1995ம் வருடம் சூரத்திலிருந்து என்னை பம்பாய் கிளைக்கு மாற்றினார்கள். அலுவலகம் பலார்டு எஸ்ட்டேட் என்ற இடத்தில் இருந்தது. வீடு புது பம்பாயில் நேருல் என்ற இடத்தில் இருந்தது. மின்சார இரயிலில் தினமும் போக ஒன்றரை நேரமும் திரும்பி வர ஒன்றரை நேரமும் ஆகும். நான் வேலை செய்தது தனியார் நிறுவனம். கொடுக்கும் சம்பளத்துக்கு கசக்கி பிழிந்து எடுத்துவிடுவார்கள். தினமும் காலை 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் திரும்புவதற்கு 10 அல்லது 11 மணி ஆகிவிடும் (இந்த கொடுமையிலிருந்து தப்பிக்கவே நான் வெளிநாட்டில் வேலை தேட ஆரம்பித்தேன் - அது வேறு ஒரு கதை).
இரண்டாம் வகுப்பில் சென்றால் உள்ளே நுழைய கூட முடியாத அளவு கூட்டம் இருக்கும். VT இரயில் நிலையத்தில் இறங்கினால் சட்டை பொத்தான்களில் ஒன்றிரண்டு காணாமல் போயிருக்கும்! அந்த அளவுக்கு கூட்டம் பின்னி எடுத்து விடும். பல முறை நான் ஒற்றை காலிலேயே நின்று கொண்டு பயணம் செய்திருக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா (மற்றொறு காலை வைப்பதற்கு இடம் இருக்காது!) பெரும் போராட்டத்துக்கு பிறகு VTலிருந்து பலார்டு எஸ்ட்டேட்டுக்கு நடந்து வந்து அலுவலகத்துக்குள் நுழைந்தால் நாம் ஏதோ போர்முனைக்கு சென்று களைப்புடன் திரும்பிய அனுபவம் போல இருக்கும்!
இந்த தின போராட்டத்துக்கு தீர்வு காணும் வகையில் முதல் வகுப்பு பயணச்சீட்டு (season ticket) மூன்று மாதங்களுக்கு எடுப்பது என்று முடிவு செய்தேன். முதல் வகுப்பில் நிற்கவாவது இடம் கிடைக்குமே என்ற நப்பாசை தான்! நமக்கு தான் நரி முகத்தில் முழித்த ராசியாயிற்றே, அதுவும் இரயிலுக்கும் நமக்கும் ஒரு தனி "பாசம்" ஏற்பட்டு விட்டது போலும்! எந்த நேரத்தில் முதல் வகுப்பு season ticket எடுத்தேனோ தெரியவில்லை. கவுண்டமணி பாணியில் "முதல் வகுப்பிலியா போற, வாடி உனக்கு இருக்குடி ஒரு ஆப்பு" என்று விதி சிரித்தது அப்போது தெரியவில்லை!
வழக்கம் போல அன்றும் அலுவலகத்தில் சரியான வேலை. கிளம்புவதற்கு இரவு 11 மணி ஆகிவிட்டிருந்தது. 1995ல் நேருலுக்கு அடுத்த நிலையமான பேலாப்பூர் வரை தான் இரயில்கள் அப்போது ஓடிக்கொண்டிருந்தன. 10 மணிக்கு பிறகு ஒரு மணி நேரத்துக்கு ஒரு இரயில் தான். அதுவும் இரவு 1 மணியிலிருந்து காலை 4.30 மணி வரை இரயிலே கிடையாது. நான் பலார்டு எஸ்ட்டேட்டிலிருந்து அவசரம் அவசரமாக VT இரயில் நிலையத்தை நோக்கி நடந்து வந்து சேர்வதற்கு 11.20 ஆகியிருந்தது. தடத்தில் அப்போது தான் பேலாப்பூர் செல்கிற இரயில் மெதுவாக கிளம்பிக்கொண்டிருந்தது. அடக்கடவுளே, இந்த இரயிலை நாம் விட்டால் இன்னும் ஒரு மணி நேரம் காத்துக்கொண்டிருக்க வேண்டுமே என்று வேகமாக சென்று கடைசி பெட்டியில் ஒடும் இரயிலிலேயே ஏறி விட்டேன். அப்பாடா ஜன்னல் ஓர இருக்கை கிடைத்து விட்டது, காற்று வாங்கலாம் என்று உட்கார்ந்தது தான் தெரியும். பிடரியில் பட்டென்று ஒரு அடி!
அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தால் ஒரு போலீஸ்காரன். "டிக்கெட் குட்டே, ஐடி குட்டே" (பயணசீட்டும் ID யும் எங்கே?) என்றான். இது ஏதுடா வம்பு, நம்மை பயணச்சீட்டு இல்லாதவன் என்று நினைத்து விட்டான் போல இருக்கிறது என்று வெற்றிக்களிப்போடு இரண்டையும் அவனிடம் கொடுத்தேன். (எல்லாம் ரத்லாம் அனுபவம் தான்!)ஆனால் அவன் அவற்றை பார்க்க கூட இல்லை. இரண்டையும் தனது சட்டை பையில் வைத்துக்கொண்டான். எனக்கோ பயங்கர அதிர்ச்சி. சரி என்னதான் செய்ய போகிறான் என்று பார்த்தால் அவன் அடுத்த இரயில் நிலையமான் மஸ்ஜித்தில் இறங்கிக்கொண்டான்.
இன்றைக்கு நம்மை ஒரு வழி செய்ய போகிறான் என்று நினைத்துக்கொண்டே நானும் அவன் பின்னாலேயே கீழே இறங்கி விட்டேன். இரயிலும் கிளம்பி விட்டது. அப்போதுதான் நான் வந்த பெட்டியை பார்த்தேன். அவசரத்தில் நான் பெண்களுக்கான பெட்டியில் ஏறியிருந்திருக்கிறேன். அடக்கடவுளே, இதற்குதான் நம்முடைய பயனச்சீட்டை வாங்கிக்கொண்டானா! தெரிந்திருந்தால் அப்போதே அவனிடம் பணத்தை கொடுத்து தப்பித்திருக்கலாமே, இப்போது அடுத்த இரயில் எப்போது வருமோ என்றெல்லாம் என் மனதில் எண்ண ஓட்டங்கள் வந்து சென்றன.
போலீஸ்காரன் என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சந்து பொந்துக்குள் எல்லாம் நடந்து சென்றான். ஆனால் எங்கு செல்கிறான் என்று தெரியவில்லை. கூடவே நானும் சென்றேன் (வேறு வழி?) வடிவேலு கழுத்தில் மாலை கட்டி இழுத்துக்கொண்டு போகும்போது பார்த்திபன் கையில் அரிவாளோடு செல்வாரே, அந்த மாதிரி ஒரு நிலைமையில் தான் நான் இருந்தேன்!
கடைசியில் ஒரு மாடி கட்டிடத்துக்குள் அழைத்து சென்றான். அங்கு பார்த்தால் ஒரு இன்ஸ்பெக்டர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். ஓஹோ, இது காவல் நிலையம் போல இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். இன்ஸ்பெக்டரை சுற்றி ஒரே கூட்டம். பிச்சைக்காரர்கள், நான்கு அரவாணிகள், என்று பல பேர்.
ஒரு ஏட்டு, மராத்தியில் இன்ஸ்பெக்டரிடம் சற்று கிழிந்த சட்டை போட்ட ஒருவனை காண்பித்து ஏதோ கூறினான். உடனே இன்ஸ்பெக்டர் அவனை தன் பக்கம் இழுத்து பளார் பளார் என்று அரைந்தானே பார்க்கலாம். அவனை இன்ஸ்பெக்டர் அடித்த பிறகு தரதரவென்று இழுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது! இது தான் போலீஸ் அடியா, நம்மை என்ன செய்ய போகிறானோ என்று நடுநடுங்கிக்கொண்டிருந்தேன்! இன்ஸ்பெக்டர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தன.
அடுத்து அரவாணிகள் கூட்டம். அதற்கு பிறகு நான். வரிசையில் வைத்து அடிக்க போகிறான் போல இருக்கிறது!! சரி, அரவாணிகளை என்ன செய்கிறான் பார்க்கலாம் என்று பயத்தோடு நான் நின்று கொண்டிருந்தேன். அனால், அரவாணிகளோ சிறிதும் பயப்படவில்லை. ஒருத்தி தன் ரவிக்கை உள்ளிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து அவன் கன்னத்தை கிள்ளினாள். இன்ஸ்பெக்டரின் முகத்தில் இப்போது லேசான புன்னகை (அது பணத்துக்காகவா அல்லது அவள் கிள்ளியதற்காகவா என்று ஆராய்ச்சி செய்யும் மன நிலையில் நான் அப்போது இல்லை!)
அடுத்து என்னுடைய முறை. "இவன் என்ன செய்தான்?" என்று இன்ஸ்பெக்டர் ஏட்டிடம் மராத்தியில் கேட்டான். எனக்கு முன்பிருந்தவன் அடி வாங்கியது நினைவுக்கு வந்தது. ஏட்டு வாய் திறப்பதற்குள் நான் "அவசரத்தில் பெண்கள் பெட்டியில் ஏறி விட்டேன், கவனிக்கவில்லை" என்று அரைகுரை ஹிந்தியில் கூறினேன். இன்ஸ்பெக்டர் உடனே "நீயெல்லாம் படித்தவன் தானே (என்னை பார்த்தால் அப்படி இருந்தது போல!) ஏண்டா பெண்கள் பெட்டியில் ஏறின?" என்று கத்தினான ("அதான் அவசரத்தில் ஏறிவிட்டேன் என்று கூறினேனேடா" என்று என்னால் திரும்ப பதில் சொல்ல முடியவில்லை - எல்லாம் அடி பயம் தான்!).
நான் மறுபடியும் அவனிடம் "நான் கவனிக்கவில்லை, தெரியாமல் ஏறி விட்டேன்" என்று கூறினேன். "எங்கு வேலை செய்கிறாய்" என்று கேட்டான். நான் "ஸ்ரீராம் மில்ஸ் சார்" என்று புளுகினேன். உண்மையில் அப்போது ஸ்ரீராம் மில்ஸ் தொழிலாளர்கள் பிரச்னையால் மூடி பல வருடங்கள் ஆகி விட்டிருந்தன. பல தொழிலாலர்களுக்கு சம்பளம் கூட கொடுக்காமல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தனர். தினமும் செய்தித்தாள்களில் இதை பற்றியே பேச்சாக இருந்தது. மக்கள் மத்தியில் அந்த தொழிலாளிகளுக்கு ஒருவித அனுதாபம் கூட இருந்தது.
இன்ஸ்பெக்டரிடம் நான் ஏன் அவ்வாறு கூறினேன் என்று இப்போது கூட தெரியவில்லை. ஏதோ வாயில் வந்து விட்டது, அவ்வளவுதான். இதுவும் விதியின் விளையாட்டு என்று நினைக்கிறேன்.
"ஸ்ரீராம் மில்ஸ்" என்று நான் கூறியவுடன் இன்ஸ்பெக்டர் முகத்தில் ஒரு சிறு மாற்றம். உடனே, என்னை அழைத்து வந்த ஏட்டு அந்த ஜாடையை புரிந்து கொண்டு "சரி சரி, எவ்வளவு வைத்திருக்கிறாய்" என்றான். நான் என்னுடைய பர்ஸை திறந்து மூன்று பத்து ரூபாய் நோட்டுகள், நான்கு ஒரு ரூபாய் நோட்டுகள், இரண்டு 25 பைசா மற்றும் ஒரு 10 பைசா coinகளை அவன் மேஜையில் கொட்டினேன். இன்ஸ்பெக்டர் முகத்தில் மறுபடியும் ருத்ர தாண்டவம்! போச்சுடா, நான் இன்று ஒழிந்தேன்!
ஏட்டு உடனே அந்த மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களையும் நான்கு ஒரு ரூபாய் நோட்டுக்களையும் எடுத்துக்கொண்டு சில்லரயை என்னிடமே திரும்பி கொடுத்தான். அதற்குள் எனக்கு பின் வேறு யாரோ வந்தான். இன்ஸ்பெக்டர் என்னிடம் இனிமேல் எதுவும் பேறாது என்று எனக்கு பின்னால் வந்த அடுத்த கிராக்கியை கவனிக்க தொடங்கினான்.
ஏட்டு என்னுடைய பணத்தை எண்ணிக்கொண்டே வாசல் வரை வந்தான். என்னுடைய பயணச்சீட்டையும் அடையாள அட்டையயும் திரும்ப கொடுத்தான். நான் உடனே ஏட்டிடம் "எனக்கு ஆட்டோவுக்கு கூட கையில் காசு இல்லை" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்ட்டு கூறினேன். என்ன தோன்றியதோ தெரியவில்லை ஏட்டு உடனே நான் கொடுத்த நோட்டுக்களில் ஒரு 10 ரூபாய் நோட்டை திரும்ப கொடுத்தான். நான் ஸ்ரீராம் மில்ஸ் தொழிலாளி என்று நினைத்து விட்டான் போல!
என்னுடைய pantல் ஒரு ரகசிய pocket இருக்கும். ஜேப்டிக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே pant தைக்கும்போதே இதையும் தைத்துக்கொள்வேன். அதில் நான் ஒரு 500 ரூபாய் நோட்டை எப்போதும் வைத்திருப்பேன். நல்ல வேளை, இன்ஸ்பெக்டர் என்னை சோதனை செய்யவில்லை. அப்படி ஏதாவது ஆகியிருந்தால் என் கதை கந்தலாகியிருக்கும்!
ஏட்டிடம் 10 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு விட்டு போதும்டா சாமி என்று நான் மஸ்ஜித் இரயில் நிலையத்துக்கு வேக வேகமாக வந்து சேர்ந்த போது மணி இரவு 12.30. இரவு 1 மணிக்கு கடைசி இரயில் வந்தது. அதைப்பிடித்து நொந்து நூடுல்ஸாய் வீடு வந்து சேர்ந்தேன்.
நண்பர்களே, போலீஸ்காரர்கள் மாமூல் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் மாமூல் வாங்கியவனிடமே பணத்தை கறந்த இந்த இரயில் அனுபவம் என்னால் மறக்கவே முடியாது!
- ராஜூ
2 comments:
நண்பருக்கு வணக்கம்! தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி! நாங்கள் புதிதாக ஓர் தமிழ் இணையதளம் www.adhikaalai.com
வெகுவிரைவில் தொடங்க இருப்பதால் தங்களின் படைப்புகள் மற்றும் நீங்கள் இருக்கக்கூடிய பகுதியில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். பகிர்ந்துகொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் editor@adhikaalai.com ....நன்றி!
வாழ்த்துக்களுடன்
அதிகாலை - நண்பர்கள்
Very funny. I used to live in Mumbai during early 90s. I too remember the crowd and experience.
Post a Comment