Saturday 29 September 2007

இரயில் பயணங்களில்

நண்பர்களே! யானையையும் இரயிலையும் எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று கூறுவார்கள். நம் அனைவருக்குமே இரயிலில் சென்ற போது பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் - சில மாறுபட்டவை, சில மறக்க முடியாதவை என்று. எனக்கு ஏற்பட்ட சில நகைச்சுவையான (என்று நான் எண்ணுகிறேன்) மற்றும் திகிலூட்டும் (பயப்படாதீர்கள்!) அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். படித்து விட்டு எப்படி இருந்தது என்று கூறவும்.
1990 வருடம். குஜராத் மாநிலத்தில் சூரத்தில் நான் பணி புரிந்து கொண்டிருந்தேன்.அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒரு இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தால் உடனே நண்பர்களோடு எங்காவது சுற்றுலா செல்ல கிளம்பிவிடுவேன். எனக்கு ராவ் என்று ஒரு நண்பர் இருந்தான் (ராவை அல்ல!). திடீரென்று ஒரு நாள் நானும் அவனும் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவுக்கு செல்லலாம் என்று எண்ணினோம்.
சூரத் இரயில் நிலையம் அப்போது அவ்வளவு பெரிய நிலையமாக இல்லை. இருக்கும் நான்கு தடங்களில் (platform), இரண்டில் பயணிகள் இரயில்களும் மற்ற இரண்டில் சரக்கு இரயில்களும் நிற்கும். இந்த இரண்டு தடங்களிலும் எந்த தடத்தில் எந்த இரயில் நிற்கும் என்று ஒரு வரை முறையே கிடையாது (இப்பவும் நிலைமை அப்படி தான் என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள்). நிலைய ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்வார்கள், ஆனால் இரயிலோ வேறு ஒரு தடத்தில் வந்து நிற்கும்! பல முறை ஒலிபெருக்கியின் எதிரொலியால் என்ன கூறுகிறார்கள் என்றே புரியாது. அதனால் எந்த இரயில் எங்கு வருகிறது என்று கணிக்க ஒரு வழிவகை செய்து இருந்தார்கள் வழக்கமாக செல்லும் பயணிகள். அதாவது, தெற்கிலிருந்து வடக்கு செல்லும் இரயிலானால், பரோடா மற்றும் அஹமதாபாத் செல்லும் இரயில் என்றும் வடக்கிலிருந்து தெற்கு செல்லும் இரயிலானால் பம்பாய் செல்லும் இரயில் என்றும் ஒரு எழுதப்படாத சட்டம் இருந்தது. (புதிதாக வந்து மாட்டுபவர்கள் பாடு திண்டாட்டம் தான்). சரி, விஷயத்திற்கு வருகிறேன்.
ராவும் நானும் அன்று இரவே மவுண்ட் அபுவிற்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தோம் அல்லவா, ஆனால் அங்கு எப்படி செல்வது என்று இருவருக்குமே தெரியாது! அஹமதாபாத் சென்று பிறகு அங்கிருந்து பேருந்து மூலமாக செல்லலாம் என்று முடிவு செய்து இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். இருவரும் அஹமதாபாத்துக்கு முன் பதிவு இல்லாத பயண சீட்டை வாங்கிக்கொண்டோம். பொதுவாக இரவு நேரங்களில் வரும் இரயில்களில் அவ்வளவு கூட்டம் இருக்காது. அதனால், இரயிலுக்குள் சென்றதும் பயணச்சீட்டு பரிசோதகரிடம் முன் பதிவுக்கான தொகையை கொடுத்துவிடலாம் என்று எண்ணினோம். (இப்போதெல்லாம் அவ்வாறு செய்ய முடியாது என்று நினைக்கிறேன்). நாங்கள் இரயில் நிலையத்தை சென்றடந்த போது இரவு 10 மணியாகி இருந்தது. 11.15 மணி அளவில் தெற்கிலிருந்து ஒரு இரயில் வந்தது. சூரத்திலிருந்து அஹமதாபாத் செல்ல ஒரு 6 மணி நேரம் ஆகும். ஆகையால், காலை ஒரு 5.30 மணி அளவில் போய் சேர்ந்து விடலாம் என்று எண்ணி ஏதோ ஒரு பெட்டியினுள் ஏறி உட்கார்ந்து கொண்டோம். எங்களுடைய அதிர்ஷ்டம் பெட்டி காலியாக இருந்தது. இருவருக்கும் படுக்க வசதி கிடைத்துவிட்டதால் சுகமாக உறங்கி விட்டோம். இரயிலும் கிளம்பி விட்டது. திடீரென்று ஏதொ ஒரு உந்துதலால் நான் எழுந்து பார்த்தால் பொழுது விடிந்திருந்தது. கைக்கடிகாரத்தை பார்த்தால் மணி ஏழு. "அடக்கடவுளே, வண்டி வழக்கம் போல தாமதமாக போய்க்கொண்டிருக்கிறது போல்" என்று எண்ணி ஜன்னலை திறந்தேன். இரயில் படு வேகமாக சீறிக்கொண்டிருந்தது. சரி நாம் எங்கு தான் இருக்கிறோம் என்று மற்ற பயணிகளிடம் விசாரிக்கலாம் என்று ஒரு சுற்று பெட்டியை நோட்டம் விட்டால் ஒரே அதிர்ச்சி. பெட்டியில் எங்களை தவிர வேறு யாருமே இல்லை. இரவில் பயணச்சீட்டு பரிசோதகரும் வரவில்லை. சரி, எந்த நிலையம் அருகில் நாம் இருக்கிறோம் என்று அறிய ஜன்னல் வெளியே பார்த்தேன். ஒரு முக்கால் மணி நேரம் வரை ஒரு இரயில் நிலையம் கூட வரவில்லை. நானும் கழுத்து வலிக்க வெளியே பார்த்துக்கொண்டே வந்தேன். சிறிது திகிலடைந்து ராவை எழுப்பினேன். அவனும் திடுக்கிட்டு எழுந்து ஜன்னல் வெளியே பார்த்துக்கொண்டே வந்தான். கடைசில் ஒரு இரயில் நிலையம் வந்தது. ஆனால் எங்கள் வண்டி அதில் நிற்கவேயில்லை. பெயர் பலகையை மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். பெயர் கேள்விப்படாத ஏதோ ஒரு ஊர். அதுவும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தது. சரி, அடுத்த இரயில் நிலையத்தில் பெயரை பார்க்கலாம் என்று காத்திருந்தோம். வெளியே பார்த்தால் வயல் வெளிகள் தான், ஆனால் அதில் கூட மனித நடமாட்டமே இல்லை. இரயிலோ படு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. எங்கள் இருவரைத்தவிர வேறு மனிதர்களே இல்லை. எங்கள் நிலைமையை யோசித்து பாருங்கள்! ஒரு அரை மணி நேரமான பிறகு மற்றொரு இரயில் நிலையம் வந்தது. மறுபடியும் கஷ்டப்பட்டு பெயர் பலகையை பார்த்தால் இதிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் மட்டுமே பெயர் இருந்தது. அப்போது தான் எங்களுக்கு ஒரு உண்மை புரிய ஆரம்பித்தது. இந்த வண்டி அஹமதாபாத் செல்லும் வண்டியே அல்ல. பிறகு எங்கு தான் செல்கிறது?
சிறு வயது முதலே எனக்கு புவியியல் பற்றி அவ்வளவாக தெரியாது. என்னுடைய போதாத காலம் ராவுக்கும் அப்படியே தானாம்! எங்களுடைய மிக பெரிய பிரச்னை இப்போது என்னவென்றால் நாங்கள் எந்த ஊரில் இருக்கிறோம் என்று அல்ல, எந்த மாநிலத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்வதுதான்! பெயர் பலகை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்ததால் நாங்கள் இருப்பது மத்திய பிரதேசமா, பீகாரா, உத்திர பிரதேசமா நாகாலாந்தா என்று எங்களுக்குள் ஒரு குட்டி பட்டிமன்றமே நடந்து முடிந்தது! எப்படியாவது இந்த இரயில் நிற்க தானே செய்யும் அது இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியாகத்தானே இருக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை (அப்கானிஸ்தானாக இருக்காது என்று ஒரு குருட்டு நம்பிக்கை என்று சொல்லலாமா)!
கிட்டத்தட்ட 11 மணியாகி விட்டிருந்தது. திடீரென்று இரயில் மெதுவாக செல்ல ஆரம்பித்தது. சரி ஏதொ ஒரு இரயில் நிலையம் வரப்போகிறதென்று இருவரும் கதவு அருகில் நின்று கொண்டோம். நல்ல வேளையாக இரயில் நின்றது. இரயில் ஒரு வழியாக நிலையத்தை வந்தடைந்த போது நாங்கள் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம்.
கீழே இறங்கியதும் முதலில் இரயில் நிலையத்தின் கடைசி வரை சென்று பெயர் பலகையை பார்த்தோம். "ரத்லாம்" என்று கொட்டை கொட்டையாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது. எங்களது அடுத்த பிரச்னை இந்த கேள்விப்படாத ஊர் எந்த மாநிலத்தில் உள்ளது என்பதை அறிவது தான். இரயில் நிலையத்தில் யாரை பார்த்தாலும் முண்டாசுடன் முறுக்கிய மீசையுடன் ஆஜானுபாகுவாக இருந்தார்கள். சரி, எங்கள் சந்தேகத்தை யாரிடமாவது கேட்கத்தானே வேண்டும் என்று ஒரு முண்டாசுக்காரனிடம் எனக்கு தெரிந்த அரைகுரை ஹிந்தியில் கேட்டேன். "ரத்லாம் கவுன்ஸா ஸ்ட்டேட் மே ஹை?" (ரத்லாம் எந்த மாநிலத்தில் உள்ளது) அவ்வளவுதான். முண்டாசு என்னை ஒரு முறை முறைத்தானே பார்க்கலாம். ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. "மாநிலம்" என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் என்ன கூறுவார்கள் என்று ஒரு சிறு குழப்பம். அதனால் நான் "ஸ்ட்டேட்" என்று கூறியதில் ஒரு வேளை கோபித்துக்கொண்டானோ என்னவோ. அதுவும் ஹிந்திக்காரர்களுக்கு ஆங்கிலம் பேசுபவர்களை கண்டால், அதுவும் தென் இந்தியர்களை கண்டாலே பிடிக்காது என்று என் நண்பர்கள் கூறியது அப்போது பார்த்து ஞாபகம் வந்து தொலைத்தது (நமது ஊர் கூடுவாஞ்சேரியாக இருந்தாலும் சரி, குண்ட்டூராக இருந்தாலும் சரி, விந்திய மலைகளுக்கு தெற்கே உள்ள அனைவரையுமே "மதராஸிகள்" என்று கூறுவார்களாம்)! நான் உடனே ராவிடம், மாநிலம் என்பதற்கு ஹிந்தியில் என்னடா என்று கேட்டேன். அவன் என்னை விட ஞான சூனியமாக இருந்தான். சரி நம்மை அவன் அடித்து சாப்பிடுவதற்குள் வேறு யாரிடமாவது கேட்போம் என்று அங்கிருந்து உடனே இடத்தை மாற்றினோம். கடைசியாக pant சட்டை போட்ட ஒருவனை பார்த்து விட்டோம். ஆனால் முன்பே செய்த 'தவறை' இம்முறை செய்ய கூடாது என்று எண்ணி வேறு விதமாக அணுகலாம் என்று முடிவு செய்தோம். பார்த்திபன் வடிவேலுவிடம் போட்டு வாங்குவாரே, அதே போல் நாங்களும் pant partyயிடம் சென்று "ரத்லாம் நிலையம் மிக பெரிதாக உள்ளதே (காக்காய் தான் வேறு என்ன!), இது என்ன உத்திர பிரதேசத்தில் உள்ளதா?" என்று தட்டு தடுமாறி கேட்டோம். அவன் உடனே, "நஹி, யே தோ எம்.பி ஹை" என்றான் (இல்லை, இது மத்திய பிரதேசத்தில் உள்ளது). அடக்கடவுளே, நாங்கள் வந்த இரயில் பரோடாவிலிருந்து வடக்கு நோக்கி செல்லாமல் கிழக்கு நோக்கி மத்திய பிரதேசத்துக்குள் நுழைந்து விட்டிருக்கிறது போல! அப்பாடா, ஒரு வழியாக எந்த மாநிலத்தில் உள்ளோம் என்று தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது எப்படியாவது வெளியே சென்று அஹமதாபாதுக்கு பயணச்சீட்டை வாங்கி விட வேண்டும் என்று அவசரம் அவசரமாக இருவரும் நிலைய வாசலுக்கு வந்தால் எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் முதலில் பார்த்த முண்டாசுக்காரன் இப்போது நுழைவாயிலில் நின்று கொண்டு இரயிலில் இருந்து இறங்கும் அனைவரிடமும் இருந்து பயணச்சீட்டை சோதனை போட்டுக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவன் தோளில் கருப்பு நிற ஆடை. அடக்கடவுளே! இவன் ரத்லாம் இரயில் நிலையத்தின் பயணச்சீட்டு பரிசோதகனா? (TTE). கொலை வெறியுடன் அவன் எங்களை எதிர்நோக்கிக்கொண்டிருந்தது தெள்ள தெளிவாக தெரிந்தது!! சரி, இப்போது எப்படியாவது இரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று விட வேண்டும். ஆனால் நாங்களோ பயணச்சீட்டு இல்லாதவர்கள் (அதாவது சரியான ஊருக்கான பயணச்சீட்டை வாங்காதவர்கள்). உடனே நாங்கள் ஒரு திட்டம் போட்டோம். அதை நினைத்தால் இப்போது கூட சிரிப்பு தான் வருகிறது. ராவின் கையில் இருந்த பெட்டியை நான் வாங்கிக்கொண்டேன். என்னுடைய பெட்டியுடன் சேர்த்து நான் தடத்தில் உள்ள bench நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். ராவின் கையில் பணம் இருந்தது. முண்டாசுக்காரன் எனக்காக தானே காத்துக்கொண்டிருந்தான். நான் நிலையத்தை விட்டு வெளியே சென்றால் தானே என்னை பிடிக்க முடியும். உள்ளே இருந்தால் எப்படி என்னை பிடிக்க முடியும் என்று ஒரு (அசட்டு) தைரியத்தில் உட்கார்ந்து விட்டேன். அதனால் ராவை வெறும் கையுடன் வெளியே அனுப்பினேன். அவனும் கும்பலோடு கும்பலாக முண்டாசுக்காரன் நிற்கும் கதவருகில் வந்தான். எங்களின் நாடகம் அப்போது தான் ஆரம்பித்தது. ராவ் நேரே முண்டாசுக்காரனிடம் சென்று "ஐயா, பயணச்சீட்டு வாங்கும் இடம் எங்கே உள்ளது? (சாஹப், டிக்கிட் கவுண்ட்டர் கிதர் ஹை) என்றான். முண்டாசுக்காரனுக்கோ ஒரு நிமிடம் பயங்கர குழப்பம். "இவன் தானே பயணச்சீட்டு இல்லாமல் வந்தவன், ஆனால் நம்மிடமிருந்து தப்பித்து செல்லாமல் எப்படி நேரே நம்மிடமே வருகிறான். ஒரு வேளை இவன் வேறு எவனோ. கையில் கூட பெட்டி எதுவும் இல்லையே" என்றெல்லாம் குழம்பிய அவனுடைய எண்ண ஓட்டங்களை கண்கூடாக பார்க்க முடிந்தது. அதாவது, தவறுதலாக வெளியே இருந்து உள்ளே நுழைந்து விட்ட பயணி போலவும் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்துக்காக தேடுபவன் போலவும் முகத்தை மிகவும் சாதுவாக வைத்துக்கொண்டு ராவ் கேட்டதில் முண்டாசுக்காரன் படு குழப்பத்தில் மூழ்கினான். அதற்குள், பின்னே வரும் கூட்டமும் சேர்ந்து விட்டதால், "இதர் நஹி, பாஹர் ஹை"(இங்கே இல்லை, வெளியே உள்ளது) என்று நாங்கள் எதிர்பார்த்தது போலவே சொல்ல ராவ் நைசாக வெளியே சென்று அஹமதாபாதுக்கு இரண்டு பயணச்சீட்டுக்களை வாங்கினான். மற்றொறு நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து நேராக நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்தான்.
எங்களுடைய நல்ல காலம், ராவ் திரும்பி வந்த இரண்டு நிமிடங்களுக்குள் முண்டாசுக்காரன் எங்களை தேடிக்கொண்டு தடம் முழுவதும் ரோந்து விட்டுக்கொண்டு நாங்கள் இருந்த இடத்துக்கு வந்தே விட்டான். நேரே என்னிடம் வந்து "இதர் க்யா கர் ரஹே ஹோ? டிக்கட் கிதர் ஹை (இங்கெ என்ன செய்கிறாய்? பயணச்சீட்டு எங்கே) என்று கேட்டான். நாங்கள் உடனே ரத்லாமிலிருந்து அஹமதாபாதுக்கு செல்லும் ராவ் வாங்கி வந்த பயணச்சீட்டை அவனிடம் காட்டினோம். முண்டாசுக்கு பல்லெல்லாம் ஒரே நற நற! யார் சொன்னார்கள் நாங்கள் சூரத்திலிருந்து பயணச்சீட்டு இல்லாமல் வந்தோம் என்று, நாங்கள் தான் ரத்லாமிலிருந்து அஹமதாபாத் செல்லும் பயணிகளாயிற்றே!!
அதற்கு பிறகு 2 மணி அளவில் அஹமதாபாதிற்கு செல்லும் இரயில் வந்து மாலையில் அங்கு போய் சேர்ந்து (சோர்ந்து?) அங்கிருந்து மவுண்ட் அபுவுக்கு பேருந்தில் சென்றது வேறு ஒரு கதை. அதை பற்றி வேறு ஒரு இழையில்.

2 comments:

சார்லஸ் said...

உங்கள் ரயில் அனுபவம் பிரமாதம் குரு. கயல் படத்தில் வரும் அந்த இரு இளைஞர்கள் போல நீங்களும் ராவும் சுற்றித் திரிந்திருக்கிறீர்கள் . அநேகமாக பிரபு சாலமன் உங்களின் பதிவைப் பார்த்து கருவை எடுத்திருப்பாரோ !?

Expatguru said...

மிக்க நன்றி சார்லஸ். என்னுடைய பயண அனுபவங்களை போலவே நீங்களும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.