவிட்டு தொலைக்காட்சி பெட்டியையே பார்த்து கொண்டிருப்பார்கள். நடுவில் விளம்பர இடைவெளி வரும்போது மட்டும், விருந்தினர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்ற ஞானோதயம் ஏற்பட்டு, "அப்புறம் வேறு என்ன விசேஷம்?" என்று அவரிடம் கேட்க ஆரம்பிப்பார்கள். அதுவும் அந்த ஒரு நிமிடம் தான். மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் பழைய குருடி கதவை திறடி என்று தொலைக்காட்சியில் தங்களையே தொலைத்து விடுவார்கள்.



என்ன இருந்தாலும் தீபாவளியை போன்ற மகிழ்ச்சி வேறு எந்த பண்டிகையிலும் இல்லை என்றே கூறலாம். பதினொறு வருடங்களாக செளதியில் வேலை செய்கிறேன். வெடிச்சத்தமும், நண்பர்களுடன் அடித்த கும்மாளங்களும், சொந்த பந்தங்கள், குழந்தைகள் பெரியோர்களுடன் கழித்த அருமையான இந்த பண்டிகையை நம்மால் அது போல இங்கு கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் இன்னும் உள்ளது. பணத்துக்காக உயிரை அடகு வைத்து விட்டோமோ என்று உள்ளம் கேட்கிறது. பதில் தான் இல்லை.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Wednesday 15 October 2008

டூ வீல‌ர் ஓட்டிய‌ க‌தை

இப்பொழுதெல்லாம் 15 வயது பையன்கள் எல்லாம் சாலையில் 'டூ வீலர்களை' ஓட்டி செல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. எனக்கும் 12 வயது வரை 'டூ வீலர்' ஓட்ட தெரியாது. அதாங்க, சைக்கிளை பற்றி தான் சொல்கிறேன்!



"சைக்கிளை ஓட்டி கீழே எங்கேயவது விழுந்து பல்லை கில்லை உடைத்து கொள்ளாதே. போய் படிக்கிற வேலையை பாரு" என்று வீரத்தை பிஞ்சிலேயே ஊட்டி எனது வீட்டில் வளர்த்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று எனது சித்தியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். சித்தியின் பையன் கோபி என்னைவிட ஒரு வயது சிறியவன். அவன் நான் வருவதை அறிந்ததும் எங்கிருந்தோ ஒரு வாடகை சைக்கிளை எடுத்து வந்து (1 மணி நேரத்துக்கு 50 பைசா!) ஹாண்டில் பாரை கூட பிடிக்காமல் கைகள் இரண்டையும் தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு 'ஹோ' என்று கத்திக்கொண்டே சைக்கிளை சாலையில் ஓட்டி என்னை வெறுப்பேற்றினான்.



நாம் தான் தன்மான சிங்கமாயிற்றே! 'பூ! இது என்ன பெரிய வேலை' என்று கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பின் சக்கரத்தின் நடுவில் குத்த, அவன் உருட்டி அடித்துக்கொண்டு கீழே விழுந்து கை கால் எல்லாம் சிராய்த்து கொள்ள, அங்கு ஒரு பெரிய அடிதடியே உருவாகும் சூழ்நிலை உருவாகிவிட்டது. கடைசியில் அமெரிக்காவும் இந்தியாவும் அணு ஒப்பந்தம் செய்து கொண்டது போல ஒரு சமரசம் செய்து கொண்டோம். அதாவது, அவன் வீட்டுக்கு தெரியாமல் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டியதை நான் அவன் அம்மாவிடம் கூற மாட்டேன். பதிலுக்கு, அவன் அதே வாடகை சைக்கிளில் எனக்கு ஓட்ட கற்று கொடுக்க வேண்டும்' என்பது தான் அந்த ரகசிய ஒப்பந்தம்!



அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல பின் சக்கரத்துக்கு இரண்டு புறமும் விழுந்தால் தாங்கிக்கொள்ள இரண்டு சிறிய சக்கரங்கள் கொண்ட stand எல்லாம் கிடையாது. விழுந்தால் அடிபட்டுக்கொள்ள வேண்டியது தான். அதாவது, உண்மையிலேயே 'டூ வீலர்' தான்!



என்னை சீட்டில் உட்கார்த்தி வைத்து விட்டு "நேராக பார். அங்கே இங்கே பார்த்தால் கீழே விழுந்து விடுவாய்" என்று 'தைரியம்' கொடுத்து பின்னால் உள்ள காரியரை கோபி பிடித்துக்கொண்டான். பெடலை மிதித்ததுதான் தாமதம். சைக்கிள் பயங்கரமாக இரு பக்கமும் ஆடத்துவங்கியது. "மிதிடா" என்று அவன் கத்த, நான் மிதிக்க , சைக்கிள் நேராக போய் ஒரு சுவற்றில் மோத, நான் ஒரு பக்கம், சைக்கிள் ஒரு பக்கம் என்று விழுந்தோம். ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு சைக்கிளை தூக்கி பார்த்தால் அழுகையே வந்து விட்டது. முன் சக்கரம் வலது பக்கமாகவும் ஹாண்டில் இடது பக்கமாகவும் திரும்பிக்கொண்டிருந்தது. "என்னடா செய்வது, சைக்கிள் கடைக்காரனுக்கு என்ன பதில் சொல்வது" என்று நான் கோபியை கேட்க அவனோ கவுண்டமணி பாணியில் "இதெல்லாம் சகஜம்டா" என்று வீர வசனம் கூறி முன் சக்கரத்தை இரண்டு தொடைகளுக்கு நடுவில் வைத்து ஹாண்டிலை நேர் படுத்தினான்.



மீண்டும் காரியரை பிடித்துக்கொண்டு அவன் கூடவே ஓடி வர நான் மெல்ல பெடலை மிதிக்க தொடங்கினேன். சாலை ஓரத்தில் 90 டிகிரி வளைவு இருந்தது. கோபி மூச்சிரைக்க காரியரை பிடித்துக்கொண்டே ஓடி வர நான் கொஞ்சம் கொஞ்சமாக பெடலை வேகமாக அழுத்தி வளைவில் திரும்பினேன். 'டமார்' என்று ஒரு சத்தம். ஒரு இரண்டு வினாடிகளுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.நானும் சைக்கிளும் முன்போல தெருவில் தூக்கி வீசப்பட்டிருந்தோம். என்னடா, எல்லாம் இரண்டு இரண்டாக தெரிகிறதே என்று பார்த்தால், என்னை போலவே இன்னொரு பிரகஸ்பதி சைக்கிள் கற்றுக்கொண்டு எதிர் பக்கத்தில் இருந்து வந்து என்னுடைய சைக்கிளில் மோதியிருக்கிறான்!



முட்டியிலிருந்து இரத்தம் கொட்ட எனது சைக்கிளில் இடித்தவனை "எல் போர்டு, முள்ள மாரி, கேப் மாரி" என்று சிறப்பான சென்னை செந்தமிழில் திட்டிக்கொண்டே எழுந்தேன்.



பாவம், அவனுக்கும் அடி பட்டிருந்ததால் அவனையும் எழுப்பி "நீ அடுத்த தெருவுக்கு போய் ஓட்டு" என்று கூறிவிட்டு, மீண்டும் எனது புனித பயணத்தை தொடர்ந்தேன்.



கோபி காரியரை பிடித்துக்கொண்டே கூட ஓடி வர‌, ஒரு கட்டத்தில் அவன் "கவலைப்படாதே, நான் பிடித்துக்கொண்டு தான் இருக்கிறேன்" என்று தைரியம் ஊட்ட, ஹாண்டிலில் முன்பு இருந்த ஆட்டம் இப்போது குறைந்ததை கண்டு பெருமையாக இருந்தது. "பார்டா கோபி, இப்போது ஹாண்டில் ஆடாமல் இருக்கிறது. வாடகை வண்டி என்றாலே இப்படி தான், ஏதாவது ஓட்டை உடைசலை கொடுத்து நம் தலையில் கட்டி விடுவார்கள்" என்று நான் பேசிக்கொண்டே சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தேன். 'என்னடா, ஒன்றுமே பேசாமல் வருகிறாய்' என்று நான் கேட்க பதிலே இல்லை.



திடீரென்று திரும்பி பார்த்தால் எனது முகமே வெளிறி விட்டது. கோபி தெருக்கோடியில் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அடப்பாவி, அப்போது நான் தனியாகவா இத்தனை நேரம் ஓட்டிக்கொண்டிருந்தேன்? ஐயோ, பிரேக் வேறு பிடிக்கவில்லையே, என்ன செய்வது என்று பதற ஆரம்பித்ததுதான் தாமதம். டமால் என்று பிளாட்பாரத்தின் மேல் ஏற்றி வெற்றிகரமாக வண்டியை சுவற்றில் மோதி நிறுத்தினேன்.



'இதுக்கு மேல தாங்க முடியாதுடா சாமி' என்று சைக்கிளை தூக்கி கொண்டு எழுந்திருக்க, கோபி சாவகாசமாக நடந்து வந்தான். அவனை பிடித்து இரண்டு சாத்து சாத்தலாமென்று கருவிக்கொண்டிருக்கும் போதே 'பராவயில்லைடா. ரொம்ப சீக்கிரமாகவே சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டியே' என்றான். ஓ, அப்படியா? எனக்கும் இப்போது டூ வீலரை ஓட்ட தெரியுமா?



சைக்கிளை தள்ளிக்கொண்டே வாடகை கடை இருக்கும் தெரு வரை வந்தோம். எட்டி பார்த்தால் கடைக்காரருக்கு பதில் அவருடைய மகன் உட்கார்ந்து கொண்டிருந்தான். நல்ல வேளை, தப்பித்தோம். கடையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அவனிடம் 50 பைசாவை கொடுத்துவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடி விட்டோம். இனி ஒரு மாதத்துக்கு இந்த தெரு பக்கமே தலை வைத்து படுக்க கூடாது!



வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி நுழைந்த உடனேயே வீர தழும்புகளை எல்லோரும் பார்த்து விட்டனர். 'அது ஒன்றும் இல்லை, விளையாடும் போது கீழே விழுந்து விட்டேன்' என்று நான் கூற கோபி என்னை முறைத்து பார்த்தான்! பின்னே என்ன, வாடகை சைக்கிளை திருட்டுத்தனமாக வாங்கி ஓட்டி கீழே விழுந்து அடியா பட்டுக்கொண்டேன்?


Saturday 11 October 2008

நவீன இரத்த காட்டேரிகள்

1997ம் ஆண்டு. நான் சூரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம். திடீரென்று எனது 3 வயது குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன். குழந்தையை பார்த்த மருத்துவர், தெருக்கோடியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பரிசோதனை கூடத்தில் (lab) சென்று குழந்தையின் இரத்தத்தை பரிசோதித்து கொண்டு வருமாறு கூறினார். நானும் அப்படியே சென்று அந்த ரிப்போர்ட்டை மருத்துவரிடம் கொடுத்தேன். அதை 10 வினாடிகளுக்கு கூட அவர் பார்த்திருக்க மாட்டார். "உங்கள் குழந்தைக்கு மலேரியா உள்ளது. இது சரியாக 14 நாட்களாகும். ஆனால் சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து ஒரு மாத்திரை வந்துள்ளது. சற்று விலை அதிகம். ஆனால் இதை சாப்பிட்டால் இரண்டே நாட்களில் குணமாகிவிடும். உங்களுடைய விருப்பம் எப்படியோ அப்படி செய்யுங்கள்" என்று கூறினார்.
பதறிப்போன நானும் எனது மனைவியும், "விலை அதிகமானாலும் பரவாயில்லை, குழந்தை சீக்கிரம் குணமாக வேண்டும்" என்று அவரிடம் கூறினோம். அவர் உடனே ஒரு குறிப்பிட்ட மருந்து கடைக்கு போன் செய்து கடைக்காரரிடம் அந்த மருந்தை தருமாறு கூறினார். 200 ரூபாய் feesஐயும் வாங்கி கொண்டார்.

மருந்து கடைக்கு சென்றால் அவன் ஒரு மாத்திரையை கொடுத்து (ஒரே ஒரு மாத்திரை தான்) "இதன் விலை 300 ரூபாய். ஆனால் இதற்கு நான் ரசீது கொடுக்க முடியாது. ஏனென்றால் இது வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது" என்று கூறினான். ஒரு மாத்திரை 300 ரூபாய் என்பது மிக அதிகமாக இருந்தாலும் மருத்துவர் ஏற்கனவே இதை பற்றி கூறி இருந்ததால் நாங்களும் அதை வாங்கி குழந்தைக்கு கொடுத்தோம். 4-5 நாட்களுக்கு பிறகு குழந்தை குணமாகியது.

சில நாட்களுக்கு பிறகு எங்களது பக்கத்து வீட்டில் இருந்த மற்றொரு மருத்துவரிடம் இதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறியது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "உங்களது குழந்தைக்கு வந்தது மலேரியாவாகவே இருந்திருக்காது. அவர் குறிப்பிட்ட அந்த பரிசோதனைக்கூடத்துக்கும் மருத்துவருக்கும் ஒருவித எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது (understanding). அதே போல, மருந்து கடைக்கும் மருத்துவருக்கும் கூட ஒரு understanding உள்ளது. உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்" என்று கூறினார்.
எனக்கு அந்த மருத்துவர் மேல் இருந்த மதிப்பே போய் விட்டது. 'சரி, எப்படியோ நம் குழந்தை குணமாகி விட்டது' என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

இது முடிந்து ஒரு 3 வருடங்களுக்கு பிறகு சென்னையின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் (ஒரு அமெரிக்க ராக்கெட்டின் பெயர் கொண்டது) எனது தந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை (open heart bypass surgery) நடைபெற்றது. இந்த மருத்துவமனையின் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளன. எனது தந்தையை அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள், இரண்டரை லட்சம் ரூபாயை 'ரொக்கமாக' கொடுக்கும்படி மருத்துவமனையில் கூறினார்கள். நான் காசோலையாகவோ (cheque) வங்கியில் எடுத்த draft ஆகவோ கொடுப்பதாக கூறியும் "எங்களுக்கு நீங்கள் cashஆக தான் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளை அறுவை சிகிச்சை செய்ய முடியாது" என்று கறாராக கூறி விட்டார்கள். நாங்கள் அவசரம் அவசரமாக வங்கிக்கு சென்று பணத்தை ரொக்கமாக எடுத்து ஒரு பெரிய பையில் போட்டுக்கொண்டு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு வந்து அதை கொடுத்தோம். எங்களுக்கு மிகவும் பயமாக இருந்தது. வழியில் ஏதாவது ஆகியிருந்தால் மொத்த பணம் போவது மட்டுமல்லாமல் நாளை அறுவை சிகிச்சை கூட செய்ய முடியாமல் போய்விடுமே என்று மிகவும் பயந்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக பணத்தை அந்த cashierஇடம் கொடுத்த பிறகுதான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது.

அறுவை சிகிச்சை நடந்து ஒரு 10 நாட்களுக்கு பிறகு எனது தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தோம். இரவு ஒரு 2 மணி இருக்கும். திடீரென்று எனது தந்தை விளக்கை போடுவதற்காக தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
திடுக்கிட்டு எழுந்த நாங்கள் அவரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து விட்டோம். அவரது மார்பிலிருந்து இரத்தம் சிறிது சிறிதாக கசிந்து கொண்டிருந்தது. உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு மீண்டும் அந்த மருத்துவமனைக்கே அவரை அழைத்து சென்றோம். சாவகாசமாக வந்த மருத்துவர் அவரை உடனடியாக மீண்டும் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். என்ன விஷயம் என்றால், முதன் முறை அறுவை சிகிச்சை செய்து விட்டு தையல் போட்டார்கள் அல்லவா, அந்த தையல் பிரிந்து அந்த இடத்தில் infectionஆகி விட்டிருந்ததாம். மீண்டும் பழையபடியே வங்கிக்கு சென்று 25000 ரூபாயை ரொக்கமாக ஒரு பையில் போட்டுக்கொண்டு பணத்தை மருத்துவமனையில் கொடுத்தோம். (இத்தனைக்கும் இது மருத்துவர்களின் தவறு. ஆனால் இதை யாரிடம் போய் அழுவது?) ஒரு வழியாக நல்லபடியாக எல்லாம் நடந்து முடிந்தது.

எனது நண்பர்களிடம் இந்த இரண்டு சம்பவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இது போல பல இடங்களில் இப்போதெல்லாம் நடக்கிறதாம். ஒரு காலத்தில் மருத்துவர்களை கடவுளுக்கு இணையாக மதித்த காலம் இருந்தது. ஒவ்வொறு குடும்பத்துக்கும் 'குடும்ப மருத்துவர்' என்றே ஒருவர் இருப்பார். சுயநலமில்லா சேவையை செய்து வந்தனர். இப்பொழுது என்னவென்றால், வரும் நோயாளிகளிடம் எவ்வளவு பணம் பிடுங்கலாம் என்றே குறியாக இருக்கின்றனர். ஒரு மருத்துவ மாணவனிடம் இதை பற்றி நேரிடையாக கேட்டேன். அவன் கூறிய பதில் அதிர்ச்சியாக இருந்தது. "நாங்கள் பல லட்ச ரூபாய் கொடுத்து இந்த சீட்டை வாங்கி கஷ்டப்பட்டு (?) படித்து முடிப்பதற்குள் இன்னும் சில லட்சங்கள் எங்களுக்கு செலவாகின்றது. அதை நாங்கள் யாரிடம் வசூல் செய்வதாம்?" என்றான்.

இது போன்ற கிராதகர்களிடம் மாட்டிக்கொள்வதை விட மரணமே பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இவர்களையும் இது போன்ற மருத்துவமனைகளையும் தட்டி கேட்கவே முடியாதா? Indian Medical Association என்று ஒன்று உள்ளதாம். அதில் புகார் செய்தால் கூட ஒன்றும் நடக்காதாம். ஏனென்றால் அதில் உள்ளவர்கள் கூட மருத்துவர்கள் தானே! நான் எல்லா மருத்துவர்களை பற்றியும் குறை கூறவில்லை. நல்லவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் அது போன்றவர்கள் அத்திப்பூ பூத்தாற்போல் இருக்கிறார்கள்.
ஏழைகள் பரவாயில்லை. தங்களால் சிகிச்சையை afford செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும். எதிர்ப்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றமும் இல்லாமல் மரணத்தை தைரியமாக எதிர்கொள்கிறார்கள். பணக்காரர்களுக்கோ இந்த பிரச்னையே இல்லை. நடுவில் மாட்டிக்கொள்பவர்கள் இந்த நடுத்தர வர்கத்தினர்தான்.

இறைவா! மனிதனுக்கு நோயும் கடனும் மட்டும் வரக்கூடாது. மீதி எல்லாவற்றையும் சமாளித்து விடலாம்.