Tuesday 4 February 2014

பயணங்களும் பாதைகளும்

பல வருடங்களுக்கு பிறகு கல்லூரியில் என்னுடன் படித்த நண்பனின் பரிச்சயம் வலைப்பதிவில் 'லிங்க்டின்' உதவியுடன் மீண்டும் கிடைத்தது. அவன் துபாயில் நல்ல வேலையில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சில மாதங்களுக்கு பிறகு எனக்கு துபாய் போகும் சந்தர்ப்பம் கிடைத்தபோது குடும்பத்துடன் சென்று வந்தேன்.
நண்பனை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு பார்த்ததில் இருவருக்குமே மகிழ்ச்சி. இரவு உணவு சாப்பிட்டபின் வெகு நேரம் எங்களது பழைய நண்பர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

எனது கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூட்டம் என்று மிக பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நண்பனும் உண்மையிலேயே முத்து முத்தாக‌ இருந்தார்கள்.

எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று அலைந்து திரிந்து கலாட்டா செய்திருக்கிறோம். இப்போது பரோட்டா காமெடி என்று சினிமாவில் வருகிறது அல்லவா, கிட்டத்தட்ட அதே போல‌ எனது நண்பர்கள் கூட்டத்தில் ஒரு முறை நடந்தது.

ஒரு 'மெஸ்'ஸில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ரவி என்ற நண்பன், "இது மாதிரி பூரி மெல்லிதாக இருந்தால் 50 பூரி கூட சாப்பிடுவேன்" என்று வீராப்பாக கூறிவிட்டான். அவ்வளவுதான். நண்பர்கள் அனைவரும் அவனை பிடித்து கொண்டு "மரியாதையாக இப்போது 50 பூரியை சாப்பிட்டு காண்பி. அப்படி நீ சாப்பிட்டு காண்பித்து விட்டால் அதற்கான காசை நாங்கள் கட்டுகிறோம். உனக்கு 100 ரூபாயும் கையில் கொடுக்கிறோம். அப்படி உன்னால் சாப்பிட முடியவில்லை என்றால் சாப்பிட்ட பூரிக்கு நீ தான் காசு கொடுக்க வேண்டும். எங்கள் அனைவருக்கும் உண்டான பில் பணத்தையும் நீ தான் கட்டவேண்டும்" என்று கூறினோம். நம்ப மாட்டீர்கள், 50 பூரியையும் அன்று அவன் சாப்பிட்டு காண்பித்தான். அன்றிலிருந்து அவனுடைய பெயர் பூரி ரவி என்றாகி விட்டது.
 
செளந்திரராஜன் என்ற நண்பன் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆர் படத்தை நாங்கள் tent கொட்டகையில் பார்க்கும் போது படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை காது கிழிய‌ விஸில் அடித்தே தொண்டை கட்டிவிடும். அவனுக்கு 'Sound' என்று பெயர் வைத்தோம் (Sound-ararajan என்பதால்).இப்படி ஒவ்வொருவனுக்கும் ஒரு பட்டப்பெயர்.வாழ்க்கையில் மறக்க முடியாத மிகவும் ஜாலியான காலகட்டம் அது.
 

பொறியியல் இரண்டாம் வருடம் படிக்கும்போது எதிர்பாராதவிதமாக RK என்ற நண்பன் (பெயர் வேண்டாமே) இறுதி தேர்வில் தோல்வியுற்றான். அதனால் அவன் ஒரு வருடம் மற்றவர்களை விட பின் தங்க நேரிட்டுவிட்டது.  நண்பர்கள் கூட்டத்தில் இப்படி நடந்து விட்டதே என்று எங்கள் அனைவருக்கும் மிகவும் சங்கடமாகி விட்டது. அவனை ஒரு வழியாக தேற்றி அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தான். ஆனால் ஒரு வருடம் போனது போனதுதான்.
 
 
இறுதி ஆண்டு முடிந்த பிறகு சிலர் வேலைக்கு சென்றார்கள்,  சிலர் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றார்கள். அதில் அல்போன்ஸ் என்ற நண்பனும் ஒருவன். கனடா நாட்டுக்கு படிக்க சென்ற அல்போன்ஸ், படிப்பு முடிந்த பிறகு அங்கேயே ஒரு வேலையையும் தேடி கொண்டதாக கேள்விப்பட்டேன்.
 
 
அந்த காலகட்டத்தில் யாரை பார்த்தாலும் GRE/TOEFL எழுதி அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு செல்வதை பெருமையாக எண்ணி கொண்டிருந்தார்கள். அது மட்டும் இல்லை, 'என் பையன் அமெரிக்காவில் இருக்கிறான்' என்று சொல்வதை அப்படி சென்றவர்களின் பெற்றோர்கள் மிகவும் பெருமையாக கூறிக்கொள்வார்கள். சமுதாயத்தில் அப்படி சொன்னால் ஏதோ பெரிய விஷயமாம். என்ன எழவோ.
 
என்னுடன் படித்த சில நண்பர்களுக்கு திருமணம் ஆகி விட்டிருந்தது. சில வருடங்கள் வரை அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருந்தோம். சிறிது சிறிதாக அந்த தொடர்புகளும் நின்று விட்டன. அவரவர் தத்தம் வாழ்க்கையில் மூழ்கி விட்டிருந்தனர். தவிர, ஒவ்வொருவரும் ஒரு ஊரில் இருந்ததால் தொடர்பு சிறிது சிறிதாக தேய்ந்து கடைசியில் நின்றே விட்டது.
 
 
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் அல்போன்ஸிடமிருந்து ஒரு மின் அஞ்சல் வந்தது. தான் மிகவும் சிரமப்படுவதாக எழுதியிருந்தான். படிப்பு முடிந்த பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வேலையில் சேர்ந்தானாம். ஆனால், அங்கு நிலவும் வேலை இல்லா திண்டாட்டத்தினாலும் விலைவாசியினாலும்  (acute recession) எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என்ற நிலைமை இருப்பதனாலும் (Hire and Fire policy), செலவுகளை சமாளிக்க மாலை வேளையில் கார்களை கழுவும் வேலையை செய்வதாகவும் கூறியிருந்தான். இவ்வளவு செலவு செய்து கனடா வந்த பிறகு வேலை இல்லாமல் திரும்பி வந்தால் வீட்டில் அவமானமாகி விடும் என்று வேறு எழுதியிருந்தான். நம் சமுதாயத்தில் இது போன்ற போலி கெளரவத்தினாலேயே பிரச்னைகள் துளிர்விடுகின்றன என்று நினைக்கிறேன்.
 
 
அது வரை அமெரிக்கா / கனடா போன்ற நாடுகளுக்கு செல்பவர்கள் செழிப்புடன் இருப்பதாக ஒரு மாயை இருந்தது. அதை மெய்ப்பிப்பது போல, 4 வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்காவிலிருந்து வரும் 'சிலர்' (அனைவரும் அல்ல) போடும் அலப்பறை தாங்காது சாமி. அமெரிக்கா ஏதோ சொர்க்க பூமி மாதிரியும் பாலும் தேனும் சாலையில் ஓடுவது போல ஒரு தோற்றத்தையும் இவர்கள் கொடுப்பார்கள். அது போன்றவர்களுக்கு பெண் கொடுக்க அலையும் ஒரு கூட்டமே இருக்கும். எதுவாக இருந்தாலும், கூட படித்த நண்பன் கஷ்டப்படுகிறானே என்ற வருத்தம் இருந்தது. அதற்கு பிறகு அவனிடமிருந்து தகவலே இல்லை. எங்கேயாவது நலமாக இருந்தால் சரி.
 
 
துபாய் நண்பனிடம் அல்போன்ஸ் பற்றி கேட்டதற்கு அவனுக்கும் தகவல் எதுவும் தெரியாது என்று கூறினான். ஆனால், இரண்டாம் வருடத்தில் தோல்வியுற்ற RK இப்போது ஜெர்மனியில் granite கற்களின் மிக பெரிய டீலர் என்று கூறினான்.  அவனையும் இப்போது 'லின்க்டின்ல்' தொடர்பு கொண்டுள்ளேன். 'பொறியியல் படித்தவன் எப்படி சம்பந்தமே இல்லாத ஒரு தொழிலை செய்கிறாய்'என்று அவனிடம் கேட்டேன். "எல்லாமே வாழ்க்கையில் நடக்கும் திருப்புமுனைகள் தான் காரணம். சிலருக்கு முதலில் நடக்கிறது, சிலருக்கு பிறகு, அவ்வளவுதான் வித்யாச‌ம்". என்றான். எவ்வளவு பெரிய‌ உண்மை. பொறியியலில் தோல்வியுற்றவன் வாழ்க்கையில் ஜெயித்து விட்டான்.
 
 
இதாவது பரவாயில்லை, கணேசன் என்ற நண்பன் பொறியியல் முடித்துவிட்டு இப்போது  முந்திரி பருப்பு வியாபாரம் செய்கிறானாம். அதுவும் ஏற்றுமதி தொழிலில் இருக்கிறானாம். ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. மற்றொருவன், இந்திய கடற்படையில் சேர்ந்து பெரிய ஆளாகி விட்டிருந்தான்.
 
 
படிக்கும் போது எதிர்காலத்தில் என்னவாக இருப்போம் என்று நாங்கள் சற்றும் யோசித்ததே இல்லை. அன்றைய பொழுது, அன்றைய தினம் சுகமாக இருந்தது, அவ்வளவுதான். எங்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. எதிர்ப்பார்ப்பே இல்லாத வாழ்க்கையில் என்றுமே நிம்மதி தான். ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு, ஒரு பாதை. படித்து முடித்த பிறகு திடீரென்று பாதைகள் தாறுமாறாக மாறி படித்த படிப்புக்கும் செய்கிற தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் வாழ்க்கை அலை அனைவரையும் அடித்து கொண்டு ஓடிவிட்டது.
 
 
இப்போது எங்கள் அனைவருக்கும் வளர்ந்த குழந்தைகள். சில வருடங்களில் அவர்களுக்கும் படிப்பு முடிந்துவிடும். அவர்களும் எங்களை போல கனவுலகிலிருந்து வாழ்க்கையின் யதார்த்த வெள்ளத்தில் தள்ளப்படுவார்கள். அது வரை அவர்களாவது நிம்மதியாக தூங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.